Serial Stories thanga thamarai malare தங்க தாமரை மலரே

தங்க தாமரை மலரே – 17

17

 

“நிகிதா , இந்தியன் டைமண்ட் இன்ஸ்ட்டிடியூட்டில் ஜெம்மாலஜி ப்ரபொசனல் டிகிரி படித்துக் கொண்டிருக்கிறாள் .அவள் அப்பா பன்வாரிலாலுக்கு  ஒரே மகள் .அவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் சொந்தமாக ஒரு வைரச்சுரங்கமே இருக்கிறது .மும்பையில் பெரிய டயமென்ட் ஷோரூம் இருக்கிறது .நமது  கடைக்கு தேவையான வைரங்களை அவர்களிடமிருந்துதான் வாங்குகிறேன் .எல்லாமே சுத்தமான விலை உயர்ந்த வைரங்கள் ….”

வைரச்சுரங்க சொந்தக்காரி என்பதனாலேயே இவன் காதலிக்க தகுதியுடையவளாகி விடுகிறாளா ,? மனதின் எரிச்சல் வார்த்தைகளாக வடிந்து விடாமல் பிரயத்தனப்பட்டு அடக்கிக் கொண்டாள் . கமலி …அடக்கம் …அடக்கம் .இவனை பகைத்துக் கொள்வது உனக்கு நல்லதில்லை .தனக்கு தானே வலியுறுத்தி இதழ்களை இழுத்து வைத்துக் கொண்டாள் .

” பன்வாரிலாலுக்கு என் மேல் ஒரு அபிப்ராயம் உண்டு . உயர் தரமான அவரது தொழிலை மகளுடன் சேர்ந்து நிர்வகிக்க தகுதியுள்ள ஆள் என சமீபமாக நினைக்க ஆரம்பித்துள்ளார் .இதனை என்னிடமும் பகிர்ந்து கொண்டார் . எனக்கு ….” என சிறு யோசனையுடன் விஸ்வேஸ்வரன் பேச்சை நிறுத்த , கமலினிக்கு மனம் படபடத்தது .

விஸ்வேஸ்வரன் அவள் முகத்தை பார்க்கவில்லை .தூரத்து தொடு வானை  பார்த்தபடியிருந்தான் .அவனது வேண்டுகோளின்படி அவனுடன் இந்த ரெஸ்ட்டாரென்டுக்கு வந்திருந்தாள் கமலினி .ஆர்டர் செய்த உணவுகள் வருவதற்குள் தன் மனதை கொட்டி விடும் அவசரத்தில் இருந்தான் விஸ்வேஸ்வரன் .




” தாத்தாவின் அப்பா காலத்தில் ஆரம்பித்த தொழில் இது கமலினி . நான்காவது தலைமுறையாக இப்போது வெற்றிகரமாக நடத்தி வருகிறோம் .நான் தலையெடுத்த பிறகே இன்றைய நவீனங்களை தொழிலில் புகுத்தி  புதுமைகளை அறிமுகப்படுத்தி தொழிலை ” எ ” கிரேடுக்கு உயர்த்தியிருக்கிறேன் .இவை எல்லாம் தங்கம் , வெள்ளியில் மட்டுமே .வைரத்தில் இன்று வரை நாங்கள் ஒரு பூஜ்யமே .தாத்தா காலத்திலேயே வைரமும் வியாபாரமாக தொடங்கி விட்டோம் .ஆனால் தாத்தாவிற்கு அதன் நுட்பம் கை வராமல் பாதியில் விட்டு விட்டார் .பிறகு அப்பா ஆரம்பித்தார் .அவராலும் வைரத்தில் தாக்குபிடிக்க முடியவில்லை .தாத்தாவை போல் முழுதாக விட மனதில்லாமல் ஓரளவு வைரங்களையும் தொட்டுக் கொண்டிருப்பார் . அந்த வியாபாரங்கள் நஷ்டத்தில்தான் நடந்தன . இருந்தாலும் பெயருக்காக நடத்திக் கொண்டிருந்தார் .நான் வைரங்களுக்கென தனி படிப்பு படித்தேன் .ஓரளவு அதன் நுட்பங்களை வடிவமைப்பை அறிந்து கொண்டேன் .   சமீபத்தில்தான்  வைரங்களுக்கென தனி தளம் அமைத்து , சில புது மாடல் நகைகளை நானே வடிவமைத்து …தரமான வைரங்களை இனம் கண்டு வாங்கி கட்டி …என இந்த தொழிலில் ஒரு நிலையை அடைந்திருக்கிறேன் .”

” ம் …வாழ்த்துக்கள் சார் .மிகப் பெரிய சாதனை செய்திருக்கிறீர்கள் ” பாராட்டிய கமலினிக்கு உண்மையலேயே அவனது முன்னேற்றத்தில் பெருமையே …

” இல்லை கமலினி .இன்னமும் எந்த பெரிய சாதனையையும் நான் செய்யவில்லை .ஆனால் செய்ய வேண்டும் .மூன்று தலைமுறைகளாக எங்களுக்கு கை வசப்படாத இந்த வைரங்களை ஒரு கை பார்க்க வேண்டும் . நிச்சயம் இதனை நான் செய்தே தீருவேன் . இதற்கு பன்வாரிலால் போன்ற வைர வியாபாரியின் ஒத்துழைப்பு எனக்கு மிக அவசிய தேவை  ஙைர வியாபாரத்தில் நான் இன்னமும் எல்.கே.ஜி தான் .பன்வாரிலால் பி.ஹெச்டி …அவரது ஆலோசனைகளும் , ஐடியாக்களும் எனக்கு ரொம்ப தேவை ..அவருக்கு என் மேல் ஒரு அபிப்ராயம் இருக்கிறதென்று அறிந்த உடனேயே வைரங்களை குறித்த எனது வியாபார சிந்தனைகள் வளர்ந்து கொண்டே போய் கொண்டிருக்கிறது “

” நிச்சயம் நீங்கள் வைரத்திலும் சாதிப்பீர்கள் சார் .அந்த தகுதி உங்களுக்கு இருக்கிறது “

” ம் .அந்த சாதனைகளுக்கான சாவி நிகிதாவாக இருக்கிறாள் “

” புரியவில்லை சார் “

” பன்வாரிலாலுக்கு நான் திருப்தியான வியாபாரத்தன  மருமகன். ஆனால் அவரது மகளுக்கு …? “

இவனை வேண்டாமென்று சொல்வாளா ஒருத்தி …? கமலினியால் நம்ப முடியவில்லை .திடமும் , திமிறலுமாக வாடிவாசலில் திமிறி நிற்கும் காளை போல் இருந்தவனை விழியால் வருடினாள் .

” நிகிதாவிற்கு உங்களை பிடிக்கவில்லையா … ? ” ஆச்சரியமாக கேட்டாள் .

” ம் …சரியாக சொல்வதானால் அது எனக்கு தெரியவில்லை .பன்வாரிலால்,  எனக்கு ஓ.கே .என் மகளை நீங்கள்தான் சம்மதிக்க வைக்க வேண்டுமென சொல்லிவிட்டார் .மகளாக வந்து இவனை எனக்கு பிடித்நிருக்கிறது .கல்யாணம் செய்து வையுங்கள் அப்பா எனச் சொல்ல வேண்டுமாம் . அப்படி சொன்ன மறுமாதமே இந்தியாவே வியக்க உங்கள் திருமணத்தை நடத்தி வைப்பேன் என்கிறார் .நிகிதா என்னுடன் நன்றாக பேசுகிறாள் , பழகுகிறாள் .ஆனால் அதில் காதல் இருக்கிறதா …என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை கமலினி . அவளை எப்படி காதலிப்பது …அல்லது காதலிக்க வைப்பது என்றும் தெரியவில்லை .ப்ளீஸ் ஹெல்ப் மீ கமலினி “

உள்ளுக்குள் பொங்கிய சிரிப்பை வெளித் தெரியாமல் அடக்க சிறு முறைப்பை விழிகளில் காட்டினாள் கமலினி. ”  உங்கள் வயது என்ன சார் ? “

” வயது …” யோசித்தவன் ” நீதான் சொல்லேன் .நீதானே எனக்கு திருமணம் முடித்து கையில் குழந்தையோடெல்லாம் யோசித்தவள் ” கோபம் வந்திருந்த்து அவனிடம் .

” ப்ளீஸ் சார் .அதை மறந்து விடுங்களேன் ” இறைஞ்சியவளை …சரி தொலைந்து போ …பார்வை பார்த்தவன் எழுந்து நின்றான் .

” இதோ என்னைப் பார் கமலினி .எனக்கு எத்தனை வயதிருக்கும் …? ” இரு கை விரித்து காட்டியவனை நிமிர்ந்து பார்த்து விழி விரித்தாள் .உயரமும் , அகலமும்,  அகன்ற தோள்களும் , அடர்ந்த சிகையும் , கோதுமை நிறமுமாக ஒரு இலக்கண ஆணாக நின்றவனை எந்தப் பெண்ணிற்குத்தான் பிடிக்காமல் போகும் …?

” ஏய் சர்க்கஸ் பபூன் போல் தெரிகிறேனா …? சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாயே …? ” இரு விரலை விளையாட்டாக  அவள் இரு கண்களை குத்துவது போல் கொணர்ந்தவனிடமிருந்து முகத்தை நகர்த்திக் கொண்டவள் ஆணவமாக முகம் உயர்த்திக் கொண்டாள் .

” ஜாக்கிரதை சார் .நான் இப்போது உங்களது உபாத்தியாயினி .என்னை அதிருப்திக்கு ஆளாக்கும் எந்த செய்கையையும் செய்யாதீர்கள் .அது உங்களுக்கு நல்லதில்லை .” ஆட்காட்டி விரலாட்டினாள் .

விஸ்வேஸ்வரன் சட்டென முகத்தில் பவ்யமும் , பணிவும் கொண்டு வந்தான் .” ஸாரி டீச்சர் . ப்ளீஸ் பாடம் சொல்லி தாங்க டீச்சர் ” பள்ளி பெஞ்ச் மாணவனாக கை கட்டி பணிவாக நின்றவனை கண்டு மனம் விட்டு கமலினி சிரிக்க , அவளது சிரிப்பிற்கு பக்கவாத்தியமாக இரு கைகளின் தட்டல்கள் கேட்டன.

இருவரும் அவசரமாக தங்கள் நிலைகளை மாற்றிக் கொண டு திரும்பி பார்க்க சுதாகரும் ப்ரியம்வதாவும் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தனர் .இருவரது முகமும்  கேலியும் , கிண்டலும் , உற்சாகமும் நிறைந்திருந்த்து .

” சுதா வாடா .எங்கேடா ஜோடியாக இந்தப் பக்கம் ? ” வரவேற்ற விஸ்வேஸ்வரனின் முதுகில் ஓங்கி அடித்தபடி அவனருகில் அமர்ந்த சுதாகர் ” இது நான் கேட்க வேண்டிய கேள்விடா ” என்றான் .

” எப்படி இருக்கிறாய் கமலினி …? ” கிண்டலாக கேட்டபடி அருகே அமர்ந்த ப்ரியம்வதாவின் விழிகளில் ஏதோ ஓர் ரகசிய விசாரிப்பு .

” நன்றாக இருக்கிறேன் மேடம் ? கல்யாண ஏற்பாடெல்லாம் எப்படி போய் கொண்டிருக்கிறது ? “




” சுதா கேட்டீர்களா … மேடத்திற்கு நான் மேடமாம் ” ப்ரியம்வதாவின் அறிவிப்பில் கமலினி உதடு கடித்தாள் .

” கமலினிக்கு இன்னமும் உன்னிடமிருந்த பயம் போகவில்லை பிரியா .”

” பெரிய பெரிய தலைகளெல்லாம் மேடத்திற்கு கை கட்டுகிறார்கள் .இவர்களுக்கு நான் மேடமாம் .அடச்சே …பிரியான்னு கூப்பிடு ” உரிமையான நட்போடு அதட்ட , விஸ்வேஸ்வரனுக்கும் , கமலினிக்கும் தர்மசங்கடம் .

” டேய் …அது சும்மா …விளையாட்டுக்கு …” சமாளிப்பாய் பேசியபடி வந்த விஸ்வேஸ்வரனின் கால் மேல் போட்டிருந்த காலை தட்டி தள்ளினான் சுதாகர் .

” உன் லட்சணத்தைத்தான் கொஞ்சம் முன்பு நாங்கள் பார்த்தோமேடா .பிறகு ஏன் இந்த பந்தா ? “

” அடேய் …எங்களை விட்டு விடு .இப்போது நீங்கள் இரண்டு பேரும் எதற்கு வந்தீர்கள். அதை சொல்லு …”

” டேய் இது ஹோட்டல்டா .வயிற்றுக்கு சாப்பிட இங்கே யார் வேண்டுமானாலும் வரலாம்டா ” சுதாகர் வாற ,

” விஸ்வா எங்கள் இருவருக்கும் மேரேஜ் பிக்ஸ் பண்ணியிருக்கிறார்கள் .தெரியும்தானே …? ” அநாவசிய சந்தேகம் எழுப்பினாள் ப்ரியம்வதா .

கமலினிக்கு இவர்களின் கலாட்டாவிற்கு எழுந்து ஓடி விடலாமா என்றிருந்த்து .எல்லாம் இவனால் வந்த்து .பப்ளிக். ப்ளேசில் இவனை யார் கை கட்டி நிற்க சொன்னது …? அவள் விஸ்வேஸ்வரனை முறைக்க ….அவன் அதனை சுதாகரனுக்கு திருப்பினான் .




” சரிதான்டா எத்தனை நாளைக்கு இதெல்லாம்னு நாங்களும் பார்க்கிறோம் .இப்போது …எங்கள் ப்ரெண்ட்சுகளுக்கு பத்திரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறோம் . வழியில் உங்களை பார்த்தோம் .இதோ உங்களுக்கும் …விஸ்வா உங்கள் வீட்டில் அம்மாவை பார்த்து கொடுத்து விட்டோம் .இது உனக்கு .கமலினி வழியில் பார்த்து கொடுக்கிறோமென்று தவறாக நினைக்காதீர்கள் .நிச்சயம் எங்கள் திருமணத்திற்கு வர வேண்டும் ” இருவருமாக சேர்ந்து கொடுத்த அழைப்பிதழை முகம் நிறைந்த மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டனர் .நிச்சயம் திருமணத்திற்கு வருவதாக உறுதியளித்தனர் .

What’s your Reaction?
+1
20
+1
14
+1
1
+1
2
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!