Athikalai Poongatru Serial Stories அதிகாலை பூங்காற்று

அதிகாலை பூங்காற்று – 1

கவிதை சொல்லவா..?

விதிகளை கிழிப்பதில் வேலி தாண்டி குதிப்பதில்
ஒருவகை திகிலின்பம்,
அதுவேதான் நீ தீண்டுகையிலும்,
குளிர் பெட்டி காய் மேல் படியும் வகை
உறை குளிர் அப்போது,
இமை துயிலும் நேரத்திலும்
நெஞ்சிலிறங்கும் மூர்க்கம் உனது,
திடுக்கிடலுக்குப் பின் வரும் மயக்கங்கள்
உன்னிடமிருந்தென்னை சீராக சொருகுகின்றன,
புரிய.. அறியா என் மந்த கவனத்தை
உச்சி கீறி உடல் வகிர்ந்து
உனதாக்கிக் கொள்கிறாயடா
காட்டுமிராண்டி காதலா..

1




“டேய் இருளா தண்ணி ரொம்பி போகுது பாருடா.. எந்த உலகத்துல இருக்கிற..? எந்திரிச்சு மடையை மாத்தி விடுடா கூவை..” அன்னாசிலிகத்தின் கூப்பாட்டில் கால் தடதடக்க வேகமாக போய் மண்வெட்டியை எடுத்தான் இருளன்..
ஐய்ய்யோ தூங்குறதை பாத்துட்டாரோ.. இருளன் பதட்டத்துடன் மண்ணை வெட்டி இழுத்தான்..
அதே அளவு பதட்டம் வரப்பு மேல் நடந்து வந்து கொண்டிருந்த தங்கபாண்டியனுக்கும் இருந்தது..

அண்ணாச்சி மூடு சரியில்லாமல் இருக்காரு போலயே.. இப்போ போய் அவருகிட்ட இந்த விசயம் பேசலாமா.. வரப்பை விட்டு வயலுக்கு வழுக்கிய கால்களை தைரியத்தை கூட்டிக்கொண்டு இழுத்து நடந்தான் தங்கபாண்டியன்.
“டேய் தண்ணி நெறஞ்சி போறது கூட தெரியாமல் என்னலே தூக்கம்..?”

துவரைக்கு பாய்ந்து முடித்து தளும்பி நின்ற நீரை வாய்காலை வெட்டி இழுத்து பக்கத்து வயலுக்கு மாற்றிக் கொண்டிருந்த இருளன்.. தலை குனிந்து பவ்யமாய் பதிலளித்தான்.
“ரா முச்சூடும் சொட்டு கண் அசரலங்கய்யா.. அதான் இப்போ செத்த அசத்திருச்சி..”
“யார் கிட்ட கத விடுற.. நீ ராவுல தூங்காமல் முழிச்சிருந்தியாக்கும்..? வைக்கோல் படப்பு பின்னாடி கயித்து கட்டில்ல நீ வுட்ட கொறட்டை எனக்கு தெரியாதுன்னு நெனச்சியோ..?”
இருளன் முழித்தான்.. இவரு இந்தப்பக்கமே வரலையே.. எப்படி தெரியும்..?

“எனக்கு ஏழுரு கண்ணுடா.. என் வூட்டுல இருந்துட்டே இங்கன பாக்க என்னால முடியும்.. அதெப்படிடா ஒரு மனுசனால இருபது மணி நேரமும் தூங்க முடியுது..”
இருளன் இருளடித்தது போலானான்..
“அதொண்ணுமில்லீங்கய்யா.. தோ முடிஞ்சதுங்க..” சக் சக்கென மண்ணை வெட்டி இழுத்து மடை மாற்றினான்..

அன்னாசிலிங்கத்தின் வாய் வேகம் இருளனின் மண்வெட்டியில் பிரதிபலிக்க, அதே மண்வெட்டி டங் டங்கென தங்கபாண்டியனின் மனதில் விழுந்தது..
அவனுள் இன்னமும் அதே போராட்டம்.. கேட்பதா..? வேண்டாமா..?
“அண்ணாச்சி..”
“என்னலே..?”




அந்த என்னலேயில் உலர்ந்த உள் நாக்கை எச்சில் விழுங்கி நனைத்து மேலாக புன்னகைத்தான் தங்கபாண்டியன்.

“டேய் தங்கா என்னடா கூப்பிட்டுட்டு நிலை மரமா நிக்குற..?”
“ஒண்ணுமில்லைங்க அண்ணாச்சி..” திரும்ப போனான்..
“டேய் நில்லுடா.. காலங்கார்த்தால எங்கலே.. இந்தப் பக்கம்..?”
“சும்மாதானுங்க அண்ணாச்சி.. நம்ம வயக்காட்டை பார்க்கலாமுன்னுதான்..”
“வயக்காட்டை பாக்க வர்றவனா நீ.. ம் ஏதோ இருக்குலே.. அங்கன வா பேசலாம்..”
மோட்டார் ரூமை ஒட்டி போட்டிருந்த தகர செட்டை கை காட்டிவிட்டு நடந்தார்.. தங்கபாண்டியனும் செம்மறியாய் பின் தொடர்ந்தான்..
கயிற்றுக் கட்டில் மேல் உட்கார்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டு பல்லிடுக்கில் மாட்டிக் கொண்டிருந்த எதையோ குத்தியபடி “சொல்லுலே..” என்றார் அன்னாசிலிங்கம்.
“இது.. இ.. இந்த ஏற்பாடு வ.. வந்து.. இது சரியா வருமா அண்ணாச்சி..?”
“எந்த ஏற்பாடுலே..?”
“இ.. இந்த கல்யாணம்.. நம்ம கவி கல்யாணம்..”
“ஏன் அதில் உனக்கென்ன பிரச்சனை..?”
“அது.. அதை வேண்டாம்னு.. இரண்டு குடும்பத்துக்குள்ளாற பகை இருக்குறப்ப.. அங்க போய் சம்பந்தம் பேசி.. எதுக்கு அண்ணாச்சி..?”
“ஆமான்டா எத்தன நாளைக்கு பகையாவே கிடக்கிறது..? அதை தீர்ப்போம்னுதான்..”
“அதுக்காக நம்ம வூட்டு பொண்ணை எதுக்குங்க அண்ணாச்சி..”
“அடேய் சம்பந்தம் பேசுறதுலதான்டா தீராப் பகையைல்லாம் தீர்ந்து போகும்.. அந்தக் கால ராசாக்களெல்லாம் கல்யாணம் பேசித்தான்டா ஒண்ணுக்கொண்ணு சமரசம் ஆனாங்க..”
“அந்த காலம் வேறங்க அண்ணாச்சி.. அவுங்க ராசாங்கம் ஆளுறவங்க அவுங்களுக்கு தேவை இருந்துச்சு.. நாடு நகரம் மக்கள்னு ஆயிரம் காரணம் இருந்துச்சு.. நமக்கு என்ன அண்ணாச்சி தேவை..?”
“ஏன்டா படிச்ச பயதானடா நீ..? நம்ம தேவை உனக்கு தெரியாது..? தோ.. சுத்தி பாருலே.. அங்கங்க கொஞ்சம் பசுமை.. பொறகு பூராம் காஞ்சி கிடக்கு.. வருசத்துக்கு வருசம் பசப்பு கொறஞ்சுட்டே வருது.. தோ பாரு நம்ம வயலுல ஊத்து இருக்கு உறிஞ்சு எடுத்து நம்ம பயிரை வளர்த்துடுறோம்.. ஊத்தில்லாத வறண்ட பூமிக்காரனெல்லாம் என்ன செய்வான்..? அண்ணாந்து வானத்தை பாத்துட்டே கண்ணீர் விட்டுட்டு இருக்கான்.. எத்தனை நாளைக்கு இப்படி இருப்பான்..?”
“அந்த நல்லாம்பட்டிக் காரனுங்கள நம்பி எதுலயும் எறங்க முடியாதுங்க அண்ணாச்சி.. பயலுவ பாதியில உட்டுட்டு போயிடுவாங்க.. நான் இந்த பிரச்சனையை சட்டப்படி பாத்துக்கிடுறேங்க.. என்கிட்ட உட்டுடுங்க இதுக்காகல்லாம் நீங்க பெரிய முடிவு எடுக்க வேண்டாம் அண்ணாச்சி..”




“என்னத்தடா சட்டம்.. பெரிய சட்டம்..? உன்னை அதுக்குத்தான் படிக்க வச்சேன்.. என்ன பிரயோசனம்..? இன்னமும் சூனியராவேதான் இருக்க.. ஒரு நாளாவது கோர்ட்டுல போயி பேசியிருக்கியா..? உன் பெரிய வக்கீலுக்கு டீ வாங்கி குடுக்க மட்டும்தான் ஆவுது உன் படிப்பு.. இந்த லட்சணத்துல இருபது வருசமா இழுத்துட்டு கிடக்கிற பிரச்சனையை உன் சட்டத்துட்ட உட சொல்றியாக்கும்..?”
அன்னாசிலிங்கத்தின் குத்தல் பேச்சு கொடுத்த வருத்தத்தை காட்டிலும் அவர் சுட்டிய வருடக் கணக்கு தங்கப்பாண்டியனின் மனதில் தையல் ஊசியாய் இறங்கியது..
“இந்த முடிவை அப்பவே எடுத்துருக்கலாமில்ல அண்ணாச்சி..?”
“எப்பவேலே..?”
“அ.. அந்த பதினெட்டு வருசத்திக்கு முந்தி..”
அன்னாசிலிங்கம் பதில் சொல்லாமல் மீசையை நீவியபடி தம்பியை உற்று பார்த்தார்..
“அதை நீ இன்னமும் மறக்கலையால்ல..?”
அண்ணனின் கேள்வியில் பதறி நிமிர்ந்த தங்கபாண்டியன்.. “ஐயோ நான் அந்த நெனப்புல சொல்லலைங்க அண்ணாச்சி.. இது போலொரு கல்யாண விசயம் பதினெட்டு வருடம் முன்பு தப்பாக தெரிந்தது.. இப்போ மட்டும் எப்படி சரியா தோணுதுங்கண்ணாச்சி..”
“இடையில கழிஞ்சிட்ட பதினெட்டு வருசந்தான்லே காரணம்.. அப்போ அந்த கண்ணாலம் சரியா வராதுன்னு தோணுச்சு.. இப்போ இதுதான் சரின்னு தோணுது.. காலந்தான்லே மனுசங்க மனச மாத்துது.. இதுல நம்ம ஊரு நன்மையும் இருக்கில்ல..”
“அப்போ நம்ம ஊர் விசயம்.. ஏரி, கம்மாய் விசயமெல்லாம் தெளிவா அவுககிட்ட பேசிட்டீகளா அண்ணாச்சி..?”
“ம்ஹூம் அப்படி முதல்லயே பேசினா வேலைக்கு ஆவாதுலே மெல்ல மெல்லத்தான் ஊசியை இறக்கனும்..”
நரைத்த மீசையை முறுக்கிய அண்ணன் கிழட்டு சிங்கத்தை நினைவுறுத்த தங்கபாண்டியனால் மேற்கொண்டு அவரிடம் பேச முடியாமல் போனது..
“நம்ம வீட்டு பொண்ணு வாழ்க்கை எதுக்கும் நல்லா யோசிச்சி..” ஆனாலும் சொல்ல தயங்கவில்லை தங்கபாண்டியன்..
“எல்லாம் யோசிச்சிட்டேன்ல.. அதிலெல்லாம் ஒருபழுதும் வராது பயப்படாதே..”
இதற்கு மேல் தங்கபாண்டியனால் வேறெதுவும் சொல்ல முடியவில்லை.. “சரிதான் அண்ணாச்சி..” என ஒதுங்கிக் கொள்வதை தவிர..
“என்ன சொன்னாக உங்க அண்ணாச்சி..?”




புஸ்ஸென்று உப்பி பொன்னிற முறுவலோடு இருந்த பூரிகளை தட்டில் வைத்தபடி கேட்ட மனைவி சரளாவின் மீது தங்கபாண்டியனுக்கு எரிச்சல் வந்தது..
எப்போதும் எதிரில் அமர்ந்து காலாட்டியபடி டிவியில் ஒரு கண்ணும் டேபிளில் இருக்கும் பதார்த்த பாத்திரங்களில் ஒரு கண்ணுமாக தங்கபாண்டியன் கோர்ட்டுக்கு கிளம்ப வரும் போதே தனது காலை டிபனில் இறங்கியிருப்பாள்.. இன்றோ பாரம்பரிய தமிழ் மனைவியாய் அருகிருந்து கணவனுக்கு பக்குவமாய் பார்த்து பரிமாறுகிறாள்..
அவளுக்கு இப்போதைய தேவை அன்னாசிலிங்கத்துடன் தங்கபாண்டியன் பேசிய விபரங்கள்..
“அண்ணாச்சியை நான் பார்க்கலையே..” தங்கபாண்டியன் சொல்லிவிட்டு பூரி குருமாவிற்காக காத்திருக்க..
“ம்க்கும்..” என்ற நொடிப்புடன் அவனுக்கு எதிரிலிருந்த நாற்காலியை சர்ரென இழுத்து போட்டு அதில் அமர்ந்து தனக்கு பரிமாறிக் கொள்ள ஆரம்பித்தாள் சரளா..
இனி தன் கையே தனக்குதவி என உணர்ந்த தங்கபாண்டியன் குருமாவை தானே ஊற்றிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தான்..
“போய் என்ன ஏதுன்னு விவரம் கேட்டாற சொல்லித்தான உங்கள அனுப்புனேன்.. பேசாமல் வந்துட்டா எப்புடி..?”

“அண்ணன் வயக்காட்டுக்கு வரலை.. அவருக்கு வேற சோளி இருந்தது போல..”
அண்ணனுடனான தனது பேச்சு வார்த்தை நடந்த விதத்தை மனைவிக்கு சொல்ல தங்கபாண்டியன் விரும்பவில்லை.. துப்பு கெட்ட மனுசா எனும் பெயரை உடனடியாக பெறும் விருப்பம் அவனுக்கு இல்லை..
“தோப்புக்கு போயி பாத்துருக்கலாமில்ல..”
“எனக்கு கோர்ட்டுக்கு நேரமாயிடுச்சு சரளா அதான் வந்துட்டேன்..”
“ஆமா பெரிய கோர்ட்டு.. அங்க போயி இவரு வாதாடி கிழிச்சிற போறாரு.. கேஸ் கட்டை தூக்கிட்டு உங்க ஜூனியர் பின்னாடி அலைய போறீங்க.. அதுக்கு கொஞ்சம் லேட்டா போனாத்தான் என்ன..?”
தங்கப்பாண்டியன் பல்லை நறநறத்தபடி தலை குனிந்து சாப்பாட்டில் கவனம் வைத்தான்.. அவன் வாய்க்குள் பூரி மெல்லப்பட்டு குதம்பியது சரளாவின் வடிவாக..
“சரளா அப்படி பேசாத நீ இப்புடி சொல்லுறது தம்பி மனசுக்கு சங்கடமா இருக்குமில்ல.. இந்த பூரி சூடா இருக்கு தம்பி இதை சாப்பிடுங்க..” எண்ணெயிலிருந்து எழுந்து வந்ததை ஆவி பறக்க சொன்னபடி இருந்த பூரிகளை கொண்டு வந்து தங்கபாண்டயனின் தட்டில் வைத்தபடி சரளாவை அதட்டினாள் முருகலட்சுமி.. அன்னாசிலிங்கத்தின் மனைவி..
“உள்ளதை சொன்னா உடம்பு நோகத்தான் செய்யும்கா..” சரளா மேலும் கணவனை குதறினாள்..
மாப்பிள்ளை மதுரை ஹைகோர்ட்ல வக்கீலாக இருக்கிறார்.. அண்ணன் விவசாயி.. ஊருல ஏகப்பட்ட நில, புலன் இருக்கு.. விவசாயம், ரைஸ்மில், போக மதுரைக்குள்ளேயும் சொத்துக்கள் வாடகை, வருமானம்னு நிறைய இருக்குது.. போன்ற விஸ்தார விவரங்களுடன் எம்.ஏ முடித்திருந்த அவள் தங்கபாண்டியனுக்கு திருமணம் முடித்து வைக்கப்பட்டிருந்தாள்..




சொத்து, சுகங்களுக்கு குறைவில்லை என்றாலும் தங்கபாண்டியனின் வக்கீல் தொழில் பிரகாசிக்காமல் போக, அவன் வருடக்கணக்காக ஜூனியராகவே காலந்தள்ள, பெயரும் புகழுமாக விளங்க போகும் கணவனை அழைத்துக் கொண்டு மதுரை வந்து வசதியான தனிக்குடித்தனமாகி விட வேண்டுமென்ற சரளாவின் கனவு பதினெட்டு ஆண்டுகளாக நிறைவேறாமலேயே இருக்கிறது.
மதுரையில் நாகரீக வாழ்வை விரும்பிய அவள் பக்கத்து கிராமத்தில் வயலும் வயல் சார்ந்தவளுமாக வாழ நேர்ந்து விட்டதில் மிகுந்த துயரமடைந்தாள்.. அதனை அடிக்கடி கணவனிடம் காட்டி வந்தாள்..
என்னை மணம் முடிக்க எத்தனையோ பேர் காத்திருந்தார்கள்.. உன்னிடம் சிக்கி ஏமாந்து விட்டேன் என்பது தம்பதிகள் இருவரின் பரஸ்பர குற்றஞ்சாட்டல்..
“அஜித்து, த்ரிசாவும் ஸ்கூலுக்கு போயிட்டாங்களா..?” மனைவியிடம் விசாரிக்கும் போதே தன் குழந்தைகளின் இந்த பெயர்களை எரிச்சலாக உணர்ந்தான் தங்கபாண்டியன்..
சரளா அவளுக்கு பிடித்த நடிகர், நடிகையின் பெயரை தன் பிள்ளைகளுக்கு அடம் பிடித்து வைத்திருந்தாள்..
“ம்..ம்..” கடனுக்காக உம் கொட்டிவிட்டு எழுந்து போய் தட்டை பின்பக்க பாத்திரம் கழுவும் தொட்டியில் போட்டுவிட்டு கை கழுவினாள் சரளா..




“சித்தி..” தயக்கமான குரலுடன் அங்கே வந்து நின்றாள் கவிதா..
“என்னாச்சு சித்தி..? அப்பா என்ன சொன்னாராம்..?”
“எனக்கு வந்து வாய்ச்சிருக்குற மனுசன நம்பி விவரம் கேட்டுட்டு வாய்யான்னு அனுப்பினா, அவரு கைய விரிச்சுட்டு வந்து நிக்குறாரு.. உன் அப்பாவ பாக்கவே இல்லையாம்.. நான் என்ன செய்ய..?”
“அப்போ இந்த கல்யாணம் நடந்துடுமா சித்தி..?” கவிதாவின் கண்கள் பீதியில் உறைந்திருந்தன.




What’s your Reaction?
+1
26
+1
25
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!