pacha malai poovu Serial Stories பச்சைமலை பூவு

பச்சை மலை பூவு – 30

30

” இத்தனை பேர் சுற்றி இருக்கும் போது ஒரு பெண் பிள்ளையை கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போவது நாகரீகம் …அப்படித்தானே மச்சான் ? ” யுவராஜ் கிண்டலாக கேட்க சுந்தரேசனின் முகம் சிவந்தது.

” ரிஷி சார் கொஞ்சம் நில்லுங்கள் .நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? ” 

” இப்போது விளக்கம் சொல்வதற்கு நேரமில்லை சுந்தர் .திரும்பி வந்ததும் சொல்கிறேன் ” 

” என் தங்கையை இழுத்துக் கொண்டு செல்வதற்கான விளக்கத்தை திரும்பி வந்து சொல்வீர்களா ? ” கோபமாக கேட்டான் சுந்தரேசன்




” ஒரு பெண் ஆபத்தில் இருக்கிறாளோ என்ற சந்தேகம் இருக்கிறது .அதற்காகத்தான் நாங்கள் போகிறோம். வந்து விவரங்கள் சொல்கிறோம் ” 

” இல்லை அது எந்தப் பெண்… என்ன ஆபத்து …என்று இப்போதே சொல்லிவிட்டு செல்லுங்கள். நாங்களும் தெரிந்து கொள்கிறோம் ” 

” நாங்கள் இங்கே தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் அந்த பெண்ணின் உயிருக்கே கூட ஆபத்து வரலாம் சுந்தர் .ப்ளீஸ் புரிந்துகொள்ளுங்கள் ” 

தேவயானி திடுக்கிட்டு ரிஷிதரனை பார்த்தாள் .” ரிஷி என்ன சொல்கிறீர்கள் ? உயிருக்கே ஆபத்தா ? ” 




” இருக்காது என்று நம்புவோம். ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது நல்லதுதானே ? ” 

” தேவயானி நீங்களிருவரும் யாரைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் ? உயிருக்கே ஆபத்து என்றால்… தயவு செய்து சொல்லுங்கள் ” சுந்தரேசனின் குரலிலும்  பதட்டம் வந்திருந்தது.

தேவயானி ரிஷிதரனின் முகத்தை பார்க்க அவன் மெல்ல தலையசைத்து விட்டு ” மருதாணியை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம் ” என்றான்.

” ஐயோ ” என்று அலறினாள் சொர்ணம் .” அவளுக்கு என்ன ஆபத்து ? ” 

” மருதாணிக்கு ஆபத்து என்றால் அதில் நிச்சயம் இவரின் பங்கும் இருக்கும் என்றே நினைக்கிறேன் ” ரிஷிதரனை காட்டி யுவராஜ் சொல்ல சுந்தரேசன் அவனை முறைத்தான்.

” சுனந்தா உன் அண்ணனை கொஞ்ச நேரம் உள்ளே கூட்டிக்கொண்டு போ .நாங்கள் முக்கியமான விஷயம் பேசிக்கொண்டிருக்கிறோம் ” சுந்தரேசனை  மறுக்கும் தைரியமின்றி வலுக்கட்டாயமாக அண்ணனின் கையைப் பற்றி உள்ளே இழுத்துப் போனாள் சுனந்தா .

” மருதாணிக்கு என்ன சார் ? அவள் எங்கே இருக்கிறாள் ? ” 




” அவளுடைய தோழி ஒருத்தியின் வீட்டில் எல்லோருமாக குரூப் ஸ்டடி பண்ணுகிறார்கள் .அங்கே ஏதோ ஆபத்து என்று மெசேஜ் அனுப்பி இருக்கிறாள் .நாங்கள் போய் பார்த்துவிட்டு வந்து விடுகிறோமே ” ரிஷிதரன் நிலைமையை சமாளித்து ஏதோ சொன்னான்.

” அதற்கு தேவயானி எதற்கு ?  அங்கே ஏதோ ஆபத்து என்று வேறு சொல்கிறீர்கள் ? ” 

சுந்தரேசனுக்கு ஆபத்தென்று சொல்லப்பட்ட இடத்திற்கு  தங்கையை அனுப்புவதில் தயக்கம்.

” அங்கே எல்லோரும் பெண் பிள்ளைகள் இல்லையா அண்ணா ?  ஒரு பெண்ணாக என்னுடைய உதவி அவர்களுக்கு தேவைப்படலாம் .அதனால்தான் நானும் போய் வருகிறேன் அண்ணா ” வேண்டுதலாக கேட்டாள் தேவயானி.

” போய் வரட்டும் சுந்தர் .மருதாணி சின்னப்பெண் .அவளும் பஞ்சவர்ணமும் நம்மை நம்பித்தான் இருக்கிறார்கள் .அவர்களை நாம் பாதுகாக்க வேண்டும் . தேவயானியை ரிஷி தம்பி பார்த்துக் கொள்வார் ” சொர்ணத்தின் குரல் தழுதழுத்தது .சுந்தரேசன் தலையசைத்த அடுத்த நொடியே ரிஷிதரன் தேவயானியுடன் வாசலை தாண்டி இருந்தான்.

” மருதாணி லொகேஷன் உனக்கு அனுப்பிய அடுத்த நிமிடமே என்னிடம் சொல்ல வேண்டாமா ? ” காரை ஓட்டியபடி  கடுகடுத்தான் ரிஷிதரன்.

” நான் கொஞ்சம் லேட்டாகத்தான் மெசேஜை பார்த்தேன் .ஒரு சிறிய வேலை இருந்தது .அதை முடித்துவிட்டு உங்களுக்கு மெசேஜ் பார்வார்டு செய்தேன் ” 

” முட்டாள் உன்னுடைய வேலை அவ்வளவு அவசியமா ?எதற்காக நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இங்கே வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறாய் ? எதுவாக இருந்தாலும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவசர சூழ்நிலையால் தானே ? உன் மரமண்டைக்கு இது ஏறவில்லை ? ” 

ரிஷிதரனின் வசவுகள் கோபத்தை கொடுத்த அதே நேரம் பதட்டமும் வந்தது தேவயானிக்கு .உடனடியாக ரிஷி தரணை தொடர்புகொள்ள தயங்கிய அவள் கொஞ்சம் தாமதமாக மருதாணி அனுப்பியிருந்த லொகேஷனை அவனுக்கு ஷேர் செய்திருந்தாள் .இப்போது இந்த தாமதத்தினால் மருதாணிக்கு எதுவும் ஆபத்து வந்துவிடுமோ என பயந்தாள்.

” உயிருக்கு ஆபத்து எனும் அளவு ஏன் யோசிக்கிறீர்கள் ரிஷி ? ” கவலையாக கேட்டாள்.




” எனக்கு நியாயம் சொல் என்று கேட்டபடி வந்து நிற்பவளை ஒரேடியாக ஒழித்துக் கட்டி விடலாம் என்று அவன் நினைத்து விட்டானானால் …இப்படி எண்ணி பயந்து தான் மருதாணியை கண்காணித்துக் கொண்டே இருந்தேன் .சில நாட்களாக மருதாணியுடன் போனில் கூட பேசாத அவன் இப்போது அவளை வெளியே அழைத்து இருக்கிறான் என்றால்… எனக்கு ஏதோ நெருடுகிறது ” 

ரிஷிதரனின் கவலை இப்போது தேவயானிக்கும் வந்து விட்டிருக்க அவள் முகம் பயத்தில் வெளுத்தது .” ஐயோ இதை நான் யோசிக்கவே இல்லையே ” 

” போகிற இடத்தில் ஒரு பெண்ணின் தேவை மருதாணிக்கு வேண்டியது இருக்கலாம் என்ற எண்ணத்தில்தான் உன்னையும் உடன்

அழைத்து போகிறேன்.  அவளுக்கு எதுவும் ஆகியிருக்காது என்று நம்புவோம் .உனது போனில்  லொகேஷனை ஆன் செய்து மேப் போடு ” 




மேப்  காட்டிய வழியில் சென்ற கார் அடர்ந்த வனத்திற்கிடையே நுழைந்து சென்று ஒரு இடத்தில் மேலே செல்ல முடியாமல் நின்றுவிட்டது.

” இதற்கு மேல் கார் போவதற்கு வழி இல்லை .நாம் நடந்துதான் போகவேண்டும் ” ரிஷிதரன் இறங்கி நடக்கத் துவங்கினான். தேவயானி அவனை பின்தொடர்ந்தாள்.

” இந்தக் காட்டுப்பகுதி உனக்கு தெரியுமா தேவயானி ? ” 

” இல்லை ரிஷி .நான் இந்தப் பக்கம் வந்தது கிடையாது .இந்த பகுதி எனக்கு புதிதாக தெரிகிறது. பழக்கமில்லாத இந்த இடத்திற்கு மருதாணி ஏன் வந்தாள் ? ” கவலையோடு ரிஷிதரனின்  பின் நடந்தாள்.

பத்து  நிமிட நடைக்கு பின் போன் காட்டிய இடத்தில் ஒரு சிறு மர வீடு இருந்தது.”  அதோ அங்கேதான் மருதாணி இருக்கிறாள். நான் போய் பார்க்கிறேன் ” வேகமாக அவனை கடந்து செல்ல முற்பட்டவளை கையை பிடித்து பின்னால் இழுத்தான் ரிஷிதரன்.

” அவசரக் குடுக்கை மாதிரி ஓடாதே .உனக்குத் தெரியாத இடம். அங்கே என்ன ஆபத்து இருக்கிறதோ ?  இப்படியா யோசனையின்றி போவாய் ? ” 

” மருதாணி இங்கேதான் இருக்கிறாள் ரிஷி .அப்படியான இடத்தில் என்ன ஆபத்து இருந்துவிடப் போகிறது ? ” 




” குரூப் ஸ்டடி என்று உன் அண்ணனிடம் சொன்ன பொய்யை நிஜம் என்றே நம்பி விட்டாய் போல ” 

” அப்படி இல்லை அந்த யாரோ ராஜேந்திரன் அவனை பார்க்கத்தானே வந்திருப்பாள்  ? வந்து …அவர்கள் இருவரும் தனியாக சந்திக்க என்று …அ…அதனால் …உ…உள்ளே அவனும் , அவளும்தானே இருப்பார்கள் ? இப்போது நாம் போய் கையும் களவுமாக அவனை பிடித்து விடலாம் தானே ? ” 

ரிஷிதரன் கைநீட்டி படபடத்த  தேவயானியின் கன்னத்தில் மெல்லத் தட்டினான். ” மிகவும் அப்பாவியாகவே இருக்கிறாய் ஏஞ்சல் . நீ சொல்பவைகளெல்லாம் உன்னுடைய தேவதைகள் உலகத்தில் …நிதர்சன உலகம் அப்படி இல்லை .போகட்டும் விடு .உன்னுடைய எண்ணம் போலவே இருந்தால் எனக்கும் மிகுந்த சந்தோசம்தான் வா போகலாம் .என் பின்னாலேயே வரவேண்டும். நான் சொல்வதை மட்டும் தான் செய்ய வேண்டும் ” எச்சரித்துவிட்டு சத்தம் வராமல் முன்னால் நடந்தான்.

டொக்கு டொக்கென்று ஒருவித சத்தம் எழுப்பிய தனது செருப்பை ஒரு ஓரமாக சுழற்றி விட்டுவிட்டு வெறும் கால்களுடன் ரிஷிதரனின் பின்னால் நடந்தாள் தேவயானி .எந்த சப்தமும் இல்லாமல் மிக அமைதியாக இருந்தது அந்த வீடு .தேவயானியை வீட்டின் அருகே இருந்த ஒரு பெரிய மரத்தின் பின்னால் மறைந்து இருக்க வைத்துவிட்டு பூனை நடையுடன் வீட்டை ஒரு சுற்று சுற்றி வந்தான் ரிஷிதரன்.

இடையில் ஆங்காங்கு நின்று பூட்டியிருந்த ஜன்னல்கள் எதுவேனும் திறக்க வருகிறதா என சோதித்தான் .நிறைய சோதனைகளுக்கு பிறகு ஒரு ஜன்னல் மிக லேசாக திறக்க வர அதனை திறந்து உள்ளே எட்டிப் பார்த்தான் .மரத்தின் பின்னால் மறைந்திருந்த தேவயானி ஆவல்  தாங்காமல் தானும் அந்த ஜன்னல் அருகே வந்தாள் .ரிஷிதரனின் உயரத்திற்கு தன் கால்களை எக்கி ஜன்னலில்  பார்க்க முயன்ற அவளின் தலை மேல் கை வைத்து கீழே அமுக்கினான் அவன். உதட்டில் விரல் வைத்து ” உஷ் ” என எச்சரித்தான் .பிறகு தன் காதை ஜன்னல் அருகே வைத்து உள்ளே நடப்பதை உற்றுக் கேட்க முயன்றான்.

கோப சிவப்பும் ஆத்திர வெளுப்புமாக  மாறிக்கொண்டிருந்த ரிஷிதரனின் முகத்தை சிறு பயத்துடன் பார்த்தாள் தேவயானி .ஜன்னலை மூடிய ரிஷிதரன் இரண்டு வினாடிகள் யோசித்தான் .பிறகு தேவயானியின் கைப்பற்றி இழுத்துக்கொண்டு வீட்டின் முன் வாசலுக்கு வந்தான்.

” நான் சொல்வதை கவனி தேவயானி .மருதாணி உள்ளேதான் இருக்கிறாள். நாம் உள்ளே போனால்தான் அவளை காப்பாற்ற முடியும் .என்னை பார்த்தால் கதவை திறக்க

மாட்டார்கள். நீ கதவைத் தட்டு .ஓரிரு நிமிடங்கள் அவர்களிடம் ஏதாவது பேச்சுக் கொடு .நான் அப்போது உள்ளே நுழைந்து விடுகிறேன் ” 

ரிஷிதரனின் திட்டத்தை புரிந்துகொண்டு தலையசைத்தாள் தேவயானி ”  சரி நீங்கள் மறைந்து கொள்ளுங்கள். நான் போய் கதவைத் தட்டுகிறேன் ” 

ரிஷிதரன் தேவயானியை விட்டு  அதிக தூரம் போக விரும்பவில்லை .அங்கேயே வாசலை ஒட்டிய சுவர் பக்கமே ஒட்டி நின்று கொண்டு அவளை கதவை தட்ட சொன்னான் .கதவருகே நகர்ந்த தேவயானியின் கையை திடுமென எட்டி பற்றி கொண்டவன் ஒரு வேகத்துடன் தன் அருகே இழுத்தான் .அவன் அதிவேக இழுவையில் அவனுக்கு மிக அருகே உரசுகிறாற் போல் வந்து நின்ற தேவயானி கேள்விகளோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

ரிஷிதரனின் கைகள் தேவயானியின் இருகை மணிக்கட்டுகளையும் அழுந்திப் பற்றியிருந்தது .அவன் கண்கள் ஒரு வித தவிப்புடன் அவள் முகம் முழுவதும் தொட்டு தொட்டு நகர்ந்தது .” உள்ளே கொடிய மிருகங்கள் இருக்கின்றன .ஜாக்கிரதை ஏஞ்சல் ”  கரகரத்தது அவன் குரல் .” எதற்கும் பயப்படாதே .பின்னேயே நானும் வந்து விடுவேன் ”  இப்போது லேசான நடுக்கமும் குரலில் சேர்ந்திருக்க தேவயானிக்கு சிரிப்பு வந்தது.




” பயம் யாருக்கு ? எனக்கா… உங்களுக்கா ? ” மென்மையான சிரிப்புடன் அவன் கைகளிலிருந்து தன் கையை விடுவித்துக் கொண்டாள்.

வலது கையை நீட்டி ஆட்காட்டி விரலால் அவன் நெற்றியில் புருவ மத்தியில் தொட்டாள் .மென்மையாக அழுத்தினாள் ” ரிலாக்ஸ் ”  ரகசிய குரலில் அவனை ஆறுதல் படுத்தினாள் .ரிஷிதரன் விழிகளை இறுக மூடி திறந்தான் .தலையசைத்து அவளுக்கு நகர அனுமதி அளித்தான்.




வாசலின் மேற்புறம் காலிங் பெல் சுவிட்ச் இருப்பதை கவனித்த தேவயானி அதனை அழுத்தினாள் .உள்ளிருந்து எந்த சத்தமும் இல்லாமல் இருக்க,  மீண்டும் அழுத்தினாள் .மூன்று முறை அவள் அழுத்திய  பின்னால் கதவின் பாதுகாப்பு சங்கிலி மாட்டிய நிலையில் இம்மலாக  கதவு திறந்தது .கதவு இடுக்கின் வழியாக இவளைப் பார்த்த ஒற்றை விழி  ஆச்சரியமாய் விரிந்தது .பாதுகாப்பு அகற்றப்பட்டு கதவு விரிய திறந்தது.

” என்ன வேண்டும் ? ” கேட்டதை தருகிறேன் எனும் தாராளத்துடன் ஒலித்தது கதவை திறந்தவனின் குரல்.

” சும்மா இந்த காட்டுப்பகுதிக்குள் வாக்கிங் வந்தேன் .வழி தவறி விட்டேன் போல .ஒரு மணி நேரமாக இங்கேயே சுற்றிக் கொண்டிருக்கிறேன் .இப்போதுதான் உங்கள் வீட்டை பார்த்தேன். ஏதாவது உதவி கேட்கலாம் என்று வந்தேன் ” தேவயானி மென் புன்னகையோடு கொஞ்சு மொழி பேசி தலை சரித்தாள் .

” தேவதைகளுக்கும்  வழி தவறுமா ? ”  வசீகரமாய் ஒலித்தது அவன் குரல்.

” என்ன சொல்கிறீர்கள் ? ” அப்பாவியாய் விழி  விரித்தாள் தேவயானி.

” யூ ஆர் லுக் லைக் ஆன் ஏஞ்சல் … ” அபரிமிதமான பாராட்டு அவன் குரலில்.

ஏஞ்சலென்ற அவனது அழைப்பில் அருகே பக்கவாட்டு சுவரில் பதுங்கியிலுந்த ரிஷிதரனின்  வெப்பம் கூடிப் போன  மூச்சினை உணர்ந்தவள் ” தேங்க்யூ ” வெட்கம் போல் இமை தாழ்த்தி கொண்டாள் .

”  உள்ளே வாருங்கள்  ஏஞ்சல் ” ஆவலுடன் அழைத்தான் அவன் .

” பத்து நிமிடம் இங்கே ஓய்வெடுத்துவிட்டு கிளம்பிவிடுவேன். சரிதானே….? ”  சிணுங்கலாய் கேட்டபடி உள்ளே நுழைகையில்

தன் தோள் இடித்த கதவை இடைஞ்சல் போல் தேவயானி பார்க்க அவன் அவசரமாக அந்த கதவையும் தாள் நீக்கி விரிய திறந்தான்.




” ஒரே ஒரு காபி சாப்பிடும் நேரம்தான் ஏஞ்சல் .வாருங்கள் ” வரவேற்பு போல் இடைவரை தலை குனிந்து அவன் நிமிர , தேவயானி உள்ளே நுழைந்த அதே நேரத்தில் புயல்போல் தானும் நுழைந்தான் ரிஷிதரன். நுழைந்த வேகத்திலேயே கத்தியை எடுத்து அவன் கழுத்தில் வைத்திருந்தான்.

” ஏஞ்சல் சமயத்தில் கத்தியும் எடுக்கும் தெரியுமா  ? இதோ இந்த கத்தி கூட ஏஞ்சலுடையதுதான்  ” பசி வெறி கொண்ட புலி சதையை கடித்து துப்புவது போல் வந்து விழுந்தன அவன் வார்த்தைகள்.

” யார் நீங்கள் ? ” திணறினான் அவன்.

” சொல்றேண்டா .சத்தம் காட்டாமல் முன்னால் நட .நீ இந்தப் பக்கம் வா தேவயானி ” முதலில் அவளை  பத்திரப்படுத்தியவன் கழுத்தில் பதித்த கத்தியுடன் அவனை முன்னால் தள்ளி நடந்தான். அடுத்து ஒரு அறையை தாண்டியவுடன் மற்றொரு அறை. அதனை  நெருங்கும்போதே அந்த விசும்பல் சத்தம் கேட்டது.

“அடப்பாவி உன்னை நம்பித்தானேடா வந்தேன் ” வேதனை கலந்த பெருமூச்சுடன் நசிந்து ஒலித்தது ஒரு பெண்ணின் குரல். தேவயானி தலைசாய்த்து குரலை கவனித்து அதிர்ந்தாள் .இது மருதாணியின் குரல் போலிருக்கிறதே …பரபரத்து முன்னால் ஓடப் போனவளை முழங்கையால் இடித்து ” இரு ” என விழியால் அதட்டினான் ரிஷிதரன்.

இப்போது உள்ளே எதையோ வீசும் சத்தம் விசுக்  விசுக் என்று கேட்க தொடர்ந்து மருதாணியின் அலறல் குரல் ”  அடிக்காதீர்கள் அண்ணா வலிக்கிறது. ” 

இதயத்தை இரு கரங்களினால் இறுக்கி பிசைந்தது போல் துடித்து  தவித்தாள் தேவயானி. நடுங்கும் இதழ்களுடன் ரிஷிதரனை  பார்க்க அவன் முகம் இறுக்கமாக இருந்தது .கைக்குள் இருந்தவனின் கழுத்தில் கத்தியை அழுத்தி லேசாக ரத்த கோடு  கொடுத்தவன்  பற்களை கடித்து தன்னை அடக்கினான்.

” அடிக்காதீர்கள் அண்ணா கழற்றுகிறேன் ” மருதாணியின் குரல் ஒலிக்க , வந்துவிட்ட விம்மலை அடக்க இருகைகளாலும் வாயை பொத்திக் கொண்டாள் தேவயானி.

ரிஷிதரன் இடதுகையால் தன் சட்டை பட்டன்களை சுழற்றி சட்டையை அவிழ்த்து தேவயானியின் தோளில் போட்டான் .கைப்பிடியில் இருந்தவனை நகர்த்தியபடி அந்த அறைக்குள் நுழைந்தான்.

” அசையாமல் அப்படியே நில்லுங்கள் .இல்லை என்றால் இவன் கழுத்தை அறுத்து விடுவேன்  ” கத்தலாய் எச்சரித்தபடி அறை  நடுவே போய் நின்றான் .கையில் பெல்டுடன் நின்ற ஒருவனும் , கேமராவுடன் நின்ற ஒருவனும் அதிர்ந்து நின்றனர்.




” அக்கா ”  அலறலாய்  ஒலித்த மருதாணியின் குரலில் நெஞ்சில் கத்திக்குத்து வாங்கிய பறவையின் வாதை  இருந்தது

ரிஷிதரனை தொடர்ந்து உள்ளே நுழைந்த தேவயானி மருதாணியின் குரலுக்கு திரும்பிப்பார்த்து அலறலுடன் அவளை நோக்கி ஓடி ரிஷிதரனின் சட்டையால் அவளை மூடினாள்.

What’s your Reaction?
+1
2
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

2 Comments
Inline Feedbacks
View all comments
Srinisaran
Srinisaran
4 years ago

மிகவும் கனமான பதிவு இது. சட்டத்திற்கும்,நீதி துறைக்கும் செலக்டிவ் அம்னீசியா. இரண்டு பெண் குழந்தைகளின் தாயாக நிஜத்தில் தப்பியவர்களுக்கு நிழலிலாது சரியான தண்டணை தாங்களேன் சகோதரி

11
பத்மா கிரகதுரை
Reply to  Srinisaran
4 years ago

நிச்சயம் கொடுத்து விடலாம் சகோதரி

2
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!