karai purandoduthe kana Serial Stories கரை புரண்டோடுதே கனா

கரை புரண்டோடுதே கனா – 18

18

 




 

“ஆரா நீ சாதிச்சிட்டடா, உங்க தாத்தாவையே ஒரு நிமிடம் அசைத்து விட்டாயே..” வரலட்சுமி பாசத்துடன் பேத்தியை உச்சியில் இதழ் பதித்தாள்..
ஆராத்யா காலரை உயர்த்தி விட்டுக் கொள்ள, “எங்களுடைய வாழ்த்துக்களும்..” கோரசாக சொன்னபடி வந்தனர் அரவிந்தும், தமிழரசனும்..
“உங்க இரண்டு பேருக்கும் எப்பவுமே தனியாகவே பேச வராதா அத்தான்களே..” ஆராத்யா வம்பிழுத்தாள்..
“ஏன்மா அப்படிக் கேட்கிறாய்..?”
“அன்னைக்கு இவுங்க ரெண்டு பேரும் இப்படித்தான் கோரசாக கத்தி என்னை வீட்டை விட்டு வெளியே போகச் சொன்னாங்க பாட்டி..” போட்டு உடைத்தாள்..
வரலட்சுமி கண்டிப்பாக பேரன்களை பார்க்க அவர்கள்.. “ஐய்யய்யோ..” என பதறியபடி அவளருகே அமர்ந்தனர்..
“பாட்டி அது சும்மா.. அண்ணன்தான் அப்படி ஆராவை விரட்ட சொன்னார்.. அதுதான் அப்படி பேசினோம்..”




“பேப்பர்ல வசனமெல்லாம் எழுதிக் கொடுத்தாரோ..?” ஆராத்யா கிண்டலாகத்தான் கேட்டாள், அரவிந்த் திருதிருவென விழித்தான்..
“எனக்கில்லை.. இவனுக்குத்தான் எழுதிக் கொடுத்தார்..” தமிழரசன் உண்மை விளம்பி..
“அடப்பாவிகளா..” ஆராத்யா தலையில் கை வைக்க, வரலட்சுமி யோசனையில் இருந்தார்..
“ஆர்யனா..? அவன் அப்படிப்பட்ட பையன் கிடையாதே..? ஏன் இப்படிச் செய்தான்..?”
“என்ன பாட்டி உங்க பேரனுக்கு சப்போர்ட்டாக்கும்..”
“என் பேரன் என்பதற்காக இல்லைடா ஆரா.. ஆர்யன் இயல்பிலேயே மிக நல்ல பையன்.. புத்திசாலி இந்த சின்ன வயதிலேயே சென்னையில் அவனே சுயமாக ஒரு கம்பெனி தொடங்கியிருக்கிறான், தெரியுமா..?” பாட்டியின் குரலில் பெருமிதம் வழிய..
அந்த லட்சணம்தான் தெரியுமே.. பேத்தியின் மனது கசந்து வழிந்தது..
“ஆமாம் ஆரா.. “ஆரா ஆட்டோமொபைல்ஸ்” டூ வீலர் மேனுபேக்சரிங்.. நாங்கள் இரண்டு பேரும் கூட அது சம்பந்தமாகத்தான் படிக்கிறோம்.. படிப்பு முடிந்ததும் கம்பெனிக்குள் வந்து விடுவோம்.. அண்ணன்தான் எங்களை கைட் பண்ணுகிறார்..” அரவிந்தன் உற்சாகமாக பேசினான்..
“நான் படிப்பை முடித் து விட்டு, டில்லியில் ஒரு டூவீலர் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஆரா.. இது ஒரு டிரெயினிங் மாதிரி இருக்கும்ன்னு அண்ணன்தான் இந்த வேலைக்கு போகச் சொன்னார்.. அடுத்த வருடம் “ஆரா ஆட்டோமொபைல்ஸ்” க்கு வேலைக்கு வந்துடுவேன்.. ஆரா நீயும் படிப்பு முடிந்ததும் நம்ம கம்பெனிக்கு வேலைக்கு வந்து விடேன்..” தமிழரசன் அழைக்க ஆராத்யாவின் முகம் இறுகியது..
இந்த மொகரைக்கட்டை கிட்ட போய் வேலை பார்க்கனுமாக்கும்..? இவன் அங்கே கம்பெனி நடத்தும் லட்சணம்.. பற்களைக் கடித்தாள்..
“அதென்ன “ஆரா” என் பெயர்.. எப்படி கம்பெனிக்கு இந்த பெயர்..?” பேச்சை மாற்றினாள்..




குடும்ப தொழில் போல் திட்டமிட்டு கம்பெனி ஆரம்பித்தவன் அதற்கு அவனது பெயரை எதற்கு வைத்துக் கொள்ளவேண்டும்..? தாத்தா அல்லது அப்பா பெயரைத்தானே வைத்திருக்க வேண்டும்..? இதனை குடும்பத்தினருக்கு சுட்டிக் காட்டவே இக் கேள்வியை எழுப்பினாள்..
“அது தாத்தா பெயரும்மா..” வரலட்சுமி பதில் சொன்னாள்..
“தாத்தா பெயரா..?”
“ஆமாம்.. இந்த தாத்தா இல்லை.. இந்த தாத்தாவோட அப்பா பெயர்.. ஆராவமுதன்.. ஆராவு குடும்பம்னுதான் நம்ம குடும்பத்திற்கு
இந்த தக்கலையில் பெயர்.. தாத்தாவோட பெயர் வர்ற மாதிரித்தான் அவனுக்கு ஆர்யன்னு பெயர் வைத்தோம்..” வரலட்சுமியின் விளக்கத்தில் ஆராத்யாவிற்கு சப்பென்றாகி விட்டது..
“வீட்டின் முதல் பேரனுக்கு தாத்தா பெயர் வைக்கனும்னு முடிவு பண்ணி ஆர்யன்னு அவனுக்கு பெயர் வைத்தோம்..”
“நானும் அப்படித்தான்மா, நம்ம குடும்ப பெயர் என் மகளுக்கு வைக்கனும்னுதான் இவளுக்கு ஆராத்யான்னு பெயர் வைத்தேன்..” மனோரமா சொல்ல ஆராத்யாவிற்கு தலை சுழலத் தொடங்கியது.. அடக்கடவுளே இது வேறா..? இந்த அம்மா இத்தனை வருடங்களாக இது பற்றி மூச்சுக் கூட விட்டதில்லையே..




வரலட்சுமி நெகிழ்வாய் மகளின் கையை பிடித்தாள்.. “சந்தோசம்மா..” கசிந்த கண்களைத் துடைத்துக் கொண்டாள்..
“ஆர்யன் எத்தனை நாட்களாக சென்னையில் இருக்கிறான்மா..? எனக்கு தெரியாதே..?”
“டில்லியில் படித்தான்மா.. ஒரு வருடமாக இந்த தொழிலை சென்னையில் நடத்திக் கொண்டிருக்கிறான்.. அவனே பேங்கில் லோன் வாங்கி சுயமாக செய்கிறான்.. தம்பிகளையும் அதற்கேற்ப தயார் படுத்தி வருகிறான்.. தனியாக வீடெடுத்து தங்கி, தானே சமைத்து சாப்பிட்டு.. ரொம்ப பொறுமையான அற்புதமான பையன்மா என் பேரன்..” வரலட்சுமி புகழராம் சூட்டினார்..
ஆராத்யாவிற்கு அன்று ஆர்யனின் வீட்டில் பார்த்த சுத்தம் நினைவு வந்தது.. ஒரு பெண்ணின் பொறுமையுடன் இருப்பிடத்தை சுத்தமாக வைத்திருக்கும் பாங்கு.. அதெல்லாம் அவனாகவே செய்து கொண்டதா..? அவளுக்கு ஆர்யன்மேல் கொஞ்சம் மரியாதை வந்தது.. அவள் முகம் இளகியது..
நல்ல ப்ளானிங் மேன்.. ஆனால் அவனது கேரெக்டர்.. வீட்டிலேயே பியர் வாங்கி வைத்து, நம்பி வந்த பெண்ணிடம். .மீண்டும் அவள் முகம் இறுகியது.. இதனை இப்போதே அனைவர் முன்னாலும் போட்டு உடைத்து விடலாம்.. ஆனால்.. தங்கள் வீட்டுப் பிள்ளைகள் பெருமிதம் பேசிக் கொண்டிருக்கும் இந்தப் பெரியவர்களின் மனம் சட்டென நோகப் பேச அவளுக்கு விருப்பமில்லை.. அவனை மெல்ல மெல்லத்தான் இவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்..
“ஆரா அண்ணனுக்காகத்தான்பா அன்னைக்கு உன்னிடம் கோபமாக பேசினோம்.. மற்றபடி நாங்கள் எப்போதும் உன் கட்சிதான்..” இளங்கோவும், தமிழரசனும் ஆராத்யாவுடன் தங்கள் நட்பை உறுதி செய்தனர்..
“அவனை எல்லோரும் பெரிய இவன்னு இங்கே பேசுறாங்க.. அவன் எதற்காக மம்மி நம்மை வீட்டை விட்டு விரட்ட நினைக்கனும்..?”
ஆராத்யா பிறகு தன் தாயிடம் தனிமையில் கேட்ட கேள்விக்கு மனோரமாவிடம் பதில் இல்லை..
“தெரியவில்லையே ஆரா.. கிட்டே பேசப் போனாலே விரட்டுவது போல் பார்க்கிறான்.. முகம் கொடுத்து பேச மாட்டேங்கிறான்.. உன்னிடமும் கோபமாக நடந்து கொள்கிறான்.. எனக்கு கவலையாக இருக்கிறதுடா..”
தாயின் கவலையை தான் தீர்க்க முடிவு செய்தாள் ஆராத்யா.. நேரிடையாக ஆர்யனிடமே பேசி விட நினைத்தாள்..




“சொர்ணா உன் அண்ணனை எங்கே..?” கை கால்களில் கடலை மாவை பூசி உலர வைத்துக் கொண்டிருந்த சொர்ணாவிடம் கேட்டாள்.. அவள் கல்யாணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தாள..
“நெல்லெடுக்கனும்னு பேசிட்டிருந்தாங்க.. பின்னாடி.. பத்தாயத்தில் பாருங்க..”
“பத்தாயமா..? அப்படின்னா..?”
“பின் வராண்டாவல் பெரிதாக ஒரு மரப்பெட்டி இருக்குமே அண்ணி.. அதுதான் பத்தாயம்.. அண்ணன் அங்கே இருக்காரான்னு பாருங்க..” தகவல் தந்து விட்டு சொர்ணா தன் அழகுபடுத்தலை தொடர்ந்தாள்..
அது எந்த பத்தாயம்..? யோசித்தபடியே ஆராத்யா பின்பக்கம் வந்தாள்.. உயரமாக மர அடுக்கை போல் இருந்த பத்தாயத்தை அண்ணாந்து பார்த்தாள். இதைத்தானே சொன்னாள்.. இங்கே யாரும் இல்லையே.. கண்களால் தேடும் போதே பத்தாயத்திற்குள் ஏதோ சத்தம் கேட்டது.. இதற்குள் என்ன சத்தம்..? ஆராத்யா மடமடவென அந்தப் பெரிய பத்தாயத்தின் பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருந்த மரப்படிகளில் ஏறி உள்ளே எட்டிப் பார்த்தாள்.. விழிகளை விரித்தாள்..
அந்தப் பத்தாயத்தினுள் பாதி அளவு நெல் இருந்தது.. அதன் நடுவே ஆர்யன் நின்றிருந்தான்.. உள்ளே சுற்று முற்றும் பார்த்தபடியிருந்தான்..
“ஐ இதற்குள் இப்படி இறங்கலாமா..?” ஆராத்யாவின் உற்சாக குரலில் நிமிர்ந்து பார்த்து,
“வேண்டாம் ஆரா.. வராதே..” என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆராத்யா உள்ளே குதித்து விட்டாள்..
“ஏனோ..? நீங்கள் இறங்கியிருக்கிறீர்கள்..? நான் வரக் கூடாதா..?” என்ற சவால் கேள்வியோடு..
“அதானே செய்யாதே என்றால்தான் நீ செய்வாயே.. உனக்கு எல்லாமே விளையாட்டுத்தான்..”
“இதிலென்ன விளையாட்டு..? இதோ இந்த நெல் குவியலில் குதிக்க வேண்டும் போலிருந்தது குதித்தேன்..” சொன்னபடி நெல்லை கையில் அள்ளி வழிய விட்டாள்..
“இது நெல்லை சேர்த்து வைக்கிற இடமா..?” பார்வையை சுழலவிட்டாள்..
“ஆமாம்.. விளைச்சல் நெல்லில் விற்றது போக வீட்டிற்காக நெல்லை இப்படி சேர்த்து வைப்பார்கள்.. முன்பெல்லாம் எல்லோருடைய வீடுகளிலும் தவறாமல் இந்தப் பந்தாயம் இருக்கும்.. இப்போது நிறையபேர் இடத்தை அடைக்கிறது, உபயோகமில்லையென இந்தப் பந்தாயங்களை ஒதுக்கி விட்டார்கள்.. அவர்களை சொல்லிக் குற்றமில்லை.. வயல்களே இல்லாமல் போய் விட்ட பிறகு பந்தாயங்களக்கு மட்டும் என்ன வேலை..?” விளக்கங்கள் சொன்ன ஆர்யனின் பார்வை ஆராத்யாவின் முகத்தில் படிந்து கிடந்தது..
“வாவ் பத்தாயத்தோட ஹிஸ்டரி சூப்பர்.. நம் வீட்டில் மட்டும் அந்த பழைய வழக்கத்தை மறக்கக் கூடாதென இதை இன்னமும் வைத்திருக்கிறீர்களா..?”
“ஆமாம்.. சொர்ணா கல்யாணச் சாப்பாட்டிற்கு இந்த நெல்லைத்தான் அரைத்து அரிசியாக்க வேண்டும்.. எவ்வளவு இருக்கிறதென பார் என்று அப்பா சொன்னார்.. வந்தேன்.. இங்கே..” நிறுத்தினான்..
“இங்கே என்ன..?”
“இங்கே ஒரு எலி ஓடியது போலிருந்தது.. அதைத்தான் எங்கு என்று தேடிக் கொண்டிருந்தேன்..”
ஆராத்யாவின் விழிகள் விரிந்தன.. லேசான பயஜாடை தெரிந்தது..
“எ.. எலியா..? இங்கேயா..?” கேட்டபடி சுற்று முற்றும் பார்த்தாள்..
“ஆமாம்.. இப்போது கூட.. அ.. அதோ அங்கே உன் பின்னால்..”
ஆராத்யா வீலென்ற கத்தலுடன் நகர்ந்து ஆர்யனின் மேல் மோதினாள்..
“ஆர்யா எனக்கு பயமாக இருக்குது.. அதை விரட்டுங்க..” அவன் தோள்களில் தொற்றிக் கொண்டாள்..
“விரட்டலாம் ஆரா.. எங்கேயிருக்குதுன்னு தெரிய.. ஆ.. அதோ அங்கே..”
ஆராத்யா மேலும் அலறி அவனோடு ஒன்றினாள்.
“ஆர்யா.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. அதை சீக்கிரம் விரட்டுங்க..” கண்களை மூடிக் கொண்டு கத்தினாள்..
“அதென்ன உனக்கு இளங்கோ, தமிழரசனெல்லாம் அத்தான்.. நான் மட்டும் ஆர்யனா..? என்னை விட சின்ன பசங்களுக்கெல்லாம் மரியாதை.. எனக்கு கிடையாதா..?”
ஆர்யனின் குரல் ஆராத்யாவின் கன்னங்களில் கிசுகிசுப்பாய் மோதியது.. ஏதோ ஓர் அனல் சுமந்து அக்குரல் இருப்பதாய் ஆராத்யாவிற்கு தோன்றியது.. தன் கன்னங்களை தேய்த்து விட்டுக் கொண்ட ஆராத்யா அவனை முறைத்தாள்..





“உன்னையெல்லாம் நான் பெயர் சொல்லி அழைப்பதே பெரிய விசயம்.. இந்த மரியாதையாவது கொடுக்கிறேனே என திருப்திப் பட்டுக்கொள்..”
சொன்னவளின் கன்னத்தில் ஒற்றை விரலால் தொட்டு திருப்பினான்.. “அங்கே பார்..”
அவன் காட்டிய இடத்தில் ஒரு சுண்டெலி நெல் குவியலுக்குள்ளிருந்து மெல்ல பத்தாய சுவர்களின் மேல் ஏறிக் கொண்டிருந்தது.. ஆராத்யா மீண்டும் கத்தினாள்..
“ஆர்யா அதைப் பிடிங்க.. வெளியே தூக்கி போடுங்க..”
“ம்ஹீம்.. நீ அத்தான்னு சொல்லு.. நான் அதை விரட்டுறேன்..” பேரம் பேசினான்..
இவனை அப்படிக் கூப்பிட்டு விடவே கூடாது ஆராத்யா அக்கணமே முடிவெடுத்தாள்..
“முடியாது..” தலையுயர்த்தி அறிவிக்கவும் செய்தாள்..
“ஓ.. அப்படியா..? சரி நீயாச்சு உன் சுண்டெலியாச்சு..” சொன்னவன் தன் மேல் சரிந்திருந்தவனை விலக்கி நிறுத்திவிட்டு ஒரு உந்தலில் எக்கி பத்தாயத்தின் மேற்பகுதியை ஒரு கையால் பற்றினான்..
“பை டார்லிங்..” படக்கென ஒரு கண்ணைமூடி சிமிட்டி, உதடு குவித்து சீட்டி ஒலி எழுப்பியவன், டக்கென கால்களை மேலே இழுத்து பத்தாயத்தின் வெளியே போய்விட்டான்..
“ஆர்யா போகாதீர்கள்..” ஆராத்யா கத்திக் கொண்டிருக்கும் போதே பத்தாயத்தின் மூடியையும் மூடிவிட்டான்.. ஆராத்யாவை சுற்றி இருள் சூழ்ந்தது..




What’s your Reaction?
+1
7
+1
3
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!