ramanin mohanam Serial Stories ராமனின் மோகனம்

ராமனின் மோகனம் – 11

11

” சேலை உங்களுக்கு அவ்வளவாக பழக்கமில்லாத உடையோ ? ” கேள்வி கேட்ட ராஜலட்சுமியை ஆச்சரியமாக பார்த்தாள் நிலானி .இதே கேள்வியைத்தான் அவள் அவளிடம் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தாள் . ராஜலட்சுமி அழகாக புடவை அணிந்து கொண்டு வந்திருந்ததை பார்த்ததும்தான் நிலானியும் ஏதோ உந்துதலில் தனது பெட்டிக்குள் இருந்த புடவையை எடுத்து அணிந்து இருந்தாள்.

” இதையேதான் நானும் உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் ” தயங்காமல் தன் மனதில் உள்ளதை வெளிப்படுத்தினாள்.

“ஆமாம் . சேலை எனக்கு அவ்வளவாக பழக்கம் இல்லைதான் .எனது உத்தியோகத்திற்கும் அது ஒத்துவராத உடைதான் .ஆனாலும் இன்று ஏனோ அணிய வேண்டும் போலிருந்தது ” ராஜலட்சுமியின் கண்கள் கனிந்து சிரித்தன.

” ஏன் ? அப்படி இன்று என்ன விசேஷம் ?” 

” விசேஷமென்றால் …. நான் அபியை பார்க்க வந்திருக்கிறேனே …அதுவே விசேஷம்தானே ? ” ராஜலட்சுமி தலைசரித்து சிரிக்க நிலானிக்கு எரிச்சல் வந்தது.

” இதில் என்ன பெரிய விசேஷம் ? நீங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்பவர்கள் தானே ? ” 

” எங்களது வேலைகளுக்காக சந்தித்துக் கொள்வது என்பது வேறு . இப்போது சில இக்கட்டுகளிலிருந்து ராமன் மீண்டு வந்து இருக்கிறான். இந்த நேரத்தில் மனது லேசாக இருக்கிறது .அப்போது அவனை அவன் வீட்டிலேயே  சந்திப்பது என்பது வேறு …” ஏதோ கனவுலகில் சஞ்சரித்தன போலிருந்தன ராஜலட்சுமியின் கண்கள்




” ராமனா ? யாரைச் சொல்கிறீர்கள் ?” 

” அபியை தான் .அவனது முழு பெயர் உங்களுக்குத் தெரியாதா  ? ‘ ஆச்சரியம் இருந்தது ராஜலட்சுமியின் குரலில்.

” தெரியாதே… என்ன பெயர் ? “. 

” அபிராமன் .இதுதான் அவனது முழுப்பெயர் .ஆனால் எல்லோருக்கும் அபிதான் .எனக்கென்னவோ அவனை ராமன் என்று அழைக்க பிடிக்கும் .ஏனென்றால் அவன் அந்தப் பெயருக்கு மிகவும் பொருத்தமானவன் என்று தோன்றும் ” 

” ராமன் என்ற பெயருக்கு பொருத்தமானவன் என்றால்…?” 

” ராமனைப் போல உற்றவளை தவிர மற்றவளை வணங்கும் குணம் படைத்தவன் ராமன். அந்த ராமாயண ராமனை சொல்லவில்லை.  எனது நண்பன் ராமனை சொல்கிறேன் ” 

ராஜலட்சுமியின் விளக்கத்தில் நிலானி திகைத்தாள் அவள். அறிந்த அபிக்கும்… இல்லை அபிராமனுக்கும் இதோ இவள் சொல்பவனுக்கும் நூற்றுக்கு நூறு வித்தியாசங்கள்.

” உங்களுக்கு அவர் எப்படி பழக்கம் ? ” 

” காலேஜ் மேட்ஸ் . ஒரே கல்லூரியில் படித்தோம் . படித்த காலத்தில் இருந்தே எனக்கு அவன் மீது ஒரு கிரேஸ் .” வெளிப்படையாக தனது மனநிலையை பகிர்ந்து கொண்டாள் ராஜலட்சுமி.

” இத்தனை நாட்களாக அவரிடம் இதனை நீங்கள் சொல்லவில்லையா ? ” 

” சொன்னேனே அவன் பெயருக்கேற்ற ராமன் என்று .எனக்கு மட்டும் அல்ல எங்கள் கல்லூரி பெண்கள் அனைவருக்கும்  அவன் ஹீரோ தான் .எல்லோருக்கும் அவன் மீது கண்கள். ஆனால் அவன் யாரையாவது திரும்பிப் பார்க்க வேண்டுமே… என் மனதையும் ஒருத்தி தொடுவாள் அப்போது பார்ப்போம் என்று வைராக்கியமாக இருக்கிறானே ” 

” அவரை நினைத்துக் கொண்டு இன்னமும் திருமணம் முடிக்காமல் இருக்கிறீர்களா ? “இதனை கேட்கும்போது நை நையென  என்று நிலானியின் மனதை ஏதோ அரித்தது.

” ம் …அப்படி சொல்ல முடியாது .எனக்கு வீட்டில்    அம்மா அப்பா வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் .திருப்தியான வரன் எதுவும் இதுவரை அமையவில்லை அதுவரை நான் ராமனை பார்த்துக் கொண்டிருக்கிறேன் .இதில் தவறேதும் இல்லையே ” ராஜலட்சுமி ரசித்து சிரித்தாள்

” இ…இது தவறில்லையா ? ” 

” இதில் என்ன தவறு ?  எனக்கு அவனைப் பார்க்க , அவனுடன் பேச , அவனுடன் இருக்க ..பிடித்திருக்கிறது. செய்கிறேன் .தவறாக எதுவும் செய்யவில்லையே .எனக்கென ஒருவன் வந்தால் ஒருவேளை இவனை மறந்து கூட போய் விடுவேனாக இருக்கும். அப்போது வருவதை அப்போது பார்த்துக் கொள்ளலாம் ” இப்படிச் சொன்னாலும் ராஜலட்சுமியின் அடிமனதில் அபிராமன் மேலிருந்த பிரேமை தெளிவாக தெரிந்தது .அதனை நிலானியின் கண்களும் காட்டின போலும்.

” என்ன நீ ராமனை நினைத்துக் கொண்டிருந்தால் எங்கே கல்யாணம் முடிக்க போகிறாய்  என்கிறாயா  ? எல்லாம் முடிப்பேன். எல்லாருடைய காதலும் எல்லா நேரத்திலும் நிறைவேறவா செய்கிறது ? என் காதலும் அப்படி இருந்து விட்டுப் போகிறது .ஆனாலும் ஒரு சிறு நப்பாசை எப்போதாவது ராமனின் மனது மாறாதா என்று இருக்கத்தான் செய்கிறது ” 

” இந்த ராமனை அவருக்கு முன்பாகவே அழைக்க வேண்டியது தானே ? “

” அப்படித்தான் எனக்கும் ஆசை. ஆனால் அது அவனுக்கு  பிடிக்காது .அபியின் குணத்தை பார்த்து எங்கள் கல்லூரி பெண்கள் எல்லோருமே அவரை ராமன் ராமன் என்றே கூப்பிட அது தன்னை கேலி செய்வது போல் இருக்கிறது என்று அப்படி கூப்பிட கூடாது என்று சொல்லி விட்டான். வீட்டிலும் அவரது அம்மாவும் அப்பாவும் மட்டும் தான் ராமன் என்று அழைப்பார்கள் .மற்ற எல்லோருக்கும் அவன் அபி தான் .ஆனாலும் இதுபோன்ற தனிமையான நேரங்களில் நான் என் ஆசை தீர அவனை ராமன் என்று அழைத்துக் கொள்வேன் ” 

ராஜலட்சுமியின் காதல் நிலானிக்கு வித்தியாசமாக தெரிந்தது .இந்த காலத்தில் இப்படிப்பட்ட பெண்களும் இருக்கிறார்களா ? ஆச்சரியமாக அவளைப் பார்த்தாள்.

” இப்படி நீங்கள் போற்றுவதற்கு தகுதியானவரா அவர் ? ” 

” நிச்சயம் . அவனது குடும்பப் பின்னணி தெரியுமா உனக்கு ? மிகப்பெரிய கோடீஸ்வரர்களின் குடும்பம் அவர்களுடையது . ” ராஜலட்சுமியின் கைகள் முன்னால் பெரியதாக இருந்த விளம்பர போர்டை காட்டியது .இந்தியா முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் புகழ்பெற்ற காபி ,  டீ கம்பெனிக்கான விளம்பர போர்டு அது .

” இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பையன் . இந்தியாவைத் தாண்டி வெளிநாட்டிலும் ஏகப்பட்ட சொத்துகள் இவர்களுக்கு இருக்கிறது . ஆனால் அவனைப் பார்த்தால் அப்படி தெரிகிறதா ? ” 

நிலானியின் கண்களும் பிரமிப்பாய்  விரிந்தன .இந்த போர்டு இங்கே சும்மா விளம்பரத்திற்காக வைக்கப்பட்டிருப்பதாக அவள் நினைத்திருந்தாள் . இப்போது இந்த மாபெரும் கம்பெனியின் ஓனரே  இவன் தானா ? 

” இங்கே இருக்கும் காபி டீ எஸ்டேட்டுகளை  ஐந்து தலைமுறைகளாக ராமனின் குடும்பம்தான் நிர்வகித்து வருகிறது.  இங்கிருக்கும் மக்கள் எல்லோரும் அவர்களது குடிமக்கள் போன்றவர்கள்.  அதனால்தான் அவர்களுக்கு ஒரு தீமை என்றதும் ராமன் இப்படி பதறுகிறான் .அவர்கள் தவறே செய்தாலும் அதனை திருத்தி அவர்களை கொண்டுவர வேண்டும் என்று நினைக்கிறான். தப்பு செய்த பிள்ளையை தண்டித்தே திருத்த நினைக்கும் அன்னையைப் போல…” 

” அங்கே என்ன தவறு நடக்கிறது ? ” 




” நாட்டுத் துப்பாக்கிகள் தயார் செய்கிறார்கள் மிகவும் அதிக அளவில் .ஒரு பெரிய தொழிற்சாலையே அங்கே இயங்கிக்கொண்டிருக்கிறது .மூட்டை மூட்டையாக துப்பாக்கிகள் அள்ளினோம் .இவற்றோடு நாட்டு வெடிகுண்டுகளும் …இவைகளெல்லாம் ராமன் அறியாமலேயே அவன் ஊருக்குள் நடந்து கொண்டிருப்பதில் அவன் மிகவும் மனம் நொந்து போனான் ” 

அடை மழையின் பின்  சாரல் விழுந்து அதுவும் நின்றதும் சொட்டு சொட்டென்று  சொட்டும் மழை நீர் துளிகள் போல வந்து விழுந்த அபிராமனின்  விபரங்கள் அனைத்தையும் நிலானி உள் வாங்கிக்கொண்டாள்.

” நீங்கள் ஏதோ பேச வேண்டும் என்று சொன்னீர்களே நிலானி ?என்ன விஷயம்?  “

இவ்வளவுக்கும் பிறகும்  இவள் சொல்வதை இந்த இன்ஸ்பெக்டரம்மா

 நம்புவாராக்கும் ? ஆனாலும் நிலானி சொன்னாள்…

“உங்கள் அபிராமன் என்னை இங்கே கடத்திக் கொண்டு வந்து வைத்துள்ளார்” 

” வாட் ? ஜோக் ஆப் தி இயர்…” 

” பொய்யில்லை. நிஜம்தான். கடத்திக் கொண்டுவந்து வைத்ததோடு என்னை தொடுவதற்கும் சரியான நேரம் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். இங்கே இவருக்கு இந்த பிரச்சனைகள் வந்ததால் தான் அது தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. இல்லையென்றால் எப்போதோ என் விருப்பம் இல்லாமலேயே என்னை சூறையாடி இருப்பார் “

ராஜலட்சுமி பொறுமையாக நிலானியின் குற்றச்சாட்டை கேட்டு முடித்த பின் ” நிறைய கதைகள் படிப்பீர்களோ ?அல்லது நிறைய சீரியல் பார்ப்பீர்களோ  ? “என்றாள்.

இது நிலானி  எதிர்பார்த்தது தான் .ஆனாலும் பைத்தியமே என்பதுபோன்ற ராஜலட்சுமியின் முகபாவங்களில் மனம் நொந்தாள் .தோள்களைக் குலுக்கிக் கொண்டு மெல்ல நடந்தாள். எதுவும் பேசாமல் ராஜலட்சுமியும் உடன் நடந்தாள்.

புதர்களை கலைத்தும் எடுத்தும் பார்த்ததால் களேபரமாக இருந்த சுற்றுப்புறத்தை நான்கு பேர் ஓரளவு சரி செய்து கொண்டிருந்தனர் .அவர்களுக்கிடையே இருவரும் மெல்ல நடந்தனர்

” நீங்கள் நிஜமாகத்தான் சொல்கிறீர்களா  ? “ராஜலட்சுமி மெல்ல கேட்டாள்

” ஆமாம்” 

“ராமன் உங்களை காதலிக்கிறானோ ? ” அவளது அனுமானம் நிலானிக்கு தூக்கிவாரிப்போட்டது.

” காதலிக்கும் பெண்ணைத்தான் கற்பழிப்பேன் என்று மிரட்டுவார்களோ ? ” சீறினாள்.

” தனது இயல்பை மீறி ஒருவர் ஒரு காரியம் செய்தால்  அதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும் அல்லவா ?அது ஏன் லவ்வாக இருக்கக் கூடாது ? ” 

” லவ்வும் இல்லை .மண்ணாங்கட்டியும் இல்லை .அவரை நான் தப்பாக நினைத்து தண்டித்து விட்டேன் .அதற்காக என்னை பழி வாங்குவதற்கு இப்படி செய்து கொண்டிருக்கிறார் ” 

” இது கொஞ்சம் பரவாயில்லை. ஒத்து வருகிறது. ஆனாலும்… ராமனை… அப்படி நினைக்க….ம்ஹூம்  நீங்கள் தான் ஏதோ தப்பாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் நிலானி ” ராஜலட்சுமி இறுதியாக இப்படி முடித்துவிட்டாள். அத்தோடு அபிராமனுக்கும் அவளுக்கும் கைகொடுத்து நிறைய வாழ்த்துக்கள் சொல்லி விட்டு கிளம்பி போயே விட்டாள்.

” ராஜி என்ன சொன்னாள் ? ”  அபிராமன் அவசரமாக அவளிடம் கேட்டான்.

உன்னை காதலிப்பதாகச் சொன்னாள் என்று சொல்லிவிடலாமா நா வரை வந்த வார்த்தைகளை விழுங்கினாள் நிலானி.

” நீ ரொம்ப உத்தமனாம் .பெண்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டாயாம் . ராமனின் மறு அவதாரமாம் .உனது கல்லூரி தோழி உன்னை பற்றி தப்பு தப்பாக புரிந்து கொண்டிருக்கிறாள். ” அலட்சியமாய் கையசைத்தான் இது தெரிந்ததுதானே என்பது போல் இருந்தது அந்த கையசைவு.

” நீ என்ன சொன்னாய் ? ” எதிர்பார்ப்புடன் கேட்டான்.

” உனக்குத் தெரியாதா ?நான் சொல்வதெல்லாம் அந்த இன்ஸ்பெக்டரம்மாவிடம் எடுபடாது என்று தெரிந்து தானே என்னை தைரியமாக அவர்களோடு அனுப்பி வைத்தாய் ? ” 

அபிராமனின் கண்களில் சிறு நிம்மதி தெரிந்ததோ ? நிலானி அவனை கூர்ந்தாள் . “ஒரே ஒரு சந்தேகம் மட்டும் கேட்டுக் கொள்ளட்டுமா ? ” 




அவன் தலையசைத்தான் .” கேள்” 

” இந்த ஆயுதங்களை எல்லாம் தயாரிக்க இந்த மக்களை நீயே பழக்கி விட்டு இப்போது இடரென்று வரவும் அவர்களை மாட்டிவிட்டு நீ தப்பித்துக் கொள்ள வில்லைதானே ? ” 

அவளது கேள்வியில் அவன் முகம் சிவந்தது . “அடியேய்  உன்னை ”  கையில் கிடைத்த எதையோ தூக்கிக் கொண்டு அவளை அடிக்க வர நிலானி ஓடினாள்.

வெளியே ஓடி விடுவதற்காக வாசல் கதவை திறந்தவள் திகைத்தாள். வாசலில் சிறு கும்பலாக சில பெண்கள் நின்றிருந்தனர்.

What’s your Reaction?
+1
5
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!