Kodiyile Malligai poo Serial Stories கொடியிலே மல்லிகை பூ

கொடியிலே மல்லிகை பூ – 15

15

மத்தளமாய் மனம் கொட்டிக் கொண்டிருக்க 
மலர்ந்துவிட்ட மல்லிகை வாசம் மறைப்பதெப்படி ?

அந்த காப்பி கலர் சபாரி சூட் அமரேசனுக்கு வெகு பாந்தமாக பொருந்தியிருந்த்து .முகத்திலறையும் காற்று களைத்து போட்ட கேசம் நெற்றியில் படிய , படிய அதனை ஒரு கையால் விலக்கியபடி , திறனாய் கார் ஸ்டியரிங்கை கையாண்டு கொண்டிருந்தான் .டிராவல்ஸ் காரை  திருமணத்திற்கு போவதற்காக எடுத்து வந்திருந்தான் .சாலையில் ஒரு கண்ணும் , அவனிடம் ஒரு கண்ணுமாக இருந்தாள் வேதிகா .அவனிடம் ஏதாவது பேச வேண்டும் போலிருந்த்து .ஆனால் என்ன பேச என்றுதான் தெரியவில்லை .

சற்று முன்  அப்பா , மகளின் கொஞ்சலை உணர்ச்சி துடைத்த பார்வையுடன் பார்த்து கொண்டிருந்தவனை , கண்டதும் சாமிநாதன் கொஞ்சம் சங்கடமடைந்தார் .” வேதா இன்னமும் சின்ன பிள்ளையாகவே இருக்கிறாள் மாப்பிள்ளை …”

” இருக்கட்டும் மாமா .பெற்றோருக்கு பிள்ளைகள் என்றும் குழந்தைகள்தான் .”

” உங்கள் அம்மா நகைகளை வேதாவிற்கு கொடுத்தரக்கிறார்கள் பார்த்தீர்களா …? ” விசாலாட்சி சுட்டி காட்டினாள் .




” ம் …பார்த்தேன் …” என்றவனின் பார்வை அவளை பார்ப்பதை உணர்ந்த்தும் படபடத்தது வேதிகாவிற்கு.

ஒரு விரலை நீட்டி அவள் மூக்கை தொட்டவன் ” மூக்குத்தி போடவில்லையா …? ” என்றான் .மாமியாரின் நகைகளில் மேலே ஒரு பெரிய ஊதா நிற கல்லும் , கீழே சிறிய மூன்று வெள்ளை கற்களுமாக இருந்த பெரிய மூக்குத்தி நினைவு வர      சரிதான் இவர்கள் எல்லோரும் சேர்ந்து என்னை அம்மனாக்கி நிறுத்தாமல் விட மாட்டார்கள் போலவே …மனதிற்குள் சலித்துக் கொண்டிருந்த போது …

” நான் முன்பே சொல்லியிருக்கிறேன் தம்பி .இவளை மூக்கு குத்த சொல்லி கெஞ்சியிருக்கிறேன் .ராட்ச்சி…மாட்டேன்னுட்டா …இப்போ என்ன பண்றது …? கடை திறந்திருப்பாங்களே …போய் குத்தி விட்டு வந்திடலாமா …? ” கேட்டதோடு கிளம்புவதற்கான ஆயத்தங்களிலும் விசாலாட்சி இறங்க அதிர்ந்தாள் வேதிகா .அப்பாவை பார்க்க அவர் மூக்கு குத்த கிளம்ப ஆட்டோவை வரவழைக்கும் எண்ணத்தில் இருந்தார் .வேறு வழியின்றி அவள் கெஞ்சுதலாக கணவனை பார்க்க அவன் சிரிக்கும் விழிகளுடன் இவளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் .

  அதற்காக   முதலில் முறைத்தவள் பிறகு மாறி காப்பாற்றுமாறு ஒரு இறைஞ்சல் பார்வையை அனுப்பினாள் .பிழைத்து போ என்பது போல் கைகளை அசைத்தவன் ” இப்போது வேண்டாம் அத்தை .கல்யாண வீட்டிற்கு நேரமாகிவிடும் .இன்னொரு நாள் வைத்துக் கொள்ளலாம் …” என தற்சமயத்திற்கு காப்பாற்றினான் .அப்போது இன்னொரு நாள் மூக்கு குத்த சொல்வாயா …என்ற அவளது விழிக் கேள்விக்கு இருக்கலாம் என்பது போல் தோள்களை குலுக்கி விட்டு    சென்றவனின் தோள்களை குத்தலாமென தோன்றியது அவளுக்கு .

தனக்கு தானே கைகளை கட்டுப்படுத்தியபடி , வெளியே வந்தவளை ஒரு மாதிரி முறைத்த பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் திலகவதி .என்னவென்பது போல் வேதிகா புருவங்களை உயர்த்த ” அண்ணியின் நகைகளா …? ” அவள் கண்கள் வேதிகாவின் உடல் நகைகள் ஒவ்வொன்றின் மீதும் பட்டு …கொத்தின.




” என் அத்தையின் நகைகள் …” தன் உறவுமுறையை அழுத்தி சொன்னாள் வேதிகா .

” ஹை …அக்கா சூப்பர் .அப்படியே பழமையும் , புதுமையும் கலந்து ஒரு புதுவிதமான ஓவியம் போல் இருக்கிறீர்கள் ….” அறைக்குள்ளிருந்து வந்த மௌனிகா விகல்பமின்றி.   பாராட்டினாள்.வேதிகா மௌனிகாவின் முகத்தை கூர்ந்து விட்டு , திலகவதியை உற்று பார்த்தாள் .நிச்சயம் மௌனிகாவிடம் தவறில்லை .ஏதோ ஓர் அபஸ்வரம் இவர்களிடம் தான் இருக்கிறது .வீணையில் இடறிய ராகத்தை போன்ற பார்வையை திலகவதிக்கு தந்துவிட்டு , உயர்த்திய தலையுடன் ஒய்யாரமாக கணவனுடன் காரில் ஏறினாள் .

திருமண வீட்டில் மாப்பிள்ளை , பெண்ணை விட இவர்களே அதிகம் கவனிக்கப்பட்டனர் .வாசல் வரை வந்து வரவேற்றனர் சாவித்திரியும் , அவள் கணவரும். என் அக்கா மகளும் , அவர் கணவரும்    என சாவித்திரி பெருமையுடன் இருவரையும் மாப்பள்ளை வீட்டினருக்கு அறிமுகப் படுத்தனாள் .         மணப்பெண்ணின் அண்ணனின் பரபரப்போடு மண்டபத்தினுள் 
நடந்து கொண்டிருந்த விக்னேஷ் இவர்களை பார்த்ததும் சுற்றிக் கொண்டிருக்கும் தன் வேலைகளை மறந்து ஒரு நிமிடம் நின்றான் .

கண்கள் கனிய இவர்களருகே வந்து இருவரின் கைகளையும் பற்றிக் கொண்டான் .” இரண்டு பேரும் சட்டமிட்டு மாட்டிய ஓவியத்திலிருந்து இறங்கி வந்த பிம்பங்கள் போல் இருக்கிறீர்கள் . எவ்வளவு பெருத்தமான ஜோடி .திரும்ப உங்கள் இருவரையும் இப்படி பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது மாப்பிள்ளை .நீங்கள் எப்போதும் எங்கள் வேதாவுடன் இதே போல் ஒன்றாய் இருக்க வேண்டும் ” என்றான் .

” அட நாங்க எப்போ பிரிந்து இருந்தோம் …? இதோ இப்போது கூட ஒட்டிக் கொண்டுதானே இருக்கிறோம் தம்பி …” என்றுவிட்டு தன் கையால் வேதிகாவின் தோள்களை வளைத்து கொண்டான் .வேதிகா மூண்டுவிட்ட வெட்கத்துடன்தலை குனிய , விக்னேஷ் சிரித்தபடி பின்னால் நகர்ந்து அவர்கள் இருவரையும் தன் போனில் போட்டோ எடுத்தான.” அழகாக இருக்கிறீர்கள் .பிறகு உங்களுக்கு அனுப்புகிறேன் ” என்றுவிட்டு திருமண வீட்டுக்காரனுக்குரிய பரபரப்புடன் நகர்ந்தான் .

தன் வயதொத்த உறவு பெண்களை கண்டதும் அவர்களிடம் பேச எழுந்த வேதிகாவை ” எங்கே போகிறாய் .உட்கார் …” என அதட்டினான் அமரேசன் .அவன் இன்னமும் அவள் தோளகளில் இருந்த தன் கரத்தை எடுத்துக் கொள்ளவில்லை .

” ஏன் …? முதலில் கையை எடுங்கள் ….” வேதிகா முறைத்தாள் .
” சொல்கிறேன் .இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே உட்கார் …”

ஒரு பத்து நிமிடம் உட்கார்ந்திருந்தவளுக்கு பிறகு அப்படி இருக்க முடியாமல் போக ” நான் அகல்யாவை பார்க்க போகிறேன் ….” அவன் மறுப்பு சொல்லும் முன் பறந்து மணமகள் அறைக்குள் நுழைந்துவிட்டாள் .எதற்காக என்னை இப்படி வளைத்து கொண்டே திரிகிறான் ….சுதந்திரமாக மூச்சை ஙெளியேற்றியவளை மணமகள் அறைக்குள்ளிருந்த உறவினர் பட்டாளம் ஆரவாரத்துடன் வரவேற்றது .

” வாருங்கள் மகாராணி …”

” மன்னவன் விட்டுட்டாரா …”

” மகாராணி இல்லைப்பா .இந்திரனின் மனைவி இந்திராணி “

” அட..அடா …என்ன ஒட்டுதல் …என்ன உரசுதல் ….”

” புது திருமண ஜோடி இவுங்கதான்னு நினைச்சுட்டேன் …”

ஆளாளுக்கு கிண்டலும் , கேலியுமாக வேதிகாவை நெருக்க , அவள் பேசாமல் அமரேசனிடமே அமர்ந்திருக்கலாமோ என்று எண்ண தொடங்கினாள் .




” நாங்க அப்போதிருந்து உன் கிட்ட வர முடியாமல் முழிச்சிட்டிருந்தோம் தெரியுமா …? உன் வீட்டுக்கார்ர் தான் உனக்கு ஸ்ட்ராங்கா பாதுகாப்பு வளையம் போட்டு வைத்திருந்தாரே ….”

” சரி …அதை விடு .உங்களுக்குள் எல்லாம் சரியாகி விட்டதா …? எப்படி சரியாச்சு …? யார் பஞ்சாயத்து பேசினார்கள் …? அவர் இப்போது உங்கள் வீட்டில் தான் இருக்கிறாராமே …? வீட்டோடு மாப்பிள்ளை என்று பேசி விட்டீர்களா …? அதுதான் முதலில் உங்கள் திருமணம் முடிந்த போது பிரச்சினையா …? ஆனால்அவர்  குடும்பத்தோடா  வீட்டு மாப்பிள்ளை …? …கேள்விகள் …கேள்விகள் …

கோபமும் , எரிச்சலும் , வெறுப்பும் வர வைத்த கேள்விகள் .இந்த கொடூர கேள்விகளை எதிர்பார்த்துத்தான் அமரேசன் தன்னை கைகளுக்குள் பாதுகாத்தான் என தோன்றியது .இதே உறவுகள்தான் முன்பு அவள் திருமணம் முடிந்த மறுநாளே கணவன் வீட்டிலிருந்து தனியாக வந்து நின்ற போது , பரிதாப முகமூடிகளை  குதூகல முகத்தின் மீது மாட்டிக் கொண்டு உச்சுக் கொட்டின. தப்பும்மா …புருசன் வீட்டுக்கு போ …போலி அறிவுரைகளை புகட்டினர் .

நம் சொந்தங்கள் அனைவருக்கும் நமக்கு கிடைத்த மாப்பிள்ளை மீது பொறாமை .சாமிநாதனும் , விசாலாட்சியும் அன்று சொன்னதை …அபரிமிதமென நினைத்திருந்தாள் .ஆனால் இன்றோ …உண்மைதானோ எனத் தோன்றியது .இதோ இந்த அகல்யாவுக்காக கூட சாவித்திரி அமரேசனை கேட்டதாக விசாலாட்சி சொல்லியிருந்தாள் .அமரேசன் வீட்டிற்கு அகல்யாவின்   ஜாதகமும் போனதாக சொல்லியிருந்தாள் . அங்கே அமர் வீட்டில் தன்னை தேர்ந்தெடுத்தது யாராக இருக்கும் …?

மங்கையர்கரசிக்கு அங்கு தேர்ந்தெடுக்கும் உரிமையில்லை .திலகவதிக்கு தேர்ந்தெடுக்கும் எண்ணமில்லை .மௌனிகா சின்ன பெண் .இனி எஞ்சியிருப்பது அமரேசன்தான் .அவன்தானா …வேதிகாவின் மனம் படபடவென அடித்துக் கொண்டது .

பொம்மை போல் நடந்து வந்து மீண்டும் தன்னருகே அமர்ந்து கொண்ட மனைவியின் முகத்தை கூர்ந்து பார்த்தான் அமரேசன் .” எதுவும் பிரச்சினையா …? “

வேதிகா அவனை மௌனமாக பார்த்தாள் .”ஊரை போல் திருமணம் முடித்து ,சாதாரணமாக நாமும் வாழ்ந்திருந்தால் வீணான பேச்சுக்கள் வந்திருக்காது .நாம் கொஞ்சம் வித்தாயாசமானவர்களாக இருக்கிறோமே .அதனால் உறவுகள் ஏதாவது  பேசத்தான் செய்வார்கள் .அதையெல்லாம் கண்டு கொள்ளாதே வேதா …”

பதிலே சொல்லாமல் சரியென தலையாட்டிய மனைவியை ஆச்சரியமாக பார்த்தான் .” என் வேதாவா இது …? பதிலுக்கு பதில் பேசாமல் தலையசைப்பது …” அவனது என் வேதாவில் வெட்கம் வர தலை குனிந்து கொண்டாள் .சுண்டுவிரலை நீட்டி அவள் கன்னத்தில் மென்மையாக குத்தியவன் ,, ” கன்னம் சிவந்திருக்கு …” என முணுமுணுத்தான் .

” போதும் , தள்ளி உட்காருங்க …”

” அம்மாவோட நகைகளில் நீ வித்தியாசமான அழகோடு இருக்கிறாய் வேதா .நாம் கோவிலில் பார்ப்போமேநிறைய நகையணிந்த  சிற்பங்கள் .அவற்றை ஒத்திருக்கிறாய் …”

” எதற்கு இப்படி ஐஸ் வைக்கிறீர்கள் …? ” உள்ளத்து துள்ளலை குரலில் காட்டாதிருக்க அரும்பாடு பட்டாள் .

” மனதில் பட்டதை சொன்னேன் .சாதாரணமாக நான் பொய் சொல்வதில்லை வேதா .நம்பு . ஆனால் எவ்வளவு ஐஸ் வைத்தாலும் அப்பா…அப்பாதான் போல ….” என்றவனை புரியாமல் பார்த்தாள் .

” அப்பாவிற்கென்றால் கேட்காமல் கிடைக்கிறது .எனக்கென்றால் …ம்ஹும் …” பெருமூச்சு விட்டு அவன் இதழ்களை குவித்து காட்டிய போது , மார்கழி பனியின் மழையாய் வேதிகாவின் இதயம் சிலிர்த்தது .

சிரிப்பும் , சிலிர்ப்புமாய் வீடு திரும்பினர் தம்பதிகள் .சாலையை பார்ப்பதை விட தன்னை அதிகம் கணவன் பார்ப்பதை கவனித்தவள் …” ப்ளீஸ் ரோட்டை பார்த்து ஓட்டுங்க …” என்றாள்.

” வெறுமனே பார்ப்பதற்கு கூட தடை விதித்தால் எப்படி ஙேதா …? ஆறு மாதங்கள் இது கூட இல்லாமல் எப்படி இருந்தேனென தெரியவில்லை …”




” ஆறு மாதங்கள் என்னை பார்க்காமலேயா இருந்தீர்கள் …? தினமும் நான் கடைக்கு போகும் போது சரியாக என் எதிரில் என்னை கடந்து போவீர்களே …” நினைவூட்டினாள் .

” ஆமாம் .அது போல் ஒரு நாளைக்கு அரை நிமிடமாவது உன்னை நேருக்கு நேர் பார்க்காமல் இந்த ஆறு மாத்த்தை என்னால் தள்ளியிருக்க முடியுமா …? “

ஆனால் அந்த அரை நிமிடம் …தாலி கட்டியவன் ..யாரோ போல் …ரோட்டில் , கடந்து போகும் அந்த முப்பது விநாடிகள் அவளை என்ன பாடு படுத்தியிருக்கும் .வேதிகாவின் முகம் பொலிவிழந்த்து .

” நாம் பழையவற்றை மறந்து விடுவோம் வேதா .இதோ இப்போதுதான் திருமணமானதாக நினைத்து கொள்வோம் .ஒரு புதிய வாழ்வை தொடங்குவோம் …” இடது கையை நீட்டி அவள் கைகளை பற்றிக் கொண்டான் .

வேதிகாவும் அதையேதான் நினைத்தாள் .விரும்பினாள் .ஆனாலும் குத்திய முள்ளை பிடுங்கிய பின்னும் , தேங்கி விட்ட பிசிறொன்று உறுத்துவது போலொரு உணர்வு அவளை தொந்தரவு  செய்து கொண்டே இருந்த்து .

அப்போது திடுமென காரின் ப்ரேக்கை அழுத்தி நிறுத்திய அமரேசன் , முன்னால் போய் இடித்து கொள்ள போன வேதிகாவின் தோளை பற்றி பின்னிழுத்து அமர்த்தி விட்டு …

” எந்த முட்டாளடா அது …? ” கத்தியபடி கீழிறங்கினான் .

What’s your Reaction?
+1
3
+1
5
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!