Serial Stories வானவில் தேவதை

வானவில் தேவதை -19

19




அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் விழிப்பு வந்து விட்டது சபர்மதிக்கு. எங்கே பூரணசந்திரன் இரவெல்லாம் கனவில் தூங்க விட்டால்தானே அவளை .வெண்பனி சிகரத்தின் ஒரு மூலையில் முளைத்திருந்த அந்த சிவந்த பூவை , போட்டி போட்டு இருவருமாக பறித்துக்கொண்டிருந்த போது , பனிமழை வந்து விட குளிர் தாங்காது நடுங்கியவளுக்காக தன்னையே போர்வையாக்கிக் கொண்டான் பூரணன் .

 

இயற்கையின் ஒவ்வொரு துளியையும்

என்னுள் விதைக்கிறது

அப் பனிமலை பூ

குளிரென்று உன்னை போர்த்திக் கொண்டு

எனக்குள் விதைக்கிறாய் உன்னை

அணு அணுவாக .

இப்பிரபஞ்சம் சுழல்கிறது

என் காலடியில் .

 

இரவுக்கனவு விதைத்த கவிதை துளிகள் இவை. ஒரு நோட்டில் பத்திரப்படுத்திக்கொண்டாள் சபர்மதி .பூரணசந்திரனிடம் காட்ட வேண்டுமே .குளித்து கீழே இறங்கி வந்தவளுக்கு காவேரி வழங்கிய காப்பியில் , காப்பி என்று சொல்லக்கூடிய எந்த அறிகுறியும் இல்லை. தனது சீர்திருத்தத்தை முதலில் முதலில் காவேரியிலிருந்து ஆரம்பிப்போம் என எண்ணியவள் ” காவேரி …காவேரி …” மூன்று முறை உரக்க அழைத்த பின்பும் நிதானமாக வந்து நின்று “என்ன ..” என்றாள் அவள் .

 


சபர்மதி இந்த வீட்டினுள் நுழைந்த இரண்டாவது தினமே அனைத்து வேலையாட்களையும்  அழைத்து சபர்மதி தனது மகள் என்ற விசயத்தை அறிவித்து விட்டிருந்தார் சந்யேந்திரன் .இருந்தும் அலட்சியத்தை பார் ..என எண்ணினாலும் , தான் இது வரை இங்கிருந்த நாட்களில் இந்த வீட்டு வாரிசாக நடந்திருந்தால் அல்லவா வேலையாட்களுக்கு அந்த எண்ணம் வரும் என நினைத்துக்கொண்டவள் அவளை பார்த்து ” பாருங்கள் காவேரி காப்பியில் தூள் இல்லை

சீனி இல்லை , சூடும் இல்லை .இது என்ன இன்ஸ்டென்ட் காபியா …ஏன் பில்டர் காபி போட மாட்டீர்களா? சாதாரணம் போலவே காட்டி கேட்டாள் .

 

” ஆமா வேலை எனக்கு இந்த வீட்டில் குவிந்து கிடக்கிறது .இதில் பில்டரை இறக்கி ,ஏத்தி எங்கே நான் காபி போடுறது ? சரி ..சரி ..குடிச்சிட்டீஙகன்னா டம்ளரை குடுங்க , உள்ளே போட்டது போட்ட மாதிரி கிடக்கு ” அலட்சியம் தெறித்து விழுந்தது குரலில் .

 

அது மட்டுமின்றி குடிக்க முடியாமல் பாதி கையில் அப்படியே வைத்திருந்த காபியை வேறு பிடுங்க முற்பட்டாள் .காபி டம்ளரை இறுக்கி பிடித்தபடி ” உங்கள் சம்பளம் எவ்வளவு காவேரி ” கேட்டாள் சபர்மதி .

 

” அது பெரியம்மாவின் வேலை , உங்களுக்கு ஏன் அதில் கவலை …” மேலும் அலட்சியம் .

 

“இல்லை இந்த மாதத்திலிருத்து உங்களுக்கு சம்பளம் நான்தான் தர போகிறேன் .” கூறிய சபர்மதி இப்போது டம்ளரை அவள் கையில் கொடுத்து “போய் இப்போதே பில்டர் இறக்கி ஒரு நல்ல காபி போட்டு எடுத்துட்டு வாங்க “

 

திருதிருவென முழித்தபடி போய் பத்து நிமிடத்தில் காவேரி போட்டு வந்த காபி கொஞ்சம் பரவாயில்லை.

 

“ம் …இது பரவாயில்லை …ஆனால் நீங்கள் இன்னும் நன்றாக போட படிக்க வேண்டும் .நாளை இன்னும் பெட்டராக எதிர்பார்க்கிறேன் .இப்போது காபியை டிரேயில் வைத்து செட் பண்ணி குடுங்க பார்ப்போம் .நான் அப்பாவுக்கு எடுத்துட்டு போறேன் .” மனமில்லாமல் தலையாட்டியபடி சென்றாள் காவேரி .

 

இப்படி டிரேயில் செட் பண்ணி வைத்தால் , அது ஒரு வேலை…மேலும் கழுவுவதற்கான பாத்திரங்கள் கூடுமே .எனவே டிரே ஜக் எல்லாம் பேக் பண்ணி பரண் மேல் போட்டு விட்டிருந்தாள் .அதனை எடுக்க  வேண்டுமா என்று அலுமினிய ஏணியை  விரித்து வைத்தபடி யோசனையில் இருந்தாள் காவேரி .

 

” யோசிக்காமல் எடுத்து விடுங்க .இனிமே தினமும் வேண்டியிருக்கும் ” என்றபடி உள்ளே வந்தாள் சபர்மதி .

” இந்த ஸ்டோர் ரூம் சாவி எங்கே ? “

 எடுத்துக்கொடுத்தாள்.

 


உள்ளே எட்டி பார்த்தாள் ” ஏன் சாமான்களை இப்படி குப்பையாக போட்டு வைத்திருக்கிறீர்கள் .ஒன்று செய்யுங்கள் .இன்று காலை உணவு முடிந்ததும் இந்த அறையை ஒதுக்கி சாமான்கள் லிஸ்ட் எடுத்து எனக்கு கொடுங்கள் ….அப்புறம் காலையில் என்ன டிபன் பண்ண போறீங்க ? “

 

” அ…அது ..வந்து …சூடா உப்புமா பண்ணலாம்னு ….”

 

” என்னது உப்புமாவா …அது யார் கேட்ட டிபன் …?”

 

” யாரும் கேட்கவில்லை. நானே முடிவு …..” மேலே தொடராமல் நிறுத்தினாள் .

” ம்….அப்போ நீங்களே சாப்பிடுங்க .எங்களுக்கு …பொங்கல் …எனக்கு , ராஜாண்ணனுக்கு ,அனுசூயாவுக்கு …சித்திக்கு , தர்மனண்னனுக்கு சப்பாத்தி …காய்கறி குருமா காரமில்லாமல் பண்ணிடுங்க …அப்பாவுக்கு கேப்பை கூழும் , வெங்காய துவையலும் …ம்..அப்புறம் பொங்கலுக்கு சட்னி சாம்பாரோட , ரெண்டு வடை தட்டிப் போட்டுடுங்க … , வேலை பார்க்கிறவங்க எல்லோரும் உங்க ஆசைப்படி உப்புமா சாப்பிட்டுக்கோங்க …சரியா .இப்போ டிரே செட் பண்ணி கொடுத்தீங்கன்னா அப்பாவுக்கு எல்லோருக்கும் காபி கொண்டு போவேன் ” நீளமாக பேசி முடித்தாள் சபர்மதி .

 

காவேரிக்கு தலை சுற்றியது .கைக்கு வந்ததை இஷ்டத்திற்கு சமையல் என்று சமைத்து வைத்து விட்டு வேலையாட்களாக நினைத்ததை செய்து சாப்பிட்டு வந்த நிலை போய் இப்போது இப்படி ஒரு நிலையா …என்ன செய்வது ,யோசித்தபடி ஏணியில் ஏறுகிறாள் .

 

டிகாசன் , பால் , சர்க்கரை மற்றும் சில பிஸ்கட்டுகளுடன் தந்தைக்காக அவுட்ஹவுஸ் சென்றாள் சபர்மதி .

தந்தையிடம் காவேரி தன்னிடம் இன்று காலை வாங்கிய மண்டகப்படியை விபரமாக ஒப்புவித்துக்கொண்டிருந்த போது , கதவு படாரென தள்ளப்பட்டது .விரிந்த கூந்தலுடன் கண்ணகிக்கு தங்கையோ எனும் தோற்றத்துடன் நின்றிருந்தாள் அம்சவல்லி .” ஏண்டி உனக்கு என்ன திமிர் இருந்தால் காவேரிகிட்ட அதைப்பண்ணு இதைப்பண்ணு , அப்படி , இப்படின்னு  அதிகாரம் பண்ணியிருப்ப  .நான்தான் இனி வீட்டு எஜமானி ன்னு சொன்னியாமே .எப்பொழுதுடி  அந்த உரிமையை உனக்கு பட்டா வச்சேன் .ஒழுங்கா அவகிட்ட போய் எப்பவும் போல சமையல் பண்ணினா போதும்னு சொல்லு போ .இல்லை நடக்கிறதே வேற ” சாமியாடி போல் கத்தினாள்

 

இடையிட்டு பேச முயன்ற சத்யேந்திரனை கையமர்த்திவிட்டு ” தயவுசெய்து கொஞ்சம் அமைதியாக. இருங்கள் பெரியம்மா.நான் ஒன்று சொன்னால் காவேரி ஒன்று புரிந்து கொண்டாள் போல .நீங்கள் முதலில் உட்கார்ந்து ஒரு கப் காபி குடியுங்கள .பிறகு பேசலாம் .”

 

“பிறகு என்னடி பிறகு …இப்பவே பேசு “

” சரி பெரியம்மா பேசுறேன் …நீங்க காபி சாப்பிட்டுட்டே பேசுங்க ” என்றபடி டிகாசனை திறந்து கப்பில் ஊற்றினாள் .மணம் காற்றில் பரவியது .அதனை நுகர்ந்த அம்சவல்லி பேசாமல் காபி குடித்து விட்டு பேசுவோமா என யோசிக்க தொடங்கினாள் .அந்த யோசனையை தனக்கு சாதமாக்கி, காபி கப்பை அவள் கையில் திணித்து அமர வைத்தாள் சபர்மதி .உடன் தட்டில் பிஸ்கட்டுகளையும் வைத்து நீட்டினாள் .

 


நேற்று நடந்த பிரச்சினைகளில் இரவு சரியாக உண்ணவில்லை அம்சவல்லி .சரியான உறக்கமுமில்லை. எனவே காலை எழுந்திரிக்கும் போதே தலைவலி .உடனே காபி குடிக்கும் எண்ணத்துடன் வந்தவளுக்கு , வழக்கமாக தரும் அந்த கழுநீர்தண்ணி கூட தராமல் சபர்மதி

மேல் புகார் பட்டியல் வாசித்தாள் காவேரி .இப்போது அந்த எரிச்சலை முழுவதும் சபர்மதி மீது கொட்டிக்கொண்டிருந்தாள்  .

 

ஆனால் அந்த நல்ல காபியும் , புரோட்டின் பிஸ்கட்டுகளும் அவளை நல்ல மூடுக்கு கொண்டு வந்தன .அவள் குடித்து முடிக்கும் வரை காத்திருந்த சபர்மதி ” காப்பி எப்படி இருக்கிறது பெரியம்மா …”

 

” ம்..ம்..டிகாசன் இன்னும் கொஞ்சம் திக்கா இருந்திருக்கலாம். மற்றபடி நல்லாத்தான் இருக்கு  ஆனால் நீ ஏன் அவளிடம் …”,

 

” இதைத்தான் நான் சொன்னேன் பெரியம்மா , நம் வீட்டில் யார் யாருக்கு என்னென்ன சமைக்க வேண்டுமென்று , அதை தப்பாக புரிந்து கொண்டு  உங்களிடம் ஏதோதோ சொல்லி விட்டார்கள் போல …உங்களுக்கு காலையில் என்ன செய்ய சொல்லட்டும் …சூடாக பூரி சுட சொல்லட்டுமா ?” பணிவாக கேட்டாள் சபர்மதி .

 

முகம் சுளித்தபடி “பூரி எண்ணெய் …நான் டயட்டில் இருக்கிறேன் …” முணுமுணுத்தாள் அம்சவல்லி .

 

” அதனால்தான் சப்பாத்தி போட சொல்லியிருக்கிறேன் .தொட்டுக்க காரமில்லாமல் காய்கறி குருமா ..சரிதானே…இது போன்ற சின்ன சின்ன விசயங்களுக்கெல்லாம் இனி உங்களை தொந்தரவு செய்யாமல் என்னிடம் கேட்டுக்கொள்ள சொல்லியிருக்கிறேன் .அவ்வளவுதான் .நீங்கள் ஏதேதோ நினைத்து மனதை குழப்பிக்கொள்ளாதீர்கள் பெரியம்மா ” பதவிசாக கூறினாள் சபர்மதி .

 

” ம் …சரி…சரி ..இந்த இம்சையெல்லாம் என்னிடம் வராமல் பார்த்துக்கொண்டால் சரி .அப்புறம் நம் வேலையாட்கள் எல்லோரும் நம்மிடம் பத்து வருடங்களுக்கு மேல் வேலை பார்த்து கொண்டிருக்கிறார்கள். ரொம்ப விரட்டிட வேண்டாம் …”

 

” கண்டிப்பாக பெரியம்மா நான் பார்த்துக்கொள்கிறேன். காலை எட்டு முப்பதுக்கெல்லாம் சாப்பிட வந்திடுங்க “,

 

” ம்…ம்…” முணுமுணுத்தபடி கிளம்பினாள் அம்சவல்லி .

 

” அசத்திட்டம்மா ” பாராட்டினார் சத்யேந்திரன் .மற்ற வேலையாட்களையும் கொஞ்சம் கவனிம்மா .”

 

சரிப்பா என கிளம்பியவள் அடுப்பங்கறையை எட்டிப்பார்த்து , காலை சமையலை உறுதி பண்ணி விட்டு, வெளியே வந்து குப்பையாக கிடந்த வீட்டை பார்த்தாள் .நிறைய வேலை இருக்கிறது இங்கே .இந்த சன்னல் திரைகளை முதலில் மாற்ற வேண்டும் .மாட்டி மாமாங்கம் கழிந்திருக்கும் போலவே .இந்த பர்னிச்சர்களை கொஞ்சம் இடம் மாற்றி போடலாம். அதோ அங்கே ஒரு ஊஞ்சல் போடலாம். இங்கே ஒரு பித்தளை பாத்திரத்தில் நீர் நிரப்பி மலர்களை மிதக்க விடலாம் .தனக்குள்ளாக கணக்கு போட்டாள் .

 

தடதடவென யாரோ ஓடி வரும் சத்தம் கேட்டு , சுதாரித்து திரும்பும் முன் பலமாக அவள் மேல் வந்து மோதினான் தர்மன் .

 


” தங்கச்சி …தங்கச்சி …எனக்கு வேண்டாம் காப்பாற்று …”.

 

பின்னாலேயே கையில் ஒரு டம்ளருடன் அனுசூயா .

 

” என்ன அனுசூயா இது …”

” மருந்து சபர்மதி …வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் ….இவர் தினமும். அடம் பிடிக்கிறார் .”

 

” கொடு …மருந்தை வாங்கியவள் ” அண்ணா நான் உங்கள் செல்ல தங்கையில்லையா ….நான் சொன்னால் கேட்பீர்களாம் ..இப்போது இந்த மருந்தை கண்ணை மூடிக்கொண்டு குடித்தால் உங்களை நான் வெளியே கூட்டிப் போவேன் சரியா “

 

கண்கள் விரிய “நிஜம்மாவா ” என்றான் தர்மன் .

 

” நிஜம்ம்ம்மா….” உறுதியளித்தாள்  சபர்மதி .

..

மடக்மடக்கென மருந்தை வாங்கி குடித்தவன் , “ம்…வா…போகலாம் ” என்றான் .

 

“ம்ஹும்…நான் இப்போ வெளியே போகிறேன் .நீங்கள் குளித்து , சாப்பிட்டு தயாராக இருங்கள் .நான் வந்து அழைத்து சொல்கிறேன் ” என்றவள் தர்மனின் குளியல் மற்ற தேவைகளுக்காக அமர்த்ப்பட்டிருந்த

.மணியனை நோக்கி கைகாட்டி அவனிடம் தர்மனை ஒப்படைத்தாள் .

 

ஓரமாக நின்றிருந்த அனுசூயாவை நோக்கி , ” நீயும் குளித்து சாப்பிடு அனுசூயா .காபி குடித்தாயா ?விசாரித்தாள் .

 

” இல்லை இன்னும் அவர் வெறும் வயிற்றுடன் தானே இருக்கிறார் .அவர் குளித்து சாப்பிட்டதும் தான் நானும் ” என்றபடி சென்றாள் .

ஏதோ புரிதலுடன் அவள் முதுகு பார்த்து நின்றாள் சபர்மதி .

 


வீடு சுத்தம் செய்யும் பெண்ணிடம் சில விபரங்கள் சொல்லியபடி இருந்தாலும் , சபர்மதியின் கண்கள் அடிக்கடி கடிகாரத்தையே சுற்றிசுற்றி வந்தன .பன்னிரெண்டு மணிக்கு பூரணனை சென்று பார்க்க  வேண்டுமே .குனிந்து சிறு யோசனையுடன் தன் உடையை பார்த்தாள் .சாதாரண சுடிதார் .சபர்மதிக்கு போடுவதற்கு கூட இல்லாமல் ஒரு நாலு செட் உடைகளை மட்டும் விட்டு விட்டு எல்லாவற்றையும் பெருந்தேவி எடுத்து சென்று விட்டாள் .

இங்கே வரும் முன் தேவையான உடைகள் வாங்கிக்கொள்ளுமாறு தீபக்குமார் ஒரு பிரபல கடையில் காரை நிறுத்தினான் .

 

தன்னை நோக்கி வந்த வாய்ப்புக்கு காரணம் யார் என்னவென்று தெரியாத அந்நிலையில் அதிக உடைகள் வாங்க மனமற்று குறைந்த விலையில் ஆறு செட் சுடிதார்களும் உள்ளாடைகளும் மட்டும் வாங்கியிருந்தாள் .இவ்வளவு நாட்களாக அவற்றையே அணிந்து வந்திருந்தாள் .அந்த உடைகள் இனி …தனக்கு ஒத்து வராது என்று இப்போது தோன்றியது .

 

அப்போது வெளியே கிளம்ப தோதாக கீழே இறங்கி வந்து கொண்டிருந்தாள் அம்சவல்லி .அவளிடம்

 

” வெளியே கிளம்பிட்டீங்களா பெரியம்மா …காலையில் சாப்பிட்டீர்களா ?”

 

” ம்…ம்…என்ன விசயம் ” நேரடியாக அவளை பார்க்காமல் திரும்பி நின்றபடி கேட்டாள் அம்சவல்லி .

 

“எனக்கு கொஞ்சம் நல்ல உடைகள் வாங்க வேண்டும் பெரியம்மா .இங்கே கடைகள் விபரம் எனக்கு தெரியாது.அதுதான் உங்களிடம் கேட்கலாமென ….”

 

பேசிக்கொண்டு இருக்கும் போதே ” சரி சரி பார்க்கிறேன் ” என்றபடி வெளியேறி விட்டாள் அம்சவல்லி .

இது விசயமாக ஏதாவது செய்வார்களா ..இல்லையா ..ஒரு நிமிடம் நினைத்தவள் …சரி செய்யவில்லைறென்றால் பிறகு யோசிக்கலாம் அதை …இப்போது தலைக்கு மேல் வேலை ..

 

காலை உணவுக்கு பின் மதிய  உணவுக்கு மெனு சொல்லிவிட்டு , சத்யேந்திரனின் ஏற்பாட்டின்படி காரில் டிரைவருடன் பூரணசந்திரனை  காண புறப்பட்டாள் .

மிகப்பெரிய பங்களா டைப் வீடு .உள்ளே நுழைகையிலேயே நீரூற்று ஒன்று குளிர்ச்சி பரப்பியபடி இருந்தது .வெண்ணையை பரப்பியது போன்ற மார்போனைட் கற்கள் .செருப்புகளை வாசலில் சுழற்றி விட்டு , கால்களை மென்மையாக தரையில் பதித்து உள்ளே நுழைந்தாள் சபர்மதி .ஏதோ ஓர் அமைதி மனதினுள் குடி கொண்டது .கோவிலுக்குள் நுழைந்தது போன்ற நிறைவு .பாசிட்டிவ் வேவ்ஸ் இந்த வீட்டில் நிறைய இருக்கிறது என் எண்ணிக்கொண்டாள் .அவைதான் மனதுக்கு இத்தனை அமைதியை தருகின்றன என்று எண்ணினாள் .

 

 


உயர்ரக போட்டோ பிரேமிற்குள் சந்தனமாலை அணிந்த ஒருவர் படம் .பூரணனின் தந்தை .இவர் ….இவர் மரணத்திற்கு காரணம் என் தந்தை .

அமைதி தவழ்ந்த மனதை இந்த ஞாபகங்கள் கறைபடுத்தின .கடவுளே இந்த நினைவே எனக்கு இல்லையே …நான் எப்படி பூரணனின் அன்னையை எதிர்கொள்வேன் .அவர் என்னை ஏற்றுக்கொள்வாரா ?….

உள்ளம் நிறைய குழப்பத்தோடு   நின்றபோது ” சபர்மதி ….” எனும் ஆசசர்யகுரல் ….

 

முன்னுச்சியில் கௌரவ நரையுடன் தங்க ப்ரேம் கண்ணாடியுடன்பவளமாலை அணிந்த சிவந்த நிற பெண் .வந்து என்னுள் அடங்கிக்கொள்ளம்மா எனும்படியான ஆதரவான தோற்றம் .பூரணசந்திரனின் அன்னை என அறிமுகப்படுத்த ஆள் தேவையில்லை சபர்மதிக்கு .தானாகவே குவிந்த கரங்களுடன்  அவரை நாடி சென்றவள் பாதம் பணிந்தாள் .

 

எழுப்பி என்னை அணைத்துக்கொள்ள மாட்டாரா என நினைக்கையிலேயே , தோள் பற்றி தூக்கியவர் அவளை அணைத்துக்கொண்டார் .சபர்மதியின் குழப்பங்களுக்கு தேவையே இல்லை என்பதனை தன் செயல்களில் நிரூபித்தபடி

 

” எப்படியம்மா இருக்கிறாய் …நீ இன்று வருவதாக எனக்கு தகவல் வரவில்லையே ?” எனக் கேட்டார் சுந்தரவடிவு .

 

” நன்றாக இருக்கிறேனம்மா …” சொல்லும்போதே என்னை இவருக்கு தெரியுமா ? எனும் எண்ணமும் தோன்றியது .

 

” நான் உனக்கு பாட்டி முறை வருமம்மா ….அம்சவல்லி எனக்கு மகள் முறையாயிற்றே …நீ…பாட்டியென்றே கூப்பிடு “,என்றார் .

 

“சரி பாட்டி …என்னை உங்களுக்கு தெரியுமா …”

 

மெல்ல சிரித்தபடி “தெரியுமாவா …இந்த வீட்டில் இருக்கும் புல் …பூண்டிடம் கூட உன்னை பற்றி சொல்லி வைத்திருக்கிறான் பூரணன் .எனக்கு தெரியாதா ” என்றார் .

 

“ஓ…” சபர்மதியின் கன்னங்கள் சிவந்தன .

 

அவளை சோபாவில் அமர வைத்து கைகளை பற்றியபடி ,அவள் படிப்பு மற்ற விசயங்களை கேட்டார் .சபர்மதியின் இதழ்கள்தான் அவருக்கு பதிலளித்தது .மனம் பூரணனையே சுற்றிக்கொண்டிருந்தது .அவன் எப்போது வரக்கூடும் .சாப்பிட வர இவ்வளவு நேரமா ? இருக்கட்டும் நான் இந்த வீட்டுக்கு வந்ததும் காதைப்பிடித்து திருகி , நேரத்திற்கு உணவுண்ண வர வைக்கிறேன் , இப்படி நினைத்தபடி கற்பனையில் பூரணனின் காதை பற்றிக்கொண்டிருந்தவளை ,தோள் பற்றி சுந்தரவடிவு ஏதோ கேட்டாள் .

 


” எ…என்ன பாட்டி ….என்ன கேட்டீர்கள் ?,”….

 

” சரிதான் போ ….சாப்பிட போகலாமா என மூன்றாவது தடவையாக கேட்டு விட்டேன் .என்னம்மா நினைவில் இருக்கிறாய் ?”

 

சாப்பாடா ….பூரணன் வரும் முன்பா ….” இல்லை பாட்டி சும்மா ஏதோ நினைவு ….சாப்பாடு பூரணன் வந்ததும் சாப்பிடலாமே பாட்டி ‘”

 

ஒரு நிமிடம் மௌனமாக இருந்த சுந்தரவடிவு பின் மெல்ல கேட்டார் .” பூரணனை எப்போது பார்த்தாயம்மா”

 

நேற்று …நேற்றுதானே ….சபர்மதிக்கு என்னவோ தன்  மனங்கவர்ந்தவனை  பார்த்து பல யுகங்கள் ஆனது போலவே இருந்தது .ஆனால் நேற்றுதானே பார்த்தாள்

 

” உன்னிடம் பூரணன் ஒன்றும் சொல்லவில்லையாம்மா “

 

ஏதோ தனக்கு பிடிக்காத செய்தியொன்று வரப்போவதாக சபர்மதிக்கு தோண ஆரம்பித்து விட்டது .

 

‘” இல்லையே பாட்டி ..ஏன் …என்ன விசயம் …” குரல் மெலிதாக நடுங்க தொடங்கியது .

 

” போனில் கூட பேசவில்லையாம்மா “

 

” இல்லையே …என்னாச்சு பாட்டி …”

 

” உங்களுக்குள் ஏதாவது பிரச்சனையா ….?”

 

” ஐயோ பாட்டி .அதெல்லாம் ஒன்றும் இல்லை …என்னவென்று சொல்லுங்களேன் …ப்ளீஸ் “

 

சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தில் மணி பார்த்தவர் ” ஐந்து மணி நேரம் ஆகி விடுமே …முடியுமா ”  என தனக்குள் கேட்டுக்கொண்டார்க.சபர்மதியின் கைகளை பற்றி இழுத்தபடி எழுந்தவர் ” வா ” என்று வாசலுக்கு அழைத்து சென்றார் .வாசலில் நின்று  ” மணி நம்ம பெரிய கார் தயாராக இருக்கிறதா ” என சத்தம் கொடுத்தார் .

 

” எப்பவும் தயாராக இருக்கனும்னுதானே ஐயா சொல்வார் .தயாராக இருக்கும்மா ” டிரைவர் பதிலளித்தான் .

 


” காரை எடுத்துட்டு வா ” சொல்லிவிட்டு சபர்மதியின் பக்கம் திரும்பி ” உன் கார் வேண்டாம்மா .அது சிறியது .நம் வண்டியில் போய்விடு “என்றார் .

 

“எங்கே பாட்டி “

 

“பூரணன் அவனோட வெளிநாட்டு பயணத்தை நேற்றே தொடங்கி விட்டான் மதிம்மா .அடுத்த வாரமாக இருந்த அவனது பயணம் பத்து நாட்களுக்கு முன்பே இன்று மாற்றப்பட்டுவிட்டது .நேற்று இரவே கோயமுத்தூர் புறப்பட்டு சென்று விட்டான் .இன்று இரவு ஏழு மணிக்கு அவனுக்கு கோவையில் மும்பைக்கு விமானம் .அங்கிருந்து சிங்கப்பூர் …

என்று அவனது பயணம் தொடங்கிவிட்டது .நீ இப்போது கிளம்பினால் அவனை கோவை விமானநிலையத்தில் பிடித்து விடலாமென நினைக்கிறேன் .போய் நேரில் பேசி விடை கொடுத்து வாம்மா …கிளம்பு “

 

அதிர்ந்து நின்ற சபர்மதியை தள்ளி

காரில் அமர வைத்தவர் “மனம் விட்டு பேசி விட்டால் எந்தப்பிரச்சினையும் தீர்க்க கூடியதுதான்மா .பூரணன் இப்போது சென்றால் திரும்பி வர ஒரு வருடமாகும் .எனவே நீங்கள் இருவரும் பேசியே ஆகவேண்டும்மா “

டிரைவரிடம் திரும்பி ” ஜாக்கிரதை மணி …பத்திரமாக அழைத்து சென்றுவிட்டு வா ” என்று அனுப்பி வைத்தார் .

 

அப்படியானால்  பூரணன் அன்று ….அவளை மணக்க கேட்ட அன்று இந்த பயணதிட்ட மாறுதல் தெரிந்துதான் வந்தானா ? அதனால்தான் அன்று அவளிடம் நின்று பேச முடியாத அவசரமா ? தன் தந்தையிடம் சம்மதம் பெற்று தன்னை திருமண நிச்சயம் செய்துகொள்ள எண்ணியிருக்கலாமோ ? ….முருகா …ஏதேதோ பேசி அன்று அவனை விரட்டி விட்டேனே …இனி என்ன செய்ய மனதுக்குள்ளேயே துடித்தாள் 

மனம் வெறுத்து சென்றுவிட்டானோ …அதனால்தான் தந்தையிடம் கூட இது விபரம் ஒன்றும் தெரிவிக்கவில்லையா? என்னைக்காப்பாற்றிய அன்று கூட என் பக்கம் திரும்பியும் பார்ககவில்லையே ….ஒருவேளை என்னை வெறுத்து விட்டானோ ?…

இல்லை என்னுடைய  பூரணன் என்னை  அப்படி விட்டுவிட மாட்டான் .

 

அன்று அவ்வளவு பேசிய பிறகும் என்னுடைய  நடமாட்டங்களை கவனித்து , அந்த ரவுடிகளிடமிருந்து காப்பாற்ற ஓடி வந்தானே …ஏதோ சிறு மனக்குறை .அதனை இதோ இப்போது நான் நேரில் சென்று பேசி சரி செய்து விடுவேன் .சந்தோசமாக அவரை வழியனுப்பி வைப்பேன் .இந்த எண்ணத்துடன் கோவைக்குள் கார் நுழைந்ததும் ஒரு கடையில் நிறுத்தி பூரணனுக்காக ஒரு பொக்கே கூட வாங்கிக்கொண்டாள் சபர்மதி .

 

ஆனால் பூரணன் ….

 


What’s your Reaction?
+1
24
+1
29
+1
0
+1
1
+1
1
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!