தோட்டக் கலை

கொய்யா வளர்ப்பு

கொய்யா வளர்ப்பு , இன்றளவும் கிராமத்து மக்களை தாண்டி, பெரும்பாலும் நகரத்து உணவு பழக்கவழக்கங்களில் முழுமையாக சென்றடையவில்லை. அதற்கு காரணம், தோற்றம் மற்றும் உட்புறமுள்ள விதைகட்டமைப்பு. ஆப்பிள் பழம் அறுவடையாகி பல மாதங்கள் ஆனாலும் அதன் தோற்றத்தால் ஈர்க்கப்படும் மக்கள், பறித்தமாத்திரம் கைக்கு வரும் கொய்யா கனியால் ஈர்க்கப்படவில்லை. தோட்டக்கலைத்துறை விஞ்ஞானிகளும், விவசாயி பெருங்குடி மக்களும் இப்போதுதான் அதிகமாக கொய்யாவை விளைவிக்க முன்வந்துள்ளனர்.




GUAVA
இதனால் கொய்யா தோட்டம் வளர்ப்பு பிரசத்தி பெற்று வருகிறது. மருத்துவத்திலும், கொய்யா கனியை தினமும் உண்ணுங்கள், நான்கு ஆரஞ்சு பழத்திற்கு ஈடானது ஒரு கொய்யா, மேலும் அதிகப்படியான வைட்டமின் சி நிறைந்துள்ளது என கொய்யாவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இத்தகைய சிறப்பு மிக்க கொய்யா மரம் வளர்ப்பு எப்படி, கொய்யா சாகுபடி, கொய்யா பழ நன்மைகள், மாடித்தோட்டத்தில் கொய்யா செடி வளர்ப்பு மேலும் அதன் வகைகளை இக்கட்டுரையில் காணலாம்.

நாட்டுரக கொய்யா வளர்ப்பு

கொய்யா ஒட்டு செடி மூலமாக விளைந்த பழம் தான் சமீபகாலமாக காணமுடிகிறது. இத்தகைய ஒட்டு ரக கொய்யா வகைகள் வரும்வரையில் இருந்த நாட்டுரக கொய்யா மிகவும் சிறப்பு மிக்கது, நாட்டுரக கொய்யா பழங்களில் சதைப்பகுதியானது மிகக் குறைவு, விதைகள் பெரிதாக இருக்கும், மேலும் சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் சதைப் பகுதி இருப்பினும், அளவில் சிறியதாக இருந்தாலும் அளப்பரிய மருத்துவ குணங்களை உள்ளடக்கியது.

மெக்ஸிகோ நாட்டில் உள்ள கல்வில்லோ எனும் நகரம் தான் கொய்யாவின் தலைநகரம் என்று கூறப்படுகிறது. பல வித ரகங்களில் கொய்யா இங்கு காணப்படுகிறது. அந்த நகரத்தின் மொத்த பொருளாதாரமும் கொய்யாவையே முழுமையாக நம்பியுள்ளது. நம்முடைய தமிழ்நாட்டில், ஆயக்குடி எனும் கிராமம் பழனி அருகே உள்ளது, அந்த கிராமத்தின் பெருமளவு பொருளாதாரம் கொய்யாவை நம்பியுள்ளது. உத்தரப் பிரதேச தலைநகரமான லக்னோவே வட இந்தியாவின் கொய்யாவின் தலைநகரம் என்று சொல்லப்படுகிறது. உலகளவிலான புள்ளிவிவரங்களை ஆராந்துபார்த்தால், உலகிலேயே இந்தியாவில் தான் பெருமளவு கொய்யா உற்பத்தி செய்யப்படுகிறது.




மாடித்தோட்டத்தில் கொய்யா செடி வளர்ப்பு

கொய்யாவானது, விதைகள் மூலமாக விளைவிக்கப்படுவதில்லை. பதியன்கள் மூலமாகவே கொய்யா விளைவிக்கப்படுகிறது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள், கொய்யா நடவு செய்ய ஏற்ற காலமாகும். கொய்யா செடியை, பரந்து படரும் செடியாக வளரும்படி கவாத்து செய்து வளர்த்தோமேயானால், கொய்யா தனில் அதிக மகசூல் எடுக்க முடியும் மேலும் நல்ல அறுவடையும் இருக்கும். தரமான காய்க்கும் திறனும், அதிக மகசூலும், பருவம் மீறாது காய்க்கும் தன்னமையுடைய தாய் செடியில் இருந்து பதியன் போடப்பட்ட கொய்யா நாற்றை தேர்ந்தெடுத்து கொள்ளவும், அதை செறிவுமிக்க மண்கலவை நிரப்பிய தொட்டியில் நட்டு வைக்கவும். நாற்றை நட்ட உடன் மண்ணானது கீழிறங்கி இறுக்கம் அடையும் வரை தண்ணீர் விட வேண்டும். அதன்பிறகு, மண்ணின் உடைய தன்மை மற்றும் பருவ காலநிலை போன்றவற்றை கருத்தில்கொண்டு தேவைக்கு ஏற்ப தண்ணீர் விட வேண்டும்.

செப்டம்பர், அக்டோபர் மாதம்தனில் கொய்யா செடிக்கு நன்கு மக்கிய தொழு உரம், மண் புழு உரம் அல்லது தழை, மணி, சாம்பல் சத்து உரங்களை சமபங்கு கலந்து கொய்யாவின் வேர்ப்பகுதியில் குழி பறித்து அதில் போட்டு மூடி தண்ணீர் விட வேண்டும் இதேபோல், வருடத்தில் இருமுறை செய்யவும் . கொய்யா பதியம் போட்ட செடி என்பதனால், நட்ட மூன்று மாதத்தில் பூக்கள் தோன்ற ஆரம்பிக்கும். முப்பது ஆண்டுகள் வரை பலன்களை தர வல்லது கொய்யா




கொய்யா மரம் பராமரிப்பு

முதல் ஆண்டில் கொய்யா மரம்தனில் தோன்றும் பூக்கள் அனைத்தையும் கிள்ளிவிட வேண்டும். பின்பு, அடுத்தண்டில் பூங்கொத்து வளர்ந்தபிறகு விட்டுவிடலாம். கொய்யா செடியின் அடிப்புறத்தில், குறுக்கும் நெடுக்குமாக இருக்கும் கிளைகளை கவாத்து கத்திரியை கொண்டு வெட்டி நீக்க விட வேண்டும். மேற்புறம் நோக்கி நீண்டு வளரும் கிளையின் நுனியை வெட்டி நீக்கிவிட்டு பக்கவாட்டு வளர்ச்சிதனை அதிகமாக்க வேண்டும். ஒரு முறை காய்ப்பு முடிந்த பிறகு காய்ந்துபோன மற்றும் உபயோகமற்ற குச்சிகளை நீக்கவும். இதில் துளிர்த்து வரும் புதிய பக்கக்கிளைகள் எல்லாம் நிறைவான மகசூலை கொடுக்கும். கொய்யா ஆண்டு முழுவதும் பலன் தந்தாலும், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாத பருவத்திலும், ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாத பருவத்திலும் அதிக காய்க்கும். பூ பூத்தபிறகு ஐந்து மாதங்களில் கொய்யா பழங்கள் கிடைக்கும்.

கொய்யா பழ நன்மைகள்

  • மலைவாழ் மக்கள் இன்றளவும் கொய்யா விவசாயம் சிறப்பாக செய்து வருகின்றனர். கொய்யா இலையை நன்கு அரைத்துப் பூசி, எந்தவிதப் புண்களையும் ஆற்றிக்கொள்ள பயன்படுத்துகின்றனர்.

  • காய்ச்சல் சரியாக கொய்யா இலையில் கசாயம் வைத்து குடிக்கலாம்.

  • கொய்யா இலையை மென்று திண்பதன் மூலம், பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரி ஆகும்.

  • கொய்யா இலை தலைச் சாயம் தயாரிக்க பயன்படுகிறது.

  • நார்ச்சத்து மிகுந்து காணப்படுவதால் மலச்சிக்கலுக்கு தீர்வாக அமைகிறது.

  • பல்வேறு மருத்துவ பயன்களையும், சிறப்புகளையும் உள்ளடக்கியது கொய்யா. வருடம் முழுதும் எளிதில் கிடைக்க கூடிய இத்தகைய சிறந்த கொய்யாப் பழத்தை இயற்கையான முறையில் வளர்த்து அதனுடைய பயன் அனைத்தும் அடைய வாழ்த்துகிறோம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!