Serial Stories தவிக்குது தயங்குது ஒரு மனது

தவிக்குது தயங்குது ஒரு மனது -18(நிறைவு)

18

 

எஸ்.எஸ் மருத்துவமனை மெடிக்கல் டீமின் ஒரு மாத கால கடும் உழைப்பின் பின் அந்த மூலிகை குளிகைகள் விழுங்குவதற்கு தோதான இலகுவான மாத்திரைகளாக உருமாறின. முழுக்க முழுக்க மூலிகை மாத்திரைகளாக மட்டுமே இருந்த அவை  பக்க விளைவுகள் ஏதுமின்றி கொரோனா வைரசை மூன்றே வேளை மாத்திரைகளில் விரட்டியடித்தன.

 

அரசாங்கத்துடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு எஸ்.எஸ் மெடிக்கல் கேர் சென்டர் கொரோனா மாத்திரைகளை ஆரஞ்சு மிட்டாய்  விலைக்கு விற்றனர் .தவிரவும் கொரோனா முற்றிய நிலையில் வரும் நோயாளிகளுக்கு பணம் வாங்காமல் இலவச வைத்தியம் செய்தனர்.எஸ்.எஸ் மருத்துவமனையின் பெயர் உலகம் முழுவதும் பரவியது .




சுகந்தி எஸ்.எஸ் மருத்துவமனையின் எஸ்களில் ஒருத்தியாகி விட்டாள் . தொழிலில் அவளுக்கிருந்த அர்ப்பணிப்பில் மருத்துவமனை மேலும் வளர்ந்தது.

 

2022 – நவம்பர் மாதம் .

 

” அப்போதான் அந்தக் குகைக்குள்ளே இருந்து ஒருத்தர் வந்தாரு .அவர் ரொம்ப குள்ளமா இதோ இந்த உயரம்தான் இருந்தாரு .அவர் கையில் நிறைய செடி , கொடிகள் இருந்தன. அவையெல்லாம் என்னன்னு தெரியுமா பாப்பா ? ”

 

சுகந்தி கேட்க , வாய் நிறைய இட்லியை அடைத்துக் கொண்டு பேச முடியாமல் ” ம்ஹூம் ” என தலையசைத்தாள் அவள் செல்ல மகள் சம்யுக்தா .

 

” அதுதான் மூலிகைகள் பாப்பா .மூலிகைகள்தான் நம் நாட்டு செல்வங்கள் .அவற்றை நாம் அழிய விடாமல் காப்பாற்ற வேண்டும் தெரியுமா ? ”





சுகந்தியின் பின்தலை சற்று கோபமாக தட்டப்பட்டது .” ஏய் இரண்டு வயசுக் குழந்தைக்கு சொல்ற பெட் டைம் ஸ்டோரியா இது ? ” சாத்விக் கேட்டான் .

 

” ஏனோ ? உங்கள் வெள்ளைக்கார பாஷையில் கடல் தாண்டி , மலை தாண்டி மந்திரக்கோல் அசைத்துன்னு இதே கதையைத்தானே பெட் டைமில் சொல்றீங்க .நம்ம ஊர் சித்தர் கதை சொன்னால் தப்பா ? ”

 

” ஐயோ சுகி .நான் சரண்டர் .நீ எதை வேண்டுமானாலும்  சொல்லு . என்னை மட்டும் கதைக்குள் இழுக்காதே ” சாத்விக் பெட்டில் விழுந்து முகம் மூடிக் கொண்டான் .

 

கதவை தட்டி விட்டு அறைக்குள் வந்த ஸ்வேதா பேத்திக்கு கை நீட்டினாள் ” சம்யு வாடா , தாத்தா பாட்டி கூட படுத்துக்கலாம் ”

 

” இன்றைக்கு உங்களுக்கு வொர்க் லோட் அதிகம் அத்தை .நிம்மதியாக தூங்குங்க .சம்யுவை நான் தூங்க வைக்கிறேன் ”

 

” என் பேத்தி பக்கத்தில் இல்லாமல் என்னால் தூங்க முடியாது சுகா. நான் பார்த்துக் கொள்கிறேன் ” பேத்தியுடன் வெளியேறியவள் மகனுக்கு கண் ஜாடை காட்டி சென்றாள் .




கை பிடித்து இழுத்த கணவனுடன் கட்டிலில் விழுந்த சுகந்தி அவன் மார்பில் பாந்தமாக ஒன்றினாள் .

 

” என்னடா இன்று திடீரென்று சித்தர் நினைப்பு ? ” சாத்விக் மென்மையாக அவள் கன்னம் வருடியபடி கேட்டான் .

 

மறந்தால் அல்லவோ நினைப்பதற்கு ?சுகந்தி தனக்குள் புன்னகைத்துக் கொண்டாள் .

 

மூன்று வருடங்களுக்கு முன்பு ,அவள் மருந்தோடு வந்த போது தனது கொல்லிமலை சித்தர் அனுபவங்களை தாய் , தந்தை , ஷியாம் , ஸ்வேதா என அனைவரிடமும் பகிர்ந்து கொண்ட பின் ஓய்வெடுக்க கிளம்பினாள் .

 

சிறிது நேரம் கழித்து அவள் வந்த போது , அறைக்கு உள்ளே அனைவரும் அவளைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தனர் .

 

” சுகந்தி  OCD யால் பாதிக்கப்பட்டிருக்கிறாள் ” ஷியாம் அறிவிக்க ஸ்வேதா திகைத்தாள் .சாத்விக் மௌனமாக இருந்தான் .




” அதைப் பற்றி விளக்கமாக சொல்ல முடியுமா டாக்டர் ? ” சுந்தரபுருசன் கேட்க , ஷியாம் தொடர்ந்தார் .

 

” OCD – obsessive compulsive disorder . அடி மனதில் சேர்ந்து கொண்டே போன அழுத்தங்களுக்கு தாங்களாகவே ஒரு தீர்வு கண்டுபிடித்து அதன்படி நடப்பது . சுந்தர் சுகந்திக்கு கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது குறித்து மிகுந்த மனக்கவலை . இல்லையா ? ”

 

” ஆமாம் டாக்டர் .ரொம்பவே கவலை .சேதுபதி ஐயாவின் மரணத்தில் உடைந்து விட்டாள் .தொடர்ந்து சாத்விக் , ஸ்வேதா என ஒவ்வொருவருக்காக நோய் வர , மருத்துவமனையிலும் தினசரி நிறைய நோயாளிகளை பார்க்க , கொரோனா சம்பந்தமாக உடன் வேலை செய்பவர்களின் பாதிப்பு என இந்தக் கொரோனா அவளை அதிக அளவில் பாதித்து விட்டது .எப்போதும் ஒரு வகை தவிப்போடும் , தயக்கத்தோடுமே இருந்தாள் ”

 

” ம் …இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடித்தே தீர வேண்டும் என அவளுக்குள் ஒரு வகை வெறியே ஏற்பட்டு விட்டிருக்கிறது .அதற்கான வேலையை அவள் அடிமனது செய்து கொண்டே இருந்திருக்கிறது .இன்றைய மருத்துவ உலகம் மேல் அவளுக்கு நம்பிக்கை இல்லை .அதனால் மாடசாமி மூலம் காட்டிற்குள் போக துணிந்தாள். ”

 

சாத்விக் தொடர்ந்தான் .” அங்கே இருளன் சித்தர்கள் பற்றி சொன்னது அவள் மனதில் பதிந்து விட்டது .சித்தர்களால் மருந்து சொல்ல முடியுமென்று முழுதாக நம்பினாள் .அந்தப் பள்ளத்தாக்கிற்குள் நாங்கள் இறங்கும் போதுதான் அம்மா போன் செய்தார்கள் .”




” நான் சாத்விக் என்று நினைத்து எனது நோயின் கடுமைகளை புலம்பலாக சொன்னேன் ”

 

” ம் …அதுவும் சுகந்திக்கு பெரிய பாதிப்புதான் .வெளியே உன்னுடன் சண்டையிட்டாலும் அவள் உள் மனதில் நீதான் ஹீரோ .இவ்வளவு பெரிய மருத்துவமனையை உன்னைப் போல் கம்பீரமாகவும் , கறாராகவும் நடத்த வேண்டுமென்று நினைத்துக் கொள்வாள் .அவளது சிங்கப் பெண்ணான  நீயே கம்பீரம் தொலைத்து கலங்கி நிற்பதை கண்டதும் அவள் மனம் தவித்தது ” ஷியாம் விளக்கினார்.

 

” சுகந்தி மிக உடனே நோய்க்கு மருந்து தயாரிக்க நினைத்தாள் .மாடசாமி சித்தரை பார்க்க சில நாட்கள் ஆகலாம் .பார்க்க முடியாமலும் போகலாம் என்று கூறினான் .சுகந்தியின் உள் மனம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை .அன்றே சித்தரை பார்த்து மருந்து விபரம் கேட்டு விட வேண்டுமென எண்ணியபடி தூங்கியவள் , தன் ஆழ்மன ஏக்கங்களை கனவாக சாதித்துக் கொண்டாள் ” சாத்விக் முடித்தான் .

 

” ஆனால் அவளால் சரியான மருந்தை எப்படி தயாரிக்க முடிந்தது ? ”

 

” இதற்கு பதில் ஒரு வகை அதிசயம்தான் .நாம் நமது மூளையை இரண்டே சதவிகிதம் தான் உபயோகிக்கிறோம் என்கின்றனர் ஆய்வாளர்கள் .வெகு சிலரே கூடுதலாக இரு சதவிகிதம் உபயோகிக்கின்றனர்  என்கிறார்கள் .அந்த சிலரில் சுகந்தியும் ஒருத்தியாயிருக்கலாம் .”

 

” குகையில் பூஜை நடந்ததற்கான தடங்களை பார்த்தீர்களே ? ” ஸ்வேதா கேட்டாள் .

 

” அம்மா அது காட்டுப்பகுதி .எத்தனையோ பழங்குடியினர் ஆடு , மாடு மேய்க்கவென நடமாடிக் கொண்டிருந்தனர் .அவர்களில் யாராவது பூஜை செய்திருக்கலாம் ”





” சாமியை நம்ப வேண்டாமென்று சித்தர் கூறியதாக சொன்னாளே ? ” சுந்தரபுருசன் கேட்க ,

 

” முன்பே அவளிடம் மாடசாமியை பற்றிய இடறல்களை சொல்லிக் கொண்டே இருந்தேன் அங்கிள் .அவளது மனமும் மாடசாமி மேல் நம்பிக்கை இழந்திருக்கலாம் .அதில் வந்த வார்த்தைகள்தாம் அவை ” சாத்விக் கூறினான் .

 

சுந்தரபுருசன் பெருமூச்சு விட்டார்.” இனி சுகந்திக்கு …” அவர் குரல் தடுமாற ஸ்வேதா அவர் கைகளை தட்டிக் கொடுத்தாள் .

 

” கவலைப்படாதீர்கள் அண்ணா , இரண்டு மூன்று கவுன்சிலிங் .சுகந்தி் நார்மலாகி விடுவாள் .பிறகு அவளை யாரும் ஒரு கேள்வி கேட்க முடியாது . எங்கள் எஸ்.எஸ் மருத்துவமனையின் எஸ்களில் ஒருத்தியை யாராவது ஏதாவது கேட்க முடியுமா என்ன ? ”

 

தந்தை பனித்த  கண்களை துடைத்துக் கொள்வதை பார்த்தபடி அங்கிருந்து நகர்ந்து வெளியே வந்தாள் சுகந்தி .தனிமையில் அமர்ந்து தன்னைத் தானே ஆராய்ந்தாள் . அவளால் எந்த முடிவிற்கும் வர முடியவில்லை .சாத்விக் ஏற்பாடு செய்த கவுன்சிலிங்கிற்கு முழு மனதுடன் ஒத்துழைப்பு கொடுத்தாள் .

 

மூன்று கவுன்சிலிங்குகளின் பிறகு தவிப்பும் , தயக்கமும் மட்டுப்பட்டு தன் மனது தெளிவானதாக உணர்ந்தாள் .அந்த மருத்துவக் குடும்பம் சுகந்தியை தாங்கி வழி நடத்தியது .இதோ இப்போது கூட தன்னையறியாமல் வந்து விட்ட சித்தர் கதையால் , சுகந்தியை கவனிக்கும்படி மகனுக்கு ஜாடை காட்டி நகர்ந்த ஸ்வேதாவை எண்ணி புன்னகைத்தபடி , கணவனின் மார்புக்குள் அமிழ்ந்தாள் சுகந்தி .




அளவற்ற காதலும் , அன்பும் ஊற்றெடுக்க தன் மனையாளை அணைத்துக் கொண்டான் சாத்விக் .

 

  • நிறைவு –
What’s your Reaction?
+1
7
+1
9
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

34 Comments
Inline Feedbacks
View all comments
34
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!