pacha malai poovu Serial Stories பச்சைமலை பூவு

பச்சைமலை பூவு – 11

11

கவனப்பிசகுகள் நிகழ்பவைதான் 

உனக்கோ …எனக்கோ  ,

வலிவுகள் கொடுக்கும் போதுதானவை 

வஞ்சம் பெறுகின்றன ,

வலிந்து வஞ்சமிடும் நீ் 

உறவுக் கோட்டையில் உருவிய செங்கல்  




” ஏஞ்சலுக்கு ஊஞ்சலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா ஆன்ட்டி ? ” 

ரிஷிதரனின் கேள்வியில் திடுக்கென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் தேவயானி .அவள் கண்களில் எச்சரிக்கை தெரிந்தது .போதும் நிறுத்து எனும் கோரிக்கை இருந்தது .அவன் அவளை கவனித்தாலல்லவா அந்த கோரிக்கையை பார்க்க…?  மிகுந்த சுவாரசியத்துடன் சொர்ணத்திடம்  விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தான்.

” என்ன தம்பி கேக்கறீங்க ?  எனக்கு ஒண்ணும் புரியல ”  சொர்ணம் அவனது காயங்களை சுத்தமான நீரினால் ஒத்தி எடுத்து கழுவிக் கொண்டிருந்தாள்.

” கொஞ்ச நாட்களுக்கு முன்பு இந்த பச்சைமலை காட்டில் நான் ஒரு ஏஞ்சலை பார்த்தேன ஆன்ட்டி ” 

” ஏஞ்சல்னா தேவதை தானே தம்பி ? “. 

” ஆமாம் ஆன்ட்டி தேவதையே தான் ”  இதைச் சொல்லும்போது அவன் விழிகள் மெச்சுதலாக தேவயானி மீது படிந்து விலகின .இத்தோடாவது நிறுத்து என்பதாக தேவயானி அவனை பார்த்தாள்

” தேவதைக்கு  முதுகுக்குப் பின்னாடி சிறகுகள்  இருந்ததா தம்பி  ? ” சொர்ணத்தின் கவனம் முழுவதும்  ரிஷிரனின் காயங்கள் மேலேயே இருந்தது .அவனது பேச்சை அரைகுறையாகவே காதில் வாங்கினாள் .

” இந்த தேவதைக்கு சிறகுகள் இல்லை ஆண்ட்டி .ஆனா கையில கத்தி வைத்திருந்தது ” தேவயானி அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தாள் .அவளை லட்சியம் செய்யாது அவன் புன்சிரிப்புடன் தொடர்ந்தான்.

” சட்டுனு கத்தியை எடுத்து குத்திடுச்சு ஆன்ட்டி ” வலதுகையை வீசி தன் தோளுக்கு கொணர்ந்து குத்துதல் சைகை காட்டினான் .தேவயானியின் கண்கள் தன்னை அறியாமல் அவன் தோள் காயத்தை கவனித்தன. தீக்காயங்கள் வந்தபின்பு கத்தி காயத்தை அவள் மறந்து போயிருந்தாள்.




” இதோ இங்கே ” அவளது தேடலை கவனித்து

  தன்  தோளில் சுட்டி காட்டினான் ரிஷிதரன். கலந்துகொண்டிருந்த மருந்தை விட்டுவிட்டு தேவயானி வேகமாக அவனருகே வந்து பார்த்தாள். கத்தி காயத்தின் மேலேயே தீக்காயம் பட்டு இருந்தது .இப்போது அந்த காயம் அதிகமானது போல் தெரிந்தது .தேவயானி வேகமாக தன் கையில் வைத்திருந்த கிண்ணத்திலிருந்த மூலிகை எண்ணையை எடுத்து முதலில் தோள் காயத்திற்கு தடவினாள்.

” கத்தியால் குத்துபவர்களுக்கெல்லாம் தேவதை என்று பெயர் வைப்பீர்களா தம்பி ?  இதெல்லாம் ராட்சசர்கள் செய்யும் வேலை ” சொர்ணம் சுத்தப்படுத்தும் வேலையை முடித்துவிட்டு மருந்தை தடவ ஆரம்பித்திருந்தாள்.

” நீங்கள் சொல்வது போல் இருந்தாலும் அவள் அழகான ராட்சசி ஆன்ட்டி ” அவன் கண்கள் தங்கள் ரசனையை சிறிதும் குறைத்துக் கொள்ளவில்லை .தேவயானிக்கு தனது வைத்தியத்தை தொடரத்தான் வேண்டுமா என்ற சந்தேகம் வந்தது.

ராட்சஷியா நான்….? தேவயானியின் மனது திமிறி பாய உதடுகள் சொற்களை இறைத்தன. ” சொந்தங்களை எல்லாம் கண்ணால் பார்க்காமல் விரட்டுபவர்களெல்லாம் தேவ ஜாதியா  ? அசுர ஜாதியா  அம்மா ” 







தேவயானியின் கேள்வியில் ஒளி மினுங்கிக்  கொண்டிருந்த ரிஷிதரனின் கண்கள் களை இழந்தன .போதும் நிறுத்து என்பதான பார்வை இப்போது ரிஷிதரன் உடையதானது .அதனை தேவயானி அலட்சியப்படுத்தினாள்  சற்று முந்தைய அவனைப் போலவே.

அவளது பேச்சுக்கு அர்த்தமும் இருந்தது .மனோரஞ்சிதம் சசிதரன் சரிதாவையும் வெறுப்பாயக பேசிப்பேசியே அந்த பசுமை குடிலை விட்டு வெளியேற்றிவிட்டான் ரிஷிதரன். ” முதலுதவி முடிந்த்து .இனி 

எங்களோடு வா ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெறலாம் ” என்ற அவர்களது அழைப்பை வலுவாக மறுத்தான்.

” என்னை பார்த்துக் கொள்ள எனக்குத் தெரியும் .நீங்கள் இங்கேயே இருந்தால் தான் என் உடம்பு இன்னமும் மோசமாகும் .முதலில் நீங்கள் என் கண்ணில் படாமல் தள்ளி போய் விடுங்கள் ”  கடித்து உமிழ்வது போல் பேசினான்.

மனோரஞ்சிதத்தின் கண்கள் நீரை பொழிந்து கொண்டே இருக்க சசிதரனின் முகம் சோகத்தில் இருந்தது .சரிதாவும் பயத்தில் இருந்தாள். அவள் எப்போதும் ரிஷிதரனை கண்டாலே தனக்கு பயம் என்றாள். நடுங்கிக் கொண்டிருந்த அவளது குரல் அதனை உறுதிப்படுத்தியது.

” அழுகையும் , தவிப்பும் , பயமுமாக சொந்தங்களை வைத்திருப்பவர்களெல்லாம் அசுர்ர்கள்தானே அம்மா ? ” 

” உங்கள் மகளை வெளியே போகச் சொல்லுங்கள் ஆன்ட்டி ” ரிஷிதரன் எரிச்சலாக பேசினான் .

மகளின் சுட்டல் சொர்ணத்திற்கு புரியாமலில்லை .அதிலிருந்த நியாயத்தில் அவள் மௌனமாக இருந்தாள் .

“ரொம்பவும் எரிகிறதா தம்பி ? காயத்தை காட்டி நிதானமாக கேட்டு அவனது கத்தலை தான் பொருட்படுத்தப் போவதில்லை என காண்பித்தாள்.

” ஆன்ட்டி …” ஆட்சேபமாக பார்த்தவனை ” தீக்காயம் எரிச்சல் இருக்கத்தான் செய்யும்  தம்பி .கொஞ்சம் பொறுத்துக்கோங்க .அந்த எரிச்சலை பேச்சில் காட்டினால் உடம்புதான் பாதிக்கும் ” நிதானமாக பேசினாள் .




” எனக்கு என் உடம்பை பற்றிய கவலை கிடையாது .நான் இப்போதே இங்கிருந்து போகப் போகிறேன் .” ரிஷிதரன் முகத்தை உர்ரென வைத்துக் கொண்டான்.

இந்த பேச்சில் சொர்ணம் கொஞ்சம் திடுக்கிட்டாள் .இத்தனை காயங்களுடன் உடனே வெளியே போவேனென்றால் …அவளது தாய் மனம் தவித்தது.

” போகட்டும் விடுங்கம்மா .போறேன் போறேங்கிறவரை எத்தனை தடவை நாம் பிடித்து உட்கார வைக்க முடியும் ? அவர் உடம்பு …அவர் இஷ்டம் …நமக்கென்ன ? ” பேசிய தேவயானியை முறைத்தான் .

” ராட்சஷி ” பற்களை கடித்தான் .

.அவள் புருவங்களை உயர்த்தி ஒரு ஜாடை காட்டினாள் .எப்படி …என்ற கெந்தளிப்பாகவோ …இனி என்ன ..? என்ற ஜாடை கேட்டலாகவோ இருந்த்து அப் புருவ உயர்வு .

இப்போது வெளியே போக வேண்டுமா …ரிஷிதரன் யோசனையில் இருந்த போது ” எப்படி இருக்கிறீர்கள் அண்ணா ? இப்போது எரிச்சல் கொஞ்சம் குறைந்திருக்கிறதா ? ” அன்புடன் விசாரித்தபடி உள்ளே வந்தாள் மருதாணி .இப்போதுதான் பள்ளியிலிருந்து வந்திருப்பாள் போலும் .இன்னமும் சீருடையிலேயே இருந்தாள் .

” நான் நன்றாக இருக்கிறேன் .நீ …நீங்கள் …” ரிஷிதரனின் ஞாபகம் மருதாணியை துழாவியது .

” என்னை தெரியவில்லையா அண்ணா .நான்  ….” சட்டென மருதாணியின் கால்களை லேசாக மிதித்து அவளது ஞாபகமூட்டலை தடுத்தாள் தேவயானி . சொர்ணத்தை கண்களால் காட்டி இதழ் மீது கை வைத்து மருதாணியை எச்சரித்தாள் .

” இவள் மருதாணி தம்பி . இவளுடைய அம்மா இங்கேதான் வேலை பார்க்கிறாள் .இவளும் அவ்வப்போது சின்ன சின்ன உதவிகள் செய்வாள் . உங்களுக்கு எதுவும் வேலை செய்ய வேண்டுமானாலும் சொல்லுங்கள் செய்வாள் . தடவிய எண்ணெய் கொஞ்சம் உலர்ந்த்தும் தம்பியை படுக்க வை தேவயானி .நான் போய் சாப்பாடு கொண்டு வருகிறேன் ” சொர்ணம் வெளியேறினாள் .

” இதெல்லாம் உங்கள் சாமான்களா அண்ணா ? இவற்றை நான் ஷெல்பில் அடுக்கி வைக்கட்டுமா ? ” ஹோட்டல் அறையிலிருந்து எடுத்து வந்து இங்கே ஓரமாக வைக்கப்பட்டிருந்த ரிஷிதரனின் பேக்குகளை காட்டிக் கேட்டாள் மருதாணி. 




” ஐயோ வேண்டாம்மா .உனக்கு எதற்கு இந்த வேலை ? நான் பார்த்துக்கொள்கிறேன் ”  மறுத்துக் கொண்டிருந்த ரிஷிதரனருகே குனிந்த தேவயானி மெல்லிய குரலில்  ” இதுபோன்ற சின்ன சின்ன வேலைகளை மருதாணி செய்து கொடுத்தாளானால் இங்கே தங்க வருபவர்கள் அவளுக்கு ஏதாவது சிறு தொகை கொடுப்பார்கள் .அது அவளது செலவுகளுக்கு உபயோகமாகும் ”  முணுமுணுத்தாள்.

தலையாட்டி கொண்ட ரிஷிதரன் ”  சரிதான்மா  இவற்றை பிரித்து அடுக்கி விடு ” என்றான்.




” எதற்கும் அவரிடம் ஒரு வார்த்தை கேட்டு விடு மருதாணி .அவர் எங்கேயோ போகப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார் ” சொன்ன தேவயானியை முறைத்தான்.

” அப்படியா அண்ணா ? ” மருதாணிக்கு அவசரமான மறுத்தல் தலையாட்டல் ஒன்றை கொடுத்தான். ”  இல்லைம்மா நான் எங்கேயும் போகவில்லை ” சொல்லி முடித்தபோது அவன் பார்வை தேவயானி மேல் வந்திருந்தது .அவள் அலட்சியமாக உதட்டை சுளித்துக் கொண்டாள் .மருதாணி தனது வேலையில் இறங்கினாள்.

” இந்த சிறு பெண்ணிடம் என்னைப் பற்றி தப்புத்தப்பாக சொல்லி வைக்கிறாயே ஏஞ்சல் இது ஞாயமா ? ” 

அவனது ஏஞ்சலில்  திரும்பிப் பார்த்த மருதாணி ” என்ன அண்ணா இன்னமும் அக்காவை இப்படித்தான் கூப்பிடுகிறார்களா ? ”  மலர்ந்த புன்னகையுடன் கேட்டாள்.

” ஆமாம்… ஆனால் அது எப்படி உனக்கு…? ” 

” இன்னமும் என்னை ஞாபகம் வரவில்லையா அண்ணா ? நான் அன்று அக்காவுடன் பப்ளிமாஸ் மரம் பார்க்க வந்தேனே. அந்த ரவுடிகளிடம் இருந்து நீங்கள் தானே எங்களை காப்பாற்றி அனுப்பி வைத்தீர்கள் ” 




மருதாணியின் நினைவுறுத்தலில் 

ரிஷிதரன் முகம் மலர்ந்தது . ” எஸ் இப்போது நினைவு வந்துவிட்டது .காப்பாற்றினேனில்லை …” சொன்னபடி பெருமிதமாக சட்டை இன்றி வெற்றுடம்பாக இருந்த தன் உடம்பில்  இல்லாத காலரை உயர்த்தி விட்டுக்கொண்டான் .தேவயானிக்கு கோபம் கோபமாக வந்தது.

” ரவுடியே ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றுவானாக்கும். ”  அவளின்   குரல் ரிஷிதரனுக்கு மட்டுமாக இருந்தது.

” உண்மையிலேயே அன்று உங்களை காப்பாற்றத்தான் நினைத்தேன் ஏஞ்சல் ” 

” ஆஹா உங்கள் நினைப்புதான் நன்றாக தெரிந்ததே .கையில் கத்தியை எடுக்கும் வரை அப்படி ஒரு எண்ணமே வரவில்லை , வேறு உலகத்தில் மிதந்து கொண்டு இருந்தீர்கள் ” என்றபடி கட்டை விரலால் குடிப்பது போல் ஜாடை காட்டினாள்.

” அதற்கு காரணம் நான் முதலில் உங்கள் இருவரையும் …” என்று ஆரம்பித்தவன் ஓரப் பார்வையில் துணிகளை அடுக்கிக் கொண்டிருந்த மருதாணியை பார்த்துவிட்டு பாதியில் நிறுத்திக் கொண்டான் . ” பிறகு சொல்கிறேன் ” முணுமுணுத்தான்.

” அதுமாதிரி ஒரு காட்டுபகுதிக்குள் துணைக்கு ஆளின்றி இப்படிப் பெண்கள் இருவருமாக வரலாமா ? ” 

” அது எங்களுக்கு பழக்கமான பகுதிதான் .அங்கே அன்று காட்டெருமைகள் சுற்றிக்கொண்டிருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை ” 

” எருமைகள் …? மகிஷாசுரன்….? ”  ரிஷிதரன் புருவம் உயர்த்த ….

” ஆமாம் அண்ணா அதேதான் . அன்று கூட அக்கா உங்களுக்கு அந்தப் பெயர்தான் வைத்தார்கள் ” கைகள் வேலையை பார்த்துக் கொண்டிருக்க மருதாணியின்

வாய் இவர்களுக்கு உற்சாகமாக பதில் சொன்னது.

” இந்த அநியாயத்தை பார்த்தாயா மருதாணி ? நான் உன் அக்காவிற்கு அழகாக ஏஞ்சல் என்று பெயர் வைத்திருக்கிறேன் .அவர்கள் என்னை எப்படி சொல்கிறார்கள் பார்த்தாயா ? ” 

“இந்த ஏஞ்சலை  நீங்கள் விடப்போவதில்லையா ? ”  தேவயானி சலித்தாள்.

” பெயர் தெரிந்தால்தானேமா பெயர் சொல்லி அழைக்க முடியும் ? இல்லாவிட்டால் நானேதான் பொருத்தமான பெயராக வைத்து அழைத்துக் கொள்ள வேண்டும் ” 




திமிர் பிடித்தவன்.. தேவயானி பற்களை நற நறத்து கொண்டாள் ” என் பெயர் உங்களுக்கு தெரியாதாக்கும் ? ” சீறினாள்.

” நீ சொல்லவே இல்லையே ” 

” நான் சொல்லவா அண்ணா ? ” 

” பெயருக்கு உரியவர்கள் தான் சொல்லவேண்டும். நீ வேலையை பார் மருதாணி .அதோ சார்ஜர் இருக்கிறது பார் .அதில் எனது செல்போனை சார்ஜில் போடு ” வேலை ஏவி மருதாணியின் கவனத்தை திருப்பினான்.

” பெயர் சொல்ல மாட்டாயா ? ” என்ற அவனது கேள்விக்கு உதட்டை மடித்து கடித்துக்கொண்டாள் தேவயானி.

” சரிதான் எனக்கு இப்படி கூப்பிடத்தான் பிடித்திருக்கிறது .நான்  இப்படியே கூப்பிட்டு கொள்கிறேன் “அவன் சொல்லவும் தேவயானிக்கு திக்கென்றது .அம்மா அண்ணன் எதிரில் இவன் இப்படி அழைத்து வைத்தானானால் , அதுவும் அண்ணி சுனந்தா முன்னால் இப்படி உளறினானென்றால் தேவயானியின் அவஸ்தையான சிந்தனை ஓட்டத்தை இடையிட்டான் ரிஷிதரன்.

” நமது முதல் சந்திப்பை உன் அம்மாவிடம் ஏன் மறைக்கப் பார்க்கிறாய் ஏஞ்சல் ? ” ஏதோ எதிர்பார்ப்பு அவன் குரலில்.

” மூட்டை முடிச்சை எல்லாம் கட்டி இதோ இந்த காயத்தை கூட நினைக்காமல் உங்களை இந்த காட்டுக்குள் உருட்டி விட்டு விடுவார்கள் .அதற்கு பரிதாபப்பட்டு தான் சொல்லாமல் இருக்கிறேன் ”  அவன் மூக்கை உடைக்கும் வேகத்துடன் பேசினாள்.

ரிஷி தரன் தலையசைத்துக்கொண்டான் ” சோ அப்படி என்னை காயங்களுடன் இங்கிருந்து அனுப்ப உனக்கு பிடித்தம் இல்லை சரிதானே ? ” 

” தெருவில் அடிபட்டு கிடக்கும் நாயைக் கூட அப்படியே விட்டு வர எனக்கு பிடித்தம் இருக்காது. உரிய வைத்தியம் செய்து விட்டுத்தான் வருவேன் ” 

” எருமை , காட்டெருமை , செத்த எலி, 

தெரு நாய் …இன்னும் வேறென்ன ஏஞ்சல்  ? ” லேசான அலுப்புடன் பேசினான்.




” அதெல்லாம் அவ்வப்போது தான் சொல்ல முடியும் .இப்போது நீங்கள் கொஞ்சம் படுங்கள் ” அவனது உடல் சோர்வை உணர்ந்து அவன் தோள் பற்றி அழுத்தி மெல்ல படுக்க வைத்தாள்.




” தேங்க்யூ ஏஞ்சல் ,” ரிஷிதரன் மெல்ல கண்களை மூடிக் கொண்ட போது அவனது போன் ஒலித்தது.

” அந்த போனை எடுத்துக்கொண்டு வா ஏஞ்சல் ” கண்களை திறக்காமலே ரிஷிதரன் கேட்க சார்ஜில் இருந்த போனை எடுக்கப்போன தேவயானி முகம் சுளித்தாள்.

அரைகுறை ஆடைகளுடன் இருந்த ஒரு பெண் போட்டோவாக அந்த போனில் ஒளிர்ந்தபடி ரிஷிதரனை அழைத்துக்கொண்டிருந்தாள். என்ன கண்றாவி இது ? இப்படி எல்லாம் ஒரு உடை இருக்கிறதா ? இதனை பெண்கள் இது போல் அணிந்து கொள்வார்களா ? தேவயானியின் முகத்தில் லேசான அருவருப்பு வந்தது.

What’s your Reaction?
+1
4
+1
5
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!