Serial Stories சந்தன முல்லை 

சந்தனமுல்லை – 11

(11)

   

இப்படி நடக்கும் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை சங்கர்.

       நிலைகுலைந்து போயிருந்தான். இடி விழுந்திருந்தால் கூட இவ்வளவு பாதிப்பு இருந்திருக்காது. உருக்குலைந்து போயிருந்தான்.

       மகிமாவா இப்படி? அப்போ அவளின் நேசம், பாசம், காதல் எல்லாம் பொய்யா?




       எல்லோர் முகத்திலும் தான் எப்படி விழிக்கப் போகிறோம்? அம்மா இப்போதுதான் மாரடைப்பிலிருந்து மீண்டு வந்திருக்கிறாள். இந்த அதிர்ச்சியினை அவள் எப்படித் தாங்குவாள். ஏற்கனவே ஊர், சொந்தம், பந்தம் எல்லாம் தாலி கட்டாமல் சேர்ந்து வாழ்வதைப் பற்றி கேலி செய்கிறது. இந்த விஷயம் கேள்விப்பட்டால் வாழ்நாள் முழுவதும் அவர்கள் மெல்வதற்கான அவல் கிடைத்து விட்டது.

       அவன் பேச வார்த்தைகள் கிடைக்காமல் அதிர்ந்து போயிருந்தான்.

       மகிமா தன் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

       அவளின் அப்பா, அம்மா வந்திருந்தார்கள். அப்பா ஒரு மூலையில் மொபைலில் மூழ்கி இருந்தார். அம்மா மகளுக்கு உதவி. எங்கு யாரிடம், பேசுவது என்று தெரியவில்லை. இப்போது அவன் மனம் தன பெற்றோர்களை நினைத்துப் பார்த்தது.

       அம்மா, அம்மா என்று அலறியது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தைப் பற்றி மனது நினைத்தது. இதே அவர்கள் சம்மதத்துடன் நடந்த கல்யாணமாக இருந்தால் மகிமா இப்படி எல்லாவற்றையும் உதறிப் போவதை அனுமதித்திருப்பார்களா? கேள்வி எழும்போதே மகிமா அவர்கள் சொல்லை கேட்டிருப்பாளா என்ற சந்தேகமும் எழுந்தது?

       தான் புதுமைப்பெண் என்று சொல்வாள்.

       “என் வாழ்க்கை என் உரிமை. இதில் தலையிட மற்றவர்களுக்கு உரிமை இல்லை. என்னை இந்த பூமிக்குக் கொண்டு வந்தது பெற்றோர்கள். ஸோ  என்னைப் படிக்க வைத்து, இந்த சமூகத்தில் காலை ஊன்றி நிற்க வைக்க வேண்டியது அவங்க கடமை. கடமை முடிஞ்சுதா, ஒதுங்கிக்க வேணும். அதன் பிறகு என் விஷயத்தில் தலையிட அவங்களுக்கு உரிமை இல்லை என்பாள்.

       தன்னைப் பற்றிய எல்லா விஷயங்களையும் செய்தியாகத்தான் சொல்வாள் அவர்களுக்கு.

       கல்லூரி நாட்களிலிருந்து அவள் பழக்கம். அதன் பிறகு கேம்பஸ் இன்டர்வியூவில் ஒரே கம்பெனியில் செலக்ட் ஆனார்கள். அற்புதமான அழகி. வட நாட்டுப் பெண்களுக்கே உரிய தங்க நிறம். பளபளப்பு. பேச்சில் நடனமாடும் ஆங்கிலம். அவளின் போல்ட்நெஸ், துணிச்சல், தைரியம் அவனைக் கவர்ந்தது.

       எப்போதும் ஜீன்ஸ், குர்தா, சில சமயம் லாங் ஸ்கர்ட் என்று படு ஃபேஷனாக உடை அணிவாள். ஸ்லீவ்லெஸ் தான். ஒரு உதட்டுச் சுழிப்போடு டோண்ட் கேர் என்று அவள் போவதை ரசனையோடு பார்ப்பான் சங்கர்.

       அவள்தான் முதலில் தன் காதலைச் சொன்னது.

       கோவை என்றாலும் அவனின் சொந்தங்கள் எல்லாம் கும்பகோணம். குடும்ப சம்பிரதாயங்களை மறக்காத அம்மா. அடக்க ஒடுக்கமாய், பணிவும், மரியாதையுமாய், நல்ல பண்புகள், குணங்களோடு நடக்கும் அவன் குடும்பத்துப் பெண்கள் அவனுக்கு பட்டிக்காடாய் தெரிந்தார்கள். வீட்டுக்கு வந்தவர்களை உபசரிக்கும் பண்பு அவனுக்கு நாகரிகம் அற்றதாய்த் தெரிந்தது. சுடிதார், புடவையை மீறாத முல்லை அவனைக் கவரவில்லை. வணக்கம் சொல்லும் அவளை விட ஹாய் என்று கட்டிப் பிடித்து கை குலுக்கும் மகிமா அவனுக்கு உயர்வாய்த் தெரிந்தாள்.

       விரித்துப் போட்ட தலை, தொடை தெரியும் டிராயர். ஸ்லீவ்லெஸ் என்று எல்லாப் பக்கமும் வரும் அவளின் பழக்கம் சிறிது முகம் சுளிக்க வைத்தது. நாகரீகம் என்றாலும் உடையில் கண்ணியம் வேண்டும் என்று நினைத்தான் சங்கர்.

       “இட்ஸ் மை ரைட்ஸ்– புறங்கையில் ஒதுக்கித் தள்ளி விட்டுப் போனாள்.

       திருமணத்திற்குப் பிறகு அவளின் ஒவ்வொரு செயலும் அவனைக் குறுக வைத்தது. பல் விலக்காமல் காபி குடிப்பாள். சமைக்கப் பிடிக்காது. வெளியில் ஆர்டர் செய்து வரும். அதுவும் முக்கால்வாசி வடநாட்டு ஐட்டங்கள். உனக்கு வேணும்கறதை நீ ஆர்டர் செய் என்றாள்.

       ஒவ்வொருவரையும் கேட்டுக் கேட்டு செய்யும் அம்மாவின் நினைவு வந்தது.

       தனித் தனியாகச் செய்வாள். காலையில் எப்போதும் இரண்டு வெரைட்டி த்துக்கு ஏங்கியது நாக்கு,இருக்கும். அப்பாவுக்கு எப்போதும் இட்லி. அது போக தோசை, பணியாரம், சேவை, ஆப்பம், என்று எதோ ஒன்று இருக்கும். இரவு சப்பாத்தி, அரிசி உப்புமா, பிடி கொழுக்கட்டை, புளி உப்புமா, மசால் தோசை என்று எதோ செய்வாள். சாம்பார் சட்னி இரண்டும் இருக்கும்.




       காரக் குழம்பு, பரங்கிக்காய் பச்சடி, மாங்காய் பச்சடி, கொத்சு, வெஜிடபள் சாம்பார், பாகற்காய் பிட்லை என்று ஏதேதோ வித விதமாகச் செய்வாள். எல்லாவற்றையும் விட தயிர் சாதம் பிசைந்து அதில் மாவடு வைத்துத் தரும் அம்மாவின் கை மணத்துக்கும் அவளின் அன்புக்கும் ஏங்கியது அவனின் உள்ளம்.

       சங்கருக்கு எப்பவும் வீடு சுத்தமாக இருக்க வேண்டும். அந்தந்தப் பொருட்கள் அதனதன் இடத்தில் இருக்க வேண்டும். வீட்டில் எப்பவும் ஒரு தெய்வீக நறுமணம் கமழ வேண்டும் என்பான். பார்த்துப் பார்த்து ஊதுபத்தி, சாம்பிராணிகள் வாங்குவான்.

       தினமும் காலையில் லலிதா, மாலை விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வது அவன் வழக்கம். அப்போது வீடு முழுக்க சாம்பிராணிப் புகை போடுவான். அவனுக்கு நேர் எதிர் மகிமா. கண்டபடி உடைகள், புத்தகங்கள் இறைந்து கிடக்கும். அவன் எடுத்து சுத்தம் செய்த பின் அதை மீண்டும் கலைத்து தூக்கி எரிந்து விடுவாள்.

       மொபைலில் சஹஸ்ரநாமம் ஒலிக்கும்போது அவள் ஆங்கிலச் சேனல் போட்டு பாடலை அலற விடுவாள். சாம்பிராணிப் புகை போடக் கூடாது என்று கண்டித்தாள். அவன் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டான். மெல்ல, மெல்ல அவளை மாற்றி விடலாம் என்று நம்பினான். ஆனால் உன்னுடன் வாழ விருப்பமில்லை என்று அவள் கூறியதில் இடிந்து போய் விட்டான்.

       அதற்குக் காரணம் அவன் அமெரிக்க வாய்ப்பை மறுத்தது.

       “உங்க அம்மா என்ன செத்தா போயிட்டாங்க. அப்படியே போனாலும் அதைத் தடுத்த நிறுத்த முடியுமா? போறவங்க, போகட்டும்னு உன் வாழக்கையை நீ பார்க்கணும். அமெரிக்க வாய்ப்பு கிடைக்க எத்தனை பேர் அலையறாங்க தரியுமா?

       “திரியட்டும். என் அம்மா உயிருக்கு போராடிகிட்டு இருக்கறப்போ நான் வெளிநாடு போக முடியாது.

       “உன்னைத்தான் அவங்க ஒதுக்கிட்டாங்கள்ள, அப்புறம் என்ன அம்மான்னு உருகல்?

       “ஒதுக்கலை. ஒரு மனக் கஷ்டம். அவங்க என் காதலை புரிஞ்சுகிட்டு நம்மை ஏத்துக்குவாங்க.

       “எனக்குத் தேவையில்லை. நான் யாரையும் நம்பி இருக்கலை. நான் அவங்களைப் பார்க்க வருவேன்னு கற்பனை பண்ணாதே. அவங்களும் இங்க வரக் கூடாது.

       “இது என்ன பேச்சு மகிமா? பெத்தவங்க இல்லாம நாம இல்லை.

       ஓ. ஸ்டாப் இட் சங்கர். இந்தப் பழமை எல்லாம் வேண்டாம் எனக்கு. அவங்க கடமை முடிஞ்சுது. இனி அவங்க ஒதுங்கிக்கட்டும்.நம்ம வாழ்க்கையை நாம் பார்க்கணும்

       “தப்பு மகிமா. பிள்ளையா நம்ம கடமைகள் இருக்கு. நாளைக்கு நமக்கு குழந்தைகள் பிறந்தா பாட்டி, தாத்தா, அத்தை, மாமான்னு உறவு வேண்டாமா?

       “முதல்ல குழந்தைகளே வேண்டாம்கறேன். நீ அடுத்த லெவலுக்குப் போறே? என் கேரியருக்கு லைஃப் ஸ்டைலுக்கு குழந்தைகள் பெரும்சுமை. யூ நோ நான் உண்டான கருவை கலைச்சுட்டேன்.

       “ஏய்– பதறினான் சங்கர். “யாரைக் கேட்டு செஞ்சே?

       “யாரைக் கேக்கணும். சுமக்கறது நான். சுமையை சுமக்க விருப்பமில்லை.

       வெலவெலத்துப் போனான் சங்கர். எங்கோ ஒரு குழந்தை கதறுவது போல் பிரமையில் துடித்துப் போனான். ஒரு உயிர்க்கொலை செய்ய இவளுக்கு எப்படி மனம் வந்தது? உள்ளம் துடிக்கவில்லையா? தறிகெட்ட நாகரீகம் மனிதத் தன்மையை அழித்து விட்டதா?

       அவன் நெஞ்சு உருக அமர்ந்திருந்த போது அடுத்த குண்டை வீசினாள் மகிமா.

       “நானும், நீயும், விலகிடலாம்

       “என்ன சொல்றே மகிமா?

       “எஸ். நீ ஒரு மேல் சாவனிஸ்ட். பத்தாம் பசலி. நாகரீகம் தெரியாதவன். உன் கூட வாழ்ந்தா நானும் பஜனை பண்ணிக்கிட்டு திரிய வேண்டும். விலகிடலாம். அவரவர் வழியில் போய்க்கலாம்.

       “டைவர்ஸ் வாங்கப் போறியா?

       “எதுக்கு? நான் என்ன உன்கூட தாலி கட்டிகிட்டா வாழ்ந்தேன்? பிடிச்சா சேர்ந்து வாழலாம். இல்லைன்னா விலகிடலாம். அதானே ஒப்பந்தம்?

       “திருமணம்கிறது ஒப்பந்தமா மகிமா? ஆத்மார்த்தம் இல்லையா?

       “ஹேய் ஸ்டாப் யுவர் டயலாக். நான் உன்கூட வாழ விரும்பினது நீ அமெரிக்கா போவே. அங்க போய் நாம் செட்டில் ஆகிடலாம்னு. நீ மறுத்துட்டே. நீ அம்மா, ஆத்தான்னு இங்கேயே இரு. நான் மேல, மேல பறக்கணும். நீ எனக்குச் சரிப்பட்டு வர மாட்டே. ஸோ, பை, பை

       ரொம்பக் கூலாக உறவை வெட்டி விட்டுக் கிளம்பி விட்டாள்.

       ஒரு விஷயத்தில் அவள் நேர்மையாக இருந்தாள். அவன் தனக்கு அளித்த கிப்ட் எல்லாவற்றையும் எடுத்து அவன் முன் வைத்தாள்.

       . வாடகை வீடுதான். அட்வான்ஸ் அவள்தான் கொடுத்திருந்தாள். அதைக் கேட்டு வாங்கி விட்டாள். எல்லா கணக்குகளையும் பைசா சுத்தமாக செட்டில் செய்து விட்டு. மனதைக் கழுவித் துடைத்து விட்டுக் கிளம்பி விட்டாள். மும்பையில் வேறு கம்பெனி. வேறு வாழ்க்கை.




       சிலர் இப்படித்தான் வெவ்வேறு கூடு அடையும் பறவைகளாக இருக்கிறார்கள். சங்கர் போல் சிலர்தான் காயம்பட்ட மனதை ஆற்றத் தெரியாமல் தவிக்கிறார்கள்.

       சங்கர் தனிமையில் ஒரு வாரம் புழுங்கினான். விஷயம் தெரிந்த அவன் நண்பன் சுவாமினாதனுக்குப் போன் செய்து ஓடி வந்தார். அவரை ஏறெடுத்துப் பார்க்கக் கூசியது. அவரைக் கட்டிக் கொண்டு அழுதான். அவர் அவன் தோளைத் தட்டிக் கொடுத்தார்.

       “இப்போ என்ன ஆச்சுன்னு நீ இவ்வளவு பீஃல் பண்றே? சேர்ந்து வாழ்ந்தீங்க. பிடிக்கலை பிரிஞ்சாச்சு. ஒகே. ஒரு சேப்டர் ஓவர். அடுத்த சேப்டருக்கு வா. அடுத்து அடுத்துன்னு போய்கிட்டே இருக்கணும்.

       “எனக்கு மனசு கொஞ்சம் அமைதி வேணும்பா.

       “லீவ் போட்டுட்டு வா. முல்லை கல்யாணம் வருது. அதில் கலந்துக்கோ. ஜாலியா இரு. மனசு ஆறும். நாலு பேர் மத்தியில் இரு. காலம் எல்லாக் காயங்களையும் ஆற்றக் கூடியது.

       சுவாமிநாதன் உற்சாகமாகப் பேச சங்கர் சிறிது மனம் தேறினான். வீட்டைக் காலி செய்து எல்லாவற்றையும் ஒரு ரூமில் போட்டு விட்டுக் கிளம்பினார்கள்.

                                    *****************




What’s your Reaction?
+1
14
+1
22
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!