Serial Stories சதி வளையம்

சதி வளையம்-4

4 ஒரு சிறிய விசாரணை

“ஹலோ மிஸ்டர் பாஸ்கர்” – குரல் கேட்டுத் திரும்பினான் பாஸ்கர். “அடேடே டிடெக்டிவ் ட்வின்ஸா? நேற்றைக்குத் தடபுடல் பண்ணினீங்க, இன்னிக்கு ஆளைக் காணோம்னு நானே போன் பண்றதா இருந்தேன்” என்றான்.

“பரவாயில்லையே, பத்மா கோபத்தை விட்டுட்டாங்களா? உற்சாகமா இருக்கீங்க?” என்று சிரித்தவாறே கேட்டாள் தன்யா.

“நீங்க வந்திருக்கீங்கன்னு சொல்லித்தான் சமாதானப்படுத்தியிருக்கேன். அது சரி, ஸார் யாரு, அஸிஸ்டெண்டா?” என்று தர்மாவைக் காண்பித்துக் கேட்டான் பாஸ்கர்.

தன்யா-தர்ஷினி சற்று அதிர்ந்தார்கள்.

“ஹலோ, என் பேர் தர்மா” என்றான் தர்மா புன்னகை மாறாமல். இருவரும் கைகுலுக்கினார்கள்.

“மிஸ்டர் பாஸ்கர், உங்க மோதிரம் கிடைக்கணும்னா, எங்களுக்கு உங்க ஒத்துழைப்பு வேணும்” என்றாள் தன்யா, சமாளித்துக் கொண்டு.

“ஓ யெஸ், நான் என்ன பண்ணணும்?”

“முதலில் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுங்க. நீங்க உங்க மோதிரத்தைக் கடைசியாப் பார்த்தது எப்போ?”

பாஸ்கர் சற்றுச் சிந்தித்தான். பிறகு சொன்னான் – “நாலு நாள் முன்னாடி ஈவினிங் ஒரு பார்ட்டி கொடுத்தோம். முக்கியமா ஆபீஸ் கலீக்ஸ்க்காக. பத்மா, அவ ஃபாமிலி எல்லோருமே வந்திருந்தாங்க. இந்த வீட்டிலே புல்வெளில தான் நடந்தது. கேடரர் அரேஞ்ச் பண்ணியிருந்தோம். நான் அஞ்சரை மணிக்கு என் ரூமுக்கு வந்தேன். ரெடியாயிட்டு அப்படியே கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்னு. தலைக்கு ஜெல் தடவணும்னு மோதிரத்தைக் கழட்டி டிரெஸ்ஸிங் டேபிள் மேல் வச்சேன். அப்புறம் திருப்பிப் போட்டுக்க மறந்து போச்சு. அப்படியே பார்ட்டிக்குப் போயிட்டேன். மோதிரம் காணும்னு பார்ட்டி முடிஞ்சதும் சுஜாதா அக்கா தான் நோட் பண்ணினாங்க. ரூம்ல இல்ல. எங்க தேடியும் கிடைக்கல. மறுநாள் மெதுவா பேச்சு வளர்ந்து பத்மா குடும்பத்துமேல பாய ஆரம்பிச்சது. அவங்க கோபப்பட்டு …”

“ஆல்ரைட். எத்தனை மணிவரை உங்க ரூம்ல இருந்தீங்க?”

“ஆறேகால் வாக்கில வெளியே போனேன்.”

“உங்க ரூமுக்கு அந்த டயத்தில யாராவது வந்தாங்களா?”

“வேலைக்காரி ஹேமா வந்தா பெருக்கறதுக்கு. வேற யாரும் வரல.”

“ஹேமாவைப் பத்திச் சொல்லுங்க.”

“உங்க பார்வை அவ மேல தான் பாயும்னு தெரியும். லுக். அவளோட நேர்மை இங்க இருக்கற ராஜ குடும்பத்துக்குக் கூட வராது. எத்தனை தடவை இந்த மோதிரத்தை நான் தொலைச்சு அவ எடுத்துக் கொடுத்திருக்கா தெரியுமா? அவ புருஷன்  அய்யாக்கண்ணு எங்க வீட்லயே வளர்ந்தவன். ஒருத்தரோட ஸ்டேடஸ வச்சு ..”

“கூல் மிஸ்டர் பாஸ்கர். ஹேமாவைப் பத்திச் சொல்லுங்கன்னு தான் கேட்டேன். அதிகமாகவே சொல்லிட்டீங்க, தாங்க்ஸ்” என்று தன்யா சிரித்ததும் தான் பாஸ்கர் தன்னிலையடைந்தான். “ஸாரி” என்று முணுமுணுத்துத் தலைகுனிந்தான்.

“ஓகே. இப்போ உங்க குடும்பத்திலே எல்லாரும் இங்க வரணும். ஒரு சின்ன என்கொயரி. அப்புறம் வேலைக்காரங்க…”




“நோ ப்ராப்ளம். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, எல்லாரையும் கூப்பிட்டுக்கிட்டு வரேன்” என்று அவன் போனதும், வீட்டு அமைப்பைக் கூர்மையாகக் கவனித்தார்கள் தன்யாவும் தர்ஷினியும். தர்மா சோபாவில் “சிவசிவா” என்று அமர்ந்துவிட்டான்.

சிலநிமிடங்களிலேயே பாஸ்கர் தன் உறவினர்களோடு உள்ளே நுழைந்தான்.

“என் சித்தப்பா, நீங்க பார்த்திருக்கீங்க. இது அக்கா சுஜாதா” என்று ஆரம்பித்து சின்ன அறிமுகப் படலம் நிகழ்த்தினான்.

தன்யா அத்தனை பேரையும் பார்வையால் ஸ்கேன் செய்தாள். பிறகு “மேஜர் கமல், உங்ககிட்டேர்ந்து ஆரம்பிக்கலாமா?” என்று கேட்டாள்.

கூட்டத்தில் நின்றால் அவரை யாருமே கவனிக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு நிறமற்ற குணாதிசயமாய்த் தெரிந்த கமலிலிருந்து ஆரம்பித்த தன்யாவை எல்லோருமே கொஞ்சம் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.

உலுக்கிவிட்ட மாதிரி நிமிர்ந்த கமல் “ஓகே” என்றார் சில விநாடிகளுக்குப் பின். மேலும் சற்று நேர மௌனத்திற்குப் பிறகு, “ஆனால் எனிக்கு ஒண்ணும் இதைப் பற்றி அறியில்லா” என்றார் மெல்லிய குரலில்.

“பரவாயில்லை, பேசலாம்” என்ற தன்யா, கமலைச் சிறிது நேரம் உற்று நோக்கினாள். பிறகு “பாஸ்கர் ரூமுக்கு நீங்க போயிருக்கிங்களா?” என்று மெதுவாகக் கேட்டாள்.

கமல் மெலிதாகப் புன்னகைத்தார். “போயிட்டுண்டு, பார்ட்டி அன்னிக்கே கூட. ஒரு ஏழு நாற்பது மணி காணும். வாட்டர் வேணும்னு. பாஸ்கரோட ரூமுக்கு வெளியிலேர்ந்தே ஒரு டோர் உண்டு. டெரஸ்க்குப் படிகூட உண்டு” என்றார்.

“பாஸ்கர் …” என்ற தன்யாவை இடைவெட்டி, “அந்த வெளிக் கதவு அன்னிக்குப் பூராவும் திறந்து தான் இருந்தது. ஐ மீன், ப்லஷ் டோர்  திறந்திருந்தது. ஒரு க்லாஸ் டோர் உண்டு, ஆடோமடிக் க்லோஸரோட. அதுவும் பூட்டல. மொட்டை மாடிக் கதவு எப்போதும் பூட்டித்தான் இருக்கும். எங்கிட்ட இருக்கற சாவிக்கொத்திலே தான் சாவி இருக்கு. எப்போவாவது தான் ஓப்பன் பண்ணுவேன்” என்று விளக்கினான் பாஸ்கர். 

“ஆல்ரைட். மேஜர் கமல், நீங்க போன போது சந்தேகப்படும்படியா ஏதாவது பார்த்தீங்களா?” என்று கேட்டாள் தன்யா. 

“என்னன்னு சொல்லறது? அங்கே டிரஸ்ஸிங் டேபிள் மேலே மோதிரம் இல்லா. அது மேல தான் வாட்டர்ஜக் இருந்தது. நான் நன்னாயிட்டு கண்டு” என்றார் மேஜர் கமல். “அதோட, சரி விடுங்க.”

“எதையும் விடமுடியாது, மேஜர். என்ன சொல்லவந்தீங்களோ சொல்லிடுங்க.”

“ஏதோ சப்தம் கேட்டு. உள்ளே இருக்கற படியிலே யாரோ இருக்காப்போலே. நான் வேற எங்காவது கேக்கறதுன்னு இக்னோர் பண்ணிட்டேன்” என்றார் கமல்.

“மேஜர் கமல் வெளியே போகவும் நான் உள்ளே நுழையவும் சரியா இருந்தது. என்னோட ஓவர்கோட் பாஸ்கர் ரூமில இருந்தது, எடுக்கறதுக்காக வந்தேன்” என்றவாறே உள்ளே நுழைந்தார் டாக்டர் திலீப். “நான் மோதிரத்தைக் கவனிக்கல.”

“அந்த சப்தம்?”

“எனக்கு ஒண்ணும் கேக்கல.”

“ஐ சீ” என்று சொல்லி இந்த விஷயத்தைத் தன்யா அப்படியே விட்டுவிட்டது தர்மாவிற்கு சற்றே ஏமாற்றமாக இருந்தது.

“சுஜாதா? நீங்க பார்ட்டி ஆரம்பிச்சப்புறம் பாஸ்கர் ரூமுக்குப் …”

“போயிருந்தேன்” என்றாள் சுஜாதா நிதானமாக. “ஏழரை மணி இருக்கும். கொஞ்சம் குளிர ஆரம்பிச்சது, பாஸ்கர் ரூமிலேர்ந்து ஒரு ஷால் கொண்டு வரலாம்னு போனேன்.”

“மோதிரத்தைப் பார்த்தீங்களா?”

“நான் அதைத் தேடிட்டு போகலையே, அதனால கவனிக்கல. ஆனா ஏதோ பளபளன்னு பார்த்ததா ஞாபகம்.”

“மிஸ்டர் விஜய்?”

“நான் பாஸ்கர் ரூமுக்குப் போனேன்னு தான் நினைக்கிறேன். டைம் ஞாபகமில்லை. மோதிரத்தைப் பார்த்தேனான்னு தெரியல.”

“பேஷ்!” என்று நினைத்துக் கொண்டாள் தர்ஷினி. “என்னதான் தெரியும் இவனுக்கு?”

“அவன் போனதுக்கப்புறம் நான் போனேன்” என்றார் சதானந்த வர்மா. “உத்தேசம் ஒரு ஏழு இருபது மணி காணும்.”

“இங்கே மோதிரத்தைத் தான் காணும்” என்று நினைத்துச் சிரித்துக் கொண்டான் தர்மா.

“எதுக்காகப் போனீங்க யுவர் ஹைனஸ்?”

“சில பிஸினஸ் பேப்பர்கள் வேண்டியிருந்தது. விஜய்யைத் தான் கொண்டு வரச் சொன்னேன். அவன் கண்டுபிடிக்க முடியலைன்னு வந்துட்டான். அப்புறம் நான் போனேன்.”

“மோதிரத்தை …”

“கண்டு” என்றார் சுருக்கமாக.

“ஆக, ஹிஸ் ஹைனஸ் போன டைம் – ஒரு ஏழு இருபது வெச்சுக்கலாம், அதிலிருந்து, மேஜர் கமல் உள்ளே போன ஏழு நாற்பதுக்குள்ளே இந்தத் திருட்டு நடந்திருக்கணும். அப்கோர்ஸ், நீங்க எல்லோரும் உண்மையைத் தான் சொல்றீங்கன்னு வெச்சுக்கிட்டா!” சிரித்தாள் தன்யா.

வேறு யாரும் சிரிக்கவில்லை. சதானந்த வர்மா சற்றே எரிச்சலாக ஏதோ சொல்ல வருவதற்குள் அந்த அறைக்குள் தபதபவென்று நான்கு பேர் நுழைந்தார்கள்.

“ஐயா ராசா, கறுப்பன் மேல சத்தியங்க. மாரியாயி சத்தியமா உங்களுக்கு நான் துரோகம் நினைக்க மாட்டேங்க. முண்டகக்கண்ணி அம்மா மேல சத்தியம் பண்றேங்க. என் பொஞ்சாதி ஆடி வெள்ளிக்கியமை புத்துக்குப் பால் உடறது சத்தியம்னா …”

“இரு இரு, எத்தனை சத்தியம் பண்ணுவே” என்று குறுக்கிட்டாள் தன்யா. “நீ யாரு, வாட்ச்மேனா?”

“ஆமாந்தாயி. நீ தானே போலீசம்மா? உன் மேல சத்தியமா …”

“யோவ், அவங்க கேக்கறதுக்கு மட்டும் பதில் சொல்லு” என்று பாஸ்கர் உறுமினான்.

“சரி ராசா. கேளு தாயி.”

“வாட்ச் மேன், மோதிரம் காணாமப் போன அன்னிக்கு நீ எத்தனை மணிக்கு வந்தே? உன் டியூடி எத்தனை மணிக்கு முடியுது?”




“காலையில பத்து மணிக்கு வருவேன் தாயி, சாயந்திரம் ஏழரைக்குப் போயிடுவேன். அதுக்கப்புறம் சேது வருவான். அன்னிக்கி வீட்ல விசேடம்னுட்டு நான் பத்து மணிக்கித் தான் போனேன். ‘துன்னுட்டுப் போடா’ன்னாரு ராசா. அவருக்கு நான் துரோகம் நினைப்பேனா தாயி? ஒரு நிமிட் கேட்டிலேர்ந்து அசையல. நான் ச …”

மேலும் அவன் சத்தியம் செய்ய ஆரம்பிப்பதற்குள் அடுத்தவனைக் கைகாட்டினாள் தன்யா.

“என் பேரு சேதும்மா. பிள்ளைக்குச் சீக்குன்னு ஒம்போது மணிக்கு மேலே தான் வந்தேன். சாப்பிட்டுட்டு டியூடி பார்த்தேன்” சுருக்கமாய் முடித்துக் கொண்டான் அந்த சேது.

சமையல் மாமி அன்று வேலைக்கு வரவில்லை.

“என் பேரு ஹேமாங்க” என்று அடுத்தவள் ஆரம்பிப்பதற்குள் “எங்களுக்குக் கல்யாணம் பண்ணி வச்சதே ராசாவோட அப்பா தாங்க…” என்று ஆரம்பித்துவிட்டான் அய்யாக்கண்ணு.

தர்மாவிற்குச் சிரிப்பு வந்தது. “அய்யாக்கண்ணு, இப்படித் தனியா வா. உன் கிட்டக் கொஞ்சம் விசாரணை பண்ணணும்” என்று தோள் மேல் கைபோட்டு அவனைக் கூட்டிக் கொண்டு வெளியில் போனவனை நன்றியோடு பார்த்துவிட்டு, “நீ சொல்லு ஹேமா. நீ எத்தனை மணிக்கு பாஸ்கர் ரூமுக்கு வந்தே?” என்று கேட்டாள் தன்யா.

“ஒரு அஞ்சே முக்கால் இருக்குங்க. கூட்டிட்டு வெளியே போயிட்டேன்.”

“அய்யா மோதிரத்தைப் பார்த்தியா?”

“டேபிள் மேலே இருந்ததுங்க.”

அவளைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்தாள் தன்யா.

“சரி, நீ எப்போ வீட்டுக்குப் போனே?”

“ஆறு, ஆறேகாலுக்கெல்லாம் நான் வீட்டுக்குப் போயிடறதுங்க. சில நாள் தலையே பிளக்கற மாதிரி எனக்கு மண்டையிடி வரும். அப்போ தான் காப்பி கீப்பி குடிச்சுட்டுக் கொஞ்சம் லேட்டாப் போவேனுங்க. அந்த மாதிரித் தலைவலி மட்டும் அன்னிக்கு வந்திருந்தா நான் அய்யா ரூமுக்குள்ள போனது யாரு, மோதிரத்தை எடுத்தது யாருன்னு கவனிச்சிருப்பேன். யாரு எடுத்திருந்தாலும் அவங்க கை விளங்காமப் போக!” என்று சபித்தாள் ஹேமா.

“இந்தா, அதெல்லாம் இருக்கட்டும். அன்னிக்கு எத்தனை மணிக்கு வீட்டுக்குப் போனேன்னு தானே கேட்டேன்?”

“சொன்னேனுங்களே, ஆறு மணிக்குப் புறப்பட்டுட்டேன். அப்படிப் புறப்படாம இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்? பாழாப் போன தலைவலி அன்னிக்கு வந்திருக்கப் படாதா? நான் என்ன பார்க்கணுமோ அதைப் பார்த்திருப்பேனே? என்ன ராசா?” என்றாள் பாஸ்கரைப் பார்த்து.

பாஸ்கர் “பேஷ்! உன் வீட்டுக்காரன் ஒரு பாட்டம் பேசினா நீ ஒரு பாட்டம் பேசு! உன்னால எனக்குத் தான் தலைவலி. வாயைச் சாத்து!” என்று கோபித்தான்.

தன்யா “சரி. நீங்கள்ளாம் போலாம்” என்றாள். வேலைக்காரர்கள் கலைந்தனர்.

“சுஜாதா, இவங்க எல்லாரோட அட்ரஸ் எனக்குக் கொடுங்க” என்றாள் தர்ஷினி.

“வாங்க” என்று அழைத்துப் போனாள் சுஜாதா.

அவர்கள் திரும்பி வரும்வரை தன்யா பாஸ்கரிடம் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தாள். பாஸ்கரின் பேச்சு எதில் ஆரம்பித்தாலும் பத்மாவிடமே சென்று நின்றது தன்யாவிற்கு வேடிக்கையாக இருந்தது,

தர்ஷினி, தர்மா வந்ததும், “பாஸ்கர், உங்க ரூமை நாங்க மறுபடி பார்க்கணும்” என்றாள் தன்யா. “வாங்க” என்று அழைத்துப் போனான் பாஸ்கர்.

தர்மா மூச்சைப் பிடித்துக் கொண்டான். இராஜ பரம்பரை என்றால் பின்னே சும்மாவா!

ஒரு அறை, ஒரு ஹால், ஒரு தாழ்வாரம் இவைகளை ஒரே அறையாகச் சேர்த்திருந்தது போல் தோன்றியது. முதலில் அந்த ஹால். அங்கு சோபா செட், கம்ப்யூட்டர் மேஜை போன்றவை இருந்தன. கேரளபாணி வளைந்த தலைப்பாகம் உடைய நீள பெஞ்ச் மரவேலையிட்ட ஜன்னலுக்கு அருகே போடப்பட்டிருந்தது. இவ்விரண்டும் பழமையானதாகத் தோன்றியது. 

‘ட’ பாணியில் வளைந்து அறை தெரிந்தது. ஹாலுக்கும் அறைக்கும் இடையில் முன்பு இருந்த கதவு எடுக்கப் பட்டு, இடைவெளியைக் கூட்டியிருந்தார்கள் போலும். இப்போது ஒரே அறை போலத் தோன்றியது. இங்கே தேக்குமரத்தாலான கட்டில் தெரிந்தது. அகலமான பெரிய மேஜை. அதன்மேல் யானைத் தந்தம் இருபக்கங்களிலும் வளைந்து காவலிருக்க, நடுவில் பெரிய கண்ணாடி (பெல்ஜியம்?). இது தான் பாஸ்கர் மோதிரத்தைக் கழற்றி வைத்த ட்ரஸ்ஸிங் டேபிள் என்று புரிந்தது.

ஹாலின் மிச்சமிருந்த சுவரை ஒட்டி அறையின் உள்பக்கம் சிறு பாதை போய் பாத்ரூம் தெரிந்தது. பாதையில் வார்ட்ரோப். ஆணுக்குக் கொஞ்சம் பெரிது.

அறையின் அந்தக் கோடியில் சின்னத் தாழ்வாரம். இங்கும் நடுவில் இருந்த சுவர் அகற்றப் பட்டு, ஒரே அறையாகத் தோற்றமளிக்கும்படி செய்திருந்தது புலனாகியது. தாழ்வாரத்தில் முழுக்க சின்னச் சின்ன ஜன்னல்கள் வைத்த மர வேலைப்பாடு. ஒரு ஓரத்தில் ஒரு கண்ணாடிக் கதவு, அப்பால் மரக் கதவு. இந்த இரண்டும் புதிது போல் தோன்றியது. கதவுக்கு நேரே நின்று பார்த்தால் வீட்டின் மதில்சுவரும் ‘கேட்’டும் வாட்ச் மேன் நிற்கும் கூண்டும் நன்றாகத் தெரிந்தது. இங்கே தான் அய்யாக்கண்ணு நின்றிருக்கிறான்.

மறுபடி ஹாலுக்கு வந்தபோது தான் உள்ளே நுழையும் கதவுக்கு நேரே எதிர்க்கோடியில் மாடிப்படிகள் இருப்பது கண்ணில் தட்டுப்பட்டது. குறுக்குத் திசையில் ஏறியது. கைப்பிடிக் கம்பிக்குப் பதிலாகக் காங்க்ரீட் அரைச்சுவர் ஏறியது. மூவரும் சில படிகள் ஏறிப் பார்த்தார்கள். மொட்டைமாடிக்குப் போகும் வழி என்று புரிந்தது. பூட்டில் துறு ஏறியிருந்தது. இந்தப் படிகளிலிருந்து தான் ஏதோ ‘சப்தம்’ கேட்டது என்று சொன்னார் மேஜர் கமல்.

அறை அமைப்பை நன்றாக மனதில் குறித்துக் கொண்டு வெளியே வந்தார்கள்.

“என்ன டிடெக்டிவ்? திருடனைக் கண்டுபிடிச்சாச்சா?” என்று கிண்டலாகக் கேட்டார் சதானந்த வர்மா.

“ஓ! திருடன் அன்னியன் இல்லேங்கற வரைக்கும் கண்டுபிடிச்சாச்சு. இனி ஆள் யாருங்கறதும், மோதிரம் எங்கேங்கறதும் இன்னும் நாலு நாளில் சொல்றோம் ஹைனஸ்” என்று சூளுரைக்கிற மாதிரிச் சொன்னாள் தன்யா.

“ப்ச்” என்று தன் நம்பிக்கையின்மையைத் தெரிவித்தார் சதானந்த வர்மா. பாஸ்கர் அவரை முறைத்தான். டாக்டர் திலீப் பாஸ்கரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

மூவரும் விடைபெற்றுக் கிளம்பினார்கள்.

கிளம்புவதற்கு முன் தன்யாவின் பார்வை அவர்கள் அத்தனை பேர் மேலும் விழுந்து துழாவிவிட்டு, மேஜர் கமல் மீது சிறிது நேரம் லயித்தது.




What’s your Reaction?
+1
6
+1
7
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!