Serial Stories மந்திரச்சாவி

மந்திரச்சாவி-3

மந்திரம்…3

தன்னது சாயை தனக்கு உதவாது கண்டு

என்னது மாடு என்று இருப்பார்கள் ஏழைகள்

உன் உயிர் போம் உடல் ஒக்கப் பிறந்தது

கண் அது கண் ஒளி கண்டு கொளீரே.

  நம்முடைய நிழலென்று நாம் மிகுதிபடப் பேசுகின்றோம். அது நமக்கு எந்தக் காலத்தும் எவ்வகை உதவியும் தந்தது இல்லை.  அதனை நம்முடைய நிழல் என்பதைவிட அழிவிலா ஒளிவழித் தடையென்பதே அமைவுடைத்து. அதுபோல் செல்வமும் நம்முடைய கையில் இருப்பதால் நம்முடைய தென்று கூறுகின்றோம். உண்மை யான் நோக்கின் அது சிவனுடையதே. இவ்வுண்மை கண்டும் தம்முடைய தென்று அறிவிலார் பலர் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். உன்னுதலாகிய கருத்துக்குப் புலனாகும் உயிர் காலம் வந்தால் நீங்கிப் போகும். அது வரையும் உடல் உம்மிடமுள்ளது. பின்பு உம்மை விட்டு அகல்கின்றது. இவ்வுண்மையினை அகக் கண்ணாகிய அருளொளி கொண்டு கண்டு கொள்ளுங்கள்.

******************

சினிமாவில் பார்க்கிற மாதிரி அத்தனை பெரியதாய் இருந்தது அந்த வீடு.

பெரிய திண்ணைகள்..உள்ளே நடையில் ஒரு ஹால்..அதைத் தாண்டி பெரிய முற்றம் கம்பி போட்டிருந்தார்கள்.இடதுபுறம் ஒரு கூடம்..அதில் இரண்டு அறைகள் எதிரும் புதிருமாய் இருந்தன.முற்றத்தின் வலதுபுற தாழ்வாரம் தாண்டி பெரிய கூடத்தில்

அழகான கலையம்சத்தோடு கூடிய சங்கிலிகள் போட்ட தேக்குமர ஊஞ்சல்.

அடுத்து உள்கட்டும் முற்றம் தாழ்வாரம் பூஜையறை என இருந்தது.வலது புறத்தில் படிக்கட்டுகளுடன் கூடிய மாடி..

வீட்டின் கடைசியாய் பெரிய சமையலறையும் அதையொட்டிய உக்கிராண அறை.

கொல்லைப்புறத்தில் குளியலறையும்

கழிவறையும் தனித்தனியாய் இருக்க..

பெரிய கிணறும் அதனருகில் நீர் இறைத்து ஊற்ற வசதியாய் தொட்டிகள்.துவைக்கும் கல் பாத்திரம் விளக்க மேடை எனப் பிரம்மாண்டமான வீடு.

கொல்லையில் மா பலா வாழை தென்னை மரங்கள் ஒருபுறமும் பூச்செடிகள் ஒருபுறமுமாய் இருந்தது

ஸ்வேதா வியப்புடன் வீட்டை சுற்றி சுற்றி வந்தாள்.

சுந்தரேசனோ உற்சாகத்தின் உச்சியில் இருந்தார்.

இத்தனை வசதியை அவர் எதிர்பார்க்கவில்லை..




வீட்டை சுற்றி வரவே ஒருநாளாயிற்று அவர்களுக்கு.

கொல்லைப் புறத்தில் இவர்கள் வசதிக்காக ஒரு நவீன கழிப்பறை கட்ட சொல்லியிருந்தார் கணக்கப்பிள்ளை.

வீடு கூட்டிப் பெருக்க ஒரு பெண்மணியும் சமையலுக்கு உதவ ஒருத்தரையும் ஏற்பாடு செய்திருந்தார்.

இரவு உணவு கிராமத்து ஸ்டைலில் அற்புதமாக இருந்தது.

இடியாப்பம் பால் கொழுக்கட்டை வெந்தய தோசை என வகைவகையாகச் செய்யச் சொல்லியிருந்தார்.

இயற்கை சூழ்நிலையில் ரம்யமாக இருந்த இடத்தைப் பார்த்துப் பரவசமானாள் லலிதா.அவளுக்குத் தோதாக பக்கத்திலேயே ஒரு கோவிலும் இருந்தது கூடுதல் மகிழ்ச்சி.

என்ன வாயைப் பிளக்கற? வேண்டாம் வேண்டானு தடுத்தியே.நான் யோசனை சொல்லாட்டி இந்நேரம் கார்த்திக் இதை விக்க முடிவு பண்ணியிருப்பார். இந்த அனுபவம் கிடைச்சிருக்குமா?

ஆமாம் மா..ஐ ஆல்சோ லவ் திஸ் ப்ளேஸ்.

மாமா உங்களுக்கு ரொம்ப தாங்க்ஸ்.

எங்க அப்பா அம்மா வாழ்ந்த இடத்துக்கு ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கேன்.ரொம்ப எம்பரேஸிங்கா இருக்கு.

இவர்கள் வந்திருப்பதையறிந்ததும் ஊரிலிருப்பவர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள்.

இந்த நிலபுலன்களில் வரும் வருமானம் முழுதையுமே அப்பா கிராம மக்களின் முன்னேற்றத்துக்கு செலவிட்டிருக்கிறார்.நிறைய பேரைப் படிக்க வைத்திருக்கிறார்.அதிலொருத்தன் சதீஷ்.

கார்த்திக்கிடம் ரொம்ப ஒட்டிக் கொண்டான்.

சுந்தரேசனும் கார்த்திக்கும் நஞ்சை புஞ்சையைச் சுற்றிப் பார்த்து கணக்கெடுக்கவே இரண்டு நாளாயிற்று.

லலிதாவோ அந்தக் கிராமத்துப் பெண்களிடம் ஊர்கதை பேசி மகிழ்ந்தாள்.

ஸ்வேதாவுக்குத் தான் கொஞ்சம் போரடித்தது.

அப்போதும் சுந்தரேசன் தான் அந்த யோசனையைச் சொன்னார். 

இவ்வளவு பெரிய வீடிருக்கே.இது உன் புருஷன் சொத்து மா.இங்கே எத்தனை ரூம் இருக்கு.அதில் ஏதேதோ பொருளெல்லாம் இருக்கு.எல்லாம் ஆண்டிக்.உனக்குத் தான் அதெல்லாம் பிடிக்குமே. ஒண்ணொன்னா தேடிப் பாரும்மா.

அப்பா! நீங்க ரொம்ப ப்ரில்லியண்ட்.

எனக்கு இது தோணவே இல்லையே.

 

ஸ்வேதா ஹாலில் மாட்டியிருக்கிற ஃபோட்டோக்களைப் பார்க்கவே ஒருநாளாகும் போல..

கறுப்பு வெள்ளையில் ஏராள புகைப்படங்கள் கூடத்தில் மாட்டியிருந்தன.

இவங்களெல்லாம் யாரு னு என்னைக் கேட்டிடாதே.எனக்கு யாரையும் தெரியாது.அப்பாவும் நானும் இந்த வீட்ல இருந்ததாவே எனக்கு ஞாபகமில்லை.

கார்த்திக் இவங்களெல்லாம் உங்க சொந்தக்காரங்க தானே.

இருக்கலாம்.ஆனால் எனக்கு யாரையும் தெரியல.




சரி விடுங்க.கணக்கப்பிள்ளை வந்தா கேட்கலாம்.இனிமே இங்க ஒவ்வொரு இடமா ஆராயப் போறேன்.முதலில் ஹாலில் இருக்கிற இந்த ரூம்.

சொல்லிக் கொண்டே அறை வாசலுக்குப் போக நிலைக்கு மேல் மாட்டியிருந்த மான் தலை அவள் மேல் விழுந்தது.

ஐயோ ..அம்மா!

அவள் அலறலில் சர்வநாடியும் ஒடுங்கிப் போனது லலிதாவுக்கு.

இதென்ன வந்த முதல் நாளே இப்படி?

சுந்தரேசனும் ஓடி வந்தார்.

அடடா மான் தலை!

கார்த்திக்!

உங்க தாத்தாக்கள் வேட்டையாடிக் கொண்டுவந்த ஒரிஜினல் தலையோ?

ஸ்வேதா இங்கிருந்தே ஆரம்பி.அதான் உன் மேல விழுந்து ஆரம்பிக்க சொல்லுது.

உண்மை தான்.ஒரிஜினல் தலையைத் தான் பாடம்பண்ணி வச்சிருக்காங்க.

ஒவ்வொரு அறை வாசலிலும் இது மாதிரி இருக்கு பா.

ஸ்வேதா மேலே விழுந்த வலியை மறந்து ஆர்வமானாள்.

அந்த காலத்தில நிஜமாவே வேட்டைக்கு போவாங்களா? ராஜாக்கள் தானே வேட்டையாடுவாங்க?உங்க பரம்பரை ராஜவம்சமா கார்த்திக்?

அப்படியில்லை மா.அந்தக்காலத்தில பெரிய பணக்காரங்க குட்டி குட்டி ஜமீனா இருப்பாங்க.

நீங்க சொல்றது சரி தான்.தம்பியோட தாத்தா கிட்டத்தட்ட ஜமீன்தார் மாதிரி தான்.அவர் அந்தக்காலத்தில குதிரையில தான் போவார்.அதுவும் அவர் ரேக்ளா ஓட்டற அழகைப் பார்க்க ஆயிரங்கண் வேணும்.அவரோட வெள்ளைக் குதிரை கம்பீரமா இருக்கும்.அதை சினிமாக்காரங்க  வாங்கிட்டுப் போய் நடிக்க வச்சாங்க.

அதென்ன ரேக்ளா? அதெப்படி இருக்கும்?

ஒருத்தர் மட்டுமே உட்கார்ற மாதிரியான  வண்டி. சக்கரங்கள் கொஞ்சம் சின்னதா வேகமா சுழல்ற மாதிரி இருக்கும்.குதிரையைப் பூட்டி ஓட்டுவாங்க.

இப்பவும் இருக்கா?

இந்த ஊர்ல கிடையாது மா.

கணக்கப்பிள்ளை சொன்ன மாதிரி அந்த அறையில் விநோதமான பொருட்கள் நிறைய இருந்தன.அழகான மரப்பாச்சிகள்..தந்த யானைகள்..மீன் வடிவப் பல்லாங்குழி

அரிதான பொருட்கள் நிறைய இருந்தன.

ஏன் கார்த்திக்..நீங்க சின்னப்பிள்ளையா இருந்தப்ப இதெல்லாம் வச்சு விளையாடினியா?

இல்லை ஸ்வேதா.எனக்கு இங்கே இருந்த ஞாபகமே இல்லை.அம்மா பத்தின நினைவும் அவ்வளவா இல்லை.




இத்தனை அழகான ஊரையும் வீட்டையும் விட்டுட்டு ஏன் உங்கப்பா சென்னைக்கு வந்தார்?

எனக்கும் அந்த விஷயம் தான் உறுத்தலா இருக்கு.அவர் இந்த ஊரைப்பத்தி பெரிசா எதுவும் சொன்னதுமில்ல.

அட..அங்கே பாருங்க.இந்த அலமாரியில ..எத்தனை அழகான பெட்டி..

சிறிய தந்தப் பெட்டி.அதில் நுணுக்கமான சித்திரப் பூ வேலைப்பாடுகள் அழகா வரையப்பட்டிருந்தது.பெட்டியின் பிடியே அமர்க்களமாக இருந்தது.

ஸ்வேதா ரொம்ப அழகாயிருக்கு.உள்ளே திற.என்ன இருக்குனு பார்ப்போம்.

சிவப்பு நிற பட்டுத்துணியில் ஒரு வித்யாசமான சாவி இருந்தது.

என்ன சாவி இது?

இத்தனை பத்திரமாகப் பாதுகாத்து வச்சிருக்காங்க.

அந்த சாவிக்கான பெட்டகமும் இங்கே தான் இருக்கும்.

நாம தேடிப் பார்ப்போம்.

சுந்தரேசன் தான் இம்முறையும் இதைக் கிளப்பினார்.

கார்த்திக் அசுவாரஸ்யமாகத் தான் தேட ஆரம்பித்தான் .ஆனால்  கொஞ்சம் கொஞ்சமாக தீவிரமானான்.அந்த சாவி எதனுடையது?

ஒவ்வொரு அறையாகத் தேடினார்கள்.உண்ணும் உறங்கும் நேரம் தவிர எல்லாப் பொழுதும் சாவி நினைப்பாகவே இருந்தது எல்லோருக்கும்.

வீடு முழுதும் அலசிப் பார்த்தும் எந்த பீரோவுக்கும் எந்த பெட்டிக்கும் அந்த சாவி பொருந்தவில்லை.அப்புறம் ஏன் அதைப் பத்திரப்படுத்தியிருக்கிறார்கள்?

நாளாக ஆக புத்தி முழுதும் அந்த சாவியே நிறைந்து போனது.

அந்த சாவி பற்றி ஏதாவது குறிப்பு எங்காவது வச்சிருப்பாங்க.அதை முதலில் தேடுங்க..

சுந்தரேசன் சாவி இருந்த பெட்டியை கொட்டிக் கவிழ்த்துப் பார்த்தார்.பட்டுத் துணியின் ஓரத்தில் சிறு தாயத்து வடிவப் பொருள் தட்டுப்பட்டது.திறந்து மூடும் அமைப்பு கொண்ட அதில் ஒரு காகிதம்.

கார்த்திக்  ஓடி வாங்க.இதில் ஏதோ எழுதியிருக்கு பாருங்க..

கார்த்திக்கும் அவசரமாகப் பிரித்துப் பார்த்தான்

பிறப்பு ரகசியம்”

இதைத்தவிர வேறெதுவும் அதிலில்லை.

அதென்ன ரகசியம் யாருடையது?

கார்த்திக் திகைத்து நின்றான்.அவனுடைய ரகசியமோ? அப்படிபட்ட ரகசிய பிறப்பா அவன்?

அதனால் தான் அப்பா அவனை வரவிடாமல் சென்னையிலேயே வைத்திருந்தாரோ?

அவனுக்குத் தலையே வெடித்துவிடும் போலிருந்தது 

அந்த சாவிக்குரிய பெட்டியைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும்.அவன வெறி பிடித்தது போல் அதை தேட ஆரம்பித்தான்.

வீட்டின் இண்டுஇடுக்கு விடாமல் தேடலானான்.ஆனால் விளைவு பூஜ்யம்.

ஸ்வேதாவும் அவள் பங்குக்கு அந்த மாதிரி சாவி எந்த பெட்டிக்கானதாக இருக்கும் என கூகுளில் கூட தேடிப்பார்த்தாள்.

பூட்டு திறப்பவர்கள்..பழங்கால இருப்புப்பெட்டி சேய்பவர்கள் என யாரிடம் கேட்டாலும் பதில் கிடைக்கவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக கார்த்திக் தன் பிறப்பு பற்றிய ரகசியம் எனத் தீவிரமாக நம்ப ஆரம்பித்தான்.அதனால் அந்த பெட்டியைக் கண்டுபிடிக்க ஆலாய்ப் பறந்தான். ஊரிலுள்ளவர்களிடம் தன் அப்பா அம்மா பற்றியெல்லாம் விசாரிக்க ஆரம்பித்தான்.

அவனுடைய சந்தேகத்துக்குத் தீனி போடுகிற மாதிரி அவன் அப்பா பேயருக்கு அந்த ஊருக்கு ஒரு கடிதம் வந்தது.

அதில் எழுதியிருந்த வரிகள் கார்த்திக்கின் வாழ்வை முழுதுமாக குலைத்துப் போட்டது.




What’s your Reaction?
+1
4
+1
9
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!