Author's Wall Entertainment Serial Stories

Welcome 2020.

இந்த வருடம் முடிய போகிறது .முடிந்து கொண்டிருக்கும் வருடத்தை திரும்பிப்பார்க்கிறேன் …என்ன முக்கிய நிகழ்வுகள் நடந்திருக்கின்றன …?அதிகாலை சூரியகாந்தியாய் மலர்ந்து சிரிக்கிறாள் என் மகள் . இந்த வருடத்திய மறக்க முடியாத இனிய நினைவு என் அன்பு மகளின் திருமணம் . அவள் மன ஆவல்களை அனுசரித்து , தேடித் திரிந்து நாங்கள் பார்த்து நடத்தி வைத்த திருமணம். பழுதில்லை உங்கள் தேர்வில் என்று வைரமாக ஜொலிக்கிறார் மருமகன் . இறக்கை முளைத்த தேரேறி பறக்கும் ராஜகுமாரி வாழ்வு மகளுக்கு . கண்கள் ஜொலிக்க உற்சாக துள்ளலில் வார்த்தையாடும் மகள் , திருப்தி கலந்த பெரு மகிழ்வை எங்கள் இதயங்களுக்கு தந்து கொண்டிருக்கிறாள் .இது போதுமே …இதை விட தாயாய் ஒரு வருடத்திய சாதனையென வேறென்ன பெரிதாக இருந்து விடப் போகிறது. கணவருக்கு மனைவியாய் …பிள்ளைகளுக்கு தாயாய் …இத்தோடு இப்போது கூடவே மருமகனுக்கு மாமியாராய் நான் .இப்புது பதவியை எனக்கு வழங்கிய இவ்வருடம் என் வாழ்வில் மிக முக்கியமாக பதிவிக்கப்பட வேண்டியது .

குடும்பம் கடந்து எழுத்தாளராய் எனது இவ்வருட செய்கைகள் அதிகமில்லை .மகளின் திருமண தேடல்கள் …வேலைகள் …என்றே இவ்வருடத்தின் பெரும் பகுதி போய் விட , கிடைத்த பொழுதுகளில் நான் எழுதிய நாவல்கள் இதோ இவை …




1. நந்தன் என் காதலன்
2. உடலென நான் உயிரென நீ
3. இது ஒரு காதல் மயக்கம்
4. ராமனின் மோகனம்
5. வானமழை போல் ஒரு காதல்
6. தேர் கொண்டு வந்தவன்
7. தங்கதாமரை மலரே .

இவற்றில் தங்கதாமரை மலரே 45 அத்தியாயங்களுடனான பதிப்பக நாவல் .கற்பகம் புத்தகாலயம் மூலம் வெளியானது .மற்ற ஆறு நாவல்களும் 22 அத்தியாயங்களுடன் மாத நாவலாக குடும்பநாவலில் வெளியாகின . இவற்றில் ” தேர் கொண்டு வந்தவன் ” நாவல் இப்போதுதான் பதிப்பிற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது . வரும் மாதம் உங்கள் கைகளில் கிடைக்கும்.

நந்தன் என் காதலன் , உடலென நான் உயிரென நீ , இது ஒரு காதல் மயக்கம் மூன்று நாவல்களும் கற்பகம் புத்தகாலயத்தால் மறு பதிப்பிக்கப்பட்டு புத்தகமாக வெளிவந்துள்ளன .இவற்றோடு தங்கதாமரை மலரே நாவலையும் நீங்கள் சென்னை புத்தக கண்காட்சியில் கற்பகம் புத்தகாலயத்தினரின் ஸ்டாலில் வாங்கலாம் . இவற்றோடு எனது மற்ற பழைய நாவல்களும் புத்தக கண்காட்சியில் கிடைக்கும் .#புத்தக_கண்காட்சி புத்தகங்கள் பற்றி விளக்கங்கள் கேட்ட சில தோழிகளுக்கெனவே இந்த தெளிவான விளக்க தகவல்கள் .

#கற்பகம்_புத்தகாலயம் நிறுவனத்தினரின் ஸ்டால் விபரம் பின்னர் தெரிவிக்கிறேன் . இங்கே நான் எழுதிய இறுதி மூன்று நாவல்கள் தவிர்த்து பிற நாவல்கள் அனைத்தும் கிடைக்கும் .

#லட்சுமி_பாலாஜி பதிப்பகம் மூலம் வெளி வந்த நாவல்கள் அந்த பதிப்பக புத்தகங்கள் கிடைக்கும் கடையில் கிடைக்கும் . புத்தக கண்காட்சி பற்றிய பிற விபரங்களை பின்னர் தெளிவாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .

இந்த வருடம் என் எழுத்துலகில் நான் பெற்ற மிகச் சிறந்த நட்புகள் கற்பகம் புத்தகாலயம் நல்லதம்பி சாரும் , பாக்கெட் நாவல் அசோகன் சாரும் . முந்திய வருடங்களிலேயே எங்கள் நட்பு பயணம் ஆரம்பித்திருந்தாலும் புரிதலும் …தெளிந்து தெரிதலுமாக எங்கள் நட்பும் , எழுத்துலக தொடர் பயணமும் நிலை பெற்ற ஆண்டு இதுவே . எங்கோ தமிழகத்தின் தென் பகுதியில் வெளியுலகம் அறியாமல் வீட்டிற்குள் கிடக்கும் ஒரு எளிய இல்லத்தரசியின் பெயரை நான்கு பேர் தெரியுமளவு கொண்டு வந்ததில் பெரும் பங்கு வகிப்பவர்கள் இவர்கள் . மிக்க நன்றி நல்லதம்பி சார் .உங்கள் நிறுவனத்துடன் தொடர்ந்து இணைந்திருப்பதில் மகிழ்கிறேன் .

பதிப்பக நாவல்களை விட வெகுஜனங்களை எளிதில் சென்றடைவது மாத நாவல்களே .அவ்வகையில் ஜீயே சாரின் மோதிர விரல்களில் என் கதைகள் குட்டு வாங்கிய பின்பு இன்னொரு வகை வாசக வட்டம் எனக்கென விரிந்தது . எனது வலைதளத்தை பார்த்த பின்னும் எனக்கு புத்தகத்தில் படிக்கத்தான் பிடிக்கும் ,ப்ளீஸ் சொல்லுங்கள் உங்கள் அடுத்த புத்தகம் எப்போது ரிலீஸ் என மெயிலில் செல்ல அடம் பிடிக்கும் வாசகிகள் சிலரை நான் குடும்பநாவல்களுக்கு பிறகுதான் சந்தித்தேன் . நிவேதா என்றொரு வாசகி .நான் ஒரு நன் …என்னை சிஸ்டர் என்று கூப்பிடுங்கள் என்றபடி என் முதல் குடும்ப நாவலான மயங்கினேன் மன்னன் இங்கே வெளியான போது மெயிலில் அறிமுகமானார் .எனது ஒவ்வொரு மாத நாவலையும் எதிர்பார்ப்பவர் இவர் .
இப்போது ஜீயே சாரின் குடும்பநாவல்களில் கதை எழுதுபவள் என சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன் . மிக்க நன்றி ஜீயே சார் .நமது நட்பு இன்னமும் நெடுங்காலம் நீண்டிருக்க விழைகிறேன் .




எழுதுபவள் நான் …வெளியிடுபவர்கள் இவர்கள் .இது மட்டும் போதுமா என்ன ? இவர்கள் இருவரையும் விட சர்வ வல்லமை பொருந்தியவர்கள் இருக்கின்றனரே …அது வாசகர்களாகிய வாசிப்பாளர்கள் நீங்கள் …நீங்கள்… நீங்கள் . உங்கள் அனைவரின் ஆதரவின்றி இன்று இந்த நிலைக்கு என்னால் உயர்ந்திருக்க முடியாது தோழமைகளே . மாத நாவல்கள் , பதிப்பக நாவல்கள் , தள நாவல்கள் , கிண்டில் நாவல்கள் இவைகளோடு இப்போது புது முயற்சியாக யு ட்யூப்பிலும் நாவல்கள் .இவை எல்லாவற்றிற்கும் உங்களது ஏகோபித்த ஆதரவை கொடுத்து என்னை மேலும் மேலும் படியேற்றி விட்டுக் கொண்டிருக்கும் வாசகர்களாகிய உங்கள் அனைவருக்கும் எனது பேரன்புடன் கூடிய நன்றிகள் .

உங்கள் அனைவரின் துணையிருக்கும் தைரியத்தில் எழுத்துலகின் அடுத்த வருடத்தை இன்னமும் வசந்தமாக்கும் உறுதியுடன் ஆரம்பிக்கிறேன் தோழமைகளே …வாருங்கள் பயணத்தை தொடங்குவோம் .
#welcome_2020.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!