nee thantha mangalyam Serial Stories நீ தந்த மாங்கல்யம்

நீ தந்த மாங்கல்யம் – 1

(1)

ஓய்வெடுக்க போவதற்கு முன் தன்னிடமுள்ள வெப்பத்தை எல்லாம் தட்டிவிட்டே போக வேண்டும் என முடிவெடுத்தபடி சூரியன் காய்ந்து கொண்டிருக்கும் பின் மதியவேளை .

அந்த கல்லூரி வளாகமே ஆதவனின் ஆக்ரோசம் தாங்காது துவண்டு போய் கிடந்தது .தூரத்தில் தெரிந்த கானல்நீரை ஐன்னல் வழியாக பார்த்த முகிலினி …தண்ணீர் போன்றே தெரிகிறதே என்று வியந்து கொண்டிருந்தாள் .

வெயில் காலங்களில் காடுகளில் வசிக்கும் மான்கள் இந்த கானலை நீரென எண்ணி பல மைல்கள் அதனை பிடிக்க ஓடி , பின் தாகம் தாங்காமல் இறந்தது கூட உண்டு .இப்படி தனது சிறு வயதில் படித்த ஞாபகம் வந்தது .

பொங்கி வரும் புதுவெள்ளம் 
கேட்டால் , 
கானலை கொடுத்து 
திருப்தி பட சொல்கிறாயே ,
அதில் ….
குடிக்கவோ , குளிக்கவோ …நான்




தனது நோட்டின் பின்புறம் இப்படி கிறுக்கினாள் முகிலினி .பட்டென அவள் கை பேனா பறிக்கப்பட , திரும்பி பார்த்தாள் .அவள் தோழி வைஷ்ணவி தன் நெற்றிக்கண்ணை கசக்கி  விட்டுக்கொண்டிருந்தாள் .முகிலினி தனது கவிதையை தொடர்வாளாயின் அந்தக்கண் திறக்கப்படலாம் .

” என்னடி …” கிசுகிசுத்தாள் முகிலினி .
” ஏன்டி …இங்கே அவாவா எவ்வளவு அவஸ்தை பட்டுட்டிருக்கா.யாமறியேன் பராபரமே ன்னு கவிதையா கிறுக்கிட்டு இருக்கிற ? ” பற்களை நறநறத்தாள் வைஷ்ணவி .

சிரிப்பு வந்தது முகிலினிக்கு .” என்னடி பாடு பட்டுவிட்டாய் நீ ..ம்?” சீண்டினாள் அவளை .

அங்கே பார்  என சைகை காட்டிவிட்டு தலையில் கை வைத்துக்கொண்டாள் வைஷ்ணவி .அவர்களின் பேராசிரியை கனகவல்லி கத்தி கத்தி பாடம் எடுத்து கொண்டிருந்தார். அந்த புத்தக தலையணைக்குள் கிட்டத்தட்ட தனது முகம் முழுவதும் புதைத்து கொண்டு , என்னென்னமோ சொல்லிக்கொண்டிருந்தார் .

” ஏய் ஏதோ சாமி வந்த மாதிரி புலம்புது பாரேன். இப்ப மட்டும் பக்கத்துல போயி , தோளை பிடித்து ஒரு உலுக்கு உலுக்கி என்னாச்சின்னு கேட்டு பாரு .பே..பே..ன்னு முழிக்கும் .காலையில் அது வீட்டில் நடந்த புருஷன் பொண்டாட்டி சண்டைதான்  இப்போ அது உள்ளுக்குள்ளேயே ஓடிக்கிட்டு இருக்கும் .வாய் மட்டும் ஆட்டோமேட்டிக் சிஸ்டம் மாதிரி இங்கே ஒப்பிக்கிது .இதையும் கேட்கனுமனு நம்ம தலையெழுத்து ” கனகவல்லியை சொல்லிவிட்டு தான் புலம்பினாள் வைஷ்ணவி .

” ஏய் எல்லோரும் கவனிக்கிறாங்கள்ல நீ மட்டும் ஏன்டி புலம்புற …” அவளை வைதபடி மெல்ல கண்களை மட்டும் வகுப்பறை சுற்றி சுழற்றினாள் முகிலினி .தன் நாக்கை மென்மையாக கடித்துக்கொண்டாள் .

அப்படி யாரும் அங்கே வகுப்பை கவனிப்பது போல் தெரியவில்லை .பின் பெஞ்சில் இருவர் தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டிருந்தனர் .அவர்களுக்கு முன் வரிசையில் இருவர் காதில் இயர்போன் .கண்டிப்பாக போனில் பாட்டாக இருக்கும் .அதோ அந்த பையன் தலை குனிந்தபடி இருக்கிறான் .உடல் லேசாக ஒரு லயத்துடன் ஆடிக்கொண்டிருக்கிறது .அநேகமாக போனில் ” hungry shark …temple run ….சம்பந்தப்பட்ட ஏதோ ஒன்று .

அந்த ஓர வரிசை மாணவிகள் இருவர் வசதியாக படுத்து தூங்கியே விட்டனர் .மொத்தத்தில் யாரும் கனகவல்லியை கவனிக்கவில்லை.கனகவல்லியும் அவர்களை கவனிக்கவில்லை .தன் போக்கில் ஏதோ …பாடமென்ற பெயரில் …சொல்லியபடி இருந்தார் .

முதலில் முகிலினி கூட நோட்ஸ் எடுக்க முயன்று விட்டு , முடியாமல்தான் , கானல் நீருக்கு கவிதை வரைந்து கொண்டிருந்தாள் .

” அதோ அவளுகளை மாதிரி தூக்கம் வந்தால் தூங்கிடவாது செய்யலாம். அதுவும் வர மாட்டேங்குது .என்ன செய்யன்னு தெரியாமல் நான் முழிச்சிட்டிருக்கேன் .நீ கவிதையா எழுதுற ” முகிலினியை முறைத்தாள் .வேகத்தில் சிறிது குரல் உயர்ந்துவிட , நிமிர்ந்து பார்த்த கனகவல்லி ,தனது சோடா புட்டியை சரி செய்தபடி  “சைலன்ஸ் ஸ்டூடண்ட்ஸ் , லிசன் ஹியர் ” என்றுவிட்டு மீண்டும் தலையணைக்குள் முகம் புதைத்துக்கொண்டு ப்ளா …ப்ளா …

“ஐயோ ..முருகா ..காப்பாத்த மாட்டியா ” தலையில் கைவைத்தாள் வைஷ்ணவி .

” உஷ் சும்மா இருடி ..பீரியட் முடியப்போகுது .” முணுமுணுத்தாள் முகிலினி .

” எங்கே அப்போ இருந்து ஒரு நூறு தடவை ஒன்றிலிருந்து நூறு தடவை எண்ணிவிட்டேன் .அதில் ஐம்பது தடவை நூறிலிருந்து ஒன்றுவரை தலைகீழாக எண்ணினேன் .தலை வழிதான் ஆரம்பித்தது .பீரியட் முடியலை ” என்றாள் வைஷ்ணவி .

” ஏய் பேசாம மேடத்தை பார்த்துக்கிட்டே இன்னும் ஒரு தடவை எண்ணு போதும். பீரியட் முடிஞ்சிடும் “

” என்னது இன்னும் ஒரு தடவையா …? அதுவும் இந்த அம்மாவை பார்த்துக்கொண்டேவா …? ஏன்டி பார்க்கிற மாதிரி இருந்தால் பார்த்திட மாட்டேனா ? “

” ஏன்டி நம்ம மேடத்துக்கு என்ன குறை ?” பீறிட்டு வரப்போகும் சிரிப்பை உள்ளே அமுக்கியபடி வேண்டுமென்றே வைஷ்ணவியை சீண்டுகிறாள் முகிலினி .

” குறையெல்லாம் ஒண்ணுமில்லை .எல்லாமே நிறைதான் .” என்று தன் கைகளை குண்டு பாணியில் விரித்து காட்டிய வைஷ்ணவி தொடர்ந்து ” ஏன்டி வெள்ளை முடிக்கு கறுப்படிச்சாங்க சரி .கறுப்பு  நெத்திக்கும் திரும்ப ஏன்டி கறுப்படிக்காங்க ?” அப்பாவி போல் விழி விரித்தாள் .

இதற்கு மேலும் சிரிப்பை அடக்க முடியாமல் போய்விட வெளியே 
வந்து விட்ட சிரிப்பை இருமலாக மாற்றியபடி முகிலினி சமாளித்துக்கொண்டிருந்த போது , பாடவேளை முடிவுற்றதற்கான மணி அடித்தது .




தன் தலையணையை சுருட்டியபடி கனகவல்லி வெளியேற .” உப்ப்ப்ப் …..” என பெருமூச்சை வெளியிட்டனர் முகிலினியும் , வைஷ்ணவியும் .ஆனால் “விடாது கருப்பு ” என்பது போல் அடுத்து வந்து சேருகிறார் முத்துராமன் .அடுத்த பாடவேளை பேராசிரியர் .

லேசாக தொண்டையை செருமியபடி அவர் தொடர ஆரம்பிக்க முகிலினி மெல்ல திரும்பி வைஷ்ணவியை பார்த்தாள் .கிட்டத்தட்ட அழும் நிலையில் இருந்தாள் அவள் .
” அடியே முடியலைடி …இந்த கடைசி வருடம் படித்து முடிக்கும் வரை நான் உயிரோடு இருப்பேனான்னு தெரியலையே .இப்படி ஆளாளுக்கு போட்டு அறுக்குறாங்களே …”மூக்கை உறிஞ்சிக்கொண்டாள .

முகிலினிக்கு அவளை பார்த்தால் பரிதாபமாகத்தான் இருந்தது .” என்னடி இதுக்கெல்லாம் போய் இப்படி பீல் பண்ற ?” கிசுகிசுத்தாள் .

” எல்லாம் என் தப்புதான்டி …நான் படிக்கிற மாதிரில்லாம் இல்லை , பேசாமல் எவனாவது இளிச்சவாயனா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிடுங்கன்னு எங்க வீட்ல சொல்லியிருக்கனும் .பெரிய இவா மாதிரி படிச்சி , சம்பாதிச்சின்னு பெரிய பெரிய கனவெல்லாம் வளர்த்துட்டு இப்போ அவஸ்தைப்பட்டுட்டு இருக்கேன் .” புலம்பினாள் .

” முடிந்ததை நினைத்து வருத்தப்பட்டு என்னடி ஆகப்போகுது .? உன் சம்பாத்தியத்தை பற்றி அப்புறம் பேசுவோம் .இப்போ இந்த பீரியட்டை தள்ள நான் ஒரு நல்ல ஐடியா சொல்லவா …?” அவள் ஆவலை தூண்டும். விதமாக பேசினாள் முகிலினி .

அவள் எதிர்பார்த்த மாதிரியே ” சொல்லு …சொல்லு …”, என பரபரத்தாள் வைஷணவி.

” நல்லா கண்ணை விரிச்சி வச்சிக்கோ. நம்ம முத்துராமன்  சாரை பார்த்துக்கிட்டே இரு .அப்படியே நேற்று நெட்ல பார்த்திருப்பியே அந்த படத்தை நினைவுக்கு கொண்டு வந்து இன்னொரு தடவை ஓட்டிப்பாரு . கிளைமேக்ஸ் வரும்போது நம்ம கிளாசும் முடிந்திடும் ” அருமை தோழிக்கு ஆலோசனை வழங்கினாள் முகிலினி .

” அப்படிங்கிற …” சிறு சந்தேகத்துடனே என்றாலும் , முயற்சிக்கலாமே என தன் கண்களை அகல விரித்து முத்துராமனை நோக்கிய வைஷ்ணவி இரண்டாவது நிமிடமே தன் கைகளால் கண்களை மூடிக்கொண்டாள் .

” என்னடி …” எனக்கேட்ட முகிலினியிடம் ” ஏன்டி உனக்கு அறிவில்லையா ? யாருக்கு என்ன ஐடியா கொடுக்கிற? முழுசா ஒரு நிமிடம கூட பார்க்க முடியலை கண்ணெல்லாம் கூசுது .இதை நான் ஒரு பீரியட் முழுவதும் எப்படி பார்ப்பது ?” சலித்தாள் .

தோழியின் பேச்சை ரசித்தபடி பேராசியரை முகிலினி திரும்பி பார்த்த கணம் , சன்னல் வழி உள்ளே வந்த சூரியனின் கதிர் ஒன்று அவர் மண்டையில் பட்டு பளபளவென மின்னியது தலை .தன் இதழ்களை மடித்து பற்களை மறைத்துக்கொண்டாள் முகிலினி .

” என்ன ஆயில்டி யூஸ் பண்ணுவார் இவர் ? ….இந்த அமேசான் காட்டில் வளரும் அரிய வகை மூலிகை பற்றி இவருக்கு தெரியாதோ …? ” தனது போரடிக்கும் பொழுதினை ஓட்ட தொடர்ந்து அவரை ஓட்ட  தொடங்கினாள்  வைஷ்ணவி .

” தெரியலையேடி ..வேணும்னா இந்த பீரியட் முடியவும் அவர்கிட்டேயே கேட்டுடுவோமே ” தன் யோசனையை கூறினாள் முகிலினி .

” ம்க்கும் …எனக்கு அவசியம் பாரு …” என நொடித்தவள் ” ஏன்டி நாம் எப்பவுமே இப்படி பாலைவனத்திலதான் வாழ்க்கையை கழிக்கனுமா ? மருந்துக்கு கூட ஒரு சின்ன பச்சையை  கூட கண்ணில் காட்ட மாட்டேங்கிறாங்களே …” ஏக்கமாக பெருமூச்சு விட்டாள் .

இப்படி பேசியபடியே அந்த பாடவேளையை கழித்துவிட்டு , முத்துராமன் வெளியேறியதும் ” விடுதலை ..விடுதலை …வா …வா …ஓடிடலாம் ” என்று தோழியின் கையை பிடித்து வெளியே இழுத்து வந்தாள் .

” ஏய் நாளைக்கு நான் கண்டிப்பாக லீவ்தான்டி …இப்படி தொடர்ந்து அறுபட என்னால் முடியாது ” என்றாள் வைஷ்ணவி .

“ஏய் அட்டன்டென்ஸ் டி …” அவளுக்கு நினைவுபடுத்தினாள் முகிலினி .




” போடி பெரிய அட்டன்டென்ஸ் …” அலட்சியமாக உதடு சுழித்தவளுக்கு ” ஏய் அங்கே பாருடி நீ கேட்ட பச்சை …” என சுட்டினாள் முகிலினி .

அவள் காட்டிய திசையில் பசுந்தளிர் போன்ற தோற்றத்துடனேயே எழிலான நடையுடன் வந்து கொண்டிருந்தாள் அனிதா மேம் .
அந்த பசுந்தளிர் நிற புடவை அவளை ஒரு அழகியாகவே காட்டியது .பெரிய அழகியென கூற முடியாவிட்டாலும் தனது அழகை வெளிப்படுத்த தெரிந்தவள் .எனவே அனிதாவுக்கென ரசிகர் மன்றம் உண்டு அக்கல்லூரியில் .

” ஏய் நான் எதை சொன்னால் நீ எதை காட்டுகிறாய் ? இந்த அலட்டலை இப்ப ஏன் காட்டுகிறாய் ?, ” வைஷ்ணவியை பொறுத்த வரை அனிதா எப்போதுமே அலட்டல் கேஸ் என்பாள் .

” யாராக இருந்தால் என்னப்பா ? கண்ணுக்கு குளுமையாக இருக்காங்களா இல்லையா …? “

” போடி புத்தி கெட்டவளே நான் சொன்னது ….நல்லா அழகா , கம்பீரமா, உயரமா , நிறமா , ….” கனவில் கண்கள் சொக்க அடுக்கினாள் வைஷ்ணவி .

” மா …மா…மா ….எத்தனை மா …போதும்மா …” ஆட்காட்டி விரலை ஆட்டி வேண்டாமென எச்சரித்தாள் முகிலினி .

அவள் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தி ” அந்த மாதிரி ஒரு ஹீரோ மாதிரி ஒரு லெக்சரர் நமக்கு பாடமெடுக்க வந்தால் எப்படி இருக்கும் …? ” கனவு இன்னும் தீர்ந்தபாடில்லை .

” அப்போ மட்டும் அந்த பாடத்தில் அரியர் வைக்க மாட்டியா ?” முகிலினி கேட்டு முடிக்கும் முன்பே …

” கண்டிப்பாக வைக்க மாட்டேன்டி .அந்த ஹீரோவை பார்த்துட்டே படித்தால் படிப்பு டங்…டங்குன்னு மனதில் ஏறுமேடி ….ஆனால் எங்கே நமக்கு அந்த கொடுப்பினையெல்லாம் கிடைக்க போகுது ” அனல்மூச்சு தொடர்ந்தது .

” ஏன்டி இல்லாத ஆளுக்கு இவ்வளவு பில்டப்பா …” தோழியை கிண்டலடித்தபடி பஸ்ஸில் ஏறி அமர்ந்தனர் இருவரும் .தனது நிறுத்தம் வரவும் வைஷ்ணவியிடம் விடை பெற்று இறங்கிய முகிலினி தனது வீட்டிற்கு நடக்க துவங்கினாள்.

அவள் தெரு எப்போதுமே அவளது ரசனைக்கு தீனி போடக்கூடியது. நடுத்தரவர்க்கத்தினர் அதிகம் இருக்கும் அத்தெருவில் அனைவரும் அவரவர் வீடுகளில் போட்டி போட்டு பூச்சிகள் , மரங்களை வளர்ப்பதால் 
அந்த ஏரியா திரும்பியவுடனேயே ஒரு சோலைக்குள் நுழையும் உணர்வுகள் தோன்றும் .

என்றும் போல் இன்றும் தனது தெருவை ரசித்தபடி மெல்ல நடந்து கொண்டிருந்தாள் முகிலினி .
அப்போது , எதிரில் யானை ஒன்று சிறு குழந்தைகளை மேலே ஏற்றி , இறக்கிவிட்டபடி எதிரில் வந்துகொண்டிருந்தது .அதனை சுற்றி சிறு கூட்டம் .இந்த யானை எவ்வளவு பெரியவர்களையும் சிறிது நேரம் சிறுவர்களாக்கி விடும் .

முகிலினிக்குள்ளும் சிறு குழந்தை உற்சாகம் குமிழிட்டது .சற்று ஓரம் ஒதுங்கி அந்த யானையை வேடிக்கை பார்த்தாள் .உயரமாய் …கம்பீரமாய் …ஆளுமையாய் …இப்படி எண்ணியபடி யானையை ரசித்தபோது , கல்லாரியில் ஒரு ஹீரோவுக்கான வைஷ்ணவியின் வர்ணனை நினைவு வந்தது .

அவளின் வர்ணனைகள் இந்த யானைக்கு கூட பொருந்தும் போலவே .நாளை அவளிடம் உன் ஹீரோ யானை போன்றிருக்க வேண்டுமா ? எனக்கேட்டு சீண்ட வேண்டும் .தனக்குள் சிரித்தபடி தன் வீட்டை அடைந்தாள் .

முகிலினி வீட்டு காம்பவுண்ட் சுவரோரம் உட்பகுதியில் வைத்திருந்த அடுக்கு செம்பருத்தி பவளமாக மலர்ந்து சுவரின் வெளியே வரை தலையை நீட்டியிருந்தது .பந்து பந்தாக என்ன அழகாக பூத்திருக்கிறது .எத்தனை பூக்கள் , நாளை இவற்றை ஆரமாக கட்டி தலையில் சூடிக்கொள்ள வேண்டும் …பூக்கள் பக்கம் பார்வையை பதித்தபடி தனது வீட்டு காம்பவுண்ட் சுவர் கதவை இழுத்தாள் .

கதவு எதிர்புறம் அதே வேகத்தில் இழுக்கப்பட , திகைத்து பார்த்தாள் .அவள் கையருகே ஒரு ஆடவனின் கரம் .உட்புறமாக கதவை இழுத்துக்கொண்டிருந்தது .அது வெளிப்புறம் இழுக்க வேண்டிய கதவு .அறியாத யாரோ உள்ளிருந்து இழுத்துக்கொண்டிருந்தனர் .

கையிலிருந்து பார்வையை உயர்த்தினாள் .மெல்லிய புன்னகையுடன் வீட்டினுள் நின்று கதவை இழுத்துக்கொண்டிருந்தான் ஒரு ஆண் .அழகா …உயரமா …நிறமா …கம்பீரமா …என்ற வைஷ்ணவியின் வர்ணனைகள் முகிலினிக்கு நினைவு வந்தது .கூடவே சற்று முன் பார்த்த யானையும் .

அவனின் பரந்து விரிந்த தோள்களும் , நிமிர்ந்து நின்ற தோரணையும் மதர்த்த களிறொன்றையே நினைவூட்டியது .

யாரிவன் …? முன்பின் அறிமுகமற்றவனாயிருக்கிறானே ? என் வீட்டிற்குள்ளிருந்து வருகிறானே ? யாராயிருக்கும் ? அடுக்கடுக்காக கேள்விகள் எழுந்தன முகிலினியிடம் .
ஒரு கையால் கதவை அழுத்தமாக பற்றியபடி ,மறுகையால் எதையோ விரட்டுவது போல் காற்றில்  வீசினான்   அவன் .புரியாமல் பார்த்தவளிடம் , ” கொசுங்க ….இரண்டு மூணு …உங்க வாய்க்குள் நுழைய பார்க்கிறது .அதான் விரட்டினேன் ” புன்னகைத்தான் .அவள் பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்தது போல் அவனை வாய் திறந்து பார்த்தாளாம் .

அவசரமாக தனது வாயை சரிபார்த்த முகிலினி , அது மூடியிருப்பதை உறுதி செய்து கொண்டு அவனை முறைத்தபடி மீண்டும் கதவை இழுத்தாள் .அவனும் விடாமல் உள்ளே இழுத்தான் .

” மிஸ்டர் இந்த கதவு வெளியே இழுக்கனும் .கொஞ்சம் தள்ளுறீங்களா ? “, என்றாள் .தனது கையை எடுத்து கொண்டவன் ஏர்இந்தியா மகாராஜா பாணியில் இடை வரை குனிந்து அவளுக்கு வழி விட்டான் .

உள்ளே நுழைந்து அவனை கடந்து செல்கையில் ” உங்கள் பெயர் தெரிஞ்சிக்கலாமா ?” என்றான் குரலில் பணிவு போல் காட்டி .அந்த கொசு விரட்டிய செய்கையில் அவன் மேல் கோபத்தில் இருந்தவள் அலட்சியமாக தலையை திருப்பியபடி அவனை கடந்தாள் .




வீட்டு படியேறியபடி மெல்ல திரும்பி பார்க்க அவன் அங்கேயே நின்று அவளையே பார்த்தபடி இருப்பது தெரிந்தது .ஆனால் அப்போது போல் இலகுதன்மை முகத்தில் இல்லை .
சிறு யோசனையுடன் கூடிய கடினத்தன்மை தெரிந்தது .

யாரிவன் அப்பாவை பார்க்க வந்திருப்பானோ ? முகிலினியின் தந்தை தமிழ்ச்செல்வன் ஒரு ஆடிட்டர் .அவரைப்பார்க்க வீட்டிற்கே  சிலர் வருவதுண்டு .இவன் அவர்களில் ஒருவனாயிருக்கும் என எண்ணியபடி உள்ளே சென்றாள் முகிலினி .

அம்மா சரஸ்வதி கொடுத்த காபியை உறிஞ்சியபடி ஹாலுக்கு வந்தபோது பெயரை சொல்லலாமா …கணவன் பெயரை சொல்லலாமா …என டிவியில் சரோஜாதேவி பாடிக்கொண்டிருந்தார்.அந்த அவனின் …பெயர் என்னவாக இருக்கும் என்ற யோசனையில் ஆழ்ந்தாள் முகிலினி .




What’s your Reaction?
+1
23
+1
26
+1
5
+1
5
+1
6
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!