Serial Stories

உள்ளத்தால் நெருங்குகிறேன்-15

15

 மறுத்து விடுவான் போன்ற அவன் முகபாவத்தில் முகம் வாடியவள் ஏதோ நினைத்து அவன் கைநீட்டி கப்பை வாங்கிக் கொள்ள மலர்ந்தாள்.

அப்படியே அங்கேயே நின்று தனது டீயை குடிக்க துவங்கியவளை கேள்வியாய் ஏறிட்டான்.” என்ன விஷயம்?”

 “வந்து சார் எனக்கு கொஞ்சம் பாடத்தில் நீங்கள் ஹெல்ப் செய்ய வேண்டும்”

” பாடம் சொல்லிக் கொடுக்கவெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாதும்மா. நானே யாரோ எழுதிய புத்தகத்தை மென்று தின்று வகுப்பறையில் வந்து வாந்தி எடுப்பவன்”

 சுபவாணி டீ கப்பை கீழே வைத்து விட்டு தயங்காமல் இரு கன்னங்களிலும் போட்டுக் கொண்டாள். “மன்னிச்சிடுங்க சார், உங்களைப் பற்றி தெரியாமல் பேசி விட்டேன். எனது கல்லூரி காலத்திலிருந்தே உங்கள் எழுத்துக்களுக்கு நான் அடிமை சார்.எந்த சப்ஜெக்ட் என்றாலும் அது சம்பந்தமாக நீங்கள் எழுதியிருக்கிறீர்களா என்றுதான் முதலில் தேடுவேன்.உங்கள்  புத்தகங்களை வைத்துதான் இரண்டு டிகிரிகளை முடித்தேன்.இப்போது ஒரு கட்டாயமான சூழ்நிலையில் நான் இந்தப் படிப்பை படிக்க வந்திருக்கிறேன். உங்களைப் போன்ற ஒரு கைடு கிடைத்தால் எப்படியாவது இந்த கடினமான படிப்பை முடித்து விடுவேன். ப்ளீஸ் அலெக்ஸ் சார்”

“ப்ச் அந்த அனன்யா இன்னமும் எதையெல்லாம் உளறி வைத்திருக்கிறாள்?” என்றான் கொஞ்சம் கோபத்தோடு.

” இதோ இதைப் பற்றி மட்டும் தான் சார் சொன்னார்கள்” கையோடு கொண்டு வந்திருந்த அவன் எழுதிய புத்தகம் ஒன்றை எடுத்து காட்டினாள்.

” சரிதான் எல்லாவற்றையும் கொட்டி விட்டாள் போல” ரியோவும் இப்போது தமிழிலேயே பேசத் தொடங்கியிருந்தான்.

” நீங்கள் எழுதிய புத்தகத்தையே, மனப்பாடம் செய்து அங்கே வந்து ஒப்பிப்பீர்களென்று நான் சொன்னால் நிச்சயம் கோபம் வரத்தான் செய்யும். என் தலையில் ஒரு கொட்டாவது வைக்க வேண்டும் என்று உங்களுக்குள் தோன்றி இருக்கும்தானே சார்?” 

அவளை கூர்ந்து பார்த்தவன் “அன்று மட்டுமல்ல நிறைய முறை அப்படி உன்னை உச்சந்தலையில் கொட்ட வேண்டும் என்று எனக்குத் தோன்றியிருக்கிறது” என்றான்.

 அவசரமாக தன் தலையை தடவி விட்டுக் கொண்டவள்,

” அடியாத மாடு படியாதுதானே சார். ப்ளீஸ் என்னை கைடு பண்ணுங்க சார்” என்றாள் கெஞ்சுதலாக.

” விடமாட்டாய் போல…” ரியோவின் முகத்தில் புன்னகை வந்திருக்க 

சுபவாணிக்கு மனம் துள்ளியது.

“ஹை சிரித்து விட்டீர்கள். அப்போது ஓகே தானே சார்?” உற்சாகமாய் கேட்டவளுக்கு தலையசைத்தான். “ஓ.கே பட்டர் “என்றான் விழிகளில் குறும்பு மின்ன.

அச்சோ கேட்டு விட்டானா சுபவாணிக்கு கூச்சத்தில் கன்னங்கள் சிவந்தன. “அதென்ன தக்காளி, பட்டர்… ஏதோ சமையல் விஷயம் பேசுகிறீர்கள் என்று நினைத்தேன்” அவன் விளக்கக் கேள்வியும் கேட்டுவிட சுபவாணி திக்கினாள்.




” வந்து… சார்…”

” காலேஜில் தான் சார், இங்கே தனியாக நாம் பேசும் போது பெயர் சொல்லியே கூப்பிடு”

 சுபவாணிக்கு மறுக்க தோன்றவில்லை.”அலெக்ஸ் என்று கூப்பிடவா?” ஆவலுடன் கேட்டு அவன் புன்னகையுடன் தலையசைக்க,” அலெக்ஸ்…” ஒரு முறை சத்தமாகவே சொல்லிப் பார்த்துக் கொண்டவள்,  “தக்ளா பார்ப்பதற்கு தக்காளி போல இருப்பதால் அவளுக்கு அந்தப் பெயர் வைத்தேன், அவள் எனக்கு…” மேலே பேச கூச்சப்பட்டு நிறுத்த,

” நீ பார்ப்பதற்கு வெண்ணெய் கட்டி போல் இருப்பதால் பட்டர் என்று பெயர் வைத்தாளாக்கும்.பொருத்தமான பெயர்தான்” இதழ் பிரித்து அவன் சிரிக்க மெய்மறந்து அவன் பளிச்சிடும் பற்களை பார்த்து நின்றாள்.அட, இப்படி சிரிக்கும் போது இவர் முகத்தோற்றமே மாறிவிடுகிறதே…

 அன்றிலிருந்து ரியோ சுபவாணிக்கு பாடம் எடுக்கத் துவங்கினான். சில நாட்களிலேயே அவர்கள் இருவருக்கும் ஆசிரியர் மாணவி என்ற நிலையை தாண்டி ஒரு நெருக்கமான நட்பு உருவாக துவங்கியது. 

“நீங்கள் ஏன் அலெக்ஸ் இங்கே பாடம் எடுக்க வந்தீர்கள்?” ஒரு நாள் சுபவாணி கேட்க அவளை முறைத்தான்.” உனக்கு தெரியாதா?”

“அனன்யா மேடத்திற்காகவா? சரிதான்”

ஒரு நாள் வகுப்பறையில் cascade பற்றி விவரித்துக் கொண்டிருந்தான் ரியோ.ஒரு ஆற்றில் பல நீர்வீழ்ச்சிகள் தொடர்ந்து காணப்படுவதே Cascade.இவை தீவிர மண் அரிப்பினால் உருவாகுபவை…என பாடத்தை அவன் தொடர,அவனது பாடத்தில் ஆழ்ந்திருந்த சுபவாணி,”Rapidsand Waterfalls பற்றி இன்னமும் தெளிவாக சொல்லுங்க அலெக்ஸ்” என்றாள்.ஒரு நிமிடம் வகுப்பறையே அமைதியாக குனிந்து குறிப்புகள் எழுதிக் கொண்டிருந்த நோட்டிலிருந்து நிமிர்ந்து,சுற்றுப்புறம் உணர்ந்து நாக்கை கடித்துக் கொண்டாள்.

அவள் வகுப்பறையில் இருப்பதையே மறந்து,தனியாக ரியோவுடன் பாடம் படிக்கும் நினைவில் பேசியிருந்தாள்.அதுவும் தமிழில்.சிறு கண்டனத்துடன் அவளை பார்த்த ரியோ லேசாக தொண்டையை செருமியபடி பாடத்தை தொடர்ந்தான்.

“ரொம்ப பண்ணாதடி.அதென்ன மூஞ்சிக்கு நேராக பெயர் சொல்லிக் கொண்டு,அத்தோடு உன் மொழியில் வேறு பேசுகிறாய்…” தக்ளா நிறைய எரிச்சலில் இருந்தாள்.

“சாரி தக்காளி நான் அவருடன் பாடம் படிக்கும் பொழுதுகளுக்கு போய்விட்டேன்” வாய் நிறைய சிரிப்புடன் சொன்னாள். 

ஒரு மாதத்திலேயே ரியோ சாருக்கும் சுபாவிற்கும் ஆகாது என்ற நிலைமை மாறி அவர்கள் இருவருக்குள்ளும் என்ன என்பது போன்ற கசமுச பேச்சுக்கள் கல்லூரிக்குள் பரவ ஆரம்பித்தது. தக்ளாவிற்கே கூட இவர்கள் நெருக்கம் அவ்வளவாக பிடிப்பதில்லை. சுபவாணியுடனான பேச்சுக்களை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டாள்.

 ஆனால் சுபவாணியோ இதையெல்லாம் உணரக்கூட இல்லை. ரியோ உடனான நட்பு அவளை புதியதோர் உலகிற்கு அழைத்துச் சென்றிருந்தது. பி.ஜியின் பின் வாராண்டாவில் அமர்ந்து எதையோ பேசியபடி ஒருவரையொருவர் பார்த்தவாறு சிப் சிப்பாக இருவரும் டீ குடிக்கும் பொழுதுகளிலேயே தன்னுடைய நாள் உறைந்து நின்று விடாதா என்று எண்ண ஆரம்பித்தாள். 

கூடவே தெளிவான விளக்கங்களுடன் அவனது பாடமும், அவளை மிரட்டி கொண்டிருந்த கல்லூரி படிப்பை மிகவும் இலகுவாக்கிக் கொண்டிருந்தது. அன்று வகுப்பறைக்குள் நுழைந்த போதே ஏதோ வித்தியாசமாக உணர்ந்தாள் சுபவாணி.  தங்களுக்குள் கிசுகிசுவென பேசிக் கொண்டிருந்த எல்லாரும் இவளைக் கண்டதும் பேச்சை நிறுத்தினர்.

 யோசனையுடன் அனைவரையும் பார்த்தவள் தக்ளாவின் அருகே போய் அமர்ந்து கொண்டு “என்ன விஷயம் தக்ளா?” என்றாள்.

 அவளை ஏற இறங்க பார்த்த தக்ளா “எல்லாம் நீயாகவே இழுத்துக் கொண்டது,எதிலும் அளவோடு நிற்க வேண்டும். இல்லையென்றால் இப்படித்தான் பட வேண்டும்” என்றபடி எழுந்து போய் அடுத்த பெஞ்சில் அமர்ந்து கொண்டாள்.

 குழப்பத்துடன் பார்த்த சுபவாணிக்கு விரைவிலேயே விஷயம் தெரியவந்தது.பதட்டத்துடன் ஓடிப்போய் பார்த்தவள் அவமானத்தில் முகம் சிவந்தாள். கல்லூரி நோட்டீஸ் போர்டு அருகே அவளையும் லியோவையும் இணைத்து ஏதேதோ தவறுதலாக எழுதி வைத்திருந்தனர்.




 இனி எப்படி இங்கே இருப்பது வேகமாக தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு தலை குனிந்தபடி கல்லூரியை விட்டு வெளியேறினாள்.

மாலை கிளாஸ் முடிந்து ஸ்வரூபா  வரும்போது இருட்டி விட்டது. அந்நேரம் வரை அறைக்குள் விளக்கை கூட போட்டுக் கொள்ளாமல் படுத்திருந்தாள் சுபவாணி. அழுது முகம் வீங்கி கிடந்தவளை கண்டதும் ” என்ன ஆச்சு சுபா?” ஆதரவாய் கேட்டாள்.

” ஒன்றுமில்லை என்னை கொஞ்சம் தனிமையில் விடேன்” 

“எதற்காக..? தானாகவே எதையோ நினைத்து தனக்குள் அழுது ஒன்றும் இல்லாமல் கரைந்து போவதற்காகவா…?” கேட்டபடி அறை வாசலில் ரியோ நின்றிருந்தான்.

” நீங்கள் பேசுங்க சார்” என்றபடி ஸ்வரூபா வெளியே போய்விட்டாள். ஸ்டூலை இழுத்துப் போட்டுக் கொண்டு கட்டில் அருகே அமர்ந்தான் “இப்போது எதற்கு இந்த அழுகை ?” 

“நம்மைப் பற்றி காலேஜில் கண்டபடி எழுதி வைத்திருக்கிறார்கள்” பேசும்போதே விம்மினாள்.

” என்ன எழுதி இருக்கிறார்கள்?” பொறுமையாக கேட்டான்.

“நா… நாம் இருவரும் காதலிக்கிறோமாம். இடம் பொருள் பார்க்காமல் காதல் செய்கிறோமாம். படிக்கிற இடத்தில் காதல் களியாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோமாம்.இப்படியெல்லாம்…” தலை குனிந்து முணுமுணுத்தவள் ரியோவிடம் இருந்து எந்த சப்தமும் வராமல் போக நிமிர்ந்து பார்த்தாள்.

 விழிகளை விரியத் திறந்து அவளையே பார்த்தபடி இருந்தவன் மெல்ல “ம் ” என்றான்.

” என்ன இவ்வளவு சாதாரணமாக இருக்கிறீர்கள்?” சுபவாணி ஆச்சரியமாக கேட்க, “உண்மை வாயடைக்க வைத்து விடும்தானே?” ரியோ சொல்ல அதிர்ந்தாள்.” என்ன சொல்கிறீர்கள்?” 

“அங்கே எழுதி இருப்பதெல்லாம் உண்மைதானே? பிறகு ஏன் இத்தனை அழுகை என்கிறேன்” நிதானமாக அவன் சொல்ல 

சுபவாணிக்கு தரை குழிந்து தன்னை உள்ளிழுத்துக் கொள்வது போல் தோன்றியது. 

“வெளியே போங்க” அறை வாசலுக்கு கைநீட்டி கத்தினாள். “இப்படி ஒரு அசிங்கமான நினைப்பை மனதில் வைத்துக் கொண்டுதான் என்னுடன் பழகினீர்களா? என் மனதில் அப்படி எந்த எண்ணமும் இல்லை. தயவு செய்து வெளியே போய் விடுங்கள்” 

அவள் பேசி முடிக்கும் வரை பொறுமையாக அவளை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவன் பதிலின்றி அவள் கண்களையே பார்த்திருந்தான்.உதட்டில் மென் புன்னகை. 

சுபவாணி  முகத்தை திருப்பிக் கொண்டு “ப்ளீஸ் கெட் அவுட்” கத்தினாள்.

“டேக் கேர்” நிதானமாக சொல்லிவிட்டு எழுந்து போய் விட்டான்.




 

What’s your Reaction?
+1
45
+1
19
+1
2
+1
3
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!