karpoora pommai onru Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 36

36

சக்கர சடுதியின்றி சப்பென்று நகரும் 
இந்நாட்களில் …சுவாரஸ்ய கோர்ப்பென 
பட்டினிடை சரிகையாய்  ஊடுபாவி மின்னும் ,
வேங்கையின் வியர்ப்பென 
உன்னிரு  கண்ணசைவு

” ரேணுகாதேவியா …? எங்கள் வீட்டில் தங்கியிருந்தாளா ….? யாரம்மா அது …? முதலில் நீங்கள் யார் …? உங்களை நாங்கள் இதற்கு முன் பார்த்ததே இல்லையே …?

சாத்விகாவிற்கு இப்போது கோபம் வரவில்லை . சற்று முன்தான் அவள் அந்த மருத்துவமனையில் இதே போன்ற ஒரு அதிர்வை சந்தித்திருந்தாள் .அந்த ஆஸ்பத்திரி ப்யூன் அவளை முன்னே பின்னே பார்த்ததில்லை என பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு வந்து சூடம் அணைத்து சத்தியம் செய்ய தயாராக இருந்தான் .முதலில் அதிர்ந்தவள் ..பிறகு  வீரேந்தரின் அதிகார கைகள் இங்கு வரை நீண்டிருப்பதை உணர்ந்தாள் .

அதே போன்றதோர் பதிலை இங்கே மீண்டும் கேட்ட போது , ஒரு வித மரத்த தன்மை அவளிடம் வந்திருந்த்து.பதிலே சொல்லாமல் தன்னை பாரத்தபடி இருந்த சாத்விகாவின் கண்களில் அந்த பெரியவர் என்ன கண்டாரோ …கை கூப்பினார் .

” நாங்கள் எளியவர்கள் அம்மா .எங்களை விட்டு விடுங்கள் .”

இப்படி கேட்பவரிடம் என்ன விபரங்கள் பெற முடியும் …? எழுந்து வந்துவிட்டாள் .ஆட்டோவில் வரும் போதே அவள் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்த்து . அடுத்து அவள் போக சொன்ன முகவரிக்கு திரும்பி பார்த்த அந்த ஆட்டோ டிரைவர் முகத்தில் மரியாதை கலந்த பயம் தெரிந்த்து .

” கேப்டன் சார் உங்களுக்கு தெரிந்தவரா அம்மா …? “

” சொந்தமா ….? ப்ரண்டா ..? “

” ———–“

” ரொம்ப நல்லவர் அம்மா அவர் .அவரிடம் எந்த உதவி வேண்டுமானாலும் கேட்கலாம் …”




ஆட்டோக்காரனின் வளவளப்புக்கு வெறுமே ” உம் ” மை மட்டுமே பதிலாக்கியவள் …அந்த கணத்தில் வீரேந்தரை மிக ….மிக வெறுத்தாள் .

வீரேந்தரின் இன்ஸ்ட்டியூட் வாசலில் இறங்கியவள் நீட்டிய பணத்தை கூட சிறு நடுக்கத்துடனேயே அந்த ஆட்டோ டிரைவர் வாங்கியதை ஏலாத ஆத்திரத்துடன் பார்த்தவள் , பல மடங்காக பெருகி விட்ட ஆத்திர்த்துடன் அவன் அலுவலகத்திற்குள் நுழைந்தாள் .

” ஹலோ மேடம் வாங்க …” வஹீப் ஓடிவந்து வரவேற்றான் .

” உங்க சார் எங்கே இருக்கிறார் …? “

” மாடியில் முக்கியமான மீட்டிங் …”

” பெரிய மீட்டிங் ….பெரிய ஆள் ….” அவன் பேச்சை பாதியிலேயே விட்டு விட்டு லிப்டை தேடும் பொறுமையின்றி படியேறினாள் .

மூடியிருந்த ஏஸி ரூம் கதவின் வாசலில் அமர்ந்திருந்த ஆள் அவளை அடையாளம் தெரிந்து தடுக்க யோசித்து , விபரம் சொல்லும் முன் அந்த அறைக்கதவை திறந்து உள்ளே வந்தாள் .

” இன்னும் எங்கெல்லாம் உங்கள் அதிகாரத்தை செலுத்தி வைத்திருக்கிறீர்கள் …? பாவம் அந்த எளிய மக்களை பயமுறுத்தி  வைத்திருக்கிறீர்களே …இப்படியெல்லாம் செய்து என்னை தடுத்து விடலாமென நினைக்காதீர்கள் .என்னை பெற்றவளை கண்டுபிடித்து உங்கள் முகத்தில் கரியை பூசாமல் விடமாட்டேன்…” படியேறி வந்த மூச்சிறைப்புடன் பேசியவளை  …சக்கரவர்த்தி தடுக்காவிடில் வீரேந்தர் நிச்சயம் அறைந்திருப்பான் .

வேகமாக எழுந்தவனை கையை பிடித்து தடுத்து , மெதுபடுத்தினார் சக்கரவர்த்தி .சிறிது வேகம் குறைந்தவன் ,” இவர்கள் மரியாதைக்குரியவர்கள் .உன் சிறுபள்ளைத்தனத்தை இங்கே காட்டாதே …” இவளருகே வந்து  …வாய்க்குள் உறுமினான் .

தொடர்ந்து அங்கிருந்தவர்களிடம் இந்தியில் சாத்விகாவின் செயலை விளக்கியபடி அவள் கைகளை பிடித்து அறையை விட்டு வெளியே இழுத்து வந்தான் .” வஹீப் …” கத்தினான் .வஹீப் ஓடி வந்தான் .

” நான் சினிமாவிற்கு போக அடம்பிடித்தேனா ….? ” கத்தினாள் சாத்விகா .அவளது தமிழ் புரியாமல் விழித்து கொண்டிருந்தவர்களிடம்…..இப்படித்தான் …அவன் மனைவி சினிமாவிற்கு அழைத்து போகாத்தால் கோபமாக இருக்கிறாளென இந்தியில் கூறிவிட்டு அவளை வெளியே இழுத்து வந்திருந்தான் .

” ஆமாம் …அடம்தான் …நிலைமை தெரியாமல் சிறு பிள்ளை அடம் .வஹீப் … வீட்டில் இறக்கி விட்டு வா .போகும் வழியில் வந்திருப்பவர்களின் முக்கியத்துவத்தை …” பேச்சை முழுவதுமாக முடிக்க கூட செய்யாமல் ஒரு கையசைவு ஜாடையை மட்டும் வஹீபிற்கு சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டான் .

லேசான அவமானத்துடன் , கலங்கிய கண்களுடன் அதை வஹீபிற்கு காட்டாத ஜாக்கிரதை தனத்துடன் காரில் ஏறி அமர்ந்தாள் சாத்விகா .

” வந்திருப்பவர் ராணுவ அமைச்சரின் பி.ஏ மேடம் .இந்தியா , பாகிஸ்தானுக்கிடையே எநத ்நேரமும் சண்டை நடக்க கூடிய சாத்தியக் கூறுகள் தெரிகிறது .சக்கரவர்த்தி சாரும் , வீரேந்தர் சாரும் இப்போது படையில் இல்லையென்றாலும் , நம் ஆட்களோடு இது மாதிரி நேரத்தில் ராணுவத்திற்கு உதவுவார்கள் .சக்கரவர்த்தி சாருக்கு அனுபவம் நிறைய இருப்பதால் நம் ராணுவ ஜெனரல் ….அவரிடம் யோசனை கேட்டு ….”

” போதும் நிறுத்தி தொலை ….” சாத்விகாவின் பதில் தாய் மொழியிலிருந்தாலும் , அவள் கோபத்தை உணர்ந்த வஹீப் , மௌனமாகிவிட்டான் .வாசலில் ஏறும்போதே …அங்கே வாசல் ஓரம் அலங்காரத்தற்கு வைக்கப்பட்டிருந்த அலங்கார பீங்கான் ஜாடியை ஓங்கி உதைத்தாள் சாத்விகா .அவள் மனதை போன்றே அதுவும் கீழே விழுந்து சிதறியது .

வேகமாக படியேறும்போது முன்னங்கால்் சுரீரென வலிக்க ,கண்டு கொள்ளாமல் போய் படுக்கையில் விழுந்தான் .அழக்கூடாதென்ற தீர்மானத்துடன் தலையணையில் முகம் புதைத்தாள் .சிறிது நேரத்தில் அவள் கால் கையிலெடுத்து ஆராயப்பட திரும்பி பார்த்தாள் .

சந்திரிகா …அவள் காலை ஆராய்ந்து கொண்டிருந்தாள் .” மாடிப்படிமுழுவதும் வரிசையாக ரத்தம் .பொட்டைப்புள்ளைக்கு இவ்வளவு ஆங்காரமா ….? நல்லா வளர்த்நு வச்சிருக்காங்க உன்னை ….” என்றாள்.

இந்தம்மாகிட்ட யோசனை கேட்காமல் போனார்களே குதர்க்கமாக நினைத்தபடி அவள் கையிலிருந்த தன் பாத்த்தை உருவ போனவளை விடாமல் காலை அழுத்தி பிடித்தாள சந்திரிகா .் .” அசையாதே .உள்ளே பீங்கான் எதுவும் இருக்குதான்னு பாக்கனும் .கொஞ்ச நேரம் உன் வாலை சுருட்டிக் கொண்டு உட்காரு குரங்கே …” என்றாள் .தொடர்ந்து அவள் காயத்தை துடைத்து சுத்தம் செய்ய தொடங்கனாள் .

என்னது குரங்கா ….? கத்த நினைத்த சாத்விகா ் கால் எரிச்சலை இதமாக வருடிய கைகளில் அடங்கி மீண்டும் படுத்துக்கொண்டாள் .காயத்தை சுத்தம் செய்து மருந்திட்டு கட்டு போட்டாள் சந்திரிகா .தொடர்ந்து சாத்விகாவின் இடுப்பு பகுதி ஆடை நெகிழ்த்தபட , திரும்பி பார்த்த சாத்விகா ஆச்சரியமானாள் .

கைகளில் இன்ஜெக்சனுடன் அவளை நெருங்கி கொண்டிருந்தாள் சந்திரிகா .” டி.டி .இன்ஜெக்சன் …” என்றபடி அவள் இடுப்பில் அந்த ஊசியை போட்டாள் .

” நீங்கள் டாக்டரா….? ” சந்திரிகா எடுத்து வைத்துக் கொண்டிருந்த சிறு மருந்து பெட்டியை பார்த்தபடி கேட்டாள் சாத்விகா .




” நர்ஸ் ….” பதில் முகம் பார்க்காமல் வந்த்து .

” ஓ …” விழிகளை விரித்தவள் திடீரென்று ஒன்று தோன்ற , ” இன்ஜெக்சனில் பாய்சன் எதுவும் இல்லையே ….? ” ஊசி போட்ட தனது இடுப்பை தடவியபடி மெல்ல கேட்டாள் .

தன் மருத்துவ உபகரணங்களை எடுத்து வைத்தபடி இருந்த சந்திரிகா நிமிர்ந்து சாத்விகாவை உக்கிரமாக பார்த்தாள் .சட்டென தனது விரல்களை மடக்கி அவள் உச்சந்தலையில் வேகமாக கொட்டினாள்.சாத்விகாவின் கண்கள் கலங்கும்படி இருந்த்து அந்த கொட்டு .

,” பிசாசுடி நீ .உன்னையெல்லாம் நான் வளர்த்திருந்தா இரண்டு வேளை மட்டும் சாப்பாடு போட்டு அதிகமாக பேசிகிற உன் நாக்கில் சூட்டுக்கோலால் கோலம் போட்டு ஒழுங்காக வளர்த்திருப்பேன் .இப்பவும் கெட்டு போகலை …இனி உன்னை உளியால செதுக்கி உருப்படியாக்கலை ….நீ …பாருடி ….” பொருமிவிட்டு , அவள் முகம் பார்க்க பிடிக்காமலோ …மேலே எதுவும் கேள்வி கேட்டு விடுவாளோ ….என்ற பயத்திலோ வேகமாக அறையை விட்டு வெளியே போய்விட்டாள் .

இவர் …நர்ஸா …?இன்னமும் எனக்கு தெரியாத எத்தனை விசயங்கள் இந்த வீட்டில் இருக்கின்றன ….? வெறுப்போடு நினைத்தபடி படுத்திருந்த சாத்விகா சிறிது நேரத்தில் தூங்கி போனாள்.

அவளது கால் இதமாக வருடப்பட மெல்ல கண்விழித்தாள்…வீரேந்தர் அவள் கால்களை பார்த்து கொண்டிருப்பதை கண்டதும் ஆத்திரத்துடன் அவன் கை பிடியிலிருந்து விடுபட்டு தள்ளி படுத்தாள் .இப்போது அவள் தலை பக்கம் வந்து அமர்ந்தவன் …” ஏன் பேபி இப்படி சிறு பிள்ளைத்தனமான வேலைகளாக செய்கிறாய் …? ” என்றான் .

தலை வருடிய அவன் கைகளை பட்டென தட்டி விட்டாள் .,” எவ்வளவு பெரிய ப்ராடு நீ …உனக்கெல்லாம் பெரிய மனித மரியாதை கொடுக்கிறார்கள் பார் .முட்டாள்கள் …”

” சரி ..விடு .தெரியாமல் கொடுத்துவிட்டார்கள்.அதை பற்றி பிறகு ஒருநாள் மீட்டிங் போட்டு முடிவெடுக்கலாம் .இப்போது வா .சாப்பிடலாம் ….,”

” அந்த ஆஸ்பத்திரியில் , அந்த ஆயா இருந்த வீட்டினரை என்ன சொல்லி மிரட்டி வைத்தாய் …? வாயை திறக்கவே பயப்படுகிறார்கள் …”

” ஒன்றும் சொல்லவில்லையே . சும்மா கொஞ்ச நேரம் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன் .ராணுவத்தில் இருந்த போது நான் எத்தனை பேரை கொன்றேன் …எப்படியெல்லாம் கொன்றேனென்று …சும்மா சாதாரணமாக சொல்லி விட்டு வந்தேன் .அவ்வளவுதான் .ஏன் …ரொம்பவும் பயந்துவிட்டார்களா …? ,” நிதானமாக தாடையை தடவியபடி கேட்ட வீரேந்தர் ஒரு பக்கா வில்லனை நினைவுபடுத்தினான் .

” நீயெல்லாம் ஒரு மனிதனா …? அப்பாவி எளிய ஜனங்களை உன் அதிகாரத்தை , உடல் பலத்தை காட்டி மிரட்டியிருக்கிறாயே …? “

” காரணம் நீதான் சாத்விகா .அன்றாட வேலையை பார்த்துக் கொண்டு , அக்கடாவென சாப்பிட்டு நிம்மதி வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பவர்களை …நீதான் உன் வீம்பிற்காக  …இந்த இக்கட்டில் இழுத்து விட்டு கொண்டிருக்கிறாய் …வேண்டாம் .விட்டுவிடு…”

பாவி …எவ்வளவு எளிதாக பழியை அவள்புறம் தள்ளுகிறான் .ஒரு நிமிடம் அப்படித்தானோ …என அவளே குழம்பும் படி நினைக்க வைத்துவிட்டானே …இந்த ஊர் முழுவதும் அவனது அதிகார கட்டுப்பாட்டில் வைத்திருப்பான் போலவே .இவனை மீறி நான் நினைத்ததை எப்படி சாதிக்க போகிறேன் .சாத்விகா நிராசையால் சோர்வுற்றாள் .வீரேந்தர் முகம் பார்க்க பிடிக்காமல் திரும்பி படுத்தாள் .இயலாமையில் நொந்து அவளுக்கு தொண்டை அடைத்து கண் கலங்கியது .

மெதுவாக அவள் தலையை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்ட வீரேந்தர் ” வேண்டாம் பேபி .அழாதே . நீ அழுதால் எனக்கு கஷ்டமாக இருக்கிறது .எப்போதும் நீ சிரித்தபடி இருப்பதையே விரும்புகிறேன் …” என்றான் .

” அப்போது …நான் கேட்ட விபரங்களை கொடுத்து விடுகிறாயா ….? நான் எப்போதும் இதோ …இப்படி ..சிரித்து கொண்டே இருக்கிறான் ….” தன் உதடுகளை அதிகப்படி இளித்து காட்டினாள் .

பட்டென சிரித்தான் .” பயமுறுத்தாதே பேபி .வா போகலாம் …” எழுந்து கை நீட்ட , ” நான் வரவில்லை ” திரும்ப படுக்க போனவளை குனிந்து கைகளில் அள்ளினான் .

” சாப்பிட்டு வந்து மீதி சண்டையை தொடரலாம் …” அப்படியே அவளை சுமந்தபடி படியிறங்க துவங்கினான் .

” உஷ் ..்என்ன இது ….? கீழே விடுங்கள் .உங்கள் அப்பா , அம்மா ,வேலையாட்கள் …எல்லோரும் இருப்பார்கள் .விடுங்க…”

” இருக்கட்டும் பேபி .உனக்குத்தான் காலில் அடிபட்டிருக்கிறதே …” அவளை இன்னும் கொஞ்சம் ஏந்தி தன்னோடு அழுத்திக்கொண்டான் .சாத்விகாவின் உள்ளத்தோடு , உடலும் படபடக்க ஆரம்பித்தது .அப்பாவும் , அம்மாவும் இருப்பதை பொருட்படுத்தாது நிதானமாக அவளை டைனிங்டேபிள் சேரில் அமர வைத்தவன் …” என்ன சாப்பிடுகிறாய் பேபி …? இட்லி …? சப்பாத்தி …? ” என பரிமாற முனைந்த போது ஒரு அக்மார்க் காதல் கணவனாகவே தோன்றினான் .

இவனை எனக்கு பிடிக்கவில்லை …தனக்குள் ஒரு முறை சொல்லிக் கொண்டு அவன் கையிலிருந்த பாத்திரத்தை பிடுங்கி தானே பரிமாறிக்கொண்டாள் சாத்விகா .சந்திரிகாவும் , சக்கரவர்த்தியும் இவர்களை வெறுப்புடன் பார்த்தனர்.




குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்துதான் உணவு உண்டு கொண்டிருந்தனர் .ஆனால் பேச பய்ந்தோ ..என்ன பேசுவதென்ற யோசனையிலோ …  சாப்பிடும் அறை மௌனங்களின் ஆட்சியிடமாகி இருள் போர்வை போர்த்திருந்த்து .சாத்விகா விற்கு சாப்பிடும்போது …ஏன் எப்போதுமே இது போன்ற சந்தடியற்ற நிலை பழக்கமில்லை .அவளுக்கு சூழ்நிலை கலகலப்பாக இருக்க வேண்டும் .

ஏதாவது பேசப் போய் மற்றவர்களின் மனதினை அது வேறு விதமாக தாக்கிவிடுமோ …என்ற பயத்தில் மற்ற மூவரும் பேசாமலிருக்க …அது போன்ற கவலைகள் ஏதுமற்ற …அல்லது அது போல் மனதை தாக்கித்தான் பேசவேண்டுமென்ற உறுதிப்பாடுடைய சாத்விகா மெல்ல வாயை திறந்தாள் .

” வீடா இது …பிணம் எரியிற மயானம் மாதிரி இருக்குது ….” சுற்றியிருப்பவர்களுக்கு  கேட்கட்டுமென்றே , தெளிவாக முணுமுணுத்தவள் , தன் குத்தல் பேச்சை தொடர, கன்னம் பளுக்க அழுத்தமாய் ஒரு அறை வாங்கினாள் .

What’s your Reaction?
+1
15
+1
11
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!