Serial Stories நீரோட்டம்

நீரோட்டம்-5

 5

            *****************

எப்போதும் போல் ஆறு மணிக்கெல்லாம் விழிப்பு வந்து விட்டது நவீனாவுக்கு. எழுந்து பார்த்தபோது பக்கத்தில் சித்ரா இல்லை. “அதற்குள் எழுந்து விட்டாளா?”என்று நினைத்து தன் பெட்டியைத் திறந்து பேஸ்ட்டையும், பிரெஷ்ஷையும் எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்குள் சென்றாள். 

அவள் பல்தேய்த்துவிட்டு வரும்போது இரண்டு கப்புகளில் காப்பியை எடுத்துக் கொண்டு சித்ரா நின்றிருந்தாள். “நல்லா தூங்கினயாடி ராத்திரி? “என்று கேட்டுக் கொண்டே ஒரு கப்பை அவளிடம் நீட்டினாள். 

“உம், உம். ஆனா உன்னால தான் எங்க வீட்ல நிம்மதியா தூங்க முடியாம போச்சு. சாரிடி”உண்மையான வருத்தத்துடன் கூறியவாறே காப்பியை வாங்கிக் கொண்டாள் நவீனா. 

நேற்று நவீனா வீட்டில் நடந்தது இருவருக்கும் ஞாபகம் வந்தது.

பாட்டி வந்து உட்கார்ந்ததும் நவீனா பாட்டியிடம் மறுபடி மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள். பாட்டி ஒருவாறு சமாதானம் ஆனாலும்,அவள் கோபத்துடன் கத்தியது சுந்தர் என நினைத்துதான் என்பதைப் புரிந்து கொண்டார். 

பங்கஜத்தின் மனதின் நினைவுகளுக்கும், கனவுகளுக்கும் அது உறுத்தலாக இருந்தது. சுந்தரை நவீனாவுக்குப் பிடிக்காது என்று பங்கஜத்துக்கு நன்றாகவே தெரியும். எப்படியாவது பிடிக்க வைத்து விட வேண்டும் என்று நினைத்துதான் உள்ளே வந்திருந்தார். 

இப்போது தானே எதைப் பற்றியும்  கேட்டு பெரிது படுத்த விரும்பவில்லை. எங்கே போய்விடுவாள்? திருமணம் ஆகும்வரை கஸ்தூரி எங்கும் போக மாட்டாள் என்று சமாதானம் செய்து கொண்டார்.

இத்தனை நாள் விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்தாள், சரி. படிப்பை முடித்து விட்டு வந்து விட்டாள். அவள் என்ன நினைக்கிறாள்? எப்படி நம்மிடம் நடந்து கொள்கிறாள்? என்றெல்லாம் நோட்டம் பார்க்கத்தான் அறைக்குள்ளேயே வந்திருந்தாள். 

சுந்தரின் திருமணத்தைப் பற்றி அவள் கொண்டிருந்த அக்கறையைப் போல் இல்லாமல் சிறிது அசட்டையாகவே மைதிலியும், முரளியும் இருப்பதாக அவர் மனதுக்குப் பட்டது. 

இவர்கள் சொந்தப் பெண்ணுக்கா கேட்கிறோம்? என்று கோபம் கொண்டாள். அண்ணன் பெண்மேல் அப்படி ஒன்றும் அக்கறையை முரளி காட்டுவதில்லை என்பது பங்கஜத்துக்குப் புரிந்துதான் இருந்தது. பிறகேன் இந்த அலட்சியம் என்று தான் புரியவில்லை. 

கொத்தடிமை போல் வீட்டு வேலைகளைச் செய்வதற்குத் தான் அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதைத் தவிர, இதில் ஏதும் ஆதாயம் இல்லை என்பதுதான் அவர்களின் அலட்சியத்துக்குக் காரணம் என்பது பங்கஜத்துக்குப் புரியவில்லை. 

இருவரையும் மாறி மாறி எதோ கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார். . சித்ராவுக்கு கிராமத்தில் வீடு, தோட்டமெல்லாம் இருக்கிறது என்று சொன்ன உடனே பாட்டிக்கு அவளைப் பிடித்து விட்டது. 

ஒன்றும் செய்யாமல் ஊரைச் சுற்றிக் கொண்டு, பெண்களின் பின்னால் திரிந்து கொண்டு இருக்கும் தன் மகனுக்கு எப்படியாவது ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து விட வேண்டும் என்று பங்கஜத்துக்கு ஆசை வந்துவிட்டது. 

இத்தனைக்கும் சொத்து சுகம் ஒன்றும் நிரம்பிக் கிடக்கவில்லை. கிராமத்தில், ஒரு ஓட்டு வீடும், ஒரு சின்ன வயலும் அவர்களுக்குச் சொந்தமாக இருந்தது. 

பங்கஜத்தின் கணவனே ஒரு சோம்பேறி தான். அவர் தகப்பனார் ஓரளவுக்கு 

சொத்து வைத்து விட்டுத்தான் போயிருந்தார். அவர் கைக்கு வந்தபோது ஒரு வீடும், வயலிலிருந்து நெல்லும் கிடைத்தன. வயிற்றுப்பாட்டுக்குப் போக, மிச்சத்தை விற்று மற்ற உபயோகங்களுக்கு பயன்படுத்தும் விதமாகத் தான் இருந்தது. 

குந்தித்தின்ன குன்றும் கரையும்போது குவித்து வைத்தது எத்தனை நாள் காணும்? கொஞ்சகொஞ்சமாய் விற்று மீந்தது இந்த ஓட்டு வீடும், கொஞ்சம் நிலமும் தான். 




சுந்தரின் அப்பா அதை மனைவி பேரில் எழுதி வைத்திருந்தார். அதுபோக நாலு மாடுகள் இருந்ததால் எப்படியோ பங்கஜம் குடும்பத்தை நடத்திவந்தார் . 

மைதிலி திருமணத்திற்கு தன்னுடைய நகைகளைப் போட்டும், தன்னுடைய பாத்திரங்களைக் கொடுத்தும் கணவன் இருக்கும் போதே ஒப்பேத்தி விட்டிருந்தார் . 

மாப்பிள்ளையிடம் சுந்தருக்கு எதாவது வேலை வாங்கித் தரும்படி கேட்பதற்காக வந்தேன் என்று சொல்லிக் கொண்டு அவனுடன் அவ்வப்போது பெண் வீட்டுக்கு வருவார் .

வரும்போது முதலில் நவீனாவை அசட்டையாகப் பார்த்தவர், அவள் வளர வளர அவள் நன்றாகப் படிப்பதையும், அழகாக, கண்ணுக்கு லட்சணமாகவும், பெரியவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வதையும் பார்த்ததும் இவளையே எப்படியாவது மருமகளாக்கிக் கொண்டால், வீட்டு வேலைக்கும் ஆள் கிடைத்த மாதிரி இருக்கும். இவனுக்கு பெண்ணைத் தேடிக் கொண்டு போய் எங்கும் அவமானப்பட வேண்டாம். 

இவன் வேலைக்குப் போகாவிட்டாலும், அவளே வேலைக்குப் போவாள் என்றெல்லாம் யோசனை செய்தார். 

ஆனால் தன் மகனின் யோக்யதைக்குக் கஸ்தூரி பெண்ணைத் தர ஒப்புக் கொள்வாளா? படித்த பெண்ணான நவீனாவுக்கு தன் மகனைப் பிடிக்குமா? என்றெல்லாம் யோசிக்கவில்லை. 

மகளின் தயவில் அவளுடன் ஒண்டிக் கொண்டிருப்பவள் தானே! மாப்பிள்ளை ஒரு வார்த்தை சொன்னால் ஒத்துக் கொள்ளாமல் போகப்போகிறார்களா? என்று மனக்கோட்டை கட்டிக் கொண்டார். 

இப்போது சித்ராவைப் பார்த்ததும், இவள் மருமகளாக வந்தால் நன்றாக இருக்குமே என்று மனதில் ஒரு நப்பாசை வந்தது. 

இது நடக்குமா? நியாயமா என்றெல்லாம் யோசிக்கவில்லை பங்கஜத்தம்மாள். நவீனாவுக்கு சொத்து எதுவும் இல்லை. சித்ராவுக்கு அது இருக்கிறது என்று யோசித்த பங்கஜத்தம்மாளுக்கு, சொந்தமான நவீனாவே சுந்தரை வெறுக்கும் போது, சித்ரா எதற்காகச் சரியென்று சொல்வாள் என்று யோசிக்கத் தோன்றவில்லை. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்பது பழமொழி அல்லவா! 

நல்ல செயலில் இருந்த போது மாமியாரின் வழியாக வைரநெக்லஸ் ஒன்று பங்கஜத்திடம் வந்தது. குடும்ப பாரம்பரிய சொத்து என்றும், வழிவழியாக மூன்று தலைமுறையாக அவர்கள் வீட்டுப் பெண்கள் அணிந்து கொள்வது என்றும், எந்தக் காலத்திலும் அதை விற்கக் கூடாது என்றும் மாமியார் சொல்லிக் கொடுத்திருந்தார். 

ஓட்டு வீடு, கையகல நிலம், புராதன நெக்லஸ் இவைகளை வைத்துக் கொண்டு தான் வீடு, நிலம், நகைகள் இருப்பதாகப் பெருமை பேசிக் கொண்டிருப்பார். அதை வைத்து தானே பெரிய பணக்காரி என்ற மாய போதையிலும் இருந்தார். 

சித்ராவிடம் விசாரணையை முடித்துக் கொண்டு  ஒரு வழியாய் பங்கஜம் எழுந்து போனதும் தூக்கம் கண்ணைச் சுழற்ற படுத்து விட்டார்கள் நவீனாவும், சித்ராவும். 

நல்ல தூக்கத்தில் இருந்த சித்ரா எதோ சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள். யாரோ கதவைத் திறந்து கொண்டு உள்ளே வருவது தெரிந்தது. இந்த இருட்டில்…விளக்கைக் கூட போடாமல் யார்?…  சித்ரா ‘வீலென்று’அலறினாள். அடுத்த நொடி ‘படாரென்று’ எதோ உருண்ட சத்தம். 

தானும் அலறியபடி எழுந்த நவீனா, “யாரு? யாரு”என்று எதோ உளறிக் கொண்டே பக்கத்தில் இருந்த விளக்கைப் போட்டாள். 

அசட்டுக்களையோடு நடுங்கியபடி அங்கு நின்றிருந்தான் சுந்தர். காலருகே தண்ணீர் சொம்பு கவிழ்ந்து, அதிலிருந்து தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. 

வந்த ஆத்திரத்தில் எதுவும் பேசாமல் கன்னத்தில் ‘பளீரென’அறைந்தாள் நவீனா. 

“இல்ல நவீ! நான் தண்ணி குடுக்க வந்தேனா?…. “

“எதுவும் பேசாம முதல்ல வெளியே போ! பொம்பளைங்க தூங்கிட்டிருக்கற அறையில சொல்லாம கொள்ளாம நுழைஞ்சிருக்கியே வெக்கமா இல்ல.. “

சத்தம் கேட்டு என்னவோ ஏதோ என்று பதறிக் கொண்டு ஓடி வந்தாள் கஸ்தூரி . பின்னாலேயே மைதிலி, அவள் அம்மா, முரளி என எல்லோரும் பதறிப் போய் வந்தார்கள். 

ஆளாளுக்கு “என்ன நடந்தது”? என்று கேள்வி. பங்கஜத்தம்மாள் சுந்தரை நெருங்கி, “இங்க என்னடா பண்றே? “என்று கேட்டுக்கொண்டிருக்கும் போதே முரளியும் அவனை, “இங்க உனக்கெனன வேலை”? என்று அவனை நோக்கி கேக்கவும், “இல்ல… மாமா….இரண்டு பேரும் பேசிட்டு இருப்பாங்க.. தண்ணி குடுத்துட்டு நாமளும் பேசிட்டு இருக்கலாம்னு வந்தேன். இருட்டா இருக்கவே சரி, தண்ணிய வெச்சுட்டு போயிடலாம்னு வைக்கும் போது தவறி கீழ கொட்டிடுச்சு”தட்டுத் தடுமாறி உளறலாக சொல்லி முடித்தான் சுந்தர். 

“உன்னைத் தண்ணி கொண்டு வரச் சொல்லி நவீனாவோ, சித்ராவோ கேட்டாங்களா? “

“இல்ல மாமா… நானாதான்… நானாதான் பேசலாம்னு…. “

“சீ! வாய மூடு! உன்னல்லாம்…”

கோபத்தில் முரளி வார்த்தைகள் வராமல் தடுமாறவும் இத்தனை நேரம் எதேனும் தப்பு தண்டாவாக நடந்து விட்டானோ என்று பயந்தவாறு நின்று கொண்டிருந்த மைதிலி, “என்ன நடந்துபோச்சுன்னு இப்படி என் தம்பிய கத்தறீங்க? ஒரு ஆம்பளப் பையனை… அதுவும்… அதுவும் நாளைக்குக் கட்டிக்கப் போறவனை கைநீட்டி அடிச்சிருக்காளே! அதைக் கேக்க மாட்டீங்களா?”என்று சந்தடி சாக்கில் அவர்கள் திருமணப்பேச்சையும் தாயாரின் தூண்டலில் எடுத்தாள். 

கஸ்தூரிக்கும் நவீனாவுக்கும் தூக்கி வாரிப் போட்டது. “இது என்ன புதுக் குண்டு? “என்ற பயத்தோடு நவீனா கஸ்தூரியைப் பார்க்க, “இது எதுவும் எனக்குத் தெரியாது”என்று பார்வையாலேயே பதில் சொன்னாள் கஸ்தூரி. 

இதுவரை இதைப் பற்றி தன்னிடம் எதுவும் சொன்னதில்லையே என்று முரளி குழம்பினாலும், மைதிலியை எதிர்த்துப் பேசவோ, அவளைப் பகைத்துக் கொள்ளவோ அவருக்குத் தைரியமில்லை. 

அண்ணன் மகளின் மேல் அதீத பாசம் ஒன்றும் இல்லை என்றாலும், அவருக்குமே, “இது சரியில்லை. நவீனாவின் படிப்புக்கும் அழகுக்கும் இந்த இரண்டுங்கெட்டானை ஒத்துக் கொள்வாளா? நம் ஆதரவில் இருக்கிறாள் என்பதற்காக எது வேண்டுமானாலும் செய்ய முடியுமா? இது என்ன அந்தக் காலமா? அத்துடன் மூர்த்திக்குத் தெரியவந்தால் அவ்வளவுதான்”என்றெல்லாம் நினைத்துப் பார்த்தவர், “இதெல்லாம் பேசற நேரமா இது?”என்று மட்டும் மைதிலியைக் கேட்டு விட்டு, “சரி, சரி காலையில பேசிக்கலாம். எல்லாரும் தூங்குங்க. உழைச்சுட்டு வீட்டுக்கு வந்தா, நிம்மதியா தூங்கக் கூட முடியல. அலுப்பா இருக்கு”என்று எதோ சொல்லியவாறே இடத்தை விட்டு நகர்ந்தார். 

“ஒண்ணுமில்லாத விஷயத்துக்கு இவ்ளோ ஆர்ப்பாட்டமா? இந்தப் பொண்ணை விட்டா, யாருமே கிடைக்காத மாதிரி, “பாவம்டி, கஸ்தூரிக்கு எடுத்து செய்ய யாரிருக்கா? நம்ம சுந்தருக்கே

குடுத்தா, சீர் செனத்தின்னு அவங்க கஷ்டப்பட வேண்டாம்னுஅம்மா புலம்பறாங்க.”என்று கஸ்தூரியிடம் ஜாடையாகச் சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள் மைதிலி. 

எல்லோரும் போனதும் கஸ்தூரியும், நவீனாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். சித்ராவோ வந்த நாளே , குடும்ப சச்சரவைக் கண்ட அனுபவத்தில் திகைத்தாள். 

கஸ்தூரி தான் முதலில் சுதாரித்துக் கொண்டாள். நவீனாவின் கையைப் பிடித்ததும் அவள் அம்மாவின்தோள் மீது சாய்ந்து அழ ஆரம்பித்தாள். 




“அம்மா! இது என்னம்மா புதுசா? நாம இங்கிருக்க வேணாம்மா. தனியா போய்டுவோம். இங்கிருந்தா எப்படியாவது அந்த லூசை என் தலையில் கட்டப் பார்ப்பாங்க”

மைதிலியின் அம்மா பங்கஜத்தம்மாள் சொல்லும்போது கூட கஸ்தூரி பயப்படவில்லை. ஆனால் மைதிலியும் அதை ஆதரிப்பதுபோல பேசுவதை கஸ்தூரி எதிர்பார்க்கவில்லை. 

இத்தனைநாள் நவீனா விடுதியிலேயே தங்கி இருந்ததால் எந்தப் பிரச்சனையும் இல்லை. காசு செலவழிக்கக் கூடாது. வீட்டுவேலையையும் செய்துவிட வேண்டும் என்று மட்டும் கஸ்தூரியிடம் மைதிலி எதிர்பார்த்தாள். “இவ்வளவுதானே! “என்று கஸ்தூரி சமாளித்துக் கொண்டாள். தன் பெண்ணை எப்படியாவது நல்ல குடும்பத்தில் திருமணம் முடித்துவிட்டால் போதும் என நினைத்தாள். 

பிறகு தன்விதி எப்படியோ அப்படி நடக்கட்டும் என்று தான் வாயைத் திறக்காமல் முரளி குடும்பத்துடன் வாழ்ந்து வந்தாள். இப்போது முதலுக்கே மோசம் வரும்போல் சுந்தருக்கே இவளைக் கல்யாணம் செய்து வைத்தால் இனி அவளும், அவள் மகளும் இந்த வீட்டின் நிரந்தர அடிமைகள் ஆகவேண்டியதுதான். இனி எதாவது செய்து முதலில் வீட்டை விட்டுப் போய் விட வேண்டும் என்று தோன்றிவிட்டது. 

என்னதான் தைரியம் இருந்தாலும், மனித ஆதரவு இல்லாமல் வாழ முடியாதே! அதுவும் பெண்ணுக்குத் திருமணம் உறவினர்கள் இல்லாமல் செய்ய முடியாதே! 

பங்கஜத்தம்மாளுக்கு இந்த மாதிரி எண்ணம் இருக்கும் என்று கஸ்தூரி கொஞ்சம் கூட நினைக்கவில்லை. 

பிறந்ததிலிருந்து பார்த்துக் கொண்டு இருக்கும் பெண்ணை, இப்படி மோசம் செய்ய நினைப்பாள் மைதிலி என்ற எண்ணமே கஸ்தூரிக்குத் தாங்க முடியாததாக இருந்தது. தன் பெண்ணாக இருந்தால், இந்த அசட்டுத் தம்பிக்குக் கொடுக்க நினைப்பாளா! 

இது எதையும் கண்டுகொள்ளாமல் பேசிய முரளி மீது, இருந்த கொஞ்சநஞ்ச மரியாதையும் போய்விட்டது. 

மனைவியிடம் இருந்த பயத்தின் காரணமாக, பாசத்தைக் காட்டாமல் இருக்கிறார் என்று நினைத்தாளே தவிர, இப்படி அண்ணன் பெண்ணின் வாழ்க்கையையும் அடியோடு அழிக்க ஆதரவு கொடுப்பார் என்று கொஞ்சமும் நினைக்கவில்லை. 

அதுவும் அன்றிரவு ஏற்பட்ட நிகழ்ச்சி தன்மகளுக்குப் பாதுகாப்பு அவசியம் என்ற உணர்வை கஸ்தூரியிடம் ஏற்படுத்தியது. அவளுக்குள் புதிய யோசனை பிறந்தது. 




What’s your Reaction?
+1
8
+1
8
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!