Serial Stories அன்பெனும் ரகசியம்-

அன்பெனும் ரகசியம் -11

11

காயாக்குருதியும், தாஸும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.  திடீரென்று ஆவேசம் வந்தவராய் அந்தக் காயாக்குருதி யாகத்தீ முன் சென்று, குனிந்து கருகிக் கொண்டிருக்கும் அந்தக் குட்டிசாத்தான் பொம்மையை கையால் எடுக்க முயல,

அதிலிருந்து கிளம்பிய ஆளுயர நெடிய கரும்புகை, அந்த இடத்தில் அங்குமிங்குமாய்ச் சில நிமிடங்கள் சுழன்றடித்து விட்டு, சரேலென்று வெளியே பாய்ந்து சென்றது.

அதைக் கண்டு “ஹா…. ஹா… ஹா”வெனச் சிரித்த ராஜய்யன், “எத்தனையோ வருடங்களுக்கு முன்னால்… உன்னைப் போன்ற ஒரு மந்திரவாதியின் கையில் பிடிபட்டு… அந்த பொம்மைக்குள் குட்டிச்சாத்தானாய்ச் சிக்கியிருந்த ஒரு நல்ல ஆன்மாவுக்கு இன்று விடுதலை கிடைத்து விட்டது… இதோ இந்தச் சிறுவன் கையால் விடுதலை கிடைத்து விட்டது… இனி அந்த ஆன்மா மறு ஜென்மத்தை அடைந்து… அடுத்த பிறவி எடுத்து அற்புதமாய் வாழும்…” என்றான்.

காயாக்குருதியின் முகமும், தாஸின் முகமும் தொங்கிப் போயின.

“ச்சை… இதைப் பார்க்கவா இத்தனை தூரம் புறப்பட்டு வந்தோம்?” என்று தாஸைப் பார்த்துக் கேட்ட காயாக்குருதியின் பார்வை சரவணன் மீது படிந்தது.  அந்தப் பார்வையில் அக்கினிக் கோபம் இருந்தது.  “இந்தப் பொடியன்தான்… அத்தனைக்கும் காரணம்” என்று சொல்லிக் கொண்டே சரவணனைத் தாக்க வந்த காயாக்குருதியின் மண்டையை எங்கிருந்தோ வந்த கருங்கல் ஒன்று பலமாய்த் தாக்க,

 “அய்யோ” என்று கத்திக் கொண்டே அடிபட்ட இடத்தில் வடிந்த ரத்தத்திற்கு கையால் அணை போட முனைந்தான். 

அப்போது மறைவிலிருந்து பூமணியும், ஊர்க்கார இளைஞர்கள் சிலரும் இருட்டிலிருந்து வெளியே வந்தனர்.

“அக்கா… நீ எப்படி?” ராஜய்யன் கேட்க,

“நான் உன் கூட வரட்டுமா?”ன்னு நான் கேட்டதுக்கு, “வேண்டாம்”ன்னு சொல்லிட்டு நீ புறப்பட்டுப் போயிட்டே… அதுக்கப்புறம் என்னால் நிம்மதியாத் தூங்கவே முடியலை!…அடிமனசுக்குள்ளார நீ ஏதோ ஆபத்தை நோக்கிப் போறியோ?ன்னு ஒரு நெனப்பு ஓடிக்கிட்டே இருந்திச்சு!… சரி உன்னைப் பின் தொடரலாம்ன்னு முடிவு பண்ணி… இதோ இந்தப் பசங்களையும் கூட்டிட்டு வந்தேன்!… வந்து… அதோ அந்த புதருக்குப் பின்னாடி இருந்து இந்த நடக்கறதையெல்லாம் பார்த்துக்கிட்டேயிருந்தேன்!… நீயும் அவனுக ரெண்டு பேரும் சண்டை போடறப்பக் கூட எனக்கு நடுவால வரணும்னு தோணலை… எப்ப அந்த மந்திரவாதி… சரவணனைத் தாக்கப் போனானோ.. அப்ப என்னால பொறுத்துக்க முடியலை!… அதான் கல்லெடுத்து அவன் மண்டையைப் பொளந்தேன்” சொல்லியவாறே சரவணன் அருகே சென்று அவனைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள் பூமணி.

அவளுடன் வந்த இளைஞர்களில் ஒருவன் கேட்டான், “ராசண்ணே… இவன் யாரு?… பார்த்தா பாதாள பைரவி படத்துல வர்ற மந்திரவாதி மாதிரி இருக்கான்?”




 

“மந்திரவாதியேதான்… அதுவும் சாதாரண மந்திரவாதியில்லை… மோசமான மந்திரவாதி”

 “அப்ப இவனுக ரெண்டு பேரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போயிட வேண்டியதுதான்”

போலீஸ் ஸ்டேஷன் என்றதும் ராஜய்யனுக்கு பகீரென்றானது.  “அடக்கடவுளே… இவனுகளை அங்க கொண்டு போனா இந்தப் பையனைப் பற்றிக் கேள்வி வருமே?”

தன் சந்தேகத்தை பூமணியிடம் சொல்ல, “அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினையில்லை!… நான் பார்த்துக்கறேன் வா” என்றாள் அவள்.

காலை ஆறரை மணி,

“என்னய்யா… காலங்காத்தால என்ன பஞ்சாயத்து?” கேட்டுக் கொண்டே உள்ளே வந்த இன்ஸ்பெக்டர் துரை, காயாக்குருதியைப் பார்த்து முகம் சுளித்தார்.  “யாருய்யா இந்தாளு?”

 “அதை நான் சொல்றேங்க இன்ஸ்பெக்டரய்யா” என்று ஆரம்பித்து அவர்கள் கோயமுத்தூரிலிருந்து தன்னைத் துரத்தி வந்த கதையையும், ஊருக்கு வெளியே பாழடைந்த வீட்டில் யாகம் நடத்தியதையும், தன்னிடமிருந்த குட்டிச்சாத்தனைப் பறிக்க தன்னோடு சண்டையிட்டதையும், அப்போது சரவணன் அந்தக் குட்டிச்சாத்தானை எடுத்து தீயில் போட்டதையும் விலாவாரியாய்ச் சொல்லி முடித்தான் ராஜய்யன்.

இப்போதுதான் அந்த இன்ஸ்பெக்டரின் பார்வை சரவணன் மீது விழுந்தது.  “யார் இந்தச் சிறுவன்!… பார்த்தா இந்த ஏரியா பையன் மாதிரியில்லையே?” 

 ஒரு கணம் என்ன பதில் சொல்வதென்று புரியாத ராஜய்யன், “வந்து எங்க உறவுக்காரப்பயல்தான்… ஊரு கோயமுத்தூர்… லீவுக்கு வந்திருக்கான்… போயிருவான்” என்றொரு பொய்யைச் சொல்லி வைத்தான்.

இன்ஸ்பெக்டரின் முகபாவம் அவன் சொன்னதை நம்பியது போலவும் இருந்தது, நம்பாதது போலவும் இருந்தது.

“சரி… இந்த மந்திரவாதிகளை நான் விசாரிச்சுக்கறேன்… நீங்க கிளம்புங்க” என்று சொல்லி ராஜய்யனுடன் வந்த கும்பலை அனுப்பி வைத்தார் இன்ஸ்பெக்டர் துரை.

போன வேகத்திலேயே ராஜய்யனும் சரவணனும் தனியே திரும்பி வந்தனர். 

“என்னப்பா?.. திரும்பி வந்திட்டீங்க?… என்ன விஷயம்?” இன்ஸ்பெக்டர் ஏதோவொரு ஃபைலைப் படித்துக் கொண்டே கேட்க,

 “சார்… இந்தப் பயல் உங்க கிட்ட என்னமோ சொல்லணும்ங்கறான்” என்றான் ராஜய்யன்.

 “என்ன தம்பி.. தைரியமாச் சொல்லு” முகத்தில் மென்மையைப் பூசிக் கொண்டு கேட்டார் இன்ஸ்பெக்டர்.

  “வந்து… வந்து… உங்க ஸ்டேஷனுக்கு எதிர்ல ஒரு டீக்கடை இருக்குதல்ல?” சரவணன் கேட்க,

 “ஆமாம்…”

 “அங்க… நாங்க எல்லோரும் டீ சாப்பிடலாம்!னு போனோம்… அங்க… அங்க… வேற என்னமோ வாசனை வருது” என்றான் சரவணன்.

 அதைக் கேட்டு வாய் விட்டுச் சிரித்த இன்ஸ்பெக்டர், “டீக்கடைன்னா பலவிதமான வாசனை வரத்தான் செய்யும்” என்றார்.

 “இல்லை… அவங்க நெறைய பார்ஸல் சாப்பாடு வெளிய அனுப்பறாங்கல்ல?… அதுல சாப்பாட்டு வாசனையை மீறி வேறொரு வாசனை வருது”

 “வேறொரு வாசனை…ன்னா?”

 “தெரில சார்!… ஆனா அது சாப்பிடற பொருளல்ல… வேற ஏதோ” என்றான் சரவணன்.




 சில விநாடிகள் பேனாவால் தன் கீழுதட்டைத் தேய்த்தபடி யோசித்த இன்ஸ்பெக்டர் துரை ராஜய்யனைப் பார்த்து, “பயல் நார்மலாய்த்தானே இருக்கான்?… வேற மெண்டலி ஏதும் ப்ராப்ளமில்லையே?” கேட்டார்.

 “சேச்சே… அப்படி ஏதுமில்லை சார்!… ஆனா…”என்று ராஜய்யன் இழுக்க,

 “என்னய்யா “ஆனா”ன்னு இழுக்கறே?… வேற என்ன விஷயமிருந்தாலும் சொல்லிடு” இன்ஸ்பெக்டர் குரலில் லேசான கண்டிப்பு தெரிந்தது.

 “வந்து… இந்தப் பையன் சாதாரணப் பிறவியில்லை சார்!… அன்னிக்கு மூக்கையன் வீட்டுல பழைய கால நகைப் பெட்டி திருட்டுப் போயிடுச்சு… மை போட்டுப் பார்க்க எங்கக்கா கிட்ட வந்தான்!.. ஆனா… மையில எதுவுமே தெரியலை!… அப்ப இந்தப் பையன் எங்களையெல்லாம் கூட்டிட்டுப் போய் மூக்கையன் வீட்டுக் கிணத்துப் பக்கத்துல நிறுத்தி உள்ளார பொந்துக்குள்ளார இருக்கு!ன்னு சொன்னான் போய்ப் பார்த்தா உண்மையிலேயே இருந்திச்சு” விழிகளை விரித்துக் கொண்டு சொன்னான் ராஜய்யன்.

“அட… அப்படியா?… ஆச்சரியமாயிருக்கே?… இந்தப் பையன் இதுக்கு முன்னாடி இந்த ஊருக்கு நிச்சயமா வந்ததில்லை தானே?” சந்தேகமாய்க் கேட்டார்.

 “இல்லவே இல்லை சார்” என்ற ராஜய்யன், “அப்புறம்… நேத்திக்குக் கூட… இந்த ரெண்டு ஆசாமிகளும் ஊருக்குள்ளார வந்திருப்பதையும்… ஊர்க் கடைசில அந்த பாழடைஞ்ச வீட்டுல யாகம் பண்ணிட்டிருந்ததையும்… இந்தப் பையன்தான் சார் தன்னோட ஞானதிருஷ்டில பார்த்துச் சொன்னான்” என்று சொல்ல,

 “யோவ்… கோடங்கி… என்ன உன்னோட புருடா வேலைகளை எல்லாம் இங்க போலீஸ் ஸ்டேஷன்ல வந்து காட்டுறியா?… பொய்ன்னு கண்டு பிடிச்சேன்… முட்ட்டிக்கு முட்டி தட்டி மாவுக்கட்டு போட வெச்சிடுவேன்” இன்ஸ்பெக்டர் துரை கோபத்துடன் சொல்ல,

 “சார்… சாமி சத்தியமா சொல்றேன்… ராத்திரி தூங்கப் போன என்கிட்ட வந்து “எங்கியோ இருந்து வாசனை வருது”ன்னு சொல்லி, டி.வி.எஸ்.50யை எடுக்க வெச்சு… அவன் வழி காட்ட நான் அங்க போயி அவனுகளைப் பிடிச்சேன் சார்… நம்புங்க சார்”

இன்ஸ்பெக்டர் சரவணனை உற்றுப் பார்த்தார்.  “பையன் நெற்றில என்ன தழும்பு?” கேட்டார்.

 “அது தழும்பு இல்லை சார்!… ஞான தீபம்… அவனுக்கு மத்தவங்களைக் காட்டிலும் அதீத சக்தி இருக்கு!ங்கறதுக்கு அதுதான் சார் அடையாளம்” 

சில நிமிடங்கள் கண்களை மூடி யோசித்த இன்ஸ்பெக்டர், “அப்ப ஒண்ணு செய்வோம்… இப்பவே அந்த டீக்கடைக்குப் போயி… சோதனை போடுவோம்!… இவன் சொன்ன மாதிரி அங்க ஏதாச்சும் தப்பா இருந்தா… நீ சொல்றதை நான் ஒத்துக்கறேன்!… அப்படி மட்டும் எதுவும் இல்லே…. நான் வேற மாதிரி ஆயிடுவேன் ஜாக்கிரதை” ஆட்காட்டி விரலைக் காட்டி எச்சரித்தபடி எழுந்த இன்ஸ்பெக்டர் துரை, “கான்ஸ்டபிள் என் கூட வாய்யா” என்று சொல்லி ஒரு கான்ஸ்டபிளையும் அழைத்துக் கொண்டு எதிரேயிருந்த டீக்கடையை நோக்கி நடந்தார்.

ராஜய்யனும், சரவணனும் பின் தொடர்ந்தனர்.




What’s your Reaction?
+1
7
+1
10
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!