karai purandoduthe kana Serial Stories கரை புரண்டோடுதே கனா

கரை புரண்டோடுதே கனா – நிறைவு

25

 

 

“எப்படி மூன்றாம் மனிதர் போல் உட்கார்ந்திருக்கிரார் பார்..” சதுரகிரி தம்பியிடம் எரிச்சலாக சொன்னார்.. மாதவன் தெரியாத மனிதர்கள் வீட்டு திருமணம் போல் கடைசி வரிசையில் அமர்ந்திருந்தார்..
“அவருக்கு இங்கு இருக்கவே பிடிக்கவில்லை அண்ணா.. மனோவையும், ஆராவையும் கூட்டிப் போகத்தான் இப்போது கல்யாணத்திற்கு வந்து உட்கார்ந்திருக்கிறார்..”
“ஆமாண்டா.. ஆனால் நாம் அவர்களை அனுப்பக் கூடாது..”
“என்னண்ணா சொல்கிறீர்கள்..? அது எப்படி சரியாக வரும்..?”
“எல்லாம் வரும்டா நாம் இவருடன் தங்கச்சியையும், ஆராவையும் அனுப்பினால், ஆராக்குட்டியை அமெரிக்காவிற்கு ப்ளைட் ஏற்றி விட்டுடுவார்.. அதனால் அவர்களை அனுப்பவே கூடாது.. நம் வீட்டிலேயே வைத்துக் கொள்வோம்..”




“சரிண்ணா, எதுவாக இருந்தாலும் கல்யாணம் முடிந்த பிறகு பேசிக் கொள்ளலாம்.”
தாய்மாமன்களின் பேச்சைக் கேட்டபடி பின்னால் நின்றிருந்த ஆராத்யாவின் மனது துணுக்குற்றது.. இதென்ன இவர்கள் இப்படி ப்ளான் போட்டு வைத்திருக்கிறார்கள்..?
“ஏய் ஆரா கற்கண்டு தட்டை வரவேற்பில் கொண்டு போய் வைக்கச் சொன்னால், ஏன் கையிலேயே வைத்துக் கொண்டு நிற்கிறாய்..?” ஆர்யன் அவள் தோள் தொட்டு உலுக்க, தன்னிச்சையாய் வாய் திறந்தாள்.
“அப்பா..”
ஆர்யனின் முகம் மாறியது..
“உனக்கு எப்போது பார்த்தாலும் உன் அப்பா புராணமா..?”
“நிச்சயமாக அவர் தி பெஸ்ட் பாதர்.. அவரை நான் எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்கவும் மாட்டேன்.. விட்டுப் பிரியவும் மாட்டேன்..” ஆராத்யா உறுதியாக சொல்ல ஆர்யனின் முகம் சிவந்தது..
“அப்படி என்னடி உனக்கு அவர் முக்கியம்..?”
“முக்கியம்தான்.. எனக்கு மட்டும் இல்லை.. என் அம்மாவிற்கும் அப்பா ரொம்ப முக்கியம்.. நீங்க எல்லோரும் சேர்ந்து போட்டிருக்கிற ப்ளான் எனக்கு தெரியும் ஆர்யன்.. என் அம்மாவை கணவரிடமிருந்து பிரித்துவிட்டு, எனக்கு கணவரை பெற்றுக் கொள்ள வேண்டுமா..? நிச்சயம் இது நடக்காது.. அம்மாவும், அப்பாவும் பிரிந்தால் நம் பிரிவும் நிச்சயம்..”
“ஆரா..”
“கத்தாதீர்கள்.. இந்த விசயத்தில் என்னை சமாதானப்படுத்த முடியாது, எத்தனை முத்தங்கள் கொடுத்தாலும்.. நம் திருமணம் நடக்க வேண்டுமானால் முதலில் அப்பாவை சமாதனப்படுத்துங்கள்..” கொஞ்சலும், கெஞ்சலுமாக ஆராவின் குரல்..
“அங்கே பார்.. இங்கே நடப்பவைகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு இருப்பவரை எப்படி சமாதானம் செய்வது..?”
“அது உங்கள் பாடு.. உங்கள் கவலை.. வீட்டு மாப்பிள்ளையை மரியாதையாக நடத்த வேண்டியது நீங்கள்தான்.. எனக்கு அதில் சம்பந்தம் கிடையாது..”
“ராட்சசி.. எப்படியெல்லாம் கொடுமை படுத்துகிறாயடி..?” பல்லைக் கடித்தவனை நிமிர்ந்து பார்த்தாள்..
“நீங்க நினைப்பது போல் அப்பா பெரிய வில்லனெல்லாம் கிடையாது ஆர்யன்.. ரொம்ப சாப்டானவர்.. என் மேல் மிகுந்த பாசம் வைத்திருப்பவர்.. அம்மா மேல் நிறையக் காதல் உள்ளவர்.. அவரைக் கையாள்வது ரொம்ப ஈசி..”
“ஓ.. அப்போ அவர் ஒரு டம்மி பீசுங்கிற..”
“வேண்டாம் ஆர்யா.. அவர் என் அப்பா.. மரியாதையாக பேசுங்கள்..” ஆராத்யா எச்சரித்தாள்..
“ஆரா.. உன் அப்பாவை பாருடி.. எந்த சட்டையை போட்டுட்டு வந்து உட்கார்ந்திருக்கிறார்னு.. கல்யாண வீட்டுக்கு போடுற டிரெஸ்ஸா இது..? நான் அவருக்காக புது டிரெஸ் வாங்கி நம் பெட்டியில் வைத்திருக்கிறேன்.. நீ அதைக் கொண்டு போய் அவரிடம் கொடுத்து மாற்றிக் கொள்ள சொல்லுடி..” வேண்டலோடு வந்தான் மனோரமா..
“நீயே கொண்டு போய் கொடேன் மம்மி..”
“நான் ஏன் போகனும்..? உன் அப்பா இப்போது வரை என்னைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை.. போனில் கூட பேசவில்லை.. நானே ஏன் அவரைத் தேடிப் போய் கொடுக்க வேண்டும்..? நான் மாட்டேன்.. அவர் எந்த டிரெஸ் போட்டால் எனக்கென்ன..” மனோரமா போய்விட்டாள்..
இவர்களை என்ன செய்வது.. ஆராத்யா கேள்வியோடு ஆர்யனைப் பார்க்க அவன் யோசனையோடு நின்றான்..




“சொர்ணா கையில் கொடுத்துவிட வேண்டிய வெள்ளிக் குத்துவிளக்கை எடுத்துட்டு வாம்மா..” வரலட்சுமி சொல்ல, அறைக்குள் தான் வைத்த இடத்தில் குத்துவிளக்கை காணாமல் ஆராத்யா திகைத்தாள்.
திருமணம் நல்லபடியாக நடந்து முடித்திருக்க மறுவீட்டிற்கு போகும் போது மணப்பெண் கையில் கொடுத்து விட வேண்டிய குத்துவிளக்கை தேட அதைக் காணோம்.. “ஐயோ இது இப்போது மாப்பிள்ளை வீட்டினருக்கு தெரிந்தால் அபசகுணமென்று நினைப்பார்களோ..” சௌடாம்பிகை கவலைப்பட்டாள்..
ஆராத்யா வேகமாக வெளியே வந்து ஆர்யனை அழைத்தாள்.. “மண்டபத்திற்கு கொண்டு வந்த நினைவு இருக்கிறது ஆர்யன்.. இப்போது காணவில்லை.. அதைப்பிறகு பார்க்கலாம்.. அன்று இந்த விளக்கை வாங்கும் போது ஒற்றையாக வாங்க வேண்டாமென, ஒரே போல் இரண்டு விளக்குகள் வாங்கினோமே, அந்த இன்னொன்று வீட்டில்தான் இருக்கு வாங்களேன் போய் எடுத்து வந்துவிடலாம்..”
சரியென மண்டப வாசல் வரை வந்த ஆர்யன் திடுமென, மாதவனைப் பார்த்து நின்றான்.
“மாமா ஒரு ஹெல்ப்.. கல்யாணம் நல்லபடியாக முடிந்தது.. மறுவீட்டு அழைப்பின் போது பொண்ணு கையில் கொடுத்து விட வேண்டிய குத்துவிளக்கை கூட்டில் வைத்து விட்டு வந்துட்டோம்.. எனக்கு மண்டபம் ஒதுக்குகிற வேலை இருக்கிறது.. நீங்கள் போய் அதை எடுத்து வந்து விடுகிறீர்களா..? ப்ளீஸ்..” தன் பைக் சாவியை நீட்டினான்,
மாதவன் திகைத்தார்.. “நானா..? நான் வந்து.. எனக்கு ஒன்றும் தெரியாதே..”
“இதோ அத்தையையும் கூட்டிக் கொண்டு போங்க.. மனோ அத்தை நீங்களும் மாமா கூட போங்க..” எடுத்து முடித்த ஆரத்தி தட்டுக்களை கையில் அடுக்கிக் கொண்டு அப்போது அவர்களை கடந்து போய் கொண்டிருந்த மனோரமாவை இழுத்து மாதவன் முன் நிறுத்தினான்..
“நானா..? எங்கேடா..?”
“அதை மாமா சொல்லுவார்.. நீங்க கிளம்புங்க.. இந்தாங்க மாமா பைக் சாவீ.. நீ இதை கொடு அத்தை.. பிடி ஆரா..” மாதவன் கையில் பைக் சாவியை கொடுத்து, மனோரமா கையிலிருந்த ஆரத்தி தட்டுக்களை வாங்கி ஆராத்யாவிடம் கொடுத்த கையோடு அவளையும் இழுத்துக் கொண்டு விடுவிடுமென மண்டப கல்யாண கூட்டத்திற்குள் நுழைந்து கொண்டான்.
“ஆர்யா என்ன பண்றீங்க..?” கேட்ட ஆராத்யாவின் உதட்டில் விரல் வைத்து அமைதி என்றான்..
மாதவனும், மனோரமாவும் பைக்கில் ஏறி மண்டபத்தை விட்டு வெளியேறுவதை இருவரும் பார்த்தனர்..
“இரண்டு பேரும் பேசிக்குவாங்களா ஆர்யா..? சண்டை தீர்ந்துடும்ல..? ஆனால் வீட்டிற்கு போய் விளக்கெடுத்துட்டு வர்ற அவசரத்தில் பேசாமலேயே வந்து விட்டார்களானால்..” ஆராத்யாவின் புலம்பல்களுக்கு பதில் சொல்லாமன் தன் கை வாட்சை பார்த்தபடி இருந்தான்..
“இப்போது வீட்டிற்கு போயிருப்பார்கள்தானே..” கேட்டு விட்டு, தன் போனை எடுத்து எண்களை அழுத்தினான்..
“அத்தை காணாமல் போன விளக்கு கிடைத்துவிட்டது.. ஒண்ணும் அவசரமில்லை.. வீட்டில் உட்கார்ந்து ஒரு கப் காபி சாப்பிட்டு விட்டு நிதானமாக வாருங்கள்..” என்றான்..
“ஏய் எப்போது விளக்கு கிடைத்தது..? எங்கே..?”
“இங்கேதான்.. இப்போதுதான்..” சொன்னபடி மணமகள் அறைக்குள் ஆராத்யாவின் கையை பிடித்துக் கொண்டு நுழைந்தான்.. அங்கே கட்டிலுக்கு கீழே கசகசவென இரைந்து கிடந்த சாமான்களுக்கிடையே இருந்து ஒரு கேரிபேக்கை எடுத்தான்… அதில் அந்தக் குத்துவிளக்கு இருந்தது.. துண்டு துண்டாகப் பிரித்து பத்திரமாக கட்டி வைக்கப்பட்டிருந்தது..
“நான்தான் இதைப் பிரித்து மறைத்து வைத்தேன்..”
“அடப்பாவி எப்படி ப்ராடு வேலையெல்லாம் பார்க்கிறாய் நீ..?” ஆராத்யா அவன் தோள்களில் செல்லமாக அடித்தாள்..
“வேற வழி.. அத்தை பெண்ணாச்சே.. உறவு விட்டுப் போயிடக் கூடாதேங்கிற பரந்த மனப்பான்மையில் ரொம்பவும் சுமாராக இருக்கிற ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக பெரிய கிரிமினல் ரேஞ்சுக்கு வேலை பார்க்க வேண்டியதிருக்கு..” சோகம் போல் சொன்னபடி பிரிந்து கிடந்த குத்துவிளக்கு பாகங்களை சேர்த்தான், உடனடியாக ஆராத்யாவிடமிருந்து ஒரு குத்தையும், சுமாரான பெண்ணா நான்.. என்ற கத்தலையும் எதிர்பார்த்திருந்தவன் அது இல்லாமல் நிமிர்ந்து பார்த்தான்..
ஆராத்யா பொங்கிய காதலை மறைக்காமல் கண்களில் காட்டியபடி தேன் ஈயாய் அவனைப் பார்த்தபடி இருந்தாள்.. ஆர்யன் மாட்டிக் கொண்டிருந்த விளக்கை சாய்த்து வைத்தான்,
“ஹேய் ஆரா கதவைப் பூட்டிடவா..?” வாசலைக் கண்காட்டிக் கேட்டான்..




“ச்சீ.. போடா..” அவன் தோளைத் தட்டும் சாக்கில் தோள்களில் கை வைத்தவள் கைகளை அங்கேயே பதித்து மெல்ல அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள்..
“உன் அம்மாவும், அப்பாவும் சமாதானமாகிவிடுவார்கள் தானே ஆரா..?” ஆர்யனிடம் குரலில் சிறு படபடப்பு தெரிய ஆராத்யாவிற்கு சிரிப்பு வந்தது..
“சர்வ நிச்சயமாக ஒரே ஒரு தடவை இரண்டு பேரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டார்களானேலே போதும்.. எவ்வளவு பெரிய சண்டையையும் மறந்து விடுவார்கள்.. அதனால்தான்.. அப்படி உடனே அம்மாவிடம் சரண்டராகிவிடக் கூடாதென்றுதான் அப்பா அம்மாவை நேரடியாகப் பார்க்க, போனில் பேசக்கூட தவிர்த்துக் கொண்டிருந்தார்.. அட்லீஸ்ட் இந்தக் கல்யாணம் முடியும் வரையாவது கோபமாக இருந்தாக வேண்டிய கட்டாயம் அவருக்கு.. நாங்கள் சென்னை போகவும் இரண்டு பேரும் சமாதானமாகி விடுவார்கள் என்று நான் நினைத்திருக்க, எங்களை சென்னை அனுப்பவே கூடாது என்று நீங்கள் திட்டம் போட்டு வைத்திந்தீர்கள்..”
“என்ன செய்வதென்று தெரியாமல் நான் மண்டையை பிய்த்துக் கொண்டிருந்தேன்.. நல்ல வேளையாக நீங்கள் சரியான நேரத்தில் சரியாக யோசித்து எல்லாம் நல்லபடியாகவே முடிந்து விட்டது..”
“அப்போ நீயும், மனோவும் சென்னை கிளம்பப் போகிறீர்களா..?” கேட்டவனை நிமிர்ந்து பார்த்து ஆராத்யா சிரித்தாள்.. அவன் தாடி வளர்த்து சோகப்பாட்டு பாடும் எண்பதுகளின் காதல் தோல்வி சினிமா ஹீரோ பாவனையில் இருந்தான்..
“நீங்களும் வர்றீங்க பாஸ்.. உங்க கம்பெனியை மறந்துட்டீங்களா.. நாம் வரும் போது தனித் தனி கம்பார்ட்மெண்டில் வந்தோம்.. போகும் போது ஒரே கம்பார்ட்மென்டில் போகலாம்..”
“ம்.. அது சரிதான்.. ஆனால் அங்கே போனதும்.. வந்து.. உன் அப்பா.. உனக்கு..” ஆர்யனின் குரல் தடுமாறியது..
“பிரவிணோடு கல்யாண ஏற்பாடு பண்ணுவாரான்னு கேட்கிறீங்களா..?”
“அது எந்த வீணாப்போனவன் பிரவீணு..” எரித்து விழுந்தான்..
“ஏய் அவரும் என் அத்தை பையன்தாம்பா..”
“என்னைத் தவிர எவன்டி உனக்கு அத்தை பையன்.. சொத்தை பையன்..” ஆர்யனின் கோபம் சிறிதும் பாதிக்காது சிரித்தபடி தன் போனை எடுத்தாள்.. கால் செய்தாள்..
அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே.. “ஹாய் பிரவீண் ஹவ் ஆர் யு..? ஐ மிஸ் யு மேன்..?” எனப் பேசத் துவங்க ஆர்யன் பொங்கி வந்த கோபத்துடன் அவளை தள்ளிவிட்டு வெளியே போகப் போனான்.. ஆராத்யா அவன் சட்டைக் காலரை பிடித்திழுத்து நிறுத்தினாள்..
“பிரவீண் ஒரு இம்பார்ட்டென்ட் பேமிலி மெம்பரை இப்போது உங்களுக்கு இன்ட்ரடியூஸ் செய்ய போகிறேன்.. பேசுறீங்களா..?”
“யாரா.. அவர் எனக்கு ரொம்ப முக்கியமானவர் என் மாமா பையன்.. என் அத்தான்..” அந்த அத்தானை ஆர்யனின் கண்களை சந்தித்தபடி காதலாக உச்சரித்தாள்..
ஆர்யனின் கண்களில் கோடி மின்னல்கள் ஒளிர்ந்தன..
“அத்தான் என் அத்தை பையன்.. உங்களிடம் பேச வேண்டுமாம்..” போனை நீட்டினாள்,
நான் ஏன் பேச வேண்டும்.. ஆர்யன் குழப்பத்துடன் போனை வாங்கி காதில் வைத்து ஹலோ சொன்னான்..
எதிர்ப்புறம் பிரவீண் மடைதிறந்த வெள்ளமாய் அமெரிக்க ஆங்கிலத்தில் அருவியாய் கொட்டிக் கொண்டிருந்தான்.. தன்னை, தன் குடும்பத்தை, தன் படிப்பை, வேலையை, அமெரிக்க வாழ்வை அவன் பேசப் பேச ஆர்யன் முகம் இறுகி கோபச் சிவப்பேறியது..
“ஏய் லூசாடி இவன்.. அவன் பாட்டுக்கு வாய்க்கு வந்ததை பீட்டர் விட்டுட்டுக்கிட்டு இருக்கிறான்..” போனை திருப்பி மறைத்துக் கொண்டு மெல்லிய குரலில் கேட்டான்..
“என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறானான்னு அவங்கிட்ட கேளுங்க..”
“என்னது..? கொன்னுடுவேன்டி உன்னை..” ஆர்யன் அவள் கழுத்தை நெரிக்க வர,
“ஐய்யோ சும்மா கேளுங்களேன்..” சிணுங்கினாள்..
“ஹலோ மிஸ்டர் ப்ளீஸ் ஸ்டாப் எ மினிட்.. உங்களுக்கு எங்கள் ஆராத்யாவை மேரேஜ் பண்ணிக்கிற ஐடியா இருக்கிறதா..?” ஆர்யன் இதைக் கேட்கும் போது ஆராத்யாவின் தோள் சுற்றி இழுத்து அவள் உடல் வலிக்கும்படி தன்னோடு சேர்த்து இறுக்கிக் கொண்டான்..
பிரவீண் பக்கம் மயான அமைதியானது.. ஒரு முழு நிமிடம் கழிந்த பிறகு அவன் குரல் எதிர்புறம் கேட்டது.. அது அழுகையை, பயத்தை, பேராபத்தை பிரதிபலித்தது.. பக்கா தமிழில் இருந்தது.. அமெரிக்க மென்மையும், மேன்மையும் அதில் இல்லை..




“ஏன் சார் நான் உங்களுக்கு என்ன பாவம் பண்ணினேன்..? என்னை ஏன் இப்படி மாட்டி விடப் பார்க்குறீங்க..? பொண்ணா சார் அவ..? எல்லா ஆம்பளையும் ஒரு அடக்கமான பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைப்பான்.. இவள் நம்மளை பூமிக்குள்ளேயே அடக்கம் பண்ற டைப் சார்.. புருவத்தை முறுக்கி ஒரு பார்வை பார்ப்பாள் பாருங்க.. எனக்கு ஈரக்குலையே நடுங்கும்.. மாமா பொண்ணாப் போயிட்டாளேன்னு இவள் கூடவெல்லாம் நான் டச் வச்சிட்டு இருக்கிறேன்.. நீங்க அவள் கூடப் போய் என்னை கல்யாணம், கில்யாணம்னு சேர்த்து பேசி.. சார் ப்ளீஸ் போனை வச்சிடுங்க.. எனக்கு வயித்தைக் கலக்குது.. நான் பாத்ரூம் போகனும்..” போன் கட்டானது..
ஆர்யன் போனை கீழே வைத்து விட்டு வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரி சிரியென சிரித்தான்..
“அடிப்பாவி அவனை இந்த மிரட்டு மிரட்டி வச்சிருக்கிறியே.. உன் பேரைச் சொன்னாலே அவனுக்கு ஊச்சா வருது.. அப்படி என்னடி பண்ணின..?”
“அவனுக்கு மனசில பெரிய ஹீரோன்னு நினைப்பு.. ஒரு நாள் இந்தியா வந்தப்போ கிச்சனில் என்கிட்ட வழிஞ்சிட்டு நின்னான்.. கரண்டிக் காம்பை அடுப்பில் வைத்து ரெண்டு கையிலயும் கோடிழுத்து விட்டுட்டேன்.. வீட்டில் யாரிடமும் ஒண்ணும் சொல்லவும் முடியலை சமையல் பழகினேன் சூடு பட்டுடுச்சின்னு பீலா விட்டுக்கிட்டு திரிஞ்சான்.. அதில் இருந்து என் பக்கமே வரமாட்டான்.. எப்போதாவது போனில் பேசுவதோடு சரி.. அவன் கூடெல்லாம் அப்பா எனக்கு கல்யாணம் பேசியிருக்க மாட்டார்னு எனக்குத் தெரியும்.. ஏன்னா அவனை அப்பாவுக்கே பிடிக்காது.. அது அப்பா சும்மா உங்களையெல்லாம் மிரட்டுவதற்காக சொன்னது..”
“அப்பா.. எவ்வளவு பெரிய பாரம் இறங்கிடுச்சு..?” ஆர்யன் நெஞ்சில் கைவைத்து முகம் மலர்ந்த புன்னகையோடு ஆராத்யாவின் தோளில் முகம் புதைத்த போது.. வெளியே திரும்ப பரபரப்பு கேட்க, இருவரும் விளக்குடன் வெளியே வந்தனர்..
சொர்ணாவின் கையில் குத்துவிளக்கை கொடுத்து மறுவீட்டழைப்பிற்கு அவளை மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்ப மண்டப வாயிலுக்கு வந்த போது, மாதவனும் அவர் தோள்களைப் பற்றியபடி மனோரமாவும் பைக்கில் வந்து இறங்கினர்..




“நம்ம வீட்டுப் பொண்ணு புகுந்த வீடு போகும் போது கையில் ஒற்றை விளக்கு வேண்டாம் மச்சான்.. இதோ இந்த விளக்கையும் சேர்த்து இரட்டையாக மங்களகரமாக கொண்டு போகட்டும்..” மாதவன் தாங்கள் கொண்டு வந்திருந்த குத்துவிளக்கையும் சொர்ணா கையில் கொடுக்க, குடும்பத்தினர் அனைவரும் மாதவனின் மாற்றத்தில் மனம் நிறைந்தனர்..
சதுரகிரி மாதவனின் கைபிடித்து தன் அருகே அழைத்துக் கொண்டார்.
மத்தாப்பூவாய் முகம் ஒளிர நின்ற ஆராத்யாவின் தோளில் தன் தோளில் இடித்த ஆர்யன்.. “ஏய் என்னடி அப்படியே அசையாமல் நிற்கிறாய்..?” என்றான்..
“கனவில் இருக்கிறேன்..”
“கனவா..? என்ன கனவு..?”
“நம் கல்யாணக் கனவு.. என் மனதில் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது..” உள்ளார்ந்து வந்த ஆராத்யாவின் கனாமொழி ஆர்யனையும் தொற்றிக் கொள்ள அவன் அவள் கையோடு தன் கையை பிணைத்துக் கொண்டான்..

– நிறைவு –

What’s your Reaction?
+1
7
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!