pacha malai poovu Serial Stories பச்சைமலை பூவு

பச்சை மலை பூவு – 39

39

அதோ தேங்காய் நாரினால் கரி படிந்த பாத்திரத்தை அழுத்தி தேய்த்துக் கொண்டு இருக்கிறாளே பஞ்சவர்ணம் , அந்த தேங்காய் நாரை பிடுங்கி அதில் இருக்கும் கரியை கொஞ்சம் தன் முகத்தில் அப்பிக்கொண்டு போய் அங்கே நின்றால் என்ன ? வீட்டின் பின்புறம் பஞ்சவர்ணம்

 குழாயடியில் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருக்கும் இடத்திற்கு வந்து அமர்ந்து கொண்டிருந்த தேவயானிக்கு இப்படித்தான் தோன்றியது. அதுபோல் ஒரு அழுக்கான கரி படிந்த முகத்துடன் தன்னைப் பார்க்கும் யாருக்கும் திருமணம் வேண்டாம் என்று ஓடிவிட தோன்றும் அல்லவா ?




கரியை அழுத்தித் தேய்த்த பாத்திரக் கையுடன் இடையிடையே அவள் முகத்தையும் பார்த்துக்கொண்டிருந்தாள் பஞ்சவர்ணம்.

” உள்ளாற உங்களுக்கு தான் கல்யாணம் பேசிக்கிட்டிருக்காக  தாயி ”  ஏதோ அவளுக்கு தெரியாத விஷயத்தை தெரிவிப்பது போல் வந்தது பஞ்சவர்ணத்தின் குரல் .தேவயானி வெறுமனே தலையாட்டி வைத்தாள்.

” பெரிய படிப்பு படிச்சு இருக்கீக .நாலு விஷயம் நறுக்குன்னு பேசுறீக .ஆனா உங்க விருப்பமுன்னு துணிந்து பேசுறதுக்கு இப்படி யோசிக்கிறீகளே  தாயி ? “

” என்ன ? அப்படி என்ன என் விருப்பம் ? உங்களுக்கு என்ன தெரியும் என் விருப்பத்தை பற்றி  ? ” சுள்ளென கேட்டாள். இயலாமை கொடுத்த சுரீர்தனம் .

” இந்த கல்யாணம் உங்களுக்கு பிடிக்கல தானே ? அத உங்க அண்ணாச்சி கிட்ட

 சொல்ல வேண்டியது தானே ? “

தேவயானி உதட்டை மடித்து கடித்துக்கொண்டாள் .இதைத்தானே பஞ்சவர்ணம் கேட்டிருக்க முடியும் !  நான் வேறு என்ன நினைத்தேன் !

” நீங்க வேற என்ன நெனச்சீக  தாயி ? ” பஞ்சவர்ணத்தின் பார்வை தன் மேல் கூர்மையாக படிவதை உணர்ந்தும் அதனை கண்டுகொள்ளாமல் தூரத்து மலைமுகட்டை வெறித்தாள் தேவயானி.

” அம்மா , அண்ணன் காலேஜ் அப்ளிகேஷன் கூட அனுப்பிட்டாரு .எவ்வளவு பெரிய காலேஜ் தெரியுமா ? நல்லா படிச்சு நல்ல மார்க் வாங்கினா இதே காலேஜ்ல கண்டிப்பா சேர்த்து விடுகிறேன் என்று சொல்லி இருக்காரு ” ஓடிவந்தாள் மருதாணி




துள்ளலான அவளது குழந்தை ஓட்டத்தை ரசித்த தேவயானியின் மனதில் அவள் குறிப்பிட்ட அண்ணன் கனமான பாதரச துளியாய் விழுந்து பரவினான். ரிஷிதரன் இங்கிருந்து போன நாளிலிருந்து ஒருமுறைகூட தேவயானியை

 தொடர்பு கொள்ளவில்லை. ஆனால் மருதாணியிடம் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பதை அவளது பேச்சிலிருந்து அறிந்து கொண்டாள் தேவயானி .எல்லாமே அவளது படிப்பு சம்பந்தமான பேச்சுக்கள் .தொடர்ந்து அவள் இப்போது மிக கவனத்துடன் படிக்க வேண்டியதை உணர்த்தும் வார்த்தைகள். இப்படி நிறைய அண்ணன் பேசுவதை மருதாணி தேவயானியிடம் அடிக்கடி பகிர்ந்து கொண்டு தான் இருந்தாள்.

சரிதான் அந்த மட்டும் தங்கையின் நினைவாவது அண்ணனுக்கு இருக்கிறதே , எடுத்து ஏற்றுக்கொண்ட வேலையை பாதியில் விடாமல் இந்த அளவு மருதாணி மேல் அவன் அக்கறை காட்டுவதை தேவயானி இதமாகவே உணர்ந்தாள் . கூடவே ஏனோ சொல்ல முடியாத ஒரு வெற்றிடம் அவளுள். மிகக் கடினப்பட்டு அந்த வெற்றிடத்தைத்தான் போக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

” வாவ் ! சூப்பர் மருதாணி இந்த காலேஜிலெல்லாம் இடம் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். இங்கே சேர எத்தனை பர்சன்டேஜ் மார்க் வேண்டுமென்று தெரியுமல்லவா ?  எந்நேரமும் உன்னுடைய கவனம் படிப்பில் தான் இருக்க வேண்டும் ” மருதாணி சொன்ன காலேஜ் பெயருக்கு நிஜமாகவே வியந்து அவளுடைய படிப்பின் பொறுப்பை அவளுக்கு உணர்த்தினாள் தேவயானி.

” ரொம்ப சந்தோசம் மருதாணி .அண்ணன் உன்னை மறக்காமல் நினைவில் வைத்திருப்பதில் ரொம்ப சந்தோசம். அந்த காலேஜ் விபரம் எல்லாம் உனக்கும் எனக்கும் எங்கே தெரிகிறது ?  நீ அக்காவிடம் கேட்டால் விபரம் சொல்வார்களே ! அடுத்த முறை உன் அண்ணன் போன் செய்யும் போது

 விவரங்களை அக்காவிடம் சொல்ல சொல்லேன் ” பஞ்சவர்ணம் கண்களில் கவனத்தோடு இந்த ஏற்பாடுகளை செய்ய தேவயானியின் மனம் படபடக்க துவங்கியது.

” இதோ இப்பவே அண்ணனுக்கு போன் செய்றேன்மா .படிப்பு சம்பந்தமாக எப்போது வேண்டுமானாலும் விவரங்கள் கேட்டுக் கொள்ளலாம் என்று அண்ணன் சொல்லி இருக்காங்க ” சொல்லிவிட்டு தன் கையில் வைத்திருந்த போனில் எண்களை அழுத்த துவங்கினாள் மருதாணி.

எதிர்முனை எடுத்ததும் , ” அண்ணா ”  என உற்சாகமாக படிப்பு விவரங்கள் சில பேசியவள் ” அண்ணா அந்த காலேஜ் விபரம் எனக்கு ரொம்ப புரியவில்லை .தேவயானி அக்காவிடம் போனை கொடுக்கிறேன் அவர்களிடம் சொல்கிறீர்களா ? ” எனக் கேட்க தேவயானியின் மனம் ஏனோ ஒரு வகை சிலீர் என்ற பயக் குளிரை

சுமந்தது.




ஒரு நிமிடம் கூட எதிர்முனை பேசி இருக்காது .” சரி அண்ணா , சாரி அண்ணா ” என்று மருதாணி போனை கட் செய்தாள் .” அண்ணனுக்கு ஏதோ முக்கியமான வேலையாம் . நாளை பேசுவதாக சொன்னார்கள் “

திடுமென பாதாளத்திற்குள் உருளுவது போல் உணர்ந்தாள் தேவயானி .அருகில் நின்று அவள் முகத்தை கவனித்துக்கொண்டிருந்த பஞ்சவர்ணத்தால்  ஒரு வகை அவமானம் முகத்தை சிவப்பாக்க , சட்டென அந்த இடத்தை விட்டு எழுந்து வீட்டிற்குள் போனாள் .அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த பாலில் காபி கலந்து எடுத்து கையில் வைத்துக்கொண்டு வீட்டின் கூடத்தில் அமர்ந்து இருந்தவர்களிடம் கொண்டுபோய் நீட்டினாள்.

” மூஞ்சியை கொஞ்சம் கழுவிக் கொண்டு வந்திருக்க கூடாதா ? ”  நக்கலாக கேட்டபடி காப்பி கிளாசை எடுத்தாள் சாவித்திரி.

” எத்தனை கழுவினால் என்னம்மா , இருக்கிற மூஞ்சி தானே இருக்கும் ” தான் அடித்த ஜோக்கிற்கு தானே வாய் திறந்து சத்தமாக சிரித்து கொண்டான் யுவராஜ்.

” என்னம்மா இது ? தலையை யாவது சீவி முடிந்து இருக்கலாமே ? ”  சுந்தரேசன் தனக்கு காபி நீட்டிய தங்கையிடம் சிறிய குரலில் கடிந்து கொண்டான்.

தேவயானி இழுத்து முடிந்து கொண்ட கொண்டையம் , கசங்கி இருந்த உடையுமாக  கலைந்த தோற்றத்தில் எனக்கென்ன என்ற பாவனையுடன் நின்றிருந்தாள்.

அடுப்படியில் வேலையில் நின்றிருந்தவளிடம் வந்து சுந்தரேசன் , ” மாப்பிள்ளையும் , அத்தையும் வந்திருக்கிறார்கள் .முகத்தை கழுவி வேறு சேலை மாற்றிக் கொண்டு காபி கொண்டு வாம்மா ” என்று சொல்லிவிட்டு சென்றிருந்தான் .

அதற்கு விருப்பம் இல்லாமல் தான் வெளியே போய் உட்கார்ந்து கொண்டு முகத்தில் கரி அப்பிக் கொள்ளலாமா ?  என்ற யோசனையில் இருந்தாள் தேவயானி .இப்போதோ அப்படியே வந்து அவர்கள் முன் நின்று விட்டிருந்தாள்.




” அதுல பாருங்க மச்சான் , அது என்னவோ எனக்கு தேவயானிய முதல் தடவை பார்க்கும் போதே அவள் தான் என் மனைவியின் மனசுகுள்ள ஆழமா விழுந்திடுச்சு. எந்த மாதிரி அசிங்கமா இருந்தாலும் அந்த என்னோட மனச மாத்த முடியாது .அவள் எப்படி இருந்தாலும் அவள்தான் என் மனைவி ”  சொல்லி விட்டு எதிரே இருந்த ஆளுயர நிலைக் கண்ணாடியில் அன்று காலையில்தான்

உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை

பியூட்டி பார்லரில் அலங்கரித்துக் கொண்டு வந்திருந்த தன்னுடைய பளபள தோற்றத்தை பெருமையாக பார்த்துக்கொண்டான் யுவராஜ் .

 அவனுடைய அழகிற்கு சுந்தரேசனின் தங்கை ஈடு கிடையாதாம் .இப்படி கசங்கிய தோற்றத்துடன்,  அடுப்படி வியர்வை வடிய  வந்து நின்ற தங்கையை பார்த்த சுந்தரேஷனுக்குமே அந்த கணத்தில் அப்படித்தான் தோன்றியது. அழகான,  எப்போது நினைத்தாலும் பாரின் போய் வரக்கூடிய யுவராஜ் தன் தங்கைக்கு கிடைத்த அரிதான வரன் என்று சுந்தரேசன் அந்தநேரத்தில் நினைத்தான்.

மகனின் இந்த நினைப்பை உணர்ந்துகொண்ட சொர்ணம் மனதிற்குள் தவிக்க , தேவயானி ஒருவகை விரக்தி புன்னகையோடு அண்ணனை பார்த்துவிட்டு உள்ளே போனாள்.

” என்ன மூஞ்சிக்கு பவுடர் கூட போட முடியலயாக்கும் ? ” நக்கலாக கேட்டபடி அன்று மாலையே திரும்பவும் வந்து நின்ற யுவராஜை தேவயானி எதிர்பார்க்கவில்லை . அவள் இன்னமும் அதே கோலத்தில் தான் முகம் கழுவும்  எண்ணம் கூட இன்றி விட்டேத்தியாக அவள் அறைக்குள் உட்கார்ந்து இருந்தாள் .யுவராஜ் உள்ளே வந்து நிற்கவும் திடுக்கிட்டாள் .

” என்ன வேண்டும் ? ” என்றாள்

” காலையில் அம்மாவுடன் வரும்போது எதற்கு அப்படி அழுகுணி மூஞ்சை காட்டிக்கொண்டு நின்றாய் , என்று கேட்டு போகலாம்னு வந்தேன் “

” என் மூஞ்சியே அப்படித்தான். இருக்கிற மூஞ்சி தானே இருக்கும் ”  அவன் சொன்னதையே அவனுக்கே திருப்பித் தந்தாள்.

” இல்லையே சிலநேரங்களில் இந்த மூஞ்சி அப்படியே தாமரை மலர்ந்தது போல் ஒளி வீசிக் கொண்டு இருக்குமே , அதை நானும் பார்த்திருக்கிறேனே ”  யுவராஜனின் கேள்வியில் தேவயானிக்கு எந்த கவனமும் இல்லை . இப்போது அவளுக்கு யாருடனும் பேசும் எண்ணமே இல்லை .குறிப்பாக இந்த யுவராஜுடன் பேசும் எண்ணம் இல்லவே இல்லை .ஏனோ அவள் இப்போதெல்லாம் தனிமையையே மிகவும் விரும்பிக்  கொண்டிருந்தாள் .ஏதேதோ எண்ணங்கள் ,சிந்தனைகளுடன் கண்களை மூடிக்கொண்டு தனிமையில் கிடக்கவே மிக விரும்பினாள் ்அப்படிப்பட்ட தன்னுடைய தனிமையை கெடுத்துக் கொண்டிருப்பவனை வெறுப்பாய் பார்த்தாள்.




” நீங்கள் சொல்வது எனக்கு ஒன்றும் புரியவில்லை யுவராஜ் .அண்ணனும் அண்ணியும் திருச்சி வரை போயிருக்கிறார்கள் .நீங்கள் நாளை காலை வாருங்கள் .இப்போது கிளம்புங்கள் “

” என்னடி புரியல ? எவ்வளவு தெளிவா பேசிக்கிட்டு இருக்கிறேன். புரியலைன்னு ஒத்த வார்த்தையில என்ன வெட்டி விடலாம் என்று நினைக்கிறாயா  ? இப்படித்தான் அந்த பொம்பள பொறுக்கி பயல் கூட சேர்ந்து என்னை வெட்டி விடலாம்னு திட்டம் போட்ட ! ஆனா அது நடந்துச்சா ?  எப்படி உன் வீட்டுக்குள்ளேயே வந்து உட்கார்ந்தேன் பார்த்தாயா ? ” யுவராஜ் உறுமினான்

தேவயானிக்கு இப்போதும் அவன் பேசுவது புரியவில்லை .இவன் யாரை பேசுகிறான் ? என்ன பேசுகிறான் ?

” யுவராஜ் , ப்ளீஸ் !  சொல்ல நினைப்பதை கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை “

” ஏய் !  என்னடி மரியாதை இல்லாம பெயரைச் சொல்லி கூப்பிடுற ?  ஒழுங்கா மச்சான்னு உறவு முறையை சொல்லு , அத்தோட உனக்கெல்லாம் தாலி கட்ட சம்மதித்து இருக்கேனே ,  அதுக்காக என் காலைத் தொட்டு நன்றி சொல்லு ! “

தேவயானி பிரமித்தாள் .சொல்லப்போனால் யுவராஜை திருமணம் செய்து கொள்ள சம்மதித்ததற்காக அவனல்லவா அவளுக்கு நன்றி சொல்ல வேண்டும் .கோவில் கட்டி கும்பிட்டால் கூட தப்பில்லை .ஆனால் அவன் என்னவோ தான் தியாகம் செய்தது போலல்லவா பேசுகிறான் !?  தேவயானிக்கு வேறு வழி தெரியவில்லை அவள் மீண்டும் சொன்னதையே சொன்னாள் .

” எனக்கு புரியவில்லை , தெளிவாக பேசுங்கள் “

” அப்படியே அறைந்தேன்னா பல்லு பூராம் உதிர்ந்திடும் .என்னடி புரியல ? நீ அந்த பொம்பள பொறுக்கி கூட இந்த ரிசார்ட் ரூமுக்குள்ள மட்டுமில்லாம , காட்டுக்குள்ளே சுத்துறது பத்தாம , அவன் தங்கியிருக்கும் ஹோட்டல் ரூமுக்கு போயி கூத்து அடிச்சது எல்லாமே எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறாயா ? என் கண்ணாலேயே எத்தனை தடவை உங்க ரெண்டு பேரையும் ஒண்ணா சேர்த்து பார்த்திருப்பேன் . இத்தனை நடந்தும் உன்னையே கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சு இருக்கேன்னா , என் தியாகத்தைப் பற்றி நீ தெரிஞ்சிக்க வேணாமா ? “




தேவயானி அயர்ந்தாள் . இதோ இவன் சொன்ன குற்றச்சாட்டுகளில் ஒன்று கூட நடந்தது இல்லையே ! அப்படி இருக்க,  எதனை இவன் தன் கண்களாலேயே பார்த்திருக்க முடியும் ?

” அப்படி எதை பார்த்தீர்கள் ? ”  எரிச்சலுடன் கேட்டாள்.

” சீவி முடிச்சு சிங்காரிச்சு அந்த பொறுக்கி பய ரூமுக்கு நீ போவியா ? அதைப் பார்த்தேன் “

தேவயானி யோசித்தாள் .ரிஷிதரன் அறைக்கு செல்லும்போது நான் அப்படியா  சென்றேன் ?  இருக்கலாம் . அவனை பார்க்கச் செல்லும் முன்பு , ஒரு நிமிடம் கண்ணாடி முன் நின்று தன் அசங்கிய தோற்றத்தை லேசாக  சரி செய்துகொண்டு சென்றது நினைவில் வந்தது .அவளை அறியாமல் செய்ததுதான் . அதனை இவன் கவனித்துக் கொண்டிருந்திருக்கிறான் .இது ஒரு சாதாரண விஷயம் .இதற்கு ஏன் இவன் இத்தனை ஆர்ப்பாட்டம் செய்கிறான் ? அதற்கு மேலும் இன்னும் ஏதேதோ பேசுகிறானே !

ரிஷிதரனை அவள்  தேடி போனதற்கும் , காட்டுக்குள் அவனோடு சுற்றித்திரிந்ததற்கும் ,அததற்கான நியாயமான காரணங்கள் தேவயானியின் மனதிற்கு தெரியும் .அதனை இவனிடம் சொல்ல முடியாது .சொல்லவும் கூடாது .பத்திரிக்கையாளர்களை அழைத்து  இவனே கூட எல்லாவற்றையும் ஒப்படைத்து விடுவான். அப்படிப்பட்ட கெடு புத்தி கொண்டவன்தான் யுவராஜ் .எனவே தன்மீது அவன் சுமத்திய மற்ற குற்றங்களை அடுப்பு கங்காக தொண்டை சுடச்சுட விழுங்கிக் கொண்டவள்  தீர்மானமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

” எவ்வளவு பெரிய புத்திசாலி  யுவராஜ் நீங்கள் ? உங்களை நான் பாராட்டுகிறேன் ”  நக்கலாக பேசினாள். அதனை உணர்ந்து கொண்ட யுவராஜின் கண்கள் சிவந்தன.

” என்னை நக்கல் செய்கிறாயாடி  நீ ? என்னிடம் மட்டும் எப்படி பத்தினி வேஷம் போடுவாய் ? பக்கத்தில் வந்தால் கூட பத்து எட்டு தள்ளி ஓடி போவாய் .ஆனால் அந்த பொறுக்கியுடன் கைகோர்த்துக் கொண்டு காடு முழுவதும் சுற்று வாயா ? ” யுவராஜ் அவள் மீது மேலும் மேலும் சகதியை வாரி இறைக்க ,  குமுறும் எரிமலையை  உள்ளத்திற்குள் அடக்கிக்கொண்டு மௌனமாக நின்றிருந்தாள் தேவயானி .அவளுடைய அந்த அமைதியான நிலை , யுவராஜின் கோபத்தை மேலும் தூண்ட அவன் அவளை நெருங்கி அவள் தோள்களை அழுத்தி பிடித்தான்.

” என்னடி பணம் கொடுத்தால் மட்டும் போதுமா உனக்கு ? இல்லை என்றால் அந்த கரிச்சட்டி  மூஞ்சிக்காரனோடு அப்படி ஒட்டிக்கொண்டு திரிவாயா ? “




இந்த அபாண்டத்தை பொறுக்க முடியாத தேவயானி வெறுப்புடன் அவனை உதறினாள் .ஒரு உதறலில் தள்ளிப்போய் விழுந்தவன் , அந்த ஆத்திரத்தில் எழுந்து மீண்டும் வேகமாக அவளிடம் வந்தான்.

” என்னையா கீழே தள்ளி விட்டாய் ? உன்னை என்ன செய்கிறேன் பார் “

யுவராஜிடமிருந்து திடுமென்று இந்த வேகத்தை எதிர் பார்க்காத தேவயானி திடுக்கிட்டாள் .தன்னை இறுக்கி அணைக்க முயலும் அவனிடமிருந்து விடுபட முயற்சித்தாள்.

” யுவராஜ் முட்டாள்தனம் செய்யாதீர்கள் .அண்ணனும் ,  அண்ணியும் இப்போது வந்துவிடுவார்கள் .அம்மா இங்கே தான் இருக்கிறார்கள். குடில்கள் பக்கம் போய் இருக்கிறார்கள். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து விடலாம். என்ன வேலை செய்கிறீர்கள் ? “

” உன் அண்ணனும் ,  என் தங்கையும் இப்போதைக்கு வரமாட்டார்கள். பஞ்சவர்ணமும் , மருதாணியும் அருவிக்கரை பக்கம் சுத்தம் செய்யும் வேலையில் இருக்கிறார்கள். உன் அம்மா குடில்களுக்கு போனால் திரும்ப வர ஒரு மணி நேரமாவது ஆகும் .நமக்கு நிறைய நேரம் இருக்கிறது. வா …ஒரே ஒரு தடவை …”  கண்களில் வெறியோடு அவளை நெருங்கினான்.

                                                           —————-+

” எங்கே இருக்கிறான் என்றே தெரியவில்லை சொர்ணம் .போன வாரம் இங்கிருந்து போனவன்தான் .அதன் பிறகு அவனைப் பற்றிய தகவல்கள் எதுவும் வரவில்லை .எங்கே கிடந்து உருண்டு கொண்டிருக்கிறானோ தெரியவில்லை ” கண்கள் கலங்க சொர்ணத்திடம் சொல்லிக்கொண்டிருந்தாள் மனோரஞ்சிதம்.

மகள் தனியாக வீட்டில் இருக்கிறாள் என்ற நினைப்புடன் அவசரமாக கிளம்பிக் கொண்டு இருந்தவள்தான் .மனோரஞ்சிதம் தன்னுடைய இளைய மகனை பற்றி பேச ஆரம்பிக்கவும் அப்படியே உட்கார்ந்து விட்டாள் சொர்ணம் .

” கவலைப்படாதீர்கள் மேடம். ரிஷி தம்பி அப்படி ரொம்ப கேவலமான நிலைமைக்கு போகிறவர் கிடையாது .சீக்கிரமே உங்களிடம் திரும்பி வந்துவிடுவார் “




” எங்கே வருவான் ? நானும் பத்து ஆண்டுகளாக இப்படித்தான் என் மகன் என்னிடம் திரும்பி வருவான் …வருவான்னு உட்கார்ந்திட்டு இருக்கேன் ”  சோகப் பெருமூச்சு விட்ட மனோரஞ்சித்த்தின் கண்கள் சொர்ணம் அறியாமல்,  கீழே சரிவில் தெரிந்த அவளது வீட்டின் வாசலை பார்த்தன. அவள் பார்க்க யுவராஜ் வீட்டிற்குள் போய் பத்து நிமிடங்கள் ஆகிவிட்டன .இன்னமும் கூட பத்து நிமிடங்கள் தள்ளலாமே …மனோரஞ்சிதம் சொர்ணத்திடம் மேலும் பேச்சை வளர்க்கலானாள் .

” எங்கே …எந்த இடத்தில் என் மகனை தவறவிட்டேன்னு தெரியலையே சொர்ணம் ?  .திரும்ப எப்படி அவனை பிடிச்சு வச்சுக்க போறேன்னும் தெரியலை .”

                                                            ——————–

தேவயானி திகைத்தாள்.  ஆக ,  இவன் முன்பே திட்டமிட்டுத்தான் வந்திருக்கிறான் .ஆனால் இவனுக்கு தன்மேல் இப்படி ஒரு எண்ணம் இருக்கும் என்று அவள் நினைத்தே பார்த்ததில்லை .சிலநேரங்களில் ஒருவகையான பார்வையுடன் அவளை நெருங்கி இருக்கிறான்தான் .ஆனால் மணம் முடிக்க போகும் பெண் என்ற அவனுடைய உரிமை பார்வை என்று எண்ணி தேவயானி அவனை விட்டு நகர்ந்து விடுவாள் .மேலும் அந்த வகைகள் அவளை மிகவும் கூச வைப்பதால் , அவனருகில் நிற்கும் மனது கூட வராது .மிக தூரமாக …அவன் சொல்வது போன்றே , அவன் சுவாசக்காற்று கூட படாத  அளவு தூரத்திற்கு நகர்ந்து விடுவாள் .

யுவராஜனும்  அவளுடைய கோட்டை தாண்டி இதுநாள் வரை நெருங்க நினைத்தது இல்லை .ஆனால் …இன்று… ஏன் இப்படி ?  அவளுடைய குழப்பத்திற்கான விடையை யுவராஜ் விளக்கினான்.

” தள்ளித் தள்ளி போகும் ஒவ்வொரு தடவையும் உன்னை பத்தினின்னுதான்டி நெனச்சுக்கிட்டு இருந்தேன் .இப்போது தானே தெரிகிறது அப்படி ஒன்றும் பத்தினித்தனம் உனக்கு கிடையாது. இனிக்க இனிக்க நாலு வார்த்தை பேசினால் போதும் நீ பல்லைக் காட்டிக்கொண்டு பின்னாடியே வருவாய் என்று .நான் சிங்கப்பூர் போவதற்கு முன்பாகவே உன்னை முடித்து விட்டு போயிருக்க வேண்டும் .முட்டாள்தனமாக விட்டுட்டு போய்விட்டேன் ..இப்போது உன்னை பற்றி நன்றாக தெரிந்த பிறகும் ,  இன்னமும் உன்னை தொடாமல் விட்டு வைத்திருந்தால்,  நானெல்லாம் என்ன ஆம்பளை ? ” கேட்டுக்கொண்டே அவளை நெருங்கி பற்றினான்.

” சீ முட்டாள் உனக்கு கொஞ்சம்கூட மூளையே கிடையாதா ? விடு என்னை ” மிகுந்த அருவருப்பு காட்டிய அவள் முகத்தை பார்த்தவனின் முகம் செந்தணலாய் எரிந்தது.

” என்னைப் பார்த்தால் உனக்கு இவ்வளவு அருவருப்பாக இருக்கிறதா ? வேண்டுமென்றால் ஒன்று செய்யேன் கண்ணை மூடிக்கொண்டு அந்த ரிஷிதரனை மனதிற்குள் என் இடத்தில் நினைத்துக்கொள்ளேன் . அப்போது சரியாக இருக்குமென்று நினைக்கிறேன் ”  கொக்கரித்தான்.

யுவராஜ் தேவயானியை காயப்படுத்தி , அவள் தைரியத்தை குறைப்பதற்காகவே இதனை சொன்னான் .ஆனால் தேவயானி தன்னையே மீட்டெடுக்க , அந்த பெயரே போதுமானதாக இருந்தது . யுவராஜின் யோசனைப்படி கண்களை இறுக மூடி ,மனதிற்குள் ரிஷிதரனை நிலை நிறுத்தியவள்  ஆதிசக்தியின் பலத்தை மனதிற்குள் பெற்றாள்.

                                                                ——————–




ஒலித்த போனை எடுத்த மனோரஞ்சிதம் , ” ம் சரிதான் சுந்தரேசா . உடனே திரும்பி வந்துடுங்க ”  என பேசவும் , சொர்ணம் அவளை ஆச்சரியமாக பார்த்தாள் .

” மேடம், திருச்சி போன சுந்தர்கிட்டவா பேசுனீங்க ? உங்கள் பாக்டரியில் வேலை பார்க்கும் பெண்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரி டிரஸ் எடுக்கனும்னு சொல்லித்தானே உதவிக்கு சுந்தர் கூட சுனந்தாவையும் சேர்த்து அனுப்புனீங்க ? இப்போது

ஏன் திரும்ப வரச் சொல்றீங்க ? “

” ஆமாம் சொர்ணம்  சுந்தரேசனையும் , சுனந்தாவையும் அரை மணி நேரம் முன்னாலதான் அனுப்பினேன் .இப்போது கொஞ்ச நேரம் முன்பு அந்த டிரஸ்செஸ்லாம் அங்கே சரிதாவே வாங்கி வைத்து விட்டாளாம் .போனில் சொன்னாள் .அதுதான் உடனே திரும்ப சொல்லிட்டேன் . இங்கே வர்றதுக்கு முன்னாலே  எதுக்கும் இருக்கட்டும்னு என்கிட்ட கன்பார்ம் பண்ணிக்கிறாங்க இரண்டு பேரும் .

இதோ இரண்டு பேரும் பசுமைகுடில் வாசலுக்கு வந்துட்டாங்க .இன்னமும் அஞ்சு நிமிசத்துல வீட்டுக்கு வந்துடுவாங்க .சொர்ணத்திடம் விபரம் சொல்லிவிட்டு மீண்டும் மனோரஞ்சிதம் சன்னல் வழியாக பார்க்க , சொர்ணம் வீட்டு வாசலில் சுந்தரேசனின் பைக் வந்து நின்றது .

ஒரே தள்ளலில் வாசல் படி அருகே வந்து விழுந்த தன்னுடைய நிலையை நம்பமுடியாமல் , அப்படியே ஒரு நிமிடம் கிடந்தான் யுவராஜ்.பிறகு திடுமென வரவழைத்துக் கொண்ட ஆவேசத்துடன் அவன் மீண்டும் எழுந்து தேவயானி பக்கம் பாய்ந்தபோது அவனது சட்டைக்காலர் அழுத்தமாக பற்றப்பட்டு அவன் பின்னிழுக்கப்பட்டான் .

                                                                 ——————-

” வா சொர்ணம் , சுந்தரேசனிடம் சில விபரங்கள் பேச வேண்டும் , ” மனோரஞ்சிதம் சொர்ணத்தையும் அழைத்துக கொண்டு கிளம்பினாள் .

அவர்கள் வீட்டிற்குள் நுழையும் போது சுந்தரேசன் , யுவராஜை சுவரில் அழுத்தி நிற்க வைத்து கழுத்தில் கை வைத்து நின்றிருந்தான் .” என்ன இது ? ” உறுமிக் கொண்டிருந்தான் .

” ஐயோ , சுந்தரேசா என்ன இது ? அவர் உங்கள் வீட்டு மாப்பிள்ளை .அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டாமா ? கையை எடு ” பதறியபடி உள்ளே நுழைந்தாள் மனோரஞ்சிதம்.

” மாப்பிள்ளையா ? வீட்டில் ஆள் இல்லாத நேரமாகப் பார்த்து , என் தங்கையின் மீது கை வைக்க நினைக்கிறான். இவனுக்கு அந்த உறவை கொடுக்க வேண்டுமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் ” சுந்தரேசன் கர்ஜிக்க , சுனந்தா கைகளை பிசைந்தாள் .என்ன முட்டாள்தனமடா இது ? என்று அவள் அண்ணனை பார்வையால் திட்டிக் கொண்டிருந்தாள்




திருச்சி போவதாகச் சொன்ன தங்கையும் ,  மச்சானும் எப்படி உடனே திரும்பினார்கள் ? உன்னிடம் நிறைய பேசவேண்டும் சொரணம் வா , என்று என் காதுபட தானே இந்த அம்மாள் அழைத்துப் போனாள் ?  இருவரும் திடீரென்று எப்படி வந்தனர் ? தான் நினைத்து வந்த காரியம் நிறைவேறாமல் போய்விட்ட சூழலில் குழப்பத்தோடு நின்றிருந்தான் யுவராஜ்.

அந்த குழப்ப சூழ்நிலையை மிக எளிதாக தன் பக்கம் திருப்பிக்கொண்டாள் மனோரஞ்சிதம் .அவளுடைய பேச்சு சாதுரியத்தால் தேவயானியின் திருமணம் சுந்தரேசனால்  நிறுத்தப்பட்டது .மேலும் அங்கே தேவயானிக்கு பாதுகாப்பற்ற நிலைமை என்ற மனோரஞ்சித்த்தின் வாதம்  ஏற்றுக்கொள்ளப்பட்டு , அவள்

மனோரஞ்சிதத்தின் செக்ரட்ரியாக சென்னை பயணமாக ஆரம்பித்தாள்.

” முடியாது என்று சொன்னாயே சசி ! முடித்து விட்டேன் .நாளை காலை தேவயானியுடன் சென்னை வருகிறேன் .எல்லா ஏற்பாடுகளையும் செய்து வை ” கிளம்புவதற்கு முன் மனோரஞ்சிதம் சசிதரனுடன் போனில் பேசினாள்.

பச்சை மலை பூவு சென்னையை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது.

 

                                                  ( முதல் பாகம் நிறைவுற்றது )




வரும் வாரம் முதல் இரண்டாம் பாகம் ஆரம்பம் ஆகும் தோழமைகளே .தொடர்ந்து என் கதைகளை வாசித்து ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் பேரன்பும் பிரியங்களுடன் நன்றிகள்

What’s your Reaction?
+1
17
+1
19
+1
2
+1
2
+1
2
+1
0
+1
12
Subscribe
Notify of
guest

7 Comments
Inline Feedbacks
View all comments
Priya
Priya
2 days ago

Mam second part venum mam

Sindhu
Sindhu
23 days ago

Pachai malai poovu part 2 epo mam?

muthuravi
muthuravi
2 months ago

this story eppa varum sis
egarly waiting

Harshini
Harshini
2 months ago

Hello Mam, when shall we get part 2 of paccha malai poovu . Waiting for more than 2years

Vall
Vall
9 months ago

பச்சை மலை பூவு பாகம் எங்கு கிடைக்கும்

2
0
Amuthavalli M
11 months ago

அடுத்த,அத்தியாயம்பதிவுபோடுங்க.பச்சமலைபூவுநாவல்பாகம்.இரண்டுபோடுங்க

14
3
Kapana
Kapana
1 year ago

Story super. But remaining part??





7
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!