pacha malai poovu Serial Stories பச்சைமலை பூவு

பச்சைமலை பூவு – 12

12

கோடையின் முதல் மழை அற்புதமானது

அதனை அனுபவிக்க புரியாது உனக்கு

நீ 

புரவிகளின் மேலே பயணிப்பவன் 

புதுக் காலைகளை மீட்டி எடுப்பேன் நான் 

இருளென கொட்டிக் கவிழ்ப்பாய் நீ ,

எங்கேயாவது இணையத்தானே வேணுமெனும் நம்பிக்கையுடன் 

அதோ அங்கே தொடுவானம் .




” அதோ உயரமாக இருக்கிறதே அந்தப் பாறை , அதையும் உடைத்து விட்டாயானால் இந்த அருவி இரண்டு பிரிவுகளாக பிரிந்து விழும் .இதனால் இன்னமும் கூடுதலான பேர் இங்கே குளிக்கலாம் ” விஸ்வநாதன் சுந்தரேசனுக்கு ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தார்.

” செய்யலாம் சார் . இது போல் இன்னமும் கூட நிறைய ஐடியாக்கள் என்னிடம் இருக்கின்றன. ஆனால் அதற்கெல்லாம் பணம் தேவைப்படுகிறது .அதனால் மெல்ல மெல்ல ஒவ்வொன்றாக தான் செய்ய வேண்டும் ”  சுந்தரேசன் விளக்கம் கொடுத்தான்.

” பேங்கில் லோன் போட்டு கொள்ளலாமே ? ” 

” எங்கே சார் …இதோ இப்போது செய்திருக்கும் கட்டுமான வேலைகளுக்கு வாங்கிய கடனையே  இன்னமும் அடைக்கவில்லை .வருமானத்தில் பாதியை லோனுக்கு தான் கட்டிக்கொண்டிருக்கிறேன் .மேலே லோன் வாங்க யோசனையாக இருக்கிறது ” 

” அது சரிதான் .அகலக்கால் வைக்க வேண்டாம் .முதலில் பழைய கடன்களை அடைத்து விட்டு பிறகு அடுத்த திட்டத்தை போடு ”  விஸ்வநாதன் சமாதானமாக சுந்தரேசனின் தோளைத் தட்டினார்.

” சார் நீங்கள் இங்கே இருக்கிறீர்களா  ? உங்களை குடிலில் தேடி விட்டு இங்கே வந்தேன் .இதோ இந்த மருந்தை குடித்து விடுங்கள் ” என்று வந்தாள தேவயானி.

” ஏன்மா எனக்குத்தான் காய்ச்சல் சரியாகிவிட்டதே . இன்னமும் இந்த கசாயம் எதற்கு ? ” விஸ்வநாதன் முகம் சுளித்தார்

” ஒரு முன் எச்சரிக்கை தான் சார் .காய்ச்சல் குணம் ஆனதிலிருந்து இந்த அருவியை விட்டு நீங்கள் வருவதில்லை என்று சுபா  அக்கா சொன்னார்கள் .எதற்கும் இந்த மருந்தையும் குடித்து வையுங்கள் .உடம்பிற்கு நல்லது ” 







(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

" போச்சுடா என்னை போட்டுக்கொடுத்துவிட்டாளா மருமகள்  ? ஆனால் கட்டாயமாக இந்த மருந்தை குடிக்கத்தான் வேண்டுமா ? "  இப்போதே மருந்து குடித்த பாவனையைக் கொண்டது விஸ்வநாதனின் முகம் .

சுந்தரேசன் சிரித்தான் " தேவயானி விடமாட்டாள் சார். நீங்கள் மருந்தை குடித்தே தான் தீரவேண்டும் " 

அண்ணனின் கூற்றை மெய்யாக்குவது போல பிடிவாதத்தை முகத்தில் காட்டி கையில் மண் கலயத்தோடு நின்றிருந்தாள் தேவயானி.

" உடம்பு சரியான பிறகும் மருந்து குடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது எல்லாம் ரொம்ப கொடுமை சுந்தரேசா .இந்த மருந்திற்கு பயந்து நான் அடுத்த முறை உன் பசுமை குடிலுக்கு வரப்போவது இல்லை. வேறு நல்ல ஹோட்டலாக போய் தங்கிக் கொள்ள போகிறேன் "  கோபம் போல் பேசியவரின் வாயில் கலயத்தின் முனையை வைத்து அழுத்தினாள் தேவயானி.

" அதைப்பற்றிய கவலை எனக்கு கிடையாது .இங்கே வந்தால் இப்படித்தான் இருக்க வேண்டும் .இதுதான் எங்கள் தங்கும் விடுதியின் சட்டதிட்டங்கள்  " பேச்சு வாக்கிலேயே அவருடைய நாக்கை அழுத்தி மருந்தை வாய்க்குள் ஊற்றி  விட்டாள்.

வாய் முழுவதும் பரவிவிட்ட கசப்பில் முகம் சுளித்து வேகமாக அருவி நீருக்கு ஓடி கைகளில் அள்ளி நீரை குடித்தார் விஸ்வநாதன். "  ஆனாலும் ரொம்ப அநியாயம் .இதை கேட்க மாட்டாயா சுந்தரேசா  ? " கேட்டபடி திரும்பியவர் அவனைக் காணாமல் திகைத்தார் .

 




" அண்ணன் அப்போவே போய்விட்டார் .இனி நீங்கள் தைரியமாக அருவியில் குளித்து விட்டு வரலாம் " தேவயானி திரும்ப போக ...

" ஒரு நிமிடம்மா. இங்கே உட்கார் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் " என்றார் விஸ்வநாதன். இருவரும் ஆளுக்கு ஒரு பாறை திட்டில் அமர்ந்தனர்.

" புதிதாக ஒரு நோயாளி இங்கே தங்கியிருக்கிறார் போல ? " 

" ஆமாம் சார் சசிதரன் சாருடைய தம்பி ரிஷிதரன் .ஒரு தீ விபத்தில் மாட்டிக் கொண்டார் .இப்போது இங்கே தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார் " 

"நீங்கள் இங்கே மருத்துவமனை நடத்திக்கொண்டு இருக்கவில்லையேம்மா .இவரை எல்லாம் ஏன் இங்கே தங்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் ? " 

" ஒரு மனிதாபிமானம் தான் சார் .அத்தோடு மங்கையர்கரசி மேடமும் அம்மாவும் நெருங்கிய தோழிகள் என்று உங்களுக்கு தெரியும் தானே ? " 

" ம் அதுவும் தெரியும் .அந்த ரிஷிதரனை  பற்றியும் தெரியும் " விஸ்வநாதன் சொல்லவும் தேவயானி அமைதியானாள்.

" அவன் நல்லவன் இல்லையம்மா .சிகிச்சைக்காக என்றாலும் நீ அவனுடன் தினமும் பழக நேர்வது எனக்கு அவ்வளவு சரியாக படவில்லை " 

" உடல் முழுவதும் காயங்களோடு  அவர் படுக்கையில் இருக்கிறார் சார் . அவரின் மீது குறைபாடு வைக்கச் சொல்கிறீர்களா ? " 

 




" ம் நானும் அவனுடைய காயங்களைப் பார்த்தேன் .அவன் செய்த பாவங்களின் வினை அது .அதனை அவன் அனுபவித்துத்தான் தீர வேண்டும் " 

" விடுங்கள் சார் .அம்மா அண்ணனுடன் சண்டை என்பது சிலருடைய வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் நடப்பது தான் .இதனை பெரிதுபடுத்த வேண்டாம் என்று நான் நினைக்கிறேன் " 

" அவர்களுடைய குடும்ப சண்டையை பற்றி நான் பேசவில்லை. சொந்தங்கள் இன்று அடித்துக் கொள்வார்கள் , நாளை கூடிக் கொள்வார்கள்.  நான் பேச வந்தது அந்தப் பையனின் கேரக்டரை பற்றி. நான் அறிந்தவரை அவன் பெண்கள் விஷயத்தில் ரொம்பவுமே மோசமானவன் .தினமும் ஒரு பெண் வேண்டும் அவனுக்கு 

உன்னை போன்ற அழகான பெண்கள் எல்லாம் அவன் கண்ணிலேயே படக்கூடாது என்பேன் நான் " 

தேவயானி மௌனமாக கொட்டிக் கொண்டிருந்த அருவியை பார்த்தபடி இருந்தாள். அந்த அருவியின் பேரோசையை போன்றே அவள் மனதிலும் ஓசைகள்.முதல் நாள் அவன் போனில் தென்பட்ட பெண்ணின் புகைப்பட கோலம் அவள் நினைவிற்கு வந்தது .

கண்களை மூடியபடி போனுக்காக கைநீட்டி கொண்டிருந்தவன் அவளது மௌனத்தை உணர்ந்ததும் கண்களைத் திறந்தான் .வேகமாக எழுந்து அமர்ந்தான்.

"  யார் ஏஞ்சல் ? " 

முகம் முழுவதும் பரவிய வெறுப்பில் போனை சார்ஜில் இருந்து எடுத்து அவன் மடியில் தூக்கி போட்டாள் தேவயானி ." உங்க போனில் வரும் அழைப்பிற்கு என்னை கேட்கிறீர்களே ...எனக்கு எப்படி தெரியும்  ? மருதாணி வா போகலாம் " என்று அவள் கையையும் பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டாள் .மறுநாள் காலை உணவை,  மருந்தை அம்மாவிடம் கொடுத்து அனுப்பிவிட்டு மீண்டும் அவனது குடிலுக்கு போக மனமற்று மற்ற வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தாள்.

" சுந்தரேசனிடம் இதைப்பற்றி பேசத்தான் இங்கே அழைத்து வந்தேன் .அவன் பண விஷயம்  பேசினான் . இப்போது எப்படி பேசுவது என்று விட்டுவிட்டேன் "  விஸ்வநாதன் கவலையுடன் சொன்னார்.

" அண்ணனிடம் எதுவும் சொல்ல வேண்டாம் சார் . அவருக்கு ஆயிரம் பிரச்சினைகள்.நான் ஜாக்கிரதையாக இருந்து கொள்வேன் " 

" அப்படியே சொன்னாலும் உன் அண்ணன் இதனை கேட்பான் என்று எனக்கு தோன்றவில்லை .சசிதரன் ஒவ்வொரு முறை வந்து செல்லும் போதும் உங்களுக்கு கொடுக்கும் பணத்தின் அளவு எனக்கு தெரியும் .இப்போது தம்பிக்கு என்று...அதுவும் நீங்கள் இப்படி அவனை பக்குவமாக கவனித்துக் கொண்டிருக்கும் போது , இன்னமும் பல மடங்கு அதிகமாகவே தருவான் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை .இதையெல்லாம் விடுவதற்கு உன் அண்ணனுக்கு மனம் இருக்காது " 

" இது அண்ணனுடைய தொழில் தானே சார் . இதில் நீங்கள் இப்படி அவரை குறைபாடாக நினைப்பதற்கு என்ன இருக்கிறது  ? " தேவயானி கொஞ்சம் கோபமாக கேட்டாள்.

 




" இல்லையம்மா நான் உன் அண்ணனை குறை சொல்லவில்லை. அவனுடைய நிலையும் எனக்கு தெளிவாக தெரிகிறது .அவன் ரிஷிதரனை  ஒரு வாடிக்கையாளராக மட்டுமே பார்க்கிறான் .வாடிக்கையாளர் சேவையாக உன்னுடைய வேலைகளை நினைக்கிறான் .அவன் தொழிலுக்கு அது நியாயமும்தான் . ஆனால் நான் இவற்றையெல்லாம்  தாண்டி உன் நன்மைகளை மட்டும்  யோசிக்கிறேன் " 




" நீங்கள் இந்த அளவு கவலைப்படும் படி ரிஷிதரன் இல்லை சார். வெளியே அவர் எப்படியோ என்னிடம் மிகவும் நாகரீகமாக தான் நடந்து கொள்கிறார். அத்தோடு என்னையும் உங்களுக்கு தெரியும் தானே ? " 

" உன்மேல் நூலளவு கூட பழுது சொல்ல முடியாதும்மா .என் கவலையெல்லாம் அந்த ரிஷியை பற்றி தான். உன்னை எச்சரிக்க வேண்டியது என்னுடைய கடமை .இனி நீதான் சமாளித்துக் கொள்ள வேண்டும் " 

" எனக்கு இப்போது அவர் ஒரு நோயாளி மட்டுமே. உடல் சிறிது சரியானதுமே அவரை இங்கிருந்து அனுப்பிவிட போகிறோம் .அத்தோடு அவரைப் பார்த்தாலும் 

அப்படி ஒரே இடத்தில் தங்கி இருப்பவர் போன்றும் தோன்றவில்லை. ஒரு பத்து நாட்களோ பதினைந்து நாட்களோ காயங்கள் சிறிது ஆறியதும் வெளியேறி விடுவார் .இந்தக் கவலையை நீங்கள் விடுங்கள் சார் " 

" சரிதான்மா நீ போய் உன் வேலையை பார் .நான் ஒரு குளியல் போட்டுவிட்டு வருகிறேன் " விஸ்வநாதன் அருவியை நோக்கி நடக்க தேவயானி தங்கள் வீட்டிற்கு நடந்தாள்.

" கோபமா ஏஞ்சல்  ? " அன்று மதியம்  உணவு கொண்டு வந்து கொடுத்து விட்டு , அவனுடைய காயங்களுக்கு மருந்து தடவிக் கொண்டிருக்கும் போது மெல்லிய குரலில் கேட்டான் ரிஷிதரன்.

" கோபமா ...? எதற்கு...?  யாரிடம்...? " 

" உனக்கு... என்னிடம்..."  அவளையும் தன்னையும் விரல் சுட்டியவன் " என்ன கோபம் ? " என்றான் தொடர்ந்து.

" கோபமே இல்லை என்கிறேன் .பிறகு காரணம் கேட்டால் நான் என்ன சொல்ல முடியும் ? " 

" பிறகு ஏன் இன்று காலையில் நீ வரவில்லை ? " 

" ஹலோ சார் இங்கே மொத்தம் பனிரெண்டு குடில்கள் இருக்கின்றன .அவர்கள் எல்லோருக்குமே இதோ இப்போது உங்களுக்கு போலவே உணவு மருந்து போன்ற வேலைகள் எல்லாவற்றையும் நானே தான் பார்க்க வேண்டும் .எனக்கு அந்த வேலைகள் இருந்தன " 

" இது என்ன வேலை ஏஞ்சல் ? தாதிப் பெண் போல... எனக்கு பிடிக்கவில்லை  " முகத்தைச் சுளித்தான் .

தேவயானி அவனை ஆச்சரியமாக பார்த்தாள் . " இது எங்களுடைய இடம் .எங்கள் தொழில் .இதில் வேலை பார்ப்பதில் எனக்கு எந்த மனக்குறையும் இல்லை. நான் இந்த வேலையை கேவலமாக நினைக்கவில்லை .என் மனமார இதனை செய்கிறேன். உங்களது பிடித்தங்களைப்பற்றிய அக்கறை எனக்கு இல்லை " 

 




" ம் சரிதான் .ஆனால் நீ அன்று ஐஏஎஸ் படிக்கப்போவதாக சொல்லிக்கொண்டிருந்தாய் தானே ? அதை விட்டுவிட்டு இது போன்ற வேலைகளை..."  ரிஷி தரன் சுட்டிய போது தேவயானி அவனுடைய காலில் மருந்து தடவிக் கொண்டு இருந்தாள் 

.அவனுக்கு பதில் அளிக்க அவள் தயாராக இல்லை.

" நான் சந்திரசேகரிடம் பேசுகிறேன் .இந்த வேலைகளையெல்லாம் விட்டு விட்டு நீ அவருடைய கோச்சிங் சென்டரில் போய் சேர்ந்து படிக்கலாமே " 

தேவயானி தனது வேலையை முடித்து விட்டாள். எழுந்து நின்று " உங்கள் அக்கறைக்கு நன்றி சார் .என்னை நான் பார்த்துக் கொள்வேன் .நீங்கள் உங்கள் உடம்பை மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள் " என்றாள் .ரிஷிதரனின் முகம் வாடியது.

" உன்னுடைய நன்மைக்காகத்தான் சொன்னேன் ஏஞ்சல் " 

" எனக்கு அம்மா ,அண்ணன் ,அண்ணி ,தம்பி என்று நிறைய உறவுகள் இருக்கிறார்கள்  சார் .என்னுடைய கவலைகளை அவர்கள் பட்டுக் கொள்வார்கள். நீங்கள் ரிலாக்சாக இருங்கள் .சரியா ...? " அவனது அக்கறையை எடுத்தெறிந்து பேசிய தனது பேச்சை தேனில் குழைத்து இருந்தாள் தேவயானி

ரிஷிதரன் இமைக்காமல் அவளைப் பார்த்தபடி இருக்க தேவயானி

அவன் தோள்களை அழுத்தி படுக்க வைக்க முயன்றாள். "  விடு என்னை நான் கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருக்க போகிறேன் " அவள் கையை தோளசைத்து தள்ளினான்.

" சரிதான் இப்போது தானே சாப்பிட்டீர்கள் .கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருக்கலாம் தவறில்லை " அவனை அப்படியே விட்டுவிட்டு சிறு அம்மியில் அரைத்து வைத்திருந்த  மூலிகையை பிழிந்து சாறு எடுக்க துவங்கினாள் தேவயானி.

அவளை பார்த்தபடியே தனது கட்டிலில் இருந்த தலையணைக்கடியில் கைவிட்டு சிகரெட் பாக்கெட்டை எடுத்தான் ரிஷிதரன் .தீக்குச்சி உரசும் சத்தத்திற்கு வேகமாக திரும்பி பார்த்த தேவயானியின் விழிகளில் தீச்சுடர் எரிந்தது .அப்போதே பிடுங்கி எறியும் வேகத்துடன் அவனை நெருங்கினாள் சிகரெட்டையும் முடிந்தால்  புகைக்கும் அவன் உதடுகளையும் கூட சேர்த்து...

தேவயானி வேகத்துடன்  அவனருகில் வந்தபோது ரிஷிதரனின் உதட்டு சிகரெட் வெடுக்கென்று பிடுங்கப்பட்டது. சொர்ணம் சிறிது கோபத்துடன் அவனருகே நின்றிருந்தாள் . " இது என்ன தம்பி ? இங்கே இதுவெல்லாம் கூடாது " கண்டிப்பாக பேசினாள்.

" இல்லை ஆன்ட்டி. கொஞ்சம் டென்ஷன் .அதுதான்..."  ரிஷிதரன் தயக்கத்துடன் இழுக்க...

" என்ன டென்ஷனாக இருந்தாலும் இதுபோன்ற விஷயங்கள் எங்கள் குடிலில் நடக்கக்கூடாது. இதில் நாங்கள் கண்டிப்பாக இருக்கிறோம். தேவயானி தம்பிக்கு இது எப்படி கிடைத்தது ? " 

" அவருடைய பேக்கில் வைத்திருந்திருக்கலாம் அம்மா .நான் கவனிக்கவில்லை " 

" ஏன் கவனிக்கவில்லை ?  நம் விடுதியின் விதிமுறைகள் உனக்கு தெரியும் தானே ? இவற்றையெல்லாம் கவனித்து அப்புறப்படுத்தி இருக்க வேண்டியதுதானே  ? இதை கொண்டு போய் குப்பையில் போடு .அத்தோடு தம்பியின் மற்ற உடமைகளையும் ஒரு தடவை பார்த்துவிடு .வேறு எதுவும் இதுபோல் இருந்தால் அதனையும் அப்புறப்படுத்தி விடு " உத்தரவாய்  சொல்லிவிட்டு ரிஷிதரன் பக்கம் திரும்பினாள்.

" இது எங்கள் குடிலின் விதிகள் தம்பி .இதனை மீறுபவர்கள் யாரும் இங்கே தங்க முடியாது .மிகத்தெளிவாக இதற்கு கட்டுப்படும் ஆட்களை  மட்டுமே குடும்பமாக நாங்கள் இங்கே தொடர்ந்து தங்க அனுமதித்து கொண்டிருக்கிறோம் .இதற்கு கட்டுப்படாதவர்கள் யாராக இருந்தாலும் இங்கே இருக்க முடியாது .உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் " 

 




ரிஷிதரன் லேசான அவஸ்தையுடன் ஒற்றை விரலால் தலையை சொறிந்து கொண்டான் "  ம்... சரிதான் ஆன்ட்டி " மெல்ல தலையசைத்தான்.

" புரிந்து கொண்டதற்கு மகிழ்ச்சி தம்பி .இப்போது இந்த மருந்தை குடித்துவிட்டு படுத்து ஓய்வெடுங்க "  தேவயானி பிழிந்து வைத்திருந்த மருந்தை சொர்ணம் எடுத்துக்கொண்டு வர ரிஷிதரன் கலவரத்துடன் அதனை எட்டிப் பார்த்தான்.

" நேற்று கொடுத்த அதே மருந்தா  ஆன்ட்டி ?  ரொம்ப கசந்ததே " அவன் பேசி முடிக்கும் முன் அவன் வாயில் கலயத்தை வைத்திருந்தாள்  சொர்ணம் .

" மருந்து கசக்கத்தான் செய்யும் .வாயை திறங்கள்  " நாக்கை அழுத்தி வாய்க்குள் மருந்தை ஊற்ற ரிஷிதரன் தலையசைக்க தேவயானி சட்டென்று அவன் மூக்கை அழுத்திப் பிடித்தாள்.வெளியிட முடியாத மூச்சு வாய்வழியே மருந்தை உள்ளே இழுக்க தொண்டைவரை கசந்தபடி மருந்து ரிஷிதரனின் உள்ளே இறங்கியது.

" அடிப்பாவி ராட்சசி இப்படியா பழி வாங்குவாய்  ? " தேவயானியை அவன் முனுமுணுக்க அவள் வாய் கசப்பிற்கு அவன் தேடிய தண்ணீரையும் தள்ளி வைத்தாள்.

" கண்டதையும் குடிக்கும்போது இருக்கும் கசப்பை விடவா இது அதிகமாக இருக்கிறது  ? " தேவயானியிடம் பழிவாங்கும் வெறி சற்று அதிகமாகவே மின்னியது.

" ஆன்ட்டி தண்ணீர் " ரிஷி தரன் வேறுவழியின்றி சொர்ணத்தையே தஞ்சம் அடைந்தான் .அவள் தண்ணீரை எடுத்துக் கொடுக்க மடமடவென்று குடித்து விட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.




 




தேவயானி அவனது உடமைகளை ஆராய ஆரம்பித்தாள் . அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அவனது உடைகளுக்கு இடையே ...பேக்குகளில் என ஆராய்ந்து இன்னமும் ஒரு சிகரெட் பாக்கெட்டையும்  இரண்டு விஸ்கி பாட்டில்களையும் அவனை முறைத்தபடி எடுத்தாள் ." அம்மா இன்னும் நிறைய புதையல்களை சார் வைத்திருக்கிறார் பாருங்கள் "  கைகளில் உயர்த்தி காட்டினாள்.

" அவற்றை எல்லாம் கொண்டு போய் குப்பையில் போடு " திரும்பி பார்க்காமலேயே பதில் சொன்ன சொர்ணம் ,ரிஷிதரனை கூர்ந்து பார்த்து " இங்கே இருக்கும் வரை தம்பிக்கு இதுவெல்லாம் தேவைப்படாது .தேவைப்படக் கூடாது "  அதிகாரம் தொனிக்க சொல்லிவிட்டு வெளியேறினாள்.

"என் தேவையை நீங்கள் முடிவு செய்தால் எப்படி ஏஞ்சல் ? " ரிஷிதரனின் குரல் சோகமாக ஒலித்தது.

" உங்களுக்கு சுதந்திரம் இல்லாத இடத்தில் நீங்கள் ஏன் இருக்க வேண்டும் சார்  ? தாராளமாக கிளம்பலாம் " வாசலை காட்டினாள் .ரிஷிதரன் கன்னத்தில் கை தாங்கி அவளைப் பார்த்தபடி இருந்தான்..

" ஆக கடைசிவரை உன் பெயரை சொல்லவே மாட்டாய் ? " 

எங்கிருந்து எதற்கு தாவுகிறான் பார் ... பேசிக்கொண்டிருக்கும் பேச்சின் தீவிரத்தை குறைக்கும் உத்தி இது என உணர்ந்து எரிச்சலாய் அவனைப் பார்த்தவளிடம் கையேந்தினான்.

" ஒரே ஒரு சிகரெட் .ப்ளீஸ் ஏஞ்சல்..." 

" நோ .." அழுத்தமாக மறுத்துவிட்டு வெளியேறியவளிடம் " உன் பெயரையாவது சொல்லிவிட்டுப் போ ஏஞ்சல் " கத்தலாக  கேட்டான்.

தேவயானி வாய் திறக்கவில்லை .அவன் பக்கம் திரும்பவும் இல்லை.

What’s your Reaction?
+1
2
+1
5
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!