Serial Stories uravu solla oruvan உறவு சொல்ல ஒருவன்  

உறவு சொல்ல ஒருவன் – 2

                                            2

” இது உன்னை மட்டுமே மனதில் வைத்து எடுக்கக்கூடிய முடிவல்லம்மா .இதில் சாந்தனுவின் வாழ்க்கையும்  இருக்கிறது என்பதையும் நாம் மனதில் வைத்துத்தான் எதையும் செய்ய வேண்டும் “செல்வராஜ் நிதானமாக கூறினார் .

” அந்த நினைப்பில்தான் அங்கிள் நானும் முடிவெடுக்க முடியாமல் திண்டாடுகிறேன் .இல்லையென்றால் போங்கடா நீங்களாச்சு …உங்கள் சட்டமாச்சு என்று தூக்கி எறிந்து விடுவேன் ….”

” ஆனால் அங்கே போனால் உன்னை தூக்கி எறிந்து விட மாட்டார்களா மித்ரா …? ” சாரதா ..செல்வராஜின் மனைவி கேட்டபோது அதில் உண்மையான் கவலை தெரிந்த்து .

” அதற்கான வாய்ப்புகள்தான் எழுபது சதவிகிதம் இருக்கிறது சாரு .நிச்சயம் அவர்கள் மித்ராவை வீட்டினுள் சேர்க்க மாட்டார்கள் ….”

செல்வராஜின் குரலில் சத்யமித்ராவின் மனது மத்தளம் கொட்டியது .

” அப்படியானால் அக்காவையும் , குட்டிப்பையனையும்
அங்கே அனுப்ப வேண்டாம்ப்பா .நாமே பார்த்துக் கொள்வோம் …” சித்ரா வேகமாக கூறிவிட்டு கீழே அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த சாந்தனுவை இழுத்து தன் மடியில் வைத்துக்கொண்டாள் .




” ம் …எனக்கும் அதுதான்மா ஆசை .ஆனால் அதனால் பின்பு பாதிக்கப்படப்போவது சாந்தனுதான் …”

” ஏன்பா ….? “

” சித்து நம்ம சாந்தனுவோட தாத்தா பாட்டி கேரளாவில்  ரொம்ப பெரிய பணக்காரங்க .அங்கே அவன் போய்விட்டால் பெரிய ராஜகுமாரன் மாதிரி வளர்வான் .பெரிய ஸ்கூலில் படிப்பான் …நிறைய நல்ல நல்ல டிரஸ் போடுவான் .பெரியவனா ஆனதுக்கப்புறம் பாரினெல்லாம் கூட போய் படிப்பான் ….” மகளுக்கு சொல்வது போல் சொன்னாரோ என்னவோ …?

சத்யமித்ராவின் மனதில் குழத்தையின் வசதியான வாழ்க்கையும் , வளமான எதிர்காலமும் படமாக விரிந்த்து .இப்படி ஒரு வாழ்வு அவனுக்கு கிடைக்க அவள் அவனையே விட்டுத் தர வேண்டுமா …? ஆனால் அவன் தந்தையை போன்றே அந்த வாழ்வு மகனுக்கும் கிடைக்க அவள்தான் கொஞ்சம் விட்டுக்கொடுத்தால்தான் என்ன …?

” அங்கிள் ஒரு மாதம் வரை எனது வேலையை நீங்கள் வேறு யாருக்கும் தராமல. வெயிட்டிங்கில் வைக்க முடியுமா …? “

அவளது நோக்கம் புரிந்து ” ஆறு மாதங்கள் வரை என்னால் அப்படி வைக்கமுடியும்மா .ஆனால் நீ சாந்தனுவை அங்கே விட்டு வந்த பிறகும் இங்கே வந்து இந்த சாதாரண வேலையையா பார்க்க போகிறாய் .உன் படிப்பிற்கு உனக்கு பெரிய வேலைகளெல்லாம் கிடைக்குமேம்மா ….” கவலையாய் கேட்டார்  .

” இல்லை அங்கிள் நான் திரும்பவும் இங்கேதான் வரப்போகிறேன் .இந்த வேலையில்தான் எனக்கு மனநிறைவு கிடைக்கிறது .ஒரு வேளை என்னால் உங்களுக்கு எதுவும் தொந்தரவென்றால் ….சொல்லிவிடுங்கள் ….”

” வாயை மூடு ….” செல்வராஜை முந்திக்கொண்டு சாரதா அதட்டினாள் “தொந்தரவாம் .மாடி வீட்டை உனக்காக தயாராக வைத்துக்கொண்டு நாங்கள் காத்திருப்போம் ….இரு உனக்கு காபி கொண்டு வருகிறேன் ….” என எழுந்தாள் .

” இல்லை ஆன்ட்டி வேண்டாம் .இன்று கிருத்திகை .நான் விரதம் .சித்து சாயந்தரமாக முருகன் கோவிலுக்கு போகவேண்டும் தயாராக இரு என்ன …? ” என்றாள் .

” ம் …விரதம் இருக்கிற வயதா இது ….? “

” இதற்கெதற்கு வயது ஆன்ட்டி .என் அம்மா சின்ன வயதிலிருந்தே இந்த பூஜை , புனஸ்காரமெல்லாம் செய்து அதை அப்படியே எங்கள் மனதிலும் ஏற்றிவிட்டார்கள் .நாங்களும்  எங்களுக்கு விபரம் தெரிந்த்திலிருந்து இப்படியே இருந்து பழகிவிட்டோம் .” என சிரித்தாள் .

” அங்கிள் என் சார்பாக நீங்கள் அந்த வக்கீல் மைக்கேல்ராஜிற்கு ஒரு கடிதம் எழுதி விடுகிறீர்களா …? “

” ம் ….சரிம்மா .என்று வருவதாக எழுதட்டும் …? “

” இன்னமும் நான்கு நாட்களில் .வியாழக்கிழமை கிளம்புவதாக எழுதுங்கள் ….” நடுங்கிய குரலில் கூறிவிட்டு சாந்தனுவை தூக்கிக்கொண்டு எழுந்தாள் .

மிக விரைவாக ஓடும் போது வேகமான ராட்டினத்தை நினைவுறுத்தி , ஜிவ்வென மேலேறுகையில் அடி வயிற்றை பிசைந்த அந்த தனது முதல் விமான பயணத்தை சிறு படபடப்புடன் அனுபவித்தாள் சத்யமித்ரா .பதட்டமெதுவுமின்றி பயமறியா இளங்கன்றென சன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் சாந்தனு .

ம் …இது போல் குழந்தையாகவே இருந்திருக்கலாமே ..ஏக்கத்துடன் அவன் தோள்களில் கை போட்டு தன்னுடன் அணைத்துக்கொண்டாள் .இதோ இருக்கிற கேரளாவிற்கு போக …இப்படி ஒரு விமான பயணம் அவசியமா…? எத்தனையோ டிரெய்ன்கள் இருக்கின்றனவே .ஒரு வேளை அவர்களின் பணக்காரத்தனத்தை காட்ட இதனை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக் கொண்டார்களோ …?

சத்யமித்ராவின் குழப்பத்தை சாந்தனுவின் அழைப்பு தடுக்க , ஜன்னல் வழியாக அவன் சுட்டிக்காட்டியதை மேகமென்று அவனுக்கு விளக்கினாள் .குழந்தை விழிகளை விரிக்க …அதே உணர்வுதான் அவளுக்கும் .

இதோ இந்த மேகம் நேற்று இரவு வரை உயரே …தள்ளி …தூரமாக இருந்த்து .அவளால் தொடமுடியாத அளவு …கண்ணால் பார்க்க மட்டுமே முடிந்த்து .இன்று அதன் நடுவே …அதன் குளிர்ச்சியை உணர்ந்தபடி உட்கார்ந்திருக்கிறாள் .எப்படி சாத்தியமானது இது …? இது போன்று மறுபக்கம் என்னவென்று அறியாத சுவாரசிய நாவல்தானோ வாழ்க்கை ..? எனது அடுத்த பக்கம் என்னவாக இருக்ககூடும் …?




விமானம் மேலேறுவதை விட கீழிறங்கும் போது , அதிக பயம் காட்டியது .டப்பென தரையில் தட்டி நின்று பிறகு உச்சபட்ச வேகத்தில் எதிலேயோ மோதித்தான் நிற்பேன் …என்ற உறுதியோடு ஓடி …பிறகு சட்டென நின்றபோது மூச்சை ஆசுவாசமாக விட்டாள் சத்யமித்ரா .இப்படி ஒரு பயமுறுத்தும் பயணம் வேண்டுமென்று யார் அழுதார்களாம் …?

செய்ய வேண்டியதிருக்கும்  வேலையிலிருந்த பிடித்தமின்மை அவளது  சுகமான இந்த சுமூக பயணத்தை குறை கூறியது .பெட்டியை எடுத்துக்கொண்டு மகனுடன் நடந்து விமானநிலையத்தினுள் வரும்போதும் இதே எண்ணமே அவள் முகத்தில் சிணுக்கங்களாய் நிறைந்திருந்த்து .எனவே ….

” வணக்கம்மா …பயணம் எப்படி இருந்த்து …? ” என ஆங்கிலத்தில்  விசாரித்த பெரிய மனிதர்க்கு பதில் சொல்லும் எண்ணமற்று பார்வையை வேறுபுறம் திருப்பினாள் .

” முதல் விமான பயணம் கொஞ்சம் பயமுறுத்துவதாகத்தான் இருக்கும் .இனி பழகிவிடும் .பயப்படாதீர்கள் ….”இப்போது  அவர் இதை சொன்னது மலையாளத்தில் .வார்த்தைக்கு வார்த்தை புரியாவிட்டாலும் ஓரளவு புரிந்த்து .

யோவ் உன்கிட்ட வந்து நான் எனக்கு ப்ளைட்டில் வந்த்து பயமாக இருந்த்து என்று சொன்னேனா …? எனக்கேட்க துடித்த நாவை அடக்கி ” எனக்கு மலையாளம் தெரியாது …. ” பெரிய திருப்தியுடன் சொன்னாள் .

” யெஸ் ஐ நோ ….” என்றவர் பிறகு ஆங்கிலத்திற்கு மாறினார் .

” நான்தான்மா மைக்கேல்ராஜ் .உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய வக்கீல் …”

நான் சொன்னபடி செய்யவில்லையென்றால் உனக்கு ஜெயில் தண்டனை உறுதியென்று ..அது அதற்குரிய சட்ட வார்த்தைகளை போட்டு பயமுறுத்தி இவளுக்கு நோட்டீஸ் அனுப்பிய வக்கீல் .அதனால் இவளை பயமுறுத்தி இங்கே வரவழைத்து விட்டு , கொஞ்சமும் தயக்கமின்றி அதைச் சொல்லியே அறிமுகப்படுத்திக் கொண்டு வந்து நிற்பதை பார் .சத்யமித்ராவின் முகம் கடுத்தது .

அதனைக் கண்டுகொள்ளாமல் ” கார் வெளியே நிற்கிறது வாங்கம்மா ….” என்றவர் குனிந்து சாந்தனுவை தூக்கிக்கொள்ள முனைய அவன் …

” எனக்கு நடக்க தெரியும் .நானே நடந்து வரு வேன் …” அவர் கைகளை தட்டினான் .

சத்யமித்ராவிற்குள் ஏனோ ஒரு திருப்தி வேகமாக பரவ சுருங்கிப் போகும் மைக்கேல்ராஜின் முகத்தை காண நிமிர்ந்தவள் திகைத்தாள் .சாந்தனுவின் பேச்சினால் அவர் முகம் மிகுந்த உற்சாகத்தை பூசியிருந்த்து .கண்கள் பூரிக்க ….

” ஓ….அப்டிங்களா சின்ன எஜமான் .ரொம்ப சந்தோசம் .நீங்க பூப்போல நடந்து வாங்க .நான் பொக்கிசமாக உங்களை அழைத்துபோகிறேன் ….” நெகிழ்ந்த குரலோடு கண்களில் லேசான நீர்ப்படலம்.

உண்மையான பாசம்  இல்லாமல் இந்த நெகிழ்வுக்கு வேறு என்ன காரணம் இருக்கமுடியும் ….? மைக்கேல்ராஜ் மலையாளத்தில் இதனை சொன்னாலும் சத்யமித்ராவால் அவரது வார்த்தைகளை புரிந்து கொள்ள முடிந்த்து .ஆனால் இந்த பாசத்தைத்தான் புரிந்து கொள்ள முடியாது தவித்தாள் .

” அம்மா கார் சூப்பரா இருக்கில்லம்மா …ஐ….ஏஸி …டிவி ….” பின்சீட்டில் அமர்ந்து குதித்தபடி சாந்தனு சொல்ல ….

” ஷ் ….இப்படியெல்லாம் குதிக்ககூடாது கண்ணா …” சத்யமித்ரா கண்டித்தாள் .

” அவரை ஏன்மா தடுக்குறீங்க ….? இவ்வளவு நாள் இது போல் குதித்து பாழாக்க ஒரு ஆள் இல்லாமல்தான் இந்த சொத்துக்களெல்லாம் ஏங்கி போய் இருக்கிறது .குட்டி எஜமான் நீங்க நல்லா குதிங்க .இது உங்க கார்தான் .உங்க  , தாத்தாவோடது …. அப்பாவோடது….உங்களோடது ….” மலையாளம் புரியாத சாந்தனு தனது உற்சாகத்தை தொடர சத்யமித்ரா வெளியே திரும்பிக்கொண்டாள் .

”  இப்போ நேராக ஆடம்ஸ் பங்களாவிற்குத்தாம்மா போகிறோம் .நீங்கள் இப்போது அங்கே உடனடியாக யாரையும் சந்திக்க வேண்டிய அவசியமிருக்காது .நீங்களும் , குழந்தையும் ப்ரெஷ் ஆனதும் ஒவ்வொருவராக சந்திக்கலாம் ….”

சத்யமித்ராவின் மனதில் படபடப்போடு கொஞ்சம் பயமும் எழுந்த்து .தனது கோட் பாக்கெட்டிற்குள் கையை நுழைத்து நின்று கொண்டு சிவந்த கண்களில் கூர்மையுடன் இவள் முகத்தை கொத்திய அந்த ஆடம்ஸ் நினைவிற்கு வந்தார் .ஹப்பா …என்ன மாதிரி பார்வை …? அதே பார்வையைதான்  இப்போதும்  எதிர்கொள்ள வேண்டியதிருக்குமா …? கூடவே குத்தூசி குத்துவது போன்ற அவனின் பேச்சினையும் …

V.A  Estate …என பெரியதாக பெயர் பொறிக்கப்பட்ட எஸ்டேட்டினுள் கார் நுழைந்த்து .வழிநெடுக இயற்கை தனது ஜாலங்களை காட்டியிருக்க ,தவழ்ந்து வந்த மூலிகை காற்றை நெஞ்சு நிறைய இழுத்து நிரப்பிக்கொண்டாள் சத்யமித்ரா .எவ்வளவு வளமான பூமி .கண் சிமிட்ட மறந்து இயற்கையை ரசித்தாள் .இனிமையாய் உடலை தழுவிய இயற்கை குளிர்ச்சியால் சந்தோசமாய் உடல் சிலிர்த்தாள் .

” V.A ” என பெரிதாக பொறிக்கப்பட்ட அந்த இரும்பு கதவு சத்தமேயில்லாமல் சக்கரங்களின் மேல் நழுவ , அந்த கார் உள்ளே நுழைந்த்து .  உள்ளே மற்றொரு எஸ்டேட் இருக்கிறதோ …என சந்தேகப்படும்படியான ஒரு பசுமை பகுதிக்குள் நழுவிய கார் அந்த மிகப் பெரிய போர்ட்டிகோவிற்குள் போய் நின்றது .

மலை மேல் போகிறதோ …என சந்தேகப்படும் படியான இத்தனை  படிக்கட்டுகளை கடந்துதான் வீடு இருக்கிறதா …. ? இங்கு வசிப்பவர்கள் தினமும்  எப்படி இந்த வழியில் ஏறி இறங்குகிறார்கள் …? சந்தேகமாக படிகளை பார்த்தபடி ஏறினாள் சத்யமித்ரா .அவள் ஆட்காட்டி விரலை பிடித்தபடி உற்சாகமாக ஏறினான் சாந்தனு .

” மாடிக்கு போகிறோமா அம்மா …? “

” இல்லை கண்ணா  …வீட்டுக்கு …”

” யார் வீட்டிற்கு …? “

” உங்க வீட்டிற்குத்தான் ….” பதிலளித்தது மைக்கேல்ராஜ் .

” இங்கே யாரும்மா இருக்கிறாங்க …? யாரை பார்க்க போகிறோம் …? ” பிள்ளையின் கேள்விக்கு பதிலளிக்காமல் நடந்தாள் .

இந்த கேள்விக்கு பதிலளிக்க பிடிக்காத்து ஒரு காரணம் .அதுதான் எல்லா கேள்விக்கும் பதிலாக முந்திரி ஒன்று முந்திக்கொண்டு நிற்கிறதே …என மைக்கேல்ராஜ் பற்றிய நினைவு ஒரு காரணம் .

ஆனால் இதற்கு பதில் அந்த வக்கீலிடமிருந்து வர வில்லை .ஓரவிழியால் பார்த்தபோது இணையாக அருகில் நடந்து வந்து கொண்டிருந்தவரை காணவில்லை .நின்று கொண்டார் போலும் .நின்று அவரை பார்க்க மனமின்றி தொடர்ந்து நடந்தாள் சத்யமித்ரா .




ஒரு வழியாக படிகள் முடிந்து வீட்டு வாசல் வந்த்தும் , வீட்டினுள் பால் போன்ற வெணமையில் பளபளத்த தரையை கண்டதும் , தனது கால்களின் சுத்தம் பற்றிய சந்தேகம் வந்த்து அவளுக்கு . செப்பல்களை சுழற்றி விடவா …? அதில் நிறைய அழுக்கு இருக்குமே …வெறுங்காலோடு இந்த தரையில நடந்தால் நன்றாக இருக்காது …? ஆனால் என் கால் சுத்தமாக இருக்கிறதா ….? செய்வதறியாது எதிரே தெரிந்த பிரம்மாண்டத்தை வெறித்தபடி அவள் நின்றபோது அதுவே சாந்தனுக்கு கொஞ்சம் மிரட்சியை கொடுத்திருக்க வேண்டும் .

அவளின் கால்களை கட்டிக்கொண்டு ” அம்மா …இது வீடாம்மா …? இங்கே யார் இருக்காங்க …? ” என்றான் குழந்தை .பதில் சொல்ல தோணாது நின்றாள் சத்யமித்ரா .

” ஆக …மூன்று வருடங்களாக அப்பாவையும் , அப்பா வீட்டினரையும் குழந்தைக்கு அறிமுகப்படுத்தவே இல்லை .அப்படித்தானே ….? ” மலையாளத்தில்  பின்னாலிருந்து கேட்ட குரலில் உடல் விறைத்தாள் .

அவன்தான் …அவனேதான் . அதே நக்கலும் …குத்தலும் குரலில் .கேட்கிற கேள்வியை பாரேன் .இந்த கேள்வியை கேட்க இவனுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது …?

மனம் கொதித்தாலும் அவனது கேள்விக்கு என்ன பதில் சொல்வதென தெரியாது சோர்ந்து நின்றாள் சத்யமித்ரா .

What’s your Reaction?
+1
3
+1
4
+1
1
+1
0
+1
0
+1
1
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!