Serial Stories uravu solla oruvan உறவு சொல்ல ஒருவன்  

உறவு சொல்ல ஒருவன் – 17

                                             17

கண்ணாடி ஜன்னல் வழியே எதிர்ப்புறம் விரையும் மரங்களை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் சத்யமித்ரா .மழை பொழிந்து கொண்டிருந்த்து .தெறித்த நீர்த்துளிகள் ஜன்னல் கண்ணாடிகளில் விதம் விதமான டிசைன்களை வரைந்து கொண்டிருந்த்து .அழகிய அந்த வடிவங்களை கவனிக்கும் மனநிலையில் சத்யமித்ரா இல்லை .

பொழிவதற்கு இந்த வானிற்கு இருக்கும் சுதந்திரம் எனக்கில்லையே ..என அவளது கண்கள் தத்தளித்துக்கொண்டிருந்த்து .

” எங்கேம்மா போகிறாய் …? “




அருகில் அமர்ந்த அந்த வயதான பெண் கேட்டாள் .

” மும்பை …” அந்தப்பெண்ணின் முகம் பார்க்காமல் பதிலளித்தாள் .

” என்னம்மா …தனியாகவா வந்திருக்கிறாய் …? ” சுற்றுமுற்றும் அவளுடன் வந்தவர்களை தேடியபடி அந்தப்பெண் கேட்க ….

ஏற்கெனவே எரிந்து கொண்டிருந்த சத்யமித்ராவின் உள்ளம் மேலும் எரிந்த்து .

” எனக்கு தலைவலிக்கிறது .கொஞ்சம் தூங்குகிறேன் ” கண்களை இறுக மூடி பின்னால் சாய்ந்துகொண்டாள் .

ரயில் அடுத்து நிற்கையிலோ …வேறு சிலர் ஏறி அமர்வதிலோ கவனம் கலையாது தன்னுள் மூழ்க தொடங்கினாள் .

கையில் நிற்காமல் எந்நேரமும் வீடு முழுவதும் ஓடிக்கொண்டிருக்கும் சாந்தனுவை கஷ்டப்பட்டு பிடித்து நிறுத்தி ….

” ப்ரின்ஸ் அம்மா ஒரு வேலையாக ஊருக்கு போக வேண்டியிருக்கிறது .நீ பாட்டியுடன் இருந்து கொள்வாய்தானே …? ” கேட்டாள் .

உதைத்து தள்ளிய பந்து உருண்டு தோட்டத்தினுள் போவதை பார்த்தபடி இருந்த சாந்தனு …

” ஓ.கேம்மா …போயிட்டு வாங்க .டாட்டா …பை ….” அவள் கைப்பிடியை பிடுங்கிக் கொண்டு பந்தின் பின்னால் போய்விட்டான் .

ஆக …குழந்தைகளின் உலகத்தினுள் வேடிக்கையும் , விளையாட்டும் நுழையும் போது அம்மா தேவையில்லாமல் போய்விடுகறாளா ….? ஒரு வேளை ப்ரின்ஸின் உண்மையான அம்மா இருந்திருந்தால் அவன் இப்படி போயிருப்பானா ..?

அபத்தமாக நினைத்துவிட்டு தன் தலையில் தானே கொட்டிக்கொண்டாள் .சை …குழந்தையை போய் இப்படி நினைத்தேனே …

பெட்டியை அடுக்கிவிட்டு டிரெயின் டிக்கெட்டை பர்சினுள் பத்திரப்படுத்தினாள் .இரவு ஒன்பது மணிக்கு  டிரெயின் .சாந்தனுவை எட்டு மணிக்கு தூங்க வைத்துவிட்டு கிளம்பவேண்டுமென நினைத்தாள் .

வீட்டில் யாரிடமும் சொல்லவேண்டாம் .எனது காரிலேயே போய் ஸ்டேசனில் இறங்கிக் கொள்ளலாமென வில்லியம்ஸ் சொல்லியிருந்தார் .கனத்த மனத்துடன் வீட்டை ஒரு முறை சுற்றி வந்தாள் .இனி இந்த வீட்டின் பக்கம் வர முடியாது .

தீடீரென பின்னால் வந்து மோதிய சாந்தனு ” அம்மா …இப்போவேவா போறீங்க …? ” என்றான் .

” இல்லை செல்லம் .அம்மா சாப்பிட்டு பிறகு ….” குழந்தையை அள்ளி கொஞ்ச முயன்றவளின் கைகளை தவிர்த்தபடி ….

” எங்கே போனாலும் நைட் தூங்குறதுக்கு வந்திடனும் .சரியா ….? ” கேள்வி கேட்டுவிட்டு பதிலை பெறாமல் மீண்டும் ஓடிவிட்டான் .

இரவு ஏழு மணிக்கு அவனை சிரம்ப்பட்டு இழுத்து வந்து குளிக்க வைத்து சாப்பாடு கொடுத்து , அருகில் படுத்து தட்டிக் கொடுத்து தூங்க வைத்தாள் .

சரியாக எட்டு மணிக்கு கையில் பெட்டியுடன் வெளியேறினாள் .வேலைக்கார்ர்கள் கூட எதிரே வரவில்லை .எங்கே போகிறாயென கேட்க ஆளில்லை .எல்லாம் வில்லியம்ஸின் ஏற்பாடாகத்தான் இருக்கும் .




சத்யமித்ரா வெளியேறும் நாளுக்கு இரண்டு நாட்கள் முன்பே  மகனை ஏதோ வேலையென்று ஒரு வாரம் வெளியூர் வேலைக்கு சாமர்த்தியமாக அனுப்பியவராயிற்றே அவர் ….

ஒரு வார வேலை முடிந்து வந்த்தும் தன்னை மறந்துவிடுவானா அவன் …..?

என் மகனை நான் பார்த்துக்கொள்வேன் …திமிராய் ஒலித்தது வில்லியம்ஸின் குரல் .

இதோ மூன்று வருடமாக கண்ணுக்குள் வைத்து வளர்த்து வந்த குழந்தையே இப்போது அம்மாவை தேடுவதில்லை .கிறிஸ்டியன் உலகம் முழுவதும் சுற்றி வருபவன் . எத்தனையோ வித்தியாசமான மனிதர்களை சந்திப்பவன் .அவன் மனம் மாறாதா என்ன …?

அப்படி அவன் மாறினாலும் சந்தோசம்தான் .வெறுமையான இந்த வாழ்வு என்னோடு போகட்டும் .மனம் வலிக்க …வலிக்க நினைத்துக்கொண்டாள் .

ஆனாலும் சாந்தனுவோ …கிறிஸ்டியனோ இல்லாத ஒரு வாழ்வு …தன்னால் சாத்தியமா …? இதற்கு விடை இப்போது வரை சத்யமித்ராவிற்கு தெரியவில்லை .மலையேறுவதை விட கடினமாயிருக்கப் போகும் இந்த வாழ்க்கை பாதையை எப்படி முடிக்க போகிறாள் …?

முடிந்தவரை முடிக்க பார்ப்பேன் ….முடியாவிட்டால் என்னையே முடித்துக்கொள்வேன் .ஏதோ ஒரு தீர்வு எடுத்ததும் மனம் சிறிது கொதிப்பது குறைந்த்து .

பக்கத்து சீட் பெண்ணிற்கு பயந்து கண்களை இறுக மூடியிருந்தவள் வறண்ட தொண்டையை நனைக்க தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்துவிட்டு வைத்தவள் ஸ்தம்பித்தாள் .

அவளுக்கு நேர் எதிர் சீட்டில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி பேப்பர் படித்துக்கொண்டிருந்தான் கிறிஸ்டியன் .

பேப்பரில் முகம் மறைத்திருந்தாலும் மனங்கவர்ந்தவனை அறியமாட்டாளா அவள் ….? பேப்பரின் அடுத்த பக்கத்தை புரட்டும்  போது அவனது முகம் ஒரு நொடி தெரிந்து மறைந்த்து .

இ…இவன் …இங்கே …எ…எப்படி ….என்ன செய்து கொண்டிருக்கிறான் …?

தன்னை பார்ப்பானா …என அவள் அவனை பார்த்தபடியிருக்க அவனோ அந்த பேப்பரின் ஒவ்வொரு எழுத்தையும் வாசிப்பவன் போல் அதனுள்ளேயே புதைந்து கிடந்தான் .ரயில் தன் வழியில் ஓடிக்கொண்டிருந்த்து .

லேசாக தொண்டையை செருமினாள் .அரைக்கண் பார்வை ஒன்றை அவள் புறம் திருப்பியவன் மீண்டும் பேப்பருக்குள் போய்விட்டான் .

” தம்பி எங்கே போறீங்க …? ” அந்த பக்கத்து சீட் பெண் இப்போது அவனிடம் கேட்டாள் .

” மும்பைக்கு போகிறேன் அம்மா .அங்கே எனக்கு வேலை கிடைத்திருக்கிறது .சேரப்போகிறேன் ….” என்றவன் சொன்ன கம்பெனி பெயர் சத்யமித்ரா வேலை பார்க்க போகும் கம்பெனியேதான் .

இவன் ஒரு முடிவுடன்தான் வந்திருக்கிறான் …அவன் தீர்மானம் அறிந்து தவித்தாள் சத்யமித்ரா .

அவனோ எந்தக் கவலையுமின்றி பேப்பரை முடித்துவிட்டு போனை கையில் எடுத்துக்கொண்டான் .அவளை பார்க்கவோ …அவளுடன் பேசவோ முயற்சிக்கவில்லை .

தெறிக்கும் நெற்றிப்பொட்டை அழுத்தியபடி பின்னால் சாய்ந்து கொண்டாள் சத்யமித்ரா .அடுத்த ஸ்டேசனில் டிரெயின் நிற்கும் போது போய் காபி வாங்கிவந்து அவள் கைகளில் திணித்தான் .

” தேவையென்றால் போட்டுக்கொள் …” தலைவலி மாத்திரையை கொடுத்தான் .மீண்டும் தன் இடத்திற்கு போய் அமர்ந்து கொண்டான் .

இரவு படுப்பதற்கு அவளது கீழ் பெர்த்தை கேட்ட அந்த பெண்ணிற்கு கொடுத்த சத்யமித்ராவிற்காக மேல் பெர்த்தை உயர்த்தி அமைத்துக் கொடுத்தான் .மேலேயேறி படுக்க உதவினான் .அவளது பெட்டியிலிருந்து போர்வையை எடுத்து போர்த்திவிட்டு , குட்நைட் சொல்லி …தன் பெர்த்தில் போய் படுத்துக்கொண்டான் .

படுத்த உடனேயே தூங்கியும் போனான் .சத்யமித்ராவிற்குத்தான் தூக்கம் வரவில்லை .புரண்டு ..புரண்டு படுத்தாள் . இரயில் முழுவதும் உறக்கத்தில் இருந்த்து .

பாத்ரூமிற்காக எழுந்தவள் இறங்கி காலை கீழே வைக்கவும் , அவனும் எழுந்துவிட்டான் . அவள் பின்னாலேயே வந்து முதலில் பாத்ரூமினுள் போய் பார்த்து செக் பண்ணிவிட்டு போ என வெளியே காத்திருந்தான் .

தென்றலாய் வருடும் அவனின் இந்த கரிசனங்களில் சத்யமித்ராவிற்கு அழுகை வந்த்து .இவன் என்னை நாலு வார்த்தை திட்டியேனும் விடலாம் …பாத்ரூமிற்குள் சிறிது அழுதுவிட்டு , பிறகு சமாளித்து முகம் கழுவி வெளியே வந்தாள் .

ரயிலின் வாசல் வழியே வெளியே இருட்டில் விரையும் நிறமற்ற காட்சிகளை பார்த்தபடியிருந்தான் .

” அங்கே அவ்வளவு சொத்துக்களையும் விட்டுவிட்டு மும்பையில் போய் சம்பளத்திற்கு வேலை பார்க்க போகிறீரகளா …? “

” எனது சொத்து இங்கேதான் இருக்கிறது .அதனை பாதுகாப்பதுதான் என் முதல் வேலை ….”

அவள்புறம் திரும்பாமல் முதுகு காட்டி நின்றபடி சொன்னான் .

” கிருஸ் ….” நெகிழ்ந்தாள் .

” எனக்கு எனது மன அமைதிதான் பெரிய சொத்து .அது இங்கே ரயிலில் போய்கொண்டிருக்கும் போது , அங்கே எனக்கென்ன வேலை …? ” திரும்பி நின்று கை கட்டிக்கொண்டு அவளை பார்த்து சொன்னான் .

” வேண்டாம் கிருஸ் …இவ்வளவு அன்பு எனக்கு வேண்டாம் .இதனை அனுபவிக்கும் அதிர்ஷ்டமற்றவள் நான் ….”

” என்ன உளறல் இது …? “

” அதிர்ஷ்டமிருந்திருந்தால் என் சொந்தங்கள் எல்லோரையும் பறிகொடுத்து விட்டு …பிறகு எனக்கிருந்த  ஒரே ஒரு பற்றுகோலையும் மனமார விட்டு விட்டு இதோ இப்போது எங்கோ தெரியாத இடத்திற்கு பயணப்பட்டுக்கொண்டிருப்பேனா …? “




” உன் பைத்தியக்காரத்தனத்திற்கு அதிர்ஷ்டகட்டையென ஏன் பெயர் சூட்டிக்கொள்கிறாய் …? “

சத்யமித்ரா திடீரென குமுறிவிட்டாள் .இரு கைகளாலும் முகத்தை மூடியபடி அழத்துவங்கினாள் .

பேன்ட் பாக்கெட்டில் கைகளை நுழைத்தபடி கால்களை அகட்டி நின்று அவளின் துயரத்தை சற்றும் இளக்கமின்றி பார்த்தான் .

” மூன்று வருடங்கள் கிறிஸ் , நான் சாந்தனுவை என் ஒரே சொந்தம் ….என் எதிர்காலமென்ற நம்பிக்கையுடன் மடியிறக்காமல் பார்த்து பார்த்து போற்றி வளர்த்திருக்கிறேன் .இப்போது அவன் என்னை மறந்துவிட்டான் .இருந்தால் இரு …போனால் போய்க்கொள் …என ஓடுகிறான் .என் மனது வலிக்கிறது …”

” உன்னை போல் ஒரு முட்டாளை நான் பார்த்ததில்லை …சிறகு முளைத்த பறவை வானம் முழுவதும் சுற்றினாலும் இளைப்பாற தாய் மடி வந்துவிடும் …”

” அந்த இளைப்பாறல் மட்டும் இன்னும் எத்தனை நாளைக்கு …? மடியில் அடக்கக்கூடாது என்பது உங்கள் வீட்டு கோட்பாடு .இதில் இனி அவன் என்னை தேடப்போவதில்லை …மொத்தத்தில் என் பிள்ளையை நான் இழந்துவிட்டேன் …”

“நிறைந்து கிடந்த செல்வங்களுக்கிடையேயும்  இரண்டு ஆண் பிள்ளைகளையும் கொஞ்சிக் கொஞ்சியேனாலும்  கட்டுப்பாட்டோடு ஒழுக்கமாக வளர்த்த குடும்பம் சத்யா எங்கள் குடும்பம் …”

” ஆனால் அங்கு குழந்தைகளின் தாய் உங்கள் அம்மா .இங்கே சாந்தனுவின் தாயாக உங்கள் குடும்பத்திற்கு பிடிக்காத நானல்லவா இருக்கிறேன் .சாந்தனுவின் தாயும் , தந்தையும் இறந்துவிட்டனர் என சொல்லியேனும் வளர்ப்பேனே தவிர உன்னை தாயென சொல்ல மாட்டேனென உறுதியாக இருக்கிறார் உங்கள் தந்தை …இந்த சூழ்நிலையில் என்னை நானே ஒதுக்குவதை தவிர நான் என்ன செய்ய …? “

விக்கலும் , விசும்பலுமாக  தன் மனதை கொட்டி முடித்தாள் .

பதிலேயின்றி அவளை பார்த்தபடியிருந்தவன் ” தவறெல்லாம் என் மீதுதான் சத்யா .உனக்கு என்னை புரிந்து கொள்ள வைக்காதது …உனக்கு உன்னை அறிமுகப்படுத்தாத்து எனது தவறுதான் .சாந்தனுவின் மேல் மட்டுமே குவிந்திருந்த உன் கவனத்தை கொஞ்சமாவது என் பக்கம் திருப்பியிருக்க வேண்டும் ….”

மெல்ல அவளை நெருங்கினான் .

” எந்நேரமும் தொடாதே …தள்ளியிரு …என்று சொல்லிக்கொண்டேயிருப்பாயே …உன் உணர்வுகளையும் மதிக்க வேண்டுமெனத்தான் என்னை கட்டுப்படுத்தி தள்ளியிருந்தேன்.ஆனால் அதுதான் பெரிய தவறென்று இப்போது தெரிகிறது …”

கிறிஸ்டியனின் ஒவ்வொரு எட்டும் அழுத்தத்துடனும் , ஆழ்ந்த ஆளுமையுடனும் இருந்தன. அவனது நோக்கம் புரிந்த சத்யமித்ராவின் இதயம் திதும் திதுமென துடித்தது .மெல்ல பின்வாங்கி ரயிலின் கதவருகே சாய்ந்து நின்றாள் .

வேண்டாம் என்னை நெருங்காதே …நான் பெண்… பலவீனமானவள் …அன்பில் கலைபவள் … ஆசையில் உருகுபவள் …காதலில் கரைந்துவிடுபவள் .என் மேல் இந்த விதமாக பாயாதே .நான் உருகி உளைந்துவிடுவேன் .

கண்களில் கெஞ்சலுடனும் , ஏக்கத்தவிப்புடனும் அவனை பார்த்தபடி நின்றாள் .

” வேண்டாம் …” பலவீனமாக மறுத்தாள் .

” என்னைப் பார் பேபி .உனக்கு நான் வேண்டாமா …? என்னை விட்டு போய் விடுவாயா …? ” அவளுக்கு இருபுறமும் ரயிலின் சுவரில் தன் கைகளை ஊன்றிக்கொண்டு அலைபாய முயன்ற அவள் விழிகளை தடுத்து அதனுள் தன்னை  பாய்ச்சியபடி காதல் கசிய கேட்டான் .

சத்யமித்ராவின் விழிகள் அவனை எதிரநோக்கும் திராணியற்று தத்தி தடுமாறி அவனது கழுத்தை ஒட்டி அணிந்திருந்த பொன் சங்கிலியில் தொங்கிக் கொண்டிருந்த சிலுவையில் நிலைத்தது .

What’s your Reaction?
+1
1
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!