pacha malai poovu Serial Stories பச்சைமலை பூவு

பச்சை மலை பூவு – 25

25

” இனி இந்த பேச்சை எடுத்தால் பல்லைத் தட்டிக் கையில் கொடுத்து விடுவேன் ” மிக மெலிதாக கசிந்து வந்து தேவயானியின் காதில் விழுந்தது சுந்தரேசனின் குரல் .மூடப்பட்டிருந்த அவர்கள் அறைக்குள்  இருந்து வந்த குரல் என்பதால் உள்ளே மிக அதிக சத்தத்துடன்தான் அவன் பேசிக் கொண்டு இருக்கவேண்டும். அறையினுள் சுனந்தாவும் இருந்தாள்.




அண்ணனுக்கும் அண்ணிக்கும் இடையே சண்டையா ?  தேவயானியால் நம்பமுடியவில்லை .அவர்கள் திருமணம் முடிந்த இந்த எட்டு வருடங்களாக ஒரு முறைகூட இருவருக்கும் சண்டை வந்து அவள் பார்த்ததில்லை. எதற்கு பிரச்சனை என்று நினைத்தோ என்னவோ சுந்தரேசன் பெரும்பாலும் மனைவிக்கு அடங்கியே போய்  விடுவான் .அவர்களுக்கிடையே பெரும்பான்மையான நேரங்களில் சுனந்தாவின் குரலே உயர்ந்து ஒலிக்கும்.

இப்போது அதிசயமாக உயர்ந்து கேட்கும் அண்ணனின் குரலையும் , சுவடே இல்லாமல் இருக்கும் அண்ணியின் குரலையும் ஆச்சரியமாக கவனித்தபடி அடுப்படியில் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள் தேவயானி. அருகே இருந்த அம்மாவை திரும்பி பார்க்க சொர்ணம் நன்றாக காதுகளில் விழுந்தும்

 எதையும் கேட்ட அடையாளம் முகத்தில்  இல்லாமல் வெங்காயம் உரித்துக் கொண்டிருந்தாள்.

மூக்கை உறிஞ்சியபடி அடுப்படிக்குள் நுழைந்தாள் சுனந்தா. அரிசியை களைந்து அடுப்பில் ஏற்றினாள் .ஊற வைத்த பருப்பை குக்கரில் வைத்துவிட்டு , காய்கறிகளை வெட்டத் துவங்கினாள் .அண்ணியின் சிவந்த கண்களையும் அடிக்கடி மூக்கை உறிஞ்சிக்கொண்டிருக்கும்  தோற்றத்தையும் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே இருந்தாள தேவயானி .அண்ணி அழுகிறாளா என்ன ….என்ன விஷயமாக இருந்தாலும் இந்த கணத்தில் அண்ணிக்கு ஆறுதல் சொல்ல நினைத்தது அவள் உள்ளம்.




” என்னத்த …என் மூஞ்சில என்ன நாடகம் நடக்குது ? எதுக்கு அப்படி உர்ருன்னு பார்த்து தொலைகிறாய் ?  ஒழுங்காக வேலையை கவனி ”  தன்னை பார்த்துக் கொண்டிருந்த நாத்தனாரிடம் எரிந்து விழுந்தாள் சுனந்தா.

அம்மாவைப் போல் கண்டுகொள்ளாமல் இருந்திருக்க வேண்டும்… பாவப்பட்டு பார்த்தேன் பார்,  எனக்கு தேவைதான் அம்மாவை மனதிற்குள் மெச்சியபடி வேலையைத் தொடர்ந்தாள்.

அன்று மாலை பசுமைக்குடிலை  சுற்றி அவள் மெல்ல நடந்து கொண்டிருந்தபோது யுவராஜும் அவளுடன் வந்து சேர்ந்து கொண்டான் .இவன் ஒருத்தன் இலவச இணைப்பு போல் எப்போதும் கூடவே வந்து கொண்டு …உள்ளுக்குள் சலித்துக் கொண்டு வெளியே அவஸ்தையாய் ஒரு புன்னகை காட்டினாள்.

” தேவயானி நீயாவது உனது அண்ணனிடம் எடுத்துச் சொல்லலாம் இல்லையா ? ” 

” எதை சொல்ல வேண்டும் ? எனக்கு எந்த விபரமும் தெரியாதே ” 

” உன் அண்ணன் உன்னிடம் ஒன்றும் சொல்லவில்லையா ? ” 

” இல்லையே ” 

சிறிது யோசித்தவன் பிறகு அதே நிலையிலேயே தொடர்ந்தான் ” தேவயானி நான் வெளிநாடுகளில் எல்லாம் போய் பழகி வந்தவன் .அங்கே இருக்கும் தொழில் முறைகளை தெரிந்து கொண்டு வந்திருக்கிறேன்.அவர் சொல்லும் முறைகள்  மிக நன்றாக இருக்கும் நல்ல லாபத்தை தரும் என்று பொதுவாக நீ உன் அண்ணனிடம் பேசலாமே ” 

அது எப்படி என்னவென்று தெரியாமலேயே கண்ணை மூடிக்கொண்டு இவனுக்காக பேச சொல்கிறான் …யுவராஜின் கோரிக்கையை நம்பமுடியாமல் 

பார்த்தவள் தலையசைத்து மறுத்தாள்” 

என்னவென்று தெரியாமலேயே பேச சொல்கிறீர்களா ?  அது எப்படி முடியும் ? ” 

” ஏன் முடியாது ? யோசனைகள் சொல்வது நான் இல்லையா ? இந்த வீட்டு மாப்பிள்ளை .உன் வருங்கால கணவன் .வெளிநாடு எல்லாம் போய் வாழ்ந்து வந்தவன். எனக்கு தெரியாத ஒன்று இருக்குமா ? 

நான் லாபம் இல்லாத ஒன்றை சொல்வேனா ? ” யுவராஜ் ரசித்து பேசிக்கொண்டிருந்தான்.

எப்பா …எவ்வளவு கர்வம் என்று நினைத்துக் கொண்டவள் தலையை ஆட்டி மறுத்தாள்.

” இல்லை யுவராஜ் .அப்படி எனக்கு முழுதாக தெரியாத ஒரு விஷயத்தை பற்றி அண்ணனிடம் ஒப்புதலாக என்னால் பேச முடியாது .உங்கள் ஐடியாக்களை என்னிடம் சொல்ல முடிந்தால் சொல்லுங்கள் .நான் அதில் இருக்கும் நியாயங்களை அண்ணனிடம் பேசுகிறேன் ” 

” அது …” என்றுவிட்டு யுவராஜ் சொல்லலாமா வேண்டாமா என்பதுபோன்ற யோசனையில் ஆழ்ந்து போனான் .இருவரும் சிறிது நேரம் மௌனமாக நடந்துகொண்டிருக்க சுற்றிலும் பார்த்துக் கொண்டே வந்த தேவயானியின் பார்வையில் மருதாணி பட்டாள்.




இவள் அங்கே என்ன செய்கிறாள் …? மருதாணி பார்வையை கூர்மையாக்கி பார்க்க புதர் போல் அடர்ந்திருந்த பிச்சி கொடியின் பின்னால் மருதாணி லேசாக மறைந்தாற்  போல் அமர்ந்திருந்தாள்.

” ஒரு சுற்றுலா விடுதிக்கு என இருக்கும் அடிப்படை வசதிகளை தான் நான் …” என்று யுவராஜ் ஏதோ பேசிக் கொண்டிருக்க , தேவயானி அவனைக் கவனிக்காமல் மெல்ல மருதாணியை நோக்கி நடந்தாள்.




தேவயானிக்கு முதுகை காட்டிக்கொண்டு அமர்ந்திருந்த மருதாணியை அருகில் நெருங்கியதும் புரிந்துபோனது …அவள் கையில் செல்போன் வைத்துக்கொண்டு யாரிடமோ மிகவும் தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டு இருந்தாள் .தேவயானி கவனித்துப் பார்க்க அவள் கையில் இருந்தது மிகவும் உயர்தர ஆண்ட்ராய்டு போன் .பேசிக் மாடலுடன் கூடிய சாதாரண போன் ஒன்று தான் மருதாணியிடம் உண்டு .இந்த போன் அவளுக்கு எப்படி கிடைத்தது ? 

தேவயானி பட்டென்று அவள் தோளில் தட்டினாள் .திடுக்கிட்டு திரும்பிய மருதாணியின் முகத்தில் அதிர்ச்சி துல்லியமாக தெரிந்தது.

” இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் மருதாணி ? கையில் என்ன இது …யாருடைய போன்…? ” 

” அக்கா… வந்து…இ… இது …வந்து…”  திக்கி  திணறினாள மருதாணி.

” எவ்வளவு காஸ்ட்லியான போன் …” அவள் பின்னேயே வந்திருந்த யுவராஜ் மருதாணி கையில் இருந்த போனை பிடுங்கி   தன் கையில் வைத்து பார்த்தபடி சொன்னான்.

” நானே இந்த போனை வாங்குவதற்கு ஆசைப்பட்டு , விலையில்  யோசித்துக் கொண்டிருக்கிறேன் …இந்த குட்டி ஈசியாக இந்த போனை வைத்துக் கொண்டிருக்கிறாள். ஏய் குட்டி ஒழுங்காக உண்மையைச் சொல் இந்த போன் உனக்கு எப்படி கிடைத்தது  ? ” அதட்டினான்

மருதாணி திரு திருவென விழித்தாள் .அவள்  கண்கள் கலங்கின.

” யுவராஜ் போனை என்னிடம் கொடுங்கள். நான் விசாரிக்கிறேன். நீங்க போங்க ” தேவயானி அவனிடமிருந்த போனை வாங்கினாள்.

” அது எப்படி அப்படி விட்டு போக முடியும்  ? ஏய் உண்மையைச் சொல்லு. இந்த போனை அந்த ரிஷிதரன் தானே உனக்கு வாங்கிக் கொடுத்தான் ? ” 




இந்தக் கேள்வியில் தேவயானி அதிர்ச்சியடைய , மருதாணி தலைகுனிந்தாள்.

” பார்த்தாயா உன் அருமை மருதாணியின் லட்சணத்தை…? இவ்வளவு விலை உயர்ந்த போனை ஒருவன் சும்மா தூக்கி கொடுத்திருக்கவ மாட்டான். காரணம்  என்னவென்று நீயே கேளு ” 

தேவயான இன்னமும் விலகாத அதிர்ச்சியுடன் மருதாணியைப் பார்க்க அவள் குனிந்த தலையை நிமிரவேயில்லை.

” மருதாணி என் முகத்தை நிமிர்ந்து பார்த்து பதில் சொல் .இந்த போனை உனக்கு யார் வாங்கிக் கொடுத்தது  ? ” தேவயானி அதட்ட மருதாணி சட்டென்று அவள் கையில் இருந்த போனை பிடுங்கி கொண்டு தன் வீட்டை நோக்கி ஓடத் துவங்கினாள்.

” விடாதே அவளை பிடி ”  யுவராஜ் கத்தியபடி பின்னால் ஓட முயல தேவயானி அவன் கைப்பற்றி நிறுத்தினாள்.”  அவள் போகட்டும் நான் கொஞ்ச நேரம் கழித்து அவளிடம் விசாரிக்கிறேன். நீங்கள் இந்த பேச்சை விடுங்கள் ” 

” நன்றாக விசாரித்து  எனக்கு சொல் .அவர்கள் இருவரின் பழக்கம் எந்த அளவு இருக்கிறது என்று தெரியவில்லை. அந்த ரிஷிதரனை பற்றி உனக்கு தெரியும்தானே ?  அவன் இவளை ….” யுவராஜ் சொல்லிக்கொண்டே போக …

” போதும் நிறுத்துங்க ” கிட்டத்தட்ட  கத்தினாள்  தேவயானி.

” எந்த விஷயத்தையும் தீர விசாரிக்காமல் உங்கள் வாய்க்கு வந்ததை பேசவேண்டாம் .மருதாணி விஷயத்தில் இனியும் நீங்கள் எந்த பேச்சும் எந்த அனுமானமும் சொல்ல வேண்டாம் .அவளை நான் பார்த்துக் கொள்கிறேன் .தயவு செய்து நீங்கள் ஒதுங்கி நில்லுங்கள் ” 

” எனக்கென்ன… என்னவும் செய்யுங்கள்  ” யுவராஜ் போய்விட்டான் .தேவயானி 

யோசனையுடன் மெல்ல வீட்டை நோக்கி நடந்தாள்.

அன்று மாலை வழக்கமாக வரும் பாடத்திற்கு மருதாணி வரவில்லை .தேவயானி அவளது தாயிடம் சொல்லி விட்டாள் . ” சௌந்தரி அக்கா இன்றைக்கு முக்கியமான பாடம் .மருதாணியை சீக்கிரம் வரச் சொல்லுங்கள் ” 

அடுத்த பத்து நிமிடத்தில் கலங்கிய முகத்துடன் வந்தாள்  மருதாணி. ஒரு நிமிடம் அவள் முகத்தை உற்றுப் பார்த்த தேவயானி பிறகு வேறு எதுவும் பேசாமல் தனது பாடத்தை ஆரம்பித்தாள் .

சிறிது நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த யுவராஜ் பாடம் படித்துக் கொண்டிருந்த இவர்கள் இருவரையும் பார்த்தான். பிறகு வேகமாக உள்ளே போனான்.  ஐந்து நிமிடங்களில் உள்ளிருந்து சுந்தரேசனுக்கும் அவனுக்கும் ஏதோ வாக்குவாதம் போல் கேட்டது. தேவயானி வேகமாக எழுந்து உள்ளே போனாள் .

” வேண்டாம் மச்சான் .அது சரிவராது .வேறு பேச்சு பேசுங்கள் ”  உறுதியாக சுந்தரேசன் சொல்லிக்கொண்டிருக்க யுவராஜ் எகிறினான் .

” ஏன்….?  ஏன்… சரிவராது ? ” 

” தப்பான விஷயங்களை பின்பற்றி தொழில் பார்க்கும் எண்ணம் எனக்கு எப்போதும் கிடையாது ” 




” தப்பானவர்களை உங்கள் பக்கத்திலேயே வைத்துக் கொண்டு இருப்பீர்கள் .ஆனால் நான் தொழிலுக்காக ஒன்று செய்யச் சொன்னால் அதைத்தான் பெரிதாக குற்றம் சொல்வீர்கள்  “யுவராஜின் குறிப்பு காட்டிய பேச்சில் தேவயானி பதறினாள்.

மேலே பேச வேண்டாம் என்று யுவராஜுக்கு சைகை காட்ட , அதனை நன்றாக கவனித்தும் அறியாதவன் போல் திரும்பி கொண்டவன் “தப்பான விஷயம் செய்ய மாட்டேன் என்கிறீர்களே …அந்த ரிஷிதரன் எப்படிப்பட்டவன் என்று உங்களுக்கு தெரியும் தானே ? அவனை மாதக்கணக்கில் இங்கே தங்க வைத்து ராஜ உபசாரம் செய்து அனுப்பினீர்களே ? இதனை எந்த கணக்கில் சேர்ப்பது ? “

தேவயானி அயர்ந்தாள் .இவன் எதற்கு எதனை முடி போடுகிறான் ? ஏன் இவனது குறி எப்போதும் எந்த இடத்திலும் ரிஷிதரனை நோக்கியே இருக்கிறது ? 

” நன்றாக கேளுங்கள் அண்ணா .இதைத்தான் நானும் இவரிடம் சொல்லிக்கொண்டே இருந்தேன். யாரோ ஒரு விலாசம் தெரியாத மனிதனை கூட்டிக் கொண்டு வந்து இங்கே தங்கவைத்து பணிவிடை செய்வார்களாம் .அவனுடைய பின்னணி விசாரித்தால்  படு கண்றாவியாக இருக்கிறது .இதெல்லாம் சரியாம் .நாம் தொழிலுக்காக ஒன்று சொன்னால் மட்டும் ஆயிரத்தெட்டு நொட்டை பேசுகிறார்கள் ” புகைந்து கொண்டிருந்த அண்ணனின் மேல் எண்ணெய் ஊற்றினாள்  சுனந்தா.




” சுனந்தா உனக்கு எல்லாம் தெரிந்தது போல் பேசாதே.

சுதாகர் சார் குடும்பமே எங்களுடைய நீண்டநாள் கஸ்டமர்கள் .மிகவும் நியாயமானவர்கள் .தவறுகள் இல்லாதவர்கள் .ரிஷிதரன் வேண்டுமானால் கொஞ்சம் முன்னே பின்னே இருந்திருக்கலாம் .ஆனால் இங்கே தங்கியிருக்கும் வரை எங்கள் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு ஒழுக்கமானவராகத்தான் இருந்தார்  ” சுந்தரேசன் அடித்துப் பேசினான் .

” ஆகா அவ்வளவு ஒழுக்கமானவரா…?  உங்களுக்கு ஒன்று  தெரியுமா …உங்கள் வீட்டின் முன் அறையில்  படிக்கிறேன் என்று புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாளே ஒரு குட்டி,  அவளை இங்கே அழைத்து  அந்த ரிஷிதரனின் லட்சணத்தை கேளுங்கள். அதற்குப் பிறகு என்னிடம் பேச வாருங்கள் ” 

தேவயானி திடுக்கிட்டாள் .அவளுக்கு நன்றாக தெரியும் இந்த யுவராஜ் அவனுக்கு ஒரு தேவை என்றால் அடுத்தவர்களை எந்த விஷயத்திலும் மாட்டி  விடுவதற்கு தயங்க மாட்டான் என்று… இப்போது என்ன செய்வது… என்று தவித்தபடி நின்றிருந்தாள்.

” ஏய் குட்டி இங்கே வா ” வீட்டின் முன் அறையில் அமர்ந்திருந்த மருதாணியை அதட்டலாக அழைத்தான் யுவராஜ்.

” அவள் படித்துக் கொண்டிருக்கிறாள் .தேவையில்லாமல் அவளை எந்த பிரச்சனைக்கும் இழுக்காதீர்கள் யுவராஜ் “தேவயானி கண்டிப்பாக பேசினாள்.

” அவள் படிக்கும் லட்சணம் எனக்கு தெரியும் .போய் அவளை இங்கே கூட்டிவா  ” அதிகாரம் சுமந்து இருந்தது அவன் குரல்.

”  முடியாது …” அவனுக்கு குறையாத அதிகாரம் காட்டி நின்றாள் அவளும் . 




பற்களை அழுத்தி கடித்தவன் ” 

ஏய் குட்டி  ” கத்தி அழைத்தபடி தானே மருதாணியை அழைத்துவர நகர்ந்தான்.

” நில்லுங்க தம்பி ” அழுத்தமான குரலில் பேசினாள் சொர்ணம்.

” யாரைப் பற்றியும்… யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை தம்பி .எங்களுக்கு மருதாணியையும் தெரியும் .ரிஷிதரனையும் தெரியும். நீங்கள் உங்கள் வேலையை பற்றி மட்டுமே இங்கே பேசுங்கள் ” 

யுவராஜின் முகம் கன்றியது ” நான் இந்த வீட்டு மாப்பிள்ளை என்பதை நீங்கள் எல்லோரும் மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன் ” 

” இன்னமும் நீங்கள் இந்த வீட்டு மாப்பிள்ளை ஆகவில்லை என்பதை மறந்து விட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன் ” உடனடி பதில் கொடுத்த தேவயானி அண்ணனிடம் திரும்பினாள்.

“அண்ணா உங்களுக்கும் இவருக்கும் என்ன பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது ? ” 

” நமது விடுதியை மேல் நாட்டு பாணியில் இவர் மாற்றப் போகிறாராம் .சிகரெட் …ட்ரிங்க்ஸ்.. பார்ட்டி ..டிஸ்கொதே…இப்படி ஏதேதோ சொல்கிறார் ” சுந்தரேசன் சொல்ல எல்லோருக்குமே அதிர்ச்சிதான்.

“சுந்தர் உன் அப்பா அவருடைய உயிரைக்கொடுத்து ஆரம்பித்த தொழில் இது .இதனை எதையாவது செய்து கெடுத்து விடாதே ” சொர்ணம் நடுங்கிய குரலுடன் இறைஞ்சலாய் மகனை பார்த்தாள்.

” அம்மா நான் அப்படி செய்வேனா ? தொழிலில் அதிக லாபத்தை நினைப்பேனே தவிர அதனை எந்த வழியில வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்று நினைப்பேனா ?  அப்பாவின் அரும்பாடு எனக்கு தெரியாதா  ? ” சுந்தரேசன் அம்மாவின் கைகளை ஆதரவாக பிடித்துக்கொள்ள , யுவராஜ் அவர்களை வெறித்தான். சுனந்தாவின் பக்கம் திரும்ப அவள் முகத்தில் இயலாமையும் சோகமும் படர்ந்திருந்தன.

” உங்களைப் போல் ஒரு முட்டாள் குடும்பத்தை நான் பார்த்தது இல்லை .கண் முன்னால் லட்சம் லட்சமாக பணத்தை அள்ள வழி இருக்கிறது .அதை விட்டுவிட்டு பக்கத்து பள்ளத்தில் தான் விழுவேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறீர்களே… உங்களை எல்லாம் என்ன செய்ய ? ” 

” ஒன்றும் செய்ய வேண்டாம் மச்சான். நான் உங்களிடம் ஒன்று கேட்டுக்கொள்கிறேன் .நாம் இருவரும் சேர்ந்து தொழில் தொடங்குவதாக இருந்த பேச்சை கொஞ்ச நாட்களுக்கு ஒத்தி போடுவோமா ? எனக்கு இந்த விஷயத்தில் நிறைய யோசிக்க வேண்டியிருக்கிறது ” சுந்தரேசன் சொல்ல யுவராஜின் முகம் சிவந்தது.

” என்னைப் பார்த்தால் உங்களுக்கு கேனையன் மாதிரி தெரிகிறதா ? உங்களுடன் தொழில் தொடங்குவதற்காக நிறைய ஏற்பாடுகள் செய்து விட்டேன் .கோவாவில் இருக்கும் எனது நண்பர் ஒருவரின் உதவியுடன் இங்கே ஒரு பார் தொடங்குவதற்கான பேச்சுக்களை பேசி முடித்து விட்டேன் .அவர் அடுத்தவாரமே இங்கே வருவதாக இருக்கிறார் .இந்த நிலையில் நீங்கள்….” 

” சுனந்தா ”  சுந்தரேசனின் குரல் அதிர்வலைகளை அங்கு இருப்போரின் உடல்களில்  பரப்பியது ” இது என்னுடைய தொழில் .இதில் புதுவகை திட்டங்களை நான் தான் முடிவு செய்ய வேண்டும். நான் இங்கே சிறுவர்களுக்கான விளையாட்டு கருவிகளுடன் பூங்கா ஒன்றையும் , நீர் விளையாட்டு ஒன்றையும் ஏற்பாடு செய்யும் பேச்சுக்களில் இருக்கிறேன் .என்னுடைய தொழிலை நான் இப்படித்தான் முன்னேற்ற விரும்புகிறேன் .உன் அண்ணனிடம் இதையெல்லாம் எடுத்துச் சொல்லு …” யுவராஜ் பக்கம் கை காட்டி  சொல்லிவிட்டு வேகமாக வெளியில் சென்று விட்டான் சுந்தரேசன்.




சுனந்தாவும் யுவராஜும்  செய்வதறியாமல் நின்றுகொண்டிருக்க , சொர்ணமும் தேவயானியும் திருப்தியோடு அவரவர் இடத்திற்கு திரும்பினார்கள்.

யுவராஜுடனான தொழில் திட்டம் உடைவதால் , எங்கள் இருவருக்குமான  திருமண திட்டமும் உடைகிறதா …?நீரூற்று ஒன்று  தேவயானியின் உள்ளத்தில் உயரே உயரே என்று பீறிட்டு எழுந்து கொண்டிருந்தது.

ஏனோ அவளுக்கு இந்த விஷயத்தை உடனடியாக ரிஷிதரனுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று தோன்றியது .

அவன்தானே யுவராஜ் உனக்கு வேண்டாம் .சரிப்பட மாட்டான் என்று முதலிலிருந்தே கூறிக் கொண்டிருந்தவன் …

எப்படி… எங்கே , அவனைப் பார்ப்பது யோசித்தவளுக்கு அப்போதுதான் ஒன்று உறைத்தது.

அவளிடம் ரிஷிதரனை தொடர்பு கொள்ளக்கூடிய எந்த விபரங்களும் இல்லை. அவனுடைய தங்குமிட விலாசம் , போன் நம்பர் என எதுவுமே அவளிடம் கிடையாது .இவை எல்லாமே சுந்தரேசனிடம் இருக்கத்தான் செய்யும் .ஆனால் அதனை அவள் அண்ணனிடம் கேட்டுத் தானே பெற வேண்டும் …எப்படி என்ன சொல்லி கேட்பது ? அவள் யோசனையின் முடிவு அப்படி கேட்டு பெற்று அவனை சந்திக்கவோ பேசவோ செய்யத்தான் வேண்டுமா என்ற சந்தேகத்தில் வந்து நின்றது.




இரண்டு நாட்களுக்கு முந்தைய அவனுடைய கார் பயணம் வேறு அவளுடைய நினைவை நெருடியது .பொறுக்கி என்று அவனுக்கு ஒரு வசவை கொடுத்தவள் வேகமாக வீட்டை விட்டு வெளியேறி தனது வேகத்தை பசுமைகுடில் விடுதியை சுற்றி நடந்து தணிக்க முயன்றாள்.

நேரிலேயே போய் பார்த்து நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி நாலு கேள்வி கேட்டுவிட்டு வந்தால்தான் என்ன …அவனுடைய போன் நம்பரை விடுதியில் தங்குபவர்களின் விவரங்கள் இருக்கும் லெட்ஜரில் தேடி பார்க்கலாமா …தனக்குள்ளேயே பலவித யோசனைகளில் நடந்து கொண்டிருந்தாள் அவள்.

அப்போது மருதாணி அவர்கள் இருக்கும் வீட்டை விட்டு வெளியே வருவதை பார்த்தாள்.இங்கே பிரச்சனை என்றதும்  அதை சாக்கிட்டு பாதி பாடத்தில் டிமிக்கி கொடுத்துவிட்டு எழுந்து வந்து விட்டாள் பாரேன்,  இவளை …மருதாணியை அதட்டும் எண்ணத்துடன் வேகமாக அவளை நோக்கி நடந்தவள் அவள் செய்கையில்   அதிர்ந்தாள்.




வீட்டை விட்டு வேகமாக வெளியே வந்த மருதாணி வாயை கையால் பொத்தி இருந்தாள் .சுற்றுமுற்றும் அரக்கப்பரக்க பார்த்து விட்டு வேகமாக ஓடி ஓரமாக இருந்த ஒரு புதர் அருகே போய் வாந்தி எடுத்தாள் .மீண்டும் மீண்டும் குமட்டி ஓங்கரிப்போடு  வாந்தி எடுத்தாள் .பிறகு சுழன்ற தலையை பிடித்துக்கொண்டு தளர்ந்து கீழே குத்திட்டு உட்கார்ந்துவிட்டாள்.

முதலில் உடம்பிற்கு என்னவோ என்ற பதட்டத்துடன் அவளை அணுக வேகமாக  நடந்தவள் , ஏதோ மனதை நெருட நடையின் வேகத்தை குறைத்தாள் .சமீபத்திய மருதாணியின் நடவடிக்கைகளை மனதிற்குள் ஓட விட்டவள் மேலே நடக்க முடியாமல் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டாள் .

அவள் மனதில் சில நாள் கணக்குகளை போட்டாள். மருதாணியின் மாதாந்திர நாட்கள் அவளுக்கு தெரிந்தவைதான் .அந்த நாட்களில் மிகுந்த வலி இருப்பதாக தேவயானியிடம் வலிக்கான மூலிகை சாறு வாங்கி குடிப்பதை மருதாணி வழக்கமாக வைத்திருந்தாள். இதோ இந்த மாதம் அப்படி அவளுக்கு கசாயம் தயாரித்துக் கொடுத்த ஞாபகம் தேவயானிக்கு இல்லை.

கடவுளே …அப்படியென்றால்… துவண்டு கீழே கிடந்த மருதாணியை பார்த்தபடி தளர்ந்து அருகே கிடந்த சிறு கல் ஒன்றின் மேல் அமர்ந்துவிட்டாள் தேவயானி.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Kurinji
Kurinji
4 years ago

Yaaruppa intha velai paarthathu yuvaraj.enna kodumai ithu.

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!