ramanin mohanam Serial Stories ராமனின் மோகனம்

ராமனின் மோகனம் – 7

7

” உமனைசரா ?  யாரடி அது ? மூன்று ராத்திரிகள் உன்னுடன் இருந்தும உன்னை இன்னும் தொடாமல் விட்டு வைத்திருக்கிறேனே …நேற்று ஒரே அறைக்குள் இருந்தும் கண்ணியமாக தள்ளி படுத்து தூங்கினேனே …ரயிலின் கூபேயில் கூட  தூங்குபவளை தொடாமல் தள்ளி இருந்தேனே …நானா உமனைசர்  ? சரிதான் இதையெல்லாம் செய்யாமல் இருந்தது தான் தவறு போல .இதோ இப்போதே முடித்துவிடுகிறேன் ” ஒருவித வெறி கண்களில் மின்ன அவளை நெருங்கினான்.

நிலானி  பயத்தில் முகம் வெளிற சோபாவில் ஒடுங்கினாள் . ” இப்போது இங்கே எனக்கு என்ன கெடுதல் நடந்தாலும் அதற்கான பலனை நீ பலமடங்காக அனுபவிக்க வேண்டும் .அதனை மனதில் வைத்துக் கொண்டு என்னை தொடு ” அந்த பயத்திலும் விரலை ஆட்டி அவனை எச்சரிக்க தயங்கவில்லை அவள்.

” ரொம்பத்தான் கொழுப்புடி உனக்கு .நேற்று இதே சோபாவில் தலைதூக்க முடியாமல் படுத்துக்கொண்டு கும்பிட்டு கெஞ்சியது யார் ? ” அவனது குத்தி காட்டலில் அவள் முகம் சுருங்கியது.

” சை  ஒருவரது உடல் பலவீனத்தை சுட்டுகிறாயே ? நீயெல்லாம் மனிதனா ? “

” இல்லையே …நான் மிருகம் …பொறுக்கி பெண்களின் பின்னால் சுற்றுபவன் …எந்த பெண்ணை பார்த்தாலும் படுக்கைக்கு கூப்பிடுபவன் ” 

” ஆமாம் .அப்படித்தான் .அத்தோடு நீ ஒரு தீவிரவாதி. ஆயுதங்களை கடத்துபவன் ” 

இப்போது அவன் அவள் அருகே வந்து இருந்தான் .அவனுடைய செய்கையில் நிதானம் வந்திருந்தது .அவள் அருகே சோபாவில் சாவாதானமாக  அமர்ந்து கொண்டு அவளை ஏறிட்டான் .சுவாரஸ்யம் மின்னியது அவன் கண்களில் . ” ஹேய் கமான் ரிபீட் …என்ன சொன்னாய் ? இப்போது புதிதாக எதையோ சேர்த்திருக்கிறாய்  போலவே ” 

” புதியதாக இல்லை .பழையதுதான் .நீ செய்து கொண்டிருப்பது தான் .நீ ஒரு தீவிரவாத கும்பலை சேர்ந்தவன் .உன்னிடம் நிறைய ஆயுதங்கள் இருக்கின்றன. இந்த ஊர் மக்களை உனக்கு அடிமைகளாக பயன்படுத்துகிறாய்.”  நிலானி முழக்கமாக அவன் மீது குற்றம் சாட்டினாள் .




அவனது சுவாரஸ்யம் குறைந்து முகத்தில் கவனம் வந்தது . ” ஆயுதங்கள் …?என்ன ஆயுதங்கள்  ? அவற்றை நீ பார்த்தாயா ? ” 

” அதுதான் மூட்டை மூட்டையாக குவித்து வைத்திருக்கிறாயே ” 

வில்லம்பு போல் விருட்டென்று  எழுந்தான்.  தோள்களைப் பற்றி அவளையும் எழுப்பினான் ” நிலா அந்த ஆயுதங்களை நீ பார்த்தாயா ? எங்கே பார்த்தாய் ? ” 

” இங்கேதான் .வீட்டிற்குப் பின்னால் .இப்படி வீட்டிலேயே ஆயுதங்களை சேர்த்து வைத்துக்கொண்டு சட்டத்துக்கு விரோதமான காரியங்களை….”  நிலானி தொடர்ந்து பேசிக்கொண்டே போக அதனை அவன் கேட்கத் தயாரில்லை.

” வா . எனக்கு அந்த இடத்தை காட்டு ” அவள் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு நடந்தான்.

வீட்டின் பின்புறம் வரவும் நிலானிக்கு குழம்பி விட்டது .” இந்த இடம் தானே …? இங்கே எல்லா இடமும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கின்றது ” முணுமுணுத்தாள்

” கொஞ்சம் பொறுமையாக யோசித்து இடத்தைச் சொல்லு ”  அவளுக்கு பொறுமை போதித்த அவனது குரலில் அது இல்லை.

” இப்படிப் பார்த்தால் எனக்கு தெரியாது. கொஞ்சம் இரு ”  நிலானி  மீண்டும் வீட்டிற்குள் ஓடினாள் .

” ஒளித்து வைத்ததே இவன்தான். அவனுக்கே தெரியாமல்…”  தட்டென்று தட்டப்பட்டது அவள் பின்தலை .

” நான் பின்னால் தான் வந்து கொண்டிருக்கிறேன். புலம்பாமல் இடத்தை காட்டு ” சற்று பின்தங்கி வருகிறான் என்று எண்ணி பேசியவள் இப்போது வாயை அழுத்தமாக மூடி கொண்டாள்.

அந்த ஜன்னலை நெருங்கி கதவை திறந்தாள் .” இதன் வழியாகத்தான் இப்படி கீழே குதித்தேன் ”  என்றபடி குதிக்க போனவளின் இடுப்பை பின்னிருந்து பற்றிக் கொண்டான் அவன் .இதனால் அவன் கைகளில் ஊஞ்சலாடிய படி தொங்கினாள்  நிலானி.

” இவ்வளவு உயரத்தில் இருந்து கீழே குதித்தாயா ?  திடீரென்று கால் பிசகிவிட்டால் என்ன ஆவது ? சிறிய அளவில் பிராக்சர் கூட ஏற்பட வாய்ப்பு இருக்கிறது தெரியுமா ? என்ன முட்டாள்தனமான வேலையை செய்து இருக்கிறாய் ? ” கைகளில் தன்னை அனாயசமாக தாங்கிக்கொண்டு பேசியவனின் குரலில் இருந்த கருணையை நம்பமுடியாமல் பார்த்தாள் நிலானி.

மெல்ல தானும் முன்னால் சரிந்து  ஜன்னலை விட்டு வெளியே வந்து , அவளை இன்னும் கொஞ்சம் தரை தொடும் அளவு இறக்கி பின் மெல்ல  பாதங்களை நிலத்தை தொட வைத்தான் .அப்போதும் ” பார்த்து …பத்திரம் …பக்கத்தில் எதையாவது பிடித்துக் கொள். தடுமாறாதே ”  போன்ற அறிவுரைகளை சொல்லிக் கொண்டிருந்தான்.

கீழே இறங்கிய பிறகு நிலானிக்குமே அந்த இடம் கொஞ்சம் அதிக உயரமாகத்தான் தெரிந்தது .அப்போது ஏதோ வேகத்தில் குதித்து விட்டாள் போலும் .அவள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே விசுக்கென ஒரே குதியில் அவன் கீழே இறங்கி விட்டான்.

” வா போகலாம் ” 

மெல்ல யோசித்து சுற்றி சுற்றி பார்த்து அனுமானமாக தான் முன்பு மறைந்த புதரை கண்டுபிடித்தாள்  நிலானி .

” இதோ இதற்குப் பின்னால் தான் .அதோ அங்கே தரையில் இருக்கும் புற்களை அப்படியே தரையோடு சேர்த்து தூக்க முடிகிறது .அதன் அடியில்தான் துப்பாக்கிகள் இருக்கின்றன. “

அபி பரபரப்பாக அந்த இடத்தை அணுகி புற்களை விலக்கி பார்த்து அந்த மூட்டையை வெளியே தூக்கினான்.

” மறைத்து வைத்த இடத்தை மறந்து விட்டாயா ? இப்போது நான் தான் உனக்கு கண்டுபிடித்து சொல்லி இருக்கிறேனா ? “கேட்டவளை திரும்பி முறைத்தான்.

” வாயை மூடுடி ” சீறினான் .

வாய்க்கு வந்தபடியெல்லாம் கூப்பிடுகிறான் …ஆம்பளை என்கிற திமிர் .பதிலுக்கு அவனை”  டா ” சொல்லும் ஆசையை தொண்டைக்குள் அமுக்கினாள்.

மிகவும் சீரியஸாக இருந்த அவனது முகத்தை பார்த்ததும் ஏதோ முக்கியமான விஷயம் போலும் இவனிடம் ஓரண்டை  இழுக்க வேண்டாம் என்று நினைத்து  வாயை மூடி கொண்டாள்.

மூட்டையை முதுகில் தூக்கி கொண்டவன் வாவென அவளையும் இழுத்தபடி வாசல் வழியாக வீட்டிற்குள் வந்தான்.  ஒரு அறைக்குள் மூட்டையை மறைவாக வைத்துவிட்டு தன் பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து யாருக்கோ டயல் செய்யலானான்.

நிலானியின் விழிகள் விரிந்தன .இங்கே போன் பேச முடியுமா  ? அப்படியானால் என்னுடைய போனை இவன்தான் ஏதோ செய்து வைத்திருக்கிறான். அவளுக்கு ஆத்திரம் பொங்கியது. இவனை என்ன செய்வது  ? அவனுக்கான தண்டனைகளை விதவிதமாக யோசித்து கொண்டிருந்தவள் அவனது போன் பேச்சை கவனிக்கத் தவறினாள் .




” சரி அதையும் நானே பார்த்துக் கொடுக்கிறேன். நீ மட்டும் இந்தப் பக்கம் கொஞ்ச நாட்கள் வராமல் இரு ”  என யாரிடமோ உத்தரவு போல் பேசி முடித்து போனை அணைத்தான்.

” உன் போன் மட்டும் எப்படி ஒர்க் ஆகிறது ? என் போனை என்ன செய்தாய் ? ” உடனே பாய்ந்தாள் நிலானி.

” பாவம் உன் போனை தேடி எடுத்து பேசி பார்த்தாயாக்கும் ? ” நக்கல் வழிந்தது அவன் குரலில்.

” என் போனை ரிப்பேர் செய்து வைத்திருக்கிறாயா ? “

” இல்லை .உன் போனை நான் தொடவே இல்லை .இங்கே பிஎஸ்என்எல் மட்டும்தான் சிக்னல் கிடைக்கும் .என் ஃபோனில் அந்த சிம் தான் இருக்கிறது”  தன் போனை உயர்த்தி காட்டியவன் , நிலானியின்  பார்வை ஆவலோடு அவன் போனில் பதிவதை லேசான புன்னகையோடு பார்த்தபடி

பத்திரமாக அதனை தன் பேன்ட் பாக்கெட்டுக்குள் சொருகினான்.

” ஆனால் இன்னமும் உனக்கு போனில் நம்பிக்கை இருப்பதில் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது ” 

” ஏன் இல்லாமல் …? என் அப்பா அம்மாவைத் தான் நீ ஏதோ சொல்லி மிரட்டி வைத்திருக்கிறாய். அவர்கள் இல்லாவிட்டால் என்னை காப்பாற்ற வேறு  ஆள் கிடையாதா ?  ஒரே ஒரு போன் போதும். சென்னை டிஜிபியே படை திரட்டிக் கொண்டு இந்த காட்டுக்குள் வந்து உன்னுடைய தீவிரவாத முகாம்களை அளித்து விட்டு என்னையும் கூட்டிக்கொண்டு போவார் தெரியுமா ? ” 

” எதனை அழிப்பார் ? ” தலைசாய்த்து கவனமாகக் கேட்டான்.

” அதுதான்… துப்பாக்கி… வெடிகுண்டு… கண்ணிவெடி …என்று ஏகப்பட்ட ஆயுதங்களை இங்கே பதிக்கி வைத்திருக்கிறாயே ?  இந்த முகாம்களை தான்…” 

” ஓ அப்படியா மற்ற ஆயுதங்கள் எல்லாம் எங்கே இருக்கிறதும்மா ? ” 

“அது…. இங்கே தான் எங்கேயாவது அவற்றையும் வைத்திருப்பாய்.எல்லா  தீவிரவாதியும் வைத்திருப்பது தானே ? எனக்குத் தெரியும் உன்னிடமும் இதெல்லாம் இருக்கும் ” 

” எவ்வளவு கரெக்டாக ஊகித்திருக்கிறாய்  ” பாராட்டு போல் அவள் கன்னம் தட்ட முகம் சுளித்து பின்வாங்கினாள் அவள்.

” தொடாதே” 

” எனக்கும் இப்போது உன்னை தொடும் நேரம் இல்லை .நிறைய வேலைகள் இருக்கின்றன. அவசர அவசரமாக உன்னை தொட எனக்கு விருப்பமில்லை .மெதுவாக… நிதானமாக… அணுஅணுவாக… ரசித்து… மெல்ல மெல்ல… உன்னை …” ரசனையோடு அவன் பேசப்பேச தன் காதுகளை இறுக பொத்தினாள்  நிலானி.

” சீ அசிங்கம் பிடித்தவனே …வாயை மூடுடா. நீ இவற்றையெல்லாம் உன் கனவில்தான் நடத்திக் கொள்ள வேண்டும். நிஜத்தில் ஒரு போதும் நடக்காது. “

” அப்படியா…?  பார்ப்போமா…? ”  சவால் போல் அவன் கட்டை விரலை நீட்ட , மெல்ல அவன் அருகில் இருந்து தள்ளி நின்று கொண்டு அவளும் கட்டைவிரலை ஆட்டினாள் .” பார்ப்போம் ” 

” சரி இப்போது இருவருமே மேலே போய் தூங்கலாம் .நாளை முக்கியமான வேலை ஒன்று இருக்கிறது ” சொன்னபடி எழுந்தவன் கைகளை நீட்டியபடி  அவளருகே வரவும் பதறி பின்வாங்கி ” என்ன ? ” என்றாள்  அலறலாய்.

” தூக்கிக் கொள்ள வேண்டாமா  ?/வழக்கமாக உன்னை கைகளில் தூக்கிக்கொண்டு போய் தானே சோபாவில் படுக்க வைப்பேன் ”  அவனது விளக்கத்திற்கு இவளுக்கு எரிந்தது.

” எனக்கு கால்கள் இருக்கிறது. என்னால் நடக்க முடியும் .” தட் தட் என்று படிகளில் சப்தித்தபடி ஏறி  அறைக்குள் வந்து சோபாவில் விழுந்தாள்.அபி  பின்னால் வந்து கட்டிலில் படுத்துக்கொண்டான். உள்ளே வந்ததும் அவன் அறைக் கதவை பூட்ட அது நிலானியை அவ்வளவாக பாதிக்கவில்லை.

ஏனோ சொன்ன சொல்லைக் காப்பாற்றி அவன் தன்னை தொட மாட்டான் என்றே நம்பினாள் .அதனால் அவளுக்கு நிம்மதியான தூக்கம் வந்தது.

” ,அந்தப் புதரை எப்படிக்  கண்டுபிடித்தாய் ? ”  காலை எழுந்ததும் அவளுக்கு காபி கோப்பையை நீட்டியபடி அபி கேட்ட முதல் கேள்வி இதுதான்.

” வெளியே நடந்து போய்க் கொண்டிருக்கும்போது யாரோ வருவது போன்றோ.. போவது போன்றோ… ஏதோ சத்தம் கேட்டது. நான் பயந்து அந்தப் புதரின் பின்னால் மறைந்தேன் ” நிலானி காபியை வாங்கி பருக ஆரம்பித்தாள் .

அபியின் முகத்தில் சிந்தனை கோடுகள் தெரிந்தது. யோசனையோடு நெற்றியை நீவி விட்டுக் கொண்டிருந்த அவனின் கண்களில் சிறு கலக்கம் தெரிவதை ஆச்சரியமாக பார்த்தாள் நிலானி .இவனெல்லாம் எதற்கும் கலங்க கூடியவனா ..? 

” சாப்பிடு ”  குளித்துமுடித்து வந்தவளுக்கு தட்டு வைத்து தோசை சுட்டு வைத்தான். கூடவே மூன்று தோசை சுட்டு எடுத்துக் கொண்டு வந்து தான்  சாப்பிட்டபடி இருந்தவனின் முகத்தில் தீராத சிந்தனை.

 சாப்பிட்டு முடித்ததும் தட்டுகளை சமைத்த பாத்திரங்களை அவனே ஒதுக்குவதை கண்டவள் மனது உறுத்த தானும் உள்ளே சென்று அவன் கழுவி வைத்த பாத்திரங்களை ஈரம் துடைக்கலானாள்.

” அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன். நீ வெளியே போவதற்கு உடைமாற்றிக் கொண்டு வா ” அவள் கை தட்டை பிடுங்கி வைத்துக் கொண்டு அவன் சொல்ல நிலானிக்கு திக்கிட்டது.

இவனுடன் வெளியே கூட்டிப் போக போகிறானா ? அவள் மனதில் அன்று வேறு திட்டம் இருந்தது .முதல்நாள் காற்றில் அடித்த ஜன்னல் தாழ்பாள்  உடைந்து போயிருந்தது .அதனால் அதனை பூட்ட முடியாது .இன்று இவன் கிளம்பிப் போன பிறகு அந்த ஜன்னல் வழியே மீண்டும் வெளியே குதித்து தப்பித்துப் போக திட்டமிட்டு வைத்திருந்தாள்.

நேற்று இருட்டி விட்டதால் தான் வழி தெரியாமல் போக முடியவில்லை .இன்று பகலிலேயே கிளம்பி விட்டால் இருட்டுவதற்குள் ஊருக்குள் போய் விடலாம் என்று திட்டம் போட்டு வைத்து இருந்தாள் .

மனதிற்குள் தானே அந்த திட்டத்தை பேசிக்கொண்டிருந்தேன் இவனுக்கு கேட்டு விட்டதா என்ன ? ஐயத்துடன் மாடி ஏறிப் போய் இலகுவாக அணிந்திருந்த வீட்டு உடையை மாற்றி ஜீன்ஸும் டி-ஷர்ட்டும் அணிந்தாள்.

” குட்  ” இறங்கி வந்தவளின் உடையை பார்த்து மெச்சியவனும் அதே உடையைத்தான் அணிந்திருந்தான் .மீண்டும் அவனுடன் பைக் பயணம் . அந்த வீட்டின் பிரதான வாயிலை அவன் பைக்கில் அடைவதற்கே கால் மணி நேரம் பிடித்தது .இவ்வளவு தூரத்தை நடந்தே என்னால் கடக்கமுடியுமா… சோர்வுடன் நினைத்தபடி பின்னால் உட்கார்ந்து இருந்தாள்.

”  எங்கே போகிறோம் ? ” 

” ஊருக்குள் ”  அவளது கேள்விக்கு சிக்கனமான பதில் வந்தது.

நிலானியின் முகம் மலர்ந்தது .ஊருக்குள் என்றால் நிறைய ஆட்கள் இருப்பார்கள். அவள் தப்பிப்பதற்கு ஏதாவது வழி கிடைக்கும் தானே  ?/உற்சாகத்தில் பைக்கில் உட்கார்ந்தபடியே கொஞ்சம் துள்ளி விட்டாளோ ?

” ரொம்ப துள்ளாதே .இங்கே ஊருக்குள் இருப்பவர்கள் எல்லோருமே என்னுடைய எஸ்டேட்டில் வேலை பார்ப்பவர்கள் .எனக்கு எதிராக துரும்பை கூட அசைக்க மாட்டார்கள் ” அவனது விளக்கத்தில் எரிச்சல் மிகுந்தது அவளுக்கு.

அதையும் தான் பார்க்கிறேன் தனக்குள் கறுவிக் கொண்டாள்.




ஆனால் அவன் சொன்னதுதான் உன்மை. அங்கிருந்த மக்கள் அவனுக்கு எதிராக துரும்பை மட்டுமல்ல மூச்சு கூட விட மாட்டார்கள் போல . மூக்கை பொத்திக் கொண்டு செத்துப்போ என்று அவன் சொன்னால்  மறுபேச்சின்றி செய்பவர்களாக  இருந்தார்கள்.

” என்ன ஏதாவது முயற்சித்தாயா ?கேட்டபடி அவன் ஒரு சிகரெட்டை பற்ற வைக்க முகம் சுளித்தபடி திரும்பிக்கொண்டாள் நிலானி.

 ” தீவிரவாதி எல்லோரையும் மிரட்டி வைத்திருப்பான் என்பது எதிர் பார்த்தது தானே .நீ சென்ட்ரல் மினிஸ்டரான என் அப்பாவையே மிரட்டி வைத்திருப்பவன் தானே ?  இந்த அப்பாவி மக்கள் எந்த மூலைக்கு ? ” 

” உன் அப்பாவை எதற்கு மிரட்டினேன் என்கிறாய்  ? ” உதடு குவித்து புகையை வெளியேற்றினான்.

நிலானி திகைத்தாள். இதற்கு என்ன பதில் சொல்வது ஏதோ ஒன்றை இவன் மிரட்டுகிறான் என்றால் அப்பாவிடம் ஏதோ இருக்கிறதுதானே ?

பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் தன் நிலைமையை அவன் கவனிப்பதை குன்றலாக  அவள் நினைத்த அதேநேரம் அவனது கவனம் திசை மாறியது .காரணம் ஒரு பெண்.

” அபி ” என்று அழைத்தபடி அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள் .அவளைப் பார்த்ததும் நிலானியின்  விழிகள் விரிந்தன .தான் விரைவாக இவனிடம் இருந்து தப்பிச் சென்று விடலாம் என்ற நம்பிக்கை அவளுக்கு வந்தது.

What’s your Reaction?
+1
5
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!