kana kanum kangal Serial Stories கனா காணும் கண்கள்

கனா காணும் கண்கள் – 13

13

 

” சாரி மகி ” மன்னிப்பு கேட்டவளை  இழுத்து அணைத்துக் கொண்டான் மகிபாலன் .” ஏதோ பெரிய குற்றம் செய்தது போல எதற்கு மன்னிப்பு எல்லாம் ? ” 

 

” நான் உங்களுக்கு மிகவும் தொல்லை கொடுக்கிறேன் மகி .எப்படி உங்களால் என்னை பொறுத்துக் கொள்ள முடிகிறது ? ” 

 

” நீ இன்னமும் மனதளவில் சிறுபிள்ளை தாண்டா குட்டி .உன் மேல் எனக்கு கோபம் வருமா ?வேறு வழி தெரியாமல்தான் …” வருத்தத்துடன் அவன் கை அவள் கன்னம் வருடியது .

 




” அது பரவாயில்லை மகி. அந்த நேரத்தில் நீங்களும் தான் என்ன செய்வீர்கள் ” என்றவள் சற்று தயங்கி பேச்சை நிறுத்தினாள் .அவன் மேல் சாய்ந்து  சட்டையின் பட்டனை திருகியபடி முணுமுணு குரலில் பேசினாள்.

 

நேற்று நீங்கள் மிகுந்த ஆசையோடு இருந்தீர்கள் .உங்களை நான் ஏமாற்றி விட்டேன் ” 

 

மகிபாலன் குனிந்து தன் மார்பில் புதைந்து கிடந்தவளின்  முகத்தை பார்க்க முயன்றான் .” என்னடா குட்டி சொல்கிறாய்என்ன ஏமாற்றம்எனக்கு ஒன்றும் புரியவில்லையேஏய் நிமிர்ந்து என் முகம் பாருடா ” சீண்டினான் .

 

” சீ போங்க நான் ஒன்றும் சொல்ல மாட்டேன் ” அவன் மார்பில் குத்தினாள்.

 




” மிருது இங்கே பாருடா. நாம் இருவரும் கணவன் மனைவி இன்ப துன்பம் இரண்டையுமே இருவருமாக இணைந்து தான் அனுபவிக்க வேண்டும் .உன்னுடைய துயரத்தில் எனக்கு பங்கு இல்லையாஅத்தோடு நேற்று ஒரு நாள் தானா நமக்கு .இன்னமும் எத்தனையோ வருடங்கள் நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழப் போகிறோம் .அதில் எத்தனையோ இரவுகள் வரும். நேற்று வீணாக போனதற்கும் சேர்த்து இனி வரும் இரவுகளில் வீடு கட்டி விட மாட்டேனா ? ” பேசிவிட்டு அவன் கண்களை சிமிட்ட முகம் நிறைந்த வெட்கத்துடன் அவனுடன் ஒன்றி கொண்டாள்

 

———–

 

” அப்பா அக்காவை பற்றி விசாரியுங்கள் அப்பா ” மீண்டும் ஆரம்பித்த மகளை குழப்பமாக பார்த்தார் கலிவரதன்.

 

” நேற்று இரவு மீண்டும் மதுராவை சொல்லி மயங்கிவிட்டாள் மாமா ” மகிபாலன் சொல்ல கலிவரதன் திகைத்தார்.

 

” மிருதுளா ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்உனக்கு என்னதான் பிரச்சனை ? ” ஆத்திரம் கலந்த அழுகையோடு கேட்டாள் மாரீஸ்வரி.

 

” அக்கா என்னை தேடி வருகிறாள் அம்மா .என்னிடம் ஏதோ சொல்ல நினைக்கிறாள் ” 

 

” மண்ணாங்கட்டி அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது .நீயாக எதையோ கற்பனை செய்து கொண்டே இருக்கிறாய்” 

 

” இல்லை அம்மா .இது உண்மைதான் அக்கா இப்போது நிச்சயம் உயிருடன் இல்லை .அவள் ஆத்மாவாக அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறாள் .அவள் உயிர் போவதற்கு காரணமானவர்களை நமக்கு காட்ட விரும்புகிறாள் .அதுதான் இங்கே சுற்றி சுற்றி வருகிறாள் ” 

 




” மிருதுளா ” உயர்ந்த குரலில் மாரீஸ்வரி மகளை அதட்ட ” அத்தை ” அதைவிட உயர்ந்த குரலில் மகிபாலன் மாரீஸ்வரியை அதட்டினான்.

 

நீங்கள் மிருதுளாவுக்கு ஆறுதல் சொல்லவில்லை என்றாலும் இதுபோன்று அபத்தமாக பேசாமல் இருங்கள் ” 

 

” எதை எதையோ நினைத்துக் கொண்டு முட்டாள்தனமாக இவள் வாழ்க்கையை கெடுத்துக் கொண்டிருக்கிறாளே மகி .எனது பெற்ற வயிறு பற்றி எரிகிறது ” 

 

” அவள் வாழ்க்கை என்னிடம் தான் இருக்கிறது. நிச்சயம் அது கெட்டுப்போகாது .நீங்கள் வாயை மூடிக்கொண்டு இருங்கள் .அதுவே போதும்  ” தன் வாயின் மீது கை வைத்து மகிபாலன் காட்ட உண்மையாகவே அதுபோலவே தன் வாயை மூடிக்கொண்டாள் மாரீஸ்வரி.

 

இவர்களை பார்த்துக்கொண்டிருந்த மிருதுளாவிற்கு முன்பு மகிபாலன் தன் அம்மாவிடம் பவ்யமாக தலைகுனிந்து நின்ற தருணங்கள் நினைவிற்கு வந்தன .மாறிவிட்ட இன்றைய நிலை அவளுக்கு மகிழ்வுடன் கூடிய புன்னகையை தந்தது.

 

” ஏய் குட்டி நாங்கள் இருவரும் இங்கே சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம் .உனக்கு சிரிப்பு வருகிறதா ? ” அவள் தலையில் தட்டினான் மகிபாலன்.

 

” ஒன்றுமில்லை மகி ஒரு காலத்தை நினைத்தேன் சிரித்தேன் ” அவளது நினைவு ஓட்டத்தை உணர்ந்துகொண்ட எல்லோருடைய முகத்திலுமே புன்னகையே வந்தது .அதில் முதன்மையானவள்  மாரீஸ்வரி என்பதுதான் ஆச்சர்யமான விஷயம்.

 

மகிபாலன் மிருதுளாவை  நெருங்கி அமர்ந்து அவள் கைகளை பிடித்துக் கொண்டான் ” குட்டி இங்கே பாருடா நீ சொல்வதெல்லாம் சரி என்றே வைத்துக் கொள்வோம். உன்னை போலவே நாங்களும் மதுராவுக்கு முக்கியமானவர்கள் தானே. எங்கள் யார் கண்ணிற்கும் தெரியாத மதுரா உனக்கு மட்டும் எப்படி தெரிகிறாள்இந்த வகையில் கொஞ்சம் யோசித்துப் பாரேன்

 

இந்த கேள்விக்கு மிருதுளா திணறினாள். ” அது தெரியவில்லை .ஆனால் அதற்கும் ஒரு காரணம் இருக்கக்கூடும் ” என்றாள்.

 

மகிபாலன் பெருமூச்சுவிட்டான் ” சரி இருக்கட்டும் .நாளை உனக்கு மீண்டும் மாலதியிடம் அப்பாயின்மென்ட் வாங்கட்டுமா ? ‘ 

 

” இல்லை வேண்டாம் மகி ” 

 

மிருதுளாவின் இந்த பதிலில் எல்லோரும் அதிர்ந்தனர் .” மிருது தவித்துக்கொண்டிருக்கும் உன் மனதை சமாதானப்படுத்த தான் இந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ள சொல்கிறோம் ” கலிவரதன் படபடத்தார்.

 

” சரிதான் அப்பா. மாலதி மிகவும் திறமையான டாக்டர் .கொதித்துக் கொண்டிருக்கும் என் மனதை இலகுவாக குளிரவைத்து விடுகிறார் .ஆனால் இப்போது நான் அதனை விரும்பவில்லை. எனக்கு மதுராவை விரட்ட விருப்பமில்லை .நான் அவளுடன் பேசப்போகிறேன் .பயப்படாமல் நேருக்கு நேர் நிற்கப் போகிறேன். அவள் பக்கத்து நியாயத்தை தெரிந்துகொள்ள போகிறேன் ” 

 

மிருதுளா பேசி முடித்ததும் அங்கே அமைதி நிலவியது .மகிபாலன் எழுந்தான் மிருதுளாவின் உச்சந்தலையில் கைவைத்து இழுத்து அவளை தன் வயிற்றோடு அணைத்துக் கொண்டான். பேசிய விஷயத்தின் பதட்டத்தில் படபடத்து கொண்டிருந்த மிருதுளாவின் உடல் சற்று ஆசுவாசம் ஆனது.

 

” அப்படித்தான் செய்ய வேண்டும் என்று நீ நினைத்தால் அப்படியே நடக்கட்டும் குட்டி .எங்கே எந்த இடத்தில் உனக்கு உதவ வேண்டும் என்றாலும் நாங்கள் எல்லோருமே தயாராக இருக்கிறோம் .ஒன்றை மட்டும் உனக்கு நினைவுபடுத்துகிறேன் .நாங்கள் எல்லோரும் உன் நன்மையை மட்டுமே நாடும் உன் உறவினர்கள் .இவற்றை மட்டும் எப்போதும் மனதில் வைத்துக்கொள் ” 

 

மகிபாலனின் புரிதலில் மிருதுளா மிகவும் மனம் நெகிழ்ந்தாள் .

 

அன்று இரவு

 




” நீங்கள் எனக்கு கிடைத்தது என்னுடைய பெரிய அதிர்ஷ்டம் அத்தான் ” மிருதுளாவின் குரலில் உணர்ச்சிகள் வழிய மகிபாலன் அவளை இழுத்து இறுக்கி அணைத்தான்..

 

” ஏய் குட்டி உனக்கு மூடு வந்தால் மட்டும் நான் அத்தானா ? ” 

 

” இல்லை உங்களுக்கு மூடு வருவதற்கு ” 

 

” வாவ் ” உற்சாகமாய் கூச்சலிட்டான் ” நீ சும்மா பார்த்தாலே எனக்கு ஜிவ்வென்று இருக்கும். இப்படி கொஞ்சிக் கொஞ்சி பேசினாயானால் ” பேச்சை நிறுத்திவிட்டு செயலில் இறங்கினான் .அவள் முகம் முழுவதும் தன் இதழ்களை பதிக்க துவங்கினான்.

 

” அத்தான் கதவுகதவு ” மிருதுளா மெலிதாய் கத்த மகிபாலன் அவளை விட்டுவிட்டு வேகமாய் போய் கதவை மூடிவிட்டு வந்து மீண்டும் அவளை அணைத்துக்கொண்டான் .” என் செல்லம்குட்டிதங்கம்பட்டு ” குழந்தையை போல் அவளை கொஞ்சியபடி தன் காதலை அவள்மேல் கொட்ட துவங்கினான்.

 

” கதவை பூட்டி விட்டீர்கள் தானே ” தன் கழுத்தடியில் புதைந்திருந்த அவனிடம் காதுக்குள் மெல்ல கேட்டாள் மிருதுளா.

 

” ஏன் கேட்கிறாய் ? ” முகத்தை உயர்த்தாமல் கேட்டவனுக்கு சிறு நெருடல்.

 

” நேற்றும் கதவை பூட்டிவிட்டு தான் வந்தேன் .ஆனால் மதுரா கதவைத் திறந்து கொண்டு வந்தாள் .அது தான் கேட்கிறேன்” 

 

மகிபாலன் அவளை விட்டு பிரிந்து அவள் முகம் பார்த்தான் .தனது தோள்களை வளைத்து இருந்த அவள் கைகள் ஒப்புக்காக கடன் என கிடப்பதை உணர்ந்தான் .மிருதுளாவின் கண்கள் படபடப்பும் பயமுமாக அறை வாசல் கதவின் மேலேயே பதிந்திருந்தது.

 

” மதுரா இப்போது வருவாள் மகி ” சொன்னபடி கண்களை அகல விரித்து சுற்றிசுற்றி பார்த்துக்கொண்டிருந்தாள் .மகிபாலன் கண்களை மூடி ஒரு நிமிடம் தன்னை கட்டுப்படுத்தினான்.

 

பிறகு குனிந்து நின்று கொண்டிருந்த மிருதுளாவை குழந்தை போல் கைகளில் தூக்கிக் கொண்டு போய் கட்டிலில்  படுக்க வைத்தான் .போர்வையை மூடிவிட்டு  ” நீ தூங்குடா ” என்றான்.

 

” வேண்டாம் மகி .மதுரா இப்போது வருவாள் நான் தூங்க கூடாது ” 

 

மகிபாலன் அருகேயிருந்த  டிராவை இழுத்து உள்ளிருந்து ஒரு மாத்திரையை எடுத்து பிரித்து தண்ணீருடன் அவளுக்கு நீட்டினான் .இதை போட்டுக் கொள் .படுத்து தூங்கு ” 

 

” மதுரா வருவாள் மகி ” 

 

” வரட்டும் வந்தால் உன்னை எழுப்புவாள் ” அவள் அருகில் படுத்துக்கொண்டான் .திரும்பி அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள் .மென் குரலில் தயக்கமாய் பேசினாள்.

 

வந்துநாம் இருவரும் கொஞ்சம் நெருக்கமாக இருந்தால்அப்போதுதான் அவள் வருவாள் என்று எனக்குஅப்படித்தான் தோன்றுகிறது மகி ” 

 

” அப்படியெல்லாம் ஒன்றுமில்லை .உன்னை சந்தித்து ஏதாவது சொல்ல வேண்டும் என்று நினைப்பவள் எப்போது வேண்டுமானாலும் வருவாள் .முன்பு நடுரோட்டில் கூட வந்து நிற்க வில்லையாஅவளுக்கு பயந்து தானே நீ காரை மரத்தில் இடித்து ஆக்சிடெண்ட் ஆனது ” 

 

” ஆமாம் ஆனால் இப்போது ” என்றவளின் இதழ்கள் மேல் விரல் வைத்தான் .” எதையாவது கற்பனையாக நினைத்து கொண்டு உன்னை நீயே கஷ்டப்படுத்தி கொள்கிறாய் மிருதுளா .நீ தூங்கு மற்ற விஷயங்களை விடிந்ததும் பேசிக் கொள்ளலாம் ” மகிபாலனின் குரல் வறண்டு ஒலித்தது.

 




ஒரு விதமாக சமாதானமான மிருதுளா அவன் மார்பில் முகம் பதித்து கொண்டு  தூங்க துவங்கினாள்.

 

————-

 

” ஹாய் மிருதுளா எப்படி இருக்கிறாய்  ? கல்யாணத்திற்கு பிறகு உன்னை வெளியே எங்கேயும் பார்க்கவே முடியவில்லையே ” கேட்டபடி வந்தாள் பவித்ரா.

 

” கொஞ்சம் பிஸி அக்கா .இதோ இன்று தான் ஷாப்பிங்கிற்கு கொஞ்சம் டைம் கிடைத்தது ” 

 

” உன் அக்கா எப்படி இருக்கிறாள்உன் கல்யாணத்துக்கு கூட வரவில்லை ” 

 

” அவளுக்கு அமெரிக்காவில் யூனிவர்சிட்டியில் எக்ஸாம் நேரம் அக்கா ்அதுதான் வரவில்லை ”  இப்படித்தான் மதுரா அமெரிக்க யூனிவர்சிட்டி ஒன்றில் மேற்படிப்புக்காக சேர்ந்து விட்டதாக தான் எல்லோரிடமும் சொல்லி வைத்திருந்தனர்.

 

” வாழ்க்கையைவிட உன் அக்காவிற்கு படிப்பு முக்கியமாக போய்விட்டதாபடிப்பின் பின்னால் போய் வாழ்க்கையை இழந்து விட்டாளே ” 

 

” என்ன அக்கா சொல்கிறீர்கள் ? ” 

 

” அவளுக்கு அங்கே எக்ஸாம் எல்லாம் இருக்காது இந்த கல்யாணத்திற்கு வர பிரியம் இல்லாமல் அங்கேயே இருந்திருப்பாள் ” 

 

” ஏன் அக்கா ? ” 

 

தன் காதலரையே  தங்கை மணம் முடிப்பதை பார்க்கும் போது அவளுக்கு வருத்தம் வராதா ? ” 

 

” பவித்ராக்கா என்ன சொல்கிறீர்கள் ? ” 

 

” எனக்குத் தெரிந்ததை சொல்கிறேன் .இதனை முன்பே உன்னிடம் சொல்ல வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தேன். உன் அத்தான் உன் பக்கமே என்னை நெருங்க விடவில்லை .எனக்கு தெரிந்து உன் அக்காவும் அத்தானும் காதலித்துக் கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு இடையே என்ன நடந்ததென்று தெரியாது .இருவருக்கும் பிரேக்கப் ஆகிவிட்டதாக மதுரா எனக்கு சொன்னாள் .ஆனால் உங்கள் சொத்துக்களை விட மனமற்று மிஸ்டர் மகிபாலன் உன்னை ஏமாற்றி கல்யாணம் செய்துகொண்டார் என்று நினைக்கிறேன். அதற்கும் முதலாக மதுராவை அவர் காதலித்ததும்  உங்கள் சொத்துக்களுக்காகத்தான் என்று நினைக்கிறேன். நீ எதற்கும் ஜாக்கிரதையாக இரு ” 

 

பவித்ரா கொடுத்த விளக்கங்களுக்கு மிருதுளாவின் தலை சுழன்று மயக்கம் வர துவங்கியது.

 

 

 

 

What’s your Reaction?
+1
3
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!