pacha malai poovu Serial Stories பச்சைமலை பூவு

பச்சை மலை பூவு – 32

32

 

” இன்று இரவு நம் குடிலில் கேம்ப் பயர் ஏற்பாடு செய்திருக்கிறேன் ,” சுந்தரேசன் சொல்ல அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் தேவயானி.

” அண்ணா நிஜமாகத்தான் சொல்கிறீர்களா ? இதெல்லாம் எப்படி நடக்கிறது ? ” 

” ஏன்மா நம் குடிலில் இருக்கும் பத்து குடும்பத்தினர் போதாதா கேம்ப் பயர்  நடத்துவதற்கு ? ” 

” ஐயோ அண்ணா நான் அதை சொல்லவில்லை .இந்த ஏற்பாடுகளுக்கெல்லாம்  எப்படி இடம் கொடுத்தீர்கள் என்று கேட்கிறேன் .யாருடைய ஏற்பாடு இது ? ” அவள் மனதில் யுவராஜ் மேல் சந்தேகம் எழுந்தது.




” எல்லாம் நம் ரிஷிதரன் சாருடைய ஐடியாதான் ” சுந்தரேசன் சொல்ல தேவயானிக்கு குடித்துக் கொண்டிருந்த தண்ணீர் புரை ஏறியது.




” என்ன ரிஷிதரனா ? அவர் ஏன் இதையெல்லாம் செய்கிறார் ? இதற்கெல்லாம் அவருக்கு யார் உரிமை கொடுத்தது ? ” படபடத்தாள் .

” எதற்கு இத்தனை பதட்டம் தேவயானி ? நான்தான் அவரிடம் ஏதாவது வித்தியாசமாக புதுமையாக நம் குடிலில் செய்ய வேண்டும் என்று கேட்டேன். அப்போது அவர் கொடுத்த ஐடியாதான் இது .நம் விடுதியில் தங்கியிருக்கும் குடும்பத்தினர் எல்லோரிடமும் இந்த விபரம் தெரிவித்துவிட்டேன். எல்லோரும் மிகவும் மகிழ்ச்சியோடு இதனை வரவேற்கிறார்கள் ” 

 அண்ணா உங்களுக்கு அந்த ரிஷிதரனை பற்றி தெரியாது , அந்த ஆள் ஒரு வில்லங்கம் பிடித்தவன் … இப்போது இந்த கேம்ப் பயரை ஏற்பாடு செய்ததற்கு பின்னால் என்ன காரணம் இருக்கிறதோ தெரியவில்லையே ….தேவயானி மனதிற்குள் கவலைப்பட தொடங்கினாள் .

” அண்ணா இது எல்லாம் வேண்டாமே …நாம் எப்போதும் போல சாதாரணமாகவே இருந்து விடலாமே ” கேட்டுப் பார்த்தாள்.

” ஏன்மா இப்படி சொல்கிறாய் ? ரிஷி சார் ஒன்று சொன்னால் அது சரியாக இருக்கும் .அவர் சொல்லுகிற ஐடியாபடி தான் எல்லாம் செய்து வருகிறேன். இப்போது நம் விடுதியில் எல்லாமே சரியாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது ” சொல்லிவிட்டு சுந்தரேசன் அருவிக்கு சென்று விட்டான். அருவிக்கரையில் தான் கேம்ப் ஃபயர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதைச் செய், அதை எடு ,அப்படி வை …என்பது போன்ற அவனுடைய ஏவல்களுக்கு

 உதவுவதற்கு சுனந்தாவும் , சொர்ணமும் , பஞ்சவர்ணமும் அவனுடனேயே சென்றுவிட்டனர்.

சைவ , அசைவ உணவுகளை அங்கே அருவிக்கரையிலேயே அடுப்பு வைத்து உடனுக்குடன் சமைத்து எல்லோருக்கும் கொடுப்பதாக ஏற்பாடு .அடுப்புகளையும் , உணவு பொருட்களையும் தயார் செய்யும் வேலை அருவிக்கரையில் பரபரப்பாக ஆரம்பமானது.




அண்ணனின் பேச்சை மனதிற்குள் அசை போட்டபடி வீட்டிற்குள் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தாள் தேவயானி.

” ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருக்கும் ஏஞ்சல்கள்  சிறகுகள் இல்லாமலேயே அழகாக இருக்கின்றனர் ” கண்களால் அவளை மென்றபடி வீட்டு வாசலில் வந்து நின்றான் ரிஷிதரன்.

” என்ன நீங்கள் அருவிக்கரைக்கு போகவில்லையா ? ” 

” அருவிக்கரைக்கா அங்கே என்ன விசேஷம் ஏஞ்சல் ? ” அப்பாவியாய் கேட்டவனின் மூக்கை  குத்தி உடைத்தால்  என்ன எனும்  வேகம் அவளுக்கு வந்தது.

” உங்களுக்கு ஒரு விபரமும் தெரியாதோ ? இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு அவனை முறைத்தாள்.

” நிஜமாகவே ஒன்றுமே தெரியாது ஏஞ்சல்  ” என்றவனின் முகத்தில் வந்து மோதியது சோபா குஷன்.

” அச்சோ நன்றாக இருக்கும் குஷனை இப்படி வெளியே எறிந்தால் எப்படிமா ? ”  கவலைப்பட்டபடி அந்த குஷனை பத்திரமாக எடுத்து வந்து மீண்டும் சோபாவில் வைத்தான்.

” அண்ணனுக்கு இப்போது ஐடியாக்கள் கொடுத்துக்கொண்டு  இருப்பது நீங்கள் தானா ? ” 

” என்ன ஐடியாக்கள் ? ” 

” பார் , டிஸ்கொதே ,  பார்ட்டி இதெல்லாம் வேண்டாம் என்றது… சிறுவர் பூங்கா , நீர் விளையாட்டு என்று ஐடியா கொடுத்தது….”

” எல்லாம் அடியேன்தான் ” அவள் பேச்சை இடை மறித்து சொல்லி , இரு கை விரித்து தலை குனிந்து நிமிர்ந்தான்.

இவன் எவ்வளவு அபாயமானவன் …இந்த இடத்தை விட்டு வெளியே தள்ளி இருந்துகொண்டே இந்த இடத்தில் அவனுடைய ஆதிக்கத்தை இந்த அளவு நிலைநாட்டி இருக்கிறானே …தேவயானி அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.அவளது ஆச்சரியத்திற்கு காரணமும் இருந்த்து . மருதாணியை அழைத்துக் கொண்டு அவர்கள் இங்கே வந்துவிட்ட இந்த சில நாட்களாக யுவராஜ் இங்கே வரவேயில்லை .




அவருடனான தொழில் சாத்தியமில்லை என்று உறுதியாக சொல்லி அனுப்பி விட்டதாக சுந்தரேசன் கூறினான்.

” இதற்கான உங்கள் காரணம் யுவராஜா ? ” ரிஷிதரனின் விழிகளுக்குள் உண்மையை துழாவினாள் தேவயானி .

” இன்னமும் ஓரிரு மாதங்கள் இங்கே நிம்மதியாக தங்கி இருந்துவிட்டு , நானாகவே சென்றிருப்பேன் .அதற்குள் வலுக்கட்டாயமாக என்னை வெளியே அனுப்பினானே அவன் …. அவனுக்கு என்று இதே இடத்தில் ஒரு தொழில் அமைவதற்கு விட்டு விடுவேனா என்ன ? ”  சவால் மின்னிய ரிஷிதரனின் கண்கள் தேவயானிக்கு கொஞ்சம் பயத்தை கூட கொடுத்தது.




நொடியில் அவளது பயத்தை கவனித்துவிட்டு அவனின் முகம் மீண்டும் மனோகரமானது.”  அந்த யுவராஜ் செய்தது மட்டும் சரியா தேவயானி ? அவனுடைய தொழில் முறைகள் நியாயமானதா ? ” இப்போது நியாயம் கோரியது அவன் குரல் .

” ஆனால் அண்ணனுடனான அவருடைய தொழில் திட்டங்கள் ஆண்டுகளாக  அவரால் திட்டமிடப்பட்டவை .இங்கே தொழில் என்பது ஒரு வகையில் அவருடைய வாழ்நாள் கனவு .

இப்படி இல்லை என்றால் அப்படி என்று , வேறு மாதிரி ….ஏன் இப்போது நீங்கள் சொன்ன மாதிரியே கூட அவர் தனது திட்டங்களை மாற்றி இருக்கக்கூடும் .இங்கே பசுமைக்குடிலில் தொழில் பார்க்க வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை .அதனை மிக எளிதாக தகர்த்து விட்டீர்களே ? ” 

” நான் என்னம்மா செய்தேன் ? யுவராஜ் சொல்லியிருக்கும் தொழில் திட்டங்களில் உள்ள குளறுபடிகளை உன் அண்ணனிடம் சொன்னேன் .உங்கள் அப்பா எவ்வளவு பாடுபட்டு இந்த தொழிலை வளர்த்தார் என்பதை நினைவுபடுத்தினேன். உன் அம்மாவின் நம்பிக்கையை தெளிவுபடுத்தினேன் .வயது பெண்ணான நீ இருக்கும் இடத்தில் இப்படிப்பட்ட அலங்கோலங்கள் அரங்கேறலாமா  என்று கேட்டேன் .நாளை இவையெல்லாம் படித்துக் கொண்டிருக்கும் உன் தம்பிக்கு இடையூறாக மாறாதா என்று யோசிக்க சொன்னேன் .அவ்வளவுதான் ”  எளிதாக தோள் குலுக்கியவனை  விரிந்த விழிகளோடு பார்த்தாள்.

எவ்வளவு சாதுரியமானவன். உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே வருடங்களாக திட்டமிட்ட ஒரு  தொழிலையே தகர்த்து இருக்கிறான் .இவனுடைய இந்த திறமைகளையெல்லாம் நேர்மையான வழியில் செலுத்தினானென்றால்  மிக உயர்ந்தவனாக வருவான். மனதில் நினைத்ததை வெளிப்படையாக சொல்லவும் செய்தாள் .

” இப்போது நான் நேர்மையாக இல்லை என்று யார் சொன்னது ? ” என்ற அவனது கேள்விக்கு முறைத்தாள்

“நீ  இப்படி விழி உயர்த்தி , இமை விரித்து நேருக்கு நேராக பார்ப்பது பூக்களில் தேன் அருந்த அமர்ந்திருக்கும் வண்ணத்துப்பூச்சி போல் மிக அழகாகத்தான் இருக்கிறது .ஆனாலும் இது உன்னுடைய முறைப்பாயிற்றே. அதனால் வேண்டாம் ஏஞ்சல் முறைக்காதே. எனக்கு நான் நேர்மையானவன்தான் .என்னைத்தவிர அடுத்தவர்களை பாதிக்கும் செயல் எதையும் மனமறிய நான் செய்வதில்லை .என்னைப் பொறுத்தவரை  இது மட்டுமே என்னுடைய நேர்மை ” 

தேவயானி கன்னத்தில் கைவைத்தபடி அவனைப் பார்த்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள் . அவனுடன் பேசி ஜெயிக்க முடியும் என்று அவளுக்கு தோன்றவில்லை.

இப்போது நீ செய்த வேலைகள் யுவராஜை பாதிக்கின்றனவே ..இது நியாயமா என்று அடுத்த கேள்வி அவள் கேட்கலாம். ஆனால் அதற்கும் தயாரான ஒரு பதில் அவன் வைத்திருப்பான். அப்படி கொடி பிடித்துக் கொண்டு வாதாடும் அளவிற்கு யுவராஜின் பக்கமும் நியாயங்கள் இல்லை .எனவே தேவயானி அமைதியாக வேண்டியதானது.

” எனி அதர் கொஸ்டின்ஸ் ? ” அவள் முகத்தின் முன்னே சொடக்கிட்டான்.

 ” இப்போது இங்கே எதற்காக வந்தீர்கள்  ? ” என் வீட்டில் உனக்கென்ன வேலை எனத் தோன்றும்படி கேட்டாள் .கடைசியில் குற்றச்சாட்டாக இதைத்தான் அவளால் கேட்க முடிந்தது.

ரிஷிதரனின் முகத்தில் குறும்பும்,  கலகலப்பும் மறைந்தது .லேசான கவலையும் , கவனமும் வந்தது.”  மருதாணியை பார்த்து விட்டு போகலாம் என்று வந்தேன் .அவள் எப்படி இருக்கிறாள் ? ” 




ரிஷிதரனின் முக உணர்வுகளை தன் மனதினுள்  வாங்கினாள் தேவயானி . ” அவள் தூங்கிக் கொண்டிருக்கிறாள் ” உள் அறையைக் காட்டினாள். ” நேற்று இரவெல்லாம் வெகு நேரம் தூங்காமல் உருண்டு கொண்டே இருந்தாள் .நான் பக்கத்தில் படுத்துக்கொண்டு  தட்டிக்கொடுத்து கஷ்டப்பட்டு அவளை தூங்க வைத்தேன் ” 

” ம் , அவளுக்கு உடம்பு எப்படி இருக்கிறது ? ” 

” பரவாயில்லை .உள்ளே வந்து அவளை பாருங்கள் ” ரிஷிதரனை உள்ளே அழைத்துப் போனாள்.

உடல் முழுவதும் இருந்த காயங்களுக்கு மூலிகை மருந்து தடவப்பட்டிருக்க  வேரிழந்த செடியாய்  படுக்கையில் தூங்கிக்கொண்டிருந்தாள் மருதாணி.

” அவளுடைய வீட்டிற்கு அனுப்பினால் இந்த காயங்களை பார்த்து அவள் அம்மாவிற்கு சந்தேகம் வரும் என்று நானே பார்த்துக் கொள்வதாக பிடிவாதம் செய்து , மருந்து தடவி என்னுடைய அறையிலேயே படுக்க வைத்திருக்கிறேன் ” 




” காட்டுக்குள் படிக்கப் போனவர்கள் மரத்தின்மேல் ஏற முயன்று கீழே விழுந்து விட்டதாக எல்லோரிடமும் சொல்லி நம்ப வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது ” ரிஷிதரன் தலையை உலுக்கிக் கொண்டான்.

இங்கே எல்லோரிடமும் அவர்கள் அப்படித்தான் சொல்லி வைத்திருந்தனர் .மருதாணி தோழிகளுடன் காட்டிற்குள் படிக்கப் போனதாகவும் , அங்கே விளையாட்டாக மரம் ஏற முயற்சி செய்து கீழே விழுந்து விட்டதாகவும் , அங்கிருந்து தேவயானிக்கு போனில் மெசேஜ் அனுப்பியதாகவும் …என ஏதேதோ சொல்லி சமாளித்து இருந்தனர்.




” இவள் விஷயமாக இன்னமும் நிறைய பேசவேண்டும் தேவயானி ” ரிஷிதரன் சொல்ல முயலும் விஷயம் தேவயானிக்குள்  கலவரமாய் உருண்டது.

” ஓரிரு நாட்கள் போகட்டுமே , அவள் கொஞ்சம் உடல் தேறட்டுமே ” கெஞ்சுதலாக அவனைப் பார்த்தாள்.

” ம் ….தள்ளிப் போடுகிறாய் . ஆனால் இது அவளுக்கு நல்லதல்ல என்பதை நான் உனக்கு சொல்ல வேண்டியதில்லை ” 

” சீக்கிரம் சொல்லி விடுகிறேன் ”  தலைகுனிந்து முணுமுணுத்தாள்.

” இரண்டே நாட்களில் சொல்லவேண்டும் ” உத்தரவாக ஒலித்த அவன் குரலுக்கு தலையாட்டினாள்.

 ” இந்த போலீஸ் கேஸ் வேறு நிறைய தொல்லைகள் கொடுக்கும் போல் தெரிகிறது ” 

” என்ன ஆயிற்று ரிஷி ?  அவர்கள் எல்லோரையும் போலீசில் பிடித்துப்போய் விசாரணைகள் நடப்பதாகவும் நிறைய பேர் அடுத்தடுத்து பிடிபடுவதாகவும் சொன்னீர்களே ? ” 

” ஆமாம் .ஆனால் அவர்களில் நிறைய பணக்கார வீட்டுப் பசங்க இருக்கிறார்கள் .அவர்களுக்கு அரசியல்வாதிகள் தொடர்பும்  இருப்பது போல் தெரிகிறது .அதனால் போலீஸ்காரர்களின் விசாரணை வேகம் பத்தவில்லை ” 

” அப்படியென்றால் அவர்கள் சட்டத்திலிருந்து தப்பிவிடுவார்களா ? ” தேவயானி படபடத்தாள் .

” அப்படி சொல்ல முடியாது .நம் காவல்துறை நினைத்தால் எதையும் செய்வார்கள் .ஆனால் அவர்களை அப்படி நாம் நினைக்க வைக்க வேண்டும் .இந்த கேஸில் அவர்களுக்கு வரும் இடைஞ்சல்களை போக்க , சம்பந்தப்பட்டவர்களையே மிரட்டும் அளவு பெரிய ஆட்களை நம் பக்கம் வைத்திருக்க வேண்டும் ” 

தேவயானியின் மனது கொதித்தது .” இல்லை ரிஷி இவர்களை  இப்படியே விட்டுவிடக்கூடாது .ஏதாவது செய்து யாரையாவது பிடித்து 

நிச்சயம் அந்த கயவர்களுக்கு மறக்க முடியாத  தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் ” 

” ஆமாம் .நானும் அதையே தான் விரும்புகிறேன் .ஆனால் அதற்கான வழிமுறைகள்தான்… ஏதாவது ஒரு பெரிய சப்போர்ட் நம் பக்கம் இருந்தால் தைரியமாக மோதிப் பார்க்கலாம் ”  ரிஷிதரன் நெற்றிப்பொட்டை தடவியபடி யோசித்தான்.




” கரன் குரூப்ஸ் ஆப்  கம்பெனியை  விடவா  பெரிய சப்போர்ட் வேண்டும் ? ” 

ரிஷிதரன் திடுக்கிட்டு பார்த்தான்.

” உங்கள் கம்பெனியைத்தான் சொல்கிறேன் .தமிழ்நாட்டில் சொன்னதும் தெரிந்து கொள்ளக்கூடிய கம்பெனிகளில் உங்கள் கம்பெனியும் ஒன்று என்று எனக்கு தெரியும். இந்த பேக்ரௌண்ட் போதாதா ? ” 

” தமிழ்நாட்டை தவிர ஆந்திரா , கர்நாடகா இரண்டு மாநிலங்களிலும் கரன் குரூப்ஸ் உண்டு .இப்போது கேரளாவிலும் கூட காலூன்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் ” மரத்த குரலில் தகவல்கள் கொடுத்தான் ரிஷிதரன்.

” இவ்வளவு பெரிய தொழிலதிபர்களுக்கு போலீசில் செல்வாக்கு கிடையாதா ரிஷி ? ” 

” நிறைய உண்டு. கரன்  குரூப்ஸ் ஆஃப் கம்பெனியின் எம்டி சசிதரனுக்கு போலீசில் பெயர் சொல்லவும் எழுந்து நிற்கும் அளவு மரியாதை உண்டு .ஆனால் நான் …எனக்கு…”  மேலே தொடராமல் நிறுத்தினான்.

” கம்பெனிகளுக்கு போகாமல் , கம்பெனி மீட்டிங்குகளை கூட அட்டன்ட் செய்யாமல்,  எந்த தொழிலையும்,  எந்த மாநிலத்திலும் போய் கவனிக்காமல்,  கால் போன போக்கில் போய்க் கொண்டு , மனம் போன போக்கில் நடந்து கொண்டு அதற்கென்று ஒரு நியாயமும் கற்பித்துக் கொண்டிருக்கும் ஒரு சராசரி மனிதனிடம் நான் நிச்சயம் 

அதிகம் எதிர்பார்க்கவில்லை  ” 

சுருக்கென்று நேரடியாக தொண்டையில் ஏறிய தேவயானியின் வார்த்தை ஊசிகளை சலனமின்றி தாங்கிக் கொண்டு அமர்ந்திருந்தான் ரிஷிதரன்.

” இந்த உதவியை நீங்கள் உங்கள் அண்ணன் காதிற்கு எடுத்துச் செல்லலாமே ? ” 

தேவயானி கேட்டு முடித்த மறுகணமே ரிஷிதரன் அவளை கோபமாக பார்த்தான்.

” இல்லை என்றால் உங்கள் அம்மாவிடம் இதுகுறித்து  பேசலாமே ? ” அவன் கோபத்தை அலட்சியம் செய்து தேவயானி தொடர்ந்தாள்.

” உன்னுடைய நெடுநாள் ஆசையை இதைச் சாக்கிட்டு நிறைவேற்றிக்கொள்ள பார்க்கிறாயா ? ” எகத்தாளமாக கேட்டான்

” நான் தவறாக ஒன்றும் சொல்லி விடவில்லையே .சற்று முன்பாக நீங்கள்தான் இந்த கேஸ் விஷயமாக மிகவும் வருத்தப்பட்டீர்கள் .அவ்வளவு கஷ்டப்பட்டு காட்டிற்குள் போய் போராடி அவர்களை பிடித்து இருக்கிறீர்கள் .இனி எப்படியும் போங்கள் என்று விட்டு விடுவீர்களா ? நாளையே அவர்கள் இந்த வேலையையே திரும்பவும் ஆரம்பிக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம் ? இன்னொரு மருதாணி உருவாக வேண்டும் என்று நினைக்கிறீர்களா ? ” 

” போதும் வாயை மூடு ” 




” மருதாணி பாவம் சிறுபெண் .அவளுக்காக என்று இதுவரை நீங்கள் மாய்ந்து மாய்ந்து செய்த காரியங்கள் எல்லாமே சும்மா உங்களுடைய பொழுதுபோக்கிற்காக செய்ததா ? குறி தவறாமல் சுடுகிறேனா என்று உங்களுக்கு நீங்களே பரீட்சை வைத்துக் கொண்டீர்களோ ? ” 

” தேவயானி ” சிறு கத்தலுடன் எழுந்து நின்றான் .

” எனது வேதனையும்,  பரிதவிப்பும் உனக்கு பொழுதுபோக்கு போல் தெரிகிறதா ? ” 

” அப்படித்தானென  இப்போதைய  உங்கள் செயல்கள் சொல்கின்றன .இல்லாவிட்டால் அந்த பாவிகளுக்கான தண்டனையை வாங்கிக் கொடுக்க என்ன வழி என்று ஓடிக்கொண்டிருக்க மாட்டீர்களா ? ” 




” என்னால் அவர்களுடன் எல்லாம் பேச முடியாது தேவயானி .ப்ளீஸ் புரிந்துகொள் .வேண்டுமானால் நீ பேசிப்  பார்க்கிறாயா  ? ” கோபம் குறைந்து கெஞ்சல்  வந்திருந்தது அவன் குரலில்.

” ஆமாம் அவர்களிடம் கை நீட்டி கூலி வாங்கிக் கொண்டிருக்கும் கூலிக்காரிக்காக கரன் குருப்ஸ் கம்பெனியின் முதலாளி ஓடி வருவார் பாருங்கள் ” 

” நீ ஒன்றும் கூலிக்காரி கிடையாது ” சட்டென சீறினான்.

” தங்குவதற்கு இடம் அமைத்து கொடுத்து சமைத்துப் போட்டு பணம் வாங்குபவர்களுக்கு வேறு பெயர் கிடையாது ரிஷி. உங்கள் அண்ணனின் , அம்மாவின் பார்வையில் நாங்கள் கூலிக்காரர்கள்தான் .எங்களுடைய பேச்சு அவர்களிடம் எடுபடாது ” 

” அதற்காக…? ” 

” நீங்கள்தான் உங்கள் அண்ணனிடம் பேசி இந்த கேசை வலுவான நிலைக்கு கொண்டு போக வேண்டும் ” 

” முடியாது .எனக்கு எதை பற்றியும் …யாரை பற்றியும் கவலை கிடையாது,  அவர்கள் முன்னால் போய் நான் நிற்கமாட்டேன் ” அழுத்தமாக அறிவித்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறினான் ரிஷிதரன்.

சை …இவனெல்லாம் ஒரு மனுசன்னு இவங்கிட்ட உதவி கேட்டேன் பாரு …அசுரன் …மகிஷாசுரன் …சிறிது நேரம் தனக்குள் புலம்பியபடி  இருந்துவிட்டு வேறு 

ஒரு வழியும் புலப்படாமல் போக, 

பெருமூச்சு ஒன்றுடன் அண்ணனுக்கு உதவி செய்யலாம் என அருவிக்கரைக்கு இறங்கி நடந்தாள் தேவயானி.

” இங்கே இந்த இடத்தில் பார்பிக்யூ வைத்துவிடலாம் ” என்று சுந்தரேசனுக்கு ஆலோசனை சொல்லிக் கொண்டு அங்கே  நின்றிருந்த ரிஷிதரனை பார்த்ததும் அவளுக்கு மிகுந்த கோபம் வந்தது.

இங்கே இவ்வளவு பெரிய பிரச்சனை இருக்கும் போது இப்போது இந்த கொண்டாட்டம் ரொம்பவும் அவசியம்தானா ? இவன் ஏன் இப்படி செய்கிறான் ? 

எந்த சலனமும் இன்றி தொடர்ந்து வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தவன் மேல் உச்சி சூரியனின் பார்வையை எறிந்தாள் .எப்படி இவனால் இவ்வளவு இலகுவாக இருக்க முடிகிறது ? 

கொண்டாடத் தோதாக அங்கே நடந்து கொண்டிருந்த நிகழ்வுகளுக்குள் போக முடியாமல் ,பத்து நிமிடங்களுக்கு மேல் அங்கே இருக்க பிடிக்காமல் மீண்டும் வீட்டிற்கே வந்தாள் .மருதாணி விழித்திருந்தால் அவளுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுக்கலாம் என்று எண்ணியபடி அறையினுள் பார்க்க அங்கே மருதாணியை காணவில்லை.

அவளது வீட்டிற்கு போயிருப்பாளாயிருக்கும் என்று நினைத்தபடி சிந்தனையுடன் நடந்து மருதாணியின் வீட்டிற்கு போய் பார்க்க , அங்கேயும் அவள் இல்லை .இப்போது தேவயானியினுள் லேசான பரபரப்பு உண்டாகியிருந்தது.

தூங்கிக்கொண்டிருந்தவள் திடீரென்று எங்கே போனாள் …பதட்டத்துடன் பசுமை குடிலின் மற்ற பகுதிகளிலும் தேடினாள் . கடைசியாக அருவிக்கரையில் இருக்கலாமோ என்ற எண்ணத்துடன் அங்கே வந்து பார்க்க , அங்கேயும் மருதாணியை காணவில்லை.

”  என்ன ஆயிற்று தேவயானி ? ” ரிஷிதரன் அவள் முகத்தை கவனித்துவிட்டு கேட்டான்.

” ம…மருதாணியை காணவில்லை ” 

” என்ன …? வீட்டில் தானே தூங்கிக் கொண்டிருந்தாள் . நன்றாக பார்த்தாயா ? ” 

” பார்த்துவிட்டேன் .இங்கே எங்கேயும் இல்லை ” 






ரிஷிதரன் வேகமாக  அவனும் பசுமைக்குடில் முழுவதும் ஒரு சுற்று சுற்றி தேடினான் .மருதாணி அங்கே இல்லை.

" ரிஷி எனக்கு பயமாக இருக்கிறது .அவள் எதுவும் தவறான முடிவிற்கு..." 

" சூ ...எதையாவது பேசிக் கொண்டே இருக்காதே ...அப்படி எல்லாம் ஒன்றும் நடந்திருக்காது .நாம் காட்டிற்குள் போய் பார்க்கலாம்.வா ..." 

அடர்ந்து விரிந்திருந்த காட்டினை நோக்கி  அவர்கள் நடக்கலானார்கள் .

What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Nisha
Nisha
4 years ago

Nxt part upload pannuga sister

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!