Serial Stories uravu solla oruvan உறவு சொல்ல ஒருவன்  

உறவு சொல்ல ஒருவன் – 16

                                            16

” மூன்று வருடங்கள் ப்ரின்ஸை வளர்த்திருக்கிறாய் .அதற்கு உனக்கு எவ்வளவு செலவாகியிருக்கும் ….? ” மூஞ்சியில் அடிப்பது போன்ற இந்த கேள்வியில் வில்லியம்ஸை வெறுத்து பார்த்தாள் சத்யமித்ரா .

” உங்கள் சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும் …? “

பதிலின்றி சிறிதுநேரம் இருந்தவர் ” வேண்டாம் சத்யா .நீ எங்கள் குடும்பத்திற்கு வேண்டாம் .உன் மேல் ஆரம்பத்திலிருந்தே எனக்கு அபிப்ராயம் இல்லை .நீ போய்விடு …” என்றார் .

” நான் என்ன தப்பு செய்தேன் …? ” வேதனையுடன் கேட்டாள் .




” டேவிட்டை எங்களிடமிருந்து பிரித்தவர்களில் நீயும் ஒருத்தி .அது என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது “

” விதித்து வைத்த விதிக்கு நான் என்ன செய்யமுடியும் …? “

” உன் அக்காவை திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் டேவிட் எங்களுடனேயே இருந்திருப்பானோ …டேவிட் எங்களுடனேயே இருந்திருந்தால் ஜெபசீலிக்கு இந்த கொடும் வியாதி வராமல் இருந்திருக்குமோ ….இப்படியெல்லாம் என்னால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை …”

” நடந்த்தையே நினைத்துக்கொண்டு நடக்க போவதை தவறாக நினைக்கலாமா …? நீங்கள் பெரியவர் .உங்களுக்கு நான் சொல்லவேண்டியதில்லை …”

” நடக்கவேண்டியது எங்கள் மொழி ,மதத்தை சேர்ந்த என் தங்கை மகள்    ரேச்சலுடன் கிறிஸ்டியின் திருமணம்தான் ” வில்லியம்ஸின் குரலில் இருந்த உறுதி சத்யாவை பேச்சிழக்க வைத்தது .

” ரேச்சல் மனதில் வேறொருவர் இருக்கிறார் …”

” அந்தக் கழுதையை பற்றியும் எனக்கு தெரியும் .அதை எப்படி விரட்டியடிப்பது என்றும் எனக்கு தெரியும் .”

” உங்களுக்கு காதல் பிடிக்காதா …? “

” காதலிப்பவர்களையும் , அதற்கு உதவுபவர்களையும் பிடிக்காது ….”

வில்லியம்ஸ் மறைமுகமாக காதலித்து திருமணம் செய்த , தன் மகளின் காதலுக்கு ஆதரவளித்த தன் பெற்றோரை குறிக்கிறார் என உணர்ந்தாள் .

” ஏற்கெனவே ஒரு முறை என் தங்கைக்கு நானளித்த வாக்கு தவறிவிட்டது .மீண்டுமொரு முறை தவற நான் விடமாட்டேன் …,”

” உங்கள் மகனிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு ….”

” என் மகனை சமாளிக்க எனக்கு தெரியும் .நீ முதலில் போய்விடு …”

” எங்கே போக சொல்கிறீர்கள் ..? என் மகனை விட்டுவிட்டு …” மேலே பேச முடியாமல் குரல் தடுமாறியது .

” அவன் உன் மகனல்ல .என் பேரன்….” கத்திய வில்லியம்ஸ் ..தன்னை சமாளித்துக்கொண்டு …

” நீ முன்பிருந்த கிராமத்திற்கு வேண்டாம் .உனக்கு மும்பையில் வேலைக்கு ஏற்பாடு பண்ணியிருக்கிறேன் .அங்கே போய்விடு …அடுத்த வாரத்திற்கு டிரெயின் டிக்கெட் எல்லாம் எடுத்து வைத்துவிட்டேன் …கிளம்பு ….”

” நான் மறுத்தால் ….”

” கஷ்டப்பட்டு தேற்றி இப்போதுதான் எழுந்து உட்கார்ந்திருக்கும் என் மனைவியை பற்றிக் கூட கவலைப்படாது , உன்னோடு ப்ரின்ஸையும் சேர்த்து வெளியேற்றிவிடுவேன் .எனக்கு அவனோடு சேர்த்து போனஸாக நீயும் வருவதானால் அவனே வேண்டாம் .என் ஜெபியை காப்பாற்ற எனக்கு தெரியும் ….”

இளக்கமற்று ஒலித்த வில்லியம்ஸின் குரலில் விரக்தியுற்ற சத்யமித்ரா ….

” அந்தக்கவலை உங்களுக்கு வேண்டாம் .நான் போய்விடுகிறேன் .நீங்கள் உங்கள் மதத்தையும் , மொழியையும் கட்டிக்கொண்டு அழுங்கள் …” ஆத்திரமுடன் சொல்லிவிட்டு வெளியேறினாள் .

” சத்யா என்ன ஆச்சு …? வீட்டில்தான் இருக்கிறாயா …? ” இரண்டு நாட்களாக கண்ணிலேயே பட மாட்டேனென்கிறாயே ….? “




தன் முன்னால் வந்து நின்ற கிறிஸ்டியனை நிமிர்ந்து பார்த்தவள் பதில் சொல்ல திணறி பிறகு சமாளித்து …

” ப்ரின்ஸை முழுவதுமாக இந்த வீட்டோடு ஒன்ற வைக்க வேண்டுமே .அதுதான் கொஞ்சம் ஒதுங்கியே இருக்கிறேன் ….”

” அதற்காக இந்த அளவு ஒதுக்கமா …? தேவையில்லை பேபி …”  தள்ள்ள்ளளி நின்று கொண்டிருந்த சத்யாவை அவர்களிருவருக்குமிடையே இருந்த சற்று அதிகப்படி இடைவெளியை கைகளால் காட்டி கேட்டான் .

அந்த குறும்பான செய்கையை கவனிக்காதவள் போல் ” இன்னைக்கு க்ளைமேட் நல்லாயிருக்கில்லையா …? என்றாள் .கவனமாக தன்னருகே வந்த கிறிஸ்டியனிடமிருந்து தள்ளி நின்று கொண்டாள் .

அவளது ஒதுக்கத்திற்கு தோள்களை குலுக்கிக் கொண்டவன் , ” தோட்டத்திற்கு வா .உன்னுடன் பேச வேண்டும் ” முன்னால் நடந்தான் .

” ரேச்சல் – கண்ணன் திருமணததை அவ்வளவு எளிதாக நடத்திவிட முடியாது போல சத்யா .கண்ணன் வீட்டிலும் பயங்கர எதிர்ப்பாம் .அவர்  தமிழ்நாட்டிற்கு போய் அவர் வீட்டினருடன் பேசிவிட்டு தோல்வியுடன் திரும்பியிருக்கிறார் “

” ஓ …நீங்கள் உங்கள் அத்தையுடன் பேசிப் பார்த்தீர்களா ..? “

” ம் …நான் அவர்கள் மகளை மணம் முடிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேனென்கிறார்கள் ….”

” ஐயோ …என்னதிது …? ” பதறினாள் .

” விடு சத்யா .இது மிரட்டல்தான் .இதற்கெல்லாம் பயந்தால் முடியுமா ..? ,”

” இ…இப்போது என்ன செய்வது …? “

” நமக்குத்தான் உன் அக்காவும் , என் அண்ணனும் முன்பே ஐடியா சொல்லி விட்டு போயிருக்கிறார்களே …”
” அப்படியானால் ….???”

” கண்ணனுக்கும் , ரேச்சலுக்கும் பதிவு திருமணம் செய்து மலேசியாவிற்கு அனுப்பி வைத்துவிட போகிறேன் …”

” ஏன் வேறு வழியில்லையா …? இதனால் பெரியவர்கள் மனது கவலை படுவார்களே …”

” ம் ….ஒரு குழந்தை பிறந்த்தும் சரியாகிவிடும் …இதோ இப்போது ப்ரின்ஸ் வந்த்தும் நம் வீடு சரியாகிவிடவில்லையா …? சரி வா போகலாம் ” எழுந்து கொண்டு அவள் எழ கை நீட்டினான் .

கிறிஸ்டியன் சொன்ன செய்திகளில் குழம்பி யோசனையுடன் அமர்த்தபடி இருந்தவளை ” அட  சும்மா கையை பிடிக்க என்ன யோசனை …? ” பட்டென அவள் கையை பிடித்து இழுத்து எழுப்ப , தடுமாறி எழுந்தவள் விழாமலிருக்க அவன் தோள்களை பற்றினாள் .

” காதல் ரொம்ப உயர்ந்த்து சத்யா .அதற்காக சிறு சிறு தியாகங்களை செய்யலாம் தப்பில்லை ” அவள் கன்னங்களை வருடினான் .

கண்ணோடு கண் கலந்து உள்ளம் ஊடுறுவிய அவன் பார்வையிலிருந்து தப்ப முடியாது ….அவனோடு அணைய துடித்த தனது உடலை கட்டுப்படுத்தும் வழியறியாது அப்படியே ஸ்தம்பித்து நின்றாள் .

தடுமாறிய பார்வை கிறிஸ்டியனின் பின்புறம் சென்றபோது , அங்கே முகம் முழுவதும் குரோதத்துடன் நின்று கொண்டிருந்த கரோலின் கண்ணில் பட்டாள் .

இவளின் பார்வையை சந்தித்ததும் முகம் முழுவதும் அருவெறுப்பை நிரப்பி வாய் நிறைய எச்சிலை சேர்த்து ” தூ ” வென கீழே உமிழ்ந்துவிட்டு போனாள் .




அவள் தன் முகத்திலேயே எச்சில் உமிழ்ந்த்து போல் உணர்ந்தாள் சத்யமித்ரா .அப்போதுதான் கிறிஸ்டியனை தழுவியபடி நின்றிருந்த தன்னிலை உணர்ந்தவள் …இதோ இப்படி நான்கு பேர் பார்க்குமிடத்தில் வெட்கமின்றி ஒரு ஆண் மகனை தழுவி நின்றால் யாராக இருந்தாலும் இப்படித்தானே செய்வார்கள் .

படபடவென அவளை தன்னிரக்கம் சூழ்ந்து கொள்ள தீச்சுட்டாற் போல் கிறிஸ்டியனை உதறியவள் வீட்டினுள் ஓடினாள் .

சற்று முன் களிமண்ணாய் கைகளில் நெகிழ்ந்தவள் திடுமென கடும்பாறையாய் மாறிய காரணம் தெரியாது யோசனையுடன் நின்றான் கிறிஸ்டியன் .

What’s your Reaction?
+1
1
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!