pacha malai poovu Serial Stories பச்சைமலை பூவு

பச்சை மலை பூவு – 13

13

புலர்வுகள் பொழுதுக்கானவைகள் மட்டுமன்று 

உணர்வுக்கானவையும் கூட

உன் உணர்வுகளின் குவியலில்

 என் பொழுதுகளின் புலர்வுகள்

” சிகரெட்டை பிடுங்கி போட்டுவிட்டேன் .விஸ்கி பாட்டிலையும் சிகரெட் பெட்டியையும் தேவயானி தேடி எடுத்துக்கொண்டு வந்து குப்பையில் போட்டு விட்டாள். இங்கே இருக்கும் வரை இந்த பழக்கம் எல்லாம் கூடாது என்று உறுதியாகச் சொல்லிவிட்டேன். அவரும் ஒத்துக் கொண்டு இருக்கிறார் .எங்களிடம் இருக்கும் வரை நாங்கள் கவனமாக பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் கவலைப்பட வேண்டாம் மேடம் .” சொர்ணம் மங்கையர்கரசியிடம் போனில் பேசிக்கொண்டு இருந்தாள்.




எதிர் புறம் பேசிய மங்கையர்க்கரசியின் மகிழ்ச்சியை தேவயானியால்  இங்கேயே உணர முடிந்தது. இது போன்ற கெட்ட பழக்கங்களில் ஊறிக் கிடப்பவனுக்கு சிறு கண்டிப்பிறகு கட்டுப்பட்டு அதனை தவிர்க்க முடியும் என்பதே அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது .இதுபோன்ற கட்டுப்பாடுகள் ரிஷிதரனை அவர்கள் விடுதியிலிருந்து விரட்டிவிடும் என்றே அவள் எதிர்பார்த்திருந்தாள். ஆனால் அவர்களது சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு மிகவும் நல்ல பிள்ளையாக நடந்து கொண்டிருந்தான் அவன்.

அவனை சந்தித்த முதல் நாளிலிருந்து இதோ இப்போது வரை அவனை புரிந்துகொள்ளவே முடியவில்லை அவளால் . சில நேரம் அவளிடம் சிகரெட் விஸ்கி வேண்டுமென்று கேட்பான்தான் .அதுவும் அவளிடம் மட்டும்தான் .சொர்ணத்திடம்  மிகவும் நல்ல பிள்ளையாக நடந்து கொண்டிருக்கிறான் . அவனது இந்த ஆகாத தேவை வேண்டல்களை  தன்னை சீண்டுவதற்கானவைகளாகவே பார்த்தாள் தேவயானி.

” எல்லா பிள்ளைகளும் எல்லா நேரங்களும் ஒன்றுபோலவே நடந்து கொள்வார்களா மேடம் ? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கும். சசி தம்பி குணம் அப்படி என்றால் ரிஷி தம்பி குணம் இப்படி .தாயாக நாம்தான் இருவரையும் அவரவர்க்கு ஏற்றபடி வழிநடத்தி போகவேண்டும் .என்னை பொறுத்தவரை  ரிஷி தம்பி ஒரு பிடிவாத குழந்தை.  அவரை வெகு சீக்கிரமே நல்வழிப்படுத்தி விடலாம் .அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது .இங்கே இருக்கும் வரை அவரைப்பற்றிய கவலைகள் இல்லாமல் நீங்கள் நிம்மதியாக உங்கள் தொழிலை பாருங்கள் ” 

சொர்ணம் போனிலேயே தனது தோழிக்கு தேவையான ஆறுதல்கள் சொல்லிக்கொண்டிருக்க தேவயானி காலை நேர வேலைகளை பார்த்தபடி அதனை கேட்டுக்கொண்டிருந்தாள் .

” சீனி சேவிற்கு பாகு பக்குவம் உன் அம்மா தான் பார்க்கவேண்டும் .காலை வேலைகளை விட்டுவிட்டு இப்படி போனிலேயே இருந்தால எப்படி ? எத்தனை வேலைகளை நானாகவே பார்ப்பது ? ” நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்தபடி உளுந்து வடை தட்டி எண்ணையில் போட்டுக்கொண்டிருந்தாள் சுனந்தா.




தேவயானி மெல்ல மனதிற்குள் சிரித்துக் கொண்டாள் .சுனந்தா நல்ல மூடில் இருந்தால் சொர்ணமும் தேவயானியும் அவளுக்கு அத்தை ,நாத்தனார் .இந்த உறவுமுறைகளை சொல்லி தேன் சொட்ட பேசுவாள் .ஏதாவது கோபத்தில் இருக்கும்போது உன் அம்மா , உங்க மகள்  உங்க தங்கை இப்படி அடுத்தவீட்டு பெண்களைப்போல அவளுடைய விளித்தல் இருக்கும்.

வெட்டிய வெங்காயத்தையும் , காய்கறிகளையும் தனித்தனியாக எடுத்து வைத்துவிட்டு ” அம்மா முக்கியமான விஷயம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் அண்ணி .அந்த முறுக்கு மாவை இங்கே கொடுங்கள் எனக்கு பக்குவம் தெரியும் நான் பிசைந்து வைத்து விடுகிறேன் .நீங்கள் வடையை முடித்துவிட்டு அதனை பிழிந்து வைத்து விட்டீர்களானால் அம்மா வரவும் பாகு தயாரித்து சுட்டு போட்டுவிடலாம் ”  என்றாள் தேவயானி.

” உனக்கு தெரியுமா ? நான் ஒரு தடவை மாவு பிசைந்து அது சரியாக வரவில்லை .பிறகு உன் அம்மா திரும்பவும் மாவு பிசைந்து செய்ய வேண்டியது ஆயிற்று .நீயும் வீணாக்கி வீணாக்கி விடாதே ” 

சுனந்தா சமையல் சம்பந்தமாக எவ்வளவோ படித்தவள் தான் .மிகவும் ருசியாக சமைப்பவளும் கூட.  ஆனாலும் சொர்ணம் சமைக்கும் சில பாரம்பரிய உணவுகள் சுனந்தாவிற்கு இன்னமும் கை வருவதில்லை. இந்த மனக்குறை அவளுக்கு எப்போதும் உண்டு.

” கொஞ்சம் நெகிழ்த்தியாக மாவை பிசைய வேண்டும் அண்ணி .அப்போதுதான் ஒரு பொரு பொருப்பு கிடைக்கும் .தண்ணீர் அளவு பார்த்து ஊற்ற வேண்டும் .அவ்வளவுதான் .எனக்கு தெரியும் நான் பார்த்துக்கொள்கிறேன் “




“நன்றாக வந்தால் சரிதான் ” முணுமுணுத்தபடி எவர்சில்வர் பேஷினையும் மாவையும் அவள் அருகில் கொண்டுவந்து வைத்தாள் சுனந்தா .பச்சரிசி மாவும் கடலைமாவும் சரி விகிதத்தில் கலந்து கொண்டு திட்டமாக உப்பு போட்டுக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பக்குவமாக மாவை பிசைய தொடங்கினாள் தேவயானி.

” நீயே மாவு பிசைந்து விட்டாயாம்மா ? ” பரபரப்புடன் உள்ளே வந்தாள் சொர்ணம் .மகள் பிசைந்து வைத்திருந்த மாவின்பக்குவம் பார்த்து திருப்தியாக தலையசைத்துக் கொண்டாள் .” வாணலியை அடுப்பிலேற்றி எண்ணெயை சூடாக்கு . நான் அதற்குள் பாகு தயாரித்து விடுகிறேன் ”  சீனியை அளந்து சட்டியில் போட்டு நீரூற்றி பாகு  காய்ச்ச துவங்கினாள்.

” காலை நேரத்திலேயே எதற்கு அத்தை இவ்வளவு நேரம் போனில் பேசுகிறீர்கள் ? இங்கே எவ்வளவு வேலை இருக்கிறது  ? ” சுனந்தா தனது குறைபாட்டை கேட்காமல் விடவில்லை.

” மங்கை மேடத்திடம் தான் பேசினேன் சுனந்தா .ரிஷி தம்பியை பற்றி அவர்கள் ரொம்பவும் கவலைப்பட்டுக் கொண்டு இருந்தார்கள் அதனால் தான் ஆறுதலாக  இரண்டு வார்த்தை பேசினேன் .

ஒன்பது மணிக்கெல்லாம் மங்கை அவர்களுடைய பேக்டரிக்கு கிளம்பி போய் விடுவார்களே ..பிறகு பேச முடியாது .அதனால்தான் இப்போது பேசினேன் ” வாய் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்க சொர்ணத்தின் கை பரபரப்பாக பக்குவமாக வேலைகளை பார்த்தது.

சீனி பாகுவை சரிபார்த்து இறக்கி வைத்தவள் வாணலியில் சூடாகிக் கொண்டிருந்த எண்ணெயில் சேவுகளை பிழிய தொடங்கினாள்.

” அவர்கள் மகனுக்கு இங்கே நாம் ஆயா வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோமே …அதை அவர்களுக்கு தெளிவாக சொல்லி விட்டீர்கள் தானே ?  இதற்கான அதிகப்படி பணம்  அவர்கள் நமக்கு கொடுத்தாக  வேண்டும் ” சுனந்தா மிரட்டலாக பேசினாள்.




” இதையெல்லாம் நாம் சொல்லவேண்டுமா சுனந்தா ? அவர்களுக்கே தெரியும் தானே ?   உடல் கஷ்டத்தில் இருக்கும் மனிதருக்கு உதவுவதை இப்படி கீழாக பேசாதே ” 

” நாம் செய்வதை சொன்னேன்.  நம்முடைய உழைப்புக்கேற்ற ஊதியத்தை கேட்கிறேன் .இதில் தவறு என்ன இருக்கிறது ? ”  சொன்னவளை வெறித்துப் பார்த்தாள் தேவயானி.




என்ன மனுஷி இவள் …எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் பணத்தை எதிர்பார்ப்பவள் . தனது எரிச்சலை மனதிற்குள் அடக்கிக்கொண்டு 

 அம்மா பொறித்து வைத்திருந்த சேவுகளை சூடான சர்க்கரைப் பாகில் எடுத்து போட்டு பாகினை குலுக்கி விட்டாள்.

தீக்காயங்களுடன் குடிலுக்கு கொண்டுவரப்பட்ட ரிஷிதரனை பார்த்ததுமே முகத்தை அருவருப்புடன் சுளித்தபடி அவன் அருகிலேயே வர மறுத்துவிட்டாள் சுனந்தா. இன்றுவரை அவன் இருக்கும் குடில் பக்கமும் அவள் வருவதில்லை .ஆனால் அவனுக்காக கடிந்து மருத்துவ சேவை செய்வது போல இந்த பேச்சு அண்ணிக்கு எதற்கு ….? தேவயானியின் உள்ளம் கொதித்தது.

” எத்தனை முறை அம்மா உங்கள் மருமகள் ரிஷிதரனுக்கு மருந்து தடவி விட்டார்கள் ?  அல்லது கற்றாழை எண்ணெய்தான் காய்ச்சிக் கொடுத்தார்களா ? ” சுனந்தா அந்தப் பக்கம் போகவும்   அம்மாவிடம் சீறினாள்.

சொர்ணம் வாய்விட்டு மென்மையாக சிரித்தாள் .மகளின் கன்னத்தை மெல்ல தட்டினாள்.”  கொஞ்ச நேரம் முன்பு அண்ணியை குறை சொன்னாயே …இப்போது நீ எப்படி பேசுகிறாயாம் ? ” கிண்டலாக கேட்டாள்

உங்கள் மருமகள் எனும் தனது உறவு விளித்தலை  அப்போதுதான் உணர்ந்த தேவயானி புன்னகைத்துக் கொண்டாள் .” தப்புதான்மா ” உடனே தாயிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டாள்.

” சுனந்தாவின் குணம் இது தேவயானி .அவளுக்கு அண்ணனுக்கு இருக்கும் கடனும் அதற்குக் கட்டிக் கொண்டிருக்கும் வட்டியும் பெரிய கவலையாக இருக்கிறது .அதே நினைப்பிலேயே இப்படி பணத்தைப் பற்றி அதிகம் பேசுகிறாள். இதனையெல்லாம் நாம் மனதில் வைத்துக்கொள்ள கூடாது ” மகளுக்கு சமாதானம் சொன்னாள் தாய்.

தேவயானி தோள்களைக் குலுக்கிக் கொண்டாள் . ” மாமியாரும் மருமகளும் ஒத்துப்போனால் சரிதான் .எனக்கு ஒன்றுமில்லை ” என்றவள் தாயின்  பார்வையைப் பார்த்ததும் ”  அம்மா இப்போது உறவுமுறையை சொன்னது கோபத்தினால் அல்ல. பொதுவாக சொன்னேன் ” என்று விளக்கம் கொடுத்தாள் .

தாயும் மகளும் மனம் நிறைய சிரித்துக் கொண்டனர் .மீண்டும் அடுப்படிக்குள் வந்த சுனந்தாவிற்குத் தான் அந்தச் சிரிப்பு பெரும் மனக்கிடக்கை கொடுத்தது. அம்மாவும் மகளுமாக  தன்னை கிண்டல் செய்து சிரிக்கிறார்கள் என்னும் எண்ணம் அவளுக்கு.




அண்ணியின் மனக்கிடக்கை உணர்ந்த தேவயானியின் மனம் ஒரு குறும்பான உற்சாகத்தில் நிறைந்தது . மல்லிகை புன்னகை ஒன்று அவள் இதழ்களில் உறைந்து கொண்டது.

” இன்று மிகவும் நல்ல மூடில் இருக்கிறாய் போலவே ஏஞ்சல்  ? ” துள்ளலான குரலில் தன் அறைக்குள் நுழைந்தவளை வரவேற்றான் ரிஷிதரன் .அவனுடைய பார்வை அவள் இதழ்களில் அமர்ந்திருந்த புன் சிரிப்பில் மலர்மேல் வண்டாக அமர்ந்தது.

” ஏன் அப்படி சொல்கிறீர்கள் ? ” 

” தாமரை மலரின் இதழ்களில் தங்கத்தை ஊற்றியது போல் இருக்கிறது ” என்றபடி ஒற்றை விரலால் அவள் முக புன்னகையை சுட்டினான்.

அவனுடைய ரசனையில் விழி விரித்தாள் தேவயானி .காட்டிலும் மேட்டிலும் சிகரெட்டும் போதையுமாக திரிபவன் …இப்படி உவமை காட்டி ரசனையாக பேசுவானா ? 

” தேவதைகளை பார்த்தால் கவிதைகள் நாக்கில் புரள்வது இயல்புதானே ஏஞ்சல் ? ” அவளது வியப்பை உணர்ந்துகொண்டு புன்னகையோடு பதில் சொன்னான்.

” என்ன அண்ணா இன்னமும் அக்காவின் பெயர் தெரியாதா உங்களுக்கு ? ” கிண்டலோடு மருதாணியின் குரல் வர தேவயானி உள் அறையை எட்டிப் பார்த்தாள்.

” மருதாணி காலையிலேயே நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் ? உனக்கு பள்ளிக்கு நேரம் ஆகவில்லையா ? ” 

” அண்ணனுடைய உடைகளை அம்மா துவைத்து அயர்ன் பண்ணி வைத்திருந்தார்கள் அக்கா .அதனை இங்கே கொண்டுவந்து அடுக்கி வைத்துக் கொண்டு இருக்கிறேன் ”  

” சாயந்தரம் ஸ்கூலில் இருந்து வந்து இந்த வேலையை பார்க்கலாமே  ? சரி இப்போது சீக்கிரம் கிளம்பு . அம்மாவிடம் போய் உனக்கு ஸ்னாக்ஸ் வாங்கிக்கொண்டு போ “என்று விட்டு தான் கிண்ணத்தில் கொண்டுவந்த சீனி சேவை ரிஷிதரனிடம்   நீட்டினாள் .

”  இதை சாப்பிட்டு பாருங்கள் ” 

” இது என்ன ஏஞ்சல் ? ”  கேட்டபடி ஒரு சேவை எடுத்து வாயில் போட்டு மென்றவனின் முகம் வியப்பில் விரிந்தது .”  டெலிசியஸ் . இந்த ஸ்வீட்  வித்தியாசமாக மிகவும் நன்றாக இருக்கிறது ”  இன்னும் இரண்டு சேவுகளை வாயில் எடுத்து போட்டு மென்றவன் ” இது ஸ்வீட்டா ?   காரமா ? ”  என்றான்.




தேவயானி புன்னகைத்தாள் .” அதுதான் இந்த ஸ்னாக்ஸின் ஸ்பெஷல் .இனிப்பும் காரமும் கலந்து ஒரு புது சுவையுடன் இருக்கும் .இதன் பெயர் சீனி சேவு .இது  எங்கள் அம்மாவின் ஸ்பெஷல் பலகாரம் ” 




” அப்படியா  ? நான் இதுவரை இதனை சாப்பிட்டதில்லை .மிகவும் நன்றாக இருக்கிறது ” ரிஷிதரன்  மேலும் சேவுகளை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான்.

” எங்கள் அம்மாவின் ஊர் பக்கம் செய்யும் நொறுக்குத்தீனிகள் இதுவும்  ஒன்று .அந்தப் பக்கத்து ஆட்களுக்கு மட்டும்தான் தெரியும் ” 

” அப்படியா  ? உங்கள் அம்மாவின் ஊர் எது ? ” 

” அம்மாவின் ஊர் சாத்தூர் .இந்த தீனி சாத்தூர் ,  கோவில்பட்டி , விருதுநகர் ஊர் பக்கம் வழக்கமான ஒன்று .அங்கே இருக்கும் கடைகளில் இது வாடிக்கையாக கிடைக்கும் ” 

ஆவலுடன் ரிஷிதரன் எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த நொறுக்குத்தீனி பற்றிய விபரங்களை தேவயானி அவனுக்கு கொடுத்துக் கொண்டிருக்க ” அக்கா இன்று ஸ்னாக்ஸ் சீனிசேவா ?  எனக்கு நாக்கு ஊறுகிறது .நான் இப்போதே போய் சாப்பிடுகிறேன் ” நாக்கினை ஆர்வமாக சுவைத்தபடி கிளம்ப போன மருதாணி முன்னால் அந்தப் பலகாரத்தை எடுத்து நீட்டினான் ரிஷிதரன்.

” இதோ எடுத்துக்கொள் மருதாணி ” 

தேவயானியும் , மருதாணியும் அவனை ஆச்சரியமாக பார்த்தனர் .இதுவரை இங்கே குடிலில் தங்க வருபவர்கள் எல்லோரும் மருதாணிக்கு இந்த இடம் கொடுத்ததில்லை . அவர்கள் சாப்பிட்ட மீதங்களைத்தான் தூக்கி கொடுப்பார்கள் .இப்படி தான் உண்டு கொண்டிருக்கும் பண்டத்தையே தோழமையுடன் பகிர்ந்துகொள்ள கொடுத்துக் கொண்டிருப்பவன் அவர்களுக்கு ஆச்சரியம் தருபவனாக இருந்தான்.

” பரவாயில்லை அண்ணா .சொர்ணத்தம்மாள் எங்களுக்கென்று தனியாக எடுத்து வைத்திருப்பார்கள் .நான் போய் சாப்பிட்டுக் கொள்கிறேன் ” மருதாணி கொஞ்சம் கூச்சத்துடன் மறுத்தாள்.

” அட பரவாயில்லை .அங்கேயும் போய் சாப்பிடு. இப்போது இதிலும்  கொஞ்சம் எடுத்துக் கொள் .ரொம்பவும் டேஸ்ட்டாக இருக்கிறது ” என்றபடி தனது தட்டில் இருந்ததை சிறிது அள்ளி  மருதாணியிடம் நீட்டினான்.

 மருதாணி தேவயானியின் முகத்தை பார்க்க அவள் சம்மதமாக தலையை அசைக்கவும்” ம் .. உன் அக்கா தலையசைத்தாயிற்று .இனி பயப்படாமல் நீ வாங்கிக் கொள்ளலாம் ” என கிண்டல் செய்தான்.

” பயமெல்லாம் ஒன்றும் இல்லை அண்ணா  ” என்றபடி சேவுகளை வாங்கி தன் வாயில் போட்டு மெல்லத் துவங்கினாள் மருதாணி.

” இப்படி எல்லாம் எனக்கு யாரும் கொடுத்தது இல்லை அண்ணா  அதனால்தான் வாங்கலாமா என்று எனக்கு யோசனையாக இருந்தது ” 

” ஹப்பா ஒரு சாதாரண விஷயத்திற்கும்  உன் அக்காவிடம் பர்மிஷன் கேட்க வேண்டியிருக்கிறது. உனக்கு மட்டும் இல்லை என் நிலைமையும் அதுதான் மருதாணி ”  சோகம் காட்டினான்.

” நீங்கள் எதற்கு அண்ணா பர்மிஷன் கேட்டீர்கள் ? ” 




” எல்லாவற்றிற்கும் தான் நினைத்ததை செய்ய முடிவதில்லை ”  ஏக்கப் பெருமூச்சு விட்டவனை தேவயானி முறைத்த போது அவனுடைய போன் ஒலித்தது .உடன் தேவயானியின் முறைத்தல் விகிதம் அதிகரித்தது.

”  மருதாணி அங்கே பாரேன் உன் அக்காவின் முகத்தை …எவ்வளவு முறைப்பு . இதோ இப்போது இந்த போனை எடுத்து பேசக்கூட எனக்கு உரிமை கிடையாது . நான் அனுமதி வாங்கியாக வேண்டும் ” சோகம் போல் அவன் கன்னத்தில் கை வைத்துக் கொண்டான்.

கலகலவென்று சிரித்த மருதாணி ”  சும்மா எதையாவது சொல்லாதீர்கள் அண்ணா. உங்கள் போன் .நீங்கள் பேசுங்கள் .டேபிளில் இருந்த போனை எடுத்துக்கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள்.

” என்ன பேசவா ? ”  என புருவங்களை உயர்த்தி தேவயானியிடம் அவன் கேட்க அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள் .ரிஷிதரன் போனை ஆன் செய்து பேசத் துவங்கினான்.

” ஹாய் வினிதா ? எப்படி இருக்கிறாய்  ? ” தேவயானி எதிர்பார்த்தது போன்றே அழைப்பு ஒரு பெண்ணிடம் இருந்து தான் .அவளது முகம் இறுகியது.

” இல்லையே ஹனி  இப்போது நாம் சந்திக்க முடியாதே . இங்கே நான் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறேன்.”  பெரும் கவலையை குரலில் கொண்டு வந்தவனை  ஒரு அறை விட்டால் என்ன என்று யோசித்தாள்  தேவயானி.

” நோ …நோ… நீ இங்கே  வர வேண்டாம் .உன்னால் இங்கே வர முடியாது ”  சிறு பதட்டத்துடன் மறுத்தான்.

அப்படி எவளாவது இந்த பக்கம் வரட்டும் .காலை ஒடிக்காமல் விடமாட்டேன் .மனதிற்குள் கறுவிக்கொண்டு தேவயானி.

” நானா …? நான் இப்போது….”  என்று இழுத்தவன் தேவயானியையும் மருதாணியையும் பார்த்து ஒற்றைக் கண்ணை குறும்பாக சிமிட்டியபடி ” பாங்காக்கில் இருக்கிறேன் .இப்போது உன்னால் அங்கே வர முடியாதுதானே ? ”  

” ஃப்ளைட் டிக்கெட்டா ?என்னால் முடியாதே வினி … அதில் பார் பாங்காக்  வந்து பத்து நாட்களாகி விட்டது .என் கையில் இருந்த பணம் எல்லாம் செலவாகி விட்டது .இனி எங்கள் வீட்டில் இருந்து எனக்கு பணம் அனுப்பினால் தான் உண்டு. அல்லது உன்னிடம் எதுவும் பணம் இருக்கிறதா ? நீ எனக்கு அனுப்பி வைக்கிறாயா ? ஓ…அப்படியா ..சரி …சரி உன் வேலையை நீ பார் .பிறகு சந்திக்கலாம் ” புன்னகையோடு  போனை அணைத்தான்.




” எவ்வளவு பொய்கள் ?  எப்படி இத்தனை பொய்களை அடுத்தடுத்து உங்களால் சொல்ல முடிகிறது ? ”  தேவயானியின் கேள்விக்கு தோள்களை குலுக்கினான்.

” பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் ” அலட்டாமல் அவன் சொன்ன குறளுக்கு வியந்து விழி விரித்தாள் . பின் நோகாமல் தலையில் அடித்துக் கொண்டாள்.

” பாவம் திருவள்ளுவர் .இப்போது இருந்தால எது எதற்கெல்லாம் என்னை பேசுகிறீர்கள் என்று ரொம்பவே நொந்து போயிருப்பார் ” என்றாள்.

” இல்லை ஏஞ்சல் .எல்லாவற்றிற்கும் எல்லா இடத்திற்கும் பொருத்தமாக சொல்லியிருக்கிறேனே…”  என்று மிகவும் பெருமை பட்டிருப்பார்.

ரிஷிதரன் தன் தரப்பை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும்போது ” உள்ளே வரலாமா சார் ? ” என்ற அனுமதி கோரலுடன் குடிலின் வாயிலில் வந்து நின்றான் சந்திரசேகர்.

இவர் இப்போது ஏன் வந்திருக்கிறார் ?தேவயானி யோசனையுடன் அவனைப் பார்த்தாள்.

What’s your Reaction?
+1
2
+1
3
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!