Serial Stories Sollamal Thotu Sellum Thenral

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் – 36

36

பிரியத்தை சொற்களாக்க
வாலாட்டி நிற்கிறதந்த வாஞ்சை நாய்
தர்க்கங்கள் விட்டு விட்டு
இளைப்பாறலாமா.. தாழ்வாரமோரம்..




கடை வாசலில் மைதிலியை பார்த்ததும் ரவீந்தரின் புருவம் உயர்ந்தது.
“அண்ணி நீங்க எங்கே இங்கே..?”
“சாப்பாடு கொண்டு வந்தேன்..” கேரியரை உயர்த்திக் காட்டினாள்.
“ம்.. சரி சரி புரியுது.. தலைவர் உள்ளே இருக்கிறார்.. இதோ இந்த வழியாக போங்க..” தான் நின்று கொண்டிருந்த சிறிய வாசலை நகர்ந்து காட்டினான்.
அவனது உடனடி கேலியில் முகம் சிவந்த மைதிலி.. நான் ஒன்றும் உன் அண்ணனோடு ரொமான்ஸ் செய்ய வரவில்லை.. ஒரு முக்கியமான விசயம் பேச வந்திருக்கிறேன்.. என மனதிற்குள் கூறிக் கொண்டாள்.
“நான் போயிக்கிறேன்.. நீங்க ஒழுங்காக புளியை நிறுத்து போடுங்க..” பிசுபிசுப்பான புளியை ஓலைப் பெட்டியிலிருந்து எடுத்து தராசில் வைத்து நிறுத்துக் கொண்டிருந்தவனை அதட்டியபடி அந்தக் குறுகிய வாசல் வழியாக கடையின் உட்புறம் நுழைந்தாள்.
அவள் நுழைந்த இடம் மூட்டைகளால் நிறைந்திருந்தது. அரிச, கோதுமை, கம்பு, சோளம் போன்ற தானிய மூட்டைகள் அதனருகே இரண்டு வேலையாட்கள் நின்று அவற்றை சரி பார்த்துக் கொண்டிருந்தனர்.
“முதலாளி பின்னால் இருக்கிறார்மா..” இவளுக்கு தகவல் தந்தனர்.
அதையடுத்த மைதிலி நுழைந்த அறையில் புளி, கருப்பட்டி, மண்டைவெல்லம் வெல்லக்கட்டி போன்ற பொருட்கள் பெரிய ஓலைப்பெட்டிகளில் வைக்கப் பட்டிருந்தன.. அவற்றை கொண்டு வந்திருந்த வியாபாரி ஒருவருடன் பேசியபடி நின்றிருந்தார் அருணாச்சலம்..
“என்னம்மா என்ன விஷயம்..?”
மாமனாரின் உயர்ந்த குரலில் அவளுக்கு நாக்கு உலர்ந்தது..
“நா.. நான் சாப்பாடு கொண்டு வந்தேன் மாமா..”
“அட இதுக்காக நீ ஏன்மா அலைகிறாய்..? ஒரு போன் செய்திருந்தால் கடைப்பையனை அனுப்பியிருப்பேனே..”




“ப.. பரவாயில்லை மாமா.. வீட்டில் வேலை முடிந்தது.. அதுதான் நானே கொண்டு வந்துவிட்டேன்.”
“சரி சரி பின்னாடி கொண்டு போய் ஆபிஸ்ரூமுல வை..” சொல்லிவிட்டு தனது வியாபாரத்தை பேச ஆரம்பித்தார்..
மைதிலி மளிகைகள் அடுக்கப்பட்டிருந்த மேலும் சில அறைகளைக் கடந்து கடையின் பின்புறம் வர, அது பெரிய மைதானமாக இருந்தது.. அந்த வீதியில் இருக்கும் எல்லா கடைகளுக்கும் அது பின்புறம் போலும்.. காய்கறிகள், பழங்கள், மளிகைகள் என கலவையாக சாமான்கள் பெரிய பெரிய லாரிகளில் வந்து இறங்கிய வண்ணம் இருந்தன.
மைதிலியின் கண்கள் பரசுராமனை தேடின.. இவனை எங்கே..? ஒவ்வொரு கடை வாயிலாக சலித்தாள்.. அப்போது அவள் நின்றிருந்த இடத்திற்கு பக்கவாட்டில் அவனது சத்தம் கேட்டது. சாதாரணமாக இல்லை.. மதம் கொண்ட யானையின் பிளிறல் போல் ஒலித்தது.. தொடர்ந்து சப் சப்பென அறையும் ஒலியும் கேட்டது.
மைதிலியின் மனது படபடத்தது.. யாரை அடிக்கிறான்..? இவன் எப்போதும் இப்படித்தான் யாரையாவது அடித்துக் கொண்டே இருப்பானா..? மெல்லிய பதட்டத்துடன் இறங்கிய படிகளை ஏறி நின்று பார்த்தாள்.. பக்கவாட்டு சந்துக்குள் இருந்து ஒருவனை அடித்து இழுத்து வந்தான் பரசுராமன்.
“ஏன்டா பெரிய வெண்னையாடா நீ.. ஒரு மாதமாக உன்னை எச்சரித்துக் கொண்டு இருக்கிறேன்.. நீ கண்டுக்காமல் நான் செய்வதைத்தான் செய்வேன்னா என்னடா அர்த்தம்..? இன்னும் உனக்கு இரண்டே நாள்தான் டைம்.. அதுக்குள்ளே பழுக்க வச்ச தாரையெல்லாம் தூக்கிட்டு போய் அவுட்டர்ல குப்பைக் கிடங்கில் போடுற.. என்ன செய்வாயா..?”
பேசியபடியே அவனை திரும்ப திரும்ப அடித்துக் கொண்டிருந்தான் சுற்றிலும் இருந்தோர் இந்த சண்டையை கண்டு கொள்ளாமல் அவரவர் வேலையில் இருக்க, வேடிக்கை பார்க்க நின்றிருந்த சொற்ப ஆட்களும் நல்லா மூஞ்சியல குத்துங்க, மூக்கை உடைங்க என்று பரசுராமனை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர்.
“என்ன அண்ணி பயந்துட்டீங்களா..?” பின்னால் வந்து நின்று ரவீந்தர் கேட்டான்.
“அண்ணனும், தம்பியும் ஒன்றுபோல் இருப்பீர்கள் போல, நீங்களும் இப்படித்தானே காலேஜில் கை நீட்டிக் கொண்டிருப்பீர்கள்..”




“ம்.. இது அப்பா எங்களுக்கு கற்றுத்தந்தது.. அநியாயத்தை தட்டிக் கேட்க வேண்டும் என்று எங்கள் சிறு வயதிலிருந்தே சொல்லியே வளர்த்திருக்கிறார்.. அண்ணன்தான் அதில் பயமில்லாமல் முதலில் நிற்பார்.. கல்யாண் அண்ணா யாருடைய வம்பிற்கும் போகாமல் அமைதியாக போய்விடுவார்.. நான் கொஞ்சம் அண்ணனை பின்பற்றுவேன்.. உள்ளே நிறைய பயம் இருக்கும்.. அதை வெளியே காட்டிக் கொள்ள மாட்டேன்..”
“ஹா.. பயமா.. உங்களுக்கா..? யாரிடம் கதை விடுகிறீர்கள்..? நம் காலேஜ் புரொபசர் ஒருவரை அடித்து புரட்டியிருந்தீர்களே.. பயந்தவர் அடிக்கும் அடியா அது..?”
“அண்ணி காதை கொண்டாங்க உங்களிடம் மட்டும் அந்த ரகசியத்தை சொல்கிறேன்.. அன்று அந்த புரொபசரை அடித்தது நான் இல்லை.. அண்ணன்தான்..”
“என்ன..? நம் காலேஜ் புரொபசரை உங்க அண்ணன் எப்படி..?”
“நிறைய நம் காலேஜ் அநியாயங்களுக்கு அண்ணன்தான் ஹெல்ப் பண்ணுவார் அண்ணி.. அந்த புரொபசர் நம் காலேஜ் பொண்ணுங்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்துக் கொண்டிருந்தார்.. எதிர்ப்பவர்களை இன்டர்னல் மார்க்கை காட்டி மிரட்டினார்.. நிறைய கேள்ஸ் என்னிடம் கம்ப்ளைன்ட் சொல்ல, நான் அண்ணனிடம் சொன்னேன்.. இது போன்ற அநியாயங்களை அண்ணன் பொறுத்துக் கொள்ளவே மாட்டார்.. நீ படிக்கிற பையன்.. இதில் தலையிடாதேன்னு சொல்லிட்டு காலையில் வாக்கிங் போன புரொபசரை அடித்து புரட்டியதும், மறுநாள் அந்தப் பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டுமென்று அனுப்பி வைத்ததும் அண்ணன்தான்..”
“ஓ..” மைதிலியின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன..
“உங்க அண்ணன் செய்த வேலைகளுக்கு நம்ம காலேஜில் நீங்க ஹீரோ பட்டம் வாங்கிக்கிட்டீங்களாக்கும்..?” கொழுந்தனை கிண்டலடித்தாள்..
“பார்த்தீங்களா உங்க புருசனை பெரிதாக நினைத்து என்னை டம்மியாக்கிட்டீங்களே..” ரவீந்தர் சோகம் காட்டினான்..
“உங்க அண்ணனை பற்றித்தான் எனக்கு முன்பே தெரியுமே..”
“எப்போது தெரியும்..?”
“அவரை நான் முதன் முதலில் சந்தித்ததே இதுபோல் ஒரு அடிதடியில்தான்.. இப்போதாவது கையால் அடித்துக் கொண்டிருக்கிறார்.. அப்போது அரிவாளை தூக்கிக் கொண்டு ஓடி வந்தார்..”
“அப்படியா.. அது எப்போது..?”
“அது இரண்டு வருடம் இருக்கும்.. நான் அப்பாவுக்கு சாப்பாடு கொடுக்க வந்தேன்.. அப்போது ஒருவரை அரிவாளால் விரட்டிக் கொண்டு வந்தார் உங்கள் அண்ணன்.. நான் கொஞ்சம் அசந்திருந்தாலும் அந்த அரிவாள் அன்று என் கழுத்தில் பதிந்திருக்கும்.. ஏதோ பரிதாபத்தில் பென்ணென்ற எண்ணத்தில் போனால் போகிறதென விட்டு விட்டார் என நினைக்கிறேன்..”
“ஆஹா என்ன ஒரு அருமையான சிச்சுவேசன்.. தலைவனும் தலைவியும் மீட் பண்ண இதைவிட அழகான சிச்சுவேசன் இருக்க முடியாது.. சோ.. அன்று அரிவாள் தூக்கி வந்தவர் உங்கள் மனதில் ஹீரோவாக பதிந்துவிட்டார் சரியா..?”




கணித்து கேட்டவனின் தலையில் கொட்டும் ஆவல் மைதிலிக்கு வந்தது.. இவன் ஒருத்தன் அர்த்தமில்லாமல் உளறிக் கொண்டு..
“வேண்டாம் கொழுந்தனாரே..” விரலாட்டி அவள் எச்சரிக்க,
“சரி சரி இந்த ரகசியத்தை யாரிடமும் சொல்ல மாட்டேன்.. சத்தியம் வேண்டுமானால் செய்து தரவா..?” ரவீந்தர் தனது கேலியை தொடர்ந்தான்.
பரசுராமன் அப்போதுதான் மைதிலியை பார்த்தான்.. ரௌத்ரம் தாண்டவமாடிக் கொண்டிருந்த அவன் முகம் அகல்விளக்கு ஒளியாக அமைதியானது.. கருணையும், சாந்தமும் வந்துவிட்டது தன் கைகளுக்குள் இருந்தவனை..
“நான் சொல்வதை செய்வாய்தானே..?” என உலுக்க,
“இன்னைக்கே செஞ்சிடுறேங்க..” என கையெடுத்துக் கும்பிட்டான் அவன்..
‘தட்’டென அவனை தரையில் தள்ளிவிட்டு மைதிலியை நோக்கி வந்தான் பரசுராமன் காருண்யம் வழிந்த அவன் பார்வையில் பிறரரியாத பிரத்யேக ரகசிய புன்னகை ஒன்றும் மனைவிக்காக இருந்தது..
“அடடா, நொடியில் அண்ணன் எப்படி முகத்தை மாற்றுகிறார்..?” அருகிலிருந்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்த ரவீந்தரை மைதிலி முறைத்தாள்..
“மைதிலி..” ஆச்சரியமாக அழைத்தபடி நின்றான் பரசுராமன்.
“என்னம்மா ஏதாவது முக்கியமான விசயமா..?”
“ஒன்றும் இல்லையே.. நான் சாப்பாடு கொண்டு வந்தேன்..” இல்லையென்று மறுத்துக் கொண்டே ஆமாம் என்று கண்ணால் சேதி சொன்னாள் கணவனுக்கு..
“சரி வா.. எனக்கு பசிக்கிறது.. சாப்பாடு பரிமாறு..”
“அப்படியே எனக்கும்..” ரவீந்தரும் தயாராக..
“டேய் நீ போய் கருவாடு வந்து இறங்கிடுச்சான்னு பாரு.. வந்துடுச்சுன்னா எண்ணி ஏற்று.. பிறகு வந்து சாப்பிடு..” என்றான்.
“சே இந்த வீட்டில் என்ன கொடுமையெல்லாம் நடக்கிறது.. எனக்கு ஒரு வாய் சாப்பாடு போட ஆளில்லை..” புலம்பியவனின் தலையை தட்டினான்.
“குறையாடாமல் போடா.. நீ இங்கே வா மைதிலி..” ஆபிஸ் அறைக்குள் அழைத்துப் போனான்.
அவள் கையிலிருந்த கேரியரை வாங்கி டேபிள் மேல் வைத்தான்.
“என்ன விசயம் மைதிலி..? வந்தனா ஏதாவது சொன்னாளா..? நீ முன்பு போல் அவள் சொல்வதை யெல்லாம் என்னிடம் மறைக்க கூடாது.. எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும்..”
படபடப்பாக பேசியவனை ஆச்சரியமாக ஏறிட்டாள்.. இவன் சற்று முன் சிங்கம் போல் கர்ஜித்து நின்றதென்ன..? இப்போது ஒரு சிறு விசயத்திற்கு இத்தனை படபடப்பு காட்டுவதென்ன..?
ஆதரவாக புன்னகைத்தாள்..




“ஒன்றும் பயப்படும் விசயம் இல்லை.. சந்தோசமான விசயம்தான்.. நீங்கள் அடித்து அடித்து அசதியாக இருப்பீர்கள்.. சாப்பிட உட்காருங்கள்.. சாப்பிட்டுக் கொண்டே பேசலாம்..”
பரசுராமனின் முகத்தில் சிறிது சங்கடம் தெரிந்தது.. மனைவி முன் இது போன்ற நிலையில் தென்பட அவன் விரும்பவில்லை எனத் தெரிந்தது.. மைதிலி இலையை விரித்து உணவு பரிமாற ஆரம்பித்தாள்..
“அவன் தப்பு செய்தான் மைதிலி.. அதுதான் அடித்தேன்..” சோற்றை பிசைந்தபடி மெல்லிய குரலில் சொன்னான்.
“ம்..” மைதிலி உம் கொட்டியபடி கீரையை அவன் இலையில் வைத்தாள்..
“என்ன தப்பென்று கேட்க மாட்டாயா..?”
“அதுதான் தப்பென்று சொல்லிவிட்டீர்களே.. இதுபோன்ற விசயங்களில் எனக்கு உங்கள் மேல் நம்பிக்கை இருக்கிறது..”
“நன்றி மைதிலி.. என்னவென்று கேட்காமலேயே என்னை நம்பியதற்கு..”
“இதற்கெல்லாம் எதற்கு நன்றி..?” மைதிலி மெல்ல முணுமுணுத்தாள்..
“நீ கேட்காவிட்டாலும் நான் சொல்லிவிடுகிறேன் மைதிலி.. அவன் நம் பக்கத்து கடையில் வாழை மண்டி வைத்திருக்கிறான் மொத்தமாக வாழைத்தார்களை இறக்கி வைத்து விற்பனை செய்பவன் பத்து வருடங்களாக ஒழுங்காகத்தான் தொழில் பார்த்துக் கொண்டிருந்தான்.. அவனது நேர்மையான தொழில் முறையை விசாரித்து அறிந்து கொண்டுதான் இங்கே அவன் கடை போட அனுமதி கொடுத்தோம்.. இப்போது ஆறு மாதங்களாக அவன் சரியில்லை.. ஏதோ தவறு செய்கிறானென தெரிந்தது.. ரவீந்தரை விட்டு கண்காணிக்க சொன்னேன்.. இரவு நேரங்களில் அவன் கடைக்குள் கார்பைடு கற்களை வைத்து வாழைத்தார்களை பழுக்க வைத்துக் கொண்டிருந்ததை ரவீந்தர் கண்டுபிடித்து விட்டான்.. ஒரு மாதமாக அவனை எச்சரித்துக் கொண்டிருந்தேன்.. அவன் கேட்பதாக இல்லை.. அதனால் தான் இன்று கை நீட்ட வேண்டியதாயிற்ற..”
“போலிசில் கம்ப்ளைண்ட் பண்ணியிருக்கலாமே..?”




“இல்லை மைதிலி.. இதோ இந்த வணிக வளாகம் முழுவதும் வியாபாரிகள்தான்.. விதம் விதமான வியாபாரங்கள் நடக்கின்றன.. இந்த வியாபார சங்கத்திற்கு அப்பாதான் தலைவர்.. இங்கே வியாபாரம் பார்க்கும் வியாபாரிகள் நியாயமான முறையில் வியாபாரம் செய்ய வேண்டுமென்பதே எங்கள் ஆசை.. அதனை நாங்கள் தீவிரமாக பின்பற்றி வருகிறோம்.. நாம் வியாபாரிகளாக சேர்ந்து ஒற்றுமையாக தொழில் பார்க்கவேண்டும்.. நல்லது, கெட்டதை நாமே சரி செய்து கொள்ள வேண்டும்.. போலிசை உள்ளே விடக் கூடாது என்பது எங்கள் சங்க கொள்கை.. இதுவரை இப்படித்தான் இங்கே தொழில பார்த்து வருகிறோம்.. இதற்கு கட்டுப்படாதவர்களை இப்போது போல்..”
“போட்டு மொத்துவீர்கள்..” மைதிலியின் முகத்தில் புன்னகை இருந்தது.. அவள் முகத்தை உற்றுப் பார்த்த பரசுராமன்..
“உனக்கு கோபம் ஒன்றும் இல்லையே மைதிலி..?” என்றான்..
“எதற்கு கோபம்..?”
“என் மீது.. இவன் யாரையென்றாலும் இப்படித்தான் அடிப்பான் போல, என்று என்னை நினைத்துவிட வில்லையே..”
இவ்வளவு நேரம் இருந்த உற்சாகம் மாறி மைதிலியின் முகம் வாடியது.. அவள் மௌனமாக பரிமாறுவதை தொடர்ந்தாள்.. கொஞ்சநேர அமைதிக்கு பின், பரசுராமன் மெல்ல கேட்டான்..
“என்ன விசயமாக இவ்வளவு தூரம் வந்தாய் மைதிலி..?”
மைதிலிக்கு தான் வந்த விபரம் நினைவு வந்துவிட, உடனே உற்சாகம் வந்துவிட்டது.
“நான் கல்யாண கொழுந்தன் – வந்தனாவை பற்றி பேச வந்தேன்.. இன்று அவர்கள்..” என ஆரம்பித்து தான் கேட்ட விசயங்களை சொல்லி முடித்தாள்..




“ஏய் மைதிலி..” என்றொரு மெல்லிய கூச்சலுடன் பரசுராமன் இடது கையை நீட்டி அருகில் நின்று பரிமாறிக் கொண்டிருந்தவளின் இடையை வளைத்து தன் மீது இழுத்துக் கொண்டான்.
“இது எவ்வளவு முக்கியமான விசயம்.. இதை சொல்லாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாயே..”
“உடனே இதனை உங்களிடம் சொல்ல வேண்டுமென்றுதான் இங்கே ஓடி வந்தேன்.”
“கடவுளே எவ்வளவு பெரிய பாரம் தீர்ந்தது..” பரசுராமன் பெருமூச்சு விட, அதில் விரிந்து விகசித்த அவன் முகத்தை பார்த்தபடி இருந்தாள் மைதிலி.
“நல்ல செய்தி சொல்லியிருக்கிறாய் மைதிலி உனக்கு இனிப்பு கொடுக்க வேண்டுமே..” பரசுராமன் சுற்றம் முற்றும் பார்த்தான்.

What’s your Reaction?
+1
5
+1
5
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!