pacha malai poovu Serial Stories பச்சைமலை பூவு

பச்சை மலை பூவு – 29

29

” ஆஹா மிகவும் ருசி உங்கள் சமையலைத்தான் நான் ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன் ஆன்ட்டி ” என்றபடி வெல்ல பாகினுள்  பொன்னிறத்தில் ஊறிக்கிடந்த கொழுக்கட்டைகளை ஸ்பூனால் எடுத்து சுவைத்துக் கொண்டிருந்தான் ரிஷிதரன்.

” ரொம்ப இனிப்பு …திகட்டும் சாருக்கு .அந்த கேப்பை அடையை எடுத்துக் கொண்டுவந்து கொடுங்கள் அம்மா ” உபச்சாரம்  செய்துகொண்டிருந்த சுந்தரேசனை நம்ப முடியாமல் பார்த்தான் யுவராஜ்.

அவன் நினைத்தது என்ன …இங்கே நடப்பது என்ன…  ரிஷிதரனுக்கான  உபசாரத்தை அவனால் நம்ப முடியவில்லை.அதுவும் அவன் அவ்வளவு தூரம் சொன்ன பிறகும் .




அவனால் முடிந்த அளவு சுந்தரேசனிடம் ரிஷிதரனைப் பற்றிய புகார்களை பதிய வைத்து விட்டுத்தான் அவனை மருதாணியின்  வீட்டிற்கு அழைத்து வந்தான் .” பாருங்களேன் மச்சான் அந்த ரிஷிதரனுக்கு இருக்கும் திமிரை …? இப்படி பட்டப்பகலில் நம் மருதாணியின் வீட்டுக்குள் நுழைந்து கதவை பூட்டிக் கொண்டிருக்கிறான் . மருதாணி பாவம் சிறுபெண் .அவளை ஏதும் குற்றம் சொல்ல முடியாது .நாம் விரட்ட வேண்டியது இவனைத்தான். நீங்கள் தான் அதற்கு சரியான ஆள் .வாருங்கள் .” கையோடு சுந்தரேசனை பிடித்து இழுத்து வந்தான்.




” அதோ அங்கே பார்த்தீர்களா பூட்டி இருப்பதை ? உள்ளே அவன் தான் இருக்கிறான்.”  தனது குற்றச்சாட்டிற்கான நியாயங்களை சேர்த்துக்கொண்டு சுந்தரேசனை  அழைத்து வந்தான்.

” சும்மா கேம்ஸ்  விளையாடுவதற்காக மருதாணிக்கு போன் கொடுத்திருக்கிறான் என்று நினைத்திருந்தேன். பிறகு விசாரித்தால் அதனை அவளுக்காகவே வாங்கிக் கொடுத்தானாம் .எவ்வளவு காஸ்ட்லியான போன் தெரியுமா அது ? ” 

சுந்தரேசன் தன் நடையை நிறுத்தி அதிர்ந்து நின்று விட்டான் ” என்ன மருதாணிக்கு ரிஷிதரன் போன் வாங்கி கொடுத்தாரா ? ” 

” அட ஆமாங்க மச்சான். இந்த விபரம் உங்களுக்கு தெரியாதா ?  தேவயானி உங்களிடம் சொல்லவில்லையா ? அவளுக்கு தெரியுமே ? ஏன் உங்களுக்கு தெரியப்படுத்தவில்லை ? ” அடுக்கடுக்கான கேள்விகளை அப்பாவியாக கேட்டான்.

” என்ன தேவயானிக்கு தெரியுமா ? ” 

” ஆமா மச்சான். நான்தான் தேவயானிக்கே சொன்னேன் .அவளையும்  கூட நான்  எச்சரித்துக் கொண்டே தான் இருந்தேன். அந்த ரிஷிதரன் சரியானவன் கிடையாது .அவனுடன் பேசாதே… பழகாதே என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். சொல்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். தேவயானிக்கு சிலநேரம் மூளையே வேலை செய்வது கிடையாது. நான் சொல்வதை கேட்காமல் அந்த ரிஷிதரனுடன் …வந்து …கொஞ்சம் அதிகமாக பழகிக்கொண்டு…” 

யுவராஜினை அவனது வார்த்தைகளை முடிக்க விடாமல் கர்ஜித்தான் சுந்தரேசன் . ” என் தங்கை யுவராஜ் . அவளுடைய குணம் எனக்குத் தெரியும் .அவளைப் பற்றிய தவறான பேச்சு என்னிடம் வேண்டாம் ” 




யுவராஜ் சட்டென சுதாரித்துக் கொண்டான் .சுந்தரேசனை அவனுக்கு தெரியும். அவனுக்கு இருக்கும் இக்கட்டுகளினால் தாயையோ தங்கையையோ ஏனோதானோவென பார்ப்பானே ஒழிய  அவர்களைப்பற்றிய குறை கூறல்களை ஒரு காலமும் ஏற்றுக்கொள்ள மாட்டான் .இது விஷயமாக தன்னுடைய தோல்வியை சுனந்தா முன்பே யுவராஜிடம் பேசியிருக்கிறாள்.

”  நம் வீட்டுப் பெண் மச்சான் .அவளைப் பற்றி நான் தவறாக பேசுவேனா ? நான் குறை சொல்வது எல்லாம் அந்த ரிஷிதரனை பற்றி தான். துஷ்டனை கண்டால் தூர

போகவேண்டும் அல்லவா …அதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தேன். நம் தேவயானி போல் மருதாணி இல்லை தானே ? அவள் சிறு பெண் .அவ்வளவு விபரம் இல்லாதவள் .அந்த அப்பாவித்தனத்தை இந்த ரிஷிதரன் பயன்படுத்திக் கொண்டானோ என்று சந்தேகப்படுகிறேன் ” 

மருதாணியின் வீட்டிற்கு வரும் வரை இருந்த சொற்ப தூரத்தை சுந்தரேசனுடன் இவ்வித உரையாடல்களுடனேயே  கடந்து வந்திருந்தான் யுவராஜ்.  அவனது குற்றச்சாட்டுகளுக்கு தோதாக திறந்த கதவிற்கு பின்னால் ஒருவர் கையை ஒருவர் பற்றியபடி இருந்தனர் ரிஷிதரணும் மருதாணியும்.

டேய் யுவராஜ் அடித்தடா  ஜாக்பாட் …யுவராஜிற்கு தனது அதிர்ஷ்டத்தை எண்ணி மகிழாமல் இருக்க முடியவில்லை.

” ரிஷி சார் நீங்கள் எப்போது வந்தீர்கள் ? என்ன விஷயமாக வந்தீர்கள் ? என்னை பார்க்காமலேயே வந்து விட்டீர்களே  ? ” குற்றம்சாட்டும் தொனியில் விசாரித்த சுந்தரேசனின் பார்வை இணைந்து இருந்த கைகளில் இருந்தது.

” இதோ இப்போதுதான் வந்தேன் சுந்தர் .மருதாணி அவளுடைய படிப்பிற்காக சில நோட்ஸ்கள் கேட்டிருந்தாள். எனக்கு இந்த காட்டுப்பகுதிக்குள் ஒரு வேலை  இருந்தது .அப்படியே  அவளையும் பார்த்து விடலாம் என்று வந்தேன். பார்த்துவிட்டேன் இதோ கிளம்பிக் கொண்டே இருக்கிறேன் .இந்த சின்ன வேலைக்கு எதற்கு உங்களை தொந்தரவு செய்வானேன் என்று தான் உங்களை பார்க்க வரவில்லை ” 

ரிஷிதரனின் தொடர்ச்சியான பொய்களை ஆவென பார்த்த யுவராஜ் சுந்தரேசனின் முகத்தில் நிலவிய ஒப்புதலை கண்டதும் தலையை உலுக்கிக் கொண்டான்.

” எந்த நோட்ஸ்கள் ? எப்படி  கொண்டு வந்தீர்கள் ,?  எங்கே அவைகள் ? ” படபடவென குறுக்கு கேள்விகள் எழுப்பினான்.

மருதாணியின் விழிகள் பயத்தில் படபடக்க  தொடங்கின . சுந்தரேசனின்  கட்டுப்பாடுகளை அவள் அறிவாள் .இதோ இப்போதைய அவளுடைய நிலையை அறிந்தால் மறுபேச்சு பேசாமல் நிச்சயம் சுந்தரேசன் அவள் குடும்பத்தை பசுமை குடிலை விட்டு வெளியே தள்ளி விடுவான் .இது மிக நன்றாகவே மருதாணிக்கு தெரியும்.

இங்கிருந்து அனுப்பி விடுவீர்கள் அவ்வளவுதானே பரவாயில்லை …என்று திமிராக பேசியவள்தான் .ஆனால் அப்படி ஒரு நிலைமை வெகு அருகில் தெரியும்போது மனம் பயத்தில் நடுங்கியது. திடுமென்று இங்கிருந்து வெளியேறி இன்னொரு இடத்தில் போய் நிற்க முடியுமா ? அவள் கண்கள் கலங்க துவங்கின .அவளுடைய மனக் கலக்கத்தை உணர்ந்துகொண்ட தேவயானி நகர்ந்து அவளுக்கு பின்புறம் வந்து நின்று ஆதரவாக அவள் தோளில் தன் கையை வைத்தாள் .பயப்படாதே எனும் ஆதரவை அவளுக்கு உணர்த்தினாள்.




இரு பெண்களையும் நிமிர்ந்து பார்த்த ரிஷிதரன் மிக லேசாக கண்களை சிமிட்டினான். சற்றும் தயங்காமல் பேசினான் .” இதோ இந்த போனில்தான் அவளுக்குரிய நோட்ஸ்களின் பிடிஎஃப் கள் இருக்கின்றன .அவளுக்கு படிக்க வசதியாக இருக்கட்டுமென்றே இறுதி தேர்வு வரை வைத்துக் கொள் என்று இந்த போனை அவளுக்கு நான்தான் கொடுத்திருக்கிறேன் .” மருதாணியின் மடியிலிருந்த போனை காட்டி சொன்னான் ரிஷிதரன்.

” நான் அனுப்பிய நோட்ஸில் ஏதோ பிழை இருப்பதாக சொன்னாள். அது விவரங்கள் அவளுக்கு தெளிவுபடுத்தி விடத்தான் இப்போது இங்கே வந்தேன் ” மிகத் தெளிவாக பொய் சொல்லி முடித்தான் .

” ஓ அதற்காகத்தான் போன் கொடுத்தீர்களா ? சரிதான் ”  என்று தலையசைத்த சுந்தரேசனின் பார்வை இகழ்ச்சியாக யுவராஜின் மேல் படிந்தது .நீ எல்லாம் ஒரு மனிதனா ? என கேள்வி கேட்டது.

ரிஷிதரனின் திசை திருப்பல்ளையும்,  தரமான பொய்களையும் நம்பமுடியாமல் பார்த்தபடி இருந்தான் யுவராஜ் .அத்தோடு அவன் 

ரிஷிதரனுடைய கண்சிமிட்டலையும் கவனித்து விட்டிருந்தான் . இத்தனை பேர் சூழ இருக்கும் போது இந்த பொறுக்கி எவ்வளவு தைரியம் இருந்தால் இரண்டு பெண்களையும்  பார்த்து இப்படி கண்சிமிட்டுவான் ?  மிக உடனே இந்த நிகழ்வை சுந்தரேசனிடம் தெரிவிக்கத்தான் அவன் உள்ளம் துடித்தது .ஆனால் அதில் தான் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்குமா என்பதில் அவனுக்கு சந்தேகம் இருந்ததால் முன்பே சுந்தரேசனின் இகழ்ச்சி பார்வையை வேறு சந்தித்து விட்டதால் அடக்கமான பிள்ளையாக வாயை மூடிக்கொண்டான்.

”  எந்த இடையூறு வந்தாலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் நன்றாக படித்து இந்த பொதுத்தேர்வில் முதல் வகுப்பில் பாஸ் செய்துவிடுவதாக எனக்கு மருதாணி சத்தியம் செய்து கொடுத்திருக்கிறாள் .நிச்சயம் அதை நிறைவேற்றுவாள்  என்று நம்புகிறேன் ”  மருதாணியை பார்த்தபடி சுந்தரேசனுக்கு விளக்கம் கொடுத்தான் ரிஷிதரன்.

” அதெல்லாம் நன்றாகப் படிப்பாள் சார் .மருதாணி பொதுவாக ஓரளவு நன்கு படிக்கக்கூடிய பிள்ளைதான். தேவயானியும் அவளுக்கு படிப்பதற்கு உதவி செய்வாள் .இதோ இப்போது நீங்களும் கூட அவளுக்கு உதவுகிறீர்கள். பிறகு அவள் படிப்பில் என்ன குறை வரப்போகிறது ? அவள் நன்றாக படித்து முடித்து பெரிய வேலைக்குப் போய் என் அம்மாவை வேலை செய்ய விடாமல் உட்கார வைத்து காப்பாற்றுவேன் என்று பலமுறை எங்களிடம் சொல்லி இருக்கிறாள். நிச்சயம் அதனை நிறைவேற்ற கடுமையாக உழைப்பாள் ” சுந்தரேசன் பேசப் பேச  மருதாணியின் தலை குற்ற உணர்வுடன் குனிந்தது.

” என்ன மருதாணி சுந்தர் சொன்னதை கேட்டாய் அல்லவா ? உனக்கு உன் தேவயானி அக்காவும் நானும் துணையாக இருக்கிறோம் .எதை நினைத்தும் கலங்காமல் படிப்பை மட்டுமே இலக்காக வைத்துக்கொண்டு முன்னேற பார் .மற்ற பிரச்சனைகளை எல்லாம் எங்களிடம் விட்டுவிடு. சரிதானே ? ” ஆசிரியரின் அதட்டல் தொனியில் ஒலித்த ரிஷிதரனின் குரலுக்கு தலையசைத்தாள் மருதாணி.




” சரி என் வேலை முடிந்தது. நான் கிளம்புகிறேன் சுந்தர் ” கிளம்பியவனின் கையைப் பற்றிக் கொண்டான் சுந்தரேசன்.

” இவ்வளவு தூரம் வந்துவிட்டு ஒருவாய் சாப்பிடாமல் போவீர்களா ? வீட்டிற்கு வாருங்கள் ரிஷி சார் .உங்களை பார்த்தால் அம்மா மிகவும் சந்தோஷப்படுவார்கள்  ” கையோடு ரிஷிதரனை கூட்டிக் கொண்டு சுந்தரேசன் நடக்க , இயல்பாக அவன் தோள்களில் போட்டுக்கொண்ட ரிஷிதரனின் கையை நம்பமுடியாமல் பார்த்தபடி அவர்கள் பின்னால் நடந்தான் யுவராஜ்.

இவர்கள் இருவரும் எப்படி இவ்வளவு நெருக்கமானார்கள் ? யோசித்துவிட்டு இந்த சுந்தரேசனுக்கு கொஞ்சம் பணம் அதிகமாக கொடுக்கும் எல்லோருமே நல்லவர்கள்தான்.  இந்த ரிஷிதரன் பணத்தை தூக்கி எறிந்து சுந்தரேசனை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறான் என்ற முடிவுக்கு வந்தான் .

” சாப்பிட்ட சாப்பாட்டிற்கு ஒரு குட்டித் தூக்கம் போட்டால் நன்றாக இருக்கும் போலவே  ” இரு கைகளையும் மேலே உயர்த்தி சோம்பல் முறித்தபடி ரிஷிதரன் சொல்ல தேவயானி திடுக்கிட்டாள் .இவன் மீண்டும் இங்கே தங்க திட்டம் போடுகிறானா ?  அவனை முறைத்தாள்.

ரிஷிதரன் அவள் முகத்தை பார்த்தால் அல்லவா இந்த ஆட்சேபத்தை அறிவதற்கு …? பசுமைகுடிலினுள்  நுழைந்த நிமிடத்திலிருந்து தேவயானியின் முகத்தை பார்ப்பதையே தவிர்த்து வந்தான் அவன் .மருதாணியின் கலக்கத்தின் போது மட்டும் நிலைமையை சமாளிக்க

இருவரையும் லேசாக பார்த்து கண்சிமிட்டி இருந்தான் .அதன் பிறகு அவள் பக்கமே திரும்பவில்லை.




” தாராளமாக தங்குங்கள் தம்பி .நீங்கள் முன்பு தங்கியிருந்த குடிலையே உங்களுக்கு ஏற்பாடு செய்கிறேன் ”  சந்தோசத்தோடு ஒலித்த  சொரணத்தின் குரலுக்கு பின்னேயே…

” பஞ்சவர்ணம் ரிஷி சாருக்கு நான்காம்  குடிலை  சுத்தப்படுத்துங்கள் ” என்று ஒலித்த சுந்தரேசனின் குரலுக்கு இடையே ” அய்யய்யோ ” என்று அதிர்ச்சியோடு ஒலித்த யுவராஜின் குரல் மங்கி யாருக்கும்  கேட்காமல் போனது.

யுவராஜ் உதவிக்காக தனது சகோதரியை பார்க்க அவள் கர்ம சிரத்தையாக ரிஷிதரன் உண்டு முடித்து வைத்த பாத்திரங்களை எடுத்து விட்டு இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.

சை இவளோடு இது ஒரு தொல்லை. இவளால் முடியாது என்னும் போது நேக்காக ஒதுங்கிக் கொள்வாள் .சரியான பச்சோந்தி என்று தங்கையை வைதவன்….

” இங்கே தங்க போகிறீர்களா  என்ன ? முன்பு உடம்பு சரியில்லாமல் இருந்தீர்கள். தங்கினீர்கள் .இப்போது இங்கே எதற்காக இருக்க வேண்டும் ? இந்த இடம் உங்களுக்கு அவ்வளவாக சரிப்பட்டு வராது .நீங்கள் கிளம்புவது தான் நல்லது ” என்று ரிஷிதரனிடம் படபடத்தான்.

ஒரு நிமிடம் சூழ்நிலையில் அமைதி நிலவ ” என்ன மச்சான் இது ?  நம் விடுதிக்கு வர இருக்கும் கஸ்டமரிடம் இப்படியா பேசுவீர்கள் ” என்ற சுந்தரேசனின் தொழிலுக்கான தவிப்போடு …




” எதையும் பேசுவதற்கு முன்பாக ஒன்றுக்கு மூன்று முறை யோசித்து விட்டு பேசுங்கள் அண்ணா .ரிஷிதரன் சார் இங்கே தங்குவதால் நமக்கு எவ்வளவு நன்மை ”  என்ற சுனந்தாவின் பேச்சைத்தான் யுவராஜால்  ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.

தங்கையை குற்றம்சாட்டும் பார்வை பார்த்தவனை எனக்கு வேறு வழி கிடையாது என தோள் குலுக்கினாள் சுனந்தா.கணவன் வீட்டார்தான் அவளுக்கு எதிரிகளே தவிர , கணவன் அல்லன் . 

” வந்து… ரிஷி சார் பெரிய பிசினஸ்மேன் ….அவருக்கு நிறைய ஆபீஸ் வேலைகள் இருக்கும் .அவற்றையெல்லாம் விட்டுவிட்டு இங்கே …இந்த காட்டுப் பகுதிக்குள் வந்து உட்கார்ந்து கொண்டாரானால் …அவருக்கு தானே நஷ்டம் ? முன்னால் அவருக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தது .அதனால் பரவாயில்லை .இப்போது அப்படியா  ? அவருடைய தொழில்களை அவர் கவனிக்க வேண்டாமா ,? அப்படித்தானே ரிஷி சார்   ? ” கேட்டபடி ரிஷிதரனை  பார்த்தவன் திகைத்தான் .இவன் ஏன் இப்படி பார்த்துக் கொண்டிருக்கிறான் ? தனது நடு நெற்றியை துளைத்த ரிஷிதரனது புல்லட் பார்வையை யுவராஜால்  புரிந்து கொள்ள முடியவில்லை.

பார்த்தபடியே இருந்த ரிஷிதரன் இதழ்களில் மெல்லிய புன்னகை வந்து அமர்ந்தது ” வாவ் ” வியந்து  ஓசையின்றி கை தட்டினான் . ” யூ ஆர் கிரேட் யுவராஜ் ” என்றொரு பாராட்டுப் பத்திரமும் கொடுத்தான்.

இப்போது எதற்கு பாராட்டுகிறான் யுவராஜின் மனதிற்குள் அபாய மணி அடித்தது.

” எதற்கு ரிஷி சார் ? ” சுந்தரேசன் ஆவலுடன் விசாரித்தான்

” சுந்தர் கவனித்தீர்களா ,? யுவராஜ் எவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறார் .நான் இங்கே இருந்தபோது முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் தானே பேசுவார் .தமிழ் பேசுவதற்கு மிகவும் சிரமப்படுவார். இந்த சில நாட்களுக்குள் இவ்வளவு அழகாக தமிழ் பேச ஆரம்பித்து விட்டாரே …இவரை பாராட்ட வேண்டாமா  ? “எழுந்து யுவராஜின் கையை பிடித்து இழுத்து குலுக்கினான். யுவராஜின் முகம் பேயறைந்தது போல் மாறியது

யுவராஜினது அல்டாப்புகளை  முன்பே அறிந்திருந்த அனைவரும் வந்த சிரிப்பை அடக்கமுடியாமல் தவித்தனர் .கலக்கமும் ,தவிப்பும் , மறுப்புமாக பசிய பாசக்குளமாய் சற்று முன்பு வரை இருந்த தேவயானியின் முகம் ,இப்போது அல்லி  மலர்களை மலர்வித்ததை திருப்தியுடன் பார்த்த ரிஷிதரன் ” குட் ” என இதழ் மட்டும் அசைத்தான்.

உடன் ஒரு முறைப்பை கண்களில் கொண்டு வந்த தேவயானி , இங்கே தங்கக்கூடாது ஓடிவிடு என பதில்  இதழ்  அசைத்தாள் .இப்போது ரிஷிதரனின் முகம் அவளில் இருந்து திரும்பிக் கொண்டது.

”  நான் என் குடிலுக்கு போகட்டுமா ஆன்ட்டி ? ” பவ்யமாக சொர்ணத்திடம் கேட்டுக் கொண்டிருந்தான் அவன்.




” தாராளமாக போங்க தம்பி. பஞ்சவர்ணம் சுத்தம் செய்திருப்பாள் ” சொர்ணம் சந்தோஷத்துடன் அனுமதி வழங்க , பின்னால் கையை கொண்டு போய் தனது முதுகை தட்டிவிட்டு கொண்டான் ரிஷிதரன்.

”  அப்போதிருந்து என்னவோ சுருக்  சுருக்கென்று குத்திக் கொண்டே இருக்கிறது .இதற்காகவாவது முதலில் இங்கிருந்து போக வேண்டும் ” என்றபடியே வாசலுக்கு நடந்தவன் கடைசி வாசல்படியில் நின்று புருவங்களை உயர்த்தி தேவயானியை தீர்க்கமாக பார்த்துவிட்டுப் போனான் .

திமிர்… அத்தனையும் திமிர்… இங்கே வராதே என்று அவ்வளவு உறுதியாக சொன்ன பிறகும் திரும்பவும் இங்கேயே வந்து நிற்கிறானே …இன்னமும் ஒரு முறை இவனை இங்கிருந்து அனுப்ப நான் என்ன பாடு பட போகிறேன் .பெருமூச்சுடன் தேவயானி சிறிது நேரம் அமர்ந்துவிட்டாள்.

மிக கவனமாக ரிஷிதரனின் குடிலுக்கு செல்லும் வேலைகளை ஒதுக்கிவிட்டு மற்ற வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தாள்.

” அந்த ரிஷிதரன் இங்கே தங்கி இருப்பது எனக்கு பிடிக்கவில்லை .அவனை உடனடியாக இங்கிருந்து அனுப்புங்கள்”  நேரடியாகவே சுந்தரேசனிடம் வந்து நின்றான் யுவராஜ் .எல்லாவற்றிற்கும் துணிந்த பாவம் அவன் முகத்தில் இருந்தது.

” ஏன் அவர் இங்கே இருப்பதால் உங்களுக்கு என்ன பிரச்சனை ? ” சுந்தரேசன் கேட்க, 

” அவன் உங்கள் தங்கையை பார்க்கும் பார்வை சரி இல்லை. அவர்கள் இருவரும் பேசுவது பழகுவது எனக்கு பிடிக்கவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடாது என்று நினைக்கிறேன். உடனே அவனை குடிலை விட்டு காலி செய்யச் சொல்லுங்கள்  ” யுவராஜின் பேச்சு எல்லோருக்குமே அதிர்ச்சியை கொடுத்தது.

” கொஞ்சம் நாகரீகமாக பேசுங்கள் தம்பி .எங்கள் வீட்டிற்குள் நின்றுகொண்டு என் மகளை பேசுகிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் ” சொர்ணம் தான் முதலில் எரிச்சலுடன் வாயை திறந்தாள்.

” உங்கள் மகளுக்கு கல்யாணம் பேசப்பட்ட மாப்பிள்ளை நான். இது எல்லோருக்கும் நினைவு இருக்கிறது தானே ? ” நக்கலாக கேட்டான் யுவராஜ்.

” என் தங்கையை தவறாகப்  பேச வேண்டாம் என்று முன்பே உங்களிடம் சொல்லி  சொல்லி இருக்கிறேன் மச்சான் ” எச்சரிக்கையாய் குரல் கொடுத்தான் சுந்தரேசன்.







” சரி உங்கள் தங்கை உண்மையாகவே இருக்கட்டும் .ஆனால் அந்த ரிஷிதரனை பற்றி உங்களுக்கு தெரியும் தானே ? அவனுடன் எப்படி உங்கள் தங்கையை பழக விடுவீர்கள் ? ” 

” ரிஷி சார் பற்றியும் குறைபடுவதற்கு எனக்கு எதுவுமில்லை .அவர் தேவயானியிடம் மிகவும் நாகரீகமாகத்தான் பழகி வருகிறார் .இதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது ” சுந்தரேசன் திட்டவட்டமாக அறிவித்த அதே நேரம் அவர்கள் வீட்டுக் கதவை திறந்துகொண்டு பரபரப்பாக உள்ளே வந்தான் ரிஷிதரன்.

” தேவயானி ”  கத்தலாய் அழைத்தான் .அடுப்படிக்குள் மறைந்து நின்றபடி அண்ணனிடம் யுவராஜின் குற்றச்சாட்டை வேதனையுடன் கவனித்துக்கொண்டிருந்த தேவயானி ரிஷிதரனின் கத்தலில் அதிர்ந்து வெளியே வந்தாள்.

” என்னுடன் வா ” சொன்னதோடு தேவயானியின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியே போகலானான் ரிஷிதரன்.

What’s your Reaction?
+1
2
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!