Serial Stories நீரோட்டம்

நீரோட்டம் – 1

நவீனா மொட்டை மாடியில்  வானத்தைப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தாள். மனத்தை மயக்கும் அந்தி நேரம். விதவிதமான ஆரஞ்சு வண்ணங்களைக் காட்டி வானம்   மயக்கிக் கொண்டிருந்தது. 

பொழுது போகாத நேரங்களில் என்று இல்லாமல், பொழுது இருக்கும் போதெல்லாம் வானத்தை ரசிப்பவள் நவீனா. வானத்தின் வண்ணங்கள் அவளுக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு நிறத்தைக் காட்டும் வானத்தை ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்ப்பதில் அவளுக்கு மிகுந்த ஆர்வம். 

காலையில் உதயநேரத்து வானம் கருநீல நிறத்திலிருந்து விடுபட்டுக் கொண்டிருக்க, கதிரவன் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு என்று வண்ணங்களைக் காட்டி ‘பளீரென்று’வெள்ளைக்கு மாறுவது ஓர் அழகு. 

அதே போல மாலையிலிருந்து மெது மெதுவாக வானம் நிறம் மாறி இருட்டானதும் ஒவ்வொரு நட்சத்திரமாக மினுங்க ஆரம்பிப்பதும், நிலவு மெதுவாக மேலே ஏறுவதும் மிக அழகு. 

காலைக் காட்சி வேண்டுமானால் விடுதியின் மொட்டை மாடியிலிருந்து பார்க்க முடியுமே தவிர, இரவில் மொட்டை மாடிக்கு வர அனுமதி கிடையாது. எனவே விடுமுறையில் பௌர்ணமி வந்தால் நவினாவுக்கு மகிழ்ச்சி. 

அவர்கள் வீட்டு மாடியறையில் கட்டிலில் படுத்துக் கொண்டாலே சில மாதங்களில் ஜன்னல் வழியாக நிலவு வெளிச்சம் உள்ளே வரும். 

மனம் பழையதை நினைத்துக் கொண்டிருந்தாலும், கண்கள் வானத்தைப் பார்த்தவாறு இருந்தன. 

 வானத்தில் கருமேகங்கள் வெவ்வேறு உருவமாக மாறுவதை பார்த்துக் கொண்டிருந்தாள். வித்தை காட்டிக் கொண்டிருந்த மேகங்களை ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு பக்கத்தில் தன் பெயரை யாரோ“நவீ”என்று பலமாகக் கூப்பிடுவதைக் கேட்டதும் தூக்கி வாரிப் போட்டது. 

திடீர்க் குரலில் உடல் சிலிர்த்தாலும், உள்ளுணர்வு அது சித்ராவாகத்தான் இருக்கும் எனக் கூறியது. 

“இங்க என்னடி பண்ணிட்டிருக்கே?”

அவள் நினைத்தது போலவே சித்ரா தான். 

“அப்டி என்ன தான்டி பாப்ப ஆகாசத்துல? எப்பப் பாத்தாலும் அஸ்ட்டிராலஜி படிக்கறவளாட்டாம் இங்கு வந்து நின்னுக்கற”

“வானம் எனக்கொரு போதி மரம்

நாளும் எனக்கது சேதி தரும்”என்று மெதுவான, அழகான குரலில் பாடினாள் நவீனா. 

“உக்கும்! இப்ப என்ன சேதி சொல்லுச்சு உன்னோட போதி மரம்? “

“ரசனையில்லாத ப்ரெண்டோட என்னைப் பாக்க வராதேன்னு சொல்லிச்சு”சிரித்தாள் நவீனா. 




“இதெல்லாம் சொல்லத் தெரியுதே! மழ வர மாதிரி இருக்கு, துணியை எடு. இல்லேன்னா, உன்னோட ரசனை கெட்ட ப்ரண்டு வந்து குட்டுவான்னு சொல்லத் தெரியாதா  உன்னோட போ…தி மரத்துக்கு” சொல்லிக் கொண்டே நவீனா தலையில் மறக்காமல் ஒரு குட்டு வைத்து வைத்து விட்டு துணிகள் காயப் போட்டிருக்கும் கம்பியருகே வேகமாக ஓடினாள். 

“ஆ”என்று கத்தியவாறு தலையைத் தடவிக் கொண்டே வானத்தைப் பார்த்தாள். சித்ரா சொன்னது உண்மை தான். ஒரு மூலையில் கறுப்பாகத் தெரிந்த மேகக் கூட்டங்கள், புற்றீசல் போல வேகமாய்ப் பரவ ஆரம்பிக்க, ‘சடசடவென’மழைத் தூறல் போட ஆரம்பித்தது. 

கல்லூரி விடுதியின் மற்ற மாணவிகளும் ‘தடதடவென’ஓடி வர சந்தைக் கடைபோல கூச்சல் எழுந்தது. 

சில பெண்கள் துணிகளை எடுக்க ஓட, “என்னுதும் எடுத்துட்டு வாடி”என்ற குரல்களும் எழுந்தன. 

சிலர் மழைக்குப் பயந்து ஒதுங்க, சிலர் மழையில் நனைந்தபடி ஆட ஆரம்பித்தார்கள். தனக்குப் பிடித்த கதாநாயகிகள் மழைக்கு ஆடும் பாடல்கள் அவர்கள் வாயில் புகுந்து காட்டுக் கத்தலாக ஒரே இரைச்சலாய், மழையையும் மீறிக் கேட்டது. 

சித்ராவும், நவீனாவும் துணிகளை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினார்கள். 

படிக்கட்டுகளில் வரும்போது மூச்சிரைக்க வார்டன் மாணவிகளைத் திட்டிக் கொண்டே படிகளில் ஏறிக் கொண்டிருந்தார். 

தன்னுடைய பருத்த உடலைத் தூக்கிக் கொண்டு ஏறமுடியாமல் திணறிக் கொண்டுதான் ஏறினார். 

தனக்கு ஐம்பதுக்கு மேல் வயதாகி விட்டது என்றோ, தான் குண்டாக இருக்கிறோம் என்பதையோ ஒத்துக் கொள்ள மனம் வராது அவருக்கு. 

பக்கத்தில் வந்து கொண்டிருந்த உதவியாளரிடம், “உமா, நீ போய் அந்தப் பிசாசுகளை மழையில நனையாம முதல்ல துரத்து கீழே. நீயும் நனையாதே! எல்லாத்துக்கும் ஜுரம் வந்து தொலச்சா, இவங்க அப்பா அம்மா வுக்கு யார் பதில் சொல்றது”கத்திக் கொண்டே மேலேறும் வார்டனைப் பார்க்க பாவமாகவும் இருந்தது. சிரிப்பும் வந்தது. 

சிரித்தவாறு நவீனாவும், சித்ராவும் அறைக்குள் வரவும் நவீனாவின் செல் ஒலிக்கவும் சரியாக இருந்தது. 

கையிலிருந்த துணிகளைப் படுக்கையில் போட்டு விட்டு யாரென்று பார்த்தாள். அம்மா. 

“என்னம்மா”? 

“ஒண்ணுமில்லடி! இங்க நல்ல மழை பெய்யுது. அங்கயும் மழை பெய்யுதோ என்னவோன்னு நினைச்சேன். இன்னிக்குச் சனிக்கிழமை ஆச்சே.. பெட்ஷீட் எல்லாம் காய போட்டிருப்பியே! எடுத்தியோ இல்லையோன்னு சந்தேகம். அதுக்குன்னு எடுக்கப் போறேன்னு மழைல நனையாதே”

“அம்மா! அம்மா! நீ கேக்க நினைச்சதைக் கேக்கறதுள்ள மழையே நின்னு போயிடும் போல இருக்கு! இந்தச் சித்ரா பிசாசு என்னை மழைல நனைய விடல”

“சீ! ஏன் டி நல்லது செஞ்சவள திட்ற? பக்கத்துல இருக்காளா? குடு அவ கிட்ட பேசி நாளாச்சு”

“இந்தாடியம்மா! எங்கம்மாக்கு எங்கிட்ட பேசறத விட உங்கிட்ட பேசதான் விஷயம் இருக்கு போல”என்று கூறிக் கொண்டே செல்லை சித்ராவிடம் நீட்டினாள் நவீனா. 

“அம்மா, நல்லாருக்கீங்களா?”

…… 

“நான் நல்லாருக்கேம்மா”

….. 

“உங்க பொண்ணுக்கென்ன! நல்லா தான் இருக்கா! அவ கொஞ்சம் அரை கிலோ குறைஞ்சா, அங்க வரும்போது இரண்டு கிலோவா ஏத்தி அனுப்பறீங்களே! என்னது! கண்ணு வைக்கக் கூடாதா! சரி, சரி, உங்க பொண்ண பத்ரமா பாத்துக்கறேன். நீங்க உங்க உடம்பை பாத்துக்குங்க அம்மா!”

“….”

“இந்த வருஷத்தோட படிப்பு முடியுதே. உங்கள தொல்லைக் குடுக்கக் கூடாதுன்னு, மேல படிக்கப் போறதில்லைன்னு நவி சொல்லிட்டாம்மா. பரிட்சை முடிஞ்சதுக்கப்புறம் நான் ஊருக்குப் போம் போது நவியைக் கூட்டிட்டு போறேம்மா.

 ஒரு வாரமாவது அங்க இருக்கணும். நீங்களும் வாங்கம்மா! இந்த லைஃபுக்கும் அதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வரலாம். சரிம்மா, இருங்க நவி கிட்ட தரேன். இந்தாடி, அம்மா பேசறாங்களாம்.”செல்லை நவீனாவிடம் தந்தாள் சித்ரா. 

“முரளி சித்தப்பாவும், மைதிலி சித்தியும் எப்படி இருக்கிறார்கள்? அருணும், தீபக்கும் வந்தாங்களாம்மா? வாலுங்க எப்படி இருக்காங்க?” என்று  கேக்கும் போதே, “அம்மா எப்படி இருக்கே?” என்று உரத்த குரலில் கேக்க முடியவில்லையே என்று கோபமும், ஆத்திரமும் வந்தது நவீனாவுக்கு. 

ஒருவேளை சித்தப்பாவோ, சித்தியோ பக்கத்தில் இருந்தால் அதற்கு வேறு குத்தம் பேசுவார்கள். எப்போது பேசினாலுமே ஜாக்கிரதையாகத் தான் பேசுவாள் நவீனா. புரிந்த கொண்ட கஸ்தூரி சிரித்தாள். 

“இரண்டு பேரும் ஒரு கல்யாணத்துக்குப் போயிருக்காங்க நவி. அதான் உங்கிட்ட பேசலாம்னு கூப்ட்டேன். ”




“நீ சாப்ட்டயாம்மா?”

“ஆச்சுடா,இன்னிக்கு என்னவோ எனக்கு உடம்பு கொஞ்சம் அசதியா இருந்தது. சித்தி சமைச்சு வெச்சுட்டுத்தான் போயிருக்கா. நீ இதைப் பத்தியெல்லாம் கலைப்படாம பரிட்சைக்கு ஒழுங்காப் படி. ”

அம்மாவை என்ன சாப்பிட்டாய்? என்று கேட்பது ஒரு சம்பிரதாயம்தான். என்ன சாப்பிட்டிருப்பாள் என்று தெரியும். இன்று காலையிலேயே கல்யாணத்துக்குப் போயிருக்கிறார்கள் என்றால் சித்தி என்ன சமைத்து வைத்துவிட்டுப் போயிருக்கப் போகிறாள்?

சித்தியாவது சமைப்பதாவது! 

 அதுவும் அம்மா ஒருத்திக்காக? என்ன நடந்திருக்கும் என்று நவீனாவுக்குத் தெரியாதா? நேற்றைய மீந்த சாதம். குழம்பு மீந்திருந்தால் சுட வைத்துச் சாப்பிடச் சொல்லியிருப்பாள். அதுவும் இல்லாவிட்டால், மோர் சாதம். 

ஹாஸ்டல் சாப்பாடே மோசம் தான். ஆனாலும், கூட்டு, பொரியல், அப்பளம்.. பண்டிகை நாட்களில் பாயசம் அல்லது ஸ்வீட் என்று சாப்பிடும் போது அம்மா நினைவில் கண்களில் நீர் கோர்த்துக் கொள்ளும். 

சித்ரா தான் சமாதானப் படுத்துவாள். “நீ அழறது தெரிஞ்சா அந்தச் சாப்பாட்டைக் கூட அம்மாவால சாப்பிட முடியாது. நீ அழ… நான் அழன்னு.. இரண்டு பேரும் மாறி மாறி அழ வேண்டியது தான். முதல்ல அழுகையை நிறுத்திட்டு உன்னோட உடம்பை ஒழுங்கா கவனிச்சுட்டு, நல்லா படி. எதேனும் நல்ல வேலைக்குப் போய்ட்டு அம்மாவை நல்லா பாத்துக்கோ.”

சித்ராவின் நீண்ட ஆறுதல் நவீனாவை ஓரளவுக்குக் கட்டுப் படுத்தும்.

 “நீ மட்டும் இல்லைன்னா…”

அவள் ஆரம்பிப்பதற்குள் அவளை அடக்குவாள் சித்ரா. “உஷ்! போதும் நிறுத்து! நான் இல்லேன்னா ஒண்ணும் ஆயிருக்காது. இந்த சித்ரா இல்லேன்னா  நித்ரா. அவ்வளவுதானே!”

“மொத்தத்தில நானா ஒழுங்கா இருக்க மாட்டேன்னு சொல்றே. அப்படித்தானே?”

சித்ரா பேசினதில் லேசாகி, பொய்யாய் முகத்தைச் சுருக்குவாள் நவீனா. 

“உக்கும், வேற எவ வந்து உன்ன சமாதானம் பண்ணிட்டு இருக்கப் போறா? அவ அவளுக்கு ஆயிரம் வேல. படிக்க வந்திருக்காங்களா? உன்னப் பாத்துக்க வந்திருக்காங்களா? 

நான் நித்ரான்னு சொன்னது நித்திரையை அதாவது தூக்கத்தை. தூக்கம் வந்தா, நீயா தூங்கிடப் போறேன்னு சொல்ல வந்தேன். தூக்கம் வந்தா துக்கம் போகுங்கறது பழமொழி. போய்த் தூங்கு போ”சொல்லிவிட்டு

சித்ரா படுக்கைக்கு ஓடுவாள்.

“எந்த ஊர் பழமொழிம்மா?”

கேட்டுக் கொண்டே நவீனா தலகாணியைத் தூக்கி சித்ராமேல் போட, அதை எடுத்து மறுபடி நவீனாவின் மேல் வீசியவாறே, “பழமொழி சொன்னா அனுபவிக்கணும். ஆராயக் கூடாதுன்னு நம்ம பிக்பாஸ் அங்கிள் சொல்லியிருக்காரு இல்ல! அனுபவிம்மா. இது சித்ராவின் புதுமொழியா இப்ப இருக்கலாம். வருங்காலத்தில் உலகம் என்னைப் பாராட்டும் போது உனக்குப் புரியும்”என்பாள் சித்ரா. 

எதற்காக வருத்தப்பட்டோம் என்பதே மறந்து, இருவருமாய் சிரிப்பார்கள். 

இதையெல்லாம் அம்மாவிடம் அவ்வப்போது சொல்லிச் சிரிப்பாள் நவீனா. 

அதனால் தான் இன்று சித்ராவையும் கூப்பிட்டுப் பேசினாள் கஸ்தூரி. “போகட்டும் போ, அவளாவது உனக்கு ஆறுதலா இருக்காளே”என்று கூறி சந்தோஷப்பட்டுக் கொள்வாள். 

“அம்மா, உங்கிட்ட ஒண்ணு சொல்லணும். இந்த மாசக் கடைசியோட பரிட்சை முடியுது. நான் எதாவது கம்ப்யூட்டர் க்ளாஸ்ல சேரலாம்னு இருக்கேன். நீ என்ன சொல்றே?”

“ம், சரி, முதல்ல நல்லபடியா பரிட்சை எழுதி முடிச்சுட்டு வீட்டுக்கு வா. அப்புறம் என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்.”என்ற கஸ்தூரி, “நவீ, உங்கிட்ட ஒண்ணு சொல்லணும்னு தான் போஃன் செஞ்சேன். அதை விட்டுட்டு என்னவோ பேசிட்டு இருக்கேன்”என்று கூறவும் திடுக்கிட்டாள் நவீனா. 

“என்னம்மா? எதாவது பிரச்சனையா? “

“அதெல்லாம்ஒண்ணுமில்ல. நீ உடனே பதறாதே. கிராமத்துல இருக்கற மைதிலியோட அம்மாக்கு எதோ உடம்பு சரியில்லையாம்.அவங்களக் கூட்டிட்டு அவ தம்பி சுந்தரும் வரப் போறானாம்.”

“அச்சச்சோ!இது வேறயா? எப்போ வராங்களாம்? நான் ஹாஸ்டல்ல இருக்கும் போதே வந்திருக்கக் கூடாதா? என் நேரம். நான் வேணா சித்ரா கூடவே அவ ஊருக்குப் போய்ட்டு வரட்டுமா? அவங்க தம்பி சரியான லூசு ஆச்சே!”என்றாள் நவீனா கவலையுடன். 

மைதிலி சித்தியின் அம்மாவும்,சித்தியின் தம்பி சுந்தரும் வருகிறார்கள் என்று கேள்விப் பட்டதுமே ‘பகீரென்று’இருந்தது நவீனாவுக்கு. தான் விடுதியில் சேர முதற் காரணமான அவனை நினைக்கும் போதே கோபம் வந்தது நவீனாவுக்கு. 

கல்லூரிப் படிப்பை முடித்ததற்கான பண்போ, ஓர் ஆணுக்குரிய கம்பீரமோ எதுவுமே இல்லை அவனுக்கு. 

உண்மை வயதை விடவே, அதிகமாக வயதைக் காட்டும் முகத் தோற்றம். பேச்சைக் கேட்டாலோ, மூளையின் வளர்ச்சியைப் பற்றியே சந்தேகம் வரும் அளவுக்கு பேச்சில் உளரல் இருக்கும். 

எப்படிக் கல்லூரிப் படிப்பை முடித்தான் என்பது கடவுளுக்குத் தான் தெரியும். கண்டிப்பே உருவான பங்கஜம் பாட்டிக்கு மகனாகவும், சாதுரியமும், குதர்க்கமான பேச்சுகளும், அதுவே தேவை ஏற்படும் போது முற்றிலும் மாறி, தேனாகப் பேசும் கலையைக் கற்ற மைதிலி சித்திக்கு  தம்பியாகவும் எப்படி இந்த அசட்டு சுந்தர் பிறந்தான் என்று நவீனாவுக்கு ஆச்சரியமாக இருக்கும். 

ஆனால் அவன் நல்ல குணமும் அதுவே தான். அசட்டுப் பிசட்டென்று பேசிக் கொண்டு சுற்றி வருவானே தவிர அவனால் வேறு தொந்தரவு எதுவும் வந்ததில்லை. 

அவனை எதேனும் சொல்லப் போக, மைதிலிக்கும், அவள் கணவனுக்கும் எதாவது கோபம் வந்து விடுமோ என்று பயந்து தான் கஸ்தூரி, நவீனாவை விடுதியில் சேர்த்து விட்டாள். 




What’s your Reaction?
+1
9
+1
20
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!