Serial Stories தவிக்குது தயங்குது ஒரு மனது

தவிக்குது தயங்குது ஒரு மனது -17

17

 

” அப்புறம் …அந்த சாமி தோளில் வைத்திருந்த பையை திறந்து ….” சிண்டும் , நண்டுமாக அவளை சுற்றி அமர்ந்திருந்த வாண்டுகளிடம் தனது அனுபவங்களை சொல்லிக் கொண்டிருந்தாள் சுகந்தி .

 

அரை மணி நேரம் , அருவிக் கரைக்குப் போய் குளித்து விட்டு வருவதற்குள் …பற்களை நறநறத்தபடி அவளருகே வந்தான் சாத்விக் .




” அந்தப் பேச்சை விடு என்றேனே சுகந்தி ”

 

” நான் சொல்வது நிஜம் சாத்வி ” நம்பி விடேன் என்பதாக அவனை அண்ணார்ந்து கெஞ்சலாக பார்க்க , அவன் நம்புவதற்கில்லையென தீர்மானமாக தலையசைத்த போது …

 

” டாக்டரம்மா சொன்னது கனவா …?நனவான்னு இப்போ தெரிஞ்சுடும். இந்தாங்கம்மா நீங்க கேட்ட பொருட்கள் ” மாடசாமி அவள் முன் கடை பரப்பினான் .

 

முகம் முழுக்க மின்னிய ஆர்வத்துடன் அவள் அந்த பொருட்களை ஆராய்ந்தாள் .வேப்பிலை ,மஞ்சள் , கறிவேப்பிலை ,நெல்லிக்காய் என அவளது கனவு சித்தர் காட்டிய பொருட்கள் .





அவற்றின் முன் சம்மணமிட்டு அமர்ந்தாள் .விழிகளை இறுக மூடிக் கொண்டு , ஒவ்வொரு பொருளிலிருந்தும் தனது விரற்கடை அளவு வைத்து எடுத்துக் கொடுத்தாள் . அருகிலிருந்த மலைவாசிப் பெண் அவற்றை அரைக்க ஆரம்பித்தாள் .

 

” இவை  எல்லாமே நீங்கள் எழுதியிருக்கும் பார்முலாபடிதானா டாக்டரம்மா ? ”

 

” அது தெரியவில்லை .எனது கனவில் வந்த அளவுகளை நினைவுறுத்தி எடுத்திருக்கிறேன் .இத்தோடு தண்ணீர் …இருங்கள் சாமி அங்கே இருந்த சுனை நீரையல்லவா ஊற்றினார் .அதன் அளவை எப்படி தெரிந்து கொள்ள …? அந்த தண்ணீர்….” இரு கண்களையும் இறுக மூடி தனக்குள் எதையோ உணர்ந்தவள் …

 

” ஹான் …அது துளசி நீர். எனக்கு தீர்த்தமாக கொடுத்தாரே  ” என்றாள் .

 

” இதோ இப்போதே துளசி கொண்டு வருகிறேன் ” மாடசாமி ஓடிப் போய் கொண்டு வந்தான் .




” என் நாக்கிற்குத்தான் இந்த துளசி தீர்த்த அளவு தெரியும் சாமி .சிறிது அளவு மாறினாலும் மருந்து கிடைக்காது ” சுகந்தி துளசி தீர்த்தம் தயாரித்து தனது நாக்கில் அதனை விட்டுப் பார்த்து அளவு மாறுபாடுகளை சொன்னாள் .

 

அனைத்துப் பொருட்களையும் கலந்து மருந்துக் குளிகைகள் தயாராகி விட்டன. அவற்றை எடுத்துக் கொண்டு அன்று மாலை அவர்கள் சென்னை திரும்புவதாக ஏற்பாடு .

 

” நீ கொஞ்ச நேரம் உறங்கி எழு சுகி ” சாத்விக் சுகந்தியின் கையை வலுக்கட்டாயமாக  பிடித்தெழுப்பி படுக்க வைத்தான் .

 

வெளியே ஏதோ சத்தம் கேட்டு தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டாள் சுகந்தி .எழுந்து போய் பார்த்தவள் அதிர்ந்தாள் .சாத்விக் மாடசாமியின் சட்டையை பிடித்து உலுக்கிக் கொண்டிருந்தான் .





” மரியாதையாக சொல்லுடா , எங்கே அந்த மாத்திரைகள் ? ”

 

” சாத்விக் என்ன இது ?சாமியிடம் ஏன் கேட்கிறீர்கள் ? மாத்திரைகள் என்னிடம்தான் இருக்கிறது ” சொல்லிவிட்டு குடிசைக்குள் வேகமாக ஓடி பார்த்தவள் , தான் வைத்த இடத்தில் மாத்திரைகளை காணாமல் அதிர்ந்தாள் .

 

” மருந்துகளை காணோம் சாத்வி ” பதறினாள் .

 

” இதோ இந்த மகாப் பெரிய மனிதர்தான் அதனை எடுத்து ஒளித்து வைத்திருக்கிறார் .ஏய் எங்கேடா வைத்திருக்கிறாய் ? ”

 

இத்தனை உலுக்களுக்கும் மாடசாமி பதிலில்லாமல் நிற்க , அவனது இறுகிய முகம் சுகந்திக்கு எதையோ உணர்த்த , அவன் முன் போய் நின்றாள் .





” சாமியை எப்போதும் நம்ப வேண்டாம் ” சித்தரின் குரல் காதில் ஒலிக்க , ” என்ன சாமி இது ? ” என்றாள் .

 

” நீங்க என்னை ஏமாத்திட்டீங்க டாக்டரம்மா .நாம் இரண்டு பேரும் சேர்ந்து கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்து கஷ்டப்படும் ஏழை மக்களுக்கெல்லாம் உதவி செய்ய வேண்டுமென்று நினைத்தேன். நீங்க என் பின்னாடி வருவீங்கன்னு நினைத்தேன் .ஆனால் கொஞ்சம் தோல் வெள்ளையா இருக்குன்னு இவர் பின்னால் போயிட்டீங்களே ! இது நியாயமா ? ”

 

” சாமி உங்கள் மனதுக்குள் இவ்வளவு நாட்களாக இத்தனை கபடத்தை வைத்துக் கொண்டா என்னுடன் பழகினீர்கள் ? ”

 

” கபடமா …? நானா …? நீங்கள் இருவருமா ? கூடவே ஒருவன் வருகிறானென்பதையே மறந்து , இரண்டு பேரும் எவ்வளவு காதல் விளையாட்டு விளையாடினீர்கள் ? அதெப்படி என்னை பக்கத்தில் வைத்துக் கொண்டு இன்னொருவனுடன் உங்களால் காதல் பேச முடிகிறது டாக்டரம்மா ? ”





” முட்டாள் ! நான் என்றாவது உன்னிடம் அப்படி பழகி இருக்கிறேனா ? ”

 

” நானில்லாமல் எங்கள் ஆட்களின் இந்த இடத்திற்குள் நீங்கள் வந்திருக்க முடியுமா ? கொரோனா மருந்துதான் கண்டு பிடித்திருக்க முடியுமா ? உங்களை இங்கே கூட்டி வந்த நான் முட்டாள்தான் ”

 

” மாடசாமி , சுகந்தி அவளது ஆழ்மன விபரங்களால் மருந்து கண்டுபிடித்தாளே தவிர , உனது சித்தரால் இல்லை ” சாத்விக் கூறினான் .

 

” ஆஹா பார்த்தீர்களா !கண் முன்  நடந்தது எல்லாம் பொய்யென்று சொல்லி என்னை ஒதுக்க பார்க்கிறீர்களே ! அந்த மருந்து கண்டுபிடித்ததில் எனக்கும் பங்கு இருக்கிறது .”

 

” நிச்சயம் உங்களுக்கும் அந்த மருந்தில் உரிமை  உண்டு சாமி ” சுகந்தி சொல்ல , மாடசாமியின் கண்கள் மின்னின.

 

” ஆமாம் .என் உரிமையை நான் எடுத்துக் கொண்டேன் .மருந்தை எனது வெளிநாட்டு தோழிக்கு விற்று விட்டேன் .”




” நோ …” அலறலுடன் போய் அவன் சட்டையை பிடித்தாள் சுகந்தி .” எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த மருந்தை கண்டுபிடித்தேன் தெரியுமா ? நம் நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் செத்துக் கொண்டிருக்க , வெளிநாட்டிற்கு தாரை வார்ப்பாயா நீ ? நான் விடமாட்டேன் ” உலுக்கினாள் .

 

” சுகந்தி நீ நகர்ந்து கொள் .இவனை நான் பார்த்துக் கொள்கிறேன் ” சாத்விக் அவளை மாடசாமியை விட்டு பிரிக்க முயன்று கொண்டிருந்த போது , திடுமென அவன் தள்ளிப் போய் விழுந்தான் .

 

இருளன் தன் மகனை பிடித்து தரையில் தள்ளியிருந்தான் .இருளப்பசாமியை ஒத்தாற் போன்ற கோபத்துடன் நின்றிருந்தான் .” வேலை கொடுத்தவர்களுக்கு துரோகம் , தோழர்களுக்கு துரோகம் , பிறந்த நாட்டிற்கே துரோகம் .உன்னை பெற்றதற்காக வெட்கப் படுகிறேன் .அந்த மருந்தை எங்கே வைத்திருக்கிறாய் ? ”

 

” நீதான் துரோகி அப்பா .பெற்ற பிள்ளையை விற்றாயே ! அங்கேயும் வாழ முடியாமல் , இங்கேயும் வர முடியாமல் தவித்துக் கொண்டு கிடக்கிறேனே ! நீங்கள் யாரும் எனக்கு வேண்டாம் .இந்த நாடே வேண்டாம் .நான் என் மருந்துகளோடு வேறு நாடு போகிறேன் ” கத்தினான் .




” ஐயா , நான் மாடசாமியை கண்காணித்தபடிதான் இருக்கிறேன் .இங்கே வெளியாட்கள் யாரும் வரவில்லை .மாடசாமி மருந்துகளை இங்கேதான் வைத்திருக்க வேண்டும் .தேடி எடுக்க முடியுமா ? ” சாத்விக் கேட்க , இருளன் ” எல்லோரும் போய் தேடுங்கள் ” என தன் கூட்டத்தினருக்கு சொல்லிக் கொண்டிருக்கையில் மாடசாமியின் அம்மா ஓடி வந்தாள்

 

” மருந்து இதோ இருக்கிறது .” அவள் கையில் ஒரு மூங்கில் கூடை .” சிறு வயதில் இவன் ஒளித்து வைத்து விளையாடிய இடங்களில் தேடினேன் . இவன் இன்னமும் அப்படியேதான் இருக்கிறான் .வளரவேயில்லை ” சொன்னபடி கூடையை சுகந்தியின் கையில் கொடுத்தாள் .

 

” அம்மா ” அலறிய மகனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் .” சீ …வாயை மூடு .இனி இந்தக் காட்டை தாண்டி உன்னை அனுப்ப மாட்டோம்.எந்த வெளிநாடு போகிறாயென்று பார்ப்போம் ”

 

சாத்விக் நெகிழ்வுடன் அவர்களை பார்க்க ” காட்டு மனுசங்கதாங்க வைத்தியரய்யா .ஆனால் எங்களுக்கும் நாட்டுப்பற்று ,மக்கள் நலனில் அக்கறை எல்லாம் உண்டு .மருந்தோடு போய் வாருங்கள் .இனி இவனால் உங்களுக்கு தொல்லை வராது ” இருளன் கூற சாத்விக் அவனை ஆரத் தழுவிக் கொண்டான் .




சுகந்தி இது எதையும் கவனிக்காது தனது மருந்து குளிகைகளில் ஆழ்ந்திருந்தாள் .

 

What’s your Reaction?
+1
3
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!