Serial Stories முள்ளில் ரோஜா

முள்ளில் ரோஜா- 15

15

ஐன்னல் கதவு கண்ணாடி மேல்
சிதறும் மழைத்துளிகளுக்குள்  உனை வரைந்தபடி
காத்துக்கொண்டிருக்கிறேன் ,
இன்னமும் வீடு வரவில்லை நீ ,
காலை போட்ட கோலத்தின்
வண்ணம் மட்டும் வாசலில் ,
உன் காலணிக்கான இடத்தில்
கட்டெறும்புகள் சில …
என் கருவிழிகள் சிதறி
ஒளிந்து கொள்கின்றன
நட்சத்திரங்களின் பின்னே ,
சாரல்கள் வீசிய கூதலில்
இதழ் நடுங்க காத்திருக்கிறேன் ,
முன்பொருமுறை தவற விட்ட
அத்தருணத்திற்காக ,
விரைந்து வா
ஒருவரையொருவர்
போர்த்திக்கொள்வோம் .




அன்றே மாலினி சொன்னபடி கேட்டிருந்தால் இன்று இந்த நிலைமை வந்திருக்காதோ …? எதைப் பற்றியும் கவலை படாமல் எனக்கு என்ன பதிலென்று போய் நின்றிருக்க வேண்டுமோ ….? சாம்பவியின் பார்வை மாலினியிடம் பாய்ந்த்து .அவளும் சொன்னேனே …கேட்டாயா ..என்பது போல் பாரத்துக் கொண்டிருந்தாள் .

ரிஷிதரனின் வீட்டிலிருந்து செய்தி வருமென்று காத்திருந்து பாரத்துவிட்டு , வராமல் போகவே மாணிக்கவாசகம் , மரகதவல்லியின் அண்ணன் சடகோபனை உடன் அழைத்துக்கொண்டு அவர்கள் வீட்டற்கு போனார் .இவர்கள் போன நேரம் அங்கு மஞ்சுளா மட்டுமே இருந்தாள் .இன்னமும் கோபம் சிறிதும் குறையாமல் இருந்தாள் .

அதனால் ஏதேதோ நக்கலாகவும் , கிண்டலாகவும் இவர்களை பேச , பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு சடகோபனும் பதிலுக்கு பேச ,…

” நீங்களே கூப்பிட்டாலும் இனி எங்கள் வீட்டு பெண்ணை நாங்கள் அனுப்ப மாட்டோம் …” என சடகோபன் கூறிவிட்டு வந்துவிட்டார் .

” என்னண்ணா இப்படி செய்துவிட்டு வந்துவிட்டீர்கள் …” மரகதம் அழுதாள் .

” உனக்கு அந்த பொம்பளை என்னவெல்லாம் பேசியது என்று தெரியாது அம்மா .நமது குடும்பத்தையே …குடும்பத்து பெண்களெல்லாருமே …கே..கேவலமானவர்கள் என்று பேசும் போது …நான் எப்படியம்மா பேசாமல் இருக்க முடியும் …? “

” நாம் பெண்ணை பெற்றவர்கள் அண்ணா .பொறுத்துத்தான் போக வேண்டும் .யோசிக்காமல் அன்று நான் பேசிய பேச்சிற்கு இன்று நம் வீட்டு பெண் நெருப்பின் மேல் நிற்கிறாள் .திரும்ப திரும்ப அதே தப்பை செய்யலாமா ..அண்ணா …”

” நான் உங்களிடம் அப்போதே சொன்னேன் .இந்த சம்பந்தம் வேண்டாமென்று , யாராவது கேட்டீர்களா ….? ஏதோ வானத்து தேவர்கள் உங்கள் வீட்டிற்கு வந்து சம்பந்தம் பேச வந்த்து போல் குதுத்துக் கொண்டுபோய் நம் தங்கத்தை அவர்களுக்கு கொடுத்தீர்கள் .அவர்கள் அதன் மதிப்பு தெரியாமல் காலில் போட்டு மிதிக்கின்றனர் …'”

” நடந்து முடிந்த்தையே பேசி என்ன பயன் மாமா …? இப்போது பாப்புவை திரும்ப அங்கே அனுப்புவது என்பதை பற்றித்தான் நாம் பேச வேண்டும் …” சந்திரன் எரிச்சலுடன் கூறினான் .

” என்ன திரும்ப உன் தங்கையை அங்கே அனுப்ப போகிறாயா ..? அவளை உயிரோடு பார்க்கும் எண்ணமில்லையா உனக்கு …? “

” என்னண்ணா சொல்கிறீரகள்…? ” மரகதவல்லி .




” ஆமாம்மா …அங்கே அந்த பையன் நம் பெண்ணை விவாகரத்து பண்ண போகிறானாம் .நாளைக்கு பேப்பர்ஸெல்லாம் நமக்கு அனுப்பி வைப்பார்களாம .நாம் கையெழுத்து போட்டு அனுப்ப ஙேண்டுமாம் ….அந்த அம்மா சொல்கிறாள் ….”

” என்னங்க அண்ணன் சொல்வது உண்மையா ..? ” மரகதவல்லி பதறியபடி கேட்க , மாணிக்கவாசகம் பேச முடியாமல் தலையசைத்தார் .

” நான் …அவரிடம் …சஹானாவிடம் பேசுகிறேன் …” சாம்பவி நடுங்கும் கரங்களுடன் தனது போனை எடுத்தாள் .

அவள் கைகளை பற்றி தடுத்த சடகோபன் ” இரும்மா நான் இன்னமும் முடிக்கவில்லை .டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போடவும் கல்யாணத்தின் போது அவர்கள் போட்ட நகைகளையெல்லாம் திருப்பி அனுப்பி விட வேண்டுமாம் .குறிப்பாக தாலியை சுழற்றி கொடுத்து விட வேண்டுமாம் . கொஞ்சம் கூட கூசாமல் பேசுகிறது அந்த பொம்பளை ….” துயரமான குரலில் சடகோபன் கூற ” ஆ ” வென அதிர்ந்த்து வீடு .

கை கால்களெல்லாம் பதட்டத்தில் நடுங்க தளர்ந்து சோபாவில் சாய்ந்தாள் சாம்பவி .அவள் எதிரே போய் நின்ற சடகோபன் ” இதோ உங்களை போல் நானும் அப்போது அதிர்ந்து போய்தான் நின்றேன் .ஆனால் இப்போது அவள் சொன்னதை செய்தால்தான் என்ன …என்று தோன்றுகிறது …அவர்கள் நினைப்பது போல் அவர்கள் பணத்திற்கு வாலாட்டியபடி நாம் அங்கே வரவில்லை என்று நிரூபிப்பது போல் …அவர்களை விட நம்மிடம் பணம் கொஞ்சம் குறைவாக இருக்கிறது என்பதிற்காக நாம் சூடு , சொரணையற்றவர்கள் அல்ல என்பதனை நிரூபிப்பது போல் …அவர்கள் கேட்டபடி அந்த தாலியை கழட்டி போய் அவர்கள் மூஞ்சியிலேயே வீசினால்தான் என்ன என தோன்றுகிறது ….” என்று சொல்லியபடியே சட்டென குனிந்து சாம்பவியின் கழுத்தில் கிடந்த தாலி செயினை சுழற்றிவிட்டார் .

சுழற்றிய வேகத்தில் ” இதை கொண்டு போய் அவர்கள் முகத்தில் விட்டெறிந்து விட்டு வருகிறேன் ….” என கத்தியபடி ஓடிச்சென்று வாசலில் இருந்த காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டு போய்விட்டார் .

” அடப்பாவி …” என மரகதவல்லி கத்த , ” மாமா நில்லுங்க …” என சந்திரன் அவர் பின்னால் ஓடினான் .

” சந்திரா …இங்கே வாடா …” என்ற தாயின் கதறலில் வாசல் வரை சென்றவன் மீண்டும் உள்ளே வர , அங்கே சாம்பவி வேரோடு பிடுங்கி எறுந்த்தை போல் தரையில் மயங்கி கிடந்தாள் .

மாலினி மாறி …மாறி அவள் முகத்தில் அடித்த தண்ணீருக்கும் , அம்மாடி …பாப்பு , எந்திரிடா …என்னைப் பாருடா ..என்ற தாய் , தந்தையின் கதறலுக்கும் அசையாமல் அப்படியே கிடந்தாள் .பயந்து போன சந்திரன் தங்கையை அப்படியே அள்ளி காரில் போட்டுக்கொண்டு , எல்லோருமாக ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர் .

அங்கே வெறும் அதிர்ச்சி மயக்கம்தான் .இன்னும் சிறிது நேரத்தில் கண்விழித்து விடுவாள் என சொல்லி ட்ரிப்ஸ் ஏற்ற , அவள் கண் திறந்து பார்க்கும் வரை இவர்கள் யாருக்கும் மனது ஒரு நிலையிலில்லாது போனது .சாம்பவி கண் விழித்ததும் தனது வெற்று கழுத்தை பார்த்து அழ ஆரம்பிக்க  நடந்து முடிந்து விட்ட அனர்த்தங்கள் நினைவு வர , என்ன செய்யதென்று தெரியாமல் விழித்தபடி இருந்தனர் அனைவரும் .

இரவு திரும்பி வந்த சடகோபன் அவர்கள் வீட்டில் சந்தோசமாக தாலியை வாங்கி வைத்துக்கொண்டு தன்னை திட்டி விரட்டி விட்டனர் என்ற தகவலோடு வந்தார் . இவ்வளவு மோசமானவர்களுக்காக நீ ஏனம்மா அழ வேண்டும் என சாம்பவியை கோபித்தார் .

” நீங்கள் அன்று போல் இப்போதும் அவருடைய அம்மாவை பார்த்துதானே பேசினீர்கள் …? ” சாம்பவி அழுதபடி கேட்டாள் .




” இல்லைம்மா …அங்கே உன் மாமனார் இருந்தார் உன் தோழி இருந்தாள் .உன் புருசன் இருந்தார் .தாலியை உன் மாமனார் கையில்தான் கொடுத்தேன் .உன் புருசன்தான் என்னை சட்டையை படித்து இழுத்து வெளியே போ என விரட்டினார் …உன் தோழி முகத்தை திருப்பிக் கொண்டு உள்ளே போய்விட்டாள் …”

இனி பேச ஒன்றுமில்லை என சாம்பவி மேலும் அழுதாள் .பிறகு ” ஆனாலும் என் தாலியை என்னிடமிருந்து சுழட்டியதற்கு நான் உங்களை மன்னிக்கவே மாட்டேன் மாமா …” என்றாள் .

பிறகு சாம்பவியின் கர்ப்ப விபரம் தெரியவந்த போது மீண்டும் அவர்கள் வீட்டில் பேசப்போவதாக மாணிக்கவாசகமும் , மரகதவல்லியும் கிளம்பினர் .அவர்களை தடுத்த சாம்பவி தான் முதலில் ரிஷிதரனிடம் போனில் பேசிவிடுவதாக கூறி அவனுக்கு போன் செய்தாள் .

இந்த குழந்தை விசயம் அவனிடம் தானே  சொல்ல வேண்டும் என்ற மகிழ்ச்சி ஒரு புறம் , பெரியவர்களாக பேசினால் இந்த பிரச்சினை மேலும் சிக்கலாகிக் கொண்டே செல்கிறதே என்ற கவலை ஒரு புறமுமாக சாம்பவி போன் செய்த எண் தற்போது உபயோகத்தில் இல்லை என்ற பதில் வந்த்து ்மீண்டும் மீண்டும் முயன்றுவிட்டு அவன் நம்பரை மாற்றியிருப்பான் என்ற சடகோபனின் குற்றசாட்டை வேறு வழியில்லாமல் நம்பியபடி படுக்கையில் சோர்ந்து சரிந்துவிட்டாள் .

அவள் மலை போல் நம்பிக்கொண்டிருந்த அவள் கணவனே அவளை ஒதுக்கிய பிறகு , உயிர்தோழியாகவே பழகியிருந்தாலும் அவளிடம்  போய் நிற்கவோ ..ஏன் பேசவோ கூட அவள் தன்மானம் இடம் தரவில்லை .பிறகு ரிஷிதரன் அமெரிக்கா போய்விட்டதாகவும் , அங்கே ஏதோ புது தொழில் ஆரம்பித்து செட்டிலாகி விட்டதாகவும் தகவல் கிடைத்தது .

இதோ இப்போது வரை குழந்தை சாஹித்யாவின் இனிமையான வரவு தவிர வேறு எந்த இனிமையும் இல்லாமல் வெறுமையாகவே சாம்பவியின் வாழ்க்கை போய்கொண்டிருக்கிறது .

தனது முந்தைய நீண்ட வாழ்க்கை போராட்டங்களில் இருந்து மீண்டு வந்தாள் சாம்பவி .கலங்கி கனத்த இமைகளை மெல்ல திறந்த போது அருள் வடிவமாக புன்னகைத்தபடி எதிரே தெரிந்தார் சாய்பாபா .

திரும்பி பார்த்தாள் .சஹானாவை காணவில்லை
மன அமைதிக்காக கோவிலுக்கு வந்தாள் அங்கே பிரார்த்தனை மண்டபத்தில் கலக்கமான முகத்துடன் அமர்ந்திருந்த சஹானாவை கண்டதும் , சாம்பவியின் இதயம் சுழன்று பின்னால் போய்விட்டது .இடர்கள் நிறைந்த தனது வாழ்க்கை பாதையில் மீண்டும் ஒரு முறை பயணித்து திரும்பியிருந்த சாம்பவி , தனது மடியில் அமர்ந்திருந்த சஹானாவை தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள் .

வெற்று பாதங்களுடன் மெல்ல கோவிலை சுற்றி நடந்து கொண்டிருந்த சஹானாவை பார்த்தாள் .இது மன அமைதிக்கென சாம்பவி அவளுக்கு கொடுத்த ஐடியாதான் .முதலில் கோவிலுக்கு வருவதிலெல்லாம் தனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லையென மறுத்தவள் , சாம்பவியின் வற்புறுத்தலுக்காக இங்கே வந்த பின்பு இந்த கோவில் பிடித்து போய் அடிக்கடி வர ஆரம்பித்தாள் .




உனக்கு ஏதாவது மன சஞ்சலம் இருந்தால் இந்த கோவிலுக்கு வந்து வெறும் கால்களுடன் கோவிலை சுற்றி நடந்து பார் .உன்னுடைய பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவடும் …இல்லை தீர்வதற்கான வழி கிடைத்துவிடும் என சாம்பவிதான் சொல்லிக் கொடுத்திருந்தாள் .செய்து பார்த்து விட்டு அதனை ஒத்துக் கொண்டாள் சஹானா .

தோழியின் மிகவும் கலங்கிய முகம் சாம்பவியை பாதிக்க , அவளெதிரில் போய் நின்றாள் .

” ஹாய் சஹி …என்னம்மா என்ன பிரச்சினை …? ரொம்ப கஷ்டத்தில் இருப்பது போல் தெரிகிறாயே ….? “

குனிந்து தரையை பார்த்தபடி யோசனையோடு நடந்து கொண்டிருந்த சாஹித்யா திடுமென தன் முன் வந்து நின்று தன்னைக் கேள்விகள் கேட்கும் சாம்பவியை கோபத்துடன் பார்த்தாள் .

” நான் பிரச்சனையில் இருக்கறேன்னு உங்கிட்ட சொன்னேனா …? போடி வேலையை பார்தநுக்கிட்டு ….” கத்திவிட்டு நடக்க ஆரம்பித்தாள் .

” அப்புறம் ஏன் உன் முகம் இப்படி இருக்கு , சுட்ட கத்தரிக்காய் மாதிரி …..” வேகமாக கேட்டுவிட்டு உதடு கடித்தாள் சாம்பவி .

வேகமாக நிமிர்ந்து பார்த்த சஹானாவின் பார்வையில் அடிபட்ட பாவம் இருந்த்து .

” என்னடி கொஞ்சம் உசந்துட்டோம்னு ஆடுகிறாயா …? வேண்டாம் ..போயிடு …”

அவளது கத்தலை  அலட்சியப்படுத்தி அவளுடன் சேர்ந்து தானும் நடக்க ஆரம்பித்தாள் .” எனக்கும் இன்று மனது ரொம்ப டிஸ்டர்ப்பா இருந்த்துடி .அதுதான் நானும் கோவிலுக்கு வந்தேன் .ஏதேதோ பழைய நினைவுகள் …”

ஒரு நிமிடம் தயங்கி பின் மீண்டும் நடக்க ஆரம்பித்தாள் சஹானா .

” அந்த மலேசியாக்காரங்க வீட்டை யாரோ வாங்கியிருக்காங்க போல .புதுப்பிக்க போறாங்களாம் .எனக்கு தகவல் வந்த்து …”

……

” உனக்கு எதுவும் தெரியுமா …?? “

……..

” டைல்ஸ் வாங்க உன் ஷோரூமிற்கு அனுப்பி வைக்கவா …? “




” ஏய் …என்னடி உன் தொழில் திறமையை என்னிடம் காட்டுகிறாயா …? நீ ஆள் பிடித்து கொடுத்து , அதில் நான் என் தொழிலை வளர்க்க வேண்டுமா …? … “

” இல்லைப்பா அந்த கான்ட்ராக்டர் செங்கல் வாங்க என் கம்பெனிக்கு வந்தார் ்டைல்ஸ் வாங்கனும்னு சொன்னார் .அதுதான் உன்னிடம் அனுப்பவான்னு கேட்டேன் .உன் ஷோரூமிற்கு இந்த ஆர்டர் கிடைத்தால் ….”

” கிடைத்தால் ….நான் அதை மூட வேண்டியதிருக்காது என சொல்லிக் காட்டுகிறாயா …? அப்படி நீ அனுப்பிய ஆளை வைத்து என் தொழிலை நான் முன்னேற்றி காட்டியாக வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது .உனது கவனத்திற்கு ஒன்று சொல்கிறேன் கேட்டுக்கொள் .இந்த தொழிலை தவிர இன்னமும் பல தொழில்கள் எங்களுக்கு உண்டு .உன்னைப் போல் ஒன்றை மட்டுமே வைத்து தடுமாறி ஓட்டிக்கொண்டிருக்கவில்லை .ஒத்து வந்தால் தொடர்ந்து நடத்துவேன் .இல்லையென்றால் தூக்கி வீசிவிட்டு போய் கொண்டே இருப்பேன். …..”

தொடர்ந்து பேசிக்கொண்டே போன சஹானா , பதிலின்றி சாம்பவி தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து புருவம் சுளித்து நிறுத்தினாள் .

” அழகாக தமிழ் பேசுகிறாயடி .இங்கே வந்து இரண்டு வருடத்தில் தொழிலை படித்திருக்கிறாயோ இல்லையோ தமிழை நன்றாக படித்திருக்கிறாய் .சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்ணில்லையா எங்கள் மதுரை மண் . இந்த தண்ணீர் குடிப்பவர்கள் எல்லோருக்கும் இது போலத்தான் தமிழ் அருவியாக கொட்டுகிறது ….” தோழியின் கோபத்தை போக்க கிண்டலாக கூறுவது போல் பொருள் பொதித்து கூறினாள் சாம்பவி .

” அடியேய் …உன்னை ….” இரண்டு கைகளையும் விரித்து சாம்பவியின் கழுத்தை நெரிப்பது போல் அவளருகில் போனாள் சஹானா .

” அத்தை ….” என்ற அழைப்புடன் கையை தூக்கினாள் சாம்பவியிடமிருந்த குழந்தை சாஹித்யா .

விரிந்த கைகளை அப்படியே வைத்தபடி உறைந்து நின்றாள் சஹானா .

” சந்தேகப்படாதே சஹி .உன்னைத்தான் கூப்பிடுகறாள் .நீதானே அவளது அத்தை .நான் போட்டோவில் காட்டி சொல்லிக் கொடுத்துதான் வளர்த்திருக்கிறேன் .இவ்வளவு நேரம் கொஞ்சம் தள்ளி நின்று பேசிக்கொண்டிருந்தாய் .பாவம் குழந்தை அடையாளம் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள் .இப்போது நீ பாசமாக என்னை அணைத்துக் கொள்ள பக்கத்தில் வந்தாய் பார் .உன் மருமகளுக்கு உன்னை அடையாளம் தெரிந்து விட்டது ….”

சஹானா அவசரமாக தனது கைகளை இறக்கிக் கொண்டாள் .இவளை பாசமாக அணைத்துக் கொள்ள கையை நீட்டினேனாம் ….சாம்பவியின் கிண்டல் பேச்சில் வந்த புன்னகையை கஷ்்டப்பட்டு அடக்கியவளின. பார்வை தன்னையறியாமல் குழந்தையின் மீது பாய்ந்த்து .

சாஹித்யா வேகமாக அத்தையின் தோள்களில் தொற்றிக் கொள்ளும் ஆவலில் இருந்தாள் .




” பாப்பாவின் பெயர் தெரியுமா …? சாஹித்யா .உன்னோட …அத்தையோட பெயர் வர்ற மாதிரி இருக்கனும்னுதான் இந்த பெயரை செலக்ட் செய்து வைத்தேன் .இவளை நன்றாக பார் சஹி. ஜாடை உன்னைப் போலத்தான் இருக்கிறாள் ….அத்தையிடம் போகிறாயா சாஹி …” குழந்தையை கொஞ்சியபடி சஹானா பக்கம் நீட்டினாள் சாம்பவி .

” அத்தையா …உன் அண்ணனை நான் திருமணம் செய்திருந்தால் உன் குழந்தைக்கு நான் அத்தை ஆகியிருக்கலாம் .இப்போது …கழுத்தில் தாலி இல்லாமல் நிற்கும் ஒருத்தியின் கையில் இருக்கும் குழந்தைக்கு நான் எப்படி அத்தையாக முடியும் ….? ” சஹானா குரூரமாக கேட்டாள் .

சாம்பவி மனதில் காயம் பட்டு துடித்தாள் .

” இந்த குழந்தைக்கு அப்பா யார் சாம்பவி …? ” காயத்தில் கத்தியை சொருகினாள் .

” போதும் …நிறுத்து .” கண்கள் சிவக்க உடல் நடுங்க பதறினாள் சாம்பவி .

அதிகமாகத்தான் பேசிவிட்டோமோ ….? உதடு கடித்து நிறுத்தினாள் .

” போ …போய்விடு ….” தலையை குனிந்தபடி அடிக்குரலில் கத்தினாள் .

” குழந்தையை காட்டி என்னை மயக்கலாம்னு பார்த்தாயா …? அது நடக்காது .நீ எப்போது குழந்தையோடு வந்தாலும் நான் இதைத்தான் கேட்பேன் .இதோட அப்பா …யாரென்று ….? “

” வாயை மூடு ….என் முன்னால் நிற்காதே .நான் ஏதாவது பேசிவிடுவேன்.பிறகு காலம் முழுவதும் அதை நினைத்து நாம் வருந்த வேண்டியதிருக்கும் ….”

” அப்படியா …?அப்போது இனி இது போன்ற மட்டமான ஐடியாவுடன் என் வீட்டினர் யார் முன்னாலும் பிள்ளையோடு வந்து நிற்க மாட்டாயே ….? “

சாம்பவி புரியாமல் பார்க்க ….

” ரிஷி வருகிறான் .இதே போன்ற எண்ணம் அப்போதும் உனக்கு இருந்தால் …சாரி இதே கேள்வியை அவனும் கேட்டால் ….ஐ ஆம் நாட் பாதர் அபவுட் இட் ….” அலட்சியமாக தோளை குலுக்கினாள் .

” நிச்சயம் வர மாட்டேன் .துஷ்டர்களுக்கிடையே தூய்மையான என் குழந்தையை கொண்டு வரக் கூட மாட்டேன் …” உறுதியாக சொல்லிவிட்டு விலகி நடந்தாள் சாம்பவி .

இவ்வளவு பேசியிருக்கிறேன் .கொஞ்சமாவது குரலில் அழுகை வருகிறதா  .இப்படி கலங்காமல் விரைத்துக் கொண்டு போகிறாளே ….எடுத்ததற்கெல்லாம் கண் கலங்கி அழுத பழைய சாம்பவி எங்கே போனாள் …? பொறாமையோடு அவளை பார்த்தபடி போய் காரை எடுத்தாள் சஹானா .

டிராபிக்கில் காரை கொஞ்சம் ஸ்லோ பண்ணிய போது , அவளருகில் ஸ்கூட்டியில் வந்த சாம்பவி ” அந்த ஷோரூமை உன்னிடமிருந்து நான் பிடுங்குகிறேன் பார் ….” சவால் விடுவது போல் செல்லிவிட்டு டிராபிக்கில் நுழைந்து முன்னால் போய்விட்டாள்.

அவமானமும் கோபமுமாக நின்றாள் சஹானா .




What’s your Reaction?
+1
27
+1
30
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!