Serial Stories

மல்லிகைப் பந்தல்-11

(11)

பாதிக்கும் மேல் உறவினர்கள் சாப்பிட்டு முடித்து சென்றுவிட்டனர். மீதமிருந்தவர்கள் ஆறஅமர அரட்டையடித்தபடி சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். புகைப்பட கலைஞரும், காணொளி கலைஞரும் சாப்பிட்டு முடித்துவிட்டு தங்களுடைய உடமைகளை எடுத்துக்கொண்டு பேசிய தொகையை வாங்கிக் கொண்டு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தபோது லலிதா அவசரமாக புகைப்படக் கலைஞரிடம் வந்தாள். 

“தம்பி… ஒரே ஒரு ஃபோட்டோ எடுக்கனும்”என்றாள்.

“எக்கச்சக்க ஃபோட்டோ எடுத்தாச்சு. இன்னும் யாரை எடுக்கனும்?”

“குழந்தையைத்தான்’

“சரி”

“ஒரு நிமிசம் இருங்க. இதோ வந்திடறேன்” என்று கூறிவிட்டு அவசரமாக உள்ளே ஓடினாள். 

எடுத்து வைத்திருந்த கேமிராவை அவர் வெளியே எடுத்து சரி செய்தவாறே காத்திருக்க சில நிமிடங்களில் வெளியே வந்தாள் லலிதா. தன் குழந்தைக்கு அழகான பெண் குழந்தையின் சின்னஞ்சிறு ப்ராக்கை அணிவித்திருந்தாள். 

“என்னம்மா… குழந்தைக்கு பொண்குழந்தையோட டிரஸ் போட்டிருக்கிங்க.” சிரித்தபடியே புகைப்படக் கலைஞர் கேட்க லலிதாவின் முகத்தில் பெருமையும், மகிழ்ச்சியும் மாறி மாறி ஜொலித்தது.

“ஆமாம் தம்பி எனக்கு பெண்குழந்தை வேணும்னு ரொம்ப ஆசை. ஆணாப் பொறந்துட்டு. அதான்…ஒரு ஃபோட்டோ பெண்குழந்தையோட டிரஸ்ஸைப் போட்டு எடுத்துக்கனும்னு….” வெட்கமும், மகிழ்ச்சியுமாக அவள் சொல்ல “ஓ.கே…ஒகே.” என அவன் கேமராவை சரி செய்து கோணம் பார்க்க அதே சமயம் அங்கே வந்த சுந்தரவள்ளி அந்தக் காட்சியைப் பார்த்தாள். குழந்தைக்கு அவள் பெண் குழந்தையின் ப்ராக்கைப் போட்டிருப்பதைப் பார்தததும் சுந்தரவள்ளியின் முகம் மாறியது. 

ஆத்திரமாக கிட்டே வந்தவள் சுற்றிலும் உறவினர்கள் சிலர் இருப்பதைக் கூட பொருட்படுத்தாமல் குழந்தையை லலிதாவின் கையிலிருந்து வெடுக்கென பிடுங்கினாள். 

“சனியனே… சனியனே… என்ன காரியம் பண்றே, புத்தி பேதலிச்சுப் போயிட்டா உனக்கு?” என்றபடி குழந்தைக்கு அணிவித்திருந்த அந்த உடையை சர சரவென அவிழ்த்து தூர வீசினாள்.

லலிதாவின் முகம் அவமானத்தால் சிறுத்தது. அவளுடைய கண்கள் அவள் கழற்றி எறிந்து தூரத்தில் போய் விழுந்துக்கிடந்த அந்த உடையின் மீதே வெறித்தது. 

குழந்தையை தன் மார்போடு அணைத்துக் கொண்ட சுந்தரவள்ளி விடாமல் திட்டினாள்.

“கொஞ்சமானும் அறிவிருக்கா? ராஜாவாட்டம் குழந்தைப் பிறந்திருக்கு. அவனுக்குப் போய் பொம்பளைப் புள்ளை டிரஸ்ஸைப் போட்டுப் பார்க்கிறே? பைத்தியம்… பைத்தியம்…” குழந்தையைத் தூக்கிக் கொண்டு உள்ளேப் போய்விட்டாள். லலிதா மனதில் அறைவாங்கியவளாய் விக்கித்து நின்றாள்.

கண்களில் குளம் கட்டிய கண்ணீர் கன்னங்களில் வழியத் தொடங்கியது. 




இரவு வெகுநேரம் வரை அழுதுக்கொண்டிருந்தாள் லலிதா. அவளை சமாதானப்படுத்தத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான் வீரமணி.

முதலில் நடந்தது எதுவும் அவனுக்குத் தெரியாது. அவன் விருந்தினர்களை கவனித்துக் கொண்டிருந்தான். அப்பொழுதுதான் தூரத்து சொந்தம் சித்தி முறையாக வேண்டியவள் வந்து காதோரம் கிசுகிசுத்தாள்.

“உன் அம்மா… உன் பொண்டாட்டியை என்னமோ திட்டிக்கிட்டிருக்கா. நீ போய் என்னன்னு பாரு.” என்று அவனை அனுப்பிவிட்டு அவன் கவனித்துக் கொண்டிருந்த பொறுப்பை தான் ஏற்றுக் கொண்டாள். 

அவன் வந்தபோது லலிதா அங்கில்லை. தன்னுடைய அறைக்கு சென்றுவிட்டாள். அவன் வந்து அம்மாவிடம் கேட்பதற்கு முன்பே அம்மாவே வந்து அவனிடம் கத்தினாள்.

“ஏன்டா… உன் பொண்டாட்டிக்கு அறிவிங்கறதே இருக்காதா? பைத்தியம் முத்திப் போயிட்டா?”

“அம்மா… என்ன நடந்துச்சு?”

“என்ன நடந்துச்சா? ஆம்பளைப் புள்ளைக்கு பொம்பளைப் புள்ளையோட கவுனைப் போட்டு ஃபோட்டா எடுத்துக்கிட்டிருக்கா.”

அவன் கூட என்னவோ ஏதோ என்று நினைத்திருந்தான். இதானா விசயம் என்று தெரிந்தபோது அம்மாவின் மீதுதான் எரிச்சல் வந்தது.

“என்னம்மா… இதுக்குப் போய் அவளை நல்ல நாள் அதுவும், சொந்தக்காரங்களை வச்சுக்கிட்டு திட்டுவியா?” சீறினான்.

“ஏன்டா… உன் பொண்டாட்டி எவ்வளவு பெரிய அசிங்கம் புடிச்ச வேலைப் பண்ணியிருக்கா. அது உனக்குத் தெரியலை. திருப்பிக்கிட்டு என்னையே திட்டறே?”

“அம்மா… பெண் குழந்தை பெத்துக்கனும்னுதான் அவளுக்கு ஆசை. குழந்தைப் பொறக்கறதுக்கு முந்தியே பெண் குழந்தைதான் பிறக்கும்னு ஆசை ஆசையா டிரஸ் கூட பெண் குழந்தைக்கு போடற டிரஸ்ஸா எடுத்து எடுத்து வச்சிருந்தா… ஆனா… நம்ம போதாத நேரம் பெண் குழந்தை பொறந்து பொறந்து செத்துப் போயிட்டு. அந்த ஏக்கம் அவ மனசில இருக்கு. அதனாலதான் இந்த குழந்தைக்கு அந்த டிரஸ்ஸைப் போட்டுப் பார்த்திருக்கா. அதை ஃபோட்டோ எடுத்து வச்சுக்கனும்னு ஆசைப்பட்டிருக்கா. இது ஒரு தப்பா? இதுக்குப் போய் அவளைத் திட்டியிருக்கியே.”

“அவளுக்கு எவ்வளவு ஏக்கம் இருக்குதோ அவ்வளவு பயம் எனக்கு இருக்குடா. ரெண்டு பெண் குழந்தையும் செத்துப் போயிட்டு. இப்ப பொறந்திருக்கற ஆண் குழந்தை நல்லபடியா வளரனும். இந்த வீட்டுக்கும் பெண் குழந்தைக்கும் ராசியே கிடையாது. அதனால பெண் குழந்தையோட ஜாடை எதுவும் இந்த வீட்ல தென்படக் கூடாது. அதுக்குத்தான் அவ பெண் குழந்தையோட துணியைப் போட்டதும் எனக்கு பயம் வந்துட்டு. அந்த தோ\ம் ஏதாவது இந்தக் குழந்தையை தொட்டுடக் கூடாதுன்னுதான் அந்த துணியை கழற்றி தூக்கி எறிஞ்சேன்” பதிலுக்கு கத்திவிட்டு அம்மா போய்விட்டாள்.




வீரமணிக்கு மனைவியை சமாதானப்படுத்துவதைத்தவிர வேறு வழி இல்லை. 

லலிதாவின் உணர்வுகள் அவனுக்குப் பரியாதா என்ன? அவளுடைய மனம் எந்தளவிற்கு புண்பட்டிருக்கும் என அவனுக்குத் தெரியாதா என்ன?

“லலிதா… அம்மா செய்ததை பெரிசா எடுத்துக்காதே. ஆண் குழந்தை பிறந்துட்டாலும் அம்மாவோட மனசுல இருக்கற பயம் மட்டும் இன்னும் போகலை. அதனாலதான் இப்படி கடுமையா நடந்துக்கிட்டாங்க. ஏற்கனவே ரெண்டு பெண் குழந்தை செத்துப் போனதால உண்டான பயம் இது. அதனால தான் நீ பெண் குழந்தையோட சட்டையைப் போட்டதும் அப்படி நடந்துக்கிட்டாங்க. அவங்களுக்கு பெண் குழந்தையோட தோற்றத்தைக் கூடப் பார்க்கப் பிடிக்கலை. விடு. நம்ம வாழ்க்கையில இப்பத்தான் மகிழ்ச்சியும், நிம்மதியும் வந்திருக்கு. அது நிலைக்கனும். நீ அழுததெல்லாம் போதும். இனி நீ சிரிக்க வேண்டிய நாட்கள். ஒவ்வொரு நிமிசத்தையும் நீயும் நானும் வேஸ்ட் பண்ணக் கூடாது. நம்ம குழந்தையோட நாம மகிழ்ச்சியா இருக்கனும்.” அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். 

எல்லாவிதத்திலும் கணவன் தனக்கு ஆறுதலாக இருப்பதை நினைத்து பெருமைக் கொண்டாள் லலிதா. எத்தனைப் பெண்களுக்கு இப்படியெல்லாம் கணவன் கிடைப்பார்கள்? 

கணவனுக்காக மாமியாரின் நடவடிக்கைகளை அலட்சியப்படுத்தினாள். நிம்மதியும் மகிழ்சியுமாக கணவனின் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள். 

அவளுடைய கூந்தலை மென்மையாக வருடியவன் “என்ன… உனக்கு நம்ம குழந்தைக்கு பெண் குழந்தை போடற டிரஸ்ஸை போட்டு ஃபோட்டோ எடுத்துக்கனும். அவ்வளவுதானே? ஒரு ஃபோட்டோ என்ன? ஆயிரம் ஃபோட்டோ எடுத்துக்கலாம். குழந்தையோட ஒவ்வொரு வளர்ச்சியிலும் பெண்ணா அலங்கரிச்சு ஃபோட்டோ எடுத்துக்கலாம். நாளைக்கே டவுனுக்குப் போய் ஒரு நல்ல காமிரா வாங்கிட்டு வர்றேன் சரியா?”

அன்பு பொங்க அவளுடைய நெற்றியில் முத்தமிட்டான். சொன்னதைப் போலவே மறுநாளே காமிரா வாங்கி வந்தான். அம்மாவுக்குத் தெரியாமல் அலமாரியில் ஒளித்து வைத்தான்.




 

What’s your Reaction?
+1
4
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!