Serial Stories

புதுச்சுடர் பொழிந்ததே – 2

2

 




பஸ் ஊட்டியில் நின்றதும் இறங்கி ஒரு கார் பிடித்துக் கொண்டாள் சுடரொளி .அவள் போக வேண்டிய ஊரான மசினக்குடிக்கு அதிக அளவில் பஸ் வசதிகள் கிடையாது .இப்படித்தான் வர வேண்டுமென அறிவுறுத்தப் பட்டிருந்தாள் .

கார் செல்லும் பாதையை பார்த்தவளுக்கு கொஞ்சம் பயம் வந்தது .இதென்ன இந்த இடம் இப்படி இருக்கிறது ?

உயர்ந்த மரங்களும் , அடர்ந்த புதர்களுமாக ஒரு பக்கா காடாக இருந்தது சுற்றுப்புறம் .நகரத்திலேயே பிறந்து வளர்ந்தவளுக்கு இந்த வனப்பகுதி அச்சமூட்டியது .இது போன்ற இடங்களிலெல்லாம் மனிதர்கள்தான் வசிக்கின்றனரா ? அவசரப்பட்டு இந்த வேலையை ஒத்துக் கொண்டோமா ?

” இங்கே முழுவதுமே மலைவாழ் ஜனங்கள்தான் இருக்கின்றார்கள் மேடம் .இங்குள்ள டீ எஸ்டேட்களில் வேலை செய்வது , விவசாயம் பார்ப்பது என்று  இருப்பார்கள் . உங்களைப் பார்த்தால் நிறைய படித்தவர் போல் தெரிகிறது .இங்கே என்ன வேலைக்கு வந்துள்ளீர்கள் ? ” கார் டிரைவர் இவளது திரு திரு விழித்தலை பார்த்தோ என்னவோ விளக்கங்கள் சொல்லி விபரம் கேட்டான் .

” நான் இங்கே ஆனந்தம் எஸ்டேட்டிற்கு …”




” ஓ …ஆனந்தம் எஸ்டேட்டிற்கு மேனேஜர் வேலைக்கு வந்தீர்களா ? என்னம்மா நீங்கள் ஊருக்குள் போக வேண்டுமென்றுதானே சொன்னீர்கள் ? எஸ்டேட் போய் விட்டதே  ” அவர் வண்டியை திருப்ப முயல …அவள் தடுத்தாள்.

” இல்லையில்லை எஸ்டேட் மேனேஜர் வேலைக்கு இல்லை.அவர்கள் வீட்டில்தான் எனக்கு வேலை .இதோ இந்த அட்ரஸ்தான் “

அவள் நீட்டிய போனில் அட்ரஸ் பார்க்காமலேயே ” லிவிங்ஸ்டன் ஐயா வீடுதானே ? தெரியும்மா எனக்கு . நான்கு கிலோமீட்டர்தான் .இப்போ போயிடலாம் ” என்றார் .

அவர் சொன்ன நான்கு கிலோமீட்டர்களை கடக்க சுத்தமாக ஒரு மணி நேரம் ஆனது .பாதை அந்த லட்சணத்தில் இருந்தது.ஷ் …போதும்டா சாமி ! என்ற அவள் சலிப்பின் பின் அந்த ஓட்டு வீட்டின் முன் கார் நின்றது .

” இதுதான்மா எஸ்டேட்காரங்க வீடு .இறங்கிக்கோங்க “

வீட்டைப் பார்த்ததும் சுடரொளிக்கு சிறிது ஏமாற்றம்தான் .இதுவா …பெரிய எஸ்டேட் முதலாளியின் வீடு ? பெரிய பங்களாவை எதிர்பார்த்திருந்தவளுக்கு இந்த ஓட்டு வீடு ஏமாற்றம் கொடுத்தது.

ஏய் ,சுடர் நீ சினிமா பார்த்து ரொம்ப கெட்டுப் போய்விட்டடி. சினிமாவில் காட்டுவதெல்லாம் நிஜமல்ல .அங்கே காட்டப்படும் பங்களாக்கள் வெறும் அட்டைகள் தெரியுமா ? அவற்றின் மறுபுறம் கட்டையும் , குழியுமாக இருக்கும் . உண்மை என்ற எதுவும் அங்கே கிடையாது .

மனதிற்குள் நினைத்தபடி காரை பணம் கொடுத்து அனுப்பி விட்டு வீட்டை நோக்கி நடந்தவள் , தன் மன ஓட்டத்தில் திகைத்தாள் .இது …அவள் மனதில் வந்த வார்த்தைகள் கிடையாது .அவன் சொன்னவைகள் .




ஒரு நாள் சினிமாவிற்கு போகலாமா ? எனக் கேட்டதற்கு அவன் சொன்ன பதில் இவை .

அவனுக்கு பொதுவாக சினிமா பார்க்க பிடிக்காது .ஓரிரண்டு ஆங்கிலப் படங்கள் பார்ப்பதுண்டு என்பான் .அட…அட …பெரிய துரை இவர் …என்ற இவளின் கேலிக்கு மென்மையாக புன்னகைப்பான் .

நான் துரையென்றால் நீ துரையம்மா எனக் கொஞ்சுவான் .அவனுடையவளா அவள் ? சுடரொளி அப்போதெல்லாம் ஒரு வித மயக்கத்திலேயேதான் இருந்து வந்தாள் .

துரை…ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆண்ட காலத்தில் அதிகாரமும் , ஆதிக்கமுமாக இருந்த அவர்களில் பிரமித்து , நம்மவர்கள் அவர்களுக்கு கொடுத்த பெயர் துரை .வெளுப்பும் , உயரமும் , நுனி நாக்கு ஆங்கிலமுமாக இருக்கும் அவர்களை கண்டதுமே உழைத்து களைத்து கறுத்திருக்கும் இந்தியக் குடிமகன் கூனி குறுகி வணங்குவான் .

தொரை…தொரை …என மந்திரம் ஜெபிப்பான் .அவர்கள் வீட்டுப் பெண்கள் துரையம்மா .ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டுப் போய் நூற்றாண்டு நெருங்கிய பின்னும் கூட நம்மவர்களுக்கு அந்த பிரமிப்பு போவதாக இல்லை போலும் .

படித்தவனுக்கு , பணம் படைத்தவனுக்கு , ஆங்கிலம் பேசுபவனுக்கு எளிதாக துரை பட்டத்தை தூக்கிக் கொடுத்து விடுகிறார்கள் . சுடரொளியும் அப்படித்தான் அவனை பார்த்தாள் .அவனும் அவளது பிரமித்தலுக்கு நியாயமானவனாகவே இருந்தான் .

லேசாக செவ்வண்ணம் ஏறிய பளபள சிகை , கரு வரிகள் ஓடிய ப்ரௌன் நிறக் கண்கள் .அந்தக் கண்கள் அவளுக்கு சிறு வயதில் உருட்டி விளையாடிய கோலிக் குண்டுகளை நினைவுறுத்தும் .எல்லாவற்றுக்கும் மேலாக அவனது நிறம் . இப்படி ஒரு வெண் நிறம் ஆண்களுக்கு வாய்க்குமா என்ன ? அவனுக்கு வாய்த்திருந்தது. அடுத்து உயரம் .இது நிச்சயம் இந்திய ஆண்களுக்குரியது இல்லை .எந்த நாட்டுக்காரன் இவன் என அவள் பார்த்திருந்த போது , அவன் வாய் திறந்து பேசினான் .




மிக அழகான தூய தமிழ் அவன் நாவில் உச்சரிப்பு பிறழாமல் கொஞ்சி வெளிப்பட்டது .ஆக …தொரை நம்ம ஊர்ப் பக்கம்தானாக்கும் ! நீண்ட நேரம் சிமிட்டாமலிருந்த தனது இமைகளை சிமிட்டிக் கொண்டாள் அவள்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு அவனை முதன் முதலில் பார்த்த போது நடந்த சம்பவங்கள் .இதோ நேற்று  போல் அவள் மனதிற்குள் ஓடுகிறது .கடவுளே கொல்லும் இந்த நினைவுகளிலிருந்து எனக்கு எப்போதுதான் விடுதலை ? பெருமூச்சுடன் வீட்டுப் படியேறினாள் .

கார் நின்ற இடத்திலிருந்து சிறியதாக தெரிந்த வாசல்படி இப்போது அருகில் பெரிதாக பரந்து தெரிந்தது .வாசலின் இரு புறமும் பெரிய திண்ணைகள் இருக்க , படிகள் மரத்தால் அமைக்கப்பட்டிருந்தன.கை பிடித்து ஏறவென அமைக்கப்பட்டிருந்த படிகளின் ஓர கைப்பிடி கோவில்களின் படியோர வளைவுகளை நினைவுறுத்தியது .

இந்த பழைமையான அமைப்பு சட்டென அவள் மனதினுள் அமர்ந்து கொள்ள , ஆர்வமாக அந்தக் கைபிடி பற்றிக் கொண்டாள் .பளிங்காய் வழுவழுத்தது அந்த மரம் .

வராண்டாவும் மரத்தாலேயே வடிவமைக்கப்பட்டிருந்தது.கால்களை பதித்ததும் தொம் தொம்மென்ற சத்தம் மென்மையாக .இரண்டு பக்கமும் மரத்தாலான சாய்வு நாற்காலி .வயதானவர்கள் சரிந்து கிடந்து வெளிப்புறத்தை வேடிக்கை பார்ப்பதற்காயிருக்கும் .

நுனி விரலால் நாற்காலியை வருடியபடி வீட்டு வாசலை அடைந்தாள் .காலிங்பெல்லை தேடி சலித்து , மெல்ல குரல் கொடுத்தாள் .

” சார் …மேடம் …”

அவள் அழைத்து சுத்தமாக பத்து நிமிடங்கள் கழித்து ஒரு ஆள் உள்ளிருந்து வந்தார் .வெள்ளை வேட்டியை பஞ்சகச்சமாக கட்டியிருந்தார் .காவி நிறத் துண்டு தோளில் .தலையில் அங்குமிங்குமாக தென்பட்ட முடிகள் சுத்த வெண்மைக்கு போய் வயது ஐம்பதுக்கும் மேலே என அறிவித்தன.




” யாரானு …குட்டி நிங்கள் ? ” மலையாளம் கலந்த தமிழ் பேசினார்.

” வணக்கம் சார் .என் பெயர் சுடரொளி .இங்கே வேலைக்காக ….”

” ஆங் ..நீங்கள் வந்தால் இங்கே தங்கச் சொல்லியிருக்காங்க .வரூ …” உள்ளே அழைத்தார் .

” சார் நீங்க… ? ” சுடரொளி உள்ளே நுழைந்தபடி கேட்டாள் .

” ஞான் வேணுகோபாலன் .இங்கே சமையக்காரனாக்கும் “

” ஓ…வேறு யார் யாரெல்லாம் இங்கே இருக்கிறார்கள் சார் ? “

” முதலாளி குடும்பத்தோடு வெளியூர் போயி. இப்போதைக்கு ஞானும் , வேற பணிக்காரர்களும்தான் இருக்கோம் . அம்மா உட்காரனும் . ஞான் போய் குடிக்க ஏதாவது கொண்டு வரேன் “

அவர் உள்ளே போய்விட , வீட்டின் உள்ளமைப்பை ஆர்வமாக பார்த்தாள் சுடரொளி .பயமுறுத்துமளவு பிரம்மாண்டம் இல்லையென்றாலும் , ஆச்சரியப்பட வைக்குமளவு விசாலமான வீடுதான் .

கொல்லம் ஓடுகள் எனப்படும் ஒரு வகை ஓடுகளால் கூரை வேயப்பட்டிருந்தது. விதானங்கள் முழுவதும் மர வேலைப்பாடுகள் .அடேங்கப்பா இப்போது மரம் விற்கிற விலையில் இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கிற மரங்களுக்கே லட்சங்களில் விலை போகும் போலிருக்கிறதே !

குஷன்கள் எதுவும் பயன்படுத்த படாமல் வெறுமனே மரத்தில் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டாள். முதலாளி குடும்பத்தோடு வெளியூர் போயிருக்கிறாரென்றால் அவளுக்கு உடனடி வேலை இங்கே கிடையாது .அவர் வருவதற்குள் இந்த வீட்டை ,சூழலை பழக்கப் படுத்திக் கொண்டு விடலாம் என எண்ணிக் கொண்டவளின் முன் ஆவி பறக்கும் காபி நீட்டப்பட்டது .




அதன் வாசத்தில் கவரப்பட்டு வேகமாக காபியை எடுத்து அருந்தியவளின் முகம் கோணியது .காபி சுடரொளியின் பிரியமான பானம் .அதில் சிறு குறை நேர்ந்தாலும் அவளால் பொறுத்துக் கொள்ள முடியாது .இந்தக் காபியில் மணம் இருப்பதை போன்று சுவை இல்லை .

வேலைக்கு வந்த இடத்தில் குறையா சொல்ல முடியும் ? அட்ஜஸ் செய்து குடித்து முடித்தாள் .

அவளுக்கென காட்டப்பட்ட அறைக்குள் நுழைந்து கொண்டாள் .ஒற்றைக் கட்டிலும் , ஒருங்கிணைந்த குளியல் அறையுமாக கச்சிதமாக இருந்தது அந்த அறை .அறையின் ஒரு பக்க சுவர் முழுவதிற்குமாக இருந்த மர அலமாரியில் தனது உடைகளை பிரித்து அடுக்கிக் கொண்டாள் .

வேணுகோபாலன் கொண்டு வந்து கொடுத்த உணவை உண்டு விட்டு , கட்டிலில் படுத்தவள்தான் , எழும் போது மாலை வெயில் அவள் அறைக் கட்டிலருகே தரையில் சன்னல் கம்பிகளாக படுத்திருந்தது.இவ்வளவு நேரமாக இல்லாத குளிர் இப்போது ஆரம்பிக்க , கைகளை ஒன்றோடென்று தேய்த்து சூடாக்க முயன்றபடி வெளியே வந்தாள் .

” அம்மே சாய் தரட்டோ ? ” வேணுகோபாலன் கேட்க முகம் சுளித்தாள் .அவளுக்கு டீ பிடிக்காது .ஆனால் தனது பிடித்தங்களை அவள் பட்டியலிட முடியாதே .ஏலக்காய் மணத்த டீயை சகித்து உறிஞ்சிக் கொண்டிருந்த போது பட்டென விளக்குகள் அணைந்து வீடு இருளானது .

கரெண்ட் போய்விட்டது போலும் .சுடரொளி சட்டென எழுந்து நிற்க , கையில் விளக்குடன் வந்த வேணுகோபாலன் , அங்கிருந்த காடா விளக்கை ஏற்றி விட்டு செல்ல , சிக்கன மஞ்சள் ஒலியில் வித்தியாசமாக காட்சியளித்த வீட்டை பார்த்தபடி நின்றிருந்தாள் .

திடுமென அவள் முகத்தின் மேல் பலமாக எதுவோ தாக்க , வேகமாக அதனை பிடித்தாள் .பந்து .அதனை எறிந்த குழந்தை வாசல்புறமிருந்து உள்ளே வந்து கொண்டிருக்க , பின்னாலேயே குழந்தையின் பெற்றோர்கள் .

வந்து கொண்டிருந்த முதலாளி குடும்பத்தை பார்த்தபடி இருந்தவள் , அவர்கள் அருகே நெருங்க …நெருங்க அதிர்ந்தாள் .




What’s your Reaction?
+1
45
+1
34
+1
4
+1
3
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!