ramanin mohanam Serial Stories ராமனின் மோகனம்

ராமனின் மோகனம் – 9

9

” எங்கே இருக்கிறது அந்த இடம்  ? ”  அவர்களது சட்டையை பிடித்து உலுக்கினான் அபி.

” மேற்குப் பக்கமாக… நான்காவது பள்ளத்தாக்கில் …” திணறலாய்  பேசினான் அடிவாங்கியவன்.

” நீங்கள் எல்லாம் பார்த்தீர்களா ? ”  அந்தப் பெண்களிடம் கேட்டான்.

” நான்தானுங்கய்யா பார்த்தேன். இவன் நடவடிக்கை ஒண்ணும் எனக்கு உசிதமாகபடலை . பின்னாலேயே போய் துப்பு பிடிச்சேன் .”பேசிய பெண் வயதானவளாக இருந்தாள் .

” என் பையன்தானுங்கய்யா 

. பெரிய தப்பில்லீங்களா ? கண்டிக்க இடமேயில்ல . அதேன் காட்டி கொடுத்துட்டேன் .எங்களை காப்பாத்துற தெய்வம் நீங்க இருக்கீகன்னுதான்  நான் துணிஞ்சி இத செஞ்சேன். எங்களை கைவிட்றாதீகய்யா ” கதறலாய் பேசியபடி மகனையும் இழுத்துக் கொண்டு வந்து அவன் காலில் விழுந்தார் அந்த மூதாட்டி .

அபி பதறி விலகினான் .” எழுந்திருங்கம்மா . பெரியவங்க நீங்க நல்ல காரியம் பண்ணி இருக்கீங்க. போங்க .மற்றதை எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் ” அவர்கள் அனைவரும் அவனை கும்பிட்டு விட்டு வெளியேறினர்.

நிலானிக்கு அங்கே நடந்து கொண்டிருப்பது ஒன்றுமே புரியவில்லை

” உன்னையே நம்பி கொண்டிருப்பவர்களை இப்படி அடித்து துவைக்கிறாய். இது நியாயமா ? ”  சரேலென அவளை திரும்பிப்பார்த்தவனின் கண்களில் தீப்பந்தம் இருந்தது.

” நான் ஏற்கனவே மனவருத்தத்தில் இருக்கிறேன். நீயும் என்னை சீண்டாதே “சட்டென்று தன் கையை ஓங்கி எதிரே இருந்த டீப்பாயில் அறைந்தான் .அது தனக்காக வைக்கப்பட்ட  அறையோ என நினைத்த நிலானி உடல் பதற உள்ளே ஓடி வந்து விட்டாள் .அபி சிறிது நேரம் அங்குமிங்குமாக நடமாடிக் கொண்டு இருந்துவிட்டு வேகமாக வீட்டை விட்டு வெளியேறினான்.




வாசல் படி இறங்கியவன் என்ன நினைத்தானோ உள்ளே வந்து அவளது கையைப் பற்றி இழுத்துக்கொண்டு ” நீயும் வா ” என்றான்.

இடுப்பில் பட்ட காய வலியோடு மீண்டும் அவனுடனான கரடுமுரடான பைக் பயணத்திற்கு நிலானி தயாராக இல்லை. ” என்னை விடு .நான் வரவில்லை…” 

” வருகிறாயா …என்று கேட்கவா செய்தேன். ”  சொன்னதோடு அப்படியே அவளை இடுப்போடு சேர்த்து தூக்கி கொண்டு போய் வாசலில் இருந்த பைக்கில் உட்கார வைத்தான். பைக் பறந்தது.  வழக்கம் போல் பள்ளம் மேடு என விழுந்து விழுந்து எழுந்து நிலானியின் இடுப்பை ஒடித்தது.

இறுதியாக ஒரு பள்ளத்தாக்கு அருகே பைக்கை நிறுத்திவிட்டு ” இங்கே இறங்க வேண்டும் ” என்றான் சற்றும் இரக்கமில்லாமல் .

அந்த பள்ளத்தை எட்டிப்பார்த்த நிலானிக்கு தலைசுற்றுவது போலிருந்தது .” இதில் எல்லாம் என்னால் இறங்க முடியாது ” அவளது மறுப்பை அலட்சியம் செய்யாது குனிந்து அவள் கால்களிலிருந்த ஹீல்ஸ் செருப்புகளை உருவினான் .

“இதை போட்டுக் கொள் ”  தோலால் ஆன ஷூ  போன்ற செப்பலை கொடுத்தான். படபடவென பள்ளத்தாக்கிற்கு இறங்கத் துவங்கினான் .

இவனெல்லாம் மனித ஜென்மமே கிடையாது .புலம்பியபடி நிலானி வேறு வழியின்றி அவனை பின் தொடர ஆரம்பித்தாள் .கொஞ்சம் அசந்தாலும் அவள் கால் இடறியது .விழுந்து உருண்டு விட்டாளானால் இதோ முடிவு தெரியாமல் இருக்கும் இந்த  பள்ளத்தாக்கில் விழுந்து நிச்சயம் உயிரை விட்டு விடுவாள் .கால்கள் நடுங்க வழியில் இருந்த மரங்களை அடிக்கடி பற்றியபடி மெல்ல இறங்கினாள்.

இதனை அடுத்து பள்ளம் தான் என்று தோன்றும் படி தெரிந்தாலும் இறங்க இறங்க நிலப்பகுதி பள்ளத்தாக்கில் வந்து கொண்டே இருந்தது .ஒரு இடத்தில் சிறிது தடுமாற்றம் வர கால்களை ஊன்ற முடியாமல் வேகமாக ஓட்டம் போல் இறங்க ஆரம்பித்த நிலானி இறுதியாக  நிலை நின்ற இடம் முன்னால் ஒரு மரத்தின் மறைவில் நின்று எதையோ பார்த்துக்கொண்டிருந்த அபியின் முதுகு.

வீலென்று வாய் திறந்து அலறும் எண்ணத்தோடு தன் முதுகோடு வந்து மோதி ஒட்டி நின்றவளை பின்னால் கை நீட்டி முன்னால் இழுத்து அணைத்துக் கொண்டான் அவன் ” சத்தம் போடாதே ” உதட்டில் விரல் வைத்து எச்சரித்தான்.

அவன் பார்வை போன வழி பார்த்தவள் விழி விரித்தாள் .அங்கே தகர செட் போட்டு ஒரு கட்டடம் இருந்தது அங்கே உள்ளும் வெளியுமாக சிலர் போவதும் வருவதுமாக ஏதோ வேலை பார்த்துக் கொண்டு இருந்தனர்.

” இது எந்த இடம் ? “கிசுகிசுத்தாள்.அவள் 

 தலையில் கை வைத்து அழுத்தினான் ” பேசாதே “.

சிறிது நேரம் யோசனையோடு அங்கேயே பார்த்தபடி நின்றவன் , பிறகு ஒரு முடிவுக்கு வந்தவனாய் தன் போனை எடுத்து அந்த இடத்தை போட்டோக்கள் எடுக்கத் துவங்கினான். பிறகு அந்த போட்டோக்களை ராஜலட்சுமிக்கு அனுப்பினான் .கூடவே அந்த லொகேஷனை அவளுக்கு ஷேர் செய்து விட்டு அப்படியே சரிந்து அந்த மரத்தடியில் அமர்ந்தான். கையை மடக்கி சக் சக் என்று நிலத்தை குத்தத் தொடங்கினான்.

விரும்பாத ஒரு காரியத்தை செய்துவிட்டு தளர்ந்து அமர்ந்திருந்தான் போல் அப்போது அவன் தென்பட்டான் .கவலைப்படாதே என அவன் தலை வருடி ஆறுதல் அளிக்க விழைந்த தனது உள்ளத்தை நினைத்து திடுக்கிட்டாள் நிலானி.

மெல்ல அவன் அருகில் மண்டியிட்டு அமர்ந்தவள்  ” என்ன விஷயம் ? ” மென்மையாக கேட்டாள்.

மறுப்பாய் தலையசைத்தான்.”  இதை நான் செய்யக்கூடாது .ஆனால் செய்து விட்டேன் .எனக்கு வேறு வழி தெரியவில்லை. இது என் மனதை காலம் முழுவதும் உறுத்திக் கொண்டே இருக்கும் ” வேதனை கலந்து ஒலித்த அவன் குரலில் ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள் நிலானி.

இயலாமையுடன் பூமியை குத்திக்கொண்டிருந்த அவனது கரத்தை ஆட்காட்டி  விரல் நீட்டி மெல்ல தொட்டாள் .” எல்லாம் சரியாகிவிடும் ” எதற்கு ஆறுதல் சொல்கிறோம் என்று தெரியாமலேயே சொன்னாள்.

அபி சட்டென்று அவளை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டான் .இருவரும் வேறு ஒன்றுமே பேசவில்லை .சிறிது கூட அசையவும் இல்லை .அப்படியே அமர்ந்து இருந்தனர். எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை …சருகுகள் மேல் காலடிச் சத்தம் கேட்கவும்   இருவரும் பிரிந்து எழுந்தனர். வந்தது  ராஜலட்சுமி தான். இப்போது அவள் போலீஸ்  யூனிபார்மில் இருந்தாள். அவளுடன் நான்கு காவல்துறையினர் .அனைவரும் கையில் துப்பாக்கி வைத்திருந்தனர்.

” எங்கே …? “ஒற்றை வார்த்தையில் கேட்டவளுக்கு பதிலாக அந்தப் பக்கத்தை காட்டினான் அபி. அந்தப் பக்கமே திரும்பாமல் முகத்தை முன்னால் வைத்துக் கொண்டு கையை மட்டும் பின்னால் சுட்டினான். அந்நேரத்தில் அவன் முகத்தில் மிகுந்த வேதனை தெரிந்தது.

” கமான் ரவுண்ட் அப் ” உடன் வந்த காவலர்களுக்கு ராஜலட்சுமி உத்தரவிட்டாள். நான்கு திசைகளையும் ஆளுக்கு ஒன்றாய் பிரித்துக்கொண்டு நான்கு காவலர்களும் அந்த அந்த தகர செட்டை அணுகினர் .

” இந்த ஏரியா முழுவதுமே எங்கள் ஆட்கள் சுற்றிவளைத்து இருக்கின்றனர். இந்த பள்ளத்தாக்கில் இருந்து மேலே யாரும் தப்ப முடியாது .உயிரை வெறுத்தவர்கள் பள்ளத்திற்குள் குதித்து வேண்டுமானால் போலீஸிடம் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் ” இரும்பாய் ஒலித்தது அவள் குரல்.

அபியின் முகம் மாறியது . ” அப்படி எதுவும் நடக்க வேண்டாம். எல்லோரையும் பத்திரமாக பார்த்துக் கொள்வாய் என்று நம்புகிறேன் ” வேண்டுதலாய் கேட்டான்.

” அது அந்த கிரிமினல்ஸ் கையில் தான் இருக்கிறது ” கையில் இருந்த துப்பாக்கியை அலட்சியமாக அசைத்து விட்டு தானும் அந்த செட்டை நோக்கி இறங்கத் துவங்கினாள் ராஜலட்சுமி .இதற்குள் அங்கே பரபரப்பு ஆரம்பித்திருந்தது .அபியும் அங்கே போவான் என்று நினைத்ததற்கு மாறாக அவன் மேலே ஏறத் தொடங்கினான்.

ஆதவன் தன் அன்றாட கடமையாக மேற்கே இறங்கத் துவங்கினான் . அந்த மலைப்பகுதி இருட்டத் துவங்கியது.

” நீங்கள் போகவில்லையா ? ” மெல்லியகுரலில் கேட்டபடி அவனை பின்தொடர்ந்தாள் நிலானி.

“எனக்கு இன்னொரு வேலை இருக்கிறது ” உயிர்ப்பு இல்லை அவன் குரலில்.




அடுத்து அபி போன இடம் ஒரு வீடு .ஓலைக் குடிசை அது .தலைகுனிந்து தான் உள்ளே நுழைய வேண்டியிருந்தது .சாத்தி வைத்திருந்த கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தார்கள்.

மினுக் மினுக்கென்று ஒரு சிம்னி  உள்ளே எரிந்து கொண்டிருந்தது .தூளியில் ஒரு குழந்தை தூங்கிக்கொண்டு இருக்க கீழே பாயில் இன்னொரு குழந்தை உட்கார்ந்து ஓலையில் செய்யப்பட்ட கிலுக்கு ஒன்றினை வாயில் வைத்து கடித்துக் கொண்டிருந்தது.

” ஐயா வாங்கய்யா வாங்க …வாங்க  ” பரபரப்புடன் அவர்களை வரவேற்றாள்  ஒரு பெண் .இவளும் கூட அந்தக் கூட்டத்தில் இருந்த ஞாபகம் நிலானிக்கு இருந்தது.

“எங்க வீடு தேடி வந்து இருக்கீகளே ராசா ? எவ்வளவு பெரிய பாக்கியம் இது ? குடிக்க எதுனாச்சும் தரட்டுமா ? ” 

அந்தப் பெண்ணின் பரபரப்பிற்கு தலையசைத்து மறுத்தான். ” நான் கொஞ்சம் பேசுவதற்காகத்தான் வந்தேன் அம்மா ” 

” சொல்லுங்க சாமி”

” உன் புருஷனை போலீஸ் கைது செய்துவிட்டது” 

“ஐயோ ..” உரத்த  குரலில் அழத்துவங்கினாள் அந்தப் பெண் .” அத்த இங்க ஓடி வா .இவரு சொல்றத கேட்டியா ? “அவளது கத்தலில் ஒரு பெண் வெளியிலிருந்து உள்ளே ஓடி வந்தாள் .அவள் இடுப்பில் ஒன்றும் கையில் ஒன்றுமாக இரு பிள்ளைகளை பிடித்திருந்தாள் .

” ஏட்டி ஏன் இப்படி கத்துற ? ” அதட்டியபடி வந்தவள் உள்ளே அமர்ந்திருந்த இவர்களைப் பார்த்ததும் ” சாமி நீங்களா ?வாங்க …வாங்க …வணக்கம் ” குழந்தைகளை கீழே இறக்கி விட்டுவிட்டு கை குவித்தாள்.

” என் முதலாளி இருக்குறாரு ….எஞ்சாமி இருக்கிறாரு …அப்படின்னு பெருசா பெருமை பீத்தி பெத்த மகனையே காட்டி கொடுத்தியே கிழவி . இப்போ உங்க ஐயா என்ன செஞ்சிட்டு வந்து இருக்காரு தெரியுமா ? உன் மகனை போலீசில புடுச்சு  கொடுத்துட்டு  வந்திருக்கிறாரு ” தரையில் அமர்ந்து நெஞ்சில் அடித்துக்கொண்டு அழத்துவங்கினாள் அந்தப் பெண்.

 அந்த மூதாட்டி அபியை நம்ப முடியாத பார்வை பார்த்தாள் .”நெசந்தானுங்களா சாமி ? ” அவள் குரல் கரகரத்தது.

அந்நேரத்தில் நிலானியே மிகவும் சங்கடமாக உணர்ந்த போது அபியின் நிலைமையை சொல்ல வேண்டாம். அவன் எழுந்து மூதாட்டியின் கைகளைப் பற்றிக் கொண்டான்.

” எனக்கு வேறு வழி தெரியவில்லை பாட்டி .அங்கே நான்  நினைத்ததை விட பெரிய அளவில் தவறுகள் செய்து கொண்டிருக்கிறார்கள் .மிக அதிக அளவில் அங்கே உற்பத்தி நடந்து கொண்டு இருக்கிறது. இது என் கை மீறிய விஷயமாக போய்விட்டது. நிச்சயமாக நம் அரசாங்கம் தலையிடாமல் சரி செய்ய முடியாது .நான் வேறுவழியின்றி அரசாங்க உதவியை நாட வேண்டியதாயிற்று ” 

” உங்களை நம்பித்தானேயா என் மகனை உங்களுக்கு காட்டினேன் ”  வேதனை தெரிந்தது அந்த மூதாட்டியின் குரலில்.

” உங்கள் மகன் செய்தது சமூகவிரோத காரியம் பாட்டி .இதற்கான தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும் .அப்போதுதான் மீண்டும் இது போன்ற செயல்களை நம் ஊரில் செய்வதற்கு வேறு யாருக்கும் எண்ணம் வராமல் இருக்கும் .உங்கள் மகனின் தண்டனையை முடிந்த அளவுக்கு குறைக்க நான் முயற்சி எடுக்கிறேன் ” தயவாய் பேசினான்.

” என் புருஷன் செயிலுக்கு போய்ட்டா நானும் எனது பிள்ளைகளும் என்ன செய்வோம் ? வயித்துல ஈரத் துணியைப் போட்டுக்கவா ? ஆங்காரமாய் வயிற்றில் அடித்துக் கொண்டு  கத்தினாள் அந்தப் பெண்.

” உங்கள் குடும்பத்திற்கான செலவை நான் பார்த்துக்கொள்கிறேன் அம்மா .உங்கள் குழந்தைகளை பள்ளியில் படிக்க வைப்பதும் எனது கடமை .நீங்கள் இருவரும் நமது எஸ்டேட்டில் வேலைக்கு வரலாம்…” 

“சாப்பாட்டைப் பார்த்துடுவேன் வேலையை பார்த்துடுவேன்னு. அடுக்குறீகளேய்யா… என் புள்ளைங்க அப்பா எங்கன்னு கேட்குமே ?நான் என்ன பதில் சொல்லுவேன் ? இதுக்கு என்னய்யா ஞாயம் சொல்லப் போறீக ? ”  அந்தப் பெண்ணின் கோபம் குறையவில்லை .அபி வாய் அடைத்து நின்றான்.

” உன் அப்பன் தப்பு செஞ்சான் . செயிலுக்குள்ள இருக்கான். நீயாவது ஒழுங்கா இருன்னு சொல்லி புள்ளையை வளருடி ” ஓங்கி ஒலித்த மாமியாரின் குரலுக்கு மிரண்டு பார்த்தாள் அந்தப் பெண்.

” என்னடி பாக்குற ?  நல்ல வேலை போட்டுக் கொடுத்து கைநிறைய சம்பளம் கொடுத்தாக முதலாளி குடும்பம் .

 அதையும் தாண்டி பணத்துக்கு ஆசப்பட்டு தப்பு தப்பான வேலை செஞ்சா அப்ப அதுகான தண்டனை வந்து தானே தீரும் ?  ஆனாலும் கோபப்படாம அவன் தண்டனையை கொறைக்க சொல்றேன் .உன் குடும்பத்தை பார்த்துக்கிறேன்னு தன்மையா வந்து நிக்குறாரு இந்த மகாராசா .அவர போற்றலைனாலும் பரவால்ல .இப்படி வாய்க்கு வந்தபடி தூத்தாதடி புத்தி கெட்டவளே .எந்திரிச்சி வந்து சாமி கால்ல விழுந்து மன்னிப்பு கேளு…” 

நிலானிக்கு அந்த படிப்பறிவில்லாத வயதான மூதாட்டியின் புரிந்துகொள்ளலுக்கு படபடவென்று கரகோஷம் எழுப்ப வேண்டும் போலிருந்தது. அபி மனம் நெகிழ்ந்து அந்த பாட்டியை வணங்கி பின் தோள் அணைத்துக்கொண்டான்.

” ஐயோ சாமி எங்கள எல்லாம் தொடலாமா நீங்க?  உங்க காலத் தொட வேண்டியவங்க நாங்க..”  மருமகளின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வந்து தானும் காலில் விழ இருந்தவளை பதறி தடுத்தான் அபி.

” வேண்டாம் பாட்டி. வயதில் மட்டுமல்ல குணத்திலும் நீங்கள் எங்கேயோ உயர்ந்து விட்டீர்கள். உங்களது நியாயத்திற்கும் தர்ம சிந்தனைக்கும் நிச்சயம் நல்லதே நடக்கும் .மகன் என்றாலும் தப்பு செய்தான் என்றதும் அவனுக்கான தண்டனையை கொடுக்க துணிந்தீர்களே நீங்கள் அந்த காளி தெய்வத்திற்கு ஒப்பானவர் .நான் தான் உங்களை வணங்க வேண்டும் ”  சொல்லிவிட்டு குனிந்து பாட்டியின்  கால்களை தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டான்.

”  ஐயோ என்ன காரியம் பண்ணுறீக சாமி ? ” பாட்டி பதறினாள் . ” நீங்க நூறு வயசு பொண்டாட்டி புள்ள குட்டிங்க கூட நல்லா இருக்கணும் சாமி ” ஆசீர்வதித்தாள்.

மனம் நிறைய பாரத்துடன் அபியும் நிலானியும் வீடு திரும்பினர் .

What’s your Reaction?
+1
5
+1
6
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!