Serial Stories Thereri vantha nila தேரேறி வந்த நிலா

தேரேறி வந்த நிலா – 4

4

” இன்று டூயட் சீன் வைசாலி .எங்க புரொட்யூசர் டிரஸ் விசயத்தில் ரொம்ப கஞ்சத்தனம் .அதனால் இன்று என்னோட டிரஸ் இதோ இது ….” விரக்தியை வேடிக்கையோடு சொல்லியபடி அம்ருதா தூக்கி போட்ட டிரஸ்ஸை கண்ணால் பார்க்கவும் கூசினாள் வைசாலி .

” என்னம்மா ..பார்க்கவே அருவெறுப்பாக இருக்கிறதில்லையா …? ஆனால் நான் இதனை அணிந்து நடித்தாக வேண்டும் .சுற்றி சுற்றி நடனமாட வேண்டும் .என் தலையெழுத்து ” மேக்கப்பிற்கு தயாராக தன் முகத்தை துடைத்தபடி சாய்ந்து படுத்தாள் .




அவள் முகத்தை தடவி பார்த்த வைசாலி ” டைம் இருக்கிறதில்லையா மேடம் .அழுக்கு நிறைய தெரிகிறது .கிளீன் பண்ணிவிடுகிறேன் ” என்றாள் .

” டைமெல்லாம் இருக்கு .நீ நிதானமாகவே வேலையை தொட்ங்கு ” எனவும் , காட்டனை பாலில் நனைத்து முகம் , கழுத்தில் தடவினாள் .மூன்று நிமிடம் உலரவிட்டு சுத்தமான காட்டனால் அழுத்தமாக துடைத்து எடுத்துவிட்டு , இப்போது முகத்தை திருப்தியுடன் பார்த்துவிட்டு  பவுண்டேசனை தடவ தொடங்கினாள் .

அவளது கண்கள் அருகிலிருந்த நாற்காலியில் கிடந்த அந்த உடையில் படிந்த்து .எவ்வளவு மோசமான உடை …!! இதை அணிந்து கொண்டு ஐம்பது பேர் சுற்றி நிற்க எப்படி ஒரு பெண்ணால் ஆட முடியும் …? சை ..பார்வையை திருப்பிக் கொண்டாள் .

ஒரு விதமான மரத்த முகத்துடன் தொய்வாக சாய்ந்திருந்த அம்ருதாவை பார்த்தாள் .

” உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் இதையெல்லாம் விட்டு விடலாமில்லையா மேடம் ..? ” இன்று வேதா இல்லை .அவள் அருகிலிருக்கும் போது வைசாலி , அம்ருதாவிடம் இப்படியெல்லாம் பேசி விட முடியாது .எந்நேரமும் தள்ளி நில்லு என்ற பார்வையுடன் இவளை பார்த்தபடி அம்ருதாவின் அருகிலேயே நிற்பாள் அவள் .இன்று அவள் இல்லாத்தால் வைசாலியால் இப்படி பேச முடிந்தது .

” எந்த பெண்ணும் இதையெல்லாம் விரும்பி செய்ய மாட்டாள் வைசாலி ..”

” அது எனக்கு தெரியும் மேடம் .உங்களுடைய விருப்பமின்மையையும் நான் நிறைய நேரங்களில் உணர்ந்தே இருக்கிறேன் .தெரிந்தே எதற்காக இந்த பள்ளத்திற்குள்  விழ வேண்டுமென்று நினைக்கிறீர்கள் …? “




” வெளியேற யாராவது ஒரு சிறு குச்சியை நீட்டினால் கூட போதும் .பிடித்துக்கொண்டு வெளியேறிவிடுவேன .ஆனால் அந்த குச்சி நீட்டும் கைகள்தான் இல்லை .ஒவ்வொரு கையாக தடவி தடவி பார்த்து ஏமாந்து கொண்டிருக்கிறேன் …” அம்ருதாவின் குரல் கரகரத்தது .

” மேடம் மேக்கப் ….” கண்ணீரில் கலைந்துவிடக்கூடாதே ..என நினைவுறுத்தினாள் வைசாலி .

” ம் …பயப்படாதே இப்போது அழமாட்டேன் .இன்னும் கொஞ்ச நேரத்தில் ஹீரோவோடு சேர்ந்து உருளவேண்டும் .அப்போது காதல் வழியவேண்டும் கண்களில் .இப்போது போய் அழுதால் எப்படி ..? ” என்றவள் கை கண்ணாடியை கண் முன் வைத்து பார்த்து விதம் விதமான காதல் , போதை பார்வைகளை பயிற்சி செய்ய தொடங்கினாள் .

” மேடம் அந்த டிரஸ்ஸை மாற்றிக் கொண்டீர்களானால் , உடம்பிற்கும் மேக்கப் போட்டுவிடுவேன் ….”

அம்ருதா அந்த உடையை மாற்றிக்கொண்டு நின்றபோது வைசாலிக்கு உண்மையாகவே கண்களை மூடிக்கொள்ள வேண்டும் போலத்தான் இருந்த்து .

” என்ன கண்ணை குத்திக்கலாம் போல இருக்கா …? கொஞ்சம் பொறுத்துக்கோ …என்ன ..!!ஏன்னா உனக்கும் வேறு வழியில்லை ..எனக்கும் வேறு வழியில்லை ..நீ தெருவில் போகும் போது எத்தனை நாய் , பன்னி , கழுதைன்னு பார்த்திருப்பாய் .அதில் ஒன்றாக என்னை நினைத்துக்கொள் …என்ன …” சாதாரணமாக இதை கூறியவளை பரிதாபமாக பார்த்தாள் வைசாலி .

” ஏன் மேடம் இப்படி பேசுறீங்க ….? “

” உண்மையை சொன்னேன்மா …நீ ஆரம்பி …”




உடை மறைத்த பாகங்களை தவிர்த்து பிற பாகங்களுக்கு கிரீமினால் மெருகேற்ற ஆரம்பித்தாள் வைசாலி .உடம்பில் ஆங்காங்கு இருந்த தழும்பு , மரு , மச்சம் போன்றவற்றை மறைத்து மேக்கப்பால் மேனியினை பளிங்கு போல் பளபளப்பாக்கினாள் .

” ஏற்கெனவே நீங்கள் நல்ல நிறம் மேடம் .இப்போது தங்கம் போல் ஜொலிக்கிறீர்கள் …” என்றாள் மேக்கப் முடித்து திருப்தியோடு அவளை பார்த்து .

” ஆமாம் இந்த தங்க நிறத்தினால்தானே தாக்கு பிடித்து ஐந்து வருடங்களாக இந்த பீல்டில் நின்று கொண்டிருக்கிறேன் .ஆனால் இப்போதெல்லாம் ஏனோ மனதிற்கு மிகவும் வெறுப்பாக இருக்கிறது வைசாலி ..”

” பேசாமல் திருமணம் முடித்து செட்டிலாகி விடுங்கள் மேடம் …”

” திருமணமா ..? எனக்கா …? ஜோக் பண்ணாதே வைசாலி .அதெல்லாம் தினமும் நான் தூங்கிய பிறகு எனது கனவில்தான் நடக்கிறது .எனக்கு அவ்வளவு உயர்ந்த வாழ்வு கூட வேண்டாம்மா .யாராவது ஒருத்தனுடன் செட்டிலானால் கூட போதும் .”

அவள் கூறியதன் பொருளுணர்ந்து அதிர்ந்து ” என்ன மேடம் இப்படி சொல்கிறீர்கள் …? ” என்றாள் .

” பின்னே …என்னை பத்தினின்னு போற்றி புகழ்ந்து எனக்காக அக்கினி வளர்த்து தாலி கட்ட ஒருத்தன் வருவானென்றா  நினைக்கிறாய் ..? அப்படியே ஒருத்தன் வந்தாலும் மற்றவனுங்க விட்டுடுவானுங்களா …? இந்த ஆம்பளைங்களையெல்லாம் …” என்று பல்லைக் கடித்தவள் கொச்சையாக ஒரு கெட்ட வார்த்தையை உதிர்த்தாள் .

அந்த வார்த்தையில் அதிர்ந்து விழித்தவளை பார்த்து ” சாரிம்மா …என் மனவேதனை இப்படி வருகிறது ….” உன் போன்ற குடும்ப பெண்களுக்கெல்லாம் இது கஷ்டமாகத்தான் இருக்கும் .எனக்கு மரத்துவிட்டது …” என்றாள் .




அறைக்கதவு தட்டப்பட்டது .” வேதா அக்காவான்னு பாரு .அவளை ஒரு முக்கிய வேலையாக  அனுப்பிநிருந்தேன் ” மேலே ஏறிக் கொண்டே போன அந்த உடையை கீழே இழுத்து விட வழியிருக்கிறதா ..என கண்ணாடியை பார்த்து ஆராய்ந்தபடி கூறினாள் அம்ருதா .

” ஹாய் ப்யூட்டி … ” என வெளியே இளித்தபடி நின்றான் ஒருவன் .அவசரமாக அறையின் ஓரம் ஒதுங்கினாள் வைசாலி .மூதேவி முழிக்கிற முழியை பாரு ..என அவனை வைதபடி .

அவள் விலகியதும் உள்ளே போன அவனது பார்வை அம்ருதாவை கண்டதும் அகலமாக விரிந்த்து .” ஏய் அம்ரு …அட..அட …இந்த டிரஸ்ஸில் என்னமாக ஜொலிக்கிறாய் நீ ….ஐயோ எனக்கு கண்ணே கூசுதே ” என்றபடி வேகமாக உள்ளே வந்து அம்ருதாவை இறுக அணைத்தான் .

இயந்திரமாக அவனது அணைப்பை ஏற்றுக் கொண்ட அம்ருதா அவன் தோள் வளைவு வழியாக பார்த்தபடி வெளியே போய்விடும்படி வைசாலிக்கு ஜாடை காட்டினாள் .அதற்காகவே காத்திருந்தாற் போல் துடிக்கும் மனதுடன் வேகமாக வெளியேறிவிட்டாள் .

சை ..பொறுக்கிங்க …இவன் கேமெரா அஸிஸ்டென்ட் …எவ்வளவு சுலபமாக அணைக்கிறான் .சற்றுமுன் அம்ருதா சொன்ன கெட்ட வார்த்தை சரியானதாக தோன்றியது .முதலில் அவன் தன்னை பார்த்த பார்வை நினைவு வர ,கூடவே அம்ருதாவை அணைத்தபடி தன்னை உரிப்பது போல் பார்த்த பார்வை…. உடம்பெல்லாம் தீ பிடித்தாற்போல் எரிந்த்து .

வெளியே டூயட் சீனுக்காக குட்டியாக ஒரு தடாகமும் , அதில் அருவி போலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்து .அம்ருதா போட்டுக்  கொண்டிருக்கும் உடையே ..ரொம்ப லட்சணம் .இதில் இந்த நீரினுள் வேறு நனைந்தாலென்றால் …வைசாலிக்கு உடனே அந்த இடத்தை விட்டே  வெளியேறி விட வேண்டுமென்று தோன்றியது .

” ஏய் …மேக்கப் முடிந்த்தா …? இங்கே என்ன பராக்கு பார்த்துக் கொண்டிருக்கிறாய் …? ” அதட்டியபடி வந்தாள் வேதா .




” முடிந்ததுக்கா …” என்றவள் அவள் அறையை நோக்கி போக ” அக்கா ..உள்ளே …” என தயங்கி நிறுத்தினாள் .

” யார் உள்ளே ..? ” நின்று கேட்டாள் வேதா .

” கேமெரா அஸிஸ்டென்ட் ….” தலைகுனிந்து முணுமுணுத்தாள் .

அப்போது அம்ருதா உதிர்த்த வார்த்தை இப்போது வேதா உதடுகளில் . ” ருபாயை எண்ணும்போது மட்டும் நூறு கணக்கு பார்ப்பான் .இப்போது மட்டும் ஒரு கணக்கு , வழக்கு …கிடையாது ” என்று தாழ்ந்த குரலில் கூறியவள் …

” ஏன் மரம் மாதிரி நிற்கிறாய் …? போய் கதவை தட்டேன் …” என்றாள் .

” நானா ..? மாட்டேன் …”

” ஏன் …? “

” எனக்கு பிடிக்கவில்லை .நான் போக மாட்டேன் .” அழுத்தமாக கூறினாள் .

” அப்போ ஏன் இந்த வேலைக்கு வந்தாய் ..போ …ஒரேடியாக போய்விடு …” என்றாள் .வைசாலியின் வேலையை எப்படியாவது பறித்து விட வேண்டுமென்பதில் குறியாக இருப்பாள் வேதா .

இது பற்றி ஒருநாள் அம்ருதாவிடம் கூறியபோது அவள் ” வேதாக்கா அவர்கள் சொந்தக்கார பெண்ணென்று ஒருத்தியை இந்த வேலைக்கு அழைத்து வந்தார்கள் .எனக்கு அவளை விட உன்னைப் பிடித்து போனதால் உன்னை வேலைக்கு வைத்துக் கொண்டேன் .அதனால் ஏதாவது பேசுவார்கள் .நீ கண்டுகொள்ளாதே ” என சொல்லியிருந்தாள் .

நிமிர்ந்து அவளை பார்த்துவிட்டு ” செட்டுக்கு வெளியே மரத்தடியில் நிற்கிறேன். அடுத்த டிரஸ் சேஞ்சிங்கில் மேக்கப்பின் போது கூப்பிடுங்கள் ” என்று வெளியே நடந்தாள் .

அவள் முதுகை முறைத்தாள் வேதா .சீக்கிரமே உன்னை இந்த வேலையை விட்டு துரத்துகிறேனா ..இல்லையா பாரு ..என சொல்லிக்கொண்டாள் .

வெளியே மரத்தடியில் வந்து சற்று மறைவாக அமர்ந்து கொண்டாள் வைசாலி .அவளுக்கும் இந்த வேலை பிடிக்கவில்லைதான் .இதே போன்ற சம்பளத்தில் வேறு வேலை கிடைத்தால் உடனே இதனை விட்டு விட வேண்டும் என நினைத்துக் கொண்டாள் .




பொழுது போவதற்காக தனது போனை ஆன் செய்தாள் .வேலை பார்க்கும் போது அதனை ஆப் பண்ணிவிடுவது அவளின் வழக்கம் .ஆன் பண்ணவும் வரிசையாக மிஸ்டு கால்கள் . தனலட்சுமியின் ஒரு கால் .மீதி அனைத்தும அந்த மனோகரிடமிருந்து .

நான் போட்ட போது எடுக்கவில்லை .இப்போது என்ன இத்தனை அழைப்பு …அவன் அழைப்பை அலட்சியப்படுத்தி தனலட்சுமிக்கு போன் பண்ணினாள் .வேலை முடித்து வரும்போது வாங்கிக் கொண்டு வந்துவிடும்படி அவள் ஒன்றிரண்டு வீட்டு சாமான்கள் சொன்னாள் .வாங்கி வருவதாக கூறிவிட்டு கட் பண்ணியவள் ஏதோ எதிர்பார்ப்போடு போனை பார்த்தபடி இருந்தாள் .

இவள் எதிர்பார்ப்பை உணர்ந்தாற் போல் போன் ஒலிக்க தொடங்கியது .மனோகரிடமிருந்து ….அவன் கட் பண்ணியது போல் கட் பண்ணிவிடலாமா என யோசிக்க ஆரம்பித்தாள் வைசாலி .

What’s your Reaction?
+1
6
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!