Serial Stories thanga thamarai malare தங்க தாமரை மலரே

தங்க தாமரை மலரே – 45 (நிறைவு)

45

நிகிதா தனது இடத்தில் இருந்து எழுந்து கொண்டாள் . கர்வமான ஒரு புன்னகையோடு மேடையை நோக்கி நடந்து வரத் துவங்கினாள் . கமலினி அவசரமாக விஸ்வேஸ்வரனை பார்க்க அவனும் முகம் நிறைந்த புன்னகையுடன் மேடைக்கு வந்து கொண்டிருந்தான் . இடைப்பட்ட ஒரு இடத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டு ஒருவர் கையை ஒருவர் பற்றிக்கொண்டு மேடை ஏறினர் .கமலினிக்கு படபடப்பாக வந்தது. இ… இது நடந்து விடுமா…?  நான் விஷ்வாவை இழந்து விடுவேனா …?  அவள் மனம் கூச்சலிட்டது.

” நிகிதாவை எங்கே ? ”  பின்னால் ராஜசுலோச்சனா பாரிஜாதத்திடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

” நிகிதாவுடனா உங்கள் மகனுக்கு திருமண நிச்சயம் செய்யப் போகிறீர்கள்  ? ” மேடையின் கீழே இருப்பவர்களுக்கு கேட்காமல் மெல்லிய குரலில் ஆனால் அழுத்தமாக ராஜசுலோசனா விடம் கேட்டாள்.




” ஏன் அதனால் உனக்கு என்ன ? ” 

” அவர்கள் இருவருக்கும் பொருத்தம் கிடையாது. இதுவே சரியான முடிவு இல்லை ” 

” அதனை அவர்கள் இருவரும் தான் முடிவு செய்ய வேண்டும் .  நீ அல்ல…” 

” அம்மா ப்ளீஸ் சொன்னால் கேளுங்கள்.  இவர்கள் விஷயம் எனக்கு முன்பே தெரியும் .இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க நினைப்பது நிச்சயம் சரி வராது . “

வெளித் தெரியாமல் நடந்து கொண்டிருந்த இந்த வாக்குவாதத்தின் இடையே விஸ்வேஸ்வரனும் நிகிதாவும் வந்தனர்.

” என்னம்மா என்ன பிரச்சனை ? ” விஸ்வேஸ்வரனின் கேள்வி அன்னைக்கு .

” உங்கள் திருமணம் சரியானது கிடையாதாம். இவள் சொல்கிறாள் ” 

” அதுதான் மிகச் சரியானது என்று மேடம் ஒரு காலத்தில் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதனை மறந்து விட்டார்களோ ? ” 

” அது ….நான் அப்போது உங்கள் வியாபாரத்தை நினைத்து சொன்னேன் .இப்போது சொல்கிறேன். நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது .அது சரியாக வராது. நிகிதா நீங்களே சொல்லுங்கள். இது உங்களுக்கே நன்றாக தெரியும் தானே ? ” 

” வியாபாரம் முக்கியம் என்று அப்பா சொல்கிறாரே… நான் என்ன செய்யட்டும் கமலினி  ? ” 

” ஐயோ அப்பாவிற்காகவா திருமணம் ? இல்லை இது தப்பு . நம் வாழ்க்கைக்கான முடிவை எப்போதும் நாம்தான் எடுக்க வேண்டும்  .உங்கள் முடிவை மாற்றிக் கொள்ளுங்கள் ” 

” இதனை நீங்கள் சொல்கிறீர்களா ? ” நிகிதா விசமமாக கேட்க கமலினி திகைத்தாள் .

” என் மகனை நான் பத்து மாதம் சுமந்து பெற்றிருக்கிறேன் .இத்தனை வருடங்கள் வளர்த்திருக்கிறேன் . அவனது திருமண முடிவை எடுக்கும் உரிமை எனக்கு உண்டு ” 




” இல்லை .அவரவர் வாழ்வு அவரவர் உரிமைதான். எனக்கு என் வாழ்வு வேண்டும் ” கமறலான குரலில் பேசியவள் அருகில் நின்ற விஸ்வேஸ்வரனின் கோட்டின் இரு முனைகளையும் அழுந்த பற்றி இழுத்தபடி அவன் மார்பில் சாய்ந்தாள் .

” என்னை விட்டுட்டு இன்னொருத்தியை கல்யாணம் பண்ணிடுவியாடா நீ ? கொன்னுடுவேன் ” 

” வேலாயுதம் அண்ணா குடும்பத்தினரை நான் உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டியதில்லை .நமது நகரில் குறிப்பிடப்படும் தொழிலதிபர் . எங்கள் தூரத்து உறவினர் .அவரது மகள் கமலினியை எங்கள் மகன் விஸ்வேஸ்வரனுக்கு மணம் முடிக்க இங்கே நிச்சயம் செய்ய இருக்கிறோம் ” 

காதில் விழுந்த ராஜசுலோச்சனாவின் குரலை நம்ப முடியாமல் கமலினி கேட்டிருக்க அந்த ஹால் முழுவதும் படபடவென உற்சாக கைதட்டல்கள் எழுந்தன . 

விஸ்வேஸ்வரன் – கமலினியின் திருமண நிச்சயதார்த்தம் மிக இனிமையாக நடந்தேறியது .

” நல்லவேளை பிழைச்சேன்பா ” பெருமூச்சோடு வந்தான் மணிகண்டன் .

” ஏன் அப்படி சொல்கிறீர்கள் மணிகண்டன் ? ” 

” சும்மா நாம் கல்யாணம் செய்து கொள்வதாக சொல்ல வேண்டுமென்று கமலினி என்னிடம் கேட்டுக் கொண்டாள் .சும்மா சொன்னாலும் ஒவ்வொரு முறை சொல்லும் போதும் மனசு படக்கு படக்குன்னு அடிச்சுக்கும்.ஐய்யோ இது உண்மையாயிடுமோன்னு …” 

” ஆனால் …முன்பு உங்களுக்கு நிச்சயமாயிருந்த்துதானே ? அப்போதெல்லாம் பயமில்லையா ? ” இந்த விபரம் விஸ்வேஸ்வரன் நிச்சயம் தெரிந்து கொண்டே ஆக வேண்டியிருந்த்து.

” அது சும்மா எங்கள் அப்பாவிற்கான நன்றிக்கடனென ஒரு உணர்ச்சி்வேகத்தில் மணிகண்டனின் அப்பா பேசி வைத்தது . நான் அப்போதிருந்து அதனை மறுத்துக் கொண்டே இருந்தேன் .அந்த ஆரம்ப பேச்சிற்கு பின்பே நாங்கள் எல்லோருமே அதனை பற்றி யோசிக்க பிடிக்காமலேயே எங்களுக்குள் உழன்று கொண்டிருந்தோம் ” வெற்றிவேலன் விளக்கினான் .

” கமலினி குடும்பத்திடம் பட்ட நன்றிக்கடனெனும் எண்ணம் எனக்குள் .ஏற்கெனவே தொழிலில் நொந்திருக்கும் அப்பாவை மறுத்து  மேலும் வருந்த விடக் கூடாதெனும் எண்ணம் கமலினியுனுள் .ஆக நாங்கள் இருவருமே பொருந்தாதென்று தெரிந்த பின்னும் இந்த வாழ்வை மறுக்க முடியாமல் விழித்துக் கொண்டிருந்தோம் . அப்போதுதான் விஷ்வா சார் எனக்கு ஆபத்பாந்தவனாக வந்தார் .” 

” உங்களை உச்சிப்பிள்ளையார் கோவிலில் வைத்து பார்த்த நாளை என்னால் மறக்கமுடியாது விஷ்வா .காதலை பற்றி அறியாத எனக்கு காதலை அன்று தெரியப்படுத்தினீர்கள் 

. உங்கள் பேச்சு , அசைவு ஒவ்வொன்றிலும் கமலினியின் மேல் உள்ள காதலை உணர்ந்தேன்.என் சிறு வயது தோழிக்கேற்ற துணைவர் கிடைத்து விட்டாரென மிக மகிழ்ந்தேன் . குழம்பி நின்ற கமலினியை சமாதானம் செய்து உங்களை ஏற்றுக்கொள்ள சொன்னேன் .” 




” ஓ …அதுதான் அன்றைய உங்களது தோள் தட்டலும் , கமலினியின் க்ரேட் மேன் புகழாரமுமா …?” விஸ்வேஸ்வரன் புள்ளி மாறாமல் ஞாபகம் வைத்து கேட்க மணிகண்டன் புன்னகைத்தான் .

” அதேதான் சார் .அன்றே நாங்கள் எங்கள் முட்டாள்தனமான திருமண முடிவை துறந்து விட்டுத்தான் வீடு திரும்பினோம் .மறுநாளே உங்களிடம் மனம் விட்டு பேசும்படி கமலினியை சொல்லி அனுப்பினேன் ” 

” ஆனால் மறுநாள் விடிகாலையே இவர் அப்பாவை ஐஸ் வைத்துக் கொண்டு எங்கள் வீடு வந்து நின்றார்.எனக்கு கொஞ்சம் கோபம்.அப்பா அப்படி மாறக்கூடியவரா ?எனும் வருத்தம் .இவரை விரட்டினேன் ” 

” பிறகும் எங்களுக்கென ஒதுக்கிக் கொள்ள முடியாதபடி எங்கள் நேரங்களில் அண்ணியின் வாழ்க்கை இடை வந்த்து.

அவர்களது மறு வாழ்விற்காக கமலினி என்னுடன் நிறைய போராடினாள். இதனால் எங்களை பற்றிய சிந்தனைகள் பின் போனது ” விஸ்வேஸ்வரனின் பேச்சை கமலினி தலையசைத்து மறுத்தாள்.

” இல்லை விஸ்வா நான் அப்போதே உங்களை மனதில் இருத்திவிட்டேன் .பாரிஜாதம் அக்காவின் வாழ்வு அமைந்த பிறகுதான் நம் வாழ்வை சிந்திக்க வேண்டுமென்றே உங்களிடம் பிடி கொடுக்காமல் இருந்தேன் ” 

” இதனை நானும் ஊகித்தேன் .ஆனால் அண்ணியின் திருமண முடிவிற்கு பின்பும் ஏன் ஒதுங்கிப் போனாய் கமலினி ? ” 

” அதற்கு காரணம் நான் ” ராஜசுலோச்சனா பேச்சிற்கிடையே வந்தார்

” என் மருமகளின் வாழ்விற்கென ஆதங்கமும் , அவசரமுமாக என்னிடம் பேசிய இந்தப் பெண் என்னை வசீகரித்தாள்

. முன்பே என் மகன் இவள் பெயரையே  ஜெபித்ததால் இவளை  பற்றிய விபரங்களை சேகரித்து வைத்திருந்தேன். இவளுக்கு ஒரு பரீட்சை வைக்க விரும்பினேன் .அதனால் நான் தான் பாரிஜாத த்தின்  வாழ்வா ? உன் வாழ்வா ? எனும் தராசுத் தட்டுகளை  இவள் முன் வைத்தேன். இவள் எளிதாக தன் தட்டை தாழ்த்திக் கொண்டு பாரிஜாதத்திற்கு வாழ்வளித்தாள் .இதனால்  என் மதிப்பில் ஏறினாலும் எனக்குள் இவள் மேல் சிறு நெருடல் .அதனை போக்குவதற்காக தான் இத்தனை ஏற்பாடுகள் …” 

” ஏன்  அம்மா ? ” 

” அத்தை என்று கூப்பிடு ” செல்லமாக அதட்டியவர் பாசமாக அவள் தலையை வருடினார்.

” எனது வாழ்வில் நான் கற்றுக்கொண்ட  பாடம் ஒரு பெண் எதற்காகவும் யாருக்காகவும் தன் மனம் கவர்ந்த வாழ்க்கையை விட்டுத்தரக்கூடாது .இதனைத்தான் நான் பாரிஜாதம் விஷயத்திலும் செயல்படுத்தினேன் .அதனையே உன்னிடமும் எதிர்பார்த்தேன் . அது எப்படி என்வாழ்க்கையை நீங்கள் முடிவு செய்யலாம் ?  என்று என்னை பிடித்து உலுக்குவாய் என எதிர்பார்த்தேன்.ஆனால் நீயோ தியாகச்செம்மலாக உன்னை நினைத்துக் கொண்டு தடுமாறிக் கொண்டிருந்தாய். பெண் என்றாலே யாருக்காகவாவது தன் வாழ்க்கையை விட்டுக் கொடுக்க வேண்டுமா ?  அது கூடாது. உன் வாழ்க்கையை … உன்னை… நீ உணர வேண்டும் என்றுதான் இன்று வரை உன்னை பதட்டத்திலேயே வைத்திருந்தேன். அனைவரிடமும் உனக்கு இது எதிர்பாராத சர்ப்ரைஸ் என்றும் மௌனம் காக்குமாறும்  சொல்லி வைத்திருந்தேன் . போதும்மா பெண்களாகிய நாம் எப்போதும் யாருக்காகவாவது நம்மை தியாகம்  செய்து கொண்டே இருப்பதை நிறுத்திக் கொள்வோம் . நமக்காக நாம் வாழ தூங்குவோம்” ராஜசுலோசனாவின் பேச்சை அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.




” உங்களிடம் இருந்து நேராக என்னிடம் தான் வந்து நின்றாள். மீண்டும் நான் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு …எனக்கு ஒரு வகையில் விஷ்வாவையும் கமலினியையும் பார்த்தால்  சுவாரசியமாக இருந்தது .எப்படியும் இவர்களால் பிரிய முடியாது என்று தோன்றிக்கொண்டே இருந்தது .அதனால் ஏதோ விளையாட்டுப் போல இவர்கள் சொல்வதை செய்து கொண்டிருந்தேன் ”  மணிகண்டன் பொங்கும் சிரிப்புடன் தன் விளக்கம் சொன்னான்.

”  நானும் அப்படித்தான் . நிகிதா கையை உயர்த்தினாள் . ” எல்லாம் விஸ்வாவிற்காகத்தான் .வெறும் பேச்சு மட்டும்தான் .ஏதாவது ஆக்சன் வந்த்தோ அங்கிருந்து ஓடும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன் என்ற எச்சரிக்கையோடுதான் வந்தேன் .கமலினி நல்லவேளை சரியான நேரத்தில் வாயை திறந்து என்னைக் காப்பாற்றினாய் ” 

” இந்த விசயம் தெரியாமல் வெற்றியும் , விஷ்வாவும் என்னை மிரட்டிய மிரட்டல் இருக்கிறதே ..ஐய்யோ .முதலிலேயே விஷ்வா எனக்கு துபாயில் வேலை வாங்கிக்கொடுத்து என்னை அங்கே பேக் செய்ய நினைத்தார். நான் மறுத்து விட்டேன். இப்போதும் மச்சானும் , மாப்பிள்ளையுமாக  ஒழுங்காக உண்மையைச் சொல் என்று கழுத்தைப் பிடித்து இறுக்கி….”  மணிகண்டன்  கழுத்தை தடவிக்கொண்டான். அனைவரும் சிரித்தனர்.

” மணிகண்டனை திருமணம் செய்யப் போவதில்லை என்று கமலினி சிறிது நாட்களுக்கு முன்பே என்னிடம் சொல்லி சொல்லிவிட்டாள். இப்போது மீண்டும் அவனையே திருமணம் செய்தால் என்ன என்கிறாள்்.. காரணம் கேட்டால் எதையோ மறைக்கிறாள். அப்பாவும் விஸ்வாவைப் பற்றி அடிக்கடி பேசி அவரை கமலினிக்கு மணம் முடிக்கலாமா ? என யோசனை கேட்கிறார் .என் தங்கையின் மனதை உறுத்திக் கொண்டிருக்கும் பிரச்சனை என்னவென்று தெரிந்து கொள்ளவே நான் இங்கே கிளம்பி வந்தேன். இப்போது அவளது வாழ்வு சுபமாக முடிந்தது ”  வெற்றி வேலன் தன் பக்க விளக்கத்தை கொடுத்தான்.

” இக்கட்டு என்று வரவும் உன் காதல் வெடித்து வந்து தன்னை வெளிக்காட்டிக் கொண்டது. ” பாரிஜாதம் கிளுக்கி சிரித்தாள்.

தன்னை சுற்றி இருக்கும் அனைவரும் தனக்காகவே யோசித்ததை நெகிழ்வாய் உணர்ந்தாள் கமலினி. இது போதுமே அவள் மனம் நிறைவுற்றது .கண்கள் காதலாய் பொழிந்து விஸ்வேஸ்வரனை நோக்கின. உடனடி பதில் பார்வை அவனிடமும் .மாறனின் கணைகள் இருவருக்கிடையேயும் சளைக்காமல் பாய்ந்தன.

” எல்லாவற்றையும் மனதிற்குள் மறைத்து வைத்து என்னை தவிக்க விடுவீர்களா ? ” கிடைத்த முதல் தனிமையில் விஸ்வேஸ்வரனின் மார்பில் செல்லமாக குத்தி ஊடினாள் கமலினி.

” தவிக்க வைத்ததெல்லாம் நீதானேடி ? நிகிதா ,  மணிகண்டன் ,அண்ணி சந்தானபாரதி கடைசியாக அம்மா என்று நாம் காதலுக்குத்தான் எத்தனை இடைஞ்சல்கள் ? ” 

” இவர்கள் எல்லோருமே நம் நலவிரும்பிகள் விஷ்வா. இவர்களால் தான் நாம் இன்று இணைந்து இருக்கிறோம் ” 




” உண்மைதான். அடுத்த வாரம் திருவரங்கம் கோவிலில் லிங்கத்திற்கு நான் செய்த தங்கக் கவசத்தை போர்த்த போகிறார்கள் .இந்த விழா நடக்கும் முன்பே நம் வீட்டுப் பிரச்சினைகள் முடிந்துவிட வேண்டும் என்று அந்த சிவனிடம் வேண்டி கொண்டேன். அந்த வேண்டுதல் நிறைவேறி விட்டது .” சொன்னபடி விஸ்வேஸ்வரன் கமலினியை இழுத்து தழுவிக் கொண்டான்.

” இனி இந்த தங்கத் தாமரை மலர் எனக்கு மட்டும்தான் ” கர்வமாக அறிவித்தான்.

அந்த கமலத்தின் முகம் செம்மை வாங்கி செம்பொன்னாய் மின்னியது. அப்போது கமலினி உண்மையாகவே தங்கத் தாமரை மலராகவே தோற்றமளித்தாள். அந்த மலர் விஸ்வேஸ்வர தடாகத்தில் மிதக்கத் தொடங்கியது.

                                                                      – நிறைவு – 

What’s your Reaction?
+1
39
+1
13
+1
1
+1
2
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

2 Comments
Inline Feedbacks
View all comments
Priyaganeshan
Priyaganeshan
4 years ago

Nice story sis All the best

2
1
POP POP
POP POP
4 years ago
2
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!