Serial Stories uravu solla oruvan உறவு சொல்ல ஒருவன்  

உறவு சொல்ல ஒருவன் – 18

18

தனது ஆட்காட்டி விரலை உயர்த்தி கிறிஸ்டியன் கழுத்து சிலுவையை தொட்டாள் சத்யமித்ரா .

” நமக்கிடையே இது வேறு இருக்கிறது ….”

” ஷிட் ” என தன் கைகளை ரயில் சுவரில் மோதியவன் …

அவள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவள் கன்னங்களை அழுந்த பற்றி இதழ்களை சிறை செய்தான் .

” ஒழுங்காக பேசுவதானால் பேசு .இல்லையென்றால் எனக்கு இதை தவிர வேறு வழியில்லை ….,” திணறலாய் மூச்சு விட்டுக்கொண்டிருந்தவளை ஆவலாய் பார்த்தபடி  சொன்னான் .




கோபமாக அவனை பார்க்க முயற்சித்து முகம் உயர்த்திவிட்டு அது முடியாமல் , பார்வையை தளைத்தவளுக்கு  மீண்டும் அந்த சிலுவையே கண்ணில் பட்டது .

அவளது பார்வையை உணர்ந்தவன் நிதானமாக சுடிதார் சாலுக்குள் மறைந்து கிடந்த அவள் கழுத்து மெல்லிய சங்கிலியை எடுத்து அதிலிருந்த ” ஓம் ” டாலரை பார்த்தான்  .டாலரை தன் உள்ளங்கையில் வைத்து அதன் மேலேயே தன் விரல்களால் ” ஓம் ” என எழுதிப் பார்த்தான் .

” சிலுவையோ …ஓம் மோ ….அடிப்படையில் போதிப்பது அன்பை மட்டும்தான் சத்யா .”

” என்னால் என் மதத்தை விட முடியாது …”

” தேவையுமில்லை .உன் மதம் உனக்கு .என் மதம் எனக்கு .இவையெல்லாம் ஒருவர் மனதின் நுண்ணிய உணர்வுகள் .வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளும் காரணத்திற்காக உள் மன உணர்வுகளை காயப்படுத்த வேண்டிய அவசியமில்லை .உனக்கு நான் …எனக்கு நீதான் .ஆனால் திருமணம் முடித்துவிட்ட காரணத்திற்காகவே உனக்கென்ற உள்ளுணர்வுகளில் நானோ …எனக்கான உள்ளுணர்வுகளில் நீயோ இடம்பெற வேண்டுமென்ற கட்டாயம் கிடையாது .ஒவ்வொருவருக்கும்  பிறந்த்து முதல் பின்பற்றும் மதம் அவர்களது தாய்க்கு ஒப்பானது .தாயை மாற்றுவது ஒப்புக்கொள்ள முடியாதது போலத்தான் மதமும் ….”

மீண்டும் அவளது டாலரை பத்திரமாக சாலிற்குள்ளேயே தள்ளினான் .

கிறிஸ்டியனின் அழகான விளக்கத்தில் பிரமிப்பாய் உயர்ந்து அவன் விழிகளை சந்தித்த சத்யமித்ராவின் விழிகளில் காதல் கசிந்த்து .

தீவிர விளக்கத்தில் இருந்த கிறிஸ்டியன் காதலியின் மையல் பார்வையை கண்டதும் அவசரமாக பேச்சை நிறுத்தினான் .

” மதமும் , மொழியும் தவிரவும் என்னை பிடிக்காமல் போனதற்கு உங்கள் அப்பாவிடம் நிறைய காரணங்கள
இருக்கின்றன கிருஸடியன்  ….” வேகத்துடன் தன் கன்னம் பதிய வந்த அவனது இதழ்களிடமிருந்து தப்பியபடி சொன்னாள் .

” என்ன காரணம் …? பெரிய புடலங்காய் காரணம் ….? ” தேவை நிறைவேறாத ஆத்திரம் அவனுக்கு .

” நம் காதல் நிறைவேறினால் …உங்கள் அம்மா நிலைமையை யோசித்தீர்களா …? ” குரல் நடுங்க கேட்டாள் .

” ஏன் அம்மாவிற்கென்ன ….? நான் எங்கேயிருக்கிறேனோ அங்கேதான் அம்மாவும் இருப்பார்கள் ….”

” இதெல்லாம் நடக்கக்கூடியதா …? “

” நடத்திக்காட்டட்டுமா ….? “

இவன் செய்வான் .எத்தன் …எப்படித்தான் எல்லோருடைய மனதிற்குள்ளும் புகுந்து கொள்கிறானோ ….??

பெருமிதமாகவே அலுத்துக்கொண்டாள் .

” எங்கே …உன் மனதை புரிந்து கொண்டும் நீ போகும் பாதையை மட்டும் என்னால் கணிக்கவே முடியவில்லை …” இப்போது அவன் அலுத்தான் .

” நா …நாம் கொஞ்சம் யோசிப்போமே …” மெல்ல அவனிடமிருந்து விலக முயன்றாள் .

” ஓ…யோசிக்கலாமே …”அவளது இடையில் இரு கைகளையும் கோர்த்து தன்னருகில் நெருக்கமாக இழுத்துக் கொண்டு , சற்று முன் அவள் இருவருக்குமிடையே ஏற்படுத்தியிருந்த இடைவெளியை குறைத்துக்கொண்டு ….

” ம் …சொல்லு ….” என்றான் .

இப்படி மூக்கோடு மூக்குரசி நின்று கொண்டு பேசு என்றால் எப்படி பேச …?

” நீங்கள் கொஞ்சம் தள்ளி நில்லுங்கள் .அப்போதுதான் எனக்கு பேச வரும் ….” அவன் மார்பில் கை வைத்து தள்ளினாள் .

” தள்ளி நின்றால் எனக்கு பேச வராது ….” நெருக்கத்தை அதிகப்படுத்தியபடி முகத்தை பிடிவாதமாக வைத்துக்கொண்டான் .

” கிருஸ் ….ப்ளீஸ் ….”

“ம் …இந்த “கிருஸ்” கொஞ்சலுக்காக   சரி போ ….” தள்ளி நின்று கைகளை கட்டிக்கொண்டான் .

ஐயோ …அப்படி கொஞ்சியா தொலைத்தேன் …தன்னையே நொந்தபடி நிமிர்ந்தவள் அவன் பார்வையில் முகம் சிவந்தவள் .




இதற்கு பக்கத்தில் உரசி நின்றதே தேவலாம் போல ….இப்படியா பார்வையாலேயே தின்பது ….அவசரமாக தன் பார்வையை ரயிலுக்கு வெளியே விரையும் இருளுக்கு மாற்றிக்கொண்டாள் .

” சாந்தனுவின் அம்மாவாக என்னை ஒருபோதும் உங்கள் அப்பா ஏற்றுக்கொள்ள போவதேயில்லை .அப்படி அவர் ஏற்றுக்கொள்ளாமல் நான் உங்கள் வீட்டு படியேறபோவதில்லை .இந்த பிடிவாதங்களுக்கிடையே  சாந்தனுவின் வளமான எதிர்காலம் சிக்கி சிதற வேண்டாமென்றுதான் நான் வெளியேறும் முடிவை எடுத்தேன் ….”

” சரிதான் இதில் நான் எங்கு வருகிறேன் ….? சாந்தனுவை மட்டும் நினைத்தாயே என்னை ஒரு ஓரமாகவாவது நினைத்தாயா …? உன் மனதில் எப்படி எனது தட்டு கீழிறங்கலாம் சத்யா ….? “

சற்றுமுன் மதம் பற்றி அவ்வளவு ஆழமாக பேசியவன்தானா இவன் …என சந்தேகம் வந்த்து சத்யமித்ராவிற்கு .அண்ணனுக்கு எப்படி இரண்டு சாக்லேட் கொடுக்கலாம் ….என சண்டையிடும் தம்பிக் குழந்தையை நினைவுறுத்தினான் அப்போது …

கடைசி கவளத்திற்காக தாய் முகம் பார்த்து நிற்கும் சேயை பார்க்கும் தாய்ப் பார்வையோடு அவனை பார்த்தாள் சத்யமித்ரா .

” இந்த பார்வைக்கொண்ணும் குறைச்சலில்லை .இடுப்பில் தூக்கிக் கொள்வது போல் பார்த்தால் மட்டும் போதாது .செயலிலும் காட்டவேண்டும் ….” என்றபோது அவனது பாவனையில் காதல் சொட்ட ஆரம்பித்திருந்த்து .

இவனோடு பேசி ஜெயிக்க முடியாது …ஆயாசம் தோன்றியது சத்யமித்ராவுக்கு .

” நானே விட்டுக்கொடுத்தால்தான் என்னை ஜெயிக்க உன்னால் முடியும் பேபி .ஒரு வாரத்தை சொல் மொத்தமாக விட்டுக்கொடுத்து விடுகிறேன் …”

கிறிஸ்டியனின் குரல் மென்மையாக காதிற்குள் ஒலிக்க …அவன் அருகில் வந்து அவள் கன்னத்தை வருடியபடியிருந்தான் .விலகத்தோன்றவில்லை சத்யமித்ராவிற்கு …

” உன்னை முதன்முதலில் பார்த்த நாளிலிருந்து என் மனம் முழுவதும் நிறைந்து அமர்ந்து கொண்டு இம்சித்துக்கொண்டே இருந்தாய் .ஏற்கெனவே அண்ணனின் காதல் மணத்தால் வீட்டில் பிரச்சினை .இப்போது நானும் அதே வழி போக்க்கூடாதே என என்னையே கட்டுப்படுத்திக் கொண்டுதான் அந்த இங்கிலாந்து படிப்பை ஏற்றுக்கொண்டு அங்கே ஓடிவிட்டேன் ….”

” ஆனால் நான் நினைத்தது போல் உன்னை மறக்க நினைக்க …நினைக்க நீ என்னுள் முழுவதுமாக நிரம்பியபடியேயிருந்தாய் .காரணமேயில்லாமல் அங்கே போய் ஒரு தமிழ் நண்பனிடம் தமிழ் கற்றுக்கொண்டேன் .தனிமையில் உன்னுடன் பேசிப்பார்த்துக்கொண்டேன் .போகும் போது இருந்த்தை விட பல மடங்கு வலிமை நிறைந்த உன் நினைவுகளோடு திரும்பி வந்தேன் ….”

” இங்கே வந்த போது அண்ணனை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்த்து என் குடும்பம் . அம்மாவிற்கு உயிரைக் கொல்லும் வியாதி .இதில் உன்னை தேடி வர முடியாத நிலைமை .ஆனால் அம்மா …அப்பாவிடம் பேரனுக்காக அடம்பிடிக்க …அப்பா மனமில்லாமல் ஒத்துக்கொள்ள ….ஒரு வழியாக உன்னை நம் வீட்டிற்கே வந்தாயென நினைத்தால் ….இப்படி ஓடுகிறாயே ….”

காதலாய் தன் கதையை ஆரம்பித்து அன்பான ஆதங்கமாய் முடித்தான் .

” உங்கள் அப்பாவிடம் நாம் பேசிப் பார்க்கலாம் ….” அவனது காதலில் நெகிழ்ந்து வசியப்பட்டவள் போல் அவன் விழிகளுள் கிடந்தபடி சொன்னாள் சத்யமித்ரா .




” குட் ….” அவள் நெற்றியில் நெற்றியை மோதி மெச்சினான் .

” ஆனால் இப்போது எப்படி போவது …? ” ஓடிக்கொண்டிருந்த ரயிலை பார்த்தபடி கேட்டாள் .

அவள் கையை உயர்த்தி அவள் வாட்ச்சில் மணி பார்த்தவன் ” பத்துநிமிடத்தில் அடுத்த ஸ்டேசன் வந்துவிடும் .அங்கே நாம் இறங்கிவிடலாம் ….” என்றான் .
” அங்கிருந்து எப்படி போவது …? “

” அதற்கெல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு .வா பெட்டியை கட்டு ….” உள்ளே போனான் .

புரியாமல் அவன் முதுகை பார்த்தபடி உள்ளே போனாள் சத்யமித்ரா

What’s your Reaction?
+1
4
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!