Serial Stories சதி வளையம்

சதி வளையம்-2

2 சதுரா டிடெக்டிவ் ஏஜன்சி

சென்னை. வேளச்சேரி பைபாஸ் ரோடு – எள்விழ இடமில்லாமல் போக்குவரத்து நெரிசலோடு.

வாருங்கள், நாம் வலப்பக்கம் திரும்பி விஜயநகருக்குள் நுழைந்துவிடலாம். அங்கே வீடுகளுக்கும் ப்ளே ஸ்கூல்களுக்கும் ஆடிட்டர் அலுவலகங்களுக்கும் நடுவில் இருக்கிறது, “பாரத் பிரஸ்.”

வளமையான ஆனால் அடக்கமான அந்த நிறுவனத்தின் திறமையான ஆனால் எளிமையான தலைவன் தர்மபிரகாஷ் என்ற தர்மா.

தர்மா பெயருக்கேற்ற மாதிரி. தோழர்கள் அடிதடி விளையாட்டுகள் தேடிய போது படிப்பைத் தேடியவன். அவர்கள் கேர்ள்ஃப்ரெண்டைத் தேடிய போது பிஸினஸைத் தேடியவன். பியர், சிகரெட்டை நேசியாது புத்தகங்களை நேசித்தவன். எல்லோரும் மேனேஜ்மெண்ட், லீடர்ஷிப் படிக்கச் சொன்னபோது ஆன்மீகம் பழகியவன்.

படிப்பு முடிந்தவுடன் கோவை மண்ணையும், அப்பாவின் பணம் கொழிக்கும் மில்களையும் விட்டு விட்டுச் சென்னை வந்துவிட்டான். அவன் மனமறிந்த அவன் அப்பா மூடும் நிலையிலிருந்த பாரத் பிரஸ்ஸை அவனுக்கு வாங்கிக் கொடுத்து, மகனே உன் சமர்த்து என்று வாழ்த்தி, வழிவிட்டார்.

பாரத் பிரஸ் கடகடவென விடாமல் சத்தம் போட்டு, கடகடவென வளரவும் செய்தது. “பாரத புத்ரா” என்ற இதழின் தாயகமாகவும் ஆகியது. தரமான எழுத்துக்களைத் தேடும் வாசகர்களின் வரமாக விளங்கியது பாரத புத்ரா.

இப்படி அமைதியாகப் போய்க்கொண்டிருந்த தர்மாவின் வாழ்க்கை ஒரு நாள் அப்படியே தடம்மாறியது, அவன் தங்கை தன்யாவின் வரவால்.

தன்யாவும் அவர்கள் சித்தப்பா மகள் தர்ஷினியும் சென்னைக்கு வந்தது எம்பிஏ படிக்க. ஆனால் அவனுக்குத் தலைவலி கொடுக்கத் தான் அவர்கள் உண்மையில் வந்தது என்று தர்மா சில நாட்களிலேயே தெரிந்து கொண்டான்.

சமூக சிந்தனை வேண்டும், சாதித்து வாழ வேண்டும் என்ற கொள்கை உள்ளவள் தன்யா. தவறு நடப்பதைக் கண்டால் கண்ட இடத்தில் தட்டிக் கேட்கும் தைரியசாலி. மனதில் கருணையும் கண்களில் நெருப்பும் வாக்கில் மின்னலும் செயலில் வேகமும் உள்ள புதுமைப் பெண்.

தர்ஷினி தன்யாவிற்குச் சரியான தோழி. அமைதியான டைப். அழகான ஒளிரும் பச்சைக் கண்களும், அனைத்தையும் அறிவதில் ஆர்வமும், பேச்சிலும் எழுத்திலும் துல்லியமும் இவள் ஸ்பெஷாலிட்டி.




இவர்கள் இருவரும் சேர்ந்து துப்பறியும் நிறுவனம் ஒன்று ஆரம்பிக்கப் போவதாகச் சொன்னதும் “என்னவோ தொலையுங்கள்” என்பது தான் தர்மாவின் பதிலாக இருந்தது. ஆனால் அவர்கள் அதில் அவனையும் பங்கெடுத்துக் கொள்ளச் செய்தபோதும், முதல் போடும் ஒரே பங்குதாரனாக அவனை ஆக்கியபோதும்,  பெற்றோர் “நீ என்ன வேண்டுமானாலும் செய், ஆனால் அதற்காகப் பெண் குழந்தைகளை எப்படி இந்த ஆபத்தான தொழிலில் ஈடுபடுத்தலாம்?” என்று கேட்ட போதும் தர்மாவிற்கு எரிச்சல் கூடிக் கொண்டே போனது. இருந்தாலும் இந்தப் பெண்களின் பாதுகாப்பு தன்னுடைய பொறுப்பு என்ற எண்ணம் அவனை சதுரா டிடக்டிவ் ஏஜன்சியின் தலைவனாக ஆக்கி (பெயரளவுக்குத் தான், உண்மையில் தலைவி தன்யா தான்!) பாரத் பிரஸ் கட்டிடத்திலேயே இதற்கும் அலுவலகத்திற்கு இடம் கொடுக்க வைத்திருக்கிறது.

அறிமுகம் போதும். இனி நாம் பாரத் பிரஸ் காம்பௌண்டிற்குள் நுழைந்து, பின் பக்கம் செல்லும் பாதையில் போய், சதுரா அலுவலகத்துக்குள் தாராளமாக நுழையலாம்.

=============

“என்ன சொல்றார் டாக்டர் திலீப்?” என்று கேட்டாள் தன்யா. “நாம என்னதான் திறமைசாலிகளானாலும், அவரோட கேஸெல்லாம் நாம எடுத்துக்க முடியாது, இங்கே யாரும் டாக்டர் இல்லே” என்றாள் குறும்பாய்.

“தன்யா, ஜோக் பண்ற நேரமில்லை இது. டாக்டர் ரொம்ப ஃபீல் பண்றார்…”

“நான் பேசினது அவருக்கு எப்படிக் கேட்டது? இல்ல அவர் ஃபீல் பண்றார்னு உனக்கு எப்படித் தெரிஞ்சுது?”

தர்மா கைவிரல்களை இறுக்கி, பல்லையும் கடித்துக் கொண்டு கோபத்தை அடக்கினான். “ப்ளீஸ்! இது சீரியஸ் மேட்டர். அங்கே ஒரு கல்யாணமே நின்னு போச்சு. கேக்க இஷ்டமானா கேளு, இல்ல நான் -அவரை வேற ஏஜன்சி பார்த்துக்கச் சொல்றேன்.”

“ஸாரி தர்மா” என்றாள் தர்ஷினி. “கீப் கொயட் தன்யா!!” என்று அவளையும் ஒரு அதட்டல் போட்டாள். “ப்ளீஸ், சொல்லு தர்மா.”

“பாஸ்கர ரகுநாத வர்மான்னு டாக்டர் திலீப்போட ரிலேட்டிவ். பழைய இராஜ வம்சமாம். மலையாளி, ஆனா வளர்ந்ததெல்லாம் இங்க தான். இன்ஃபோஸிஸ்ல வொர்க் பண்றார். தன் கலீகையே லவ் பண்ணி, கல்யாணமும் அரேஞ்ச் ஆச்சு. அப்போ…” என்று முன்னுரை சொல்லி, மோதிரம் காணாமல் போனதை அவர்களிடம் சொன்னான் தர்மா.

கவனமாக அவன் சொன்னதைச் செவிமடுத்த தன்யா, “ஓகே…” என்று பெருமூச்சு விட்டாள். ‘மளுக்’கென்று விரல்களைச் சொடக்கிக் கொண்டு சுறுசுறுப்பானாள். “தர்ஷ்! நம்ம கான்டாக்ட்ஸ்லேர்ந்து ஹவுஸ்கீப்பிங் ஏஜன்சிக்கு போன் பண்ணு. பாஸ்கர் வீடு பெரிசு, ஸோ ஒரு பதினைந்து பேர் அரேஞ்ச் பண்ணு, ஸர்ச்சுக்கு. ஸ்கேவன்ஜிங் டீமும் ஒண்ணு சொல்லிடு. நாமும் அங்கே போய் டைரெக்டா சூபர்வைஸ் பண்ணலாம்.”

சொல்லி முடிப்பதற்குள் தர்ஷினி போனைக் காதில் அணிந்திருந்தாள்.

“ஹேய், இதெல்லாம் என்ன? அந்த ரிங்கை யார் திருடினான்னு கண்டுபிடிக்கச் சொன்னா…” தர்மா முடிப்பதற்குள், “அது திருடுதான் போச்சுன்னு உனக்கு எப்படித் தெரியும், பிரதர்?” என்று கேட்டாள் தன்யா.

“கைமறதியா வச்சிருக்கலாம், தொலைஞ்சு போயிருக்கலாம்னு சொல்றே” என்றான் தர்மா.

“அதுக்கும் வாய்ப்பு இருக்குன்னு சொல்றேன் ட்யூப்லைட்” என்று சொல்லிவிட்டு, தர்மாவின் பிடியில் அகப்படாத தூரத்தில் நின்று, “தர்ஷ்! தர்மாகிட்ட எக்ஸ்பென்ஸ் மணி வாங்கிக்கோ” என்றாள் தன்யா.

“இது வேறயா” என்று முறைத்தான் தர்மா.

“கொடு தர்மா. கேஸ் முடிஞ்சதும் கஸ்டமரைச் சார்ஜ் பண்ணிக்கலாம்” என்று கைநீட்டினாள் தர்ஷினி.

“இந்த ஒரு கேஸுக்குள்ளே என்னைக் கடனாளியாக்கிக் கம்பி எண்ண வச்சிடாதீங்க, கேர்ஃபுல்” என்று எச்சரித்துத் தன் பேங்க் கார்டைத் தந்தான் தர்மா.

“கம்பி திருடன்தான் எண்ணுவான். நீ கேஸ் முடிஞ்சு எங்களுக்கு என்னென்ன ட்ரீட், கிஃப்ட் தரலாம்னு எண்ணிட்டிரு” என்று சொல்லிப் புயலாகக் கிளம்பிய தன்யாவையும் தர்ஷினியையும் புன்னகையோடு பார்த்தான் தர்மா.




What’s your Reaction?
+1
6
+1
7
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!