ramanin mohanam Serial Stories ராமனின் மோகனம்

ராமனின் மோகனம் – 8

8

 நிலானியின் நம்பிக்கைக்கு உரியவளாகத்தான் அந்தப் பெண்ணும் தோற்றமளித்தாள். இவ்வளவு நேரமாக நிலானி அங்கே சந்தித்த பெண்கள் எல்லோருமே படிப்பறிவற்ற எளிய கிராமத்து பெண்கள். தங்கள் அன்றாட பிரச்சனைகளையும் வயிற்றுப் பாட்டையும் பொறுப்பின்றி திரியும் தங்கள் கணவன்மார்களையுமென இப்படி தங்கள் பிரச்சினைகளை மட்டுமே அபியிடம் சொல்லிக்கொண்டிருந்தனர்.

உடன் வந்த இவளை யாரென்று கூட பார்க்கவில்லை .அப்படியே இவளாக போய் இதோ இவன் என்னை கடத்திக் கொண்டு வந்து இருக்கிறான் என்று சொன்னாலும் ,அதனால் என்ன அனுசரித்துப் போ என்று சொல்வார்கள் போல தெரிந்தார்கள். சூழ்நிலையை உணர்ந்து எதற்கு வம்பு என்று நிலானி வாயை மூடிக்கொண்டாள்.

அவளுக்கு ஒன்று மட்டும் கடைசி வரை புரியவே இல்லை .இதோ இந்த பொறுக்கியை …ரவுடியை… தீவிரவாதியை எப்படி தங்கள் குல சாமி போல் இவர்கள் கொண்டாடுகின்றனர் ?/அப்படித்தான் அந்தப் பெண்கள் அவனிடம் பயபக்தியாய் பேசிக்கொண்டிருந்தனர்.

இவர்கள் ஊருக்குள் போன நேரம் பகல் பொழுது. ஆண்கள் பெரும்பாலும் வெளியே சென்று இருப்பார்கள் போலும் .மேலும் அபி சென்ற இடங்கள் எல்லாமே குடியிருப்பு பகுதிகள் .எப்படி இருக்கிறீர்கள் ?குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் ? வாழ்க்கை எப்படி ஓடுகிறது ? என்பது போன்ற விசாரணைகளையே அவன் செய்து கொண்டிருந்தான் .முகமும் அகமும் மகிழ்ந்து அவனது சிறு கேள்விக்கே தங்களது வாழ்க்கை முழுவதையும் கடகடவென ஒப்பித்தனர் அந்தப் பெண்கள் .

” படிப்பறிவற்ற முட்டாள்கள் ” நிலானி முணுமுணுத்தாள்.

” வாயை மூடு .உன்னளவு இவர்கள் முட்டாள்கள் அல்ல .உலக அனுபவம் மிகத் தெரிந்தவர்கள் .நீயெல்லாம் இவர்கள் அருகில் கூட வர முடியாது ” நறநற பற்களுக்கிடையே இவளை கடித்தான்.




அதெப்படி இந்த முட்டாள் பெண்களுடன் இவன் என்னை ஒப்பிடலாம் ? நிலானிக்கு கொதித்து வந்தது .” உனக்கு ஜால்ரா போடுகிறார்கள் அல்லவா ?அப்படித்தான் சொல்வாய் . அது என்ன உன்னைப் போய் ஏதோ காட்பாதரை பார்ப்பது போல் பார்க்கிறார்கள் ?எனக்கு இது ஒன்றும் புரியவில்லை “

” உனக்குத்தான் என்னைப்பற்றி நன்றாக தெரியுமே .அவர்களிடம் விளக்கிச் சொல்வதுதானே ? ” அலட்சியமாக சொன்னபடி மற்றொரு சிகரெட்டை எடுத்துக் கொண்டான்.

வீடுகளுக்கு போகும்போது தவிர இடையிடையே கிடைக்கும் நேரங்களில் எல்லாம் அவன் சிகரெட் பிடிப்பதை கவனித்துக் கொண்டுதான் இருந்தாள் .மனதை உறுத்திய அந்த விஷயத்தை ஒதுககி , நல்லா நிறைய சிகரெட் பிடிக்கட்டும் .  ஒரு நாள் ஹார்ட் அட்டாக் வந்து…. மேலே நினைக்க முடியாமல் நிறுத்திக் கொண்டாள். அப்போதுதான் அந்த பெண்வந்தாள்.

அவள் இதோ இந்த பட்டிக்காட்டு பெண்கள் போல இல்லை .படித்த நாகரீகமானவள்  என்பதை அவளது தோற்றமும் உடையும் பேச்சும் காட்டியது .உயரமாக வளர்ந்து மாநிறமாக இருந்தாள். தோள் வரை தலை முடியை பாப் வெட்டி கொண்டிருந்தாள். ஜீன்சும் காலர் வைத்த சட்டையும் அணிந்திருந்தாள். மிக இயல்பாக நாவில் ஆங்கிலம் வந்தது.

இதோ இவள் நான் சொல்ல வருவதை புரிந்து கொள்வாள்தானே நிலானி  இப்படி சந்தோசமாக நினைத்ததற்கு மற்றொரு காரணமும் இருந்தது. அது அபிக்கு அவளை பிடிக்கவில்லை .

” ஹாய் ” என்றபடி தன்னை நோக்கி வந்தவளை முகம் இறுக்கமாக  பார்த்தான். கண்களில் எதிர்ப்பு காட்டினான். உன்னை விரும்பவில்லை என்று சொல்லாமல் சொன்னான் .

ஆஹா ,  இவனுக்கு பிடிக்காத ஒரு பெண் .அப்படியானால் அவள் நிச்சயம் எனக்கு உதவக்கூடியவள்தான் நிலானி அவனை முந்திக் கொண்டு வேகமாக தன் கையை அந்தப் பெண்ணிற்கு நீட்டினாள். ” ஹாய் நான் நிலானி”

அபியை கண்களால் குறிவைத்து நெருங்கி வந்த அந்தப் பெண் திடுமென கைநீட்டிய நிலானியை திகைப்புடன் பார்த்தாள். ”  நீங்கள் ? ” அவள் புருவங்கள் முடிச்சிட்டன.

” நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் ? “அபி அடக்கப்பட்ட கோபத்துடன் இருப்பது நன்றாகவே தெரிந்தது.

” ஜஸ்ட் ஒரு விசிட் வரலாம் என்றுதான்…”  அவள் தயங்க, 

”  தேவை இல்லை. முதலில் நீ ஊரைவிட்டு வெளியே போ ” நிர்த்தாட்சண்யமாக சொன்னான்.

அவள் தோள்களை குலுக்கினாள் .” உனக்கு இன்னும் இரண்டு நாட்கள்தான் கெடு  அபி “எச்சரிக்கை போல் அவள்  பேசிய விதம் நிலானிக்கு சந்தோசத்தை கொடுத்தது . ஹையா  இந்த தீவிரவாதிக்கே  ஒரு பெண் கெடு கொடுக்கிறாள் …மிக உடனடியாக அந்தப் பெண்ணுடன் தோழமை பூண வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள்.

” உங்கள் பெயரை தெரிந்து கொள்ளலாமா ? ” இனிமையான குரலில் கேட்டாள் .

அந்தப் பெண் யோசனையோடு அவன் பக்கம் பார்க்க அவன் தலையில் கை வைத்துக் கொண்டான் .பிறகு பெருமூச்சு ஒன்றுடன் ” ம் ” என்பதுபோல் கையை அசைத்தான்.

” இரண்டே வார்த்தைகள் தான்.பிறகு  நீ உடனடியாக இங்கிருந்து வெளியேற வேண்டும் ” இப்போது கட்டளையிட்டது அவன் .

மறுப்பாள் என்ற நிலானியின் எதிர்பார்ப்பை உடைத்துவிட்டு அவனுக்கு பவ்யமாக தலையசைத்தாள் அந்தப் பெண்.

” ஹாய் நான் ராஜலட்சுமி .அபி என் பிரண்ட் . இங்கே பக்கத்து ஊரில் தான் வேலையில் இருக்கிறேன்”  தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாள்.

” ஓ அப்படியா எந்த ஊரில் என்ன வேலையில் …நிலானி அவசரமாக தங்கள் தொடர்பை தொடர முயல அவன் இடை வெட்டினான்.

” ராஜி நீ போகலாம் ” 

” சரி இரண்டே நாட்கள்தான். பிறகு நான் என் ஆட்களோடு இங்கே வருவேன் ” தோரணையான குரலில் அவனை எச்சரித்தவள்  நிலானியை கொஞ்சமும் கண்டு கொள்ளாது படபடவென அந்த சரிவில் இறங்கி விட்டாள்.

கண் முன்னால் தென்பட்ட வழி போவதை முதலில் நம்பாமல் பார்த்த நிலானி பிறகு வேகமாக அந்த சரிவில் இறங்க  தொடங்கினாள் . ” ராஜி ப்ளீஸ் நில்லுங்க ” அவளது குரல் ராஜியின் காதில் விழுந்ததோ இல்லையோ நிலானி கீழே விழுந்தாள் .அவளது ஹைஹீல்ஸ்  செருப்பு அந்த சரிவில் அவளை உருட்டி விட்டிருந்தது .படபடவென அவள் உருண்டு சரிவதை சலனமில்லாமல் பார்த்தபடி மற்றொரு சிகரெட்டை பற்ற வைத்தான் அவன்.

சிறு பாறை ஒன்றில் உடல் மோதி உருள்வது நின்ற நிலானி வேகமாக எழுந்து உட்கார்ந்து பார்த்தபோது அந்த ராஜி அந்த சரிவின் கீழே போன ஒற்றையடிப் பாதையில் ஸ்கூட்டியில் போய்க் கொண்டிருந்தாள். இனியும் அவளை பிடிக்க முடியாது என உணர்ந்த நிலானிக்கு கண்கள் கலங்கின. நிராசையாகி போன தனது எதிர்பார்ப்பை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை

” என்ன எழுந்து கொள்ளும் ஐடியா இருக்கிறதா இல்லையா ? ” அபி தான் அவள் அருகில் கிடந்த சிறு பாறையின் மேல் தனது ஒரு காலைத் தூக்கி வைத்துக் கொண்டு அவளிடம் குனிந்து கேட்டான் .கீழே கிடந்த சருகுகளை கையில் அள்ளி ஆத்திரத்துடன் அவன் மேல் எறிந்தாள் நிலானி.

” ரவுடி ..பொறுக்கி… நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட ”  சாபமிட்டாள் .

 தன் தோளில் இருந்த இலைச்சருகுகளை நிதானமாக தட்டிவிட்டு கொண்டவன் ” கிளம்பும் போதே இந்த செப்பல் போடாதே என்று சொன்னேனே .கேட்டாயா ?அதுதான் இப்பொழுது உன்னை தள்ளி விட்டிருக்கிறது. இல்லையென்றால் இந்நேரம் ராஜியின் பின்னால் நீயும் ஏறி ஊரை விட்டு தப்பி போயிருக்கலாம்” 




அவன் சொன்ன விதத்தில் அப்படி நடந்து இருக்குமா ?என்ற சந்தேகம் நிலானிக்கு வந்து விட்டிருந்தது .அந்த ராஜி மட்டும் என்ன …இவனுக்கு எச்சரிக்கை கொடுத்தாலும் இவன் சொன்னதைக் கேட்டு மறு பேச்சு பேசாமல் என்னை கண்டுகொள்ளாமல் கிளம்பி போனவள்தானே ? அவளிடமிருந்து மட்டும் எனக்கு எப்படி உதவி கிடைத்திருக்கும் ?

” உனக்கு இன்னொரு தகவல் சொல்லட்டுமா ? ” அபி இப்போது அவள் அருகே கிடந்த பாறையின் மேல் அமர்ந்து கொண்டான் . அவன் விழிகளில் மின்னலில் நிச்சயம் அவன் தனக்கு பிடிக்காததைத்தான் சொல்லப் போகிறான் என உணர்ந்தாள் நிலானி.

“அந்த ராஜி பார்க்கிற வேலை என்ன தெரியுமா ? ஹைவேவிஸ்ஸில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அவள் ” கண் சிமிட்டினான்.

நிலானிக்கு ஐயோவென்றிருந்தது .சரியான ஆளை இப்படி கோட்டை விட்டு விட்டேனே …அவளுக்கு அழுகை வரும்போல் இருந்தது. ” நீ… நீ என்னை ரொம்பவும் கொடுமைப்படுத்துகிறாய் “கலங்கிய கண்களுடன் நான் தழுதழுத்தாள்.

” எப்படி …? இதோ இப்போது இப்படி உருண்டு விழுந்து கிடக்கிறாயே  ?அதை சொல்கிறாயா ? அதற்கு நானா காரணம் ? ” 

நிலானிக்கு  சீயென்று வந்தது.

” நீ கொடுமைக்காரன்… கெட்டவன் …எல்லோரையும் ஏதோ சொல்லி வசியப்படுத்தி ….” சொல்லிக்கொண்டே போனவளுக்கு அது உரைத்தது .அந்த ராஜலட்சுமியும் பெண்தானே …அவளையும் இவன்… மேலே யோசிக்கவே அவளுக்கு அருவருப்பாக இருந்தது.

” என்ன ஆகாத சிந்தனை ? ” அருவருப்பில் சுருங்கிய அவள் முகத்தை பார்த்து அதட்டினான் அவன் .

” வீட்டிற்கு போகலாம் ” அழுகையை மறைக்க முயன்றாள் அவள் .மெலிதாய் விசிலடித்தான் அவன்.

” எந்த வீட்டிற்கு …?என் வீட்டிற்கா ? உன்னை சிறை வைத்திருக்கிறேனே அங்கேயே வா போக வேண்டும் என்கிறாய் ? “

நிலானியின் கண்கள் இயலாமையுடன் அவன் மேல் படிந்தன . ” கொடூரமான ராட்சசன் நீ ” குற்றம் சாட்டினாள் .

” தேங்க்யூ .வா போகலாம் ” அவளுக்கு  கை நீட்டினான் .அவனை தொடக்கூடாது என முடிவெடுத்து தானாக எழ முயற்சித்து இடுப்பில் சுருக்கென்று வலி  தாக்க மீண்டும் கீழே உட்கார்ந்தவள் வேறு வழி இன்றி அவன் கையைப் பற்றியே  எழுந்தாள்.

” இங்கே வா.. இதைப் போட்டுக் கொண்டால் சரியாகி விடும் ” கையில் ஒரு ஸ்பிரேயுடன் அவன் அழைக்க ” என்ன இது ? “என்றாள்.

” இடுப்பில் அடிபட்டது தானே ? அதிக வலி  போல தெரிகிறது. இது அதற்கான மருந்து . நானே ஹெல்ப்  பண்ணுகிறேன்  ” இயல்பாக அவன் அருகே வர நிலானி  அதிர்ந்து பின்னடைந்தாள்.

” தள்ளிப்போ .கிட்டே வராதே ” அவளது கத்தலைக்  கேட்டதும் அவன் கண்களில் ஏன் கூடாது ..? எனும் சவால் வந்தது

.

“ஆஹாம் ”  என்றபடி தீவிர கண்களுடன் அவளை நெருங்கி இடுப்பில் கை வைத்தான் . “இங்கேதானே வலி ? ” என்ற போது அவன் குரல் குழைந்திருந்தது.




தீ சுட்டது போல் பதறி நிலானி விலக முயற்சித்த போது வாசலில் அழைப்பு மணி ஒலித்தது. உடன் அவன் கண்களில் குறும்பு மறைந்து கவனம் வந்தது .வேகமாக வாசலுக்கு போனான் .தப்பித்தேனென பெருமூச்சு விட்டாள் நிலானி.

சிறிது நேரத்திலேயே வெளியே யாரையோ சப் சப் என்று அறையும் சத்தம் கேட்க நிலானி ஓடிப் போய் பார்த்தபோது தன் முன்னால் நின்றிருந்த இரண்டு ஆண்களை ஒருவித வெறியோடு மாற்றி மாற்றி அடித்துக் கொண்டிருந்தான் அவன். கண்ணீர் வடித்தபடி அதை பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர் சில பெண்கள்.

What’s your Reaction?
+1
5
+1
6
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!