ramanin mohanam Serial Stories ராமனின் மோகனம்

ராமனின் மோகனம் – 22

22

 ” இன்னும் எவ்வளவு நேரத்திற்கு அழுதுகொண்டே இருக்கும் எண்ணம் ? இத்தனை வருடங்கள் கழித்து உங்களிடம் மீண்டு வந்திருக்கும் மகளை இப்படி அழுது தான் வரவேற்பீர்களா ஐயா ? ”  சுபத்ரா அதட்டியபடி இரு பெரிய தம்ளர்களில் சூடான பாலை இருவருக்கும் கொண்டு வந்து கொடுத்தாள்.

” என் கண்மணியை என்றைக்கு அவனுக்கு கல்யாணம் செய்து கொடுத்தேனோ அன்றிலிருந்து என்னுடைய நிம்மதியே போயிற்று ”  தாத்தா விசும்பினார் 

” அப்போது யோசிக்காமல் கொடுத்துவிட்டீர்கள். இப்போது எல்லாம் முடிந்தபின் அழுது என்ன ஆகப்போகிறது ? ” கௌசல்யா இருவரையும் சமாதானம் செய்ய முயன்றாள் .

” நம் ஊரில் எடுபிடி வேலை செய்துகொண்டு வம்பு வழக்கு என்று சுற்றிக்கொண்டு திரிந்தவன் .அப்படிப்பட்டவனுக்கு பெரிய வீட்டைச் சேர்ந்த என் மகளை திருமணம் செய்து கொடுத்த என் முட்டாள் தனத்தை என்ன சொல்வது ? ” 

” என்னை திருமணம் செய்து கொடுத்ததோடு மட்டுமா விட்டீர்கள் அப்பா ? கண்ணைப் போல் நீங்கள் காத்து வளர்த்த கட்சியையும் சேர்த்தல்லவா அவருக்கு தாரை வார்த்து விட்டீர்கள் ? கடைசியில் அவர் கட்சியில் உங்களை செல்லாக்காசாகி இதோ இங்கே சொந்த ஊரில் கொண்டுவந்து முடக்கிப் போட்டு விட்டு தானே அந்த கட்சியை தொடங்கி வளர்த்தது போல் அங்கே பெருமை அடித்துக் கொண்டிருக்க தொடங்கிவிட்டார் ” 

” செங்கமலம் என்ன இது இத்தனை வருடங்கள் கழித்து இப்படியா அப்பாவிடம் பேசுவது ? திருமணம் முடிந்த மறு வருடமே கணவனை இழந்து கையில் குழந்தையோடு நின்ற உன்னை நான் திருமணம் முடித்துக் கொள்கிறேன் என்று வந்து நின்ற திருக்குமரன் அப்போது உன் அப்பாவிற்கு தெய்வமாக தோன்றினான் .அதனால் தான் அவர் உங்கள் திருமணத்தையும் முடித்து கட்சியையும் அவனிடம் ஒப்படைத்தார் ” கௌசல்யா பழையவற்றை செங்கமலத்திற்கு நினைவுபடுத்தினாள்.




” உண்மைதான்மா இங்கே நம் வீடுகளில் சுற்று வேலைகள் பார்த்துக் கொண்டு யாருக்கும் ஒன்று என்றால் உடனே ஓடிக்கொண்டு இளந்தாரியாக  ஊருக்குள் மீசை முறுக்கிக் கொண்டு சுற்றிக்கொண்டிருந்த திருக்குமரன் அன்று நமக்கெல்லாம் பெரிய ஹீரோவாகத்தான் தெரிந்தான் .அவனிடம் நான் ஏமாந்து விட்டேன் ” தாத்தா வருந்தினார்.

” நீங்கள் மட்டுமல்ல நாங்களும் தான் ஏமாந்து விட்டோம். நாம் எல்லோரும் சேர்ந்துதான் அவர்கள் திருமணத்தை முடித்து வைத்தோம் என்பதை மறந்து விடாதீர்கள் ” ராஜமாணிக்கம் இடையிட்டார்.

” கல்யாணம் முடிந்த கையோடு கட்சியில் முக்கிய பொறுப்பும் அவனுக்கு கொடுத்து விட்டீர்கள் .இங்கே நம் சொந்த ஊருக்கு அடிக்கடி வருவதையும் அவன் நிறுத்தி விட்டான் .நாமும் நம்  தொழில் குடும்பம் குழந்தை என்று அப்படியே இருந்து விட்டோம். திடீரென்று உங்களை கட்சியிலிருந்து ரிட்டயர்மென்ட் கொடுத்து இங்கே கொண்டு வந்து விட்டு விட்டு போய்விட்டான் .ரொம்ப நாட்களாக நீங்களாகத்தான் அவனிடம் கட்சியை ஒப்படைத்து விட்டீர்கள் என்று  நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம் ” 

” செங்கமலம் அவனைப் பற்றி புகார் என்று இதுவரை நம் யாரிடமும் வந்து நின்றதில்லையே … அவனை நாம் தவறாக நினைக்காதற்கு அதுவும்  ஒரு காரணம் ” 

” என்னைப் பொறுத்த வரையும் அவர் ஒரு நல்ல கணவராக தான் இப்போது வரை இருந்தார். அத்தோடு என் மகளுக்கு நல்ல அப்பாவாகவும் இருந்தார் .கட்சிக்குள் அவர் பல தில்லுமுல்லுகளை செய்து கொண்டிருந்தாலும் குடும்பத்தை நல்லபடியாக கொண்டு செல்கிறார் என்று அப்படியே விட்டு விட்டேன் ” செங்கமலம் தனது நடவடிக்கைக்கு வருந்தினாள் .

” அதுதான் அம்மா நீங்கள் செய்த பெரிய தவறு ” கேட்ட குரல் நிலானியுடையது என்பதை உணர்ந்த அனைவரும் வேகமாக வாசலுக்கு திரும்ப அவள் அப்போதுதான் உள்ளே நுழைந்து கொண்டிருந்தாள் .

” சென்னையிலிருந்து நீங்கள் கிளம்பிய விபரம் அறிந்ததும் நானும் கிளம்பி விட்டேன் .அங்கே என்னுடைய வேலைகள் எல்லாம் முடிந்து விட்டது என்றே நினைக்கிறேன் ” சொல்லிக் கொண்டு நின்ற வளை நோக்கி பாய்ந்தான் அபிராமன்.

” ஏய் இவ்வளவு நாட்களாக எங்கேடி போய்விட்டாய் ?  என்ன செய்து கொண்டிருந்தாய் ? நாங்கள் எல்லாம் எப்படி தவித்துப் போய் விட்டோம் தெரியுமா ? ” அவள் தோள்களைப் பற்றி உலுக்கினான்.

” இத்தனை பேர் சுற்றி நின்று கொண்டிருக்கிறீர்களே …இந்த அநியாயத்தை யாரும் கேட்க மாட்டீர்களா ? மெலிதாக  சினுங்கினாள் நிலானி .

” நாங்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டு ஆளுக்கு ஒன்று உனக்கு கொடுக்கும் முன் ஒழுங்காக ஏன் இப்படி செய்தாய் என்று சொல்லிவிடு ” கௌசல்யா அதட்டினாள்.

” சொல்கிறேன் அத்தை .அம்மா அதற்கு முன் உங்களிடம் பேச வேண்டும் .உங்கள் மனதில் குழந்தையுடன் நின்ற எனக்கு மறு வாழ்வு கொடுத்த தெய்வம் என்று அப்பாவைப் பற்றிய உயர்ந்த அபிப்பிராயம் இருந்தது .அவரும் உங்களைப் பொறுத்தவரை நல்ல கணவராக அப்பாவாக நடந்து கொண்டார் .அதனால் அவருடைய எத்தனையோ குறைகளை கண்டு கொள்ளாமல் நீங்கள் அவருக்கு மனைவியாக இருப்பதை மட்டுமே வாழ்க்கை லட்சியமாக கொண்டு  அந்த நிலையிலேயே நின்று விட்டீர்கள் .முதலிலேயே அப்பாவின் அநியாயங்களை கண்டுகொண்டு தட்டிக் கேட்டு இருந்தீர்களானால் இன்று தாத்தா கஷ்டப்பட்டு வளர்த்த இந்த கட்சி உடைந்து போய் இருக்காது .ஒரு பலம் வாய்ந்த கட்சியாக நேர்மையான கட்சியாக நிலைத்து நின்றிருக்கும்” 

” நீ சொல்வது உண்மைதான் நிலானி .நான் என்னை என் குடும்பத்தை மட்டுமே பார்த்து கொண்டு குறுகிய வட்டத்திற்குள் இருந்து விட்டேன் .சில நேரங்களில் உன்னுடன் பேசுவதற்கு கூட உன் அப்பா அனுமதிக்கமாட்டார். அதைக்கூட அவருக்கு ஏதாவது காரணம் இருக்கும் என்று முட்டாள்தனமாக நம்பிக்கொண்டு தலையாட்டுவேன். இனி மாறிவிடுவேன் .இதற்கு காரணம் நீதான் நிலானி. சில நாட்களாக உன்னுடைய தைரியமான அணுகுமுறைகள் எனக்கும் தைரியத்தைக் கொடுத்து விட்டது .இதோ உன் அப்பாவை உதறிவிட்டு என் அப்பாவிடம் வந்து விட்டேன் ” 

” மிகுந்த மகிழ்ச்சி அம்மா ” நிலானி தாயை அணைத்துக் கொண்டாள்.

” உங்கள் அனைவரையும் கூட ஒரு கட்டத்தில் நான் தவறாக நினைத்து விட்டேன். அத்தை மாமா நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும் ” தங்கள் கால்களில் பணிந்தவளை எழுப்பி அணைத்துக் கொண்டாள் கௌசல்யா.

” நீ எவ்வளவு பெரிய வேலை செய்து இருக்கிறாய் ! தமிழ் நாட்டின் தலையெழுத்தையே மாற்றி இருக்கிறாய் .உனக்கு நாங்கள் மன்னிப்பு கொடுப்பதா ?ஆனால் இதனை எப்படி சாதித்தாய் நிலானி ? ”  ராஜமாணிக்கம் ஆச்சரியமாக கேட்க நிலானி சொல்லத் துவங்கினாள்.

” ராம் சில நாட்களாக அப்பாவிற்கு எதிராக அவர்களது கட்சி ஆட்களை தூண்டிவிட்டு கட்சியை கலைக்க முயல்வதை நான் அறிவேன். அவருக்காக இதனை நானே செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதுதான் அவருக்கு நான் கொடுக்கும் காதல் பரிசாக நினைத்தேன் .அப்பாவின் கட்சியும் அதன் சூட்சுமங்களும் கட்சி எம்எல்ஏக்களும் எனக்கு ஓரளவுக்கு பழக்கம் .அவர்கள் ஒவ்வொருவரையும் நானே நேரில் சென்று பார்த்தேன் .இந்த கட்சி இனி தேறாது விரைவிலேயே விலகி விடுங்கள் என்று கேட்டுக் கொண்டேன் .கட்சியினர் அனைவரிடமும்  என்னைத்தான் அடுத்த முதல்வர் என்ற பிரமையை அப்பா ஏற்படுத்தி வைத்திருந்தார் .அத்தோடு நான் இப்போது ஜிபிஎஸ் குரூப்பின் எம் டி அபிராமனின் மனைவியாயிற்றே ….என்னுடைய பேச்சை எல்லோரும் அப்படியே நம்பினார்கள் .முழுக போகும் இந்த கட்சியில்  தொடர்ந்து இருக்க அவர்கள் விரும்பவில்லை .மேலும் ஹைவேவிஸ் துப்பாக்கி தொழிற்சாலை வழக்கில்  அப்பா கைது செய்யப்படக் கூடிய அபாயம் இருப்பதையும் சுட்டிக் காட்டவும் எல்லோரும் சத்தமின்றி கட்சியை விட்டு விலக தொடங்கினார்கள் .மிக எளிதாக இரவோடு இரவாக சில நாட்களுக்குள் என்னால் இதனை சாதிக்க முடிந்தது ” 

” ஆனால் சிறிது தவறினாலும் இது 

 ஆபத்தாக முடிந்து இருக்கும் அல்லவா ? பதவி வெறி கொண்ட ஏதாவது ஒரு அரசியல்வாதி உன்னை பிடித்து வைத்துக்கொண்டு கட்சியையும் ஆட்சியையும் குறைந்தபட்சம் எங்களிடமிருந்து பணத்தையோ சம்பாதிக்கலாம் என்று நினைத்து விட்டால் நீ என்ன செய்திருப்பாய் ? ” பதட்டமான கேள்வியுடன் நிலானியின் கை கோர்த்துக் கொண்ட அபிராமனின் கைகளில் நடுக்கம் இருந்தது.




“எனக்கு அப்படி தோன்றவில்லை ராம் .நீங்கள் கோடி கோடியாக பணத்தை இறைத்து இந்த வேலையை செய்து கொண்டிருந்தீர்கள். இதனை எளிதாக என்னால் செய்ய முடியும் என்று தோன்றியது .அதுவும் அன்று நீங்கள் என்னிடம் பேசியபோது தாத்தா விஷயத்தில் ஏதோ மறைக்கிறீர்கள் என்று பட்டது . அதனை தெரிந்து கொள்ள வேண்டும் என்று தான் அதிகாலையிலேயே கிளம்பி வந்து தாத்தாவை சந்தித்தேன் .நான் திருக்குமரன் பெற்ற மகள் இல்லை என்று தெரிந்து கொண்டேன்.”  நிலானியின்  குரல் தழுதழுத்தது

” அன்று உனக்கு அடுத்தடுத்து நிறைய அதிர்ச்சிகள் நிலா .அத்தோடு இந்த அதிர்ச்சியையும் அன்றே கொடுக்க வேண்டாம் மெல்ல சொல்லிக் கொள்ளலாம் என்று தான் தள்ளிப்போட்டேன் ” 

” நான் பெற்ற மகள் இல்லை என்பதனால் தான் என்னையே அவரது அரசியல் சதுரங்கத்தில் உபயோகித்துக் கொண்டார் என்று அப்பாவின் மேல் எனக்கு மிகுந்த வெறுப்பு வந்தது .இவரையும் இவரது அரசியல் வாழ்க்கையையும் ஒழிக்க வேண்டும் என்ற வேகம் வந்தது .அதனால் தான் உடனே கிளம்பிவிட்டேன் இதோ இன்று நான் நினைத்ததை முடித்து விட்டேன் .உங்களுக்கு ஏதாவது ஒரு கட்டத்தில் சிறிதாவது அநியாயம் செய்து இருப்பேன் ஆனால் அதற்கு இன்று நியாயம் செய்துவிட்டேன் கண்கலங்க பேசியவளை இழுத்து அணைத்துக் கொண்டான் அபிராமன்.

” மக்கு என்ன பேச்சு பேசுகிறாய்?  நீயாவது எனக்கு அநியாயம் செய்வதாவது ?  அப்படி நான் நினைப்பேனா ? “

” 

ராஜி உங்களைக் கூட நான் மிகவும் தவறாக சில சமயங்களில் நினைத்திருக்கிறேன் .

அந்த தவறுக்கும் நான் நியாயம் செய்ய வேண்டும். அப்பா மறைந்து இருக்கும் இடம் எனக்குத் தெரியும் .அதனை உங்களிடம் சொல்லி விடுகிறேன் .சட்டப்படி அவரை கைது செய்து விடுங்கள் ” 

ராஜலட்சுமி திகைப்பாய் நிலானியை பார்த்தாள். உண்மைதான் என்பது போல் அவள் கைகளை பற்றினாள் நிலானி.

” நிலானி  நீங்கள் ஒரு நான்கு நாட்களாக இங்கே அபியை பார்த்து இருக்க வேண்டும் .இதுபோன்ற வார்த்தைகளை எல்லாம் சொல்லி இருக்க மாட்டீர்கள் . ” கொஞ்சம் இறுக்கமாக இருந்த சூழலை மாற்ற ராஜலட்சுமி சிரித்தபடி கூறினாள்.

” ஏன் அப்படி என்ன செய்தார் ? ” 

” நான் ராமாயணம் படித்திருக்கிறேன் .அதில் ராவணன் சீதையை கடத்திக் கொண்டு போனதும் ராமன் தவித்துப் போய் விடுவாராம் .பித்துப் பிடித்தது போல் காடு முழுவதும் சுற்றி அலைவாராம். எதிர்ப்படும் செடி கொடி பறவை மிருகங்கள் எல்லாவற்றிடமும் சீதையை பார்த்தாயா என்று திரும்பத் திரும்ப கேட்டு கொண்டிருப்பாராம் .ஆறுதல் சொல்ல வந்த தம்பியை அடித்து விரட்டாத குறையாக பேசுவாராம். இது எல்லாவற்றையும் உங்கள் புருசன் செய்து கொண்டிருந்தார் .அவருடைய அலப்பறை தாங்க முடியாமல் நாங்கள் தவித்துக் கொண்டு நின்றோம் ” 

நிலானி புன்னகையுடன் அப்படியா என்பதுபோல் அபிராமனைப் பார்க்க அவன் ” பொய் சொல்லாதே ”  என்று ராஜலட்சுமியை மிரட்டினான்.

“பெரியவர்களை சுற்றி வைத்துக் கொண்டு இது என்ன பேச்சு ? “சன்னமான குரலில் அவளை கண்டித்தான்.

” ஆஹா உன்னை எனக்கு தெரியாதா ? அன்று வீட்டில் பார்த்தேனே …தற்செயலாக மேலே மோதியவளை நீ காப்பாற்றி நிறுத்திய லட்சணத்தை …அடடா அப்போது உன் கண்களில் வழிந்த காதலிலும் மோகத்திலும் நான் மிரண்டு விட்டேன்.உண்மையாக சொல்வதானால்  என் நண்பனை அப்படி பார்க்க எனக்கு மிகவும் பிடித்திருந்தது ” ராஜலட்சுமி உணர்ச்சியுடன் பேச நிலானிக்கு தான் மனது தவித்தது .

தன்  தோழனை எந்த நிலையிலும் ரசிக்கும் இவளைப் போய் தவறாக நினைத்துக் கொண்டிருந்தேனே…

” உண்மைதான் நிலானி நான் உணர்ந்து சொல்கிறேன். நம் இதிகாசங்களில் கிருஷ்ணனை காதலின் அவதாரமாக பார்க்கிறோம் .ராமனை ஏகபத்தினி விரதன் என்று சொல்லி கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்தி வைத்து விடுகிறோம் .பல பெண்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்ட கிருஷ்ணனின் அன்பு ஒரே பெண்ணிடம் ராமனாக தரப்படும்போது அது எவ்வளவு வீரியத்துடன் இருக்கும் ? இதோ இந்த அபிராமனுக்கு உங்கள் மேல் இருந்த அன்பை காதலை நான் அப்படித்தான் உணர்ந்தேன் .நீங்கள் மிகவும் லக்கி ” 

ராஜலட்சுமி சொல்ல அதையே தானும் உணர்ந்த நிலானி  இத்தனை பேர் சுற்றி இருந்தும் அதை பற்றிய கவலை இல்லாமல் ஆசையாய் காதலாய் தன்மீது கொட்டிக்கொண்டிருந்த தன் ராமனின்  பார்வை மோகத்தில் தன்னை மறந்து அவனிடம் ஐக்கியமானாள்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு….

திருக்குமரன் சட்டத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட அவரது வழக்கினை விசாரித்து அவருக்கு பத்து வருடங்கள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது .




அவராகவே குற்றத்தை ஒப்புக் கொண்டதால் ஹைவேவிஸ் கிராமத்து ஜனங்கள் குற்றமற்றவர்களாக கருதப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்கள் .மாரியாயின் ஆவேசம் குறைந்து அமைதியானாள் .கொம்பேறி மூக்கனுக்கு  பணத்தின் மீது இருந்த ஆசையை  சில மாத சிறைவாசம் விரட்டி அடித்து இருக்க தாய்க்கும் மகனாக மனைவிக்கு கணவனாக ஒழுங்காக எஸ்டேட் வேலைகளில் நிலைத்திருக்க ஆரம்பித்தான்.

ஒரு மருமகனாய் திருக்குமரனுக்கு கிடைத்த தண்டனைக்கு எதிராக போராடி அதனை ஐந்து வருடங்களாக குறைக்க  செய்தான் அபிராமன் .ஐந்து வருடங்கள் சிறைவாசத்தை அனுபவித்து மனதாலும் உடலாலும் புதிய மனிதராக வெளியே வந்த திருக்குமரன் மீண்டும் தனது பழைய கிராமத்திற்கே தன்னுடைய பழைய முதலாளியின் வீட்டிற்கு நிலங்களை உழுபவனாக ஒரு விவசாயியாக திரும்பினார்.

பாசாங்கற்ற தந்தையின் பாசத்துடனும் அள்ள அள்ள குறையாத கணவனின் மோகத்துடனும் குறைகளற்ற நிறைவான வாழ்க்கையை வாழத் துவங்கினாள் நிலானி.

– நிறைவு –

What’s your Reaction?
+1
8
+1
6
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!