Serial Stories

சதி வளையம்-9

9 விஜய் எங்கே?

தர்மா, தன்யா, தர்ஷினி பாஸ்கர் வீட்டை அடைந்த போது அங்கே ஒரே அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருந்தது.

சதானந்த ரகுநாத வர்மா விஜய்யை மலையாளத்தில் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாலும், மிகவும் கவலைப்படுகிறார் என்பது முகவாட்டத்திலும், எந்த நிமிடமும் எட்டிப் பார்த்துவிடுவேன் என்று மிரட்டிக் கொண்டிருந்த கண்ணீர்த்துளியிலும் தெரிந்தது.

பாஸ்கர் கைகளைப் பிசைவதும், கைபேசியில் யாருக்கோ பேசுவதும், மறுபடியும் கைகளைப் பிசைவதுமாக இருந்தான்.

மேஜர் கமல் எங்கோ வெறித்தார். சுஜாதா விறைப்பாக நேரே பார்த்துக் கொண்டு நின்றாள்.

படபடவென்று உள்ளே நுழைந்தார் டாக்டர் திலீப். “எனக்குத் தெரிஞ்ச எல்லா ஃப்ரெண்ட்ஸ் வீட்டிலேயும் விசாரிச்சுட்டேன், மாமா. அவன் வரலைங்கறாங்க” என்றார் படபடப்பாய்.

“எல்லா பாரிலேயும் விசாரிச்சிருக்கணும்” என்று சுஜாதா முணுமுணுத்தது அங்கே எல்லார் காதிலும் விழுந்தது. சதானந்தன் அவளை முறைத்தார்.

“அய்யாக்கண்ணு, நீ போய்க் கொஞ்சம் தேடிப் பாரேன்” என்றார் டாக்டர் திலீப். அவன் தலையாட்டிவிட்டு வெளியேறினான். சதானந்தனுக்கு ஏனோ உடல் பதறியது.

தர்மா, தன்யா, தர்ஷினி அந்தச் சூழ்நிலையில் திருவிழாவில் தொலைந்த குழந்தைகள்போல் நின்றார்கள். அவர்களை யாரும், பாஸ்கர் உட்பட, கண்டுகொள்ளக் கூட இல்லை.

“கவலைப்படாதீங்க சித்தப்பா, வந்துடுவான்” என்றான் பாஸ்கர், சதானந்தனை நெருங்கி.

“இந்த, அவ பேரென்ன, ஹேமா, அவ செத்ததுலேர்ந்து பயமாயிருக்குடா, பாஸ்கர்” என்று சொல்லிவிட்டு, நாசூக்காக மூக்கை உறிஞ்சினார் சதானந்தன்.

“அவ மரணத்திற்கும் விஜய் காணாமப் போனதிற்கும் என்ன சம்பந்தம்?” என்று உரக்கக் கேட்டாள் தன்யா.

சதானந்தன் இப்போது தன்யாவை முறைத்தார். இருந்தாலும் கோபத்தை ஓரளவு அடக்கிக் கொண்டு அவளுக்குப் பதில் சொன்னார். “என்ன டிடக்டிவ் நீ? முதலிலே எங்க குடும்பச் சொத்து காணாமப் போயிருக்கு, அதைப் பத்தி ஹேமாவுக்கு ஏதோ தகவல் தெரியும்னு நீயே சொன்னே! இப்போ ஹேமாவோட கதையை யாரோ முடிச்சுட்டாங்க. விஜய்கிட்ட ஹேமா ஏதோ சொல்லியிருக்கா. இப்போ அவனையும் காணோம். இது ஏதோ எதிரிகள் வேலைதான். அதை விடு. இப்போ என் பிள்ளை என் கண் முன்னாடி வந்து நிக்கணும், நீ நல்ல டிடக்டிவ்னா அதுக்கு வழி பார். அர்த்தமில்லாமப் பேசி நேரத்தை வீணடிக்காதே.”

“உங்க பிள்ளையைக் கண்டுபிடிக்க அவங்க ஏற்கெனவே முயற்சி எடுத்துட்டாங்க சார். நீங்க இப்பவே அவனைப் பார்க்கலாம்” என்று குரல் கேட்டு எல்லோரும் வாசற்பக்கம் திரும்பினார்கள்.

இன்ஸ்பெக்டர் போஸ்!




=========================

எல்லோரும் ஏதேதோ பேச, சதானந்தன் குரல்தான் வெளியில் கேட்டது. “விஜய் எவ்விட சார்?”

போஸ் திரும்பினார். அவர் பார்வையைத் தொடர்ந்து எல்லோரும் வெளியில் நோக்கினார்கள்.

அங்கே, இரண்டு கான்ஸ்டபிள்கள் மேல் இசைகேடாய்ச் சாய்ந்துகொண்டு, விஜய்!

“மோனே! எந்தாயி?” என்று அலறிக் கொண்டு அருகில் ஓடிவந்தார் சதானந்தன்.

“ஒண்ணுமில்லை, ஆள் கொஞ்சம் டயர்டு, அவ்வளவு தான். உள்ளே அழைச்சுகிட்டு போய்ச் சூடா கறுப்புக் காப்பி கொடுங்க. வேணும்னா ஷவருக்குக் கீழே ஒரு நிமிஷம் நிறுத்துங்க!” என்றார் போஸ்.

கான்ஸ்டபிள்களின் கைகளை விடுவித்து விஜய்யைத் தானே தாங்கிக் கொள்ள முனைந்ததால் அந்தக் குரலில் இருந்த லேசான கேலி சதானந்தனுக்குச் சில நிமிடங்கள் கழித்துத் தான் உறைத்தது. “என்ன சொல்றீங்க? இவனுக்கு என்ன ஆச்சு? எங்கேர்ந்து கூட்டி வரீங்க?” என்றார் கவலையாய்.

“ஈ சி ஆர் ரோட்டிலே ஒரு ரிசார்ட்டிலே மயங்கிக் கிடந்ததா தகவல் கிடைச்சுது. உடனே போய் அள்ளிக்கிட்டு வந்துட்டோம். தன்யா உங்க பிள்ளை காணாமப் போன விவரம் சொன்னபோது, அவர் எப்படி, எங்க தேடினாக் கிடைக்கலாம்னு ஒரு பிக்சர் கொடுத்தாங்க. அதைவெச்சு விசாரிச்சதுலே உடனே கிடைச்சுட்டார்.”

“வந்து, யாராவது அடிச்சு கிடிச்சு …” என்று பாஸ்கர் ஆரம்பித்தான். சுஜாதாவின் மிகமிக லேசான சிரிப்பொலி காதில் விழ, நிறுத்திக் கொண்டான்.

சதானந்தனின் முகம் வாடியது. “இன்ஸ்பெக்டர், கொஞ்சம் உள்ளே வாங்க. நீயும் வாம்மா” என்றார் ஆச்சரியமாய் தன்யாவைப் பார்த்து.

மேஜர் கமல் விஜய்யைக் கைத்தாங்கலாக உள்ளே அழைத்துப் போனார். இன்ஸ்பெக்டர் சதானந்தனைத் தொடர்ந்தார். தன்யாவுடன் தர்ஷினியும் போனாள். தர்மா டாக்டர் திலீப்பை நெருங்கி, மெதுவான குரலில் பேச ஆரம்பித்தான்.

சுஜாதாவின் சிரிப்பொலி இன்னும் கேட்டுக் கொண்டிருந்தது.




 

What’s your Reaction?
+1
8
+1
3
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!