Serial Stories சந்தன முல்லை 

சந்தனமுல்லை – 12 (நிறைவு )

(12)

                “முல்லை இந்தப் பூவைத் தலையில் வை.– பார்வதி

       “வேண்டாம்மா. ரொம்ப  ஜாஸ்தியா இருக்கும்

       “பரவாயில்லை வை. கல்யாணப் பொண்ணு

       “பொண்ணு பார்க்கத்தான் வராங்க. இன்னும் முடிவு தெரியாது– முல்லை சிரித்தாள்.

       “உன்னை யாருக்கானும் பிடிக்காம போகுமா?

       “அப்போ எனக்குப் பிடிக்க வேண்டாமா?




       முல்லையின் கேள்வி எல்லோரையும் நிதானிக்க வைத்தது. அப்பா நின்று திரும்பிப் பார்த்தார். என்ன சொல்கிறாள் இவள்? ஆனால் உண்மைதானே. பையனுக்குப் பிடித்தால் போதும் என்று நினைக்கிறோம். ஆனால் பெண்ணின் உணர்வுகளுக்கு எங்கு மதிப்பு கொடுக்கிறோம். சங்கரைக் கூட உனக்குப் பிடித்திருக்கிறதா என்று கேட்கவில்லை.

       இப்போது வாசு வீடு பெண் பார்க்க வந்திருக்கிறது. இது முல்லைக்குப் பிடித்தமா?

       “இந்த தடவை உன்னைக் கேட்டுதான் நிச்சயம் செய்வேன் கண்ணு.– அப்பா.

       “தேங்க்ஸ் பா.– என்றால் முல்லை.

       திருமணத்தை முடித்து விட வேண்டும் என்று உறுதியாக இருந்தார் வாசுவின் அம்மா. கோபாலனின் சொத்து விவரம், அவர்கள் சமூகத்தில் அவருக்கு உள்ள மரியாதை, முல்லையின் அழகு, படிப்பு எல்லாமே திருப்தியாக இருந்தது. அவளை விட்டு விட மனமில்லை. ஆனால் சுவாமிநாதன் குடும்பம் நெருங்குவது பிடிக்கவில்லை.

       “இப்போ ஒன்னும் பேசாதே. நிச்சயம் முடியட்டும். அப்புறம் கட் பண்ணிடலாம்– வாசுவின் அப்பா.

       அவர்கள் இரண்டு குடும்பத்திற்கும் பொதுவான பெரியவர், நெருங்கிய சொந்தங்களை அழைத்து வந்திருந்தார்கள். வாசுவின் குடும்பப் பெருமையைச் சொல்லி அதில் வாழ்க்கைப் பட முல்லை அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்றும், கோபாலன் குடும்பத்தில் பெண் எடுக்க வாசு குடும்பம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்றும் புகழ்மாலைகள் விழுந்து கொண்டிருந்தது.

       சுவாமிநாதன் எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தார்.

       அவரைக் கவலையுடன் பார்த்தாள் முல்லை. தான் திருமணம் ஆகிப் போனால் தன்னுடன் எந்த உறவும் கூடாது என்று வாசு கூறுவது தெரிந்தால் இவர்களின் மனம் என்ன பாடு படும்? நினைக்கவே மனம் நடுங்கியது.

       தலையைக் குலுக்கி நினைவைத் துரத்தினாள்.

       “முல்லை. இந்தா. இதைக் கழுத்தில் போடு– பார்வதி ஒரு நெக்லேசை நீட்டினார்.

       “உன் கல்யாணத்தப்போ போடணும்னு வாங்கி வச்சேன்– என்றவர் தானே கழுத்தில் போட்டு விட்டார்.

       “பார்வதி, இந்தா இந்தக் காபியைக் குடிச்சுட்டு, போய் உட்காரு. இப்பத்தான் எழுந்து வந்திருக்கே. உடம்பை அலட்டிக்காதே.– அம்மா டம்ளரை நீட்டினாள்.

       “உன் புருஷனுக்கும், சங்கருக்கும் கோடு.

       “சங்கர் ஹாலில் வந்தவர்களுடன் பேசிக் கொண்டிருந்தான். வாசுவுடன் வலியப் பேசினாலும் சரியாகப் பதில் சொல்லாமல் மொபைலுடன் எழுந்து வெளியில் போனதை அப்பா, முல்லை கவனித்தார்கள்.

       அப்பாவுக்குச் சங்கடமாக இருந்தது. சங்கரின் மனக் காயத்தை உணர்ந்து அவனிடம் அன்பாக இருக்க வேண்டும், அவன் காயத்தை மறக்க வேண்டும் என்று நினைத்தார். சுவாமிநாதனிடம் “மீண்டும் முல்லை, சங்கர் திருமண ஏற்பாடுகள் ஆரம்பிக்கலாமா? என்று கூடக் கேட்டார்.

       ஆனால் சுவாமிநாதன் மறுத்து விட்டார்.




       “அன்னைக்கு உதறிட்டுப் போனான். இன்னைக்கு திரும்பி வந்த உடனே முல்லையைக் கழுத்தை நீட்டுன்னு சொல்றது தப்பு. அவளுக்குன்னு  ஒரு தன்மானம் இருக்கும். அதை மேலும், மேலும் சீண்டக் கூடாது. அவ உணர்வுகளை மதிக்கணும்– என்றார்.

       வாசு குடும்பம் போட்ட நிபந்தனையை அப்பா இன்னும் அவரிடம் சொல்லவில்லை. பாட்டி மட்டும் மனம் பொறுக்காமல் அம்மாவிடம் சொல்லி அது முல்லை காதுக்கு வந்தது.

       “நிச்சயம் முடியட்டும். அப்புறம் பேசலாம். எல்லாம் மாறும்– என்றாள் அம்மா. மேற்கொண்டு அது விஷயமாகப் பேசுவதற்குள் சங்கர், வந்து, அந்தப் பரபரப்பு முடிவதற்குள் திடீரென்று வாசு குடும்பம் வந்து விட்டது.

       நேற்று மாலைதான் போன்.

       அவினாசி பெரியப்பா, நாகராஜ் மாமாவுடன் நாளை பெண் பார்க்க வரோம். இதை விட்டா அப்புறம் நல்ல நாள் இல்லை. நாளைக்கே தட்டு மாத்திக்கலாம் என்றார் வாசுவின் அம்மா. அப்பா பதறினார்.

       “திடீர்னு சொன்னா எப்படி. ஏற்பாடுகள் செய்ய வேண்டாமா?

       “அதெல்லாம் செஞ்சுடலாம். நாங்க பத்து பேர் வரோம்– டக்கென்று வைத்து விட்டார்.

       நான் என்ற ஆதிக்க உணர்வு. பெண் வீடு தான் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் என்ற அதிகாரம். கட்டளையாக வந்ததே தவிர எதுவும் செய்தியாக இல்லை. அப்பா யோசித்தாலும், வரவங்களை வேண்டாம் என்று சொல்வது மரியாதை இல்லை என்று அப்பாவும் சம்மதித்தார்.

       “நான் இருக்கேண்டா. ஜமாய்ச்சிடலாம்.– சுவாமிநாதன்.

       முழுப் பொறுப்பும் ஏற்று நடத்தினார். இப்பவும் 

       “டேய் கோபால், முல்லையை வரச் சொல்லு. என்றார்.

       “இங்க நீங்கதான் எல்லாமேவா?– வாசுவின் அம்மா.

       “ஆமாம். அவன் இல்லாம எங்க வீட்டுல எதுவும் நடக்காது.-கோபாலன்.

       “உங்க வீட்டில் சரி. ஆனா என் வீட்டிலும் வந்து இப்படி ஆர்டர் செய்யக் கூடாது. அஃப்கோர்ஸ் முல்லைக்கு கல்யாணம் ஆச்சுன்னா அவ எங்க வீட்டுப் பொண்ணு. உங்க நட்பு இந்த வீட்டோடு சரி. சின்னச் சிரிப்புடன் வாசுவின் அம்மா சொல்ல சுவாமிநாதன் திகைத்தார்.

       “என்ன கோபாலன், நீங்க இவர்கிட்ட சொல்லலையா?

       “எதுக்குச் சொல்லணும்?– முல்லை காபித் தம்ளர்களுடன் வந்தாள்.

       “முல்லை நாங்க பெரியவங்க பேசறோம்

       “ஆனா அது என் சம்பந்தப்பட்ட விஷயம்தானே.

       முல்லை உறுதியான குரலில் பேசினாள்.

       சுவாமிநாதன் புரியாமல் விழித்தார். கோபாலன் சைகை காட்டி அவரை அமரச் சொன்னார்.

       “என்ன கோபாலன் உங்க பொன்னை பேச விடறீங்க

       “இது அவ சம்பந்தப் பட்ட விஷயம். பேசட்டுமே. அவ என்ன பேசறான்னு எனக்கும் தெரியலை. என்னம்மா முல்லை.

       “அப்பா, இவங்க நல்லவங்கதான். ஆனா ஒரு பெண்ணோட உணர்வுகளை மதிக்கலையே. இவங்க சொல்றப்போ சிரிக்கணும். இவங்க சொல்றவங்க கூட பழகனும். எத்தனை உயிருக்குயிரான உறவா இருந்தாலும் அவங்களை ஒதுக்குன்னா ஒதுக்கிடனும். இது என்ன அடிமைத்தனம். இவங்களுக்குத் தேவை ஒரு மருமகள் இல்லை. சொல்பேச்சு கேக்கற ஒரு பொம்மை.

       முல்லை ஒவ்வொரு வார்த்தைகளாய் தேர்ந்தெடுத்துப் பேசினாள்.

       “சார், நம்ம வாழ்க்கைல எத்தனையோ சம்பவங்கள் நடக்கும். அதில் சம்பந்தப் பட்டவங்களை நம்மால மறக்க முடியாது. ஒரு சினிமாவே பாக்கறோம். அந்த ஹீரோவைப் பிடிக்கும். உடனே நீ இன்னும் மனசுல அவனை நினைச்சிண்டு இருக்கியான்னா என்ன அர்த்தம்? சங்கர் என் கூட வளர்ந்தவர். பெரியவங்க நிச்சயம் செஞ்சாங்க. அது நின்னு போச்சு. அதுக்காக நீ அவரை நினைச்சிண்டு இருக்கியா? உன் மனசுல அவர் இன்னும் இருக்காரான்னு கேட்டா அது முட்டாள்தனம் இல்லையா?

       அப்பா, அம்மாவை எப்படி மறக்க முடியாதோ அதே மாதிரிதான் என் கூட பிறந்ததிலிருந்து வரவங்களையும் மறக்க முடியாது. ஏன் மறக்கணும்? ஒரு திருமணத்தின் மூலம் புது உறவுகள் சேரணுமே தவிர அதை வெட்டி விடக் கூடாது.

       “சரிம்மா. எதோ புரியலை. விடு– பெரியவர்.

       “உடல் ரீதியா துன்புறுத்துவதை விட மன ரீதியா துன்புறுத்துவதுதான் குரூரமானது. அந்தக் காயம் என்னைக்கும் ஆறாது. நிமிஷம் தோறும் கொட்டிகிட்டே இருந்தா அது வாழ்க்கை இல்லை. நரகம். மனசுல இன்னும் சங்கர் இருக்கானா? அவங்க குடும்பம் வந்தா நீ சங்கரை நினைப்பே அப்படின்னா, அவங்க என்னை நிச்சியம் செய்யக் கூடாது. சரி நான் நினைக்கலைன்னு சொல்லிட்டு நினைச்சா உங்களுக்கு தெரியவாப் போகுது?

       அவளின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை. அவளை ஆமோதிப்பது போல் தலையாட்டினார் அப்பா.

       “ திருமணத்திற்குப் பிறகு எத்தனையோ அந்தரங்கமான விஷயங்கள் நடக்கும். அப்போதெல்லாம் நீ மனசுல அவனை நினைச்சிண்டு இருக்கியான்னு கேட்டா, அந்தப் பொண்ணு குறுகிச் செத்துப் போயிடுவா. இப்படிக் கேள்வி கேட்டு, ஒரு பெண்ணை குறுகிக் கொல்றதுல உங்களுக்கு என்ன சந்தோஷம்?

       சரி இவ்வளவு பேசறீங்களே , உங்க மனசுல எந்தப் பொண்ணு நினைப்பும் இல்லைன்னு சொல்ல முடியுமா?

       “இப்போ என்னம்மா சொல்றே?-பெரியவர்.

       “எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லை.

       “அவன் உன்னை விரும்பறான்.




       “உடலை. உள்ளத்தை இல்லை. அது இவங்க செயல்கள் வார்த்தைகளால் கிழிஞ்சு போச்சு. என்னை விரும்புபவரை விடப் புரிஞ்சுண்டவரைக் கல்யாணம் செஞ்சிண்டா என் வாழ்க்கை நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். ஒரு பொண்ணு இன்னும் எத்தனைதான் உள்ளத்துல காயம் பட முடியும்?

 “சரிம்மா. திடீர்னு எங்க போறது? வாசு மாதிரி நல்ல குடும்பம் கிடைக்குமா? ஒரு சொந்தம் கேட்டது.

       “ஏன் சங்கர் இல்லையா? செஞ்சது தப்புன்னு புரிஞ்சுண்டவர். பெத்தவதான் முக்கியம்னு அமேரிக்கா வாய்ப்பை உதறிட்டு வந்தவர். செஞ்சது தப்புன்னு உணர்ந்தவர். எல்லாத்தையும் விட எனக்கும் அவருக்கும் கல்யாணம் நிச்சயம் ஆனது. வாசு கேட்ட மாதிரி இவர் என் மனசுல யார் இருக்கான்னு கேட்க மாட்டார். ஏன்னா ஒரு மோசமான உதாரணமா வாசு என் மனசுள் இருப்பார்னு அவருக்குத் தெரியும்.– முல்லை ததும்பிய கண்ணீரை மறைத்தாள்.

       அவள் மனம் எவ்வளவு காயம் பட்டிருக்கிறது என்று புரிந்தது.

       “மாமா உங்க மகளா நான் உங்க வீட்டில் தலை நிமிர்ந்து வாழ விரும்பறேன். சம்மதிப்பீங்களா– இருகை கூப்பினாள் முல்லை.

       “என் தங்கமே– பார்வதி ஓடி வந்து அவளை அனைத்துக் கொண்டாள்.

       “ஒரு பெண்ணை வார்த்தைகளால் கொல்றதை விட வேற பெரிய வன்முறை எதுவும் இல்லை. அவ முல்லை. சந்தன முல்லை. அதுல நறுமணம்தான் இருக்கும். நாற்றம் இருக்காது. ஏங்க நீங்க என்ன சொல்றீங்க?

       சுவாமிநாதன் மகனின் முகத்தைப் பார்த்தார்.

       அவன் திகைத்து நின்றான். என்ன சொல்வது என்று புரியவில்லை. தன் செயலால், முல்லை எந்த அளவுக்கு மனசளவில் துன்புற்று இருக்கிறாள் என்று புரிந்தது. அவளைப் பார்க்கும்போது அவனுக்கு கடந்த கால நிகழ்வுகள் நினைவுக்கு வந்தது.

       தங்களை இணைத்தது, மென்மையான, இதமான பேச்சு, செயல் என்று வந்து போனது. அவளைப் பார்க்கும்போது அவன் மனதிற்குள் ஒரு இதம் பரவியது. பதற்றம், வேதனை, கவலை நீங்கி ஒரு சில்லென்று புல்வெளியில் நடக்கும் உணர்வு.

       “என்னடா சொல்றே?– கண்கள் முழுவதும் மின்ன ஆர்வத்தோடு  கேட்டார் சுவாமிநாதன். அம்மா, கோபாலன் குடும்பத்தினரின் என்று அனைவரின் கண்களிலும் தெரிந்த ஆர்வமும், பரவசமும் அவனுக்குப் புரிந்தது. அவர்கள் மனதில் முல்லை இருக்கிறாள். தன் மனதிலும் அமர்ந்து விடுவாள் என்று நம்பிக்கை தோன்ற

              “சம்மதம். தட்டு மாத்திக்குங்கப்பா,– என்றான் சங்கர்.

                                         *****************




What’s your Reaction?
+1
24
+1
22
+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!