gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/ஸ்ரீகிருஷ்ணர் விட்டலன்

மகாராஷ்டிரத்தில் பிறந்த புண்டலீகன் என்பவன் தன் மனைவியின் துர்போதனையால் தாய் தந்தையரை மதிக்காமல் கொடுமைப்படுத்தினான். ஒரு சமயம் புண்டலீகன் தன் குடும்பத்தோடு காசிக்குப் பயணமானான். அப்போது தாய்தந்தையரை நடக்கவிட்டு தனக்கும் மனைவிக்கும் மட்டும் குதிரை ஏற்பாடு செய்து கொண்டான்.

அன்று இரவு அவர்கள் குக்குட முனிவரின் ஆசிரமத்தில் தங்கினர். உறக்கம் வராததால் புண்டலீகன் வெளியே வந்து உலாவினான். அப்போது மங்கிய நிலவொளியில் குடிசையின் வாசலை, அழகற்ற தோற்றம் கொண்ட மூன்று பெண்கள் சுத்தம் செய்வதைக் கண்டான். சிறிது நேரத்திற்குப் பின் மூன்று தெய்வீக மங்கையர் ஆசிரமத்திலிருந்து வெளியேறினர். அவர்களைப் பணிந்தான் புண்டலீகன்.




தாய்மார்களே! நீங்கள் யார்? சற்று முன் குரூபிகளாக ஆசிரமத்தின் உள்ளே சென்றது யார்? வெளியே வந்துள்ள நீங்கள் யாரென்று கூறுங்கள் அம்மா. அதற்கு அவர்கள் மகனே, கங்கை, யமுனை, சரசுவதி நாங்கள். மக்கள் தங்கள் பாவங்கள் நீங்க எங்கள் நீரில் மூழ்குகிறார்கள். அவர்களின் பாவங்களிலிருந்து விடுபட நாங்கள் தினமும் இங்கு வந்து சேவை செய்கிறோம். புண்ணிய நதிகளான உங்கள் பாவங்களையே போக்கும் சக்தி இந்த முனிவருக்கு எப்படி வந்தது? என்று சந்தேகத்துடன் கேட்டான் புண்டலீகன்.

புண்டலீகா, இவர் தன் பெற்றோர்களை தெய்வத்திற்கும் மேலாகப் பேணி, பூஜித்துப் பணிவிடை செய்வதுதான். இது ஒன்றே இவருக்கு இத்தகைய சக்தியை அளித்துள்ளது. உடனே புண்டலீகன், தாயே கங்காதேவி! நான் வயதான என் தாய் தந்தையை மதிக்காமல் துன்புறுத்திவிட்டேன். என் பாவம் நீங்குவதற்கு நீங்கள்தான் வழிகாட்ட வேண்டும், என்று வேணடினான். மகனே, நீ இனியாவது உன் பெற்றோருக்குச் சேவை செய்து அவர்களை மகிழ்ச்சியாக வைத்திரு. இறைவன் உன்னிடம் கருணை காட்டுவார், என்றாள் கங்கா.

நீண்ட நேரம் பிரார்த்தனை செய்த பிறகு, தன் பெற்றோரின் பாதங்களில் வீழ்ந்து மன்னிப்பு வேண்டினான் புண்டலீகன்.

அவர்களும் அவனை மன்னித்தார்கள். புண்டலீகன் தன் தாய், தந்தையை அழைத்து வந்து, சந்திரபாகா நதியின் கரையில் ஆசிரமம் அமைத்து அவர்களுக்கு அன்புடன் சேவை செய்தான். அவன் மனைவியும் மனம் திருந்தினாள். புண்டலீகன் தன் பெற்றோருக்குச் செய்யும் சேவை பற்றி அறிந்து ருக்மிணியுடன் ஸ்ரீகிருஷ்ணர் அவனிடம் வந்தார். புண்டலீகா! புண்டலீகா! என்று அன்புடன் அழைத்தார் கிருஷ்ணர். ஓ கண்ணனா, வா, வா, இதோ, என் பெற்றோருக்குச் சேவை முடித்துவிட்டு வருகிறேன். அதுவரை இந்தக் கல்லின் மீது அமர்ந்து சற்று இளைப்பாறு என்று புண்டலீகன் கூறினான்.

கிருஷ்ணர் உட்காராமல் கல்லின் மேல் இடுப்பில் கை வைத்தபடி நின்றார். இந்தக் கல்லுக்கு ஒரு வரலாறு உண்டு. சுக்கிரன் மகன் வாஷ்டன் இந்திரனைக் கொன்று அந்தப் பதவியை அடைய விரும்பினான். அதனால் விருத்தாசுரனிடம் அவன் உதவி வேண்டினான். அப்போது அவன் கர்வமாக…. இதென்ன பிரமாதம்! இந்திரனை நான் ஒரு நொடியில் விழுங்கி விடுவேன் விருத்தாசுரன் சொன்னபடி செய்துவிட்டான்.




சிறிது நேரத்தில், தேவர்கள் ஜுரும்பிகாஸ்திரத்தை ஏவ, அதனால் தாக்குண்ட அசுரன் கொட்டாவிவிட்டான். அப்போது இந்திரன் சிறு உருவாய் வெளிவந்து தப்பித்தான். நாளடைவில் இந்திரனும் விருத்தாசுரனும் சமரசமானார்கள். ஆனால் இந்திரனுக்குப் பகைமை உணர்ச்சி ஒழியவில்லை. இவனை ஈரப் பொருளாலோ, உலர்ந்தப் பொருளாலோ கொல்ல முடியாது. ஆதலால் அம்பிகையை வேண்டி வரம் பெறுவோம்.

இந்திரன் வேண்டுதலால், கடலில் மலையளவு நுரை போன்ற விஷப் பொருள் ஏற்பட்டது. அதை வஜ்ராயுதத்தில் பூசி அசுரனைக் கொன்றான். இந்திரா, துரோகி! நீ என்னை வஞ்சித்து விட்டாய். கல்மனம் கொண்ட நீ ஒரு கல்ப காலம் கல்லாகிக் கிடப்பாய் என அசுரன் சாபமிட்டான். அந்தக் கல் கிடந்த இடத்தில்தான் புண்டலீகனின் ஆசிரமம் அமைந்திருந்தது. அந்தக் கல்லின் மீதுதான் புண்டலீகன் ஸ்ரீகிருஷ்ணரை நிற்கச் சொன்னார். இப்போது ஸ்ரீகிருஷ்ணரின் கால் பட்டதால் சாபவிமோசனம் பெற்ற இந்திரன் கல்லிலிருந்து வெளிப்பட்டான்.

பிரபோ, நமஸ்கரிக்கிறேன் தங்கள் திருவடி பட்டதால் சாபவிமோசனம் பெற்றேன். நீண்ட நேரம் கழித்து பெற்றோர் சேவை முடித்து வந்து புண்டலீகன் ஸ்ரீகிருஷ்ணரை வணங்கினான். மன்னிப்பு வேண்டினான். மாதா, பிதாவுக்குச் சேவை செய்வதற்காக என்னையே காக்க வைத்த உன்னை மெச்சுகிறேன். வேண்டும் வரம் கேள். விட்டலன் என்ற நாமத்துடன் தாங்கள் இங்கே எழுந்தருளி பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்ய வேண்டும். இந்தப் புனித இடம் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்குப் பக்தியையூட்ட வேண்டும். அத்திருத்தலம் புண்டலீகன் பெயரால் பண்டரீகபுரம் என அழைக்கப்பட்டு, பிறகு பண்டரிபுரமானது. விட் என்றால் கல் என்று பொருள். கல்லின் மீது நின்றதால் ஸ்ரீகிருஷ்ணர் விட்டலன் என்று அழைக்கப்பட்டார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!