Serial Stories uravu solla oruvan உறவு சொல்ல ஒருவன்  

உறவு சொல்ல ஒருவன் – 3

3

கொஞ்ச நேரம் சத்தமெதுவும் வரவில்லை .அவள் ஏதாவது பதில் சொல்வாளென எதிர்பார்த்திருப்பானாயிருக்கும் .அவளோ பின்னிருந்து வந்த அந்த குரலுக்கு திரும்பியே பார்க்கவில்லை .இவனைப் பார்க்கவும்தான் அந்த வக்கீல் நின்று கொண்டார் போலும் என எண்ணிக்கொண்டாள் .

வேகமான ஷூக்களின் ஓசையுடன் அவளது பக்கவாட்டில் தெரிந்த உருவத்தையும் காண பிடிக்காதது போல் சற்றே தலையை எதிர்புறம் திருப்பிக்கொண்டாள் .

,”நான் உன்னிடம்தான் பேசுகிறேன் ” அழுத்தமாக கூறியபடி இப்போது அவளுக்கு எதிராக வந்து நின்றிருந்தான் அவன் .

” எனக்கு மலையாளம் தெரியாது …” இப்போது முகத்தை மறுபுறம் திருப்பிக்கொண்டாள் .




” ஓ…நான் கேட்டது புரியவில்லையோ ….? ” கேள்வி ஆங்கிலத்தில் வந்த்து .

” நிச்சயமாக , ஒரு எழுத்து கூட புரியவில்லை …” பதில் தமிழில் இருந்த்து .

” எனக்கு மட்டும் இந்த மொழி புரியுமா ….? ” அவளது தமிழ் பதிலை கேலியாக கேட்டான் .

” அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை ….” அலட்சியமாக  உதடு சுளித்தாள் .

” நமது அறிமுகங்களை எந்த மொழியில் வைத்துக் கொள்ளலாம் …? ” ஆங்கிலத்திலேயே தொடர்ந்தான் .

” அறிமுகங்களுக்கு அவசியம் இருக்கிறதா என்ன …? “

” உன் வரையில் தேவையில்லைதான் .ஆனால் ….” என்றவன் குனிந்து சாந்தனுவை நோக்கி ” ஹாய் …” என்றான் .கை குலுக்குவதற்காக கை நீட்டினான் .

சற்று முன் அம்மாவிடம் கோபமாக பேசிய அந்த புதியவனை மிரடசியோடு நிமிர்ந்து பார்த்துவிட்டு அம்மாவின் பின்புறம் மறைந்து கொண்டான் சாந்தனு .

அவன் முகம் கடுத்தது .சத்யமித்ராவின் முகம் மலர்ந்த்து .தன் பின்னால் மறைந்த குழந்தையை அணைத்தபடி ஒரு சவாலான பார்வையுடன் அவனைப் பார்த்தபடி நின்றாள் .

” ஹாய் ப்ரின்ஸ் …என்னிடம் வருகிறீர்களா ..? நிறைய சாக்லேட் வாங்கி தருகிறேன் …” அவனது கொஞ்சல் குரலை திரும்பிக் கூட பார்க்கவில்லை குழந்தை .

நிமிர்ந்து சத்யமித்ராவின் திருப்தியான முகத்தை பார்த்தவன் தரையில் மண்டி போட்டு குழந்தையின் உயரத்திற்கு தன்னை குறைத்துக்கொண்டு …

” டேய் கண்ணா …என்னிடம் வருகிறாயா ..உனக்கு நிறைய சாக்லேட் வாங்கித் தருகிறேன் ….” என்று சுத்தமான தமிழில் கேட்டான் .

சத்யமித்ரா விழிகளை விரித்தாள் .இவன் எப்போது தமிழ் கற்றான் ..? கண்களை சிமிட்டாமல் அவனை ஆச்சரியமாக பார்த்தபடியிருக்க …

தனக்கு புரிந்த மொழி பேசியவனை கண்டதும் தனது தயக்கத்திலிருந்து வெளி வந்த சாந்தனு மெல்ல அம்மாவின் பின்னிருந்து தலையை நீட்டினான் .லேசாக புன்னகைத்தான் .

” ஹாய் பிரின்ஸ் என் பெயர் கிறிஸ்டியன் ஆடம்ஸ் .உங்க பெயர் என்ன …? ” தனது பேன்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு பட்டை சாக்லேட்டை எடுத்து நீட்டியபடி கேட்டான் .

” என் பெயர் சாந்தனு .ஆனா அம்மா கண்ணான்னு கூப்பிடுவாங்க .அம்மா வாங்கிக்கவாம்மா ….? ” அந்த பெரிய கவர்ச்சிகரமான சாக்லேட்டை ஆசையுடன் பார்த்தபடி கேட்டான் .

வாங்காதே என தடுத்துவிடத்தான் அவளுக்கு ஆசை .அவள் வேண்டாமென்றால் சாந்தனு அதை திரும்பியும் பார்க்க மாட்டான் .ஆனால் குழந்தையின் கண்ணிலிருந்த  ஆர்வம் அவளை அது போல் சொல்ல தயங்க வைத்தது .

திரும்பி அவனை பார்க்க அவனும் அப்போது இவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான் .

நான் வேண்டாமென்றால் குழந்தை வாங்க மாட்டான் தெரியுமா ….கண்ணால் அவனுடன் பேசியபடி , சில நொடிகள் அவன் எதிர்பார்ப்பை எகிற வைத்துவிட்டு ” வாங்கிக்கோடா கண்ணா …” என்றாள் .

மென்மையாய் குழந்தையின் கன்னத்தை வருடியவன் எழுந்து , ” அறிமுகங்கள் முடிந்த்தா …? ” என்றான் .

கேள்வி மலையாளத்திறகு மாறிவிட்டதால் புரியாதது போல் முகத்தை திருப்பிக் கொண்டாள் சத்யமித்ரா .

” அம்மா இந்த அங்கிள் யாரும்மா ….? ” பற்கள் பதிந்திருந்த சுவையான சாக்லேட்டினால் இந்த அறிமுக ஆர்வம் சாந்தனுவிற்கு வந்திருந்த்து .

சத்யமித்ரா  திணற , புருவங்களை உயர்த்தியபடி அவள் பதிலுக்கு காத்திருந்தான் கிறிஸ்டியன் .

” அ..அது வந்து …இ…இவர் நமக்கு தூரத்து சொந்தம் …” புரியாவிட்டாலும் புரிந்தது போல் தலையாட்டிக்கொண்டான் சாந்தனு .




” குழந்தையிடம் என்னை அறிமுகப்படுத்தும் லட்சணம் இதுதானா …? ” கோபமாக கேட்டான் .

” எனக்கு அப்படித்தான் .அதையே குழந்தைக்கும் அறிமுகப்படுத்தினேன் .உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் , பிடித்தமான விதத்தில் நீங்களே அவனுக்கு அறிமுகமாகிக் கொள்ளுங்கள் …”

” எவ்வளவு அக்கறையற்ற பேச்சு …?”

” ஆனால் மிகுகுகுகுந்ந்ந்ந்ந்த அக்கறையுள்ளவர்களிடத்தில் …” பட்பட்டென சத்யமித்ராவிடமிருந்து பதில் வந்த்து .அனுபவித்து வந்திருந்த வேதனை அவளை அப்படி பேச வைத்தது .

ஒரு நிமிடம் உதடு கடித்து நின்றவன் குனிந்து சாந்தனுவை கைகளில் தூக்கிக்கொண்டான் .” நாம் உள்ளே போகலாமா ப்ரின்ஸ் …? ” என்றான் .

திடுமென அவன் தன்னை தூக்கவும் மிரண்ட சாந்தனு ” இல்லை வேண்டாம் .என்னை கீழே விடுங்கள் …அம்மா …”  என திமிறினான் .

” கண்ணா …இதோ பார் .சாக்லேட் , ஐஸ்க்ரீம் , டாய்ஸ் …..” என அவனின் எந்த சமாதானமும் குழந்தையிடம் எடுபடாமல் போக , திகைத்து பின் உதவிக்காக சத்யமித்ராவையே நோக்கினான் .

ம் …அப்படி வா …என்ற பார்வையை அவனிடம் கொடுத்துவிட்டு , ” கண்ணா இதோ பார் அம்மாவும் வருகிறேன் .நீயும் வா .நாம் இருவருமே உள்ளே போகலாம் ….” பேசியபடி வீட்டினுள் எட்டெடுத்து வைத்தாள் .

சாந்தனு திமிறலை சிறிது குறைத்தாலும் முகத்தை முறைப்பாய் வைத்துக்கொண்டு தனது விருப்பமின்மையை செயலில் காட்டினான் .

தன்னை வாகாக அணைத்திருந்த கிறிஸ்டியனின் மேலே இலகுவாக சாயாமல் தனது இருகரங்களாலும்  அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளியபடி அவனுடன் ஒன்றாமல் தன்னை தள்ளி வைத்துக்கொண்டான் .

மூக்கை சுளித்து , கண்களை சுருக்கி ,வாயை ஒரு மாதிரி குவித்துக்கொண்டான் .அவனுக்கு பிடிக்கவில்லையாம் .

இந்த நிலையில் குழந்தையைப் பார்த்ததும் சத்யமித்ராவிற்கு அவனை அப்படியே அள்ளி அணைத்து முத்தமிட வேண்டும் போலிருந்த்து .சிரிப்பு வந்தது .முகம் மலர புன்னகைத்தாள் .

சத்யமித்ராவின் சிரிப்பில் கோபமான கிறிஸ்டியன் அவளை முறைத்தபடி திரும்பி சாந்தனுவை பார்த்தான் .குழந்தையின் பாவனை அவனுக்குமே சிரிப்பை வரவழைக்க , பளிச்சென வாய் விட்டு சிரித்தவன் தன் நெற்றியால் சாந்தனுவின் நெற்றியில் செல்லமாக மோதினான் .

” ஹேய் ப்ரின்ஸ் ..என்ன சேட்டை இது …ம் …? ” என்றான் .

” என்னை இறக்கி விடுங்க ….” முறைப்பாய் சொன்னான் சாந்தனு .

” ஓ.கே ..டியர் …ஓ.கே …” என அவனை கீழே இறக்கிவிட்டவன் சரண்டர் போல் தனது இரு கைகளையும் உயர்த்தினான் .

” ம் …” என்ற திருப்தியுடன் அம்மாவின் சேலை முந்தானையை பிடித்துக் கொண்டான் சாந்தனு .

” இங்கே ப்ரெஷ்ஷாகி கொள்ளுங்கள் . ஒரு மணி நேரத்தில் தயாராகி இருங்கள் .வந்து அழைத்து செல்கிறேன் .அம்மாவை பார்க்க வேண்டும் …” அந்த அறை வாசலில் நின்று கூறினான் .

சரியென்று அறைக்கதவை மூடப்போனவளை கதவில் கை வைத்து தடுத்தான் .அவள் கண்களுக்குள் உற்று பார்த்து ” தூரத்து சொந்தமா நான் ….? ” என்றான் .

சத்யமித்ரா திணறினாள் .

” இதற்கு நீ பதில் சொல்ல வேண்டியதிருக்கும் ….”   ஒரு விரல் ஆட்டி எச்சரித்தவன் …

அறைக்குள் போய் நின்று சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்த சாந்தனுவை அழைத்து  ” ப்ரின்ஸ் ..பை …” என்றான் .படபடவென கீழே இறங்கி போய்விட்டான் .

கதவை மூடி அதன் மேலேயே சாய்ந்து நின்று தனது நெஞ்ச படபடப்பை குறைத்துக் கொண்ட சத்யமித்ரா விழிகளை சுழற்றி அந்த அறையை பிரமிப்பாக பார்த்தாள் .இது போன்ற வசதியான அறைகளையெல்லாம் அவள் சினிமாவில் மட்டுமே பார்த்திருக்கிறாள் .

பெருமூச்சு ஒன்றுடன் தலையை உலுக்கிக் கொண்டவள் அங்கிருந்த ஒவ்வொரு சாமான்களையும் ஆச்சரியமாக தொட்டு பார்த்துக் கொண்டிருந்த சாந்தனுவை தூக்கிக் கொண்டு , அவன் மனம் போல் பேச்சு கொடுத்தபடி அவனை குளிப்பாட்டி தயாராக்க தொடங்கினாள் .

அந்த இரட்டை கதவுகளில் ஒன்று திறந்த்தும் இரட்டை கிளிகளில் ஒன்று பிரிந்துவிட …மீண்டும் பூட்டிக்கொள்கையில் இரு கிளிகளும் திரும்ப இணைந்து முத்தமிட்டுக் கொண்டன. அந்த அறைக்கதவில் செதுக்கப்பட்டிருந்த ரசனையான இந்த சித்திரத்தினை ரசித்தபடி வெளியே நின்று கொண்டிருந்தாள் சத்யமித்ரா .

அந்த வீட்டு எஜமானியம்மாவை பார்க்க வந்திருந்தாள் .
கிறிஸ்டியன் வந்து அழைத்து செல்வதாக கூறியிருந்தாலும் அவன் வரும் வரை காத்திருக்க பிடிக்காது தானாகவே வேலையாட்களிடம் விசாரித்துக்கொண்டு இங்கே வந்து நின்றிருக்கிறாள் .

அந்த அறையின் வெளியே நின்ற பெண்ணிடம் விபரம் சொல்லவும் அவள் மேடத்திடம் கேட்டுவிட்டு வருகிறேன் என உள்ளே போயிருந்தாள் .

பெரிய மகாராணி போல் பந்தாதான் …என எண்ணும்போதே அவர்களுக்கு உடல்நலமில்லையென கேள்விப்பட்டது நினைவு வர, தனது வேகத்தை குறைத்துக்கொண்டாள் .

சாந்தனுவின் பாட்டி அவர்கள் என நினைவுபடுத்திக்கொண்டாள் .கிறிஸ்டியனிடம் சாந்தனுவின் ஒட்டாத தன்மை நினைவு வர ,குனிந்து குழந்தையின் முன் மண்டியிட்டு அமர்ந்து …

” கண்ணா ..இப்போ நாம் ஒரு பாட்டியை பார்க்க போகிறோம் நீ அவுங்ககிட்ட நல்லா பேசனும் .சமர்த்தா நடந்துக்கனும் சரியா …? ” என்றாள் .

” ஓ…அப்படியா ..சரிம்மா …” கண்களை உருட்டி அழகாக தலையசைத்தான் சாந்தனு .இவனுக்கு அம்மா என்ன சொன்னாலும் சரிதான் …பெருமிதமாக நினைத்தபடி அன்பு சுரக்க அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டாள் .

அந்த நேரத்தில் அறைக்கதவு நன்றாக திறக்கப்பட உள்ளேயிருந்த கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்திருந்த பெண்மணி , இவர்களை …இவர்கள் அணைப்பை கூர்மையாக பார்த்தபடியிருந்தாள் .

” மேடம் கூப்பிடுறாங்க .போய் பாருங்க அந்த பணிப்பெண் கூறிவிட்டு போய்விட்டாள் .

அப்பா என்ன மாதிரியான ஊடுறுவும் பார்வை என்று நெஞ்சம் தடதடக்க நினைத்தபடி சாந்தனுவுடன் உள்ளே நுழைந்தாள் சத்யமித்ரா .இதே பார்வையைத்தான் சற்று முன் கிறிஸ்டியனிடம் கண்டாள் .அப்படியே அம்மாவின் பார்வை போல அவனுக்கு …




ஆனால் ஆளை அறுக்கும் அந்த பேச்சில் மட்டும் அப்பாவின் ஜாடை .முந்தைய அவனது பேச்சுக்களின் நினைவில் எட்டிக்காயானது அவள் உள்ளம் .

எப்படி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள என தடுமாறியபடி அவள் நின்றபோது ….மிகவும் சோர்வுடன் பலமிழந்தாற் போல் சாய்ந்திருந்தவள்தான் .ஆனாலும் ….

” நீதான் மித்ராவா ….? ” கணீரென்ற குரலில் உடல்நிலைக்கும் குரலுக்கும் சம்பந்தமற்ற தொனியில் கேட்டாள் அந்த அம்மா .

” அம்மா இவர்கள் சத்யமித்ரா .இவர்கள் அக்காதான் சங்கமித்ரா .நமது ப்ரின்சின் அம்மா …” என்றபடி உள்ளே வந்தான் கிறிஸ்டியன் .

அவன் பார்வையில் நான்தான் அழைத்து வருவதாக சொல்லியிருந்தேனே …அதற்குள் என்ன அவசரம் ….? என்ற குற்றச்சாட்டு இருந்தது .

What’s your Reaction?
+1
2
+1
7
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!