Serial Stories முள்ளில் ரோஜா

முள்ளில் ரோஜா- 14

14

உன் நினைவே  கூடாது என்றிருந்த
இறுக்க பொழுதில்தான்
அடித்த காற்றில் வீழ்ந்த பவளமல்லிகளில் ஒன்று
என் மடியமர்ந்தது ,
நீண்டு கொண்டே சென்றது நினைவுகள்
பட்டத்தின் வாலென ,
கசகசத்த கழுத்தின் பின்புறம்
காற்றினால் நிரம்பியது
கந்தர்வனின் கையசைவென ,
காய்ந்து விட்ட வியர்வை ஓடங்கள்
நிரம்பிச் செல்கின்றன
கட்டற்ற அந்த கணங்களால் ,
விருட்டென்று திரும்பி நின்று
காத்திருக்க தொடங்கினேன் ,
ஈரமண் புதையும் காலடி ஓசைக்காய் .




சூடான காபி டம்ளர் உருண்டு வந்து சாம்பவியின் கால்களில் மோதி நின்றது .இரண்டொரு சுடு துளிகள் கால் கட்டைவிரலில் தெறித்தன .சாம்பவி  கோபமாக நிமிர்ந்து மரகதவல்லியை பார்த்தாள் .

” அவள் கையால் போட்ட காபிதானே இது …? இதை எப்படி நான் குடிப்பேன் …? ” என்றாள் .

மரகதவல்லி இப்படித்தான் இருந்தாள் .முழு மூச்சாக மாலினியை எதிர்த்தாள் .அவளை வீட்டினுள் விடுவதில்லை என்பதில் உறுதியாக இருந்தாள் .அநாதை என்றாள் .ஆள் மயக்கி என்றாள் .வக்கற்றவள் என்றாள் ….தெருவோடு போக வேண்டியவளுக்கு என் வீட்டினுள் என்ன வேலையென்றாள் .

இந்த கேள்வியில் மரகதவல்லி அப்படியே மஞ்சுளாவை நினைவுக்கு கொண்டுவந்தாள் .இதே எண்ணம்தான் தன் மாமியாருக்கும் இருந்நிருக்குமோ …? என எண்ணினாள் சாம்பவி .இப்போது தாயின் இந்த வேகத்தில் அவளுக்கு மிகுந்த ஆயாசம் வந்த்து .

” என்னம்மா இது …? எனக்கு வேறு ஒரு வேலை இருந்ததால் அவளை காபி கலக்க சொன்னேன் .அதற்கு நீங்கள் இவ்வளவு பிடிவாதம் பிடித்தால் எப்படி …? “

” உன்னால் முடியவில்லையென்றால் விட்டுவிடு…கண்ட நாய் கையால் காபி வாங்கி குடித்து உயிர் வாழ வேண்டிய அவசியம் எனக்கில்லை .அதற்கு நான் செத்தே போவேன் …”

சாம்பவி மாலினியை திரும்பி பார்த்தாள் .அவள் காபி டம்ளரை எடுத்துவிட்டு சிந்திய காபியை துடைத்துக் கொண்டிருந்தாள் .எப்படி இவளால் இவ்வளவு அமைதியாக இருக்க முடிகிறது .ஆச்சரியமாக அவளை பார்த்தாள் சாம்பவி .அவள் நிமிர்ந்து சாம்பவியை பார்த்து புன்னகைத்து விட்டு சென்றாள் .

சாம்பவி ஒரு வாரமாக போராடி தந்தையையும் , அண்ணனையும் இன்று காலையில்தான் கம்பெனியை திறக்க வைத்து வேலைக்கு அனுப்பியிருந்தாள் .இருவருரையும் ஓரிரு வார்த்தைகள் பேசவும் வைத்திருந்தாள் .அவர்கள் திரும்பி வரும் நேரமாகிவிட்டது .அதற்குள் மரகதவல்லியையும் , மாலினியையும் கொஞ்சமாவது சரி பண்ண வேண்டுமென்று நினைத்தாள் .

ஏனென்றால் அம்மா , அப்பாவின் கோபத்திற்கு பயந்து மாலினியின் பக்கமே சந்திரன் திரும்பாமல் இருந்தாலும் , தாய் தன் மனைவியை நடத்தும் விதம் குறித்து அவன் மிகவும் வருந்துவதை சாம்பவியால் உணர முடிந்த்து .இந்த கவலையினாலேயே அவன் சரியாக சாப்பிடுவது கூட இல்லை .இன்று அண்ணன் வரும் முன்பு அம்மாவும் , மாலினியும் ஓரளவு சரியாகிவிட்டார்கள் என அவனுக்கு காட்ட வேண்டுமென நினைத்தாள் சாம்பவி .

ஆனால் அதற்கு இம்மியளவு கூட இடம் கொடுக்காமல் இருந்தாள் மரகதவல்லி .இதோ இப்போதும் மாலினி கலந்தாளென்பதற்காக காபியை கீழே விசிறியடித்திருந்தாள் .




” அம்மா நடந்த்து நடந்து விட்டது .இனி நடக்க போவதை பார்க்கலாம் ….,”

” அவள் இந்த வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என்பதுதான் நடக்க வேண்டியது ….”

” அம்மா அண்ணன் அவளை திருமணம் செய்திருக்கறார் ….”

” பெரிய திருமணம் .அந்த கயிற்றை கழட்டி வீசி விட்டால் போகிறது …” மாலினி பயந்த விழிகளுடன் தனது தாலியை இறுக்க பிடிப்பதை பார்த்தாள் சாம்பவி .
” என்னம்மா ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இப்படி பேசுகிறீர்களே …”

” ஊர் , பேர் தெரியாதவளெல்லாம் என் வீட்டிற்குள் நுழைய நினைத்தால் இந்த கதிதான் ….இந்த சொத்துக்களெல்லாம் அவளை அப்படி இழுத்திருக்கிறது .ஒன்றிமறியாத என் பிள்ளையை மயக்கி உள்ளே வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறாள் ….”

” இல்லையம்மா அப்படி சொல்லாதீர்கள் .மாலினி அப்படி பட்ட பெண்ணில்லை ..”

” உனக்கு தெரியாது பாப்பு .இது போல் நிறைய பெண்கள் இருக்கிறார்கள் .நன்றாக சொத்தோடு எவன் அகப்படுவானென் பார்த்திருந்து இழுத்து முடிந்து வைத்துக் கொள்வார்கள் .இவளும் அப்படிப்பட்டவள்தான் ….”

” அப்போ …நான் கூட அப்படிப்பட்டவள்தானா அம்மா ….? ” நிதானமாக கேட்டாள் சாம்பவி .

” என்னடி உளறுகிறாய் …? “

” என் மாமியார் கூட என்னை இப்படித்தான் கேட்கிறார்கள் .நீங்கள் மாலினியை நேரிடையாக கேட்டுவிட்டீர்கள் .அவர்கள் என்னை மறைமுகமாக கேட்கிறார்கள் ….”

” ஐயோ முருகா என்ன கொடுமை இது …? பாப்பு என்னடி சொல்ற …? நீயும் இந்த வந்தேறி கழுதையும் எப்படியடி ஒன்றாவீர்கள் .உனக்கு நாங்கள் நகையும் ,பணமும் கொட்டிக் கொடுத்து கௌரவமாக ஊர் பார்க்க திருமணம் செய்து வைத்திருக்கிறோமடி …”

” என்ன பெரிய செலவு ..? நீங்கள் செய்த செலவை என் கணவர் வீட்டு வளத்துடன் ஒப்பிட்டு பார்த்து விட்டு நீங்களே கூறுங்களேன் …நீங்கள் அந்த அளவிற்கா செலவழித்து விட்டீர்கள் …? “

உணர்ந்து விட்ட உண்மையில் கொஞ்சம் வாயடைத்த மரகதவல்லி ” ஆனால் நாமாக தேடிப் போய் இந்த வரனை முடிக்கவில்லையே .அவர்களாகத்தானே அவர்கள் பெண் மூலமாக  விரும்பி கேட்டார்பள் .நாம் சம்மதித்தோம் ….”




” ஆமாம் அதைத்தான் அவர்கள் மகளை மயக்கி நான் உள்ளே நுழைந்த விட்டதாக நினைக்கிறார்கள் …” சாம்பவியின் குரலில் மிகுந்த துயரமிருந்த்து .

” பாப்பு ….” என அவளை கட்டிக் கொண்ட மரகதவல்லி ” இப்போது இந்த பிரச்சினையில்தான் உன்னை இங்கே அனுப்பி வைத்து விட்டார்களா …? ” பயத்தோடு கேட்டாள் .

” அது மட்டும் இல்லைம்மா …அண்ணன் திடீரென  இந்த திருமணம் செய்த்தை சாக்காக வைத்து …..” சொல்ல ஆரம்பித்தவள் நாக்கை கடித்து நிறுத்தினாள் .சந்திரனுக்கும் , சாம்பவிக்கும்தான் சஹானாவின் ஆசை தெரியும் .அதனை இப்போது சொல்ல கூடாதே என சாம்பவி வாயை இறுக்கமாக மூட …

” நீ எதையோ மறைக்கிறாய் பாப்பு …சொல்லு .” அவளை உலுக்கினாள் மரகதவல்லி .

” நான் சொல்கிறேன் அம்மா …” என உள்ளே வந்தான் சந்திரன் .

” அண்ணா வேண்டாம் அண்ணா ….”

” என் அவசரத்தால் உன் வாழ்க்கை பிரச்சினையில் இருக்கிறதா பாப்பு …? ” சந்திரன் வேதனையுடன் கேட்டாள் .

” இல்லை அண்ணா ..நான் சும்மா அம்மாவை சமாதானம் செய்வதற்காக ….”

” இல்லையம்மா …எனக்கு சஹானாவை ஓரளவு தெரியும் .அவள் இப்படியெல்லாம் செய்யக் கூடியவள்தான் ….”

” இல்லையண்ணா  சஹானா இல்லை …அவர்கள் அம்மாதான் …” என்றுவிட்டு மீண்டும் நாக்கை கடித்துக் கொண்டாள் .

” என்ன ..சொன்னார்கள் …. ? ” மாணிக்கவாசகம் கோபமாக கேட்க …

“:அப்பா நீங்கள் கொஞ்சம் அமைதியாக இருங்கள் ….” சாம்பவி அப்பாவை சமாதானம் செய்ய முயன்றாள் .

” எப்படியம்மா அமைதியாக இருப்பது …? அவர்களாக வந்துதான் உன்னை பெண் கேட்டார்கள் .நமது சொந்தக்கார்ர்கள் எல்லோரும் அப்போதே ரொம்ப பெரிய இடம் வேண்டாம் .நாளை அங்கு நமக்கு மரியாதை இருக்காது என்றார்கள் .நாங்கள் அதனை கேட்காமல் உனக்கு ஒரு உயர்ந்த வாழ்வு அமைய வேண்டுமென்ற ஆசையில்  தகுதிக்கு மீறி பணம் செலவழித்து உன் திருமணத்தை முடித்திருக்கிறோம் .உன்னைப் போன்ற ஒரு பெண் கிடைக்க அவர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் .இப்போது உன் அருமை தெரியாமல் அவர்கள் பேசினால் எப்படியம்மா ..? “




அண்ணனின் திருமணத்திலிருந்து தனது திருமணத்தற்கு மாறி விட்ட பிரச்சனையை எப்படி திசை திருப்புவது என அறியாமல் சாம்பவி விழித்தாள் .

” அப்பா நம் வீட்டு பெண்ணின் மீது அவர்கள் எந்த குற்றமும் சொல்லமுடியாதுப்பா .நம் பெண் வைரம் போல .குறை சொல்வதானால் அவர்கள் மனதில் வந்த ஏமாற்றத்திற்காக ஏதாவது சொல்வார்களாயிருக்கும் …” சந்திரன் சொன்னான் .

” அப்படி என்னடா ஏமாற்றம் அவர்களுக்கு …? “

” அப்பா சஹானாவிற்கு என்னை திருமணம் செய்து கொண்டு நம் வீட்டு மருமகளாக வேண்டும் என்ற எண்ணமுண்டு .அந்த நினைப்பில்தான் அவள் சாம்பவியின் திருமணத்தை ரிஷிதரனுடன் நடத்தினாள் ….”

” என்ன …? ” மாணிக்கவாசகம் , மரகதவல்லி இருவரும் அதிர்ந்தனர் .

” யார் …எந்த நேரமும் பேன்ட்டும் , சட்டையும் போட்டுக்கொண்டு தஸ்ஸு புஸ்ஸுன்னு புரியாமல் பேசிக்கொண்டு குதிரை மாதிரி திரிவாளே …அந்த ஊர் சுற்றி பெண்ணா …? அவளையா …அவளை நான் என் வீட்டிற்குள் நுழைய விட்டதே பெரிய விசயம் .அவளை மருமகளாக வேறு ஏற்பேனா …? ரொம்பத்தான்டி பேராசை உன் புகுந்த வீட்டு ஆட்களுக்கு ….” மரகதவல்லிக்கு இருந்த மன அழுத்தத்திற்கு என்ன பேசுகிறோம் ..என தெரியாமல் பேசி வைத்தாள் .

” சூப்பர் அம்மா ….உங்களுக்கு என் மகள் மீதும் என் குடும்பத்தின் மீதும் இருக்கும் மரியாதையை பார்த்து ரொம்ப சந்தோசமாக இருக்கிறது ….” என்றபடி உள்ளே வந்தார் தனசேகர் .கூடவே கோபம் கொப்பளிக்கும் விழிகளுடன் மஞ்சுளாவும் .

குடும்பமே அதிர்ந்து போய் நின்றது .

” ஏன்மா உங்க பட்டிக்க்காட்டு பொண்ணை நாங்க சீரும் , சிறப்புமாக திருமணம் செய்து கொண்டு போய் எங்கள் வீட்டில் வைத்துக்கொண்டு  சீராட்ட வேண்டும் .எங்கள் பெண்ணை நீங்கள் வீட்டற்குள் கூட நுழைய விட மாட்டேன் என்பீர்கள் …முதலில் எங்கள் பெண் உள்ளே நுழைவதற்கு தகுதியான இடமா உங்கள் வீடு ….அவளுக்கு அறிவில்லாமல் தகாதவர்களுடன் நட்பு பாராட்டி விட்டு இப்போது அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறாள் …” மஞ்சுளா தன் பங்கிற்கு கத்தினாள் .

” ஐயோ …அங்கிள் தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள் .அம்மா ஏதோ …குழப்பத்தில் இருந்தார்கள் .அதனால்தான் அப்படி பேசிவிட்டார்கள் .நீங்கள் தவறாக எடுத்து கொள்ளாதீர்கள் ….” தீவிரமாகிவிட்ட நிலைமையை கண்டு பயத்தோடு பேசினான் சந்திரன் .

தன் கையை பிடித்திருந்த சந்திரனின் கையை பார்த்த தனசேகர் ” குழப்பமாக இருந்தால் நிதானமில்லாமல் எது வேண்டுமானாலும் பேசி விடுவார்களா …? உன் மனதை தொட்டு சொல்லு உன் தகுதிக்கு என் பெண் மிக அதிகமில்லையா …? அவள் உன்னை மனதில் நினைத்ததே பெரிய விசயமில்லையா …? ” என்றார் .




“ஆமாம் அங்கிள் .நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் .அவளில்லை …நான்தான் அவளுக்கு ஏற்றவனில்லை .அதனால்தான் நான் அவளை மணக்க வேண்டுமென்று ஒருநாளும் நினைத்ததில்லை ….”

” ஆமாம் …உன் தகுதியே வேறு ஆயிற்றே …அதைத்தான் நீ தெளிவாக காட்டிவிட்டாயே , …” தனசேகரது பார்வை அடுப்படி வாசலில் நின்று கலக்கத்துடன் எட்டி பாரத்துக் கொண்டிருந்த மாலனி் மேல் படிந்த்து .

” அப்போ நீங்களெல்லாம் புத்திசாலியாகி விட்டீர்கள் .நாங்கள் பைத்தியக்கார்ர்கள் ஆகிவிட்டோம் ….” மஞ்சுளாவிற்கு உள்ளம் கொதித்தது .

தனது குடும்பத்திற்கு ஒத்து வர மாட்டாளென தெரிந்து , சஹானாவை தெளிவாக ஒதுக்கி விட்டு தங்கள் குடும்பத்திற்கு ஒத்து வரும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுவிட்ட சந்திரன் மேல் அவளுக்கு மிகுந்த கோபம் வந்த்து .

இவனுக்கிருக்கின்ற அறிவும் , தெளிவும் …நான் பெற்ற பிள்ளைகளுக்கு இலலையே ….இரண்டும் அறிவில்லாமல் தலையை கொடுத்துவிட்டு இப்போது விழித்துக் கொண்டிருக்கிறதுகளே …நினைக்க நினைக்க …நாங்க முடியவில்லை அவளால் ….

” சம்பந்தியம்மா நான் தவறாக பேசிவிட்டேன் .என்னை மன்னித்து விடுங்கள் …நீங்கள் சாம்பவியை கூட்டிக்கொண்டு கிளம்புங்கள் ” கையை பற்றிய மரகதவல்லியை உதறினாள் .

பேசுவதையெல்லாம் பேசிவிட்டு மன்னிப்பு கேட்டுவிட்டால் சரியாகிவுடுமா ….எங்களுக்கு மனது சரியில்லை.இன்னும் கொஞ்ச நாட்கள் உங்கள் பெண் உங்கள் வீட்டிலேயே இருக்கட்டும் …”

” இல்லைம்மா ….அப்படி சொல்லாதீங்க .அவள் இப்போது உங்கள் வீட்டு பெண். .நீங்கள் அவளை கூட்டிட்டு போங்க .பாப்பு கிளம்புடா …,” மாணிக்கவாசகம் சொல்ல,

எதிர்பாராமல் நடந்து விட்ட இந்த கலாட்டாக்களினால் செய்வதறியாது உறைந்து போய் நின்றிருந்த சாம்பவி , வேகமாக தனது உடைகளை எடுத்துக்கொள்ள உள்ளே திரும்பினாள் .

” நில்லும்மா …உங்கள் வீட்டு நிலைமையை விசாரித்து விட்டு , உங்கள் பெண்ணை எங்கள் வீட்டிற்கு கூட்டிப் போகும் எண்ணத்தில் தான் நாங்கள் இங்கு வந்தோம் .ஆனால் இப்போது …அந்த எண்ணம் இல்லை .எங்கள் மனதினை நீங்கள் மிகவும் வேதனைப்படுத்தி விட்டீர்கள் .இந்த மனநிலையில் இவளை அங்கே அழைத்து போனால் அவளுக்கும் கஷ்டம் .எங்களுக்கும் கஷ்டம் .அதனால் இன்னும் கொஞ்சம் நாட்கள் இவள் இங்கேயே இருக்கட்டும் .நான் பிறகு உங்களுக்கு இவளை அனுப்பும் விவரம் சொல்லிவிடுகிறேன் ….” அத்தோடு பேச்சு முடித்துவிட்டு தனசேகர் வெளியேற திருப்தியான மனநிலையுடன் மஞ்சுளாவும் வெளியேறினாள் .

மிகுந்த துக்கத்துடன் அப்படியே மடிந்து அமர்ந்து அழத்துவங்கினாள் சாம்பவி .அவளை சமாதானப்படுத்த அவளைச் சுற்றியது அவள் குடும்பம் .




ஒரு மாதம் வரை அவர்கள் வீட்டிலிருந்து தகவல் வரும் என்று எண்ணியபடி காத்திருந்தனர் .ஆனால் எந்த செய்தியும் வரவில்லை .சாம்பவி தனக்கென தனி செய்தியை ரிஷிதரனிடமிருந்நும் , சஹானாவிடமிருந்தும் ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து ஏமாந்தாள் .

விருப்பமில்லாத திருமணம் என்று சஹானா சொன்னாளே , அது உண்மைதானோ …? என எண்ணிக் கலங்கினாள் .ஆனால் அவன் இந்த ஒரு வாரமாக தன்னுடன் பழகியவிதம் ….விருப்பமில்லாதவனின் பழக்கமா அது …இல்லையே ஒவ்வொரு தடவையும் எவ்வளவு ஆசையாக , காதலுடன் நெருங்கினான் .ஒரு வேளை அது காதலில்லையோ …இதைத்தான் காம்ம் என்பார்களோ …?

காதலுக்குத்தான் மனதிற்கு பிடித்த பெண் வேண்டும் .காமத்திற்கு ஒரு பெண்ணின் உடல் போதுமல்லவா …அப்படித்தான் என்னை உபயோகித்துக் கொண்டானா …இல்லையென்றால் ஒரு முறையாவது போனிலாவது பேசியிருப்பானே …மனதிற்குள்ளாகவே பலவாறாக குழம்பி துவண்டாள் .

தானே போன் பண்ணி பேசலாமென்று பலமுறை அவன் எண்ணை அழுத்தவிட்டு  பாதியிலேயே நிறுத்திவிடுவாள் .இல்லை அவள் போகட்டும் என சஹானாவிடம் கூறிவிட்டு , திரும்பியே பார்க்காமல் மாடியேறிய ரிஷிதரன் இன்னமும் அவள் உள்ளத்திற்குள் நின்று கொண்டு இம்சித்துக்கொண்டிருந்தான் .முந்தைய அவனது ஆசையான பல அணைப்புகளை நினைவிற்கு கொண்டுவந்து இந்த நினைப்பை விரட்டிக் கொண்டிருந்தாள் சாம்பவி .

இப்போது தானாக போன் செய்து பேசி , உன்னை பார்க்கவே பிடிக்கவில்லை …உன்னுடன் வாழும் எண்ணமில்லை என்பது போல் அவன் ஏதாவது சொல்லிவிட்டானானால் அதனை சாம்பவியால் தாங்க முடியாது .அதற்கு பதில் அவனுக்கு வேலை அதிகமிருக்கும் …அது முடிந்த்தும் இதோ இன்று …இப்போது …அழைத்துவிடுவான் என்ற எண்ணத்திலேயே இருந்துவிடலாம் என்ற முடிவற்கு வந்தாள் .

சஹானா விசயத்திலும மிகுந்த மனத்தாங்கல் அவளுக்கு .ஒரு நாளைக்கு பத்து தடவையாவது போன் செய்து பேசுவாள் .இன்றோ ..?ஒரு மாதத்தில் ஒரு தடவை கூட பேசவில்லை . தானாக பேசுவதிலும் சாம்பவிக்கு நிறைய தயக்கம் .இங்கே மரகதவல்லி பேசிய பேச்சுக்கள் நிச்சயம் சஹானாவின் காதுகளுக்கு போயிருக்கும் .சந்திரனின் புறக்கணிப்பு வேறு இருக்கிறது .இப்படி குடும்பத்தோடு சேர்ந்து என்னை அசிங்கப்படுத்தி விட்டீர்களே….என அவள் ஒரு வார்த்தை கேட்டுவிட்டாளானால் ….????

நிச்சயம் சஹானாவாக பேசுவாள் .அவளுக்கு என்னுடன் பேசாமல் இருக்க முடியாது …என நினைத்ந்தபடி ஒவ்ஙொருநாளும் அவளது போனையும் எதிர்பார்த்திருந்தாள் .ஆனால் அண்ணன் , தங்கை இருவருமே அவளது எண்ணத்தை பொய்யாக்கினர் .இருவரிடமிருந்தும் போன் வரவில்லை .

வீட்டின் பின்புறம் அமர்ந்து வேப்பமரத்து குயிலை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் சாம்பவி .

” இதைக் குடித்து விட்டு பிறகு யோசிக்கலாமே ..? ” காபியை நீட்டினாள் மாலினி .

மகளின் வாழ்க்கை பற்றிய கவலையில் மருமகளை தூற்றுவதை குறைத்திருந்தாள் மரகதவல்லி .ஓரளவு வீட்டினுள் சுதந்திரமாக நடமாட ஆரம்பித்நிருந்தாள் மாலினி .

” இன்னமும் எதற்காக காத்திருக்கிறாய் ….? ” மரத்திற்கு அடியில் கிடந்த இலைகளை சுத்தம் செய்தபடி கேட்டாள் .
” என்ன …புரியவில்லை ….? “

” உன் வீட்டிற்கு போவதற்கு ….” என்றாள் உன்னில் அழுத்தம் கொடுத்து .




” என் வீடா …? அப்படி ஒன்று இருக்கிறதா என்ன …? “

” இல்லையா …என்ன …? “

” சும்மா எதையாவது சொல்லாதே அண்ணி .அங்கே போகவும் வெளியே போ என என்னை விரட்டி விட்டார்களானால் ….”

” நீ ஏன் வெளியே வரப் போகிறாயாம் …? “

உன்னைப் போல் சுடுசொல் கேட்டுக்கொண்டு சுரணையில்லாமல் இருக்க என்னால் முடியாது …மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் சாம்பவி .

” கணவன் மனைவிக்குள் ஈகோ பார்க்க கூடாது சாம்பவி …”

” உனக்கு புரியாது அண்ணி …” சாம்பவி எழுந்து போனாள் .




What’s your Reaction?
+1
33
+1
25
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!