Serial Stories மல்லிகைப் பந்தல்

மல்லிகைப் பந்தல்-12

(12)

“அம்மா…என் ஃபிரண்டோட கல்யாணம் அடுத்த வாரம். நானும் லலிதாவும் போகலாம்னு இருக்கோம்”

வீரமணி சொல்லவும் முகம்மாறினாள். சுந்தரவள்ளி. 

“கல்யாணம் எங்கே?”

“ஊட்டியிலே”

அவ்வளவுதான் சுந்தரவள்ளியின் முகம் சுத்தமாக நிறம் மாறியது. 

“என்ன ஊட்டிக்கா? என்ன விளையாடுறியா? போறதுன்னா நீ மட்டும் போய்ட்டு வா. அவளைக் கூட்டிக்கிட்டுப் போக வேண்டாம். ஊட்டி குளிர் பிரதேசம். குழந்தையோட உடம்புக்கு ஒத்துக்காது”

கண்டிப்புடன் கூறினாள். 

வீரமணிக்கு எரிச்சலாக இருந்தது. தொட்டதெற்கெல்லாம் அம்மாவிடம் அனுமதி கேட்டு நிற்க வேண்டியிருப்பதை நினைத்தாலே ஏகத்திற்கும் எரிச்சல் வந்தது. திருமணமானபிறகு இந்த கிராமத்தைவிட்டு லலிதாவை எங்கேயும் அழைத்து சென்றதில்லை. கல்யாணம் காட்சி எல்லாமே சாதி சனம் என்று உள்ளுரிலேயே நடப்பதால் குண்டு சட்டியிலேயே குதிரை ஓட்டிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. முதன் முதலாக ஊரைவிட்டு ஒதுங்கி ஊட்டியில் ஒரு விசே~ம். மனைவியோடு சென்று அதை சாக்காக வைத்து சுற்றிப்பார்த்துவிட்டு வரலாம் என நினைத்தான். அதற்கும் அம்மா முட்டுக் கட்டைப் போடுகிறாள்.

“அம்மா… உமாபதி ஒன்னும் கைக் குழந்தை இல்லை. ரெண்டு வயசாகுது. வீட்டுக்குள்ளயே அடைச்சு வச்சுக்கிட்டா…சூழ்நிலையோட பழக உடம்பு ஒத்துவராது. நாலு இடத்துக்கு வெளியே அழைச்சுக்கிட்டுப் போனாத்தான் உடம்பு பலப்படும். ஊட்டி குளிர் பிரசேதம்தான். அதுக்காக அந்த ஊர்ல குழந்தைகளே இல்லையா? வெயிலு காத்து, மழை குளிர்னு பட்டாத்தான் குழந்தை எல்லா காலநிலைக்கும் அட்ஜஸ்ட் ஆவான். நான் லலிதாவை கூட்டிக்கிட்டுப் போறதா முடிவுப் பண்ணிட்டேன்.” வாழ்க்கையிலேயே முதன் முறையாக அம்மாவை மீறி முடிவு எடுத்துவிட்டான்.

வழக்கம் போல் மாமியார் புத்தி வேலை செய்தது சுந்தரவள்ளிக்கு. எல்லாவற்றிற்கும் காரணம் லலிதாதான். 

புள்ளைப் பூச்சி மாதிரி இருந்தவள் இப்பொழுதெல்லாம் புரு\னை தனக்கு எதிராக தூண்டி விடுகிறாள். தவிர தன் நாட்டாமைக்கு எல்லாம் செய்கிறாள்.

முக்கியமாக குழந்தை உமாபதி விசயத்தில்.

குழந்தைக்கு பெயர் வைத்த தினத்தன்று லலிதாவின் மீது ஏற்பட்டக் கோபம் அடுத்து அடுத்து வந்த நாட்களிலும் அதிகமானதே தவிர குறையவில்லை.

காரணம்….லலிதாவின் நடவடிக்கைகள்தான். 

ஒரு நாள் களத்து மேட்டுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தபோது கூடத்தில் காலை நீட்டிப் போட்டுக் கொண்டு உமாபதிக்கு ஜடைப் போட்டு மல்லிகைப் பூச்சரத்தை இந்த ஜடைக்கும் அந்த ஜடைக்கும் இழுத்து பாலம் போல் சூட்டிக்கொண்டிருந்தாள்.

மல்லிகைப் பந்தலிலிருந்து யாரையும் ஒரு பூவைக் கூட பறிக்க விடாதவள் இன்று மகனுக்காகப் பறித்து தொடுத்து சூட்டிக் கொண்டிருக்கிறாள்.

பார்த்ததுமே வெறிப்பிடித்தவளைப் போலானாள் சுந்தரவள்ளி.

விறுவிறுவென உள்ளே வந்தவள் உமாபதியைப் பார்த்து இன்னும் அதிர்ந்தாள். இரு கண்களிலும் கண்மையை அப்பி கன்னத்திலும் நெற்றியிலும் பொட்டு வைத்திருந்தாள்.

“லலிதா… என்ன இது?” காட்டுக் கத்தலாக கத்தினாள்.

மாமியாரை அப்பொழுது எதிர்ப்பார்க்காத லலிதா அதிர்ந்தாள். களத்து மேட்டுக்குப் போன மாமியார் வருவதற்கு மாலையாகும், மதியான சாப்பாடு வேறு கொடுத்துவிட்ட தைரியத்தில் லலிதா சாவகாசமாக தன் ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருந்தாள். 

என்னதான் உமாபதி ஆண்குழந்தையாகப் பிறந்துவிட்டாலும், எல்லோருடைய மனதிலும் மகிழ்ச்சியும், நிம்மதியும் உண்டாகியிருந்தாலும் லலிதாவின் ஏக்கம் மட்டும் தீர்ந்தபாடில்லை.  பெண் குழந்தைக்காகவே ஏங்கிக் கிடந்த அவளுடைய மனம், இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்று பறிக்கொடுத்த இழப்பு அவளுக்கு உமாபதியை ஆண் குழந்தையாகவே நினைக்க முடியவில்லை. மாமியார் வீட்டில் இல்லாத ; போதெல்லாம் அவனை பெண்ணாக அலங்கரித்துப் பார்த்து மகிழ்ந்தாள். அவளுடைய ஆசைக்கு குறுக்கே நிற்காத  வீரமணியும் அவளுக்காகவே வாங்கியிருந்த காமிராவில் குழந்தையை பெண் குழந்தைக்கான உடையில் வித விதமாக புகைப்படம் எடுத்துக் கொடுத்தான். அவற்றையெல்லாம் அழகாக ஆல்பம் போட்டு வைத்துக் கொண்டு ஆற அமர ரசித்து மகிழ்ந்தாள். வீரமணி டவுனுக்குப் போகும் போதெல்லாம் பெண் குழந்தைக்கான உடைகளை வித விதமாக வாங்கி வருவான். அவற்றையெல்லாம் மாமியாருக்குத் தெரியாமல் அலமாரியில் ஒளித்து வைத்தாள். 




மாமியாருக்கு இப்படி செய்வது பிடிக்காது என நன்றாகத் தெரியுமாதலால் மாமியார் இல்லாத நேரங்களில் உமாபதிக்கு பெண் குழந்தையின் உடையைப் போட்டு, முடியை இரண்டாகப் பிரித்து ரப்பர் பேண்ட் போட்டு பூவைத்து அழகுப் பார்த்தாள். 

குழந்தைக்கு மொட்டையடித்து காது குத்தியபின் முடியை வளர்த்து கட்டிவிட்டாள். க்ராப் வெட்ட மாமியார் சொன்ன போதெல்லாம் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தவிர்த்துக்கொண்டிருந்தாள். ஊரில் உள்ள கோவில்களைத் தவிர அக்கம் பக்கத்து ஊரில் இருக்கும் கோவில்களுக்கும் தொடர்ச்சியாக மொட்டை போட சுந்தரவள்ளி வேண்டிக்கொண்டிருக்க அதற்கான நேரம் வந்த போதெல்லாம் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி தவிர்த்துவிட்டு மகனின் முடியை வளர்த்துக் கொண்டிருந்தாள் லலிதா. 

அதற்கான உண்மையான காரணம் இப்பொழுது புரிந்தது. இப்படி ஜடைப்பின்னி பூச்சூடி அழகுப் பார்க்கத்தான் இவள் முடி வெட்ட அனுமதிக்காமல் ஏதாவது காரணம் சொல்கிறாள்.

“சனியனே… என்ன காரியம் பண்றே?” ராட்சசியாய் எதிரே இடுப்பில் கையை வைத்துக் கொண்டு உறுமிய சுந்தரவள்ளியைப் பார்த்து நடுங்கிப் போனாள் லலிதா. 

“சனியனே… உனக்கு அறிவில்லை. எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன்? இப்படி ஆம்பளைப் புள்ளைக்கு பொம்பளை வே\ம் கட்டாதேன்னு. இந்த வீட்டுக்கும் பொம்பளைப் புள்ளைக்கும் ராசிக் கிடையாதுன்னு சொல்றதெல்லாம் உனக்கு செவிடன் காதுல ஊதின சங்கா? பெத்து பெத்து பலிக் கொடுத்தது போதாதா? ஆணா பொறந்ததையும் பொம்பளை வே\ம் போட்டு பலிக் கொடுத்தாத்தான் அடங்குவியா? இங்க பார்…இதான் உனக்கு நான் கடைசி தடவை சொல்றது. இனி ஒரு தடவை நீ இப்படி செய்தே… புள்ளையைப் புடிங்கிக்கிட்டு உன்னை உன் அப்பன் வூட்டுக்கு தொறத்திவிடுவேன்” கத்தியவள் வெடுக்கென பிள்ளையை அவளிடமிருந்து பிடுங்கினாள். அவனுடைய தலையில் சூடியிருந்த மல்லிகை சரத்தை பிய்த்து எறிந்தாள். இருபக்கமும் போட்டிருந்த ரப்பர் பேண்ட்டை உருவி எறிந்துவிட்டு முடியை கலைத்துவிட்டாள். வாயில் வந்தபடி திட்டியவாறே உள்ளேப் போய்விட்டாள்.

சுந்தரவள்ளி அத்துடன் விடவில்லை. மகன் வந்ததும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாள். அக்கம் பக்கமெல்லாம் இதைப்பற்றி பேசினாள். அவர்களும் வந்து இவளை திட்டிவிட்டு போகும்படி செய்தாள். 

அப்பொழுதுதான் இப்படி ஒரு முடிவை எடுத்தான் வீரமணி. ஏதாவது ஒரு சாக்கை வைத்துக்கொண்டு வெளியூர் செல்ல வேண்டும். இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் தங்க வேண்டும். லலிதாவின் ஆசையை பூர்த்தி செய்ய வேண்டும். இப்பொழுது கூட அம்மா எவ்வளவு தடுத்தும் மீறிக் கொண்டு மனைவியை அழைத்துக் கொண்டு புறப்பட்டான். 

ஊட்டியில் அறை எடுத்து தங்கினான். மனைவியை அழைத்துக் கொண்டு ஊட்டியை சுற்றினான். அவளுடைய அசைப்படி குழந்தைக்கு வித விதமாக பெண் குழந்தைக்கான ஆடைகளை எடுத்தான். ஊட்டியின் அழகு கொஞ்சும் இயற்கைக்  காட்சிகளின் பின்னணியில் வித விதமாக புகைப்படம் எடுத்தான். அந்தப் புகைப்படங்களை ஆல்பத்தில் வைத்து வழக்கம் போல் ரசித்துக் கொண்டிருந்தாள் லலிதா. தனக்கு பெண் குழந்தை இல்லையே என்ற அவளுடைய ஏக்கம் இப்படி செய்வதில் ஒருவாறு தணிந்தது என்றுதான் சொல்ல வேண்டும். 

ஆனால் அதிலும் ஒரு நாள் மண் விழுந்தது. எப்படியோ… அவள் ரகசியமாக வைத்திருந்த ஆல்பம் மாமியாரின் கைக்கு கிடைத்துவிட்டது.

ஆத்திரமும் , வெறியும் கொண்டாள் சுந்தரவள்ளி. கூடத்தில் போட்டு கொளுத்தினாள் அந்த ஆல்பத்தை.




                            

What’s your Reaction?
+1
10
+1
9
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!